30 August 2016

ஆகஸ்ட் மாத படங்கள் - AUGUST TAMIL MOVIES ...



டுத்தடுத்த சொந்த வேலைகள் காரணமாக ஜோக்கர் , தர்மதுரை இரண்டையுமே தாமதமாக இப்பொழுது தான் பார்க்க முடிந்தது . இதில் ஜோக்கர் பார்க்க வேண்டிய படம் , தர்மதுரை பார்த்தால் பாதகமில்லை ரக படம் ... 

ஜோக்கர்

வட்டியும் முதலும் மூலம் வசீகரித்த ராஜு,முருகன் , குறைவான படங்களே நடித்திருந்தாலும் ஒவ்வொன்றிலும் நடிப்பில் அவ்வளவு வித்தியாசம் காட்டும் குரு சோமசுந்தரம் இருவரின் காம்பினேஷனில் கழிப்பறை கட்டுவதில் கூட நடக்கும்  ஊழலை  சீரியஸாக கலாய்க்கிறான் ஜோக்கர் . ஷங்கர் கையில் இந்த கதை கிடைத்திருந்தால் மாஸ் ஹீரோவை வைத்து மிரட்டியெடுத்து பக்காவாக கல்லா காட்டியிருப்பார் . அது போலல்லாமல் யதார்த்தமாக நிகழ்கால அரசியல் நடப்புகளை கொஞ்சம் மெதுவாக கடந்து போனாலும் நெகிழ வைக்கிறான் ஜோக்கர் . " பகத்சிங்கை அவுத்து விட்டுடுவேன் பாத்துக்க " என்று குரு சொல்லும் போதெல்லாம் அதிகார வர்க்கம் மேல் ஒரு இனம் புரியாத கோபம் வந்து போகிறது . " வாழறது தான்  கஷ்டம்னா இனி பேளரதும் கஷ்டமா " போன்ற ஷார்ப் வசனங்களால் படம் நெடுக விளாசுகிறார் இயக்குனர் . ஜோக்கர் செய்யும் குளறுபடிகள் முதல் பாதியில் ஒரு லெவெலுக்கு மேல் சலிப்பை கொடுக்க ஆரம்பிக்கும் போது அவர் ஏன் அப்படி ஆனார் என்பதற்கான பிளாஷ்பேக் நம்மை உறைய வைக்கிறது . குறிப்பாக மனைவிக்காக போலீசிடம் மன்றாடும் இடங்களில் ஜோக்கர் அழ வைக்கிறான் . நேரில் நடக்கும் அநியாயங்களை பார்த்து தட்டிக் கேட்க முடியாமல் மனதுக்குள் பொங்கும் பெரும்பான்மை மக்களுக்கு அதை ஹீரோ திரையில் செய்யும் போது ஒரு அற்ப சந்தோசம் கிடைக்கிறது . அப்படி ஒரு சந்தோசம் இந்த படத்தில் கிடைக்காவிட்டாலும் ஓவர் செண்டிமெண்ட் போட்டு பிழியாமல் அளவோடு அதை கையாண்டிருப்பது மகிழ்ச்சி . படத்தை இப்படி முடித்திருக்க வேண்டாமோ என்ற எழும்பும் கேள்வியை  பில்டர் காபி குடித்து முடித்தவுடன் நாக்கில் ஒட்டிக்கொள்ளும் கசப்பை போல படம் முடிந்தும் மனதில் நிற்கும் க்ளைமேக்ஸ் நீக்குகிறது .  எல்லா அரசியல் கட்சிகளையும் சாடுவது போல காட்டினாலும்  இயக்குனர் செலெக்ட்டிவாக இருந்தது போலவே படுகிறது . " நாளை மீண்டும் ஒரு போராட்டம் வாருங்கள் தோழரே " என்று விளக்கு வெளிச்சத்தில் இசை அழைக்கும் போது  பல போராட்டங்கள் நடத்திய தோழர்களே  அரசியல் களத்தில் அதிகார வர்க்கத்தோடு கை கோர்த்ததை பார்த்துப் பழகிப் போன நமக்கு புளிக்கத்தான் செயகிறது . தையிரியமாக அரசியல் பேசி முடிவில் நம்மை நெகிழ வைக்கும் ஜோக்கர் ஒரு ஹீரோ ...

தர்மதுரை 

தான் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர்  இன்று பெரிய ஹீரோவானவுடன் அவரை வைத்து மறுபடியும் படம் எடுப்பது என்பது கயிறு மேல் நடப்பது போலத்தான் . தனது ஸ்டைலில் இருந்து மாறுபடாமல் அதே சமயம் ஹீரோவையும் விட்டுக்  கொடுக்காமல்  அதை தர்மதுரை யில் திறம்படவே செய்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி . கிராமத்திலிருந்து படித்து முதல் தலைமுறை டாக்டராகும் தர்மதுரை ( விஜய்சேதுபதி ) குடிகாரனாக அலைந்து அண்ணன் தம்பிகளை ஊரிலே அசிங்கப்படுத்துகிறார் . அதற்கான காரணத்தை காதல் கலந்து உணர்வுகளோடு சொல்வதே படம் . விஜய்சேதுபதி ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கான காரணம் நம்மை ஒன்ற செய்யும் அளவுக்கு திரைக்கதையில் வேகம் இல்லை . குடும்பம் , கல்லூரி இவற்றில் நடக்கும் சம்பவங்களை நேட்டிவிட்டியோடு பதிய வைத்ததில் வெற்றி பெறுகிறார் இயக்குனர் . கல்லூரியில் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் தமனா & கோ கைபேசி யில் உலகம் இருக்கும் இந்த காலகட்டத்தில் தொடர்பே  இல்லாமலிருப்பது என்ன தான் சாக்கு போக்கு சொன்னாலும் மழுப்பல் . ராஜேஷ் மூலம் சொல்லப்படும் கருத்துக்கள் ஆரோக்கியம் . அண்ணே என்று கூறி விட்டு விஜய்சேதுபதி பெண் பார்க்க வந்தவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் மாமா வுக்கு தாவுவது யதார்த்தம் . பெரிய பெண் எழுத்தாளர் என்று பில்டப் செய்து விட்டு அவரை அந்த முடிவுக்கு தள்ளியிருப்பது அபத்தம் . கிராமத்து அம்மாவாக ராதிகா நிறைவு . யுவன் இசையில் பாடல்கள் அருமை . மொத்தத்தில் திரைக்கதையில் அப்படியிப்படி தள்ளாடும் தர்மதுரை மகா பிரபுவுமில்லை , கஞ்சனுமில்லை ...


Related Posts Plugin for WordPress, Blogger...