25 December 2019

அவன் - அவன் - நிலா ( 14 ) ...


கார்த்திக் சுந்தரியை பற்றிய யோசனையில் இருந்ததால் இரண்டு தம்மோடு நிறுத்திக்கொண்டான் இல்லையேல் அந்த அரைமணி நேர நடையில் குறைந்தது நான்காவது கரைந்திருக்கும் . அவன் மனதை புரிந்து கொண்டு அவள் புகை பிடிப்பதை முழுவதுமாக நிறுத்த சொல்லாமல் குறைத்துக்கொள்ள சொன்னது அவனுக்கு பிடித்திருந்தது . அது போல செய்ய ஆரம்பித்தது அவனுக்கு பலனளித்தது .  காதலையும் அது போலவே  தடாலடியாக நிறுத்தினால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது . மூளைக்குள் உட்கார்ந்து யாரோ சம்மட்டியால் அடிப்பது போல ஒரு வேதனையை கொடுக்கிறது . சில சமயம் சண்டை முற்றிப்போய் சுந்தரியிடம் " சரி தான் போடி , நீயில்லேன்னா எனக்கு வேற ஆள் இல்லையா " என்று கத்திக்கொண்டு வந்திருக்கிறான் . ஆனால் உண்மையிலேயே அவனுக்கு அவளை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது அந்த பிரிவில் தான் புரிந்தது . மனதை மாற்ற அப்படியே வேறு யாருடன் பழகினாலும் அவர்கள் உடலில் அவள் முகமே பொதிந்து நின்றது . இப்போது அவள் எப்படி பேசியிருப்பாள் , சிரித்திருப்பாள் என்று அவள் பிம்பமே அவனை ஆக்கிரமித்தது .  நார்மலாக அவன் மனதை ஓரளவு ஆக்ரமித்திருந்தவள் பிரிவின் போது மொத்தமாக ஆட்சி செய்தாள் என்றே சொல்லலாம் ...

மெயின் ரோட்டுக்கு வந்தவுடன் டாப்பை ஒரு பார்வை பார்த்தவனுக்கு அங்கே யாரும் இல்லாதது ஆச்சர்யமாக இருந்தது . என்ன நாம ஊர்ல இல்லாத நேரமா பார்த்து எல்லா பசங்களும் திருந்திட்டாய்ங்களா ? என்று யோசித்துக்கொண்டே தெருவுக்குள் இறங்கினான் . இந்த நிசப்தம் அவனுக்கு எதையோ உணர்த்தியது . அந்த தெருவை இப்படியெல்லாம் அமைதியாக இருந்து அவன் பார்த்ததேயில்லை . என்ன நடந்திருக்கும் என்பதை சிலோன் ரேடியோவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என யூகித்தான் . நாட்டு  நடப்புகளை உண்மையான சிலோன் ரேடியோ சொல்லும் என்றால் அவன் தெருக்கோடியில் மளிகை கடை வைத்திருந்த இலங்கை அகதி ஏரியா செய்திகளை அப்படியே புட்டு புட்டு வைப்பார் . கார்த்திக் நேராக அவர் கடைக்கு சென்றான் . 45 வயதில் முன் தலை முழுவதும் சொட்டை விழுந்தாலும் ஆள் பார்க்க கம்பீரமாக இருப்பார் . உண்மையிலேயே ஆள் செய்தி வாசிக்கப் போகலாமென சொல்லும் அளவிற்கு நல்ல குரல்வளம் ...

கடையில் தக்காளி வாங்கிக்கொண்டிருந்த பெண் போகும் வரை அமைதியாக இருந்த கார்த்திக் " என்னண்ணே  ஆச்சு ? பசங்க ஒருத்தனையும் காணோம் " என்று கேட்டான் .  இவனுக்கு பதில் சொல்வதற்காகவே அந்த கடையில்  காத்திருந்தவர் போல " என்ன தம்பி உனக்கு விஷயமே தெரியாதா ? ரமேஷோட அண்ணனை யாரோ வெட்டிட்டாங்களாம் , ஆள் குத்துயிரும் கொலையுயிருமா ஜி.ஹெச் ல கெடக்காரு , பயலுகல்லாம் அங்க தான் போயிருக்காங்க " , அவர் சொன்ன மாத்திரத்திலேயே அவனுக்கு தொண்டை அடைத்தது . சில மாதங்களுக்கு முன்னாள் தான் அவரது கம்பீரத்தை அருகில் இருந்து பார்த்தான் . கத்தியை எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்பார்கள் , ஆனால் அவன் இவ்வளவு சீக்கிரம் அது நடக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை . ரமேஷ்  பற்றி யோசிக்கவே அவனுக்கு அச்சமாக இருந்தது . அண்ணன் சில வருடங்களில் அரசியலில் மிகப்பெரிய ஆளாக வந்துவிடுவார் அதன் பிறகு நம் ராஜ்ஜியம் தான் என்று கனவு கண்டு கொண்டிருந்தான் ...

ஒரு முறை ரமேஷ் வீட்டு  மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த போது திடீரென உதயமான அண்ணன் மிக குஷியில் இருந்தார் . அவர் நடையிலேயே சரக்கடித்திருக்கிறார் என்பது தெரிந்தது .
" என்ன தம்பி ரமேஷுக்கு படிப்பு சொல்லித்தருவன்னு  பார்த்தா சினிமாக்கதை பேசிக்கிட்டு இருக்க ?! " அவர் கேட்பதிலேயே அவனை சும்மா காலை வாருகிறார் என்பது புரிந்தது . " அண்ணே அவன் பெரிய டைரக்டரா வரப்போறான்னே , கதையை கேட்டா மிரண்டுருவ " . ரமேஷ் உடனே புகுந்து அண்ணனுக்கு சீரியசாக விளக்கிக்கொண்டிருந்தான் . " அப்படியென்னடா மிரட்டுற  மாதிரி கதை , பேய்க்கதையா ?" அவர் சிரித்துக்கொண்டே கேட்டார் .
" இல்லேண்ணே , ஒரு சாதாரணமான ஆள் ஒரு பிரச்சனையால் ரவுடியாகி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மேல வந்து கடைசியா ஸ்டேட்டோட சி.எம் ஆகுற கதை " . கார்த்திக் சொன்னவுடனே அவனை கொஞ்ச நேரம் பார்த்தவர் ,
" தம்பி அதெல்லாம் சினிமாவுல தான் நடக்கும் , நிஜத்துல கொஞ்சம் மேல வரதுக்குள்ள  குத்திப்போட்டு போய்டுவானுங்க " என்றார் . அவர் சொன்ன யதார்த்தத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை ...

" அண்ணே சும்மா உளராத " என்று ரமேஷ் அவரிடம் கோபப்பட்டான் .
" நெருப்புன்னா சுடுமாடா , ஆனா தம்பி சொல்ற மாதிரி நடக்குறதெல்லாம் நூத்துல ஒன்னு , ரொம்ப சிலர் தான் அமைச்சரால்லாம் கூட ஆகியிருக்காங்க".  " நாம இங்க சொல்றது எதுவுமே எங்கோ ஒரு இடத்துல நடந்தது தான் , இல்ல நடக்கப்போறது தான் " .
கார்த்திக் தீர்க்கமாக சொன்னதை அவர் ஆச்சர்யமாக பார்த்தார் .
" நல்லா பேசுறாண்டா " என்று தம்பியிடம் அவனுக்காக சர்டிஃபிகேட் கொடுத்தார் . " சரி அப்படி என்னதான் கத வச்சுருக்க சொல்லு கேட்போம் " என்று சொல்லிக்கொண்டே மாணிட்ச்சந்தை பிரித்து வாயில் போட்டுக்கொண்டார் . அவன் கதையை சுருக்கமாகவும் , முக்கியமான சீன்களை மட்டும் விலாவாரியாவாகவும் விவரித்தான் . " டே என்னடா , நம்ம சுடுகாட்டு மேட்டர் , பஸ் சண்டைல்லாம் வச்சுருக்க " . " ஆமாண்ணே சினிமாவோ , நாவலோ நடந்ததோட தொகுப்பு தானே ,  மானே , தேனே போடுற மாதிரி நம்ம கற்பனைய சேத்துக்கணும் " .  இதுவரை நண்பர்களிடம் மட்டும் சொல்லிக்கொண்டிருந்த கதையை இப்போது தான் அண்ணாந்து பார்க்கும் ஒருவரிடம் அதுவும் இந்த கதைக்கான சீன்களை யாரை உற்று நோக்கி எடுத்துக்கொண்டானோ அவரிடமே சொல்வது அவனுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது ...

" அதென்னமோ தெரில ஆனா நேர்ல பார்த்ததை விட நீ சொல்றது சுவாரசியமா இருக்கு , அதுவும் இண்டெர்வெல் பிளாக் சூப்பர் " , அவன் ஆடியன்ஸிடம் எதை எதிர்பார்த்தானோ அதை சரியாக சொன்னார் . அவன் வைத்த சீன்களின் ஒரிஜினல் சம்பவங்கள் தெரிந்த அவருக்கே இது பிடிக்கும் போது புதுசாக பார்ப்பவர்களுக்கு அதிகம் பிடிக்கும் என்று அவன் யூகித்தான்.
" இத படமா எடுக்க என்ன ஒரு அஞ்சு லட்சம் ஆகுமா ?" அவர் அப்பாவியாக கேட்க அவன் சிரித்துக்கொண்டே " இல்லேண்ணே மினிமம் அம்பது லட்சம் ஆகும் , அதுவும் பெரிய ஹீரோவா போடாம இருந்தா " . அவன் சொன்னதைக் கேட்டு அவர் வாயடைத்துப்போனார் . " என்னப்பா சொல்ற பெரிய ஹீரோ இல்லாமயே அவ்ளோ ஆகுமா ?" . " ஆமாண்ணே புதுசா சங்கர் னு ஒரு டைரக்டர் வந்து சினிமாவோட டைமென்ஷனையே மாத்திட்டார் " .
" ஒரு பாட்டுக்கே நூறு மும்பைக்காரிகளை ஆட விடுவாரே அவர் தானே ?,
ஆனா அவர் படமெல்லாம் செம்மப்பா , இந்தியன நானே நாலு தடவ பாத்துட்டேன் " . சினிமாவுக்கு  சாமான்யனிலிருந்து ராஜா வரை யாரையும் கட்டிப்போடும்  மகிமை இருக்கிறது என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
யாரிடமும் அவ்வளவாக பேசிக்கொள்ளாதவர் சினிமாவை பற்றி அவனிடம் அளவளாவிக்கொண்டிருந்தார் ...

" அம்பது லட்சம் என்ன , அஞ்சு கோடி கொடுக்குற ஆளுங்கள கூட நமக்கு தெரியும் " . அவர் சொன்ன போது அவனுக்கே கேட்க ஆசையாக  இருந்தது .
" என்ன தம்பி சும்மா புருடா விடுறேன்னு பாக்குறியா " , அவர் கேட்டவுடன்
" சே , சே இல்லேண்ணே ஆச்சர்யமா பார்த்தேன் " . அவர் மெதுவாக சென்று அங்கே இருக்கும் வாஷ்பேஷனில் எச்சில் துப்பி விட்டு வந்தார் .
" சீரியஸா சொல்றேன் கேட்டுக்க , நம்ம பரமு அண்ணன் கிட்ட இல்லாத பணம் இல்ல , என்ன போன எலக்சன்ல நெறைய பணத்தை விட்டுட்டாரு , ஜெயிச்சிருந்தா கதை வேற " . அவர் பரமு அண்ணனுக்கு எவ்வளவு க்ளோஸ் என்பது ஊருக்கே தெரியும் . " ஒன்னும் பிரச்சனை இல்ல , இன்னும் ஆறு மாசத்துல விட்டத எடுத்துருவாப்புல , நான் உன்ன அங்க கூட்டிட்டு போறேன்".
அவன் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்து அவர் பேசியது அவனுக்கு பெருமையாக இருந்தது . " இப்போ நீ சொன்னதெல்லாம் அப்படியே படமா எடுத்துடுவியா " அவர் கேட்கும் போது பயமும் கூட வந்தது  .
" இல்லேண்ணே நான் முதல்ல  அசிஸ்டன்டா ஒர்க் பண்ணனும் , அதுக்கப்புறமா தைரியமா எடுக்கலாம் " . " ஏன்பா இந்த நாயகன் படம் எடுத்தாரே அவர் பேரென்ன ?" , ரமேஷ் உடனே " மணிரத்னம் " என்று சொல்லி தனக்கும் சினிமா தெரியும் என்பது போல பார்த்தான் . " ம் , அவர்லாம் யார்ட்டயும் ஒர்க் பண்ணலன்னு சொல்றாங்க ?! " . 
" உண்மை தாண்ணே  , ஆனா அவர் ஃபாரீன்ல போய்  கோர்ஸ் படிச்சாரு ப்ளஸ் அவருக்கு ஃபேமிலி பேக்கப் நல்லா இருந்தது ,
அதோட அவர் செம்ம டேலெண்டெட்  " என்று அவனுக்கு தெரிந்ததை வரிசையாக  சொன்னான் ....

" இருக்கலாம் , ஆனா அவர் மேல நம்பிக்கை வச்சு பணம் போட்டாங்கள்ள அதான் மேட்டர் " . ஆமாம் அவர் சொல்வது உண்மை தான் , இங்கே திறமை இருப்பவர்கள் அனைவருக்கும்  வாய்ப்பு கிடைப்பதில்லை , வாய்ப்பு கிடைத்த அனைவரும் வெற்றி பெறுவதில்லை , வெற்றி பெற்ற  அனைவரும் அதை தக்க வைத்துக்கொள்வதில்லை . சினிமா என்றுமே ஒரு மாய உலகம் .
" தம்பி நீ கதையை ரெடி பண்ணிக்கோ , அப்படியே யார்ட்டயாவது ஒர்க் பண்ணிக்கோ , உன்ன அவர்கிட்ட போய் உக்கார வைக்க வேண்டியது என் பொறுப்பு " அவர் பேச்சு அவனுக்கு உற்சாக டானிக் போல இருந்தது .
கதையை மேலும்  மெருகேற்ற வேண்டுமென நினைத்துக்கொண்டான் . லைப்ரரிக்கு போய் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் . ஒரு நெடு பயணம் போக வேண்டும் , அப்பொழுத் தான் நிறைய புது மனிதர்களை , சம்பவங்களை பார்க்க முடியும் . " சரி தம்பி , நீ சினிமா கதையை ரெடி பண்றதோட சேர்த்து இவனையும் பாஸ் பண்ண வச்சுடு " . என்று ரமேஷை பார்த்து கை  நீட்டி சொல்லிக்கொண்டே அவர் மொட்டை மாடியில் அவருக்கென பிரத்யேகமாக இருக்கும் ரூமுக்கு போனார் ...

சமீபத்தில் ரமேஷை பார்த்த போது  கூட அவன் அண்ணன் கார்திக்கையும் , அவன் கதையை பற்றியும் விசாரித்ததாக சொன்னான் . அதுவும் அவர் யாரைப்பற்றியும் அவ்வளவு மெனெக்கெட்டு விசாரித்ததில்லை , கடந்த முறை பரமு அண்ணன் வந்த போது கூட அவன் மேட்டரை காதில் போட்டு வைத்திருப்பதாகவும் சொன்னது அடுத்த ஒரு வருடத்துக்குள் ஆட் ஏஜென்சி அனுபவத்தை வைத்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட வேண்டுமென திட்டமிட்டிருந்தான் .  ஆனால் எல்லாமே ஒரு நொடியில் தகர்ந்து விடுகிறது .
அவர் தீர்க்கதரிசனமாக அன்றே  சொன்னது அவன்  நினைவுக்கு வந்தது .
சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தவன் வீட்டுக்கு போய் யமஹா சாவியை எடுத்துக்கொண்டு கிளம்ப ரெடியானான் . " வந்ததும் வராததுமா எங்கடா போற " என்று கேட்க எத்தனித்த அம்மா அவன் கத்தலுக்கு  பயந்து பேசாமல் இருந்தாள்  . " என்னடி பேசாம நின்னுட்ட , துரை எங்க போகப்போறாரு , முக்குல தோஸ்துங்க கூட நின்னு தம்மை ஊத்தப்போறாரு "
அவன் அப்பா குரல் கேட்டதும் அவரை பார்த்து ஒரு முறை முறைத்து விட்டு அந்த கோபத்தை வண்டியின் கிக் ஸ்டார்ட்டில் காண்பித்தான் ...

மெயின் ரோட்டுக்கு வந்த போதே கும்பல் கும்பலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள் . இவனை பார்த்து கூட சிலர் முணுமுணுப்பது போலவே அவனுக்கு இருந்தது . வண்டியை ஒரு பெட்டிக்கடையில் ஓரங்கட்டி ஹாஃப் பாக்கெட் கோல்ட் பிளேக் ஃபில்டர் வாங்கிக்கொண்டான் . அதில் ஒன்றை எடுத்து  பற்ற வைப்பதற்குள்ளே  மொக்கை அவனை நோக்கி வேகமாக வருவது தெரிந்தது . கார்த்திக்கிடம் நெருப்பை வாங்கி ஒரு சிசர்ஸை பற்ற வைத்த மொக்கை " மாப்பிள உன்ன பாக்க தான் வேகமா வந்துக்கிட்டு இருக்கேன் " என்றான் . அண்ணன் குத்துப்பட்டதாய் சொல்ல தான் வந்திருக்கான் என்பது புரிந்தது . " ம் சிலோன் அண்ணன்  சொன்னாரு , ஜி.ஹெச் சுக்கு தான் கெளம்பிக்கிட்டு இருக்கேன் " . கார்த்திக் சொன்னதை கேட்டு வெறுமையாக பார்த்த மொக்கை " இல்ல மாப்பிள்ளை ஜிஹெச் போகத் தேவையில்லை " என்றான் . " என்னடா ஆச்சு  ?"
" இல்ல  மாப்பிள்ளை டாக்டர்ஸாலயும் காப்பாத்த முடில , அவ்வளோ வெட்டு உடம்பு ஃபுல்லா , அண்ணன் செத்துட்டாரு " . அவன் சொன்னதை கேட்டவுடன் கார்த்திக்கின் வாயிலிருந்த சிகெரெட் தவறி கீழே விழுந்தது .
" நாம அவர் வீட்டுக்கே போய்டலாம் , பாடிய கொண்டு வந்துடுவாங்க"
அவனை போன்றவர்களுக்கு ஒரு ஆளுமையாக இருந்த ஒரு மனிதன் இறந்த சில நிமிடங்களிலேயே அஃறிணையாக மாறியது அவனுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது . அடுத்தடுத்து விதி விகாரமாக தனது கோரைப்பற்களை அவனுக்காக காட்ட காத்துக்கொண்டிருந்தது ...

தொடரும் ...









14 December 2019

அவன் - அவள் - நிலா (13) ...


மாட்டுத்தாவணிக்கு இரவு ஏழரை மணி போல வந்து சேர்ந்தான் கார்த்திக். சுரேஷ் தங்கைக்காக செய்த அடிதடிக்கு பிறகு அவன் வேறெந்த வம்பு தும்புக்கும் போகவில்லை . அதன் பிறகு சுந்தரியின் அண்ணனோடு திருச்சியில் நடந்த சண்டை  தான் . எல்லாமே எதிர்பாராத நேரத்தில் நடந்து முடிந்து விட்டது . கோபம் தலைக்கேறினால் அவனால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை . பள்ளிக்காலத்திலேயே அவனை ஏற்றி விட்டு தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்பவர்கள் உண்டு . அதெல்லாம் அவனுக்கு போகப்போக தான்  புரிய ஆரம்பித்தது . யார் யாருக்காகவோ சண்டை போட்டவன் தனக்கென்று வரும் போது சும்மா இருக்க முடியவில்லை . சுந்தரியின் முகத்துக்காகவாவது  பொறுத்திருக்கலாம் . அது கூட முடியாமல் போனது அவனுக்கு வருத்தம் தான் . அவனுடைய ஆக்சன் பிரதாபங்களை சுந்தரியிடம் சொல்லும் போது அவள் மர்ரு தங்கை போல ஆவலோடு வாய் பிளந்து கொண்டு  கேட்பதில்லை . தங்கை  கேட்கிறாள் என்பதற்காகவே மர்ரு ரெண்டு மூணு பிட்டை  எக்ஸ்டராவாக எடுத்து விடுவான் . உடனே அவள் " அப்படியான்னா அவன் பாஞ்சு பாஞ்சா அடிச்சானா  ?" என்று கார்த்திக்கிடம் அப்பாவியாக கேட்பாள் . அவனுக்காக கார்த்திக்கும் ஆமாம் போட்டு வைப்பான் ...

அதே சண்டையை சுந்தரியிடம் சொன்ன போது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்து  விட்டு " என்ன உனக்கு பெரிய ஹீரோன்னு நினைப்பா?" என்று சர்வ சாதாரணமாக கேட்டு அந்த பிம்பத்தை உடைத்தெறிவாள்.  " நம்ம வாழ்க்கை என்ன ரெண்டரை மணி நேர சினிமான்னு நினைச்சியா ?அதுல போலீஸ் கடைசியில தான் வருவாங்க , ஆனா நிஜத்துல முதல்லயே வந்து தூக்கிட்டு போய்டுவாங்க ! . அவனுக்கு புரியும் பாஷையில் பேசினாள். அவனுக்கு முதலில் கோபம் தான் வந்தது .
" அதுக்காக என்ன பயந்து பயந்து பொட்டை மாதிரி வாழ சொல்றியா ? " .  
" ஓ அப்போ நீ வாழற வாழ்க்கைக்கு பெரியார் பஸ் ஸ்டாண்ட்ல சிலை வப்பாங்களா ? ".  " உன்ன உங்கப்பன் ஆடிட்டராக்குறதுக்கு பதிலா வக்கீலாக்கலாம் , வாய் வத்தலகுண்டு வரைக்கும் நீளுது ! " .  அவனிடம் உள்ள பிரச்சனை அது தான் . அவள் தன்னுடைய நல்லதுக்காக தான்  சொல்கிறாள் என்பதை முழுதாக புரிந்து கொள்ளாமல் அவள் பதிலுக்கு பதில் பேசுகிற விதத்தில் கடுப்பாகி அந்த ஆர்க்யூமென்ட்டில் வின் பண்ண வேண்டுமென்கிற வெறியில் கத்துவான் ...

ஒரு கட்டத்துக்கு மேல் அவனோடு போராட முடியாமல் அவளுக்கு அழுகை வந்து விடும் . இவன் ஏன் இப்படியிருக்கிறான் என்று ஆத்திரம் வரும் . எக்கேடு கெட்டோ போகிறான் நாம் ஏன் நம் தரத்தை இறக்கிக்கொள்ள வேண்டும் என்கிற நினைப்பு வரும் . சத்தியமாக இரண்டு பேர் எண்ணங்களுக்கும்  செட்டே ஆகாது என்றே தோன்றும் . அந்த நிமிடம் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு விட்டு " சரிதான் போடா " என்று கத்தி விட்டு போய்விடலாம் போல இருக்கும். ஆனால் அவை எதையும் செய்ய விடாமல் ஏதோ ஒன்று தடுக்கும் . அதற்கு பெயர் தான் காதலா ?!.  " ஓகே உன் இஷ்டத்துக்கு நீ இரு , என்ன வேணா பண்ணு , நான் யாரு இதெல்லாம் கேக்க ? ஆஃப்டர்ஆல் பொண்ணு தானே? 
நான் சொல்லி கேட்டுட்டா உங்க கீரிடம் இறங்கிடுமே ! " . அவள் அழுகையோடு பேசி விட்டு அங்கிருந்து கிளம்புவாள் . அவனுக்கு அவள் போகிறாள் என்றவுடனே தான் புத்தி வரும் . " இல்லடி சாரி , ஏதோ ஒரு இதுல பேசிட்டேன் , நீ பதிலுக்கு பதில் பேசினியா அதான் டென்சன் ஆயிட்டேன்". 
" அப்போ நான் எதுவுமே பேசக்கூடாது , நீ சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டனும் " ...

அவன் அப்படியெல்லாம் நினைக்கிற ஆள் இல்லை ஆனாலும் அவன் ஆழ் மனதுக்குள் ஆணை விட பெண் மட்டம் அல்லது ஆணுக்கு பெண் அடங்கி தானிருக்க வேண்டும் என்கிற எண்ணம் படிந்திருக்கிறது . அது அவன் அப்பாவை பார்த்தோ அல்லது மற்ற ஆண்களின் அடக்கு முறையை பார்த்தோ அவனுக்குள் வேரூன்றியிருக்கலாம் . எதிரில் இருக்கும் பெண்ணிற்கு இதையெல்லாம் உற்று நோக்க முடியாது . அவள் யார் தனக்கு நெருக்கம் என்று நினைக்கிறாளோ அவனே அப்படி பேசுவது இதயத்தை நொறுக்குகிறது . ஆனால் அது தான் நிதர்சனம் . யாரை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அவர்களால் மட்டுமே நம்மை அதிகமாக காயப்படுத்த முடியும் . அவன் கைகளை பிடித்துக்கொண்டு " ப்ளீஸ் மன்னிச்சுடு " என்று . கெஞ்சலானான் . அது தான் அவனின் வினோத குணம் . என்ன தான் கோபம் இருந்தாலும் அவள் அழ ஆரம்பித்தால்  அவனால் தாங்க முடியாது . பெண் அழுதால் பேயும் இறங்கும் என்பார்கள் அவன் மனிதன் தானே ! ...

" இந்தோ  பாரு நான் சும்மா ஜாலியா சுத்திட்டு போக உன்ன லவ் பண்ணல , 
நாம நல்லா இருக்கணும்னா கண்டிப்பா கேள்வி கேப்பேன் " .
அவன் " ம் " என்றான் . " ஏற்கனவே உன் சினிமா ஆசைய வீட்ல ஏத்துப்பாங்களான்னு தெரியல  , இதுல இந்த அடிதடி வேறென்னா எந்த வீட்ல ஒத்துப்பாங்க ? " . அவன் அமைதியானவுடன் அவள் சொல்வது புரிய  ஆரம்பிக்கும் . அவன் முடியை கோதிக்கொண்டே அவள் சொல்லும் போது தாய் மடிக்கு ஏங்கும் குழந்தை போலானான் . எப்பொழுதுமே இதே போல அவன் தான்  சொல்வதைக் கேட்டால் என்ன என்று அவளுக்கு தோன்றும் . 
பதிலுக்கு பதில் சண்டை போடாமல் பொறுமையாக அவனுக்கு இப்படி எடுத்து சொன்னால் என்ன என்று அவனுக்கு தோன்றும் . நாம் மற்றவர்களின் 
செய்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதை விட நாம் விரும்பும்படி அவர்கள் நடக்க வேண்டுமென்றே விரும்புகிறோம் .  எல்லாம் நாம் நினைத்தபடியே நடந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் ஏது ? இரண்டரை மணி நேர படத்திலேயே காதல் , செண்டிமெண்ட்,  ஆக்சன் , ட்விஸ்ட் என பலவற்றை எதிர்பார்க்கும் போது குறைந்தபட்சம் 60 வருட வாழ்க்கை அது அப்படியே ஒரே நேர்கோட்டில் போகுமா என்ன ?!.

மனிதனின் வினோத உணர்வுகளில் முக்கியமானது காதல் . சுஜாதா சொன்னது போல எல்லாமே இருபாலரின் உடல்நிலையில் ஏற்படும் வேதியல் கோளாறுகள் மட்டும் தான் என்று அதை ஒதுக்கி விட முடியுமா ? நிச்சயம் முடியாது . காதலில் நிச்சயம் காமம் இருக்கும் ஆனால் காமத்துக்குள் காதல் இருக்காது . அவனுக்கு தெரிந்த ஒரு பிடிசி டிரைவர் அண்ணன் ஊர் ஊராக சுற்றுவார் . அவனுடைய டீன் ஏஜ் வயதில் அவரின் ஜகதலப்பிரதாபங்களை நிறைய கேட்டிருக்கிறான் . அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை . ஏன் என்று கேட்டால் " காஃபி குடிக்க ஏண்டா வீட்லயே மாட்ட வாங்கி கட்டணும் ? 
தேவைப்படும் போது  வாங்கி குடிக்க  வேண்டியது தான " என்று சூசகமாக சொல்லி விட்டு சிரிப்பார் . தனிக்கட்டையாக இருப்பதாரீலும் , சொத்து இருப்பதாலும் அவரிடம் காசுக்கு பஞ்சமில்லை . ஃபாரீன் சரக்கு ஒரு பாட்டில் எப்பொழுதுமே அவர் வீட்டில் இருக்கும் . பணத்தில் மட்டுமல்ல  ஆள் பார்க்கவும் எம்ஜிஆர் போன்ற சிகப்பு உடல்வாகுடன் இருப்பார் . எப்பொழுதுமே அவர் மேல் ஒரு வித சென்ட் வாசனை இருந்து கொண்டே இருக்கும் ...

" ஏண்ணே  அதுக்கு காசு கொடுத்து போறீங்களே ,போரடிக்காதா ? இல்ல ஒரு  மாதிரி இருக்காதா ? . அவனிடம் எப்பொழுதமே அவர் வயது வித்தியாசம் பார்க்காமல் பழகுவதால் நேரடியாகவே கேட்டு விடுவான் . 
" நீ காலையில டிஃபன் சாப்ட்டியா ? " . " சாப்ட்டேனே பொங்கல் கொஸ்து".
" அது ஹெவியா இருக்குமே அப்போ மத்தியானம் சாப்பிட மாட்டியா ?" .
" போங்கண்ணே இப்போ போய் ரெண்டு மேட்ச் ஆடி முடிச்சாலே பசி ஆரம்பிச்சுடும் " . அவர் பிளாக் சிகரட்டை எடுத்து பற்ற வைத்துக்கொண்டே பேச ஆரம்பித்தார் . " அதே மாதிரி தான் தம்பி இந்த உடம்புக்கும்  அடிக்கடி பசிக்கும் . பொங்கல் , இட்லி , தோசை , சோறுன்னு மாறி  மாறி  சாப்பிடுற மாதிரி உடம்புக்கும் அத்தினி ,  சித்தினின்னு எல்லாமே  விதவிதமா தேவை ".
அவர் சொல்லும்போதே அவனுக்கு போதையாக இருந்தது . ஆனால் என்ன தான் இருந்தாலும்  அதுக்கு காசு கொடுப்பதில் அவனுக்கு உடன்பாடே இல்லை . அது ஏதோ கடமைக்கு செயற்கையாக நடப்பது போலவே அவனுக்கு பட்டது . அவன் அதையும் கேட்டவுடன் அவர் சிரித்தார் .
" பரவாயில்லையே யார்ட்டயும் போலேன்னாலும் அனுபவஸ்தன் மாதிரியே பேசுற , ஒரு வேளை அண்ணனுக்கு தெரியாம ஏதாவது தப்பு தாண்டா பண்ணிட்டியா ?! : . "என்னன்னே அதெல்லாம் ஒன்னும் இல்ல , என் மனசுக்கு பட்டுச்சு " . " நீ சொல்றது உண்மை தான் , எனக்கும் அந்த மாத்ரி எனக்கே எனக்குன்னு பிரத்தேயகமா ஒருத்தி இருந்தா " . சொல்லும் போதே அவர் கண்கள் லேசாக கலங்கின ...

அவர் எத்தனையோ பெண்களுடன் உல்லாசமாக இருந்திருந்தாலும் அவருக்கென வாழ்ந்த ஒரு பெண்ணை பற்றி பேசும் பொழுது மட்டும் ஒரு வித்தியாசம் தெரிகிறது . அதற்கு பெயர் தான் காதலா ? இது இது தான்  காதல் என்று யாராலும் ஒரு கூண்டுக்குள் அடைக்க முடியாததன் பெயர் தான் காதலா ?!.சுந்தரியுடன் எவ்வளவோ முறை சண்டை போட்டிருக்கிறான்  அந்த கருமம்  பிடித்த காதலே  வேண்டாமென்று நினைத்திருக்கிறான்.
அவளை மறந்து விட  வேண்டுமென்று நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பான் ஆனால் போதையேறியதும் நேராக திருச்சிக்கே போய்  அவளை பார்க்க வேண்டும் போல இருக்கும் . அவளிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தோன்றும் .  நண்பர்கள் அவனை டைவர்ட்  செய்ய எவ்வளவோ முயற்சி செய்து தோற்றுப்போவார்கள் . சாதாரணமாக இருக்கும் நேரத்தை  விட அதை விட்டு விலக வேண்டுமென்று நினைக்கும் போது  தான் காதல் உக்கிரமடைகிறது . என்ன எழவுடா இது ? என அவன் பலமுறை யோசித்ததுண்டு ...

சுரேஷ் மாதிரி , பாபு அண்ணன் மாதிரி பெண்களை வெறும் உடல்களாக மட்டும் நினைக்கும் போது சண்டை சச்சரவுகள் வருவதில்லை . அது முடிந்தவுடன் அவளை பற்றிய நினைப்பு இருப்பதில்லை . அவள் பேசுவதெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டு குழம்ப தேவையில்லை . அவளோடு சண்டை போட்டுக்கொண்டு  பேசாத தருணங்களிலெல்லாம் ஏதோ இதய நோயாளி மாதிரி துடிக்க தேவையில்லை . பாக்காத நேரங்களிலெல்லாம் ஏதோ திருவிழாவில் காணாமல் போன சிறுவன் போல கதறிக்கொண்டிருக்க வேண்டியதில்லை . ஆனால் இத்தனை  இல்லைகளிலும் சுந்தரியை விட்டு பிரிய வேண்டுமென்கிற எண்ணம் மட்டும் அவனுக்கு இல்லவேயில்லை ...

மினி பஸ்சுக்காக சிறிது நேரம் காத்திருந்தவன் பிறகு ஒரு  சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு நடக்கலானான் . இந்த சிகெரட் , அப்புறம் சுந்தரி இரண்டையுமே மட்டும் அவனால் விடவே முடியாது என்று நினைத்துக்கொண்டான் . தன் காதலியை உடலுக்கு தீங்கு தரும் சிகரெட்டோடு ஒப்பிடுகிறோமே என அவனுக்கு யோசனை வந்தது. நல்லதோ தீங்கோ இரண்டையும் விட்டு அவனால் இருக்க முடியாது என்பதே நிதர்சனம். சிகரெட்டை  விட சொல்லி சுந்தரியே கேட்டிருக்கிறாள் . ஆனால் நல்ல வேளை நானா ? சிகரெட்டா என்று அவள் முரண்டு பிடிக்கவில்லை . அப்படி கேட்டிருந்தால் என்ன செய்திருப்பான் என்று அவனுக்கு நினைத்துப் பார்க்கவே முடியவில்லை . அவள் அப்படித்தான் நிறைய விஷயங்களில் நாசூக்காக நடந்து கொள்வாள் . அவனே முடிவெடுக்கும்படியாக ஒரு ஸ்பேஷ் கொடுப்பாள் . அதனால் அவள் குறைத்துக்கொள்ளும் படி சொன்ன பிறகு அதை கடமையாக செய்ய ஆரம்பித்தான் . ஆனால் இவையிரண்டையும்  விடவே முடியாது என்று நினைத்தானோ அதை விட்டு விட்டு ஒரு நாள் தனிமையில் நிற்கப்போகிறான் என்பது அப்போதைக்கு அவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை ...

தொடரும் ...




7 December 2019

அவன் - அவள் - நிலா ( 12 ) ...


வன் எதிர்பார்த்ததை விட எளிதாகவே  அந்த சம்பவம் நடந்து முடிந்தது . அவனுக்கு பயந்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஒரு கும்பல் அதுவும் அந்த ஏரியாவே அலறும் ஒரு தாதாவின் கும்பல் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை . அது என்னமோ புலிக்கு பயந்து ஏரிக்குள் விழுந்து முதலையிடம் மாட்டிய கதை போலாகிவிட்டது  . இதெல்லாம் முன்னமே தெரிந்திருந்த கார்த்திக் சாவகாசமாக ஒரு சிகரட்டை பற்ற வைத்துக்கொண்டே அவர்களிடம் வந்தான் . எம்பிக்கொண்டு அடிக்கப்போன மர்ருவை கார்த்திக் தடுத்தான் . அந்த இடத்தில் அவர்களை அவன் ஆட்கள் அடிப்பது சரியில்லை  அது அவன் நண்பனின் அண்ணனுக்கு செய்யும் மரியாதைக்குறைவாகி விடும் . அமைதியாக இருக்க சொல்லி தனது ஆட்களுக்கு சைகை செய்தான் . சிறிது நேரத்தில் அங்கே ஒரு சலசலப்பு உருவானது . இருட்டிலிருந்து ஒரு ஒளிக்கீற்று போல அவன் நண்பனின் அண்ணன் வந்தார் ...

அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறான் . முதன் முதலில் காலேஜில் கூடப்படிக்கும் பெண்ணை கிண்டல் செய்த பஸ் கண்டக்டரை தனி ஆளாக அடித்து ஓட விட்டதில் அவர் பெயர் கல்லூரி வளாகம் எங்கும் பரவியது . அதன் பின் கண்டக்டரோடு வந்த ஆட்களை கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து அடித்துத் துவைத்ததில் அந்த ஏரியா முழுவதும் பெயர் பிரபலமானது . அதற்கு மேல் கல்லூரி படிப்பிலெல்லாம் நாட்டம் இல்லாமல் முழு நேர அடிதடி ஆளாக அவர் மாறினார் . பிறகு எம்.எல்.ஏ வுக்காக ஒரு செய்கை செய்ததில் இருந்து காவல்துறை அவரை கண்டுகொள்ளாமல் தள்ளியே இருந்தார்கள் . அதை  பயன்படுத்தி எதிரிகளை காலி செய்து தென் மதுரை முழுவதும் பெரிய தாதாவானார் . அவரை நேரடியாக தெரியாதவர்கள் கூட அவர் பெயரை பயன்படுத்தி தங்களை பிரபலப்படுத்திக் கொண்டார்கள் . ரமேஷ் மட்டும் தான் இருப்பானென்று அவன் நினைத்திருந்தான் அண்ணன் இருப்பாரென நினைக்கவில்லை அப்படியே இருந்தாலும் இந்த சப்பை மேட்டருக்கெல்லாம் அவர் வரமாட்டாரென எண்ணியிருந்தான் ...

அவரின் அடிதடி பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருந்து  அவர் ஆறடிக்கு மேல் ஆஜானுபாகுவாக இருப்பாரென கற்பனை செய்து வைத்தவனுக்கு அவனை விட உயரம் குறைவாக ஒரு ஐந்தடி மட்டுமே இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. ஓடி வந்தவர்களின் கேங்க் லீடர் மட்டும் அவரை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால்  பயத்தில்  வெலவெலத்து போய் விட்டான் . விஷயம்  தெரியாத மற்றொருவன் தேவையில்லாமல் துள்ள இடி  இறங்குவது போல ஒரு அறை அவன் கன்னத்தில் விழுந்ததில் சுருண்டு தள்ளிப்போய் விழுந்தான் . அவரை கண்டு ஏன் எல்லோரும் பயப்படுகிறார்கள் என்று அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது . அந்த அடியின் வீரியத்தை  அருகிலிருந்த அவனாலேயே உணர முடிந்தது .  விழுந்தவன் சுதாரித்து எழ சிறிது நேரம்  பிடித்தது . அவர் கார்த்திக்கையும் , எதிர் ஆளையும்  பார்த்து சைகையில் கூப்பிட்டார் . இருவரையும் பார்த்து கொன்று விடுவேன் என்பது போல எச்சரிக்கை செய்து விட்டு எந்த ஏரியா என்று கேட்க இருவரும் சொன்னார்கள் . " இனிமே ஒருத்தன் ஏரியாக்குள்ள ஒருத்தன் போவக்கூடாது , மீறி பார்த்தேன் கொன்னு போட்ருவேன் , போங்கடா " என்று கத்த கார்த்திக் லேசாக கடுப்பானான்  . உடனே அதை புரிந்து கொண்டவனாய் ரமேஷ் அவனை பார்த்து  கண் ஜாடை செய்ய அவனுக்கு ஓரளவு விஷயம் புரிந்தது ...

அந்த அடிக்கு பிறகு விழுந்தவனை கூட்டிக்கொண்டு அவர்கள்  சடுதியில் இடத்தை காலி செய்தார்கள் . அதன் பிறகு கார்த்திக் , ரமேஷ் இருவரின் தோள்களிலும் கை போட்டுக்கொண்ட அண்ணன் " ரமேஷ் ஒழுங்கா படிக்க மாட்டேன்றான் , நீ தான் பாத்துக்கணும் . நீயும் இதோட எல்லாத்தையும் விட்டுட்டு படிக்குற வேலைய மட்டும் பாரு " அவர் சொல்லும் போதே ரமேஷ் அவனை பற்றி நிறைய அண்ணனிடம் சொல்லியிருக்கிறான் என்பது கார்த்திக்கிற்கு புரிந்தது . " சரிண்ணே , நான் பாத்துக்கறேன் , நீங்க ஃப்ரீயா விடுங்க " என்றான் .  அதன் பிறகு அங்கிருந்து மெயின் ரோடு வரை வந்த ரமேஷை சரக்கடிக்க கூப்பிட அவன் அண்ணனுக்கு பயந்து ஆளை விடு என்று எஸ்கேப் ஆகிவிட்டான் . சுரேஷ் சமீப காலமாக அவர்கள் டாப் அடிக்கும்  இட்லிக்கடையில் பரபரப்பாக வெயிட் செய்து கொண்டிருப்பான் . லோக்கல் ஆள் அப்படியே கெளம்பி விட கார்த்திக் யமஹா 100 ஐ ஸ்டார்ட் செய்ய மற்ற இருவரும் ஸ்ப்ளெண்டரில் கிளம்ப 100 கிமி வேகத்தில் ஏரியாவை நோக்கி பறந்தார்கள் ...

நேரம் கடந்திருந்ததால் இட்லிக்கடை மூடியிருந்தது ஆனால் அதனோடு சேர்ந்திருந்த பெட்டிக்கடையும் சாத்தியிருந்தது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது . செகண்ட் ஷோ முடிந்து ஆட்கள் வந்த பிறகு தானே மூடுவார்கள்!. மற்றவர்கள் சிகரெட் அண்ட் சரக்குக்கு தேவையான சைடிஷ்கள் வாங்க புறப்பட கார்த்திக் சுந்தரியை பற்றி யோசித்து கொண்டே பின் பக்கம் நடக்கலானான் . அவள் அவனது வாழ்க்கைக்குள் வந்த பிறகு தான்  அவனுக்கு எதிர்காலத்தை பற்றிய எச்சரிக்கை உணர்வு அதிகமானது . அவள் படிப்பை பற்றி நிறைய பேசுவாள் . அவன் அவள் கை  விரல்களை இறுக்கிகொண்டே கழுத்துப்பக்கம் எதையோ தேடிக்கொண்டிருப்பான் . ஆனால் கருப்பைக்குள் இருந்த அபிமன்யு தாய் சொன்னதையெல்லாம் கேட்டது போல அவள் சொன்னதெல்லாம் அவன் மூளைக்குள் நன்றாகவே ஏறியிருந்தது . அவளால் சினிமாவை பற்றிய அவனது எண்ணத்தை மாற்ற முடியவில்லையே தவிர வாழ்க்கைக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் அதுவும் குறைந்தது டிகிரியாவது வேண்டுமென்பதை நன்றாகவே உணர்த்தியிருந்தாள் . அதனால் அவன் தேவையில்லாத அடிதடி , பஞ்சாயத்துக்களிலெல்லாம் தலையிடமாலேயே இருந்தான் . இது சுரேஷின் தங்கை விஷயம் என்பதால் அவனால் தவிர்க்க முடியவில்லை ...

பின்னால் நடந்து கொண்டிருந்தவனுக்கு காலில்  ஏதோ தட்டுப்பட குனிந்து பார்த்தால் அங்கே ஹாஃப் பாட்டில் சிறிது சரக்கோடு உருண்டு  கொண்டிருந்தது . கொஞ்சம் தொலைவில் இட்லிக்கடை கம் பெட்டிக்கடைக்காரன் வேட்டி  விலக விழுந்து கிடந்தான் . பார்த்த மாத்திரத்திலேயே போதை என்று தெரிந்தது . ஆனால் காஸ்ட்லியான சரக்கெல்லாம் அவன் அடிக்க மாட்டானே அந்த பாட்டிலை யார் வாங்கிக்கொடுத்தது என்று யோசித்துக்கொண்டே கார்த்திக் குடிசைப்பக்கம் பார்க்க அந்த விரிசலில் சுரேஷ் சரக்கடித்து விழுந்து கிடந்தவன் மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தான் . பார்த்த மாத்திரத்திலேயே அவனுக்கு கடைக்காரனுக்கு யார் சரக்கு வாங்கிக்கொடுத்து மட்டையாக்கியது என விளங்கியது .  அவனுக்காக அவர்கள் வேலை செய்த இடைவெளியில் அவன் என்னடாவென்றால் புருசனுக்கு சரக்கை வாங்கி ஊற்றிக்கொடுத்து விட்டு பொண்டாட்டியோடு ஜல்சா செய்து கொண்டிருக்கிறான் . அவர்கள் தண்ணியடிக்கும் போதெல்லாம் சுரேஷ் அடிக்கடி பின்னால் போய்விட்டு லேட்டாக வருவதன் சூட்சுமம் அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது . ஆனால் அவர்கள் செட்டிலேயே எந்த பெண்ணை பற்றியும் அனாவசியமாக பேசாத அல்லது சைட் அடிக்காதவன் இவ்வளவு பெரிய வேலையையே கமுக்கமாக செய்து கொண்டிருப்பதை  பார்த்தவனுக்கு ஒரு பக்கம் அதிசயமாக இருந்தது . மிகவும்  அமைதியாக இருப்பவர்களுக்கு பின்னால் தான் நிறைய அதிசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன ...

எது எப்படியோ இப்பொழுது அவர்கள் இருக்கும் நிலையில் நடுவே புக  விரும்பாமல் ஓரமாக வந்தான் . ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடைக்கும் மர்மங்கள் அவனுக்கு ஆச்சர்யமாக  இருந்தன .  அவள் சாப்பிடும் போது சுரேஷ் அண்ணனுக்கு இன்னும் கொஞ்சம் மீன் குழம்பு ஊத்துங்க என்று புருஷனிடம் சொல்லி ஊற்ற சொல்லுவாள் . அவனும் அதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு அவனுக்கு மீனை நிறையவே  வைப்பான் . ஆனால்  யோசித்துப் பார்த்தால் இது ஏதோ அவசர கதியில் நடந்தது போல அவனுக்கு படவில்லை . அவள் புருஷனுக்கு குடி இல்லாமல் இருக்க முடியாது . குழந்தைக்கு பாலுக்காக வைத்த காசை கூட எடுத்துக்கொண்டு போய் குடித்திருக்கிறான் .  அவளுடைய முயற்சியால் இந்த கடை அமைந்தது . அதன் பிறகு கடனை உடனை வாங்கி இந்த இட்லிக்கடையை நடத்திக்கொண்டிருக்கிறாள் ...

சுரேஷ் அவர்களுக்கு நிறைய தடவை கடனாக பண உதவி செய்திருக்கிறான்.
அதை கொடுத்துக்கழிப்பதற்கு பதில் படுத்துக்கழிக்கிறாள் போலிருக்கிறது , ஆனால் பண விஷயத்தையும் தாண்டி அதீத நெருக்கத்தை அவர்களிடம் அவனால் காண முடிந்தது  . உதவி செய்தவன் மேலுள்ள விசுவாசம் காதலாக மாறியிருக்கலாம் . புருஷனின் கையாலாகாத்தனம் அவளை சுரேஷ் பக்கம் ஈர்த்திருக்கலாம் . சுரேஷ் அதிக செலவு செய்து அக்காவை பெரிய இடத்தில் கட்டிக்கொடுத்த கடனையே இன்னும் அடைத்துக்கொண்டிருக்கிறான் . இன்னும் தங்கை , தம்பி இவர்களின் படிப்பு, குடும்ப செலவையும் அவன் தான்  பார்க்க வேண்டும் . அவனது அப்பா தனியார் கம்பெனியில் குமாஸ்தாவாக இருந்து ரிட்டையர் ஆனவர் .  அவருடைய கொஞ்சம் சேமிப்பு மருத்துவ செலவுக்கே சரியாக இருக்கும் ...

கல்யாண வயதை தாண்டி குடும்பத்துக்காக உழைப்பவர்களுக்கு  என்றுமே மனதுக்குள் ஒரு தீராத ஏக்கம் இருக்கும் . அந்த ஏக்கத்தை தான் அவன் குடிசைக்குள் தணித்துக் கொண்டிருப்பதாய் கார்த்திக் நினைத்தான் . சுந்தரிக்கும் அவனுக்கும் நடுவில் இருப்பது காதல் ஆனால் அவர்களுக்குள் நடப்பது கள்ளக்காதல் ஏனென்றால் அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது . இதெல்லாம் யார் போட்ட சட்டம் ? . இந்த வயதிலிருந்து இந்த வயதுக்குள் தான் காதல்  வர வேண்டுமென்று யார் சொல்வது ? வேலைக்காகாதவனாக  இருந்தாலும் அவன் கூடவே தான் குப்பை கொட்ட வேண்டுமென்கிற விதியை அவளுக்கு யார் எழுதியது ? . அதே சமயம்
கணவன் மனைவி இருவரிடையேயும் ஒரு  அன்யோன்யத்தை அவன் பலமுறை பார்த்திருக்கிறான் . அவள் புருஷன் சரக்கடிக்கும் போது அவள் ஒரு நாளும் ஆம்லெட் வைக்க தவறியதில்லை . மனித மனங்களின் விளையாட்டு அவனுக்கு விசித்திரமாக இருந்தது ...

" என்ன பாஸ் போன விஷயம் என்ன ஆச்சு  ? ரொம்ப பதட்டமாகவே இருந்தேன் " சுரேஷ் சொல்லிக்கொண்டே அவனிடம் தான் வைத்திருந்த சிகரெட்டை நீட்டினான் . கார்த்திக் நடந்து முன் பக்கம் வந்து விட்டதால் சுரேஷுக்கு அவன் மேல் துளியும் சந்தேகம் வரவில்லை . ஆமாமாம் உங்க பதட்டத்தை தான் நான் பார்த்தேனே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே
" போன வேலை நல்லபடியா முடிஞ்சது , இனிமே அவன் நம்ம தங்கச்சி பக்கம் வரவே மாட்டான் " . கார்த்திக் சொன்னவுடனே சுரேஷுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது . " ரொம்ப தேங்க்ஸ் பாஸ் நீங்க தான் சுமூகமா இத முதல்லயே முடிச்சு வச்சீங்க " . அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது போல கார்த்திக் அவனையே பார்த்தான் . " இல்ல பாஸ் இந்த பொண்ணுங்களோட வயச நம்ப முடியாது , அவ பாட்டுக்கு லவ் கிவ்வு ன்னு அவன் பின்னாடி போக ஆரம்பிச்சுட்டான்னா அப்புறம் குடும்ப மானம் கப்பலேறிடும் " . அவன் சொன்னவுடனே கார்த்திக்கிற்கு சிரிப்பு வந்தது.
" அட தாயோளி தங்கச்சி வேற ஜாதிக்காரன  லவ் பண்ணா குடும்ப மானம் போய்டும் ஆனா இவன் வேற ஜாதிக்காரப் பொண்ணோட படுத்தா மானம் போகாதா ? என்னடா லாஜிக் என்பது போல நினைத்துக்கொண்டே
" அதான்  மேட்டர் முடிஞ்சாச்சே , டோன்ட் ஒரி , அப்புறம் உங்க வேலைல்லாம் நல்லா முடிஞ்சதா ?" கார்த்திக் கேட்டவுடனே சுரேஷுக்கு பக்கென்று இருந்தது. " இன்னிக்கு ஏதோ பெரிய பெரிய டீல் முடியறதா சொன்னீங்களே பாஸ் ?  கார்த்திக் சொன்னவுடனே " ஓ அதுவா " என்று கேட்டுக்கொண்டே அசடு வழிந்தான் சுரேஷ் . அவர்கள் இருவரும் தம்மை அடித்து முடிக்கும் போது மர்ரு அண்ட் கோ சரக்குக்கேற்ற இத்யாதிகளுடன் வந்து சேர்ந்தார்கள் ...

தொடரும் ...








1 December 2019

அவன் - அவன் - நிலா ( 11 ) ...


ன்று மாதா கோவிலில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூட்டம் இருந்தது . பெண்கள் முகத்தை அதிக நேரம் செலவிட்டு அழகு படுத்தியிருந்தார்கள் . அதில் கொஞ்சமாவது கை கால்களுக்கும் செலவிட்டிருக்கலாம் . அவன்
கிறிஸ்துவப் பள்ளியில் படித்ததால் இயேசு கிறிஸ்துவை பார்த்ததும் பழக்க தோஷத்தில் ப்ளஸ் போடப்போன கைகைளை பிரயத்தனப்பட்டு அடக்கிக்கொண்டான் . பள்ளி நாட்களில் அவனது ஆசிரியர்கள் பாடத்தோடு சேர்த்து சிலபஸில் இல்லாத போதனைகளையும் வழங்கினார்கள் . அவனவன் கர்மா வை அவனவன் கடந்தே தீர வேண்டுமென்கிற சிந்தனை உரைக்கும் வரை அவன் கஷ்டம் வரும் போதெல்லாம் தெரு முக்கு பிள்ளையாரையும் சரி , ஜீசஸையும் சரி  விட்டுவைக்கவில்லை . பத்தாவது படிக்கும் போது அவனுடன் நெருக்கமான  கேரளத்து கிறிஸ்துவ பெண் காதலோடு சேர்த்து கர்த்தரின் கருத்துக்களையும் பரப்பினாள் . ஒருவேளை அவள் கூட இங்கே வரலாம் என்று யோசித்தவனுக்கு உடனே சுந்தரியின் முகம் நியாபகத்துக்கு வர அந்த நினைப்பை உடனே அழித்தான் ...

அவன் அவ்வளவு யோக்கியனெல்லாம் இல்லை , ஆனாலும் அவனுக்கு சுந்தரி எல்லா விஷயத்திலும் ஏற்றவளாகவே இருந்தாள் . அவள் போன்ற ஒருத்தியை சந்திக்கும் வரை அந்தந்த வயதிற்கான தேடல் இருக்கவே செய்தது . அதிலும் பேருந்தில் , ஏரியாவில் பேருக்காவது ஒரு பெண்ணோடு சம்பந்தப்படுத்தி பேசப்படாதவன் கேலி செய்யப்பட்டான் அல்லது கழட்டி விடப்பட்டான் . அந்த பெண்ணிற்கு ரூட் போட பல பேர் சுற்றினார்கள் . ஏரியா பரிச்சியத்தாலும் , அவள் அப்பாவை அவன் அப்பாவிற்கு ஏற்கனவே தெரியும் என்பதாலும் அவளுடன்  பழகுவதற்கு எந்த தடையுமில்லை . அவளுடன் வராந்தாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் அந்த ஒரு மணி நேரத்தில் குறைந்தது ஐந்து பேராவது சைக்கிள் பெல் வேலை செய்கிறதா என்பதை செக் செய்து கொண்டே அவள் வீட்டை கடந்திருப்பார்கள் . இருவருக்குமே  சிரிப்பாக வரும் . அதிலும் ஒரு ஆளுக்கு காலாகாலத்தில் கல்யாணம் ஆகியிருந்தால் அவள் வயதுக்கு பையனோ , பொண்ணோ இருந்திருக்கும் . ஆனாலும் அத்தனை ஆட்கள் தன்னை சுற்றி வருகிறார்கள் என்பதில் அவளுக்கு பயத்தை விட கர்வமே மேலோங்கியிருந்தது ...

அந்த கர்வம் தொடங்கிய புள்ளியிலிருந்து தான் அவளுக்கு சிக்கல் தொடங்கியது . பொதுவாகவே  கேரளத்து பெண்கள் மற்ற ஆண்களுடனும் இயல்பாக பேசக்கூடியவர்கள் . பாசாங்கு , போலித்தனமில்லாத அவர்கள் பேச்சு இங்கே பல ஆண்களுக்கு தனக்கான பிரத்தியேகமான பாசமாகவோ , அழைப்பாகவோ பார்க்கப்படுகிறது . அதனால் தான் வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சிலர் அவளை துரத்திக்கொண்டு அலைகிறார்கள் .
ஒரு முறை அவனது அப்பாவே அவள் வீட்டு வாசலருகே சைக்கிளை ரிப்பேர் செய்வது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தவனை கூப்பிட்டு பளேரென அறைந்து எச்சரித்து அனுப்பியிருக்கிறார் . வேறு ஏரியாவிலிருந்து வந்தவன் அதன் பிறகு அந்த பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை . அந்த பிரச்சனைக்கு பிறகு அவளது அப்பா ஓரளவு மகளிடம் புத்தி சொல்லி  அனைவருடனும் பேசுவதை  தவிர்க்க சொன்னார் . அவளுக்கே அது கடுப்பாகி அவள் அப்பாவை பற்றி அவனிடமே திட்டியிருக்கிறாள்  ...

அந்த சம்பவத்துக்கு பிறகு அவளோடு எந்த தடங்கலும் இல்லாமல் அவள் வீட்டிலேயே அமர்ந்து பேசக்கூடிய ஒரே ஆணாக அவன் மாறிப்போனான் . அவள் அருகாமையில் இருக்கும் போது தான் ஏன் அத்தனை ஆண்கள் அவள் பின்னால் நாயாய் அலைந்தார்கள் என்பதை தெரிந்து கொண்டான் . அவள் தோற்றமே வயதுக்கு மீறியதாக இருந்தது . மாநிறமாய் பெண்கள் அலைந்த ஊருக்குள்ளே அவள் மாம்பழ கலரில் இருந்தாள் . அவள் சிரிப்பு அழகாக இருக்கும் . அதை அனைவரும் ரசிக்கிறார்கள் என தெரிந்தோ என்னமோ அவள் அடிக்கடி சிரித்தாள் . அவன் அவளை அதிகம் பாராட்டாமலேயே இருந்தது அவளுக்கு போரடித்தது . அவனுக்கு என்றுமே அதீத அலட்டல் பிடிப்பதேயில்லை . அவளிடம் பல நல்ல குணங்கள் இருந்தாலும் தனது அழகை பற்றிய அளவு கடந்த தற்பெருமை இருந்தது . அதனாலேயே அவளை புகழ்பவர்களிடம் அவள் மயங்கினாள் . அவளது வீக்னெஸ்ஸை புரிந்து கொண்டவர்கள் அதை பயன்படுத்தினார்கள் ...

அவளுடன் அதிக நெருக்கமாக இருந்தவனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் அவள் நடவடிக்கைகள் மேல் அதிருப்தி வந்தது . தன்னை பாராட்டுபவர்களுக்கு மத்தியில் யதார்த்தமாக இருக்கும் அதுவும் தொட்டதுக்கெல்லாம் கோபப்படும் அவன் மேல் அவளுக்கும் எரிச்சல் வந்தது . அதிலும் அவன் பன்னிரெண்டாவது வந்தவுடன் படிப்பிலும் , நண்பர்களோடும் பிஸியானதால் இருவருக்கும் விரிசல் அதிகமானது . அந்த விரிசலும் பிறகு அவளை இவனோடு பார்த்தேன் , அவனோடு பார்த்தேன் என்று யாராவது சொல்லும் போது அவனுக்கு ஏதோ ஒரு வெறுமை வரும் பிறகு நண்பர்களோடு பேச பேச அது கரைந்து விடும் . காதலியை பிரிந்து வரும் காதலனுக்கு நண்பர்களிடத்தில் அமோக வரவேற்பு இருக்கும் . அவன் இத்தனை நாட்கள் நம்மை கண்டுகொள்ளாமல் அந்த பெண்ணோடு சுத்தினானே என்கிற ஏக்கம் , பொறாமை எல்லாமே கலந்து வருபவனை  சற்று கூடுதலாகவே கவனிப்பார்கள் . அதுவும் சில நேரங்களில் அவனை சந்தோசப்படுத்துவதாக நினைத்து அவளை பற்றி ஏதாவது ஏடாகூடமாக பேசி அவனிடம் வாங்கிக்கட்டிக் கொள்பவர்களும் உண்டு ...

அவள் நினைவிலிருந்து மீண்டு அவன் சுரேஷின் தங்கையின் வழியில் வந்து தொல்லை கொடுப்பவர்கள் வருகிறார்களா என்று தேட ஆரம்பித்தான் . அவனுடைய ஆட்களும் ஆங்காங்கே சிதறியிருந்தார்கள் .  அந்த மூன்று
பேரையும் எப்படியாவது அந்த சந்து வழியாக துரத்திக்கொண்டு சுடுகாடு ஸ்பாட்டுக்கு கொண்டு போய் விடவேண்டும் . அங்கே நண்பனின் அண்ணனை வைத்து பஞ்சாயத்து பேசி முடித்து விடலாம் . ஆனால் அது சொல்வது போல அவ்வளவு எளிதில்லை . அவர்களுக்கு தெரிந்தவர்கள் கூடி விட்டாலோ , போலீஸ் வந்துவிட்டாலோ கதை கந்தலாகி விடும் . ஒரு
சேஃப்டிக்கு பொருள் வைத்திருந்தாலும் அதை எடுப்பது நல்லதில்லை . அடிதடி என்பது இல்லாமல் அது கொலை முயற்சி என்கிற லெவெலுக்கு போய் வாழ்க்கையையே தடம் மாற்றி விடும் . அந்த உள்ளுணர்வு எப்பொழுதுமே அவனுக்கு உண்டு . அதனால் தானோ என்னமோ அவன் பல கண்டங்களிலிருந்து தப்பி வந்திருக்கிறான் ...

மர்ரூ எதெற்கெடுத்தாலும் சட்டென்று  பொருளை எடுத்து விடக்கூடியவன் . அதனால் அவனை கூட்டம் அதிகம் இல்லாத இடத்திலேயே நிற்க வைத்திருந்தான் . அந்த மூவரில் முக்கியமானவனை அவன் வம்பிழுத்து அடிதடியை ஆரம்பிக்க வேண்டும் . அதன் பிறகு மொக்கையும் மற்றவனும்
வேறு திசைகளிலிருந்து வந்து அட்டாக் செய்ய வேண்டும் . அவர்களை ஓடவிட்டு துரத்திக்கொண்டு ஸ்பாட்டுக்கு போக வேண்டும் . ப்ளானை யோசித்துக்கொண்டே ஒரு தம்மை பற்ற வைத்தான் கார்த்திக் . இரண்டு இழுப்பு இழுப்பதற்குள் அவர்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள் . அவன் தம்மை அணைத்து  விட்டு நேராக அவர்களை நோக்கி போனான் . அவன் கவனம் முழுவதும் மெயின் ஆள்  மேலேயே  இருந்தது . யார் அந்த க்ரூப்புக்கு தலைவனோ அவனை முதலிலேயே அடித்து விட வேண்டும் . அப்பொழுதான் கூட இருப்பவர்கள் பயத்தில் குழம்பிப்போய் சிதறி ஓடுவார்கள் ...

நடுவில் வந்து கொண்டிருந்தவன் மேல் கார்த்திக் வேகமாக போய் மோதினான் . " டே தாயோளி பாத்து வர மாட்ட " மோதின வேகத்தில் தடுமாறியவன் கோபத்தோடு கத்தினான் . அதையே எதிர்பார்த்திருந்த கார்த்திக் உடனே அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ட்யூப் லைட்டை எடுத்து
சொன்னவன் தோள்களில் அடித்தான் . அதை சற்றும் எதிர்பாராதவன் தடுமாறி விழ அருகில் இருந்தவர்கள் யோசிப்பதற்குள்ளேயே இடுப்பில் ஒரு உதை  விட்டான் . இதை பார்த்தவுடன் அவன் நண்பர்கள் வேறிடத்திலிருந்து வந்து அவர்களை தாக்கினார்கள் . பயத்தில் மூவரும் ஓட ஆரம்பிக்க திட்டமிட்டபடியே அவர்களை சுடுகாடு வழியிலே துரத்திக்கொண்டு போனார்கள் கார்த்திக் & கோ . திடீரென அதில் ஒருவன் விலகி மெயின் ரோட்டுக்கு ஓட ஆரம்பிக்க கார்த்திக் துரத்த ஆரம்பித்தான் . வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்தை தாண்டி கண நேரத்தில் ஓடினான் கார்த்திக் . டிரைவர் சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிப்பாட்டி அவனை வசை பாடிக்கொண்டிருந்தார் ...

இது எதுவும் தெரியாமல் சொன்னபடி மர்ரூ அங்கே சரியாக நிற்க வேண்டும் அவன் ஏதாவது பெட்டிக்கடைக்கு போயிருந்தால் சிக்கல் என்பதை யோசித்துக்கொண்டே அவன் ஓடினான் . அவன் நினைத்தது போலவே மர்ரூ சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி கொறித்துக்கொண்டிருந்தான் . " டே " என்று சத்தம் கேட்டு கார்த்திக் வந்த திசையில் பார்த்தவன் முதலில் உனக்கும் வாங்கவா என்பது போல சைகை செய்ய கார்த்திக் கொன்னுடுவேன் என்று கை காட்டியதையும் உடனே எதிரி ஓடும் திசையை பார்த்தான்  .  அதனை பார்த்தவுடன் சுதாரித்த மர்ரூ  வேறு திசையில் ஓடி வந்து காலை தடுக்க அவன் எகிறி போய் விழுந்தான் . அங்கே வந்து சேர்ந்த கார்த்திக் விழுந்தவனை கொத்தாய் தூக்கி ரெண்டு அறை விட்டான் . பிறகு சுடுகாட்டு வழியாக அவனை ஓடுவதற்கேற்ப திருப்பி விட்டான் . அது புரியாத அவனும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்த வழியாக ஓட இடைவெளி விட்டு அவர்கள் துரத்திக்கொண்டு போனார்கள் . ஒரு வேலையாக மதுரைக்கு வந்திருந்த சுந்தரியின் மாமா பேருந்தின் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்ததால் எவனோ ஓடுவதையும் அவனை துரத்திக்கொண்டு கார்த்திக் ஓடுவதையும் பின்னர் நடந்த கூட்டத்தையும் நன்றாகவே பார்க்க முடிந்தது ...


ஒரு வழியாக ஓடி ஓடி கடைசியில் தடுப்பு சுவர் மேல் அவர்கள் முட்டி நின்றார்கள் . ஒன்று அதை  தாண்ட வேண்டும் அல்லது சற்று தள்ளியிருந்த சின்ன சந்து வழியாக ஓட வேண்டும் . அங்கே சந்து இருப்பது இருட்டில் தெரியாமல் அவர்கள் கஷ்டப்பட்டு சுவற்றில்  ஏறிக்கொண்டிருந்தார்கள் . ஏற்கனவே இருவர் ஏறி விட கடைசியாக ஏறிக்கொண்டிருந்தவனை மர்ரூ பிடித்து இழுத்துப் போட்டு மேலே ஏறி உட்கார்ந்தான் . அவன் எடைக்கு விழுந்தவன் தாக்குப்பிடிக்க முடியாமல் கத்த கார்த்திக் ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்து அவனை பிடித்து இழுத்துப் போட்டான் . இந்த கேப்பில் விழுந்து கிடந்தவன் எழுந்து சந்தை கண்டுபிடித்து ஓட இவர்கள் பொறுமையாக சிகரெட்டை பற்ற வைத்தார்கள் . அவர்களின் ஓட்டம் முடியும் இடம் இவர்களின் ஸ்பாட் என்று நன்றாகவே தெரியுமென்பதால் ஆசுவாசமாக அதை நோக்கி நடந்தார்கள் ...

தொடரும் ...




10 November 2019

அவன் - அவள் - நிலா (10) ...


கார்த்திக் அவர்கள் இருவரும் சென்ற பிறகும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் . அவன் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று யோசித்தான் . சின்ன வயதிலிருந்தே நிறைய பார்த்திருக்கிறான் , பள்ளிக்கூட நாட்களில் பெரிய சேட்டை செய்பவர்கள் எல்லாம் தப்பித்து விடுவார்கள் , அவன் மட்டும் ஏதாவது சிறிதாக செய்தால் கூட  மாட்டிக்கொண்டு விடுவான் . தியேட்டரில் , பஸ்ஸில் என அவனிடம் வெட்டியாக வம்பிழுப்பவர்கள் ஏராளம் . அவன் மனதிற்குள் ஏதோ நெருடல்  ஏற்பட்டால் அங்கே அடிதடி நடந்துவிடும் . பள்ளி நாட்களில் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது அவன் அடிதடிக்காக அப்பாவை கூட்டி வர சொல்வார்கள் . அவன் நன்றாக படித்ததாலும் . அவன் அப்பாவின் பழக்க வழக்கங்களால் பெரிய தண்டனை எதுவுமில்லாமல் தப்பி விடுவான் ...

இன்னொரு சிகரெட் பிடிப்பதற்கு அவனுக்கு சோம்பேறித்தனமாக இருந்தது , இருந்தும் ஒன்றை பற்ற வைத்தான் . பெட்டிக்கடைக்காரர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் , ஆனால் பயத்தால் எதுவும் கேட்கவில்லை . இப்பொழுது கிளம்பினால் தான் இரவுக்குள் மதுரைக்கு  போக முடியும் , இங்கே நடந்தது எதுவும் தெரியாமல் போனவுடனேயே நண்பர்கள் ட்ரீட் கேட்பார்கள் . கையில் வேறு காசு குறைவாக இருக்கிறது , சுரேஷ் வழக்கம் போல செலவு செய்து விட்டு வரவில் வைத்துக்கொள்வான் . சுரேஷ் பத்திர ஆஃபீஸில் வேலை செய்வதால் அவர்கள் செட்டிலேயே அதிக காசு வைத்திருப்பவன் . நெருங்கிய நண்பன் லட்சுமணனின் சொந்தக்காரன் . அவர்கள் ஏரியாவுக்கு வந்த புதிதில் யாரையும் கண்டுகொள்ளாமல் வேலைக்கு வருவது போவது என்று தானிருந்தான் . லட்சுமணன் அறிமுகம் செய்து வைத்தபோது கூட அவன் பேச்சில் நிறைய பணம் சம்பாதிக்கிறோம் என்கிற திமிர் இருந்தது . பெருமைக்கு எருமை ஓட்டுவது போல கூடுதலாகவே செலவு செய்தான் ...

பணம் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து விடாது என்பது சுரேஷுக்கு புரியும் நாள் வந்தது . அவனை போலவே அவன் தங்கையும் சிவப்பாக அழகாக இருந்தாள் . அதனால் அவள் கேட்காமலேயே சில பாடிகார்டுகள் பின் தொடர்ந்தார்கள் . ஏரியாவில் அவ்வளவாக புளங்காத சுரேஷுக்கு இது முதலில் தெரியவில்லை . ஆனால் எங்கே போனாலும் ஏரியாவுக்குள் கண் , காதுகளை வைத்துவிட்டுப் போகும் லட்சுமணனுக்கு இந்த தகவல் முதலில் வந்தது . கல்லூரி முடிந்தவுடனேயே  கார்த்திக் நேராக டாப்புக்கு வந்துவிடுவான் . அவனுக்காக காத்திருந்தது போலவே லட்சுமணன் இந்த விஷயத்தை சொன்னான் . ஒரு பெண் அழகாக இருந்தால் நாலு பேர் பின்னால் வரத்தான் செய்வார்கள் , இதில் அந்த பெண்ணுக்கே பெருமையாகவோ அல்லது உடன்பாடோ இருக்காம் . அதை தெரிந்து கொள்ளாமல் நேரடியாக நாம் விஷயத்தில் தலையிடுவது நல்லதல்ல என்று கார்த்திக் லட்சுணமனுக்கு சொன்னான் . அதில் நியாயம் இருப்பது போலவே அவனுக்கும் பட்டது . இந்த விஷயத்தை முதலில் சுரேஷிடம் சொல்லிவிடவேண்டுமென அவன் முடிவெடுத்தான் ...

சுரேஷ் முதலில் இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டாமலிருந்தாலும், தங்கை பின்னால் சுற்றுபவர்கள் புதூர் கம்மாய் தெருவை சேர்ந்தவர்கள் என்று கேளிவிப்பட்டதும் லேசாக பயம் வந்தது . அடிதடி , பிட்பாக்கெட் , திருட்டு என்று பேர் போன தெருவிலிருந்து சிலர் தனது தங்கையை பின் தொடர்வது அவனுக்கு நல்லதாக படவில்லை . எவ்வளவு செலவானாலும் இந்த பிரச்சனையை தீர்த்து விடவேண்டுமென அவன் யோசிக்க ஆரம்பித்தான் .
" மாப்பிள்ளை , பணம் தர்றேன் யாரையாவது செட் பண்ணி அவனுங்களை மிரட்டலாமா ? , என்று லட்சுமணனிடம் சுரேஷ் கேட்டான் .
" பாஸ் இது பணத்த வச்சு முடிக்கிற வேலை கெடையாது , பழக்கத்த வச்சு முடிக்கிற வேலை " கார்த்திக் சுரேஷிடம் தீர்க்கமாக சொன்னான் . பணம் இருக்கிறது , பழக்கம் எங்கே என்பது போல சுரேஷ் குழம்பிப் போய் பார்த்தான்.
" நீங்க ரெண்டு நாள் தங்கச்சியை  ஸ்கூல்ல விடுங்க , கூட்டிக்கிட்டு வாங்க , அப்படியே அவ கிட்ட பேச்சு கொடுத்து அந்த பசங்கள பத்தி ஏதாவது விஷயம் இருந்தா  தெரிஞ்சுக்குங்க " , கார்த்திக் அவன் மனதில் உதித்த ஐடியாவை சுரேஷிடம் சொன்னான் ...

வியாழன் , வெள்ளி இரண்டு நாட்களும் சுரேஷ் அவன் தங்கையை ஸ்கூலுக்கு கொண்டு போய் விடுவதென ஏற்பாடானது . நிறைய கேப் விட்டு கார்த்திக்கும் , லட்சுமணனும் அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களை பின் தொடர்ந்தார்கள் . அண்ணனுக்கு தெரியாமல் தங்கை எதுவும் அந்த பசங்களுக்கு ஜாடை காட்டுகிறாளா என அவர்கள் நோட்டம் விட்டார்கள் . அண்ணனுடன் சாதாரணமாக பேசிக்கொண்டே வந்தவள் அந்த பசங்களை பார்த்தவுடன் லேசாக மிரண்டாள் . அவர்கள் தன்னை பின் தொடர்வது அவளுக்கு பிடிக்காவிட்டாலும் அண்ணனிடம் சொல்லி அவனுக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்தாள் . அதனால் தான் அவனிடம் எதுவும் வாய் திறக்காமல் வைத்திருந்தாள் . இன்று அவனே கொண்டு போய்
விடுகிறேனென்று சொன்னது அவளுக்கு சந்தோசம் . சுரேஷை பார்த்து அவர்கள் கொஞ்சம் கூட பயந்தது போல தெரியவில்லை . மாறாக வேண்டுமென்றே சுரேஷின் வண்டியில் இடிப்பது போல வந்து சென்றார்கள் .
அதில் ஒருவன் மற்றொருவனிடம் " ஐயோ சார பார்த்தா ரொம்ப பயமா இருக்கு மச்சி " என்று சுரேஷை பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தான் .
சுரேஷுக்கு அவர்களை ரெண்டு அரை விடவேண்டுமென தோன்றியது , ஆனால் அதற்கு அவனிடம் தையிரியம் இல்லை ...

ஒரு வழியாக ஈவினிங்கும் அவளை டியூஷனில் இருந்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு விட்டு சுரேஷ் அவர்கள் டாப்புக்கு நேராக போனான் . கடைக்கார பையனிடம் ஒரு ஃபுல் பாட்டில் ரம் , சோடா, சைட் டிஸ் என எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்து விட்டு சோஃபாவில் வந்து அக்கடாவென உட்கார்ந்தான் . இதையெல்லாம் கண்டும் , காணாதது போல காரத்திக்கும் . லட்சுமணனும் சீட் ஆடிக்கொண்டிருந்தார்கள் . எப்போதும் கொஞ்சம் பாலிஷாக பேசும் சுரேஷிடமிருந்து சரக்குக்கு பின்னர் லோக்கலாக நிறைய பேச்சை கேட்கலாமென இருவரும் நினைத்துக்கொண்டார்கள் . சுரேஷ் சரக்கு கைக்கு வந்தவுடன் இவர்களிடம் வந்தான் . " பாஸ் ஆடுனது போதும் வாங்க ரவுண்டு போடலாம் " என்று கூப்பிட்டான் . " என்ன பாஸ் நாலு பேர் இருந்தாலே ஆஃப் தான் வாங்குவீங்க இன்னிக்கு ஃபுள் வாங்கியிருக்க்கீங்க " ,
என்று எதுவுமே தெரியாதது போல கார்த்திக் அப்பாவியாக கேட்டான் . மூன்று க்ளாஸிலும் சமமாக ரம்மை ஊற்ற ஆரம்பித்தான் சுரேஷ் ...

" இல்ல பாஸ் அவனுங்களை சும்மா வியக்கூடாது " . முதல் ரவுண்டிலேயே  அவனுக்கு வார்த்தை குழறியது . நேற்று அவளை ஸ்கூலில்  விட்டது , கூட்டி வந்தது எல்லாவற்றையும் அவர்களிடம் சொன்னான் . அவர்கள் சிப்
அடித்துவிட்டு சிப்ஸை கொறித்துக்கொண்டே  கேட்டார்கள் .
" பாஸ்  இவிய்ங்க   மேட்டர்ல  எடுத்தோம் , கவுத்தோம்னு லாம் பண்ண முடியாது அப்புறம் பிரச்சனை வேற மாதிரி போய்டும் " கார்த்திக் தனிப்பட்ட இருவரின் பிரச்சனை ஏரியா பிரச்னை ஆகிவிடக்கூடாதென்பதில் தெளிவாக இருந்தான் . அதிலும் தங்கை பெயர் இதில்  வந்துவிடக்கூடாதென்பதிலும் அவன் கவனம் இருந்தது . " அவனுங்கள என்ன பண்ணலாம் சொல்றீங்க ?"
" டைரெக்ட்டா தங்கச்சி மேட்டர் இல்லாம , அவனுங்கள பொளக்கலாம் , பொளக்குற பொளல்ல அவிய்ங்க  சில மாசம் வெளியவே வரமாட்டாய்ங்க , அப்புறமா நம்ம ஏரியா பக்கமே தலை வச்சு படுக்க மாட்டாய்ங்க " கார்த்திக் சொன்னான் . " அடிச்சா மட்டும் போதுமா வர மாட்டாய்ங்களா ? " , லட்சுமணன் கேட்ட போது அடி  மட்டும் போதாது என்று அவனுக்கு தோன்றியது ...

" உன் பாய்ண்ட் சரி தான் , அடியோடு விட்டா திரும்பவும் வர வாய்ப்பு இருக்கு", " பாஸ் அப்போ என்ன ஆளையே போட்டுட சொல்றீங்களா ?!"
சில ரவுண்டுகள் உள்ளே போய் வியர்த்து , விறுவிறுத்து சுரேஷ் கேட்டான் .
இருவருக்குமே வெறித்தனமாக சிரிப்பு வந்தது . " என்ன பாஸ் சினிமா ரேஞ்சுக்கு யோசிக்கிறீங்களோ ?" கார்த்திக் சிரித்துக்கொண்டே கேட்டான் .
" இல்ல , நீங்க அடிச்சா மட்டும் போதாதுன்னு சொல்லறீங்க , அதான் " .
" ஆமா , அடிச்சா மட்டும் போதாதுன்னா , அடியோடு விடாம , அவிய்ங்களுக்கு ஒரு பஞ்சாயத்து வச்சு நாம அங்க போக மாட்டோம் , அவிய்ங்க நம்ம ஏரியா பக்கம் வரக்கூடாதுன்னு பேசி முடிக்கணும் " . பஞ்சாயத்து என்றால் ஆலமரம் , சொம்பு என்றெல்லாம் சினிமா மாதிரி சுரேஷ் யோசிப்பானோ என்று நினைத்து இருவரும் மீண்டும் சிரித்தார்கள் . அவர்கள் தன்னை பற்றி தான் சிரிக்கிறார்கள் என்று தெரியாமல் சுரேஷும்  சேர்ந்து சிரித்தான் ...

 இன்னும் ஒரு வாரம் இருக்கும் மாதா கோவில் சப்பர் திருநாளில் நல்ல கூட்டம் இருக்கும் . அந்த கூட்டம் தான் அவர்களுக்கு தேவைப்பட்டது . ஏற்கனவே அந்த சர்ச்சுக்கு வந்து எங்கெங்கே போலீஸ் நிற்பார்கள் எந்த தெரு கூட்டம் குறைவாக இருக்கிறது என்பதையெல்லாம் நோட்டம் பார்த்து வைத்திருந்தார்கள் . சுரேஷ் வந்தால் அவர்களுக்கு அடையாளம்  தெரிந்து விடுமென்பதால் அவனை தவிர்த்தார்கள் . அவனை தவிர்த்து கார்த்திக் , லட்சுமணன் உட்பட ஐந்து பேர் , ஏற்கனவே புதூரிலேயே பெரிய ஆளின் தம்பி கார்த்திக்கின் பள்ளிக்கால நண்பன் என்பதால் அவனிடம் விஷயத்தை சொல்லி வைத்திருந்தான் . அவனும் தான் நேரடியாக தலையிட்டால் அண்ணன் திட்டுவார் என்பதால் அவர்களை அடித்து அண்ணன் இருக்கும் ஸ்பாட்டுக்கே அழைத்து வருமாறும் , அங்கே காத்திருப்பதாகவும் சொல்லி விட்டான் . அவர்களை துரத்திக்கொண்டு சுடுகாடு தாண்டி  அந்த ஸ்பாட்டுக்குள் கூட்டிப்போக வேண்டும் . பாபு , மொக்கை , மர்ரு இவர்கள் தான் இந்த திட்டத்துக்கு சரியாக இருப்பார்கள் என யூகித்தான் . நாளை அவர்களை சந்தித்து விஷயத்தை சொல்ல வேண்டும் . மதுரைக்கு செல்லும் பேருந்தில் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு  பழைய அடிதடிகளை கார்த்திக் அசைபோட்டுக்கொண்டிருந்தான் ...

தொடரும் ...




27 October 2019

அவன் - அவள் - நிலா (9) ...


தான் கட்டிய கனவுக்கோட்டை தன் கண் முன்னாலேயே இடிந்து விழுவதென்பது புத்திர  சோகத்தை போலவே கொடுமையானது . அண்ணனும் , காதலனும்  அடித்துக்கொண்ட  தருணத்தில் சுந்தரி அந்த கொடுமையை அனுபவித்தாள் . எல்லாமே எதிர்பாராத நேரத்தில் நடந்து முடிந்தே விட்டது .
இதில் யார் பக்கமும் அவளால் நிற்க முடியவில்லை . அழுவதை தவிர அவளால் வேறொன்றும் செய்ய இயலவில்லை . கார்த்திக் அவளை நோக்கி வந்து " நான் கெளம்பட்டா ? " என்றான் . ஏதோ ஒன்றுமே நடக்காதது போல அவன் நின்று கொண்டிருப்பதை பார்த்த அவளுக்கு எரிச்சலாக வந்தது .
" அதான் எல்லாத்தையும் முடிச்சாச்சே அப்போ கிளம்ப வேண்டியது தானே ! "
அவள் அந்த எரிச்சலோடே அவனுக்கு பதில் தந்தாள் . அவன் மணியை  சைடாக பார்த்தான் , " இன்னும் முடியலையே அவன் உயிரோட தானே இருக்கான் " , அவன் சொன்னது அவளுக்கே கலக்கமாக இருந்தது .
" இப்போ என்ன அவனை கொலை பண்ணிட்டு நீ ஜெயிலுக்கு போவ , நான் லோலோன்னு அலையணுமா ?" . " உன்னை யாரு  அலைய சொன்னா ? "
அவள் அவனின் முகத்தை பார்த்து நேராக கேட்டாள் ,
" இப்போ என்ன சொல்ல வர்ற ? " ...

உண்மையில் கார்த்திக்கிற்கு என்ன சொல்வதென்றே  தெரியவில்லை . அவன் அவளுக்காக பொறுமையாக இருந்திருக்கலாம் தான் ஆனால் அவனால் யாருக்காகவும் தனது சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியவில்லை .
ஒருவன் தன்னை அறைந்த பின் இன்னொரு கன்னத்தை காட்ட அவன் ஒன்றும் ஏசு பிரான் அல்ல ஆனால் பதிலுக்கு ஒரு அறையோடு விடாமல் மணியை புரட்டி எடுத்து விட்டான் . அவள் கேட்ட போது அவனுக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது . " நான் ஒன்னும் சொல்ல வரல " என்று மொட்டையாக
பதில் சொன்னான் . " அங்க அவனை அடிக்கும் போது கொஞ்சமாவது என்ன நெனைச்சு பாத்தியா ? " . " ஏன் உன் அண்ணன நான் அடிச்சது மட்டும் வலிக்குதா ? அப்போ அவன் என்ன அடிச்சது ? " , அவனுக்கே உண்டான
ஆக்ரோஷத்துடன் கேட்டான் . " எப்பவுமே  இப்படி தப்பாவே புரிஞ்சுக்கோ ,
நான் சொல்ல வந்தது இப்படி சண்டை போட்டா நாம எப்படி ஒன்னு சேர்றது?"
அவனுக்கு அப்பொழுது தான் அது உறைத்தது . பிரச்சனை என்னவென்றால் போட்டி அல்லது சண்டை என்று வந்து விட்டால் அது வாயாலோ அல்லது கையாலோ அவனால் அங்கே விட்டுக்கொடுக்கவோ தோற்கவோ முடியாது .
இது போல சுந்தரியோடு பல முறை சண்டை போடும் போதும் எதையெதையோ சொல்லி அவள் வாயை அடைத்து விடுவான் ...

ஒரு வெற்றியை அடைய வேண்டுமானால் சில தியாகங்களை செய்ய வேண்டுமென விவேகானந்தர் சொல்லியிருக்கிறார் . ஆனால் புயலடிக்கும் போது நாணல் போல வளைந்து கொடுக்காமல் ஆலமரம் போல உறுதியாக இருப்பது வேரோடு சாய்த்து விடும் . பதிலுக்கு பதில் பேசினாலும் சுந்தரி கடைசியில் அவனுக்காக விட்டுக்கொடுத்து விடுவாள் அல்லது விட்டுக்கொடுக்க வைக்கப்படுவாள் . இது இருவருக்குமான தனிப்பட்ட சண்டையில் நடக்கும் ஆனால் இன்று அவள் அண்ணனோடு சண்டை போட்டிருக்கிறான் அதுவும் தெருவில் அனைவரும் பார்க்க அவனை அடித்து உதைத்து கட்டியுருண்டு வெறித்தனமாக சண்டையிட்டுருக்கிறான் . மணி தான் சண்டையை  முதலில் ஆரம்பித்தாலும் அதை மூர்க்கத்தனமாக மாற்றியதென்னமோ கார்த்திக் தான் . கார்த்திக்கிற்கு லேசாக பதட்டம் வந்தது.
பேசாமல் அவள் அண்ணனிடம் போய் மன்னிப்பு கேட்டுவிடலாமா என்று கூட யோசித்தான் . மனதார மன்னிப்பு கேட்க முடியாவிட்டாலும் சண்டையின் முடிவில் ஜெயித்ததென்னமோ அவன் தான் .அதனால் அவன் தான் முதலில் இறங்கி வரவேண்டும் . சுந்தரிக்காக கேட்டால் தான் இந்த பிரச்சனையை இப்போதைக்கு முடிவுக்கும்  கொண்டுவர முடியும் ...

" சுந்தரி நான் வேணா உன் அண்ணன்கிட்ட சாரி கேக்கவா ?" , அவன் அப்படி இறங்கி வந்து கேட்டதே அவளுக்கு ஆச்சர்யமாகவும் , சந்தோசமாகவும் இருந்தது ஆனால் அவன் கேட்பதால் நடந்தது எதுவும் மாறப்போவதில்லை என்பது அவளுக்கு தெளிவாக புரிந்தது . ஆனாலும் அது  அடிபட்ட உடனே செய்யப்படும் முதலுதவி போல உணர்ந்தாள் . அவளுக்கு லேசான பயமும் இருந்தது . மன்னிப்பு கேட்கும் போது மணி ஏதாவது பேசி வைக்க திரும்பவும் அவன்  முருங்கை மரம் ஏறிவிட்டால் என்ன செய்வதென்றும் யோசித்தாள் .
" சரி நீ இரு நான் போய் அண்ணா கிட்ட பேசுறேன் " அவள் அவனிடம் சொல்லி விட்டு சைக்கிள் ஸ்டாண்டில் உட்கார்ந்திருந்த மணியை நோக்கி போனாள் .
ஒரு சின்னப்பயல் தங்கைக்கு முன்னால் தன்னை அடித்துவிட்டான் என்பதை மணியால் ஜீரணிக்கவே  முடியவில்லை . ஏதோ ரெண்டு தட்டு தட்டினால் பயந்து விடுவான் என்று மணி தப்புக்கணக்கு போட்டுவிட்டதன் விளைவே இந்த அசிங்கம் . அந்த உண்மையை  மணியால்  ஒத்துக்கொள்ள முடியவில்லை . என்றாவது ஒருநாள் இதற்கு சரியாக பழி தீர்க்க வேண்டுமென்று மட்டும் அவன் மனம் கருவிக்கொண்டே இருந்தது ...

" அண்ணா எந்திரிண்ணா போலாம் " கூப்பிட்ட சுந்தரியை உட்கார்ந்த இடத்திலிருந்தே மேலெழுந்த வாரியாக பார்த்தான் மணி . " என்னம்மா சார சமாதானப்படுத்திட்டியா " அவன் கேட்டதிலே இருந்த நகலை அவள் புரிந்து கொண்டாள் . " அவரே உன் கிட்ட சாரி கேக்குறேன் சொன்னார் , நான் தான் பேசிட்டு வரேன்னு சொன்னேன் ". நம்மிடம் சண்டையிட்டவர் கொஞ்சம்
இறங்கி வரும் போது உடனே அதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் யாருக்கும் வருவதில்லை . சொல்லப்போனால் அது அவர்களுக்கிருக்கும் இறுமாப்பை இன்னும் ஏற்றி விடுகிறது . " ஆமாம் வயசு வித்தியாசம் பார்க்காம அவன் அடிப்பான் , அப்புறம் சாரி கேட்டவுடனே நான் ஒத்துக்கணுமா ?" . அவன் அப்படி பேசியது அவளுக்கு மேலும் ஒரு மாதிரி இருந்தது . " எதுக்குண்ணா  இப்போ நமக்குள்ள சண்டையை வளர்க்கணும் ?" .
அவனையும் சேர்த்து அவள் நமக்குள்ள என்று சொன்னது மணியை மேலும் உசுப்பேற்றியது . " என்ன நமக்குள்ள , ஏதோ ஒரு வகையில  சொந்தம்னா
அதுக்காக அவனும் நாமளும் ஒன்னா ?" . அவன் எங்கு வருகிறான் என்பது அவளுக்கு புரிந்தது , பணம் அது தான் இருவருக்கும் இடையில் இருக்கும் பெரிய இடைவெளி . மணி அப்படி நினைக்கலாம் ஆனால் சுந்தரியின் அப்பா கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் அதனால் பணம் அவருக்கு பெரிதில்லை . அவருக்கு முக்கியம் நல்ல குடும்பம் அதிலும் பையன் நன்கு  படித்திருக்க வேண்டும் ...

ஏற்கனவே நார்மலாக படித்து வேலைக்கு போவது போலில்லாமல் அவன் சினி ஃபீல்டில் நுழைவதே அவளுக்கு பெரிய தலைவலி , அந்த ஒரு விஷயத்துக்கே அவள் அப்பாவை , உறவினர்களை சமாளிக்க வேண்டும் . அண்ணன்களின் உதவியினால் அதை சமாளிக்கலாம் என்று நினைத்தவளுக்கு புது தலைவலியாய் இந்த சண்டை வந்து சேர்ந்தது . மணி அண்ணா சொன்னால் வீட்டில் உள்ளவர்கள் நிச்சயம் கேட்பார்கள் அல்லது குறைந்த பட்சம் பரிசீலிப்பார்கள் . பாசிட்டிவாக அவரை சொல்ல வைக்கலாமென்று நினைத்தவளுக்கு இன்று அவரே நெகட்டிவ்வாக மாறி விடுவாரோ என்கிற பயம் நெஞ்சை கவ்வியது . அந்த  நேரத்தில் என்ன நினைத்தாளோ தெரியவில்லை சற்றென்று அவன் காலில்  விழுந்து விட்டாள்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத மணி துள்ளியெழுந்து அவளை தூக்கினான் .
" என்னமா இப்படி பண்ற , இப்போ என்ன நான் அவனை மன்னிக்கனுமா ?"
பெண் அழுதால் பேயே இறங்கும் என்பார்கள் அவன் சாதாரண மனிதன் அதுவும் காலில் விழுந்தவள் தான் தூக்கி வளர்த்த தங்கை . அவன் மனம் உடனே இளகியது . அவளை தோளோடு கூட்டிக்கொண்டு கார்த்திக் பக்கம் போனான் ...

மணி காலில் அவள் விழுந்ததை பார்த்து செம்ம கோபத்தில் இருந்தவன் இருவரும் அவனை நோக்கி வருவதை பார்த்ததும் கொஞ்சம் சாந்தமானான்.
அண்ணன் காலில் தங்கை விழுவதில் தப்பில்லை ஆனாலும் அவன் சண்டைக்காக அதுவும் பொது இடத்தில் காலில் விழுந்ததை அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை . இருந்தாலும் இப்பொழுது ஏதாவது சொன்னால் திரும்பவும் சண்டை வருமென்பதால் அவன் பொறுத்துக்கொண்டான் . அதைப்பற்றி கேட்க வேண்டாமென நினைத்தான் .
சுந்தரி அவனைப் பார்த்து மணியிடம் சாரி கேளு என செய்கை செய்தாள்  . அதை புரிந்து கொண்டவனாய் " சாரி ப்ரதர் " என்று கையை நீட்டினான் கார்த்திக் . பதிலுக்கு மணியும் கை நீட்டியதை பார்த்ததும் சுந்தரிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது . மணி அண்ணா உடனே சமாதானமாவானென அவள் நினைக்கவில்லை . கார்த்திக்கை அனுப்பாமல் தான் சென்று காலில் விழுந்தது நல்லதாக போய் விட்டது என்று அவள் நினைத்துக்கொண்டாள்...

மணி இருவரின் மேலும் பயங்கர கோபத்தில் இருந்தான் . சுந்தரி காலில்  விழுந்ததும் ஒரு தங்கை என்ற முறையில் அவள் மேல் அவனுக்கு இரக்கம் வந்தது . அவள் முன்னாலேயே தன்னை புரட்டியெடுத்த கார்த்திகை அவனால் மன்னிக்க முடியவில்லை . மணி நினைத்தால் கார்த்திக் ஊருக்கு போவதற்குள் நண்பர்களை திரட்டிக்கொண்டு வந்து அவனை பொளந்து எடுக்கலாம் . அப்புறம் சுந்தரிக்கு மணி மேல் இருக்கும் மரியாதை குறைந்து கார்த்திக் மேல் பச்சாதாபம் பெருகி விடும் . தேவையில்லாமல் அவர்கள் நெருக்கத்தை பெரிதுபடுத்த மணி விரும்பவில்லை . அவன் தனக்கு உடலால் தான் வலி கொடுத்தான் அது சில நாளில் மறைந்து விடும் . ஆனால் அவனுக்கு நாம்  கொடுக்கும் அடி மரண அடியாக இருக்க வேண்டும் . காலம்  முழுவதும் அவன் அதை நினைத்து கதற வேண்டும் . அதற்கு சுந்தரியை அவனுடன் பழக விட்டு சேர்வோம் என்கிற நம்பிக்கையை கொடுத்து பிரிக்க வேண்டும் . சுந்தரி என்ன தான் அவனை காதலித்தாலும் குடும்பத்தாரின் மேல் அவளுக்கு இருக்கும் பாசம் அலாதியானது . அதை வைத்து அவளை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் . இப்படி பலவாரியாக மணியின் மூளை சிந்தித்துக் கொண்டிருந்தது . இந்த வன்மம் எதுவும் தெரியாமல் கார்த்திக் பிரச்சனை சுமூகமாக முடிந்த சந்தோசத்தில் கடைக்காரரிடம் மூன்று பவண்டோ கேட்டுக்கொண்டிருந்தான் ...

தொடரும் ...










26 October 2019

கைதி - KAITHI - காவலன் ...


முதல் படத்திலேயே முத்திரை பதித்த இளம் இயக்குனர்கள் அடுத்த படங்களில் பெரிய ஹீரோக்களுடன் வேலை பார்க்கும் போது நிறைய காம்ப்ரமைஸ் செய்து கொண்டு தங்களது தனித்திறமையை இழந்து விடுவார்கள் . அப்படி மாஸ் ஹீரோவிடம் முழுவதுமாக சரண்டர் ஆகாமல் தங்களது தனித்துவத்துடன் வெற்றிப்பயணத்தை தொடரும் சில இயக்குனர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . ( அடுத்த படத்தில் விஜய்யுடன் இதே பயணத்தை தொடர முடியுமா என்பது சந்தேகமே! ) ...

பொது மக்களை காப்பாற்றும் காவலர்களை போதை மருந்து கடத்தல் கும்பலிடமிருந்து  ஒரு கைதி காப்பற்றுவதே கதை . பத்து வருட தண்டனைக்கு பிறகு தனது மகளை பார்க்க பரோலில் வெளியே வரும் டில்லி 
( கார்த்தி ) , பல நூறு கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை மடக்கியிருக்கும் பிஜாய் & கோ ( நரேன் ) வையும் , போலீஸ்காரர் நெப்போலியன் ( மரியான் ) உதவியுடன் கமிசனர்  ஆஃபீசில் அடைபட்டிருக்கும் மாணவர்களையும்  அடைக்கலராஜின் 
( ஹரிஷ் உத்தமன் ) மாஃபியா கேங்கிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதை முதல் பாதி த்ரில்லிங் திரைக்கதையாலும் , இரண்டாம் பாதி  ஹீரோயிச ஆக்ஸன்களாலும் விறுவிறுவென சொல்லி முடிக்கிறது படம் ...

சாக்லேட் பாய் கேரக்டரில் நடித்த தேவ் அட்டர் ஃப்ளாப்பான பிறகு ரஃப் & டஃ ப் பருத்திவீரன் ரூட்டுக்கு திரும்பியிருக்கும் கார்த்தி க்கு இந்த படம் கை கொடுத்திருக்கிறது . சிறிய  தாமதத்திற்கு பிறகு அறிமுகமானாலும் வந்ததிலிருந்து  கவனம் முழுவதையும் தன் மேல் திரும்ப வைக்கிறார் . 
ஐஜி வீட்டில் நடக்கும் அமளிதுமளியை கண்டுகொள்ளாமல் வாளி  பிரியாணியை முழுங்குவது , " பத்து வருஷம் உள்ள இருந்தேன்னு தெரியும் ஆனா என்ன பண்ணிட்டு உள்ள போனேன்னு தெரியாதுல்ல சார் " என்று நரேனை பார்த்து சொல்வது , ஒரே டேக்கில் தனது தனது ஃப்ளாஸ்பேக்கை சொல்லி முடிப்பது , தன் மகளை பார்த்தவுடன் மருகுவது என கார்த்தி பல நடிகர்கள் இருந்தாலும் படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் ...


முகமூடி க்கு பிறகு நரேனுக்கு நல்ல ரோல் . கையருந்த நிலையில் கைதியின் உதவியுடன் சக காவலர்களை காப்பாற்றும் போலீஸ் அதிகாரியாக 
பெர் ஃபெக்டராக இருக்கிறது அவர் நடிப்பு . ரமணா இத்தனை வருடங்கள்  அப்படியே இருப்பது ஆச்சர்யம் , கார்த்தியோடு ஒரு ஃபைட் வைத்து அவர் கதையை முடித்து விடுகிறார்கள் . ஐயா ஐயா என்று ஃபோனில் விறைப்பாக பேசும் மரியான் நடிப்பால் நிமிர வைக்கிறார் . சிறையில் இருக்கும் மெயின் வில்லன் ஹரிஷ் உத்தமனை கடைசி வரை கத்துவது தவிர எதுவும் செய்ய விடாமல் வீணடித்திருக்கிறார்கள் . போலீஸ் கருப்பாடாக வரும் டிப்ஸ் கடைசியில் முதுகில் குத்தப்பட்டு இறப்பது நல்ல முடிவு ...

படத்தில் ஹீரோயின் இல்லை , சாங்க்ஸ் இல்லை , தனி காமெடி டிராக் இல்லை , குறிப்பாக ஆக்ஸன் படத்தில் மாஸ் ஹீரோ பேசும் பன்ச் டயலாக் இல்லை இப்படி நிறைய இல்லைகள் இருந்தும் அதை தொல்லையில்லாத க்ரிப்பான திரைக்கதையால் கட்டிப்போடுகிறார் இயக்குனர் . முதல் 15 நிமிடங்களுக்குள் எல்லா மெயின் கேரக்டர்களையும் , படத்திற்கான 
ப்ளாட்டையும் அறிமுகம் செய்து ஹீரோவின் வருகைக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஆரம்பத்திலேயே அதகளத்துடன் ஆரம்பிக்கும் படம் இண்டெர்வெல் வரை ஒன் வேயில் டாப் கியரில் பறக்கிறது . சாவதற்கு முன் ஸ்டூடெண்ட்டுக்குள் நடக்கும் காதல் ஸ்வீட்  ஹைக்கூ . சாம் எஸ்ஸின் பின்னணி இசை , சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு , பிலோமின் ராஜின் எடிட்டிங் எல்லாமே படத்துக்கு பக்க பலம் . லாரி சேஸிங் ஸ்டண்ட் காட்சிகளை திறம்பட எடுத்திருக்கிறார்கள் . அதுவும் நெற்றியில் பட்டையை அடித்துக்கொண்டு எதிரிகளை அடித்து பட்டையை கிளப்பும் கார்த்தி தனி அழகு ...

ப்ளாஷ்பேக்கில் நேரத்தை வீணடிக்காவிட்டாலும் " நான் என்ன செஞ்சுட்டு உள்ள போனேன்னு தெரியுமா " என்று ஒரு பில்டப் கொடுத்ததால்  ஏற்படும் எதிர்பார்ப்பு கார்த்தி ஒரே டேக்கில் தன்  கதையை சொல்லி முடிக்கும் போது சப்பென்று ஆகி விடுகிறது . அத்தனை பெரிய கமிஷனர் ஆஃபீஸில் கத்தி அரிவாளுடன் தாக்க வரும் கும்பலை சமாளிக்க ஒரு துப்பாக்கி கூட இல்லாமலிருப்பது , ரூட்டை மாற்றிப் போனாலும் சரியாக அந்த இடத்துக்கு கும்பல் வந்துவிடுகிறதே என்பதை நரேன் யோசிக்காமலேயே இருப்பது , 
போலீஸ் உளவாளி சீன்கள் குருதிப்புனலை நியாபகப்படுத்துவது ,
கத்திக்குத்து , கல்லடி எல்லாம் வாங்கி குற்றுயிரும் , கொலையுயிருமாக இருக்கும் கார்த்தி மகளுக்கு வாங்கிய ஜிமிக்கியை ரமணா மிதித்தவுடன் பொங்கியெழுந்து பத்து நிமிடம் சண்டை போடுவதெல்லாம் தரமான படத்துக்கு வைக்கப்பட்ட  திருஷ்டிப்பொட்டு . பலகோடி பட்ஜெட் , பெரிய விளம்பரம் எல்லாம் செய்து கதையை நம்பாமல் வெறும் ஹீரோவின் மார்க்கெட்டை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் நல்ல கதை , திரைக்கதையோடு மாஸ் ஹீரோவையும் இயக்குனர் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கும் விதத்தில் இந்த கைதி ரசிகர்களுக்கும் , தயாரிப்பாளருக்கும் ஒரு நல்ல காவலன் ...

ரேட்டிங் : 3.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 45 




13 October 2019

அவன் - அவள் - நிலா (8) ...


ரு ஆணால் என்றுமே ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை. அந்த ஏமாற்றத்தை தருபவள்  பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவன் மேலும் மூர்க்கமாகிறான் . ஏமாற்றும் பெண் காதலியாக தான் இருக்க  வேண்டுமென்பதில்லை , சகோதரியாக , தோழியாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் . சுந்தரியை இன்னொரு பையனுடன் பார்த்த போது மணி யின் மனநிலை  அப்படி தான் இருந்தது . சே இவள் மேல் பெரியப்பா எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் இப்படி எவனுடனோ சிரித்துப் பேசிக்கொண்டிருக்காளே என்று ஏமாற்றத்தோடு கலந்த ஆத்திரம் வந்தது . ஆனால் அவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே  என்று யோசிக்க ஆரம்பித்தவனுக்கு அது பிடிபடவில்லை . முக்கியமான லீக் மேட்ச் இருந்ததால் சுந்தரியின் அக்கா கல்யாணத்துக்கு முழுமையாக மணியால் இருக்க முடியவில்லை . அதனால் கார்த்திக்கின் முகம் அவனுக்கு நினைவில் வரவில்லை  . ஒரு வேளை கூட படித்தவனாக இருப்பானோ  , அவளுடைய எல்லா நண்பர்களும் ஒரு தடவையாவது வீட்டுக்கு வந்திருப்பார்களே ! ஆனால் அவனை வீட்டில் வைத்து பார்த்தது இல்லையே என்று பலவாறாக யோசிக்க ஆரம்பித்தவன் நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் சரி எவனாக இருந்தால் என்ன நேரடியாக கேட்டு விடுவோமென முடிவெடுத்து அவர்களை நோக்கி கிளம்பினான்  ...

கார்த்திக் சொன்னதற்கு ஏதோ பதில் சொல்லிவிட்டு திரும்பியவள் கண் முன்னே மணி அண்ணா நிற்பதை பார்த்து அதிர்ச்சியானாள் . நிச்சயம் அவன் இப்படி வந்து நிற்பான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை . எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டும் , விக்கியாக இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் மணி அவள் அண்ணன்களிலேயே மூத்தவன் . அவளுக்கே அவனிடம் ஒரு மரியாதை கலந்த பயம் உண்டு . மணி எதையோ யூகித்துக் கொள்வதற்குள் சுந்தரி நிலைமையை சமாளிக்க முடிவெடுத்தாள் .
" அண்ணா இது யாரு தெரியல , நம்ம சொந்தக்காரா , ஜானகி மாமி புள்ள ",
மணிக்கு யார் ஜானகி மாமி என்பதே பிடிபடவில்லை .
" யாருன்னு தெரியலையே " .  " மறந்துட்டியா , நம்ம புவனா அக்கா கல்யாணத்துக்கு வந்திருந்தார் " . அவள் படபடப்புடன் சொல்ல ஆரம்பித்தாள் .
" யாரா இருந்தா என்ன , சார் வீட்டுக்குல்லாம் வர மாட்டாரா ? , வயசுப்பொண்ணோட இப்படி ரோட்ல நின்னு வழிஞ்சுக்கிட்டு இருக்காரு ! "
சுந்தரிக்கு லேசாக பயம் வந்தது ,சொந்தக்காரன் என்று தெரிந்தவுடன் மணி அண்ணா சுமூகமாகி விடுவான் என்று பார்த்தால் தேவையில்லாமல் அவனை சீண்டுவது போல பேசிக்கொண்டிருந்தான் . கார்த்திக்குக்கு கோபம் வந்தால் என்ன பண்ணுவான் என்று தெரியாது , மணி அண்ணாவுக்கும் சொந்த ஊரில் பழக்கம் அதிகம் . இவர்கள் இருவரும் அடித்துக்கொண்டால்  அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவள் தான் என்பது சுந்தரிக்கு நன்றாகவே புரிந்தது ...

" இல்லண்ணா  இங்க ஜஸ்ட் ஆக்சிடென்டலா பார்த்தோம் , கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்தோம் , இப்போ கெளம்பறார் " . கார்த்திக் எதையாவது சொல்லிவிடப்போகிறான் என்கிற பயத்தில் அவளே பேசிக்கொண்டிருந்தாள் .
அவளுடைய படபடப்பு , அவனுடைய நெருக்கம் இதையெல்லாம் பார்த்த மணிக்கு அது ஏதோ யதார்த்தமான சந்திப்பு போல தெரியவில்லை .
குட்டையை கிளறினால் தான் மீன் பிடிக்க முடியும் என அவன் நினைத்தான் .
" சார் என்ன கலெக்டர் உத்தியோகம் பாக்குறாரா ? வாய தொறந்து பேசவே மாட்டேங்கறாரு ?" பி.ஏ மாதிரி நீயே பேசிட்டு இருக்க ! " .
மணி திரும்பவும் நக்கலாக அவனை பார்த்துக்கொண்டே கேட்டான் .
வந்ததிலிருந்தே ஏதோ போலீஸ் குற்றவாளியை விசாரிப்பது போல மணி நடந்துகொண்ட விதத்தால் கடுப்பிலிருந்த கார்த்திக்கால் அதற்கு மேல் பேசாமல் இருக்க முடியவில்லை . பிரச்சனைகளை சும்மாவே தோளில்  போட்டுக்கொண்டு சுத்துபவனுக்கு  வான்ட்டடாக ஒருவன் வண்டியில் ஏறியது போலவே இருந்தது ...

:" ஏன் சாருக்கு சரியா காது கேக்காதா  ? நீ சொன்னப்புறமும் என் கிட்ட ரெண்டாவது  தடவ கேக்குறாரு ? " . அவன் பதிலால் மணி மேலும் கோபமானான் . " ஒரு அறை  விட்டேன்னா உனக்கு உண்மையிலேயே காது கேக்காம போயிடும் தம்பி " சட்டை கைகளை மடித்துவிட்டுக்கொண்டே மணி சொன்ன போது கார்த்திக் அவனை ஏற இறங்க  முழுமையாக பார்த்தான் . வயதில் என்ன தான் சின்னவனாக இருந்தாலும் முன்பின் தெரியாதவர்கள் வா போ என்று கூப்பிடுவது மதுரைக்காரர்களுக்கு பிடிப்பதில்லை . அந்த கடுப்போடு ஆறடிக்கு வாட்டசாட்டமாக இருந்தவனை கார்த்திக் நக்கலாக பார்த்தான் . மதுரையில் அவனை விட  அராத்து ஆட்களோடு சுற்றிக்கொண்டிருப்பவனுக்கு சிரிப்பு இன்னும் அதிகமானது .  தான் சொல்வதற்கு கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் சிரித்துக்  கொண்டிருந்தவனை  பார்த்து  மணிக்கு மண்டை சூடானது . நம்மள விட சின்னப்பயலுக்கு என்ன தெனாவெட்டு என்று நினைத்தான் . ஆனால் இளங்கன்று பயம் அறியாது என ஏனோ அவன் யோசிக்கவில்லை .
" தங்கச்சி இருக்காளேன்னு பார்க்குறேன் , இல்ல உன்ன " என்று மணி சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவன் " நானும் என் ஆளோட அண்ணன்னு தான் பார்க்குறேன் " என்றான் ..

சுந்தரி உடனே கார்த்திக்கிடம் " ப்ளீஸ் ஒன்னும் சொல்லாத " என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள்  . கல்லூரி படிப்பு முடிந்தவுடன் காதல் மேட்டரை அப்பாவிடம் சொல்லலாம் என்று நினைத்தவளுக்கு கார்த்திக் போட்டு உடைத்ததில் பக்கென்று ஆகி விட்டது . மேலும் கோபம் தலைக்கேறினால் கார்த்திக் யார் என்ன என்று பார்க்காமல் கை வைத்துவிடுவான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும் . ஏற்கனவே தியேட்டரில் ஒருமுறை தன்னிடம் வம்பு செய்தவனை கார்த்திக் புரட்டி எடுத்திருக்கிறான் . அதனால் அவனை சமாதானப்படுத்துவது  தான் சிறந்த வழி என்று அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள் . அவள் முகத்தை பார்த்த பிறகு கார்த்திக்கின் கோபம் கொஞ்சம் தணிந்தது . ஏற்கனவே அவன் என் ஆள் என்று சொன்ன கடுப்பில் இருந்த மணிக்கு  அவள் ஏதோ அவனை மட்டும் சமாதானப்படுத்துவதை பார்த்த போது என்னமோ பெரிய  பில்ட் அப் கொடுப்பது போல பட்டது . அது அவனது ஈகோவை டச் செய்யவே அவன் மேலும் உஷ்ணமானான் . கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை கொஞ்சம் விலக்கி விட்டு பளேரென அவன் கன்னத்தில் மணி ஒரு அறை விட்டான் . கிரிக்கெட்  பாலில் பௌலிங் போட்டு போட்டு காய்த்துப்போன அவன் கைகளால் வந்த இந்த பவுன்சரை கார்த்திக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை . காதுக்குள் கொயிங்க் என்றது . கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவன் பின் வாங்கினான் . மணி அவனை பார்த்து கொன்னுடுவேன் என்பது போல செய்கை செய்துகொண்டிருக்க சுந்தரிக்கு தலை சுற்றியது . அவள் நிச்சயம் இந்த கைகலப்பை எதிர்பார்க்கவில்லை . அவளுக்கு யார் பக்கமும் இருக்க முடியவில்லை அதே சமயம் அப்படியே விடவும் முடியாது அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்  ...

சின்ன வயதிலிருந்தே கார்த்திக்கிற்கு பொழுதுபோக்கே சண்டை போடுவது தான் . வைகை ஆற்றங்கரையில் ஒரு பக்கம்  பெரியவர்கள் கர்லா வைத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க இன்னொரு பக்கம்  சிறுவர்கள் மற்றும்  இளைஞர்கள் ஒவ்வொரு  ஆளாக சண்டையிட்டுக்கொள்வார்கள் . அவை பெரும்பாலும் பெரிய  அடிதடியாக இல்லாமல் ஆளை  பிடித்து கவிழ்த்து ஒருவர் மேல் ஒருவர் ஏறி உட்காரும் மல்யுத்த விளையாட்டாகவே இருக்கும் . அதில் ஒருமுறை அவன் ஒருவனை கவிழ்த்தி   வெற்றிக்களிப்பில் கத்த தோற்றவன் கோபத்தில் அவனை அடிக்க இன்னும் இரண்டு பேரை கூட்டிக்கொண்டு வந்து பெரிய சண்டையாகி விட்டது . " நீயெல்லாம் ஒரு ஊழப்பய என் சாதிக்காரன  அடிக்கிறியா " என்று வந்தவன் கார்த்திக் முஞ்சியிலேயே குத்து விட்டான்  . அதுவரை மல்யுத்த பாணியில் சண்டை போட்டுக்கொண்டிருந்தவனுக்கு இந்த பளீர் குத்து என்னமோ செய்தது . அதை சமாளிப்பதற்குள் மற்றொருவன் விலா  எலும்பில் உதைத்தான் . " யார் மேலடா  கை  வைக்குற தாயோளி " ஏற்கனவே அடி  வாங்கியவன் துணைக்கு ஆள் இருக்கும் சப்போர்ட்டில் எம்பி வந்து அவன் கழுத்தை பிடித்தான் . அவன் செய்த ஆகச்சிறந்த தவறு அது தான் . கழுத்தை சுற்றி பிடித்து தொங்கியவனை அப்படியே  அலேக்காக தூக்கி மற்றொருவன்  மேலே அடித்தான் கார்த்திக் . இருவரும் உடைந்து விழ அந்த இடைவெளியில்  தனியாக நின்றவனை எம்பி உதைத்தான் . அந்த பலமான அடியில்  அவனும் சுருண்டு விழுந்தான் ...

அதற்குள் அங்கே பெரியவர்கள் வந்து விட உடனே விலக்கி  விட்டார்கள் . சண்டையிட்டதில் ஒருவன்  வந்தவர் காதில் கம்ப்ளைய்ண்ட் செய்வது போல ஏதோ கிசுகிசுத்தான் . உடனே அவர் கார்த்திகை கூப்பிட்டு
" என்ன தம்பி படிக்குற வேலைய விட்டுட்டு சண்டியர்த்தனம் பண்றியா " என்று மிரட்டினார் . " இல்லேண்ணே நான் ஒன்னும் பண்ணல  அவன் தான் ஆளுங்கள கூட்டிகிட்டு வந்தான் என்ன அடிக்க " என்று சம்பந்தப்பட்ட பையனை பார்த்து கார்த்திக் கை  காட்டினான் .  அவன் " என்ன அடிச்சுட்டாண்ணே அதான் தோஸ்துகளை கூட்டிட்டு வந்தேன் " என்றான் .
அது வரை அவனுக்கு சப்போர்ட்டாக இருந்தவர் கடுப்பாகி
" ஏண்டா கல்யாணம் பண்ணா  முதல் இரவுக்கு தனியா போவியா இல்லேன்னா  நாலு பேர  துணைக்கு கூட்டிட்டு போவியா " என்று கேட்க அவனுடன் வந்தவர்கள் உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டார்கள் .
பிறகு அவரே இருவரையும் கை  கொடுக்க வைத்து  சமாதானப்படுத்தி
 " இனி எங்கயாவது சண்டை  போடுறத பார்த்தேன் பிச்சுப்புடுவேன் "
என்று அவர்களை  மிரட்டி அனுப்பி வைத்தார் . கார்த்திகை  தனியாக கூட்டிக்கொண்டு போய் " அவிய்ங்கல்லாம் அடிதடின்னா எந்த லெவலுக்கு வேணா போவாய்ங்க , உன் சாதில  ஒரு பய வரமாட்டன் , படிக்குற வேலைய மட்டும் பாரு , திரும்ப அவனுகளே வம்புக்கு வந்தாலும் முறைச்சுக்கிட்டு தெரியாம  எண்ட  வந்து சொல்லு , நான் அங்க தான் இருப்பேன் " என்று அக்கரையை நோக்கி கை நீட்டினார் . அவன் நன்றி சொல்லி விட்டு நகர்ந்தான்.. ...

கார்த்திக் கிற்கு அந்த பழைய சம்பவம் கண் முன்னே வந்து போனது . இன்றும் அவன் மேல்  எந்த தப்புமில்லை . வாய் வார்த்தையாக பேசிக்கொண்டிருந்த போது முதலில் கை வைத்தவன் மணி  . என்ன தான் லவ்வருடைய அண்ணனாக இருந்தாலும் சொம்பை மாதிரி அவனிடமெல்லாம் அடி வாங்கிக்கொண்டிருக்க முடியாது . தீர்க்கமான முடிவுடன் ஒரு நிமிடம் அவனை முழுமையாக ஏற இறங்க பார்த்தான் . உயரமாக இருப்பவனிடம் நின்று கொண்டு சண்டை செய்வது வேலைக்காவாது  என்பதை உணர்ந்தான். மணி கை காலை நீட்டினால் இவனுக்கு தாறுமாறாக அடி  படும் . இன்னும் சிறிது பின் வாங்கினான் . கை விரல்களை ஒரு முறை நன்றாக சொடுக்கெடுத்துக்கொண்டான் . ஒரே அடியில் இவனை வீழ்த்த  வேண்டுமென்றால் நெஞ்சு சக்கரத்தில் அல்லது பொட்டில் அடிக்க வேண்டும் . மணியின் உயரத்துக்கு பொட்டில் அடிப்பது கொஞ்சம் கஷ்டம் . நெஞ்சில் அடிக்குப்போகும் போது அவன் லாவகமாக  தடுத்து இவனையே திரும்ப அடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது . சில வினாடிகள் அப்படியே நின்றவன் ஒரு முடிவோடு தலையை குனிந்து கொண்டு வேகமாக மிக வேகமாக மணியின் நெஞ்சில் மோதினான் . அதே நேரத்தில் அவன் கைகளை இறுக பிடித்துக்கொண்டு கால்களை சுழட்டி அவன் கால்களை தட்டி விட்டான் . இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த மணி அப்படியே மல்லாக்க  விழுந்தான் . ஒரு வினாடி கூட வீணடிக்காமல் அவன் மேல் பாய்ந்து வயிற்றில் கால் முட்டியால் மிதித்த கார்த்திக் அவன் தலை முடிகளை ஒரு கையில் பிடித்துக்கொண்டு இன்னொரு கையினால் ஓங்கி மூக்கில் ஒரு வலுவான குத்து விட்டான் . நிச்சயம் அந்த குத்தில் சில்லு மூக்கு உடைந்திருக்க வேண்டும் , ரத்தம் கொட்டியது ...

மணி வெறிகொண்டவன் போல கார்த்திக்கை பிடித்து தள்ளி விட்டான் . இரண்டு அடி  தள்ளிப் போய்  விழுந்தவன் சுதாரிப்பதற்குள் ஓடி வந்து கார்த்திக்கை எத்தினான் . இரண்டு மூன்று எத்துக்கு  பிறகு மணியின் கால்களை சரியாக பிடித்த கார்த்திக் அதை சுழட்ட தலை குப்புற விழுந்தான் மணி . மீண்டும் இருவரும் கட்டிப் புரண்டார்கள் . சுற்றி நின்றவர்கள் யாரும் சண்டையை விலக்கி விடாமல் வேடிக்கை பார்த்தார்கள் . கடைக்காரன் நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன நம்ம மேல விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்பது போல கடைக்கு வெளியில் அடுக்கி வைத்திருந்த சோடா பாட்டில்களை உள்ளே எடுத்து வைக்க ஆரம்பித்தான் . சுந்தரி அவர்களின் சண்டையை நிறுத்த  சொல்லி கத்திக்கொண்டிருந்தாள் . அவள்  இப்படி ஊரே வேடிக்கை பார்க்கும்  படி இருவர்  சண்டை போடுவதையெல்லாம் சினிமாவில்  தான் பார்த்திருக்கிறாள். அவளின் கத்தலையும் , கதறலையும் பொருட்படுத்தாமல் இருவரும் மாறி மாறி அடித்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தார்கள்  . மணி என்ன தான்  ஆள் வளர்ந்திருந்தாலும் கார்த்திக்கிற்கு இணையாக அவனால் சண்டையிட முடியவில்லை ...

சின்ன வயது சண்டையில் அந்த மதுரை பையன் செய்த அதே தவறை மணியும் செய்தான் . அவனை பின்பக்கமாக கழுத்தை வளைத்து பிடித்தான் . மணி வெயிட்டுக்கு அவனை அலேக்காக தூக்க முடியாது என்பதால் நன்றாக குனிந்த கார்த்திக் பின் முழு வேகத்ததோடு பின்னால் இருந்த சுவற்றில் மணியை முற்றிலுமாக சாய்த்தான் . அந்த பலத்த அடியில் மணிக்கு முதுகெலும்பு உடைந்தது போல வலித்தது . அவன் அப்படியே சுருண்டான் , பிறகும் வெறி அடங்காத கார்த்திக் கீழே இருந்த கல்லை எடுத்துக்கொண்டு மண்டையை உடைப்பதற்காக வெறியுடன் பாய்ந்தான் . அந்த ஒரு  நிமிடம் சுந்தரி நடுவில் வராவிட்டால் மணியின் மண்டை  உடைந்திருக்கும், கார்த்திக்கும் உள்ளே போயிருப்பான் . அவள் கையெடுத்து கும்பிட்டதை பார்த்ததும் அவன் கல்லை  கீழே போட்டு விட்டு பெட்டிக்கடைக்கு போய் சிகரெட்டை வாயினுள் வைத்துக்கொண்டு தீப்பெட்டியை தேடினான் . கடைக்காரர் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே தம்மை பற்ற வைத்தார் .
கூடி இருந்தவர்கள் எல்லாம் மணியை பிடித்து தூக்கி விட்டார்கள் , அவனுக்கு கோபம் குறையாமல் அவர்கள் கைகளை உதறி விட்டான் . கார்த்திக்கை வெறி கொண்டு பார்த்தவன் இனி எந்த ஜென்மத்திலும் அவன் நம் வீட்டு  மாப்பிள்ளையாக வரவே கூடாது என்று மனதுக்குள் சபதம் செய்தான் ...

தொடரும் ...

முதல் ஏழு பாகங்களை படிக்க கீழே சொடுக்கவும் ...

அவன் - அவள் - நிலா (1) ...

6 October 2019

அவன் - அவள் - நிலா (7) ...


சுந்தரியை பார்க்கப்போகிறோம் என்கிற பரவசத்தில் இருந்தவனுக்கு அவளை ஒருவன் வண்டியில் இறக்கி விடுவதை பார்த்ததும் பரவசம் போய் கொண்டு வந்து விட்டவன் மேல் பகையுணர்வு வந்தது . நிச்சயம் அவன் அவளின் சொந்தக்காரனாகவே இருக்க வேண்டும் . சித்தி பையன் , அத்தை பையன் என்று எவனோ ஒருவன் . ஆனால் ஆம்பளை பையன் . அது தான் நிறைய எரிச்சலை கொடுத்தது அவனுக்கு . சுந்தரியை அவனோடு பார்த்தேன் , இவனோடு பார்த்தேன் என்றெல்லாம் கேள்விப்படும் போது அவன் அவ்வளவாக கண்டு கொண்டதில்லை  ஆனால் இன்று நேரடியாக பார்க்கும் போது எரிந்தது . கடைசி இழுப்பை ஒரு இழு இழுத்து கடைக்கு பின்னால் போய் தூக்கியெறிந்து விட்டு வந்தான் . வந்தவுடன் அவள் நின்று கொண்டிருந்தாள் . மிக அருகே அவளை பாவாடை தாவணி சட்டையுடன் பார்த்த போது அவன் கோபம் வடியத்தொடங்கியது ..

" நான் எப்படி இருக்கேன் ?" பாவாடையை இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு அவள் லேசாக ஆடிக்கொண்டே கேட்டாள் . உண்மையை சொல்லவேண்டுமென்றால் அவள் தேவதை போலிருந்தாள் . அவள் செய்யும் குழந்தைதனமான குணஷ்டைகள் அவனுக்கு கொஞ்சம் அசௌகரியமாக  பட்டாலும் " தேவதை மாதிரியிருக்க  என்று சொல்ல வாயெடுத்தான் , அதற்குள் அவள் " இதோ என்ன இறக்கி விட்டாரே மணி அண்ணா அவர் வாங்கிக்கொடுத்தது " , என்று சொன்னவுடனே இறங்கியிருந்த சாத்தான் திரும்ப மண்டைக்குள் ஏறிக்கொண்டது . " ஏன் உனக்கு எதுவுமே உன் அப்பன் வாங்கித்தர மாட்டானா?, எப்ப பாரு ஏதாவது ஒரு அண்ணன் ஏதாவது வாங்கி தந்துடறான்". அவன் சொன்னவுடனே அவளுக்கு லேசாக  அழுகை துளிர் விட்டது . " எனக்கு சொந்த அண்ணா இல்ல , பெரியப்பா பிள்ளை தான் என் அண்ணா , ஏன் அவன் வாங்கி தரக்கூடாதா ? " . " போன தடவை ஒரு வாட்ச் கட்டியிருந்தியே அது யாரு வாங்கிக்கொடுத்தா ? . " சுந்தர் அண்ணா வாங்கி தந்தா " . " அவன் யாரு ? " . " என் அத்தை பையன் " . " முறைப்பையன் அவன் எப்படி நொண்ணா ? ஓ அந்த அண்ணாவா ? " . அவன் சொன்னவுடன் அவளுக்கு அழுகையோடு கோபமும் பொத்துக்கொண்டு வந்தது . " தேவையில்லாம சந்தேகமா பேசாதீங்க " . நிச்சயம் அவனுக்கு அவள் மேல் ஒரு துளி கூட சந்தேகம் இல்லை , ஆனால் அவனை  தவிர அவளுக்கு யார் எதுவும் வாங்கித்தருவதோ , உரிமை கொண்டாடுவதோ சுத்தமாக பிடிக்கவில்லை . அதை அவளிடம் உட்கார்ந்து மெதுவாக பேசுவதற்கு அவனது ஈகோவோ , வயதோ , அனுபவின்மையோ ஏதோ ஒன்று தடுத்தது ...

" சே நான் உன்ன சந்தேகப்பட்டு அப்படி சொல்லல " அவனுக்கு அவளுக்கு எப்படி புரியவைப்பதென்று தெரியவில்லை . " ஒவ்வொரு தடவையும் இப்படி எதாவது சொல்லிட்டு அப்புறம்  அப்படி இல்லைன்னு சொல்ல வேண்டியது " .
அவள் இன்னும் கோபத்தோடு தான்  இருந்தாள்  . " சூச்சு என்ன நம்ப மாட்டியா?"  அவன் அவள் கண்களை விழுங்குவது போல பார்த்துக்கொண்டே கேட்டான். பெண்கள் தனிப்பட்ட முறையில் எவ்வளவு அறிவார்ந்த முறையில் சிந்தித்தாலும் இந்த காதல் வலையில்  விழுந்த பின் அவர்களுக்குள் சார்புத்தன்மை நுழைந்து விடுகிறது . அவள் வெட்கப்பட ஆரம்பித்தாள் . ரோட்டில் சண்டை கூட போட்டுவிடலாம் , ஆனால் ரொமான்ஸ்  செய்ய முடியாது , செய்தால் ஏதோ ஏலியன்களை பார்ப்பது போல வேடிக்கை பார்ப்பார்கள் . அதை உணர்ந்தவனாய் அவள் கைகளை பிடித்துக்கொண்டு எதிர்த்த மாதிரி இருந்த வழக்கமான ஃ பேமிலி ரெஸ்டாரண்டுக்கு நடக்கலானான் ...

அந்த ரெஸ்டாரண்ட் காதலர்களுக்காக கட்டப்பட்டது போலவே சிறு சிறு தடுப்புகளுடன் கூடிய அறைகளாக  இருந்தது . அதில் வாகாக இருந்த ஒன்றுக்குள் இருவரும் நுழைந்தார்கள் . ஒரே சோஃபாவில் இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டார்கள் . " இந்த ஜிமிக்கி கூட நல்லா இருக்கே " 
அவள் காதுகளில் ஆடிக்கொண்டிருந்த தோடுகளை பார்த்தவுடன் அவன் மனசு தள்ளாடியது . " இதுவா " என்று ஏதோ சொல்ல வந்தவள்  எதுக்குடா வம்பு என்பது போல வையை மூடிக்கொண்டாள் . அவள் எதுவும் பேசாதது இருவருக்குமே சவுகரியமாக  இருந்தது . கஃபே காஃபி டேவெல்லாம் வருவதற்கு முன்னாடியே  காதலர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஹோட்டல் போல அது .  சர்வர் ஆர்டர்  எடுக்கவே ஆடி அசைந்து மெதுவாக தான் வருவான். ஆர்டர் எடுத்த பிறகும் அவன் வந்து பரிமாறுவதற்கும்  நடுவிலே ஒரு ஸ்டோரி டிஸ்கஸனே முடித்து விடலாம் . அதனாலோ என்னவோ பசியில் இருந்தவன்  அவன் அவள் காதுகளை மெதுவாக கடிக்க ஆரம்பித்தான் . அவளுக்கு கண்கள் லேசாக சொருகியது . 
" ஏய் பேசலாமா சொல்லிட்டு வேலையை ஆரம்பிக்கிற பாத்தியா ?". ரொமான்ஸுக்குள் போனவுடன் தானாகவே வாங்க போங்க போய் வா போ வந்து விடுகிறது . அவனுக்கும் அது பிடித்திருந்தது ...

காதுகளில் ஆரம்பித்தவன் மெதுவாக கழுத்துக்கு வந்தான் . அதில் சிறிது  நேரம் முகம் புதைத்தவனுக்கு அப்படியே இருந்து விட மாட்டோமா என்று தோன்றியது . ஆனால் க்ஷண நேரம் தான் அவனால் அங்கே தாக்குப் பிடிக்க முடிந்தது . மீண்டும் கன்னம் வழியாக உதடுகளுக்கு போனான் . அவனுக்கு மட்டுமல்ல எல்லா காதலர்களுக்குமே ஃபேவரைட் இடம் உதடுகளாகத் தான் இருக்கும் . இதழ்களில் அவன் எழுத ஆரம்பித்த கதையில் அவள் மெய்மறந்தாள் . உதட்டு முத்தம் என்பது மனிதர்களுக்கே உள்ள சிறப்பம்சம், இனப்பெருக்கத்துக்காக மட்டும் உடலுறவு கொள்ளும் விலங்குகள் கூட சில சமயம்  காதல் வயப்படலாம் ஆனால் ஏனோ இந்த சிறப்பம்சம் அவைகளுக்கு வாய்க்கவில்லை . ஓராயிரம் வார்த்தைகள் சொல்ல வேண்டிய அர்த்தத்தை இந்த சிறு முத்தம் சொல்லி விடுகிறது . கமல்ஹாசனை திட்டிக்கொண்டே அவர் கொடுக்கும் லிப் டு லிப்பை ஓரக்கண்ணால் பார்க்கும் பெண்கள்  ஏராளம் . சிறிது நேரம் வெள்ளைக்காரியாக இருந்தவள் ஏதோ நியாபகம் வந்து அவனை தள்ளி விட்டு தமிழ்நாட்டுக்கு வந்தாள் ...

" ஏய் என்ன ஆச்சு ? " . " போதும் உங்க பேச்செல்லாம் , இப்படியே பேசிட்டு இருந்தா நான் கிளம்பறேன் " . " ஏய் பேசறதுக்காக தான் தயார் பண்ணிக்கிட்டு இருந்தேன் " அவளை பார்த்து கண்ணடித்துக் கொண்டே சொன்னான் . சின்ன சின்ன சில்மிஷங்கள்  , டயலாக்குகளால் அவளை கவர் செய்து விடுவதில் அவன் கண்ணன் . " வேற எதுவும் பேச இல்லையா ?" . " நெறைய இருக்கே " .
" உங்க வேலை விஷயம் என்ன ஆச்சு ? " . " ம் கிடைச்சாச்சு அடுத்த மாசம் சேரனும் " . அவன் சொன்னவுடன் அவளுக்கு சந்தோசம் முட்டியது . உடனே அவன் கன்னத்தில் ஒரு கிஸ் அடித்தாள் .
" என்ன கம்பெனி , எவ்ளோ சம்பளம் ?" . அவள் அவன் ஏதோ பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டான் , உடனே அப்பாவிடம் சொல்ல  வேண்டுமென்கிற அளவுக்கு பிளான் போட ஆரம்பித்து விட்டாள் .
" என் காலேஜ் சீனியர் சரவணன் அண்ணனோட வீடியோ கடையில தான் " .
அவன் சொல்ல அவளுக்கு சப்பென்று ஆகி விட்டது .
" வீடியோ கடையிலயா " . ஆசையாசையாய் மேட்ச் பார்க்க உட்கார்ந்து முதல் பாலிலேயே சச்சின் அவுட் ஆனது போலிருந்தது அவளுக்கு ...

" வீடியோ கடை மட்டும் இல்ல , லோக்கல் கம்பெனிக்கெல்லாம்
ஆட் பண்றது , லோக்கல் கேபிளுக்கு ப்ரோக்ராம் பண்றது எல்லாமே  தான் " ,
அவன் பெருமையாக பேசிக்கொண்டு போனான் .
" இது என்ன வேலை " அவள் சோகத்தோடு கேட்டாள் .
" இது என்ன வேலைன்னா ? அப்போ ஆடிட்டரா இருக்கறது மட்டும் தான் வேலையா ?" , உடனே அவள்  அப்பாவை இழுக்க ஆரம்பித்தான் .
" நான் அப்படி சொல்லல , இந்த விக்கி அண்ணா மாதிரி ஏதாவது கம்பெனில "
" யாரு அவனா ? என்னிக்கு சிட் ஃபண்ட் காரன் கம்பி நீட்டுறானோ அன்னிக்கு இருக்கு அவனுக்கு வேட்டு " . அவன் வேலை பார்க்கும் பைனான்ஸ் கம்பெனியை அவன் கலாய்த்தான் . அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை . " எல்லாத்தையும் நெகட்டிவ்வா பார்க்காதீங்க " .
அவனுக்கு சற்றென்று கோபம் வந்தது , " வேலைன்னு சொன்னவுடனே முதல்ல சந்தோசப்பட்டுட்டு அப்புறம் என்ன வேலைன்னு தெரிஞ்சவுடனே நீ நெகட்டிவ்வாக மாறல ? " . " நான் நெகட்டிவ்வா ஒன்னும் சொல்லல , ஆனா யதார்த்தத்தை சொன்னேன் . விக்கி அண்ணாவுக்கு இப்போ கை நெறைய சம்பளம் , வைட் காலர் ஜாப் நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது ஆனா இன்னிக்கு எல்லோரும் நிமிர்ந்து பார்க்க மாதிரி இருக்கணும்" . " ஆமா அவனோட ஆறுக்கு ரெண்டு உயரத்துக்கு எல்லோரும் நிமிர்ந்து தான் பார்க்கணும் " அவன் இப்படி சொன்னதும் அவளுக்கு அந்த சூழல் மறந்து சிரிப்பு வந்தது . இது தான் அவன் ஸ்பெசாலிட்டி . கோபப்படுபவனாக இருந்தாலும் டைமிங்கில் எதையாவது சொல்லி அனைவரின் மூடையும் டக்கென்று ஸ்விங் செய்து விடுவான் ...

மனநிலை மாற ஆரம்பித்த அந்த நேரத்தில் சர்வர் ஆர்டர் எடுக்க வந்தான் .
" என்ன சார் சாப்புடுறீங்க " , எல்லா ஹோட்டல்களிலும் இதை சம்பிரதாயமாக கேட்டு விடுவார்கள் என்னமோ கேட்பதையெல்லாம் கொடுப்பது போல . அங்கே அந்த நேரத்தில் இருப்பதென்னமோ நான்கைந்து ஐட்டம் தான்
" எனக்கு எதுவும் வேண்டாம் " அவள் சொன்னாள் .
" ஏதாவது சாப்பிடணும் என் ட்ரீட் " . " முதல்ல நீங்க சொல்லுங்க " என்றாள் .
பசியிலிருந்த அவன் " ஒரு சாம்பார் வடை , மசால் தோசை , முடிக்கும் போது சூடா  ஸ்ட்ராங்கா ஒரு காஃபி " என்றான் . அவள் அதற்குள் யோசித்து முடித்தவளாய்  எனக்கு ஒரே ஒரு பனானா மில்க் ஷேக் மட்டும் போதும் " என்றாள் . ஒன்னு மட்டும் போதுமா , அது ஒண்ணே நம்ம  ஆர்டர் பண்ணதுக்கு மேல ரேட் இருக்கும் . இதை யோசித்தவன் சர்வர்  இருந்ததால் அதை சொல்லாமல் தண்ணீர் குடித்துக்கொண்டான் . இந்த ஹோட்டல்களில் ஆண்கள் ஆர்டர் கேட்பது இருக்கிறதோ இல்லையோ பெண்கள் கேட்பது நிச்சயம் இருக்கும் ...

ஆர்டர் செய்ததை எடுத்து வருவதற்கு அவன் இன்னும் அரை மணி நேரம் ஆக்குவான் அதற்குள் இன்னொரு மினி டிஃபனை முடித்து விடலாமா என்பது போல அவளை ஏக்கத்துடன் பார்த்தான் . அவனுடைய சில்மிஷ எண்ணம் புரிந்து கொண்டவளாய் " எப்போ அவர் கிட்ட ஜாயிண்ட் பண்ணனும் " , அவள் நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் . " அடுத்த மாசம் வந்து பார்க்க சொல்லியிருக்கார் " . அவளுக்கு சப்பென்று ஆனது .
" அப்போ அது கூட  கன்ஃபார்ம் இல்லையா ? " . " அப்படில்லாம் இல்ல , அவருக்கு என் டேலண்ட் பத்தி நல்லாவே தெரியும் . நெக்ஸ்ட் மன்ந்த் ஜாயிண்ட் பண்ணிடலாம் " . அவன் நம்பிக்கையாக சொன்னான் . அவன் நம்பிக்கையை கெடுக்க விரும்பாதவளாய் அவள் "ம்" மட்டும்  போட்டாள் .
" சம்பளம் எவ்வளோ ? " . " ஆமா மேனேஜர்  உத்தியோகம் அப்படியே சம்பளம் , பேட்டா ல்லாம் கொடுக்க , இது ட்ரைனிங் மாதிரி அவர் கூட இருந்தா டெக்னீக்கல்லா நெறைய கத்துக்கலாம் " . " கத்துக்கிட்டு ? " .
" கத்துக்கிட்டா ? , அவருக்கு சென்னைல  சினி ஃபீல்டுல நெறைய காண்டாக்ட்ஸ் இருக்கு , அத வச்சு அசிஸ்டன்ட் டைரக்டரா சேர்ந்துடலாம் " ...

சுஜாதா சினிமா உலகத்தை " கனவு தொழிற்சாலை " என்று சரியாக தான் சொன்னார் . அவள் சொல்லி தான் அவன் அந்த நாவலை படித்தான் . அவளுக்கு சினிமா மேல் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் இது போல படித்ததன் மூலம் நிறைய தெரிந்து வைத்திருந்தாள் .
" இன்னும் மூணு வருஷம் தான் சுந்தரி அப்புறம் பாரு ஐயாவை " .
அதீத நம்பிக்கையோடு சொன்னான் .  விக்ரமன் படம் போல ஒரு பாட்டில் வாழ்க்கை மாறி விடாதா என்று அவள் யோசித்தாள் .
" என்ன யோசிக்குற சென்னையில எங்க வீடு வாங்கணும்னா ? " .
" இல்ல திருச்சில எங்க வாங்கணும்னு " . எதிர்காலத்தை பற்றிய பாசிட்டிவ் கற்பனை ஒரு சுகத்தை தருகிறது . தற்போதைய கவலைகளை மறக்க உதவுகிறது , புண் இருக்கும் இடத்தை லேசாக  சொரிந்து கொள்வதை போல .
" அதெல்லாம் நடக்குமா " என்பது போல அவள் ஏக்கமாக பார்த்தாள் . நிச்சயம் எல்லாம் நடக்கும் என்பது போல அவள் கைகளை இறுக்கப் பற்றிக்கொண்டான்  . அவன் தோள்களில் அவள் சாய்ந்து கொண்டாள் . அவளுக்கு லேசாக அழுகை வந்தது . அவன் சொல்வது போலெல்லாம் மூன்று வருடத்தில் சினிமாவில் செட்டில் ஆவதெல்லாம் ஆகிற கதையில்லை  என்பது அவளுக்கு உள்ளுணர்வு சொல்லியது . காலம் கடத்துவதற்காகவே யு.ஜி முடித்துவிட்டு பிஜி படிக்க வேண்டுமென்று ஏற்கனவே அப்பாவிடம் சொல்லி வைத்திருந்தாள் . படிப்பின் அவசியம் புரிந்த அவர் என்றுமே அதற்கு தடை சொன்னதில்லை ...

சர்வர் சூடாக சாம்பார் வடை , தோசையை எடுத்து வந்தான் .
" மேடம் உங்களுக்கு இப்போவே மில்க் க்ஷேக் கொடுக்கவா இல்ல காஃபியோடவா ?" , " காஃபியோடவே கொடுங்க " , அவள் சொன்னவுடன் சர்வர் இடத்தை காலி செய்தான் . பசியில் இருந்தவன் சாம்பார் வடையை ஸ்பூனால் எடுத்து சாப்பிட ஆரம்பித்தான் . அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விடுவான் என்று நினைத்தவள் வழக்கம் போல ஏமாந்தாள் . பர்தடே க்கு முதல் ஆளாக வாழ்த்து  சொல்வது , சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுப்பது , புது ட்ரெஸ்ஸில் பார்த்தால் கேட்காமலேயே பாராட்டுவது என இது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் பெண்களுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன . பெண்கள் திருமணம் என்று வரும் போது ரியாலிட்டியை யோசிப்பவர்கள் காதலிக்கும் போது கனவுலகிலேயே இருக்கிறார்கள் .
அவனை பொறுத்தவரை பசியில் இருந்தது ப்ளஸ் அவள் எதுவும் வேண்டாமென்று சொல்லிவிட்டது இதையெல்லாம் வைத்து வேறெதுவும் யோசிக்காமல் சாப்பிட ஆரம்பித்து விட்டான் ...

" சாம்பார் வடை சூப்பரா இருக்கு , ஒரு வாய் சாப்புடுறியா " , அவளுக்கு வடையின் சுவையை விட அவன் கேட்டதால் சாப்பிட வேண்டும் போலிருந்தது ஆனாலும் அவன் முதலிலேயே கேட்டிருந்தால் அவள் உடனே தலையாட்டியிருப்பாள் இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் .
அவன் ஓகே சொல்லிவிட்டு திரும்ப சாப்பிட ஆரம்பித்தான் . அது அவளுக்கு இன்னும் ஏமாற்றத்தையே கொடுத்தது . பெண்கள் தங்களின் முக்கியத்துவத்தை என்றுமே இழக்க விரும்புவதில்லை . ஆண்கள் செய்யும் எல்லா விஷயங்களிலும் தாங்கள் பிரதிபலிக்க வேண்டுமென நினைக்கிறார்கள் . அவள் எண்ண  ஓட்டத்தை அறியாதவனாய்  அவன் மசால் தோசையை சாப்பிட ஆரம்பித்தான் . அதை முடித்தவுடன் கை  அலம்ப போனான் . அவன் போனவுடன் சுற்றும் முற்றும் பார்த்தவள் கொஞ்சம் மீதமிருந்த மசால் தோசையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள் . அப்பா சாப்பிட்ட பிறகு அவர் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அதே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த  சுந்தரியின் அம்மா இன்று குழந்தைகள் பெரிதாக வளர்ந்து விட்டதால் அதனை குறைத்துக் கொண்டாள் . சின்ன வயதிலிருந்து அதை பார்த்து வளர்ந்தவளுக்கு அவனை புருஷன் போல நினைத்து தட்டில் இருந்து எடுத்து சாப்பிட்டது தப்பாக தெரியவில்லை . ஒரு வழியாக காஃபி , மில்க் ஷேக் கை முடித்து வைத்து பில்லை கட்டி விட்டு அவன் கைகளை இறுக கோர்த்துக்கொண்டு அவள் வெளியே வந்தாள்  . அவளுக்கு நீண்ட நாட்கள் கழித்து அவனுடன் இத்தனை நேரம் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது . ஃப்ரெண்ட் வீட்டுக்கு போகிறேன் என்று இறங்கியவள் இங்கே அவனுடன் ஜோடியாக வருவதை , வேலையை முடித்து விட்டு ஒரு காஃபி சாப்பிடலாம் என்று வந்த போது பார்த்த மணி அண்ணாவுக்கு மகிழ்ச்சியாக இல்லை ...

தொடரும் ...

முதல் ஆறு  பாகங்களை படிக்க கீழே சொடுக்கவும் ...

அவன் - அவள் - நிலா (1) ...







5 October 2019

அசுரன் - ASURAN - அழகன் ...


சுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் நல்ல நாவல்களை படமாக எடுத்துக்கொண்டிருக்கும் இயக்குனர்  வெற்றிமாறனை பாராட்டியே ஆக வேண்டும் . அவர் இந்த முறை பூமணி எழுதிய வெக்கை யை அதன் வெப்பம் குறையாமல் அசுரனாக செல்லுலாய்டில் அழகாக பதிவு செய்திருக்கிறார் ...

மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் சிவசாமி ( தனுஷ் ) அந்த நிலத்தை பிடுங்க நினைக்கும் வடக்கூரானால்  ( ஆடுகளம் நரேன் )  தன் மூத்த மகன் முருகனை இழக்கிறார் . பதிலுக்கு வடக்கூரானை இளைய மகன் சிதம்பரம் ( கென் கருணாஸ் ) காவு வாங்க வடக்கூரானின் குடும்பத்தினரிடமிருந்து  இளைய மகனை  சிவசாமி எப்படி காப்பாற்றுகிறாரர் என்பதை அசுர வேகத்தில் சொல்லி முடிப்பதே அசுரன் ...

இரண்டு பெரிய மகன்கள் , ஒரு சின்னப்பெண்ணின் அப்பாவாக தனுஷுக்கு தன் வயதுக்கு மீறிய கதாபாத்திரம் . ஆனால் அது எங்குமே தெரியாமல் தனது உடல் மொழியால் பார்த்துக்கொள்வதே தனுஷின் சாமர்த்தியம் . நடை , பேச்சு என்று எல்லாவற்றிலுமே நம் கண் முன் தெரிவது சிவசாமியே தவிர தனுஷ் அல்ல . மெதுவான நடை , அமைதியான பேச்சு இவற்றால் 40 க்கு மேற்பட்ட வயதாக தெரிந்தாலும் தனுஷ் சண்டை போடும் போது மட்டும் 20 ஆகி விடுகிறார் . நம்மை அதை கண்டுகொள்ள விடாமல் ஆக்சனுக்குள் கட்டிப்போட்ட பீட்டர் ஹெயினுக்கு வாழ்த்துக்கள்  . ஆடுகளத்துக்கு பிறகு அடுத்த ஒரு அவார்ட் தனுஷுக்கு காத்திருக்கிறது ...


மஞ்சு வாரியார் அந்த இருட்டு கிராமத்திலும் மின்னலாக ஜொலிக்கும் வைர மூக்குத்தி . சின்ன சின்ன முக பாவங்களில் அவர் காட்டுவது நேர்த்தியான நடிப்பு . ஆனால் அவர் உடல்வாகு , அழகு எல்லாமே ஒரு கல்யாண வயது பையனுக்கு அம்மாவாக நம்ப வைக்க மறுக்கிறது . மூத்த மகன் டீஜே சில காட்சிகளே வந்தாலும் தனுஷுக்கு ஈக்குவலாக ஹீரோயிசம் காட்டியிருப்பது சிறப்பு . அவர் கொல்லப்படும் காட்சியும் , பிணத்தை பார்த்து தனுஷ் - மஞ்சு வாரியார் கதறும் காட்சியும்  நீண்ட நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் நெஞ்சை உறையவைத்த காட்சிகளில் ஒன்று . கென் கருணாஸுக்கு முதல் படமே அருமையான அறிமுகம் . இயக்குனரே சிதம்பரத்தின் குடும்பம் என்று அறிமுகம் செய்யுமளவுக்கு வெயிட்டான ரோலில் சிறப்பாக செய்திருக்கிறார் . மேலும் வளர வாழ்த்துக்கள் . பசுபதி , பிரகாஸ்ராஜ் படத்தில் இருக்கிறார்கள். அந்த கூட்டத்திலும் தேர்ந்த நடிப்பால் தனியாக தெரிகிறார்கள் ...

ஜி.வி.பிரகாஸ்  நடிப்பதை கூட விட்டு விட்டு  இது போன்ற படங்களுக்கு இசையமைக்க மீண்டு (ம்) வரலாம் . ஆடுகளம் , பரதேசி க்கு பிறகு தனது பின்னணி இசையால் தாண்டவம் ஆடியிருக்கிறார் . படத்தை எந்த விதத்திலும் ஓவர் டேக் செய்யாமல் அதே நேரம் நம்மை இழுத்தும் பிடிக்கிறது அவரது இசை .  வேல்ராஜின் கேமரா காடுகள் , மேடுகள் எல்லாவற்றிலும் பயணித்து படம் நெடுக சிவசாமியோடு சேர்த்தே நம்மை அழைத்து செல்கிறது . இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங் எல்லாமே  இயக்குனர் வெற்றிமாறனுக்கு வலுவாக கை  கொடுத்திருக்கின்றன ... 

தேங்கியிருக்கும் தண்ணீரில் அழகாக சிரிக்கும் நிலா மனிதனின்  கால் பட்டு சிதையும் முதல் ஷாட்டிலேயே சிவசாமியின் குடும்பம் படப்போகும் பாட்டை நமக்கு சிம்பாலிக்காக காட்டிவிடுக்கிறார் இயக்குனர்  . எதற்காகவும் நேரத்தை வீணாக்காமல் சிவசாமியின் பயணத்தோடு சேர்த்தே நமக்கு என்ன நடந்தது என்பதை விறுவிறு வென விளக்குகிறது திரைக்கதை . சாதாரணமாக ஆரம்பிக்கும் படம் இண்டெர்வெல் பிளாக்கில் சிவசாமியின் அசுர தாண்டவதோடு முடியும் போது இண்டெர்வெல் அதற்குள் வந்துவிட்டதா என்று நம்ப முடியவில்லை ... 

60 களில் செருப்பு கூட போட முடியாமல் அவமதிக்கப்படுவது , 80 களில் தன் நிலத்தில் ஒழுங்காக விவசாயம் செய்ய விடாமல் தடுக்கப்படுவது என காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேல் சாதீய , பொருளாதார ரீதியாக 
இன்று வரை விதைக்கப்படும் கொடுமைகளை உபதேசமாக இல்லாமல் காட்சிகளாக  மட்டும் காட்டியிருப்பது  இயக்குனரின் பலம் . சாதிய  பிரச்சனைகளுக்கு  எல்லாம் ஏதோ பிராமணர்கள்  மட்டும் தான் காரணம்  என்பது போல காட்டி ஒதுங்கிக்கொள்ளாமல்  இடைநிலை மற்றும் கீழ் நிலை சாதிகளுக்கிடையேயேயான சண்டைகளை , வனமங்களை நேர்த்தியாக , நேரடியாக காட்டியிருப்பது இயக்குனரின் நேர்மை  . வசனங்கள் , குறியீடுகள் மூலமாக சாதி வேறுபாடுகளை அடையாளப்படுத்துவது , ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபடும் வக்கீல் சேஷாத்ரியை ( பிரகாஸ்ராஜ் ) சாதீய ரீதியாக காட்டமால் தோழராக காட்டியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் ...

இண்டெர்வெல்லுக்கு பிறகு வரும் ப்ளாஷ்பேக் ரசிக்க வைத்தாலும் பெரிய ஜெர்க்குக்கு அடுத்து பயங்கர எதிர்பார்ப்போடு வருவதால் லேசான ஏமாற்றத்தை தருகிறது  . தனுஷின் அக்கா பெண்ணாக வரும் அம்மு அபிராமி கொஞ்ச நேரமே வந்தாலும்  மனதில் நிற்கிறார் . சட்டை போட கூட வக்கில்லாதவரை தனுஷ் தன் முதலாளி ( வெங்கடேஷ் ) மில்லில்  வேலைக்கு சேர்த்து விடுவதும் அவர் கட  கடவென முதலாளி தனது சொந்தக்காரன் என்று சொல்லுமளவிற்கு வளர்ந்து விடுவதும் யதார்த்தமான  கதைக்களனில் செயற்கையாக பூசப்பட்ட சினிமா வண்ணங்கள் . ஹிந்தியில் ஆர்டிகள் 15 போலவெல்லாம் இங்கே சினிமா வருவதில்லையே என்கிற ஏக்கத்தை ( பரியேறும் பெருமாள் அதற்கு முன்னரே வந்த அருமையான படம்) தீர்த்து வைக்கிறது அசுரன் . நாவலின் சினிமாவாக்கம் என்பதால் ஆர்ட் ஃபிலிமாக எடுத்து குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பிடிக்கும் படி செய்யாமல் மாஸாகவும் ,  க்ளாஸாகவும் வந்து நம்மை மிரட்டும் அசுரன் அனைவரையும் கவரும் அழகன் ...

ரேட்டிங் : 4 * / 5 * 

ஸ்கோர்  காரட் : 50  



Related Posts Plugin for WordPress, Blogger...