30 March 2014

நெடுஞ்சாலை - NEDUNCHAALAI - நெடும்பயணம் ...


முதல் படத்தில் சில்லுனு  ஒரு காதலை  கொடுத்து விட்டு நீண்ட இடைவெளிக்குப் பின் கரடுமுரடான காதலுடன் நெடுஞ்சாலை யில் பயணப்பட்டிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா . மேக்கிங்கில் முதல் படத்திலிருந்து நிறைய வித்தியாசம் காட்டியிருப்பது தெரிகிறது ...

80 களின் மத்தியில் தேனியில் , ஓடும் லாரிகளிலிருந்து  பொருட்களை லாவகமாக கொள்ளையடிக்கும் தார்ப்பாய் முருகன் ( ஆரி ) , அவன்  காதலி மங்கா ( சிவதா), அவர்கள் காதலுக்கு இடையூறு செய்யும் இன்ஸ்பெக்டர் மாசானி  முத்து ( பிரஷாந்த் நாராயன் ) இவர்களின் கதையை முருகனின் கூட்டாளி ஃப்ளாஷ்பேக்கில் விவரிப்பதே படம் ...


பருத்திவீரன் கார்த்தியை நினைவு படுத்தினாலும் முரட்டு உடம்பு , தாடி , மீசையுடன் அந்த அராக்கு கேரக்டருக்கு நன்றாகவே பொருந்துகிறார் ஆரி . மங்காவை பழி வாங்குவார்  என்று நினைக்கும் போது அவளுக்கு ஆதரவாக கோர்ட்டில் சாட்சி சொல்லி இன்ஸ்பெக்டர் முகத்தில் கரியை பூசுவது க்ளாஸ் . சாந்தமான முகம் , பாவாடை சட்டையுடன் வந்து சிலிர்க்க வைக்கிறார் சிவதா . " ஒரு பொம்பளை தனியா தொழில் பண்ணா என்ன தேவிடியா வா ? " என்று சொல்லி தையிரியமாக இன்ஸ்பெக்டர் காலை உடைக்கும் போது நிமிர்ந்து நிற்கும் இவர் கேரக்டர் ஆரியை காபாற்றுவதற்காக ரூமிற்குள் நிர்வாணமாக நிற்கும் போது சரிந்து விடுகிறது ...

டேனியல் பாலாஜி சாயலில் இருக்கும் கஞ்சா குடுக்கி இன்ஸ்பெக்டரும் , மாட்டு சேகரும் ( சலீம் ) கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தாலும் படம் சோர்வடையாமல் பயணப்பட உதவியிருக்கிறார்கள் . அதிலும் இன்ஸ்பெக்டர் " இதுக்கு முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர எப்படியா சரிக்கட்டின " என்று கேட்க மாட்டு சேகர்" நான் எங்க சாரே , என் பொண்டாட்டி தான் சரிக்கட்டினா " என்று சொல்வதும் ,  மனைவியின் ரூமிலிருந்து வரும் வேலைக்காரன் கூலாக " எதுக்கு அவசரமா கூப்புட்டீங்க " என்று சேகரிடம் கோபப்படுவதும் ரசிக்க வைக்கும் இடங்கள் ...


சத்யாவின் இசையில் பாடல்கள் , பின்னணி இசை இரண்டுமே பலம்  . ஆனால் சில பாடல்கள் தேவையில்லாமல் திணிக்கப்பட்டது போலிருப்பது பலவீனம் . படத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிறைய ஷாட்கள் ஒளிப்பதிவாளர் ராஜவேலின் உழைப்பை காட்டுகின்றன .  கரண்ட் , ஃப்ளாஷ்பேக் என்று மாறி வரும் காட்சிகளில் கிஷோர் கொஞ்சம் கரண்ட் காட்சிகளை கட் செய்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் ...

நெடுஞ்சாலைகளில் நடந்த கொள்ளைகளை மையப்படுத்திய கதைக்களம் , கதாபாத்திரங்களை வைத்து கதையை நகர்த்திய நேர்த்தி , வசனங்கள் , ட்விஸ் டுடன் நகரும் திரைக்கதை போன்றவை படத்தை கவனிக்க வைக்கின்றன ... பெரிய இம்பேக்டை கொடுக்காத ஆரி - மங்கா காதல் , தொய்வைடைய வைக்கும் சில ரிப்பீட்டட் சீன்கள் , ட்விஸ்ட் இருந்தாலும் எதிர்பார்த்தபடி அமையும் க்ளைமேக்ஸ் , நடந்ததை கூட்டாளி சொல்லி முடித்து விட்டு லாரியில் இருந்து இறங்கி நடக்கும் போதே படத்தை முடிக்காமல் கொஞ்சம் இழுத்தது போன்றவை சார்ட் அன்ட் கிரிஸ்ப்பாக இருந்திருக்க வேண்டிய நெடுஞ்சாலை பயணத்தை நெடும்பயணமாக மாற்றுகின்றன ...

ஸ்கோர் கார்ட் : 41


23 March 2014

குக்கூ - CUCKOO - கலர்ஃபுல் ஹைக்கூ ...


த்திரிக்கையாளர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வந்திருக்கும் படம் குக்கூ . இந்த இருவரின் கூட்டணி லோ பட்ஜெட் ரியலிஸ்டிக் மூவிக்கு நல்ல ஒப்பனிங் கிடைக்க காரணமாக அமைந்திருக்கிறது ...

மோதலுக்குப்  பின் காதலிக்கும் இருவர் , காதலியின் அண்ணன் எதிர்ப்பால் பிரிகிறார்கள் . கடைசியில் சேர்ந்தார்களா என்பதே கதை . இந்த சாதாரண காதல் கதையை அசாதாரணமாக மாற்றுவது சம்பந்தப்பட்ட இருவரும் மாற்றுத்திறனாளிகள் என்பதும் , அதை உணர்வுப்பூர்வமாக படமாக்கிய இயக்குனரின் திறமையும் ...

அட்டக்கத்தி தினேஷ் கண் பார்வை இழந்தவராக  அட்டகாசமாக நடித்... சாரி வாழ்ந்திருக்கிறார் . காதலியை பிரிந்த பின்  அவளை தேடி அலையும் போது நம்மையும் சேர்த்து பரிதவிக்க வைக்கும்  அந்த நடிப்பு ஆஸம் . கண் விழிகளை உருட்டிக் கொண்டும்  , விரல்களை பின்னிக் கொண்டும்  தன் உடல் மொழியால் நம்மை கட்டிப்போடும்  மாளவிகா  தமிழுக்கு நல்ல வரவு . காதல் தோல்வியில் துவழும் போதும் , காதலனுடன் சண்டை போடும் போதும் இந்த சுதந்திரக்கொடி நடிப்பால் உயரே பறக்கிறார் . தமிழ் - சுதந்திரக்கொடி இருவருமே நீண்ட காலம் பேசப்படுவார்கள் ...


தினேஷின் நண்பனாக வரும் இளங்கோ , எம்.ஜி.ஆர், சந்திரபாபு, விஜய், அஜித் கெட்  அப்புகளில் வலம் வரும்  நட்சத்திரங்கள் , கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் கதையோடு  ஒன்றி வரும் முருகதாஸ் இவர்கள் எல்லோருமே  படத்திற்கு  பலம் சேர்க்கிறார்கள் . இவர்களோடு சேர்ந்து பார்வையற்றவர்களை இணைக்கும் பாலமாக இசைஞானியின் பாடல்களும் நடித்திருக்கிறது ...

மூர் மார்க்கெட் , ரயில்வே ஸ்டேஷன் என்று பி.கே.வர்மா வின் கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது . படத்தின் தன்மைக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் லைட்டிங் அருமை . சந்தோஷ் நாராயண் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டிருக்கிறார் . இந்த படத்திலும் பாடல்கள் , குறிப்பாக  பின்னணி இசை பிரமாதம் . எடிட்டிங் சொதப்பலை சில இடங்களில் காண முடிகிறது ...

தொடுதலின் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது  , ஒரு இடத்திலும் தங்கள் குறைகளை பற்றி புலம்பாமல் தன்னம்பிக்கையோடு வாழ்வது , கேலி, நையாண்டி என்று இருட்டு வாழ்க்கையில் உள்ள வெளிச்சத்தை காட்டுவது இப்படி பார்வையிழந்தவர்களின் உலகத்திற்குள் நம்மை கொண்டு சென்று வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் ...


குடும்பத்துக்காக  உழைக்கிறேன் என்று சொல்லி கர்ப்பமான மனைவியின் வயிற்றை தடவும் அண்ணன் , பணம் கேட்டவுடன் தன் கழுத்தில் இருக்கும் செயினை அவுத்துத்தரும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரம் , உதவி செய்வது போல செய்து ஒரு லட்சத்தை அபேஸ் செய்யும் போலீஸ்காரர் , பழைய துணிகளை தானம் செய்வதை ஃபேஸ் புக்கில் அப்டேட் செய்யத் துடிக்கும் பெண் , எல்லோருக்கும் மார்க் போடும் பிச்சைக்கார தாத்தா , இடியே விழுந்தாலும் அசராத அய்யர் இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் கவனிக்க வைக்கிறது திரைக்கதை ...

சாதாரண கதை , படத்தின் நீளம் , ஸ்லோவான காட்சிகள் போன்ற சில குறைகள் இருந்தாலும் விளிம்பு  நிலை மனிதர்களின் கதை என்றவுடன் சோகத்தை பிழிந்து நம்மை வாட்டி எடுக்காமல் இயல்பான ஆனால் அதே நேரம் உணர்வுப் பூர்வமான படத்தை கொடுத்ததன் மூலம் வட்டியும் முதலுமாக நம்  மனதை அள்ளுகிறார் ராஜுமுருகன் . மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்தி இதுவரை வந்த படங்களில் நிச்சயம் தனித்து நிற்கும் இந்த கலர்ஃபுல் ஹைக்கூ ...

ஸ்கோர் கார்ட் : 48 

21 March 2014

பா.ஜ.க கூட்டணி -BJP- வெற்றிக்கான முதல்படி ...

 

2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் ? ! ... என்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு  நான் எழுதிய பதிவில் தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் தே.மு.தி.க , ம.தி.மு.க மற்றும் பா.ம.க ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பதற்கான சூழலையும் , அவசியத்தையும் உணர்த்தியிருந்தேன் . ஒரு வழியாக  ஏகப்பட்ட இழுபறிக்குப் பின் பாரம்பரிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேசிய கட்சியின்

தலைமையில் அப்படியொரு கூட்டணி தமிழகத்தில் 50 வருடங்களுக்கு பிறகு அமைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதோடு  மட்டுமல்லாமல் நல்ல மாற்றத்திற்கு வடிகாலாகவும்  இருக்கும் என்றும் நம்புகிறேன் ... 

 

இப்படியொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணிக்கு வித்திட்டவர் எழுத்தாளர் தமிழருவி மணியன் என்பது குறிப்பிடத்தக்கது . எந்தவொரு குறைந்த பட்ச செயல்திட்டமும் இல்லாமல் வெறும் பதவி ஆசைக்காக ஐந்தாறு கட்சிகள் சேர்த்து அமைத்திருக்கும் கூட்டணி தானே என்று சிலர் சாடினாலும் அரசியல் ரீதியாக இந்த கூட்டணியை அவ்வளவு எளிதில் ஒதுக்கி விட முடியாது . இதுவரை அமைந்த அல்லது அமையப்போகிற எந்த கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும் . அதில் அதிகம் ஆராய்ந்தால் எந்தவொரு கூட்டணியும் அமைந்திருக்காது அல்லது அமையாது என்பதே நிதர்சனம்  ... 

 

அ.தி.மு.க விடம்  2 சீட்களுக்காக  கையேந்தி நின்ற கம்யூனிஸ்டுகளுக்கும் , கடைசி வரை அவர்களை என்னத்த கண்ணையா போல குழம்ப வைத்து கழட்டி விட்ட அ.தி.மு.க விற்கும் , பா.ஜ.க விற்கு கல்லெறிந்து பார்த்து விட்டு எதுவும் நடக்காது என்றவுடன் மதசார்பற்ற அணிகளுடனே எங்கள் கூட்டணி  என்று சொல்லி விட்டு முஸ்லீம் லீக் , மனிதநேய மக்கள் கட்சி போன்றவற்றுடன் கூட்டு சேர்ந்திருக்கும் தி.மு.க விற்கும் இந்த கூட்டணி பற்றி விமர்சனம் செய்ய எந்தவித தார்மீக உரிமையும் இல்லையென்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்து ... 

 

அ.தி.மு.க வால் தாங்கள் கழுத்தறுக்கப்பட்ட கோபத்தை அங்கே காட்டாமல் பா.ஜ.க வை தோற்கடிப்பதே எங்கள் இலக்கு என்று அறைகூவல் விடுக்கும் கம்யூனிஸ்டுகளைப் பார்க்கும் போது காமெடி கலந்த வேதனையாய் இருக்கிறது . 2009 இல் காங்கிரசை வரவிடாமல் தடுத்ததில் இவர்கள் செய்த முயற்சி பலித்ததைப் போல இம்முறையும் நடக்கக்கடவது... 

 

முதலில் மோடி அலையே இல்லை என்று சொன்ன காங்கிரஸ்காரர்கள் பிறகு பா.ஜ.க அணியின் தொகுதிப் பங்கீட்டில் உள்ள சிக்கலை காட்டி  கேலி செய்கிறார்கள். பா.ஜ.க அணியிலாவது தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில் தான் பிரச்சனை . அதாவது ஒரு தொகுதிக்கு நிறைய பேர் போட்டி போடுகிறார்கள் . ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு சுளையாக 39 தொகுதிகள் இருந்தும் நிற்பதற்கு யாரும் முன் வரவில்லை என்கிற பரிதாப நிலையிலும்

பா.ஜ.க வை எந்த முகத்தை வைத்துக் கொண்டு குற்றம் சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம் ...

 

இப்படி முதலில் பா.ஜ.க தலைமையில் கூட்டணி என்றவுடன் நிறைய பேர் ஏளனம் செய்தார்கள் , பின் இது முரண்பட்ட கூட்டணி என்று எதிர்த்தார்கள் , கடைசியில் கூட்டணி அமைந்து வெற்றியும் பெற்றவுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவோமாக . இந்த கூட்டணி அனைத்து  தொகுதிகளிலும் வெற்றி பெறுமென்று யாரும் சொல்லவில்லை . அதே நேரம் சுத்தமாக தோல்வியை தழுவவும் வாய்ப்பில்லை . கூட்டணி கட்சியிலுள்ளவர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து  ஒற்றுமையாக பணியாற்றினால் குறைந்தது 8 - 12  தொகுதிகளில் வெற்றி பெறவும் , நிறைய தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கவும்  வாய்ப்புள்ளது.

உண்மையில் வெற்றி , தோல்விகளை தாண்டி தி.மு.க , அ.தி.மு.க இரண்டையும் தவிர்த்து தமிழகத்தில் இப்படியொரு கூட்டணி அமைந்ததே வெற்றிக்கான முதல்படி ...


9 March 2014

நிமிர்ந்து நில் - NIMIRNTHU NIL - நடுக்கம் ...


ட்பை முன்னிறுத்தி படங்கள் எடுத்தாலும்  அதில் சமூக அக்கறையையும் சேர்த்தே கொடுப்பவர் சமுத்திரக்கனி . அவர் சமூக அக்கறையை மையப்படுத்தி ஷங்கர் பாணியில் லஞ்ச ஊழலை எதிர்த்து இயக்கியிருக்கும் படம் நிமிர்ந்து நில் . படம் நிமிர்ந்து நின்றதா ? பார்க்கலாம் ...

17 வருடங்கள் குருகுலத்திலேயே  படிப்பை  முடித்து விட்டு ரொம்ப நல்லவனாக  வெளி வரும் அரவிந்த் ( ஜெயம் ரவி ) சமூக அவலங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஊழல் அதிகாரிகளிடம் சிக்கி சின்னா பின்னமாகி பின் அவர்களுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கிறார் . அதில் வெற்றி பெற்றாரா என்பதே படம் ...

ஜெயம் ரவி க்கு சொல்லிக்கொள்ளும் படியான வேடம் . அரவிந்த் , ரெட்டி என இரண்டு கேரக்டர்களிலுமே வித்தியாசம் காட்டி நன்றாக நடித்திருக்கிறார் . இரண்டு ரவி களும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சிகள் ஜெயம் . என்ன தான் குருகுலத்திலேயே படித்திருந்தாலும் ப்ராக்டிகளாக இல்லாததும் , கேரக்டர் அந்நியன்  அம்பி யை நினைவுபடுத்துவதும் நெருடல் . கோர்ட்டில் பேசும் வசனங்கள் சூப்பர் ...


அமலா பால் பாடல் காட்சிகள் தவிர அடக்கி வாசித்திருக்கிறார் . சூரி க்கு படத்தில் குணச்சித்திர வேடம் என்றாலும் சிரிக்கவும் வைக்கிறார் . வழக்கமான சமுத்திரக்கனி யின் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் இருந்தாலும் கு.ஞானசம்பந்தன் மற்றும் படவா கோபி ரசிக்க வைக்கிறார்கள்.
சரத்குமார் இன்டர்வெல் ப்ளாக்கிற்கு மட்டும் உதவியிருக்கிறார் . கோபிநாத் கேரக்டரை சரியானபடி பயன்படுத்தியிருக்கிறார்கள் ...

ஜி.வி யின் இசையில் இரண்டு மெலடிகளும் , கானா பாலாவின் பாடலும் முணுமுணுக்க வைக்கின்றன . சண்டைக்காட்சிகளை நன்றாக எடுத்திருக்கிறார்கள் . எடிட்டிங் நேர்த்தியாக இருக்கிறது ...


ஜெயம் ரவிக்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை பின்னி எடுக்கப்பட்டிருக்கும்  முதல் பாதி , சமுத்திரக்கனி யின் சமூக அக்கறை பளிச்சிடும் சாரப் வசனங்கள் , அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை கொடுக்கும் திரைக்கதை இவையெல்லாம் படத்தில் நிமிர்ந்து நிற்கின்றன ...

முதல் பாதியில் கொடுத்த டெம்போ வை தக்க வைக்க தவறியது , அந்நியன் , ரமணா , சிட்டிசன் என்று பார்த்து பழகிய கதை என்பதோடு படத்தில் வரும் சீன்களும் அந்த படங்களை நினைவு படுத்துவது , ஹீரோ வின் பெயர் அரவிந்த் , அவர் ஆரம்பிக்கும் ஏ.சி.ஐ இயக்கம் என்று நடப்பு சமாச்சாரங்களை
தொட்டிருந்தாலும் கோபிநாத் , மீடியா செய்திகள் என்று பார்ப்பது படமா இல்லை சேனலில் வரும் விவாதமா என்கிற அளவிற்கு சலிப்பை தருவது போன்றவை நிமிர்ந்து நின்று வேகமாக ஓடியிருக்க வேண்டிய படத்தை நடுங்க  வைக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 41 
பதிவு போடலையோ பதிவு ! ...


திவெழுதி ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது . உடல் நிலை சரியில்லையா அல்லது சினிமா பார்ப்பதை விட்டு விட்டீர்களா என்றெல்லாம் கேள்விகள்  வர ஆரம்பித்த பிறகு தான் இந்த இடைவெளியின் நீளம் நன்றாக உறைக்கிறது.
எனக்கு அம்மை போட்டதன் காரணமாக இதே போன்றதொரு இடைவெளி சென்ற வருடம் இதே நேரம் ஏற்பட்டது . அப்பொழுது கூட விஸ்வரூபம் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் வீட்டிலிருப்பவர்கள் திட்டையும் பொருட்படுத்தாமல் எழுத  ஆரம்பித்து விட்டேன் ...

மற்றபடி எழுதாமல் இருப்பதற்கு கணினியில்  கோளாறோ அல்லது இணையத்தில் தடையோ தான் பொதுவாக காரணமாக இருக்கும் . ஆனால் இந்த முறை அப்படி எந்தவித தடையும் இல்லாமல் நான் பதிவு போடாதது  மட்டுமல்ல இணையத்திலேயே உலவாமல் போனதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை .  அதே நேரம் திடீரென ஒரு நாள் ஷஹி மூலம்  மூன்றாம் கோணம் இணைய தள நிறுவனரும் , நண்பருமான அபி கார் விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி வேறெதையும் பற்றி சிந்திக்க விடாமல் சில நாட்கள் என்னை கட்டிப்போட்டதும் உண்மை ...

படங்கள் ரிலீசானவுடன் பார்க்காமல் போனது விமர்சனங்கள் எழுதாததற்கு காரணாமாக இருந்தாலும் அப்படி பார்க்காமல்  போனது ஏனென்று யோசித்தால் அதற்கும் விடையில்லை . ஆனால் ஒரு விஷயம் நமக்கு பிடித்திருந்தாலும் அதையே திரும்ப திரும்ப செய்யும் போது  ஏற்படும் அயர்ச்சி தான் இதற்க்கெல்லாம் அடித்தளமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .  கணவன் மனைவிக்குள் என்ன தான் பிடித்தம் இருந்தாலும்
ஒரு இடைவெளி ஏற்படும் போது பிறக்கும்  சுதந்திரத்தை எல்லாரோலும் உணர முடியும் . பிரிவிற்கு பிறகு இணையும் போது உறவு இன்னும் வலுப்படும் . ஒரு மாத இடைவெளிக்கு ஓவர் பில்ட் அப் கொடுக்கிறேனோ . சரி விடுங்க மேட்டருக்கு வருவோம் ...

கடைசியாக விமர்சனம் எழுதிய படம் ரம்மி . ஒரு வேளை அது தான் அடுத்து படங்களை ரிலீசானவுடன் பார்க்காதற்கு  காரணமோ என்றெல்லாம் யோசித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை . வீரம் , ஜில்லா என்று கமர்சியல் அதிரடியில் ஆரம்பித்த 2014 பிறகு கொஞ்சம்  தொங்க ஆரம்பித்து விட்டது . விஜய் சேதுபதியின் ரம்மி , பண்ணையாரும் பத்மினியும் இரண்டுமே சரியாக போகவில்லை . பார்ட்டி உஷாராக வேண்டிய நேரமிது . கதையை  தேர்ந்தெடுப்பதில்  கவனம் செலுத்தாவிடில் காணாமல் போய்  விடும் அபாயம் உள்ளது ...

இங்க என்ன சொல்லுது , இது கதிர்வேலன் காதல் இரண்டுமே காமெடி என்ற பெயரில் வந்த மொக்கைகள் தான் என்றாலும் இரண்டாவது கொஞ்சம் பரவாயில்லை . சின்ன பட்ஜெட்டில் வந்த  கோலி சோடா பாராட்டுக்களோடு பைசாவையும் அள்ளியது சந்தோசம் . படம் பிடித்திருந்தாலும் எனக்கென்னமோ ரேணிகுண்டாவில் நடித்தது போன்ற பையன்கள் நடித்திருந்தால் படம் இன்னும்  பிக் அப் ஆகியிருக்கும் . ஏனா பசங்க ரொம்ப பால்வாடி யா இருக்காங்க . வல்லினம் , தெகிடி இரண்டுமே நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள் . இன்னும் பார்க்கவில்லை . நிமிர்ந்து நில் ரிலீசாகி இருக்கிறது . பார்த்தவுடன் பதிவு போடலாம் என்றிருக்கிறேன் ...

நாடாளுமன்ற தேர்தலுக்கு தேதியையே அறிவித்தாகி விட்டது . அரசியலை தொடாமல் போனால் நன்றாக இருக்குமா ? . நான் எனது முந்தைய பதிவுகளில் சொன்னது போல எதிர்பார்த்த படி பி.ஜே.பி - ம.தி.மு.க - பா.ம.க - தே.மு.தி.க கூட்டணி அமையவிருப்பது இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல அடுத்த சட்டசபை தேர்தலுக்கும் தி.மு.க , அ.தி.மு.க விற்கு நல்ல மாற்றாக இருக்கும் என நம்பலாம் . கம்யூனிஸ்டுக்களை கழட்டி விட்டதிலிருந்து அ.தி.மு.க அதீத நம்பிக்கையிலிருப்பது தெரிகிறது . தோழர்களுக்கு தோள் கொடுக்க மு.க காத்திருக்கிறார் . அவர்கள் செவி சாய்ப்பார்களா தெரியவில்லை . நான் பல முறை சொன்னது போல காங்கிரஸ் தனித்து விடப்பட்டிருக்கிறது . இப்படி பல்முனை போட்டி நடப்பது குழப்பத்தை கொடுத்தாலும் அந்தந்த கட்சிகளின் பலத்தை நிரூபிப்பதற்கு ஏதுவாக இருக்கும் ...

வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்கும் வழக்கம்  இருந்தாலும் நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதையும் , மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டுமென்பதையும் மறக்காமல்மக்கள்  வாக்களிப்பார்கள் என்று நம்பலாம் . ஏனெனில் டில்லியில் ஆம் ஆத்மி அடித்த 48 நாள் கூத்தை யாராவது மறக்க முடியுமா ? சொன்ன வாக்குறுதிகளை  நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தவுடன் அரவிந்த் அடித்த அந்தர் பல்டி பழுத்த அரசியல்வாதிகளையும் மிஞ்சி விட்டது . மத்தியிலும் இது போன்றதொரு நிலை ஏற்படாமல் இருக்க மக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும் ...
Related Posts Plugin for WordPress, Blogger...