23 December 2015

தங்கமகன் - THANGAMAGAN - தங்கா மகன் ...


ரு வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையும்  போது எதிர்பார்ப்பு ஏற்படுவது இயற்கை . ஆனால் அதில் அதிக கவனம் செலுத்தாமல் ஒரு படத்தை புதிதாய் பார்க்கும் போது பிடித்துப்போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும் . அதையும் தாண்டி படம் நம்மை கவராமல் போகும் போது ஒரு ஏமாற்றம் வரும் . அது தான் தங்கமகன் படம் பார்த்த பிறகு ஏற்பட்டது ...

இன்கம்டேக்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் நேர்மையான அதிகாரியின் மகன் தமிழ் ( தனுஷ் ) . திடீரென அப்பா ( கே.எஸ்.ரவிகுமார் ) தற்கொலை செய்து கொள்ள அவர் மேல் விழுந்த களங்கத்தை துடைத்து குடும்பத்தை தமிழ் எப்படி மீட்கிறான் என்பதே தங்கமகன் ...

இத்தோடு சேர்த்து மிடில் கிளாஸ் பையனாக தனுஷ் எக்கச்சக்க படங்களில் நடித்து விட்டாலும் இதுவரை அவர் நடிப்பு போரடிக்காதது ஆச்சர்யமே . நன்றாக நடிக்கும் அவர் இன்னும் வேறு வேறு களங்களில் பரிமாணிப்பது நல்லது . தண்ணியடித்து விட்டு வீட்டுக்கு வந்து அம்மா காலிலும் , மனைவி காலிலும் விழும் இடத்தில் தேசிய விருதை சும்மா வாங்கிவிடவில்லை என நிரூபிக்கிறார் . ஆனால் அவர் படத்தை பார்ப்பதற்கு அது மட்டுமே போதுமா ? யோசிக்க வேண்டும் ...

ஆங்கிலோ இந்திய பெண்ணாக எமி ஜாக்சனும் , அவருக்கு ஆண்ட்ரியாவின் குரலும் நன்றாகவே பொருந்துகின்றன . ஆனால் பிகினி போட்டு அழகு பார்க்க வேண்டிய பெண்ணை சுடிதாரில் அலைய விட்டு " நானும் ரவுடி தான் " படத்தில் வரும் காமாட்சி போல ஆக்கி விட்டார்கள் . அரை பீருக்கு போதையாகி இவர் தனுஷை அடிப்பதெல்லாம் படத்துக்கு கிடைத்த யூ செர்டிபிகேட் போல ஓவர் .  இவர்கள் இருவருக்குமான லவ் சீன்ஸ் தான் நம்மை முதல் பாதியில் படத்தோடு ஒன்ற வைக்கின்றன . அதற்கு சதீஷும் ஒரு காரணம் ...


சமந்தா போல மனைவி கிடைத்தால் எமி என்ன ஏஞ்செலினா வையே கழட்டி விடலாம் . தனுஷ் - சமந்தா இருவருக்குமான காட்சிகள் குறைவாக இருந்தாலும் கச்சிதம் . பொயட்டு தனுஷ் வரிகளில் அனிருத் இசையில் பாடல்கள் நல்ல மெலேடி . ஓட்டக்கருவாடு போல பாடல் இல்லாதது வருத்தமே . பி.ஜி யில்  பெரிசாக ஒன்றுமில்லை . குமரனின் ஒளிப்பதிவு சில இடங்களில் நாம் நாடகம் பார்க்கிறோம் என்கிற உணர்வை தவிர்க்கிறது ...

டீன் ஏஜ் காதல் , அப்பா சென்டிமென்ட் இவற்றை ஓவராக வழிய விடாமல் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் வேல்ராஜ் . அதே சாமர்த்தியம் படம் நெடுக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . குறிப்பாக இடைவேளைக்கு பிறகு
 " தமிழ்நாட்டுல தமிழ் தோக்காது " என்றெல்லாம் தனுஷ் பஞ்ச் பேசும் போது
" ஆமா ஆந்திரால தெலுங்கு தோக்காது , கேரளாவுல மலையாளம் தோக்காது"
என்று விசு போல நம்மை வசனம் பேச வைத்துவிடுகிறார்கள் . அர்னால்டை வில்லனா போடலாமா , அமீர்கான வில்லனா போடலாமானு மாமானரு யோசிச்சா மருமகனோ இன்னும் அமுல் பேபி மூஞ்சியா பாத்து வில்லனா போடறது என்ன சாரே ?! ...

கே.எஸ்.ரவிக்குமாருக்கு அடிக்கடி நடப்பது மறந்து விடுவது போல நம்மையும் விஜய் சேதுபதி மாதிரி " ஆமா படத்துக்கு வந்தோம் , அப்புறம் என்ன ஆச்சு " என்பது போல் சில இடங்களில் புலம்ப வைத்து விட்டார்கள் . கவர்மென்ட் குவாட்டர்ஸ் இல் குடியிருக்கும் தனுஷ் குடும்பத்தை அப்பா இறந்தவுடன் ஒருவர் வந்து வீட்ட காலி செஞ்சுருங்க என்று சொல்வதெல்லாம் என்ன லாஜிக்கோ ?! அவர்களுக்கே வெளிச்சம் . தனுஷ் - வேல்ராஜ் கூட்டணியில் கடந்த வருடம் வந்த வி.ஐ.பி வசூலை அள்ளியதோடு நன்றாகவும்  பேசப்பட்டது . ஆனால் இந்த வருடம் வந்திருக்கும் தங்கமகன் நம்மிடையே எந்த உரசலையும் ஏற்படுத்தாத விதத்தில் மனங்களில் தங்காமகன் ...


ரேட்டிங் :  2.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 40
Related Posts Plugin for WordPress, Blogger...