29 December 2014

மீகாமன் - MEAGHAMANN - ஒன் மேன் ஆர்மி ..


மேக்கிங் ஸ்டைலில் தனது முதல் இரண்டு படங்களையுமே கவனிக்க வைத்தவர் மகிழ்திருமேனி . அவரது பெயரைப் போலவே இந்த படத்திலும் கவித்துவமான தமிழ்தலைப்புடன் மாஸ் ஹீரோ ஆர்யாவுடன் முதன் முறையாக கை கோர்த்திருக்கிறார் . படம்  வழக்கமான அண்டர் காப் ஸ்டோரி தான் என்றாலும் திரைக்கதை மூலம் ஏன் , எதற்கு , எப்படி என்று ஆடியன்சை யோசிக்க வைத்து படத்துடன் ஒன்ற வைக்கிறார் ...

அண்டர்க்ரவுண்ட் டான் ஜோதி யை பிடிப்பதற்காக நான்கு வருடங்கள் அந்த க்ரூப்பிலேயே இருக்கிறான் சிவா ( ஆர்யா ) . இந்த ஆப்பரேஷனில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு காப் நண்பன் ( ரமணா ) கொல்லப்பட , இவனும் பிடிபட , சிவா முயற்சியை கைவிட்டானா அல்லது அதிகமாக யாரும் பார்த்திராத ஜோதியை பிடித்தானா என்பதை இடைவேளை வரை விறு விறு , பின்னர் கொஞ்சம் வழ வழ ( உபயம் ஹீரோயின் ஹன்சிகா ) என்று இழுத்து முடித்திருக்கிறார்கள் ...

ஆர்யாவுக்கு அல்டிமேட் கேரக்டர் . மனுஷன் அலட்டிக் கொள்ளாமல் ஹீரோயிசம் செய்கிறார் . படம் முழுக்க உம்மென்று இருந்தாலும் ஹன்சிகாவை ஓட்டும்  காட்சிகளில் மட்டும் சிரித்து கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார் . ஹன்சிகா படத்திற்கு தேவையில்லாதது போல பட்டாலும் அவருடைய கேரெக்டர் ஸ்கெட்ச் ரசிக்கும் படியாகவே இருக்கிறது . குறிப்பாக இவர் தோழியுடன் சண்டை போட்டுக் கொள்ளும் சீன்கள் க்யூட் . ஆனாலும் இடைவேளைக்கு பிறகு நடு நடுவே வந்து பொறுமையை சோதிக்கிறார் . ஹீரோவின் நண்பனாக வரும் ரமணா சில சீன்கள் வந்தாலும் கவனிக்க வைக்கிறார் . இவர்களை  தவிர்த்து படத்தில் வில்லன் உட்பட காஸ்டிங் சறுக்கல் . தமனின் பின்னணி இசை தனியாக தெரிகிறது . " ஏனிங்கு  வந்தாய் " பாடல் காதல் தாலாட்டு . சதிஸ் குமாரின் ஒளிப்பதிவு துல்லியம் ...


முதலில் குழப்புவது போல இருந்தாலும் மெயின் ப்ளாட் தெரிந்தவுடன் நம்மை ஐக்கியமாக்கி விடுகிறது படம் . நிறைய கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் கதை ஆர்யாவை சுற்றியே வருவது ஆறுதல் . இடைவேளைக்கு முன் வரும் ஆக்சன் சீன்கள் நிச்சயம் நீண்ட நாட்கள் பேசப்படும் . முதல் பாதியில் கிடைக்கும்  விறுவிறுப்பு , வன்முறை தூக்கலாக இருந்தாலும் உறுத்தாமல் எடுத்த விதம் , வாட் நெக்ஸ்ட் என்கிற விதத்தில் நம்மை ஒன்ற வைக்கும் திரைக்கதை , காதலுக்கு கொடுத்த ப்ராக்டிகல் டச் போன்றவற்றால் மீகாமன் மெச்சூர்டாக தெரிகிறான் ...

ஓரளவுக்கு ரியலிஷ்டிக்காக போகும் படத்தில் திருஷ்டிப் பொட்டு  போல க்ளைமேக்ஸ் சண்டை , ஆடு புலி ஆட்டத்தில் நம்மை கவராத வில்லன் , ஸ்பீட் பிரேக்கர் போல வரும் காதல் சீன்கள் போன்றவற்றால் கப்பல் தள்ளாடாமல் இருந்திருந்தால் மீகாமன் நிச்சயம் கேப்டனாக இருந்திருப்பான் . மற்றபடி மாலுமிகள்  இல்லாமல் தனியாக ஆடியிருக்கும் மீகாமன் - ஒன் மேன் ஆர்மி ..

ஸ்கோர் கார்ட் : 43 


3 December 2014

காவியத்தலைவன் - KAAVIYATHALAIVAN - கவனிக்க வைப்பான் ...


12 வருடங்களில் ஐந்தே படங்கள் மட்டுமே  ஒரு இயக்குனர் எடுத்திருக்கிறார் என்பதே ஒவ்வொரு படத்துக்கும் அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தையை சொல்லாமல் சொல்லும் . ஆனாலும் அந்த சிரத்தை மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்திவிடும் என்று சொல்வதற்கில்லை . இப்படி சில வரிகளில் வசந்தபாலன் இயக்கத்தில் வந்திருக்கும் காவியத்தலைவன் படத்தைப் பற்றி சொன்னாலும் சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்தின் நாடக  உலக மாந்தர்களை நம் கண்முன் உலவவிட்ட முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும் ...

1930 களில் தமிழகத்தின் பிரபலமான நாடக குரு சங்கரதாச சாமிகளின்  (நாசர் ) பிரதான சிஷ்யர்கள் காளியப்பா பாகவதர் ( சித்தார்த் ) மற்றும் கோமதி நாயகம் பிள்ளை ( ப்ரித்விராஜ் ) இருவருக்குமிடையேயான வாழ்க்கைப் பயணத்தை விவரிப்பதே காவியத்தலைவன் ...

சித்தார்த்திற்கு இது அதிகப்படியான கதாபாத்திரம் தான் . ஆனாலும் தனது அலட்டிக் கொள்ளாத நடிப்பால் குறைகளை மறைக்கிறார் . காதலியின் சாவுக்கு பிறகு நாசருக்கு சாபம் விடும் இடத்தில் சிலிர்க்க வைக்கிறார் . குறும்பு சித்தார்த் கவர்ந்த அளவிற்கு தேசபக்தி பேசும் சீரியஸ் சித்தார்த் கவரவில்லை . இவரை ஒருதலையாக காதலிக்கும் வடிவாம்பாள் கதாபாத்திரத்தில் வரும் வேதிகாவின் நடிப்பு யதார்த்தம் ...

காளியப்பாவை காதலித்து பின் காலாவதியாகும் இளவரசி ரங்கம்மா
( அனிக்கா ) அட போங்கப்பா ரகம் . குரு வேஷத்தில் நாசர் நச் . தம்பி ராமையா அறிமுக பாடல் காட்சியில்  ஓவர் ஆக்டிங் செய்து  பயமுறுத்தினாலும் போகப் போக பழகி விடுகிறார் . ஆள் இல்லாவிட்டால் அதட்டுவதும் , ஆளைப் பார்த்தவுடன் பம்முவதுமாக மயக்கும் மேனரிஷத்தில் மன்சூர் அலிகான் ...


தன்னை விடுத்து சித்தார்த்தை குரு பாராட்டுமிடத்தில் ஆரம்பித்து கடைசியில் நீ இல்லேன்னா தான் எனக்கு நிம்மதி என்று  சித்தார்த்திடம் பொறுமும் க்ளைமேக்ஸ் சீன் வரை இந்த ப்ரித்வி பிள்ளைவாள் நடிப்பு ராஜ்ஜியம் நடத்துகிறார் . தான் எந்த விதத்தில் அவனை விட குறைந்து விட்டோம் என்று குருவிடம் காட்டும் ஆதங்கமாகட்டும் , காதல் விவகாரத்தில் காளியப்பாவின் இமேஜை காலி செய்து விட்டு ஒன்றுமே  தெரியாத அப்பாவியாய் நிற்பதிலாகட்டும் , வடிவு தனக்கில்லை  என்று தெரிந்தவுடன் காட்டும் ஏக்கத்திலாகட்டும் , கடைசியில் சித்தார்த்த் பற்றிய உண்மை தெரியவரும் போது வந்து மறையும் குற்ற உணர்ச்சியிலாகட்டும் மனதை கிறங்கடிக்கும் இந்த  மலையாளத்தான் தான் இந்த காவியத்தின் உண்மையான தலைவன் ...

" சண்டி குதிரை " , " சொல்லி விடு " பாடல்களில் கவரும் இசைப்புயல் பின்னணி இசையில் ( காலகட்டம் கொஞ்சம் நெருடினாலும் ) பின்னியெடுக்கிறார் . குறிப்பாக நாசருக்கு முன் ப்ரித்விராஜ் , சித்தார்த் இருவரும் நடித்துக் காட்டும் இடத்தில் வசனங்களை மீறி இவரது  இசையே ஆளுமை செய்கிறது  . 30 களில் நடக்கும் கதைக்காக ஜெயமோகன் பெரிதாக எதுவும் மெனக்கெடவில்லை என்கிற குறை இருந்தாலும் சித்தார்த் - ப்ரித்விராஜ் இடையேயான க்ளைமேக்ஸ் வசனங்கள் படத்திற்கு பலம் . ஆனாலும் செலம்பாதே போன்ற வசனங்கள் என்ன சாரே ?!...


பொன்வண்ணனின் நடிப்பைப் பார்த்து விட்டு பேசிக்கொள்ளும் ஒரு சீனிலேயே காளியப்பா , கோமதி என்கிற இரு கதாபாத்திரங்களின் அவுட்லைனை விளக்கி விடுகிறார் வசந்தபாலன் . அதே போல கோமதிக்கு காளியப்பா மேல் காண்டு வளர்வதற்கு இவர் வைத்திருக்கும் சீன்களிலும் அதே சாமர்த்தியம் தொடர்கிறது . ஆனால் ப்ரித்விராஜ் மேல் சித்தார்த் வைத்திருக்கும் மதிப்பு , மரியாதையை பெரிதாக காட்சிப்படுத்தாமல் வெறும் வசனங்களை மட்டும் வசந்தபாலன் நம்பியது துரதிருஷ்டம் . அதிலும் க்ளைமேக்ஸ் சீன் ஆடுகளத்தை நினைவு படுத்துகிறது ...

கதைக்களன் நாடக காலகட்டம் என்பதால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக தனி ட்ராக் எல்லாம் போகாமல் முக்கியமான கதாபாத்திரங்களை வைத்தே அதை முடிந்த அளவு சொல்லியிருப்பது டைரக்டர் டச் . அதே சமயம் இருவரின் ஈகோ பிரச்னை தான் கதை என்னும் போது எதற்கு பீரியட் படம் என்ற கேள்வியும் எழாமல் இல்லை . நாசரிடம் அடி வாங்கி விட்டு ப்ரித்விராஜின் மடியில் சித்தார்த் சாயும் இடத்தில் இந்த பிரச்சனைக்கு மூலகாரணமான ப்ரித்விராஜுக்கு ஒரு க்ளோஸ் அப் வைத்திருந்தால் அந்த சீன்  இன்னும் நிறைவாக இருந்திருக்கும் ...

சித்தார்த்துக்கு வரும் செலெக்டிவ் தேசபக்தி , எவ்வித அழுத்தமும் இல்லாத சித்தார்த் - இளவரசி காதல் , மனதை பெரிதும் கவராத சில மேடை நாடக பாடல் காட்சிகள் போன்றவையும் காவியத்தலைவனின்  காலை வாறுகின்றன . இது போன்ற குறைகளை கொஞ்சம் தவிர்த்து விட்டு பார்த்தால்  கொரியன் படங்களை சுடாமல் , மாடர்ன் மசாலாக்களில் இருந்தும்  மாறுபட்டு நம்மை அந்த காலகட்டத்திற்கு கொண்டு சென்ற வித்தத்தில் இந்த காவியத்தலைவன் நம்மை ஆளா விட்டாலும் கவனிக்க வைப்பான் ... 

ஸ்கோர் கார்ட் : 43

Related Posts Plugin for WordPress, Blogger...