20 October 2012

பீட்சா - சாப்பிடலாம் ...


திகில் படங்கள் எனக்கு பிடிக்கும் , அதிலும் பீட்சா பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த " ப்ளாக் & வைட் " என்னை கவர்ந்த க்யூட் குறும்படம் என்பதால் பீட்சாவிற்கு எந்த வித தயக்கமும் இல்லாமல் சென்றேன் . படம் பார்ப்பவர்கள் நிச்சயம் பீட்சாவில் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் ...

பீட்சா டெலிவரி செய்யும் மைக்கேல் ( விஜய் சேதுபதி ) தன் லவ்வர் அனு
( ரம்யா நம்பீசன் ) வுடன் " போத்திக்கிட்டு படுத்தா என்ன படுத்துக்கிட்டு போத்தினா என்ன " என்கிற நினைப்பில் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டுகெதர் பாணியில் வசித்து வருகிறார் . பேய் , பூதம் , அமானுஷ்யங்களில் நம்பிக்கையுள்ள அனு மைக்கேலிடம் ஒரு நாள் அவற்றை நேரில் சந்திக்கும் தருணம் உனக்கும் வரும் என்கிறார் . அனு சொன்னது போல அந்த ஒரு நாளும் வருகிறது , அதன் பிறகு என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள் ...


விஜய் சேதுபதிக்கு இந்த படம் ஒரு மைல்கல் . மனிதர் பங்களாவிற்குள் தனியாளாக இருந்து கொண்டு பயப்படும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் .  காதல் காட்சிகளிலும் இவரது நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது . குள்ளநரி கூட்டத்திற்கு பிறகு காணாமல் போய் விட்டாரே என்று நான் வருத்தப்பட்ட ரம்யா நம்பீசன் சிறிய இடைவெளிக்கு பிறகு பீட்சாவில் நடித்திருக்கிறார் . அம்மணியின் உடம்பு அவரது கேரக்டர் போலவே கொஞ்சம் அப் நார்மலாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறார் ...

இரண்டு லீட் கேரக்டர்களை தவிர படத்தில் வரும் பிட்சா சாப் ஓனர் சண்முகமாக வரும் நரேன் , இரண்டு பிட்சா கடை ஊழியர்கள் , பேய் பங்களாவில் வரும் கணவன் - மனைவி என்று சின்ன சின்ன ரோல்களில் வருபவர்கள் கூட நம்மை கவர்கிறார்கள் , அதிலும் பேய்  பங்களாவில் குளியல் உடையுடன் முடியை துவட்டிக்கொண்டே வரும் பூஜா " பீட்சாவே ஆறிடும் " என்று விஜய் சேதுபதியிடம் சொல்லும் போது நம்மை சூடேற்றுகிறார் ...


படத்தின் ஒளிப்பதிவு உலகத்தரம் . லொக்கேசன்களை மாற்றாமல் நம்மை படத்தோடு ஒன்ற செய்வதற்கு , நடிப்பும்  திரைக்கதையும் போதாது , ஒளிப்பதிவும் மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார் கோபி அமர்நாத் . ரொமாண்டிக் சாங்கில் இசை , ஒளிப்பதிவு , படம் பிடித்த விதம் எல்லாமே அருமை . திகில் படம் என்பதற்காக வெறும் இரைச்சலை இசையாக கொடுக்காமல் தரமாக பின்னணி இசையை தந்திருக்கிறார்  சந்தோஷ் நாராயண் . சில காட்சிகளில் இவர் இன்னும் நன்றாக செய்திருக்கலாமோ என்கிற எண்ணமும் தோன்றாமல் இல்லை ...

த்ரில்லர் வகை படங்கள் எடுப்பதென்பது இரு பக்கமும் கூர்மையுள்ள ஆயுதத்தை கையாள்வது போன்றது . கொஞ்சம் பிசகினாலும் பார்ப்பவர்கள் கேலி செய்து சிரித்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது . பொதுவாக  நிறைய பேர் ஜாலி படத்தை பார்த்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன் என்று சொல்வதை போல பேய்  படத்தை பார்த்து பயந்து நடுங்கினேன் என்று சொல்வதற்கு விருப்பப்படுவதில்லை . தமிழ்  சினிமாவில் திகில் படங்களுக்கான ரசிகர்கள் குறைவு என்று கூட சொல்லலாம் .இது போன்ற   தடங்கல்கள் இருந்தும் தன் முதல் படத்தையே த்ரில்லர் வகை படமாக எடுத்ததற்கும் , அதில் தேவையில்லாமல்  பாடல்  , காமெடி , கிளாமர் போன்றவற்றை புகுத்தி எந்தவித காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் இரண்டு லீட் கேரக்டர்கள் மற்றும் ஒன்றிரண்டு லொக்கேசன்களை மட்டுமே வைத்துக் கொண்டு திரைக்கதையால் நம்மை கட்டிப்போட்டதற்கும்  இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் ...


அனு  கர்ப்பமானவுடன் " நாம ரெண்டு பேரும் கேர்லெஸா இருந்திட்டோமோ " என்று மைக்கேல் சொல்வது , மைக்கேல் நண்பர்களிடம் அனு  கர்ப்பமான விஷயத்தை பற்றி பேசும் போது அவர்கள் " வேணுமின்னா காண்டம் கம்பனி மேல கேஸ் போட்டுரலாம் " என்று சொல்லி கிண்டல் செய்வது போன்ற இடங்களில் வசனங்கள் க்யூட் ...


விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படம் பின்னர் கொஞ்ச நேரம் தொய்வாக நகர்கிறது . ரம்யா - விஜய் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் நன்றாக இருந்தாலும் யாருமில்லாத வீட்டில் இருவரும் திருமணம் செய்துகொள்வது , அவர்கள் அனாதை  ஆசிரம பின்னணி , பேய் பற்றி அவர்கள் பேசிக்கொள்வது போன்றவை பெரிதும் ரசிக்கும் படியில்லை ...

மூன்று வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வரும் அனுவை ஏன் யாருமே பாத்ததில்லை ?, அப்படியே பார்த்திரா விட்டாலும் போலீசில் ஒரு போட்டோ கூடவா கேட்க மாட்டார்கள், பேய் வீட்டிலிருந்து யார் பீட்சாவிற்கு ஆர்டர் கொடுத்தார்கள் என்பதை  ஏன் முதலாளி கண்டுகொள்ளவேயில்லை , கடைசியில் அனு என்ன ஆனாள் ? போன்ற கேள்விகள் நம்மை குடைந்தாலும் இயக்குனர் நம்மை படத்தோடு என்கேஜ் செய்துவிடுவதால் நாம் அந்த ஏன்களை கொஞ்சம் எட்டப்போடலாம்...

டேஸ்டாக இருக்கும் பீட்சாவை  இன்னும் கொஞ்சம்  பாஸ்டாகவும் டெலிவரி செய்திருக்கலாமோ என்று தோன்றினாலும் வரிசையாக தாண்டவம் , மாற்றான் என்று தேடிப்  போய் பார்த்து மாறி மாறி நொந்து போவதற்கு நிச்சயம் பீட்சா - சாப்பிடலாம் ...

ஸ்கோர் கார்ட் : 46


14 October 2012

ஆதிபகவன் - அசத்தும் இசை ...


ப்பாவை போலவே தன் ஒவ்வொரு படங்களுக்கிடையேயும் வித்தியாசம் காட்ட முயல்பவர் யுவன்ஷங்கர்ராஜா , அதனால் தான் அவருக்கு
" பருத்திவீரன் " ,  " பில்லா " இரண்டுமே சாத்தியமாகிறது . ஐந்து வருடங்களுக்கு பிறகு அமீர் - யுவன் கூட்டணியில் வந்திருக்கிறான் ஆதிபகவன்... வழக்கம் போல யுவனுடன் கை கோர்க்கும் முத்துக்குமாருக்கு பதில் ஆதிபகவனில்  சினேகன் சேர்ந்திருக்கிறார் . நீண்ட நாட்களுக்கு பிறகு கவிஞர் அறிவுமதியும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் . ஒரு முழு நீள ஹிந்திப்பாடல் மற்றும் தீம் சாங் உட்பட ஆறு பாடல்களுடன் அசத்தலாய் இருக்கிறது இசை ... பாடல்களின் வரிசை இதோ :

1.அகடம் பகடம்...
   மோஹித் சௌஹான்
   பாடல் : மனோஜ்

    முழு நீள  ஹிந்திப்பாடல் . கேட்டவுடனேயே தாளம் போட  வைக்கிறது. இசைக்கு மொழி தேவையில்லை என்று நிரூபித்திருக்கும் பாடல் ...

2.பகவான் ராப் சாங் ...
   சத்யன்

     ராப் ஸ்டைல் தீம் சாங் . பின்ணணி இசையுடன் வரும் பகவான் ஹம்மிங் முணுமுணுக்க வைக்கிறது ...

3.ஐசலாம் ஐசலாம் ...
   மானசி ஸ்காட் / ராகுல் நம்பியார்
   பாடல் : சினேகன்

     மானசியின் மயக்கும் குரலில் வரும் பார்ட்டி சாங் . யுவன் தனக்கு பிடித்த தளத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார் ...

4.காற்றிலே நடந்தேனே ...
   உதித் நாராயண் / ஸ்வேதா பண்டிட்
   பாடல் : அறிவுமதி

     தனது பாடல்களில் ஆங்கிலத்தை கலக்காத அறிவுமதியின் அழகான வரிகள் , ஆனால் அதை உதித்தை விட்டு கொலை செய்திருக்க வேண்டாம் . உதித் அடித்தொண்டையில் பாடிய மற்ற பாடல்களை போலவே இதுவும் ஹிட் ஆகும் ...

5.ஒரு துளி விஷமாய் ...
   ஷரிப் சபரி / ஸ்ரேயா கோஷல்
   பாடல் : சினேகன்

     படத்தின் மெலடி டூயட் சாங் . இசைக்காகவும் , ஸ்ரேயாவின் குரலிற்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ...

6.யாவும் பொய்தானா...
   மதுஸ்ரீ
   பாடல் : சினேகன்

     கஜல் ஸ்டைலில் வரும் காதல் தாப பாடல் . பில்லா 2 வில் வரும் " இதயம் " பாடலை நினைவுபடுத்தும் கம்போசிங் .  பாடலில் கவிஞர் சினேகன் தெரிகிறார் ...
     

     
 
 

13 October 2012

மாற்றான் - மயக்கியிருப்பான் ...


சமீபத்தில் தான் சாருலதா வந்திருந்தாலும் இரண்டு வேடங்களில் சூர்யா நடித்திருப்பதும் , ஏற்கனவே இவரை வைத்து ஹிட் கொடுத்த கே.வி.ஆனந்த் படத்தை இயக்கியிருப்பதும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தன ... இடைவேளை வரை அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததால்  " மாற்றான் - ஏமாற்றான் " என்று சொல்லியிருக்க வேண்டிய படம் அதன் பிறகு ஜவ்வாக இழுத்ததால் " மாற்றான் - மயக்கியிருப்பான்  " என்று  சொல்ல வைத்துவிட்டது ...

மரபணு விஞ்ஞானி ராமச்சந்திரனின் ( சச்சின் கண்டேல்கர் ) சோதனை முயற்சியால் விமலன் - அகிலன்  ( சூர்யா ) இருவரும் ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களாக பிறக்கிறார்கள் , வளர்கிறார்கள் ... வெற்றிகரமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் அப்பாவின் எனர்ஜி ஆன் பால் பவுடரில் ஏதோ தவறிருப்பதாக விமலனுக்கு தெரிய வர , அதை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் அவர் உயிர் துறக்கிறார் ... விமலன் விட்டதை அகிலன் தொடர்ந்து வெற்றி கண்டாரா என்பதை நீட்டி முழக்கி சில சீன்களில் ஆவ் என்று கொட்டாவி விட வைத்து சொல்லியிருக்கிறார்கள் ... 


இது போன்ற கதைகளை சூர்யாவை மனதில் வைத்தே செய்ய முடியும் என்பதே சூர்யாவின்  சக்சஸ் ... வேறு வேறு சீன்களில் டபுள் ஆக்டிங் செய்து விடலாம் , ஆனால் இடைவேளை வரை ஒன்றாக இருந்து கொண்டு இருவருக்குமிடையே வித்தியாசம் காண்பிப்பது என்பது மிகவும் கடினம் , அதை சிறப்பாக செய்திருக்கிறார் சூர்யா ... ஷாப்டான விமலனை அகிலன் கலாய்க்கும் இடங்கள் கல கல ... தியேட்டரில் காஜலுக்கு சூர்யா கிஸ் அடிக்கும் சீன்  உட்பட சில இடங்களில் சி.ஜி பல்லை இளிக்கிறது ... ரெட்டையர்களாக இருந்த போது ரசிக்க  வைத்த சூர்யா ஓன் மேன் ஆர்மியாக மாறிய பிறகு நம்மை கவராமல் போனது திரைக்கதையின் ஓட்டை ... 

" மோதி விளையாடு " , " பொம்மலாட்டம் " படங்களின் தோல்வியால் காணாமல் போயிருக்க வேண்டிய காஜல் அகர்வால் " மஹதீரா  " வெற்றியால் மீண்டு வந்திருக்கிறார்... வெறும் பாடல்களுக்காக  மட்டும் இல்லாமல் படம் முழுவதும் மொழிபெயர்ப்பாளராக இவர் வருவது சிறப்பு ... உடலுடன் ஒட்டிய உடைகளுடன் வந்து உஷ்ணமும்  ஏற்றுவது கூடுதல் சிறப்பு ... 


கோடீஸ்வர விஞ்ஞானி தோற்றத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் சச்சின் ... அதை விட கச்சிதமாக பின்னணி குரல் அவருக்கு பொருந்தியிருக்கிறது ... இது போன்ற ஹிந்தி நடிகர்களை தமிழில் வாழ வைத்துக்கொண்டிருப்பதே இந்த குரல்கள் தானே ... இவர் மேல் உண்டான சஸ்பென்சை இடைவேளை வரை தக்க வைத்திருந்தாலும் , அது உடைந்த பிறகு ஓவர் ரியாக்ட் செய்ய விட்டு கெடுத்து விட்டார்கள் ... இவருக்கும் , சூர்யாவிற்கும் இடையேயான க்ளைமேக்ஸ் சீன்கள் எல்லாம் 80 களின் உச்சம் ...  


படத்தில் பணியாற்றியிருக்கும் ஒளிப்பதிவாளர் சௌந்தரராஜன் , எடிட்டர் அந்தோணி , சி.ஜி சூப்பர்வைசர் ஸ்ரீநிவாஸ் மோகன் , ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் ஆகியோரது உழைப்பு அபாரமானது , அதிலும் தீம் பார்க் ராட்டினங்களுக்கு இடையே நடக்கும் சண்டைக்காட்சியை பாராட்ட வார்த்தைகளில்லை ... இவர்கள் இல்லாமல் இது போன்ற படம் சாத்தியமாகியிருக்காது , ஹான்ட்ஸ் ஆப் ... 

" கால் முளைத்த " , " தீயே தீயே " பாடல்களால் தாளம் போட வைத்தாலும் பின்னணி இசைக்கு ஹாரிஸ் பெரிதாய் பிரயத்தனப்படவில்லை ... முதல் பாதியில் வசனங்களிலும் , இயக்குனருடன் இணைந்து அமைத்த திரைக்கதையிலும் எழுத்தாளர்கள் சுபா ( சுரேஷ் - பாலகிருஷ்ணன் ) நன்றாக தெரிகிறார்கள் ... இரண்டாம் பாதி தான் சொல்லிக்கொள்ளும்படியில்லை ... 

மார்கெட் ஆகக் கூடிய கதை , சூர்யாவின் நடிப்பு , சஸ்பென்சுடன் நகரும் முதல் பாதி , டெக்னிக்கல் ஆஸ்பெக்ட்ஸ் இவற்றால் மாற்றான் மனதில் பதிகிறான் ... அதிலும் சூர்யாக்களுக்குள் நடக்கும் சண்டை , ராட்டின சண்டைக்காட்சியின்  முடிவில் அடிபட்டுக் கிடக்கும் ஒரு சூர்யாவை காப்பாற்ற மற்றொரு சூர்யா போராடும் காட்சி , இரண்டு சூர்யாக்களின்  குணாதிசயங்களையும் ஒரு பாடலிலேயே காட்டிய விதம் இவைகளெல்லாம் சிலிர்க்க வைக்கின்றன ... 


ஒரு நாவலாக படிப்பதற்கு சூப்பரான கதையை சினிமாவுக்கேற்ற படி திரைக்கதையாக்குவதில் ஏற்பட்ட சறுக்கல் , என்ன தான் விஞ்ஞானியின் முயற்சி என்றாலும் ஒரே இதயத்தை வைத்துக்கொண்டு இருவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியுமா என்று நமக்கு தோன்றுகிற கேள்வி , எனர்ஜி ஆன் பால் பவுடரை ரஷ்யாவில் தொடர்ந்து ஏழு வருடங்கள் உபயோகித்தால் ஏற்படும் அவலங்களை பட்டியலிட்டு விட்டு இந்தியாவில் பத்து வருடங்களுக்கும் மேலாக அதை உபயோகப்படுத்துபவர்களுக்கு என்ன ஆனது என்பதை கூட திரைக்கதையில் காட்டாத அலட்சியம் , வில்லன் இங்கிருக்க துப்பறிகிறேன் பேர்வழி என்று சூர்யாவை வெளிநாட்டில் அலையவிட்ட திரைக்கதை , 

தன் ரகசியங்களை அம்பலப்படுத்தும் பென் டிரைவிர்க்காக எத்தனையோ கொலைகள் செய்யும்  ஒருவன் அதை ஏதோ லாண்டரி பில் வைப்பது போல சர்வ சாதாரணமாக ஆபீசில் வைப்பது , அதை எடுத்துக்கொண்டு உக்ரைன்  செல்லும் சூர்யா அந்த நாட்டு ராணுவ அதிகாரி தலையிலேயே துப்பாக்கியை வைத்துக் கொண்டு சென்டிமென்ட் டயலாக் பேசுவது உட்பட படத்தில் வரும் எக்கச்சக்க லாஜிக் சொதப்பல் சீன்கள் , நீண்டு கொண்டே போகும் க்ளைமேக்ஸ் இவைகளெல்லாம் மாற்றானை பார்த்து நம்மை ஏமாற வைக்கின்றன ... இரண்டாம் பாதியின் நீளத்தை கம்மி செய்து சஸ்பென்சை நீட்டியிருந்தால் நிச்சயம் மாற்றான் மயக்கியிருப்பான் ... 

ஸ்கோர் கார்ட் - 42 


7 October 2012

டி 20 - இறுதிப்போட்டி ...


செப் 18 இல் ஆரம்பித்த டி 20 உலககோப்பை கிரிக்கெட் தொடர்  இன்று நடைபெறும் இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டியோடு முடிவடைகிறது ... இலங்கை இறுதி வரை வரும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் மேற்கிந்திய தீவுகள் ஆஸ்திரேலியா வை மிக அபாரமாக ஜெயித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது டி 20 யில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது ...

இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் போட்டி நடப்பது சாதகமாக இருந்தாலும் , க்ரிஸ் கெயில் , பிராவோ , பொல்லார்ட் போன்ற ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய அதிரடி ஆட்டக்காரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருப்பதால் எதுவும் நடக்கலாம் ... இன்றைய ஆட்டம் மலிங்கா , மென்டிஸ் உள்ளிட்ட இலங்கை பந்து வீச்சாளர்களுக்கும் , மேற்கிந்திய தீவுகளின் மட்டையாளர்களுக்கும் இடையேயான போட்டியாகவே இருக்கும்.

2009 இல் டி 20 கோப்பையை தவறவிட்ட இலங்கை அணியும் , டி 20 இறுதி போட்டிக்கு ஒரு முறை கூட தகுதி பெற்றிராத மேற்கிந்திய தீவுகள் அணியும் இந்த முறை உலக கோப்பைக்காக மிக கடுமையாக போராடும் என்பதில் ஐயமில்லை ... ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் போனது துரதிருஷ்டமே ... ஒப்பனர்களின் ஆட்டம் , தோனியின் சில முடிவுகள் , சேவாக் - தோனி பிரச்சனை , எதிரணிகளை மிரட்டாத வேகப்பந்து வீச்சு போன்றவையும் இந்தியாவின் வெளியேற்றத்திற்கு காரணமாய் அமைந்ததையும் நாம் மறுக்க முடியாது ... டி 20 யை பொறுத்தவரை இந்தியாவிற்கு ஒரே தீர்வு இள ரத்தங்களே ...

ஐ.பி.எல் போட்டிகளை நடத்தும் இந்தியா 2007 க்கு பிறகு நடந்த மூன்று டி 20 உலக கோப்பைகளிலும் ஒன்றில் கூட அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் போனது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம் ... தோனியை டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து தூக்க வேண்டுமென்கிற கோரிக்கையும் இப்போது வலுத்து வருகிறது ... தோனி  மட்டுமல்லாமல் ப்ளேச்சர் கோச்சாக நீடிப்பதும் தேவை தானா ? என்ற கேள்வியும் மேலோங்கி நிற்கிறது ...

நமது அணி வெற்றி பெறாத சோகத்தை ஓரங்கட்டி விட்டு இன்று இரண்டு தீவுகளுக்கிடையே நடக்கும் இறுதிப் போட்டியை பார்த்தோமானால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற வேண்டுமென்பது என் விருப்பம் ... 75 களில் கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்த அணி பல வருடங்களாக  சறுக்கலில் இருந்து விட்டு  இப்போது தான் முன்னேறி வந்திருக்கிறது ... கிரீஸ் கெயில் தன்னம்பிக்கையோடு பேசுவதை பார்க்கும் போது அந்த அணி வெற்றி பெறும் என்பது போல தோன்றினாலும் நடப்பது டி 20 என்பதால் எதையும் உறுதியாக சொல்லிவிட முடியாது ... நீங்கள் எந்த அணி வெற்றி பெறும் என நினைக்கிறீர்கள் ? உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யவும் ...


4 October 2012

நல்லதோர் வீணை குறும்படம் - 50000 ஹிட்ஸ் ...


" நல்லதோர் வீணை " குறும்படத்தை யூ டியூபில் அப்லோட் செய்து ஐந்து மாதங்களுக்குள் ஐம்பதாயிரம் ஹிட்ஸ்களை கடந்திருப்பதை பார்க்கும் போது  சமூக அக்கறையுள்ள நல்ல குறும்படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என்பது புலனாகிறது ... இதே போன்ற தரமான படங்களையே கொடுக்க வேண்டுமென்கிற அக்கறையையும் , பொறுப்புணர்வையும் இந்த ஆதரவு அதிகரித்திருக்கிறது ...

இந்த நேரத்தில் எனக்கு இது வரை ஆதரவளித்து வரும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் , யூ டியூபில் குறும்படத்தை கண்டுகளித்ததோடு தங்கள் கருத்துக்களின் மூலம் உற்சாகம் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் , சமூக வலைத்தளங்கள்  மூலம் என்னை உற்சாகப்படுத்திய அன்பர்களுக்கும் , எனது குறும்படம் பற்றிய விமர்சனம் மற்றும் தகவல்களை வெளியிட்ட மூன்றாம்கோணம் ,  தமிழ் மீடியா , தினமணி.காம் போன்ற வலைப்பத்திரிக்கைகளுக்கும் , குறிப்பாக குறும்படத்தை ஒளிபரப்பு செய்த ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு , இந்த குறும்படத்தில் பணியாற்றிய  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் ...

" நல்லதோர் வீணை " குறும்படத்தை கீழே பார்க்கவும் ...

Related Posts Plugin for WordPress, Blogger...