31 January 2016

இறுதிச்சுற்று - IRUTHI SUTRU - ஜெயிக்கும் ...


லைபாயுதே வில் அறிமுகமாகி மின்னலே , ரன் வெற்றிகளின் மூலம் தனக்கென்று ஒரு தனி மார்க்கெட்டை ஏற்படுத்திக்கொண்டவர் மாதவன் . ஹீரோவாக மட்டும் வளம்  வர நினைக்காமல் பீக்கில் இருக்கும் போதே ஆயுத எழுத்து படத்துக்காக மொட்டை போட்டுக்கொண்டு வில்லனாக நடித்து மற்ற கமர்சியல் ஹீரோக்களை விட பல படிகள் மேலே சென்றவர் . ஆனால் அப்படிப்பட்டவரை மன்மதன்அம்பு , வேட்டை படங்களில் ஒரு ஜோக்கர் போல பார்க்க நேர்ந்தது காலக்கொடுமை . இதோ அதற்கு பிராயச்சித்தம் போல இத்தனை வருட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறது இறுதிச்சுற்று ...

தன்னால் சாதிக்க முடியாததை தனது மாணவி மூலம் சாதிக்க நினைக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இறுதிச்சுற்று . ஏற்கனவே பார்த்துப்பழகிய ( வெற்றி மேல் வெற்றி , குமரன் S / O மகாலட்சுமி etc ...) கதைக்கு யதார்த்தமான அதேசமயம் க்ரிப்பான திரைக்கதையால் மெருகேற்றியிருக்கிறார் இயக்குனர் சுதா கோங்குரா ...


மாதவன் அழகாக இருந்தாலும் அவரிடம் உள்ள  சாக்லேட் பாய் இமேஜ் நெருடும் . வெறும் உடம்புடன் வரும் முதல் சீனிலேயே அதை சுத்தமாக உடைத்தெறிந்து நம்மை உள்வாங்குகிறார் மேன்லி மாதவன் . இந்த உடற்கட்டுக்காக வருடக்கணக்கில் அவர் போட்ட உழைப்பு வீண்போகவில்லை .  மனைவி ஓடிப்போனதை சொல்லும் போது காட்டும் ஆதங்கம் , மாணவி வேண்டுமென்றே தோற்கும் போது காட்டும் கோபம் , நீ அவ்ளோ தாண்டா என்று சொல்லும் போது காட்டும் நக்கல் என படம் முழுவதும் கோபக்கார கோச் பிரபு வாக வியாபித்து நிற்கிறார் மாதவன் . இனிமேல் இது போன்ற படங்களில் அவர் கவனம் செலுத்துவார்  என்று நம்புவோமாக ...

மதி ரோலுக்கு பாக்சர் ரித்திகா சிங்கை தேர்ந்தெடுத்ததோடு விட்டு விடாமல் அவர் முதல் படம் என்றே தெரியாத அளவுக்கு நடிக்க வைத்திருக்கும் இயக்குனருக்கு ஒரு பூச்செண்டு . பொண்ணு பின்னி பெடெலெடுத்திருக்கு . மாதவனுக்கு ஈக்குவலாக ஏன் ஒரு படி மேலாகவே ரித்திகா நம்மை கவர்கிறார் என்றால் மிகையாகாது . வேண்டுமென்றே தோற்று விட்டு மாதவனை பார்த்து நக்கலாக சிரிக்கும் இடம் ஒன்றே போதும் இந்த பொண்ணோட திறமைக்கு சான்று ...



மதியின் அக்கா லக்ஸ் ( மும்தாஸ் ) கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் ஸ்போர்ட்ஸ் டெம்ப்ளேட் டிலிருந்து  சற்று விலகி நிற்கிறது படம் . எனக்கு ஏன் மாஸ்டர் நீங்க அவள  மாதிரி கோச்சிங் கொடுக்கல என்று அவர் ஆதங்கப்படுவதும் , அதற்கு மாதவன் பதிலளிப்பதும் உருக்கம் . காளி வெங்கட் , ராதா ரவி குறிப்பாக நாசர் என எல்லோருமே இறுதிச்சுற்றில் நம்மை இறுக்கிப்பிடிக்கிறார்கள் . ஏற்கனவே லீ படத்தில் பார்த்த அதே ரோலில் ஜாகிர் ஹுசைன் . இவர் மாதவனிடம் பேச்சோடு பேச்சாக ஐடி கார்டை வாங்கும் இடம் படத்துக்கு ஹைலைட் . சந்தோஷ் நாராயணின் இசை , சிவகுமார் சூரியனின் ஒளிப்பதிவு , சதீஷ் சூரியா வின் எடிட்டிங் என எல்லாமுமே படத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றன . அருண் மகேஸ்வரனின் கவுச்சியான வசனங்கள் கவுதம் மேனன் படங்களை சில நேரம் நினைவு படுத்தினாலும் நிறைவு ...

உலக அளவில் நிறைய படங்களில் பார்த்த வாழ்ந்து கெட்ட கோச்சின் கதை , அதில் வழக்கமான அரசியல் பண்ணும் வில்லன் , மாஸ்டரின் பேரைக் காப்பாற்றும் மாணவி என கதையில் எதுவுமே புதுசாக இல்லாமல் போனாலும் கேரக்டர்களுக்குள் நம்மை கொண்டு செல்லும் டீட்டைளிங்கிலும், ( குறிப்பாக மாதவன் வரும் முதல் சீனிலேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை சொன்ன விதம் ) ப்ரெசெண்டேசனிலும் தான் மணிரத்னத்தின் மாணவி என்று நிரூபிக்கிறார் சுதா கோங்குரா . இது போன்ற கதைகளில் கிளைமேக்சில் ஒரு சண்டை வரும், அதில் முதலில் அடி வாங்கும் லீட் கேரக்டர் பிறகு எதிராளியை வீழ்த்தி ஜெயிக்கும் என்று தெரிந்த சீனாக இருந்தாலும் இதில் மதி ஜெயிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை நம்முள் விதைத்த விதத்தில் ஜெயிக்கிறார் இயக்குனர் . விளையாட்டுத் துறையில் இருக்கும் அரசியல் , ஆணாதிக்கம் , அதிகார துஷ்பிரயோகம் இவற்றை அழுத்தமாக சொன்ன விதத்திலும் , இரண்டு மணி நேர படம் முடிந்த பிறகும்  பிரபு , மதி இருவரையும் பற்றி நம்மை நினைக்க வைத்த வகையிலும் இறுதிச்சுற்று ஜெயிக்கும் ...

ரேட்டிங்  : 3.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 44 



15 January 2016

தாரை தப்பட்டை - THARAI THAPPATTAI - அடக்கி வாசிச்சிருக்கலாம் ...


டிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர் பாலா . அவருடைய படங்கள் ஒரே டெம்ப்ளேட்டுடன் இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் பார்க்கத் தூண்டி விடும் . இசைஞானியின் 1000 மாவது படம் என்பது படத்திற்கு மற்றுமொறு மைல்கல்...

தஞ்சாவூரில் தாரை தப்பட்டை குழு வைத்து நடத்தி வரும் சன்னாசி
( சசிகுமார் ) , அவரை தீவிரமாக ( துணிக்கடையில் என் ப்ரா சைஸ் சொல்லு மாமா என்று கேட்குமளவுக்கு ) காதலிக்கும் அந்த குழுவின் முக்கிய ஆட்டக்காரி சூறாவளி ( வரலக்ஷ்மி ) இவர்களின் காதல் , பிரிவு , கிராமியக் கலைஞர்களின் சரிவு இவற்றை தனக்கே உரிய பட்டவர்த்தனமான ஸ்டைலில் அதே சமயம் வில்லனின் சைக்கோத்தனமான டார்ச்சர்கள் மற்றும் க்ளைமேக்ஸில் வில்லனின் சங்கை அறுக்கும் ஹீரோவின் வெறியாட்டத்துடன் படத்தை முடித்து வீட்டுக்கு போனா முதல்ல குளிக்கனும்டா சாமி என்கிற அளவுக்கு நம்மை வெறியேற்றி அனுப்பி வைக்கிறார் பாலா ...

சசிகுமார் தனது குருவுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும் . மற்ற ஹீரோக்களை போல இவருக்கு பெரிய டார்ச்சர் இல்லை . கரகாட்டம் சம்பந்தப்பட்ட படமென்பதால் சசிகுமாரை ஆட வைத்து விடுவாரோ என்கிற பயத்திலிருந்து நம்மை விடுவித்ததற்கு நாமும் கூட நன்றி சொல்லலாம் . மற்றபடி முடிந்தவரை நன்றாக நடித்திருக்கிறார் சசிகுமார் . படத்தின் மையப்புள்ளியே வரலக்ஷ்மி தான் . கொஞ்சூண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு  குத்தாட்டம் போடுவதாகட்டும் , மாமா மாமா என்று சசிக்குமாரை கொஞ்சுவதாகட்டும் , சரக்கடித்து விட்டு ஜி.குமாரை கலாய்ப்பதாகட்டும் , சசி தன்னை மறுத்தவுடன் அழுவதாகட்டும் இந்த படத்துல பொண்ணு நடிக்கல , வாழ்ந்திருக்கு . ஆனால் எப்போதுமே சரக்கை போட்டு விட்டு கவுச்சியாக பேசும் அம்மணி ஒருத்தன் படுக்க கூப்புட்டவுடன் அவனை பொளந்து  எடுப்பதும் , துணிக்கடையில் வைத்து படு விரசமாக பேசுவதும் ஓவர் டோஸ் போலவே படுகிறது ...


வாழ்ந்து கெட்ட  கலைஞனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஜி.குமார். சசி திட்டியவுடன் ஒரு பக்கமாய் படுத்துக்கொண்டு அழும் இடம் அருமை . மற்றபடி ஒரு பாடலை மட்டும் பாட விட்டு இவர் பெருமையை முடித்துக்கொள்கிறார்கள் . இவர் எந்தவிதமான கலைஞர் என்பதற்கு பெரிய டீட்டைளிங் இல்லை . வில்லனாக நடித்திருக்கும் சுரேஷ் அந்த ரோலுக்கு பொருத்தமாக இருக்கிறார் . ஆனால் பாலா  வின் மற்ற வில்லன்களோடு ஒப்பிடும் போது ஒரு மாற்று குறைவு தான் . இன்னும் சொல்லப்போனால் கிராமியக் கலைஞர்கள் பற்றிய வாழ்க்கைப் பதிவில் சைக்கோத்தனமான இவருடைய கேரெக்டர் இடைச்செருகல் போல இருந்து நம்மை  நிறையவே இம்சிக்கிறது ...

பொதுவாக பாலா படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்கள் கூட நம்மை நிறைய கவர்வார்கள் . அதே போல இந்த படத்தில் வரும் அண்ணன் - தங்கை கேரக்டரும் , வயிற்றுப் பொழைப்புக்காக ரெட்டை அர்த்த வசனம் பேசி அவர்கள் பாடும் பாடலும் படம் முடிந்து நீண்ட நேரம் ஆகியும் நம் மனதை ஏதோ செய்கிறது . ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போடும் காயத்ரி ரகுராமும் , அவருடைய அம்மாவாக நடித்திருப்பவரும் கவனிக்க வைக்கிறார்கள் ...

ஹீரோ அறிமுக காட்சியில் இருந்து , க்ளைமேக்ஸ் சண்டை வரை இசைஞானியின் பின்னணி இசை படத்தில் ஒரு கேரக்டராகவே வலம் வருகிறது . மாணிக்கவாசகர் வரிகளில் பாருருவாய பாடல் உயிருக்குள் புகுந்து ஏதோ செய்கிறது . அந்த பாடலில் சசிகுமார் - வரு காதல் காட்சிகள் நெஞ்சை பிசைகின்றன . இந்த காட்சிகளில் இளையராஜா - பாலா இருவரும் தாங்கள் ஜீனியஸ் என்று நிரூபிக்கிறார்கள் . இசைஞானி யால் மட்டும் தான்  காதல் , சோகம் , கோபம் , ஏக்கம் என்று எல்லா உணர்ச்சிகளையும் இசையால்  நமக்கு தர முடியுமென்பதற்கு தாரை தப்பட்டை  மற்றுமொரு உதாரணம் ...

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை எந்தவித காம்ப்ரமைசும் இல்லாமல் நம்  முன்னே விரிய விடுவதற்கு பாலா வைப் போல யாராலும் முடியாது . படம் நெடுக நிறைய விரச வசனங்கள் இருந்தாலும் அதை குறையாக சொல்லாமல் படத்தோடு நம்மை ஒன்ற வைப்பதென்பது பாலா வால்  மட்டுமே முடியும் . பொழப்புக்கு ஆட்டம் , பாட்டை தவிர ஒன்றுமே தெரியாத கும்பலின் வாழ்க்கை சினிமா டேன்ஸ் வருகையால் எப்படி பாதிக்கிறது என்பதை தெளிவாகவே பதிய வைக்கிறார் பாலா . இப்படி படத்தின் பலத்துக்கு எப்படி அவர் காரணமோ பலவீனங்களுக்கு அவரே முழுப்பொறுப்பு ...


ஜட்டியை விட கொஞ்சம் பெரிய சைஸ் டவுசரைப் போட்டுக்கொண்டு ஆடும் கும்பல் சினிமா பாடலை வைத்து ரெட்டை அர்த்த வசனம் பேசி  ஆடுபவர்களை கேவலமாக பார்ப்பதும் , குடிகாரக் கும்பலுக்கு முன் கர்னாடக  சங்கீதம் பாடிவிட்டு விட்டு வரும் ஜி.குமார் தன்னை பெரிய சாதனையாளர் போல பேசிக்கொள்வதும் மனதில் ஒட்டவில்லை . முதலில் இது எந்த மாதிரியான கதை என்பதே விளங்கவில்லை . வாழ்ந்து கெட்ட கலைஞனின் கதையா ? தனது வாழ்வாதாரத்தை காக்க முடியாத ஆட்டக்காரனின் கதையா ? காதலியின் வாழ்க்கை சீரழிவிற்கு தெரிந்தோ தெரியாமலோ காரணமான காதலனின் கதையா ? பெண்களை வைத்து தொழில் பண்ணும் ஒரு கொடூரனின் கதையா ? ஆட்டம் என்ற பெயரில் உடலை வைத்து காட்சி விபச்சாரம் செய்யும் பெண்களின் கதையா ? என்பது பாலாவுக்கே வெளிச்சம் ...

ஆட்டம் , பாட்டத்தை வைத்து பொழைப்பு நடத்தும் கும்பலின் வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகளை மட்டும் வைத்து பாலா வின் அழுத்தமான ஸ்டைலில் படம் பண்ணியிருந்தால் நிச்சயம் தாரை தப்பட்டை  அதிரியிருக்கும் . அதில் தேவையில்லாமல் சைக்கோ வில்லனை விட்டு  வழக்கம்  போல வக்கிர எண்ணங்களை  காட்சிகளாக வகைப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் .  படத்தில் இப்படி  குறைகள் இருந்தாலும் இசைஞானியின் இசை , வருவின் நடிப்பு , மனதை  பிசையும் சில அழுத்தமான காட்சிகள் இவற்றால் படம் நம்மை பாதிக்காமல் இல்லை . ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களுடன் இணைந்து பணியாற்றி இப்படத்தில் சொந்த கதை ?வசனத்தில் இறங்கியிருக்கும்  பாலா  ஒரே ட்ராக்கில் பயணித்து தேவையில்லாத ஆபாசம் , வன்முறை இரண்டிலும் அடக்கி வாசித்திருந்தால்
( என்னதான் படத்துக்கு சான்றிதழ் கொடுத்திருந்தாலும் ) ஒருவேளை தாரை தப்பட்டை நன்றாக ஒலித்திருக்கும் ...

ரேட்டிங் : 2.75 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 41 

9 January 2016

புத்தாண்டே ...



புத்தாண்டே நீ
ஒவ்வோர் வருடமும்
வருகிறாய் போகிறாய்
நாங்களும் உன்னை
வைத்து நிறைய திட்டமிடுகிறோம் ...

அதை செய்து முடிப்பதற்குள்
நீ
மீண்டும் வருகிறாய்
நாங்களும் வெக்கமேயில்லாமல்
மீண்டும் திட்டமிடுகிறோம்
அதில் மீண்டும் தோற்கிறோம் ...

இப்படி விழுவதும்
எழுவதும் தானே
வாழ்க்கை - அது
கூட இல்லையென்றால்
வேறென்ன கேளிக்கை ?! ...

நாங்கள் மதத்தை சொல்லி
குண்டு வைப்போம்
சாதியை சொல்லி  சக மனிதனை
தள்ளி வைப்போம்
ஏரியை நிரப்பி
வீடு கட்டுவோம்
வெள்ளம் வந்தால்
கடவுளை திட்டுவோம்
வெப்பமயமாதல் பற்றி
நிறைய சொல்வோம்
பக்கத்து கடைக்கு கூட
பைக்கில் தான் செல்வோம் ...

காக்கைக்கும் தன் குஞ்சு
பொன் குஞ்சு போல
நீயும்  எங்கள் குறைகளை
மறந்து ஒவ்வொரு வருடமும்
வருகிறாய் .
உன்னை வெறுங்கையுடன் அனுப்பாமல்
நாங்களும் ஏதேதோ
பொய் சத்தியம்
செய்து கொடுக்கிறோம் ...

தனியாக பிறந்து
தனியாக மாயும்
இந்த மாய உலகில்
சேர்க்கும் பொன் பொருளை விட '
நாம் போன பின்
நமக்காக கண்ணீர் விட
சில இதயங்களை சேர்ப்பதே
சிறந்தது என
நாங்கள் எப்போது உணர்வோம்  ?! ...

( அப்பார்ட்மெண்ட்டில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது படித்தது )



1 January 2016

தமிழ் சினிமா 2015 - TAMIL CINEMA 2015


2015 தமிழ் சினிமா  வுக்கு நல்ல  காலம் எனலாம் . வழக்கத்தை விட அதிகமான படங்கள் வெற்றி பெற்றிருப்பதோடு காக்கா முட்டை , குற்றம் கடிதல் , உத்தம வில்லன் போன்ற வை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றன . மணிகண்டன் , அஸ்வின் போன்ற புதுமுக இயக்குனர்கள் ஜொலித்தாலும் மணிரத்னம் , ஜெயம் ராஜா , கவுதம் மேனன் போன்ற பழைய இயக்குனர்கள் தங்கள் முத்திரையையை அழுத்தமாக பதித்திருக்கும் வருடமிது . இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் பண்ணும் உலக நாயகன் மூன்று படங்கள் நடித்திருப்பது ரசிகர்களுக்கு விருந்து . ஒரு பக்கம் ஐ , பாகுபலி போன்ற பிரம்மாண்டங்கள் உலகத்தரத்திற்கு நம்மை கொண்டு சென்றாலும் காக்காமுட்டை , டிமாண்டி காலனி போன்ற சிறு பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றியை பெறவும் தவறவில்லை . 2015 இல் இயக்குனர்களாக நல்ல அறிமுகத்தை கொடுத்த விஜய் மில்டன்  , வேல்ராஜ் , இருவரும் இந்த வருடம் சோபிக்க தவறியது கற்பனை வறட்சியை காட்டுகிறது. ரீ மேக் படங்களையே எடுத்துக்கொண்டிருந்த ஜெயம் ராஜா வின் படம் தனி ஒருவன் இன்று பல மொழிகளில் ரீ மேக் செய்யப்படவிருப்பது தமிழ் சினிமாவின் வளர்ச்சி . மனோரமா , எம்.எஸ்.வி போன்ற சிறந்த கலைஞர்களின்  மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு . ஐந்து படங்களில் நடித்த நயன்தாரா இன்றைய ஹீரோயின்களில் அல்டிமேட் . மூன்று வருடங்களுக்கு பிறகு ரிலீசான வாலு கொஞ்சம் ஓடினாலும் நடிகர் சங்க தேர்தலில் தோல்வி , பீப் பாடல் சர்ச்சைக்கு பிறகு சிம்பு  தனது வாலை சுருட்டிக்கொண்டிருப்பார் என்று நம்பலாம் . என்னை அறிந்தால் , வேதாளம் படங்களின் வசூல் மூலம்  அஜித் கோலிவுட்டின் வசூல் கிங்  என மீண்டும் நிரூபித்திருக்கிறார் .

முதல் ஆறு மாத சினிமா அலசல்களை  பற்றி அறிய காண்க : அரையாண்டு தமிழ் சினிமா 2015


இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2015

கவர்ந்த படங்கள் 

  என்னை அறிந்தால் 
  டிமாண்டி காலனி 
  ஓ.கே.கண்மணி 
  36 வயதினிலே 
  காக்கா முட்டை 
  பாபநாசம் 
  பாகுபலி
  தனி ஒருவன்
  
மாயா
   குற்றம் கடிதல் 
  நானும் ROWDY தான்
  தூங்காவனம்

டாப் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸ் 

      
    என்னை அறிந்தால் 
   அனேகன்
   காஞ்சனா 2 
   காக்கிசட்டை 
   காக்கா முட்டை
   பாபநாசம் 
   பாகுபலி
   தனி ஒருவன்
   மாயா
   நானும் ROWDY தான்
   வேதாளம்


ப்ளாக்பஸ்டர்  : தனிஒருவன் 

டாப் டென் பாடல்கள்

1. என்னோடு நீ ( ஐ  )
2. மழை வர போகுதே ( என்னை அறிந்தால்   )
3. டங்கா  மாரி  ( அனேகன்  )
4. மெண்டல் மனதில்   ( ஒ.கே.கண்மணி  )
5. ஐம்  சோ கூல் ( காக்கிசட்டை )
6. காதல் கிரிக்கெட் ( தனிஒருவன்   )
7. கொஞ்சலாய் ( யட்சன் )
8. ஏண்டி ஏண்டி ( புலி )
9. உயிர் நதி ( வேதாளம் )
10.யார் அந்த  முயல்குட்டி ( பாயும் புலி  )

கவர்ந்தவர்கள் 

 கவர்ந்த படம் - காகாமுட்டை
 கவர்ந்த நடிகர் - கமல்ஹாசன்  ( உத்தமவில்லன்  )
 கவர்ந்த நடிகை - நயன்தாரா   ( மாயா / நானும் ரவுடி தான்  )
 கவர்ந்த குணச்சித்திர நடிகர் - சார்லி ( கிருமி  )
 கவர்ந்த குணச்சித்திர நடிகை - ஆஷா சரத்  ( பாபநாசம்   )
 கவர்ந்த காமெடி நடிகர் -  ரோபோ சங்கர்  ( மாரி  )
 கவர்ந்த வில்லன் நடிகர் -  அரவிந்த்சாமி ( தனிஒருவன்  )
 கவர்ந்த இசையமைப்பாளர் - ஆதி ( தனிஒருவன் )
 கவர்ந்த பின்னணி இசையமைப்பாளர் - ஜிப்ரான்  ( பாபநாசம்  )
 கவர்ந்த ஆல்பம் - என்னை அறிந்தால்   ( ஹாரிஸ் ஜெயராஜ்  )
 கவர்ந்த பாடல் - கொஞ்சலாய்  ( யட்சன்   )
 கவர்ந்த பாடகி -  ரேஷ்மா  ( காதல் கிரிக்கெட் )
 கவர்ந்த பாடகர் - ஹரிஹரன் ( தொடுவானம்   )
 கவர்ந்த பாடலாசிரியர் - தாமரை  ( உனக்கென்ன )
 கவர்ந்த வசனகர்த்தா - சுபா  ( தனிஒருவன்  )
 கவர்ந்த கதாசிரியர் - மணிகண்டன்  ( காக்காமுட்டை  )
 கவர்ந்த திரைக்கதையாசிரியர் - அஸ்வின் சரவணன்  ( மாயா )
 கவர்ந்த ஒளிப்பதிவாளர் -  சத்யன் சூரியன்  ( மாயா  )
 கவர்ந்த இயக்குனர் - ஜெயம் ராஜா ( தனிஒருவன் )


வசூல் ராஜாக்கள் 

அஜித் ( வேதாளம்  )
கமல்  ( பாபநாசம்   )
ராகவேந்திரா லாரன்ஸ்   ( காஞ்சனா 2  ) 
ஜெயம் ரவி ( தனி ஒருவன் ) 

ஏமாற்றங்கள்

மாசு 

புலி 
10 என்றதுக்குள்ள 

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...

தமிழ் சினிமா 2015 
Related Posts Plugin for WordPress, Blogger...