22 July 2014

சதுரங்க வேட்டை - SATHURANGA VETTAI - சலிக்காத ஆட்டம் ...


ண்டமூரி வீரேந்திரநாத் மலையாளத்தில் எழுதி தமிழாக்கம் செய்யப்பட நாவல் பணம் . அதில் கதை நாயகன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் . தன் அம்மாவின் இறுதி சடங்கை செய்யக் கூட பணம் இல்லாத நிலையில் எப்படியாவது பணம் சம்பாதிக்க முடிவு செய்து எல்லா குறுக்கு வழிகளையும் கையாண்டு பெரிய பணக்காரனாகிறான் . அவன் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள் . கடைசியில் வழக்கம் போல பணம் பெரிதல்ல என உணர்ந்து திருந்துகிறான் . இந்த கதையின் நாட்டை எடுத்துக்கொண்டு ஹீரோவாக நட்டை ( நடராஜ் ) வைத்து எம்.எல்.எம் , ஈமு கோழி , ரைஸ் புல்லிங் என நாட்டு நடப்புகளையே திரைக்கதையாக்கி தொய்வில்லாத படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் வினோத் ...

பாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளரான நடராஜ் தமிழில் முதல் படமான நாளை மூலம் பேசப்பட்டாலும் அதன் பிறகு ஹீரோவாக சோபிக்கவில்லை . ப்ரேக் எடுத்து வந்திருந்தாலும் நடிகனாக இந்த படம் அவருக்கு நல்ல திருப்புமுனை. எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஏமாற்றுவது , போலீசிடமே " நான் ஏமாத்தல் அவங்க தான் ஏமாந்தாங்க "என்று மடக்குவது , மரண அடி வாங்கிய பிறகும் பணத்தை பற்றி மூச்சு விடாமல் இருப்பது என காந்தி பாபு ( சத்திய சோதனை ) வாகவே கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார் நட்டு ...


நாயகி இஷாரா நாயர் அமைதியாக வந்து மனதை அள்ளுகிறார் . ஏமாத்துறது தப்பில்லையா சார் என்று அப்பாவியாக கேட்கும் போது அட அட . பாம்புக்கு விஜய் என்று பெயரிட்டு பத்திரமாக பார்த்துக் கொள்ளும் செட்டியார் இளவரசு , தூய தமிழில் பேசும் தாதா , கர்ப்பிணியான நாயரை தூக்கிக்  கொண்டு ஓடும் வில்லனின் அடியாள் திலகா என்று சின்ன சின்ன பாத்திரங்களில் வரும் அனைவரும் கவர்கிறார்கள் . ஒளிப்பதிவு , எடிட்டிங் இரண்டுமே படத்திற்கு பக்க பலங்கள் . பாடல்கள் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லாவிட்டாலும் பி.ஜி பரவாயில்லை ...

தினசரி பத்திரிக்கைகளில் பார்த்த விஷயங்கள் தான் என்றாலும் அதை வெறும் ஹீரோவை ஏற்றி விடும் டெம்பளேட்டுகளாக எடுக்காமல் டீட்டைலிங்காக சொன்ன விதத்தில் தனித்து நிற்கிறார் இயக்குனர் .  ஏமாறுபவர்களின் பேராசை தான் ஏமாற்றுபவர்களுக்கு மூலதனம் என்பதை செவிட்டில் அடித்து சொல்கிறது படம் . அதிலும் குறிப்பாக நகைக் கடை  ஃப்ராட் படத்திற்கு ஹைலைட் ...

" மிருகம் கூட பசிச்சா தான்  சாப்பிடுது ஆனா மனுஷன் " , " சாப்பிடாம பசியோட அலஞ்சிருக்கீங்களா "  போன்ற வசனங்கள் ரொட்டீனாக இருந்தாலும்  " தன் மேல நம்பிக்கையில்லாதவன் தான நாளைய பத்தி யோசிப்பான் " , " ஏமாத்துறவங்க குரு , ஏன்னா அவங்க தான் வாழ்க்கைய கத்துத் தராங்க " மாதிரி  வசனங்கள் பளிச் .  தேவைக்கேற்ப கழட்டி விடப்பட்ட லாஜிக் , எதிர்பார்த்த க்ளைமேக்ஸ் , ஹீரோவின் மேல் பச்சாதாபம் வரவைப்பதற்காக திணிக்கப்பட்ட  ஃப்ளாஷ்பேக் இப்படி சின்ன சின்ன குறைகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் இந்த சதுரங்க வேட்டை எனும் சலிக்காத ஆட்டத்தை நிச்சயம் ரசிக்கலாம் .

ஸ்கோர் கார்ட் : 43 No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...