29 July 2014

தெருக்கூத்து - 1 ...


சினிமா செய்திகள் மட்டுமின்றி வாராவாரம்  நாட்டு நடப்புகளை சும்மா ஒரு அலசு அலசலாம் என்று எனக்கு ஏடாகூடமாக தோன்றியதன் விளைவே இந்த தெருக்கூத்து   . இது வரை என் கிறுக்கல்களை பொறுத்துக்கொண்ட மக்கள் இனிமேலும் எதையும் தாங்கும் இதயத்தோடு அதை தொடர்வார்கள் என்கிற நம்பிக்கையில் ...

ரயில்வே பட்ஜெட்டால் நடுத்தர மக்களுக்கு ஏறியிருந்த உஷ்ணம் பொது பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வருமான வரி சலுகைகளால் தணிந்திருக்கும் என்று நம்பலாம் . புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால் சென்னையிலிருந்து மதுரைக்கு நான்கு மணி நேரத்துக்குள் செல்லலாம் என்கிறார்கள் . எல்லாம் சரி அதுலயும் வித்அவுட்ல போவ முடியுமா ? . கிறிஸ்துவம் எனது மதம் , இந்து எனது கலாச்சாரம் என்று , கிறிஸ்துவ மதம் வந்து 2000 வருடங்கள் தான் ஆகிறது ஆனால் இந்து கலாச்சாரம் இங்கே 5000 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது என்று கோவா துணை முதல் மந்திரி பேசியிருப்பது பிரச்சனையை கிளப்பியிருக்கிறது . நல்ல வேளை  இதை  சொன்னவர் ஒரு கிறிஸ்துவர் , அதுவே இந்துவாக இருந்திருந்தால் ?! ...

28 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை ஜெயித்தது போலவே லார்ட்ஸ் மைதானத்திலும் தோனி தலைமையிலான கிரிக்கெட் அணி டெஸ்ட் மேட்சை ஜெயித்திருக்கிறது . நீண்ட நாட்கள் சோபிக்காமல் இருந்த இஷாந்த் சர்மா-விக்கெட்டுகளை வீழ்த்தி மேன் ஆப் தி மேட்ச் அவார்ட் வாங்கிய  சந்தோஷம் வடிவதற்குள் அவர் இஞ்சூரி காரணமாக அடுத்த மேட்சில் ஆடவில்லை . பின்னிக்கு பதில் அஸ்வினை எடுப்பார்கள் என்று பார்த்தால் பேட்டிங்கை வலுப்படுத்த ரோஹித்தை எடுத்திருக்கிறார்கள் . கடந்த முறை ஏற்பட்ட  4-0 தோல்விக்கு பழி தீர்க்கும்  வகையில் தோனி டீம் சீரியசை  ஜெயிக்க வாழ்த்துவோம்  .  கங்குலி ஜெயித்த பிறகு சட்டையை கழட்டி சுற்றியது போல தோனி பேண்டை  கழட்டி சுத்துவாரோ ? ! ...

போன் பேசிக்கொண்டே ரயில்வே கிராசிங்கை கவனிக்காமல் ஸ்கூல் வேனை ரயிலோடு மோதியதில் அந்த முட்டாள் டிரைவர் உட்பட அனைவரும் பலியான சம்பவம் நெஞ்சை உலுக்கியது . கால் சென்டர்களில் வேலை பார்ப்பவர்களிடமிருந்தே நிர்வாகம் வேலை நேரங்களில் செல்போனை வாங்கி வைத்துக் கொள்ளும்  போது பல உயிர்களுடன் விளையாடும் இது போன்ற சம்பவங்களை தடுக்க  எல்லா டிரைவர்களிடமிருந்தும் பயண நேரங்களில் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டாலென்ன ? .ஆறு வயது சிறுமி ஸ்கூலில் வைத்து கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது . அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரூ மக்கள் நடத்திய அமைதி போராட்டம் மனதை கவர்ந்தது . பள்ளிக்கூடங்களிலேயே இந்த நிலைமை என்றால் பிள்ளைகளை எங்கு தான் அனுப்புவது ? ...

அரசு பேருந்தில் ஊருக்கு சென்ற போது மேல்மருவத்தூரில் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்கள் வண்டி ஊர்ந்து தான் சென்றது . விசாரித்தால் ஆடி அம்மாவாசையை முன்னிட்டு கோவிலில் பயங்கர கூட்டம் என்று சொன்னார்கள்  . கோவிலுக்கு வருபவர்களுக்காக  ஏதாவது நடை மேம்பாலம் கட்டி விட்டால் பக்தர்கள் மட்டுமல்லாமல் பயணிகளும் பிழைப்பார்கள் . நிர்வாகம் கவனிக்குமா ?! . டாஸ்மாக்கை தவிர மற்ற எல்லா அரசு திட்டங்களுக்கும் அம்மா பெயரை வைத்து நன்றாகவே பிராண்டிங் செய்கிறார்கள் . அம்மா உணவகம் , குடிநீரை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரிகளை கருத்தில் கொண்டு அம்மா வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் . மற்றதைப் போலவே அதுவும் வெற்றி பெற வாழ்த்துக்கள் . அம்மான்னா சும்மா இல்லேடா! ...

வேலையில்லா பட்டதாரி என்றவுடன் தனுஷ் நியாபகத்திற்கு வருகிறார் . தான் வளர்த்து விட்ட சிவ கார்த்திகேயனுடன்  அவருக்கு ஏதோ லடாய் என்கிறார்கள் . கொடுக்கல் வாங்கலில் ஏதாவது பிரச்சனையோ ?. இருந்து விட்டுப் போகட்டும் . கூத்தாடிகள் ரெண்டுபட்டாலும் ஊருக்கு கொண்டாட்டம் தானே ! . திரைப்படமாக வி.ஐ.பி யை விட சதுரங்க வேட்டை நன்றாக இருந்தாலும் தனுஷின் மாஸ் , அணிருந்தின் இசை இரண்டுமே வி.ஐ.பி க்கு நல்ல வசூலை கொடுத்திருக்கின்றன . சதுரங்க வேட்டை நன்றாக இருந்தாலும் அதற்கு ஆனந்த விகடன் 52 மார்க்குககளை அள்ளிக்  கொடுத்திருப்பது ஆச்சர்யம் தருகிறது . ஆனால் ராஜா ராணி , கடல் , எதிர்நீச்சல் என்று தங்களால் வாங்கப்பட்ட படங்களுக்கு விஜய் டி.வி விருதுகளை அள்ளிக் கொடுத்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை . விஜய் , சூர்யா இருவரும் வந்திருக்க மேடையில் டி.டி யோ வராத அஜித்துக்கு தல , தல என்று வழிந்தது இருவருக்கும் வயிற்றெரிச்சலை கிளப்பியிருக்கும் . ரஜினிக்கு அடுத்து  சூப்பர் ஸ்டார் பட்டத்த  யாருக்கு கொடுத்தாலென்ன ! தல போல வருமா ?!...

மீண்டும் கூடுவோம் ...



22 July 2014

சதுரங்க வேட்டை - SATHURANGA VETTAI - சலிக்காத ஆட்டம் ...


ண்டமூரி வீரேந்திரநாத் மலையாளத்தில் எழுதி தமிழாக்கம் செய்யப்பட நாவல் பணம் . அதில் கதை நாயகன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் . தன் அம்மாவின் இறுதி சடங்கை செய்யக் கூட பணம் இல்லாத நிலையில் எப்படியாவது பணம் சம்பாதிக்க முடிவு செய்து எல்லா குறுக்கு வழிகளையும் கையாண்டு பெரிய பணக்காரனாகிறான் . அவன் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள் . கடைசியில் வழக்கம் போல பணம் பெரிதல்ல என உணர்ந்து திருந்துகிறான் . இந்த கதையின் நாட்டை எடுத்துக்கொண்டு ஹீரோவாக நட்டை ( நடராஜ் ) வைத்து எம்.எல்.எம் , ஈமு கோழி , ரைஸ் புல்லிங் என நாட்டு நடப்புகளையே திரைக்கதையாக்கி தொய்வில்லாத படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் வினோத் ...

பாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளரான நடராஜ் தமிழில் முதல் படமான நாளை மூலம் பேசப்பட்டாலும் அதன் பிறகு ஹீரோவாக சோபிக்கவில்லை . ப்ரேக் எடுத்து வந்திருந்தாலும் நடிகனாக இந்த படம் அவருக்கு நல்ல திருப்புமுனை. எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஏமாற்றுவது , போலீசிடமே " நான் ஏமாத்தல் அவங்க தான் ஏமாந்தாங்க "என்று மடக்குவது , மரண அடி வாங்கிய பிறகும் பணத்தை பற்றி மூச்சு விடாமல் இருப்பது என காந்தி பாபு ( சத்திய சோதனை ) வாகவே கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார் நட்டு ...


நாயகி இஷாரா நாயர் அமைதியாக வந்து மனதை அள்ளுகிறார் . ஏமாத்துறது தப்பில்லையா சார் என்று அப்பாவியாக கேட்கும் போது அட அட . பாம்புக்கு விஜய் என்று பெயரிட்டு பத்திரமாக பார்த்துக் கொள்ளும் செட்டியார் இளவரசு , தூய தமிழில் பேசும் தாதா , கர்ப்பிணியான நாயரை தூக்கிக்  கொண்டு ஓடும் வில்லனின் அடியாள் திலகா என்று சின்ன சின்ன பாத்திரங்களில் வரும் அனைவரும் கவர்கிறார்கள் . ஒளிப்பதிவு , எடிட்டிங் இரண்டுமே படத்திற்கு பக்க பலங்கள் . பாடல்கள் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லாவிட்டாலும் பி.ஜி பரவாயில்லை ...

தினசரி பத்திரிக்கைகளில் பார்த்த விஷயங்கள் தான் என்றாலும் அதை வெறும் ஹீரோவை ஏற்றி விடும் டெம்பளேட்டுகளாக எடுக்காமல் டீட்டைலிங்காக சொன்ன விதத்தில் தனித்து நிற்கிறார் இயக்குனர் .  ஏமாறுபவர்களின் பேராசை தான் ஏமாற்றுபவர்களுக்கு மூலதனம் என்பதை செவிட்டில் அடித்து சொல்கிறது படம் . அதிலும் குறிப்பாக நகைக் கடை  ஃப்ராட் படத்திற்கு ஹைலைட் ...

" மிருகம் கூட பசிச்சா தான்  சாப்பிடுது ஆனா மனுஷன் " , " சாப்பிடாம பசியோட அலஞ்சிருக்கீங்களா "  போன்ற வசனங்கள் ரொட்டீனாக இருந்தாலும்  " தன் மேல நம்பிக்கையில்லாதவன் தான நாளைய பத்தி யோசிப்பான் " , " ஏமாத்துறவங்க குரு , ஏன்னா அவங்க தான் வாழ்க்கைய கத்துத் தராங்க " மாதிரி  வசனங்கள் பளிச் .  தேவைக்கேற்ப கழட்டி விடப்பட்ட லாஜிக் , எதிர்பார்த்த க்ளைமேக்ஸ் , ஹீரோவின் மேல் பச்சாதாபம் வரவைப்பதற்காக திணிக்கப்பட்ட  ஃப்ளாஷ்பேக் இப்படி சின்ன சின்ன குறைகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் இந்த சதுரங்க வேட்டை எனும் சலிக்காத ஆட்டத்தை நிச்சயம் ரசிக்கலாம் .

ஸ்கோர் கார்ட் : 43 



20 July 2014

வேலையில்லா பட்டதாரி -VIP - வெல்வான் ...


பொதுவாகவே ஒரு படத்தின் ஆடியோ பெரிய ஹிட்டாகி பட ரிலீஸ் தள்ளிப் போனால் நம்மையறியாமலேயே  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும் . அதிலும் ஆல் இந்தியா பிரபலமாகி விட்ட நம்ம ஊரு தனுஷின் 25 வது படம் வி.ஐ.பி என்பது கூடுதல் எதிர்பார்ப்பைக் கொடுத்திருப்பதை படத்திற்கு கிடைத்த ஒப்பனிங்கை வைத்து உறுதி செய்ய முடிகிறது ...

தினமும் தண்டச்சோறு என்று திட்டும் கோபக்கார அப்பா , பாசம் காட்டும் அம்மா , மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும்  தம்பி , பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் அழகான பெண் இவர்களுக்கு மத்தியில் தான் படித்த சிவில் இன்ஜினியரிங் சம்பந்தமான வேலைக்கு மட்டுமே போவேன் என்று நான்கு வருடம் பெட்ரோமாஸ் லைட்டே தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் வேலையில்லா பட்டதாரி ரகுவரன் ( தனுஷ் ) தன் துறையில் எதிரிகளை வென்று எப்படி சாதிக்கிறார் என்பதே வி.ஐ.பி ...

தனுஷ் இது வரை நடித்த 25 இல் இது போன்ற கதைகளில் குறைந்தது பத்துக்கும் மேல் நடித்திருப்பார் . இருப்பினும் நம்மை சோர்வடைய விடாமல்
பார்த்துக் கொள்வதே தனுஷின் திறமை . மயக்கம் என்ன , மரியான் என்று ஹெவி வெயிட் படங்களுக்கு பிறகு இந்த கேசுவல் தனுஷ் அடுத்த வீட்டுப் பையனாக அதிகமாகவே கவர்கிறார் . அம்மா இறந்தவுடன் வீட்டுக்கு வருபவரிடம் அதீத பெர்ஃபார்மன்சை எதிர்பாத்தால் அடக்கி வாசித்து ஏமாற்றி விடுகிறார் . சாமான்யர்களின் கஷ்டத்தை சொல்லும் தனுஷின் லாங் டயலாக் நீண்ட நாட்கள் பேசப்படும்  . சில தோல்விகளுக்கு பிறகு தமிழில் இந்த படம் நிச்சயம் தனுஷிற்கு கமர்சியலாக கை கொடுக்கும் . ஆனால் இந்த மாதிரி படங்களை பண்ண நிறைய வி.ஐ.பி கள்  இருப்பதால் தனுஷும் தொடர்ந்து இதே பாணியில் பயணப்பட்டு விடுவாரோ என்கிற பயமும் லேசாக தொற்றிக்கொள்கிறது ...

நிச்சயமாகி விட்ட தாலோ என்னனவோ அமலா பால் அதிக அழகாக தெரிகிறார் . அந்த பெரிய கண்களை உருட்டி பேசும்  அழகு ஆஸம் . சுரபிக்கு படத்தில் பெரிய வேலை இல்லை . இண்டர்வெலுக்கு பிறகு சீரியசாக போகும் படத்தில் கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்ட விவேக் .உதவியிருக்கிறார்  .  சரண்யா , தனுஷ் என்கிற இரண்டு நேஷனல் அவார்ட் வின்னர்களின் நடிப்புக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் சமுத்திரக்கனி சரண்யா இறந்த சீனில் தனக்கும் நன்றாக நடிக்க வரும் என்று நிரூபிக்கிறார் ...


அனிருத்தின் இசையில் பாடல்கள் படத்திற்கு பெரிய பலம் . ஏ.ஆர்.ஆர் , யுவனுக்கு பிறகு இளைஞர்களை அதிகம் கவர்கிறார் அனிருத் . எஸ்,ஜானகி குரலில் " அம்மா அம்மா " பாடல் கேட்கும் அனைவரையும் அதிகம் முனுமுனுக்க வைக்கும் பாடல் . எல்லா பாடல்களையும் தனுஷ் , அனிருத் பாடியிருப்பதும் , பாடல்களின் பின்னணியை  வைத்தே பி.ஜி யை ஒப்பேற்றியிருப்பதும் குறை . வாலியின் பணியில் பொயட்டு தனுஷ் . வளர வாழ்த்துக்கள் . இயக்குனராகி விட்டதால் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பெரிதாக மிளிரவில்லை ...

தனுஷ் மற்றும் வீட்டில் நடப்பதை வைத்தே முதல் பாதியை தேற்றியிருப்பது புத்திசாலித்தனமான திரைக்கதை . அப்பாவுடன் சண்டை போடும் போது
" எனக்கு மட்டும் வில்லன் பேர் ரகுவரன் , தம்பிக்கு  ஹீரோ பேர் கார்த்திக்  " என்று தனுஷ்  ஆதங்கப்படும் இடங்களில் வசனங்கள் பளிச் . ஆனால் தன்னை இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்க்காததால் தான் வேலை கிடைக்கவில்லை என்று கூறும் தனுஷிற்கு  50000 ரூபாய்க்கு  கால் சென்டரில் வேலை கிடைத்தது எப்படியோ ? டைரக்டருக்குத் தான்  வெளிச்சம் .யாரையும் அடிக்கக்கூடாது என்று அம்மா கையில் கட்டிய காப்பால் தனுஷ் அடி வாங்குகிறார் ஒ.கே . ஆனால் அவரோடு வேலை பார்க்கும் அத்தனை பேரும் ஏதோ காப்பு கட்டியது போல வில்லனின் அடியாட்களிடம் அந்த மொத்து வாங்குவது ஏனோ ? ...

இரண்டாம் பாதியில் முன்னேறத்  துடிக்கும் ஹீரோவிற்கு முட்டுக்கட்டை போடும் வில்லன் எப்படி இருக்க வேண்டும் ?!. அவரோ அமுல் பேபி போல வந்து அடி வாங்குவதோடு சரி .  வில்லனின் அப்பாவாவது ஏதாவது புத்திசாலித்தனமாக செய்வார் என்று பார்தால்  அவர் அதை  விட மொக்கை. ஹீரோ - வில்லன் ஆட்டம்  நன்றாக இருந்திருந்தால் படம் இன்னும் சூடு பிடித்திருக்கும் . படத்தின் நீளம் , கன்டினுட்டி பார்க்க  ஆள் இருந்தாரா இல்லையா என்று நினைக்கும் அளவிற்கு  தாடி , தாடியில்லாமல் என்று மாறி மாறி வரும் தனுஷின் தோற்றம் , வேலை வெட்டியில்லாத ஹீரோ , அம்மா சென்டிமென்ட் , தடைகளை தாண்டி ஜெயிக்கும் ஹீரோ என்று வழக்கமான ஃபார்முலா இப்படி குறைகள் இருந்தாலும் சென்டிமென்ட் , ஆக்சன் , ஹீரோயிசம் என்று எதையுமே ஓவர் டோஸ் ஆக்காமல் பெர்ஃபெக்டாக கொடுத்த விதத்தில் வணிக ரீதியாக இந்த வி.ஐ.பி வெல்வான் ...

ஸ்கோர் கார்ட் : 42 



19 July 2014

சக்ர வியூகம் ...


ன் மனைவியின் சொந்த ஊரான மாயவரத்திற்கு சென்றிருந்தேன். பரபரப்பான  சென்னை வாழ்க்கையிலிருந்து இரண்டு நாட்கள் ப்ரேக் கிடைத்தது  என்பதை விட  அந்த இரண்டு நாட்களையும்  அமைதியான ஊரில் என் மகளுடன் செலவழிக்க முடிந்தததில்  இரட்டிப்பு மகிழ்ச்சி.  அந்த மகிழ்ச்சியான தருணங்கள் என்றுமே மறக்க முடியாதவை. சென்னைக்கு வந்ததிலிருந்து நீண்ட நாள் விடுப்பு முடிந்து முதல் நாள் பள்ளிக்கு செல்லும் மாணவனின் மன நிலையிலிருந்து இன்னும் என்னால் விடுபட முடியவில்லை ...

நாம் தனிப்பட்ட முறையில் மற்றவர்களுக்கு நல்லவனாகவோ , கெட்டவனாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் . ஏன் சிலரை அவரவர் கணவன் , மனைவியே கூட வெறுக்கலாம் . ஆனால் எல்லோரும் தத்தம் குழந்தைகள் மீது கொண்டிருக்கும் பாசம் மட்டும் பொய்க்காது . அதிலும் குறிப்பாக குழந்தைகள் சிறுவர் ,  சிறுமியாக மாறும் வயதிற்குட்பட்ட காலம் எந்த ஒரு பெற்றோருக்கும்  பொற்காலம் . அதே நேரம் தாய் - மகன் உறவுக்கு இருக்கும் முக்கியத்துவம் தந்தை - மகள் உறவுக்கு கொடுக்கப்படவில்லையோ என்று எனக்கொரு ஆதங்கம் எப்பொழுதுமே உண்டு ...

ஒரு கட்டத்தில் குடும்பம் , உறவுகளை தாண்டி வெளி உலகிற்கு குழந்தைகள்  பழக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்  . அப்படிப்பட்ட சூழலுக்கு பிள்ளையார் சுழி போடுபவை பள்ளிகள் . இந்த காலத்தில் எல்.கே.ஜி யில் சேர்ப்பதற்கே நாம் லாங் க்யூவில் நிற்க வேண்டியது  அவசியம் . அதிலும் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் தான் பிள்ளையை சேர்ப்பேன் என்று அடம் பிடிக்கும் பெற்றோர்களும் இங்கே அதிகம் . மனைவி இரண்டாவது பிரசவத்திற்கு ஊருக்கு சென்றுவிட்டதால் அங்கேயே என் மகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டியதாக போய் விட்டது . ஒரே நாளில் எளிதாக வேலை முடிந்துவிட்ட சந்தோசம் இருந்தாலும் மகளை பிரிந்து ஆறு மாதங்களுக்கும் மேல் இருக்கப் போவதை நினைத்தாலே ஏக்கமும் ,சோகமும் மனதை அப்பிக் கொள்கிறது ...

அவளை கவனிக்காமல் டி .வி பார்த்துக் கொண்டிருந்தால் ஒங்கி முதுகில் அடி வைப்பதும் , சேர்ந்து விளையாடாமல் தூங்கி விட்டால் முகத்தில் தண்ணீரை விட்டு எழுப்புவதும் , வயிற்றில் ஏறி நின்று குதித்து விளையாடுவதுமென எல்லாமே கண் முன் நிற்கின்றன . சென்னையில்  இருக்கும் போது கூட நான் நிறைய நேரங்களில் புத்தகம் , டி.வி , இணையம் , மொபைல் என என் சொந்த வேலைகளில் மூழ்கி  விடுவதுண்டு . அந்த சுயநலத்திற்கு கிடைத்த சாட்டையடியே இந்த தற்காலிக பிரிவு என்று நினைக்கிறேன் . ஊரில் இருந்த  இரண்டு நாட்களும் பரபரப்பில்லாத சூழலில் என்னை முழுவதுமாக அதுல்யா மட்டுமே ஆக்ரமித்திருந்தாள் ...

தனிமை எனக்கு புதிதில்லை . சொல்லப் போனால் திருமண வாழ்க்கை நமது சுதந்திரத்திற்கு விடப்படும் சவால் என்று பேசியவன் நான். இன்றோ பொய்க் கோபம் காட்டவும் , பொய் அழுகையை வாங்கவும் ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் . வெறும் கோபக்காரராகவே அறியப்பட்ட எனது அப்பா கூட என்னை முதல் நாள் பள்ளியில் சேர்த்து விட்டு  இதே போல ஃபீல் பண்ணியிருப்பாரோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது . உடன் பிறந்த நால்வரும் சகோதரிகள் என்பதாலோ என்னவோ எனது அப்பாவிற்கு பெண்கள் என்றாலே அலர்ஜி . சகோதரிகளுடன் பிறக்காததாலோ என்னவோ எனக்கு பெண்கள் மேல் அலர்ஜியுமில்லை , அதீத அன்பும் இருந்ததில்லை .
வயது ஏற ஏற பெண்கள் பற்றிய புரிதல் வர ஆரம்பித்தது . புரிதலுக்கு பின் வரும் அன்பில் என்றுமே அடக்குகின்ற தன்மை இருப்பதில்லை . அப்படிப்பட்ட அன்பே என்றும்  நிலைக்கும் ...

பள்ளி முழுவதும் சிறிய . பெரிய வயதில் நிறைய குழந்தைகள் . சில மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே ஏதோ தண்டனைக்காக உட்கார வைக்கப்படிருக்கிறார்கள் . நான் பத்தாவது படிக்கும் வரை வகுப்பறைக்கு வெளியே உட்கார்ந்த நாட்களே அதிகம் . பாடத்தில் சுட்டி என்றாலும் ஏதாவது சேட்டை செய்து வாத்தியாரால் வெளியில் அனுப்பப்படுவது எனக்கு வாடிக்கை . மரங்களையும் ,  அதிலுள்ள பறவைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கும் போது வகுப்பறைக்குள் ஆசிரியரின் பாடத்தை கவனித்துக் கொண்டிருக்கும் அனைவரும் தண்டனைக்கைதிகள் போலவே எனக்கு காட்சியளிப்பார்கள் . இன்றும் நிச்சயம் தண்டனை அந்த மாணவனுக்கு இல்லை என்று புரிகிறது ...

அலுவலகத்தில் கட்டிய பணத்திற்கு முக்கால் சதவிகிதத்திற்கு மட்டுமே  ரசீது கொடுத்தார்கள் . மீதியை  டொனேஷன் என்றார்கள் . வகுப்பறைக்குள் சென்றவுடன் யாரோ ஒரு குட்டிப் பெண்ணுக்கு அருகில் என் மகள் உட்கார்ந்து கொண்டாள் . என்னைத் தேடுகிறாளோ பார்ப்போம் என்ற நப்பாசையில் அரைமணி நேரம் நான் வெளியில் காத்திருந்தது தான் மிச்சம் . அவள்   தன்  உலகிற்குள்  மூழ்கத் தொடங்கியிருந்தாள் . கொஞ்ச நேரம் கழித்து அவள் என்னை தேட ஆரம்பித்தது தெரிந்ததும் இன்னும் ஒழிந்து கொண்டேன் . கண்களில் கண்ணீர் கொஞ்சமாக எட்டிப்  பார்க்க ஆரம்பித்தவுடன் எனக்கு தாங்காமல் விளையாட்டை முடித்துக் கொண்டேன் . முதல் நாள் என்பதால் அவளை என்னுடன் அனுப்பி  விட்டார்கள் . அடுத்த நாளிலிருந்து பாட்டி கொண்டு வந்து விடுவார்கள் என்று சொல்லி விட்டு அதுல்யாவை தூக்கிக் கொண்டேன் ...

இன்னும் இரண்டொரு நாட்களில் பள்ளிக்கூடம் , பாட்டி வீடு எல்லாமே அவளுக்கு பழகி விடும் . நடந்த சம்பவங்களும் ஞாபகத்தில் இருக்கப் போவதில்லை . ஒரு வகையில் ஞாபக மறதி எவ்வளவு சவுகரியம். நிறைய பேருக்கு எதையும் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்வதே மன நிம்மதி போவதற்கு முக்கிய காரணம் . பிடித்ததோ , இல்லையோ கடமைக்காக  கௌரவர்களின் பக்கம் நின்றார்  பீஷ்மர் . நேற்று என் அப்பா எனக்கு செய்த கடமையை நான் என் மகளுக்கு இன்று செய்திருக்கிறேன் . அவளும் நாளை இதே போல செய்யலாம் . அங்கே சுவற்றின் மேல் சிலந்தி கொஞ்சம் கொஞ்சமாக தனது வலையை பின்னிக்கொண்டு அதனுள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தது . அதைப் பார்த்த போது சொந்த  கடமை என்றாலும் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த சக்ர வியூகத்திற்குள் என் மகளையும் கொண்டு வந்து விட்டு விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி எனக்குள் எட்டிப் பார்த்தது . அவளோ  வழக்கம் போல தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தவள் என் தோள்களின் மேல் தூங்க ஆரம்பித்திருந்தாள் ...





5 July 2014

அரையாண்டு தமிழ் சினிமா 2014 ...


டநத வருடம் போல இந்த  வருடம் இதுவரை தேசிய விருதோடு  பெரிய வெற்றி பெற்ற விஸ்வரூபம் , பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த  பரதேசி போன்ற படங்கள் வராமல் போனாலும் வீரம் , ஜில்லா போன்ற கமர்சியல் வெற்றிகளும் , தெகிடி , முண்டாசுப்பட்டி  போன்ற கவனத்தை ஈர்த்த சிறு பட்ஜெட் படங்களும் ஆறுதல் . ஆரம்பம் வெற்றியை தொடர்ந்து வீரம் வெற்றி மூலம் தனது ஆளுமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அஜித் . கோட் ,சூட் இல்லாமல் வேட்டி , சட்டையில் தல கண்களுக்கு விருந்து . ஆனால் இந்த படத்தோடு சால்ட் - பெப்பர் லுக்குக்கு கொஞ்சம் லீவு விட்டால் தேவல...

ரஜினியை போல என்றும் ட்ரிம்மாக இருக்கும் விஜய்க்கு ஜில்லா பெரிய வெற்றியாக அமையா விட்டாலும் ரசிகர்களின் ஆதரவால் விநியோகஸ்தர்கள் கையை கடிக்கவில்லை . சிறந்த படங்களின் மூலம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு ரம்மி , பண்ணையாரும் பத்மினியும் இரண்டுமே தோல்வியடைந்தது சறுக்கல் . இனிவரும் படங்களில் கதைத் தேர்வில் அதிக கவனம் செலுத்துவார் என்று நம்புவோமாக ...

க்ரைம் பின்னணியை கொண்ட தெகிடி , வாலிபால் விளையாட்டை மையமாக வைத்து வந்த வல்லினம் இரண்டுமே கவனிக்க வைத்த படங்கள் . வாயை மூடி பேசவும் மௌனமாக வந்து போய விட்டது . கேமரா மேன் விஜய் மில்டன் இயக்கத்தில் வந்த கோலி சோடா கமர்சியல்  வெற்றி , விமர்சகர்களின் பாராட்டு இரண்டையுமே பெற்ற நல்ல மிக்ஸிங்  . வடிவேலு எதிர்பார்த்த ரீ  என்ட்ரி தெனாலிராமன் கொடுக்கவில்லை ...

நெடுஞ்சாலை நெடிய பயணமாக தெரிந்தாலும் போரடிக்கவில்லை . அதன் ஹீரோ ஆரி க்கு அதிக வாய்ப்புகள் வந்திருக்கும் என்று நம்பலாம் . அதே போல பிரஷாந்த் நாராயன் , சலீம் இருவரும் தமிழுக்கு நல்ல வரவு . எழுத்தாளர் ராஜுமுருகன் இயக்கத்தில் வந்த குக்கூ மாற்றுத் திறனாளிகளின் காதலையும் , வலியையும் பாசிட்டிவாக சொன்ன விதத்தில் கலர்ஃபுல் ஹைக்கூ . சமுத்திரக்கனி - ஜெயம் ரவி கூட்டணியில் வந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு நிமிர்ந்து நிற்கவில்லை ....

மௌன குரு வில் சீரியசாக வலம் வந்த அருள்நிதி க்கு காமெடிப்படமான  ஒரு கன்னியும்  மூணு களவானிகளும் ஒரு கன்னித்திருட்டு . பாண்டியநாடு வெற்றியை தொடர்ந்து விஷால் பூசிய கமர்சியல் அரிதாரம் நான்  சிகப்பு மனிதன் .  துவரை தமிழ் ஹீரோக்களுக்கு திரை யில் நண்பனாக  இருந்து பல ஹிட்களுக்கு தோள் கொடுத்த  சந்தானம் தன் சொந்த செலவில் சோலோ ஹீரோவாக நடித்த  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்  வாய்ச்சண்டையாகிப் போனது துரதிருஷ்டமே . சசிக்குமார் நடித்த பிரம்மன் எழுதிய தலைவிதியால் தயாரிப்பாளர் நொந்தது தான் மிச்சம் ...

படத்தேர்வில் கவனம் செலுத்தும் கிருஷ்ணாவிற்கு  யாமிருக்க பயமே வின் வெற்றி பெரிய தையிரியத்தை கொடுத்திருக்கும் . டெக்னிக்கல் விஷயங்களுக்காக குறை சொல்லப்பட்டாலும் குழந்தைகளை அதிகம் கவர்ந்தான் கோச்சடையான் . சிவ கார்த்திகேயன் நடிப்பில் மான் கராத்தே மண்ணைக் கவ்வா விட்டாலும் மனதை தொடவில்லை . லிங்குசாமி தயாரிப்பில் மஞ்சப்பை கதைக்காகவும் , ராஜ்கிரண் நடிப்பிற்காகவும் அதிகம் பாராட்டப்ட்டது ...

தமிழ் சினிமாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குறும்பட இயக்குனர்களினன் தர்பாரில் லேட்டஸ்ட் வரவு இயக்குனர் ராம்குமார். வெறும் ஸ்டான்ட் அப் காமெடியாக இல்லாமல் ரசிக்க வைத்த விதத்தில் முன்னுக்கு வந்திருக்கிறது முண்டாசுப்பட்டி . முனீஷ்காந்தாக நடித்த ராமதாஸின் காமெடி ராஜ்ஜியம் வரும் படங்களிலும் தொடர்வதற்கு வாழ்த்துக்கள் . சைவம் விஜய் எடுத்த முதல் தமிழ்படம் . கார்த்திக் கின் மெட்ராஸ்  , விஜய் யின் கத்தி , சூர்யா வின் அஞ்சான் போன்றவை  அடுத்த சில  மாதங்களில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன . அதே போல பிரபல வலைப்பதிவர் நண்பர் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் திரைக்கு வந்து பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் ... 



Related Posts Plugin for WordPress, Blogger...