29 July 2014

தெருக்கூத்து - 1 ...


சினிமா செய்திகள் மட்டுமின்றி வாராவாரம்  நாட்டு நடப்புகளை சும்மா ஒரு அலசு அலசலாம் என்று எனக்கு ஏடாகூடமாக தோன்றியதன் விளைவே இந்த தெருக்கூத்து   . இது வரை என் கிறுக்கல்களை பொறுத்துக்கொண்ட மக்கள் இனிமேலும் எதையும் தாங்கும் இதயத்தோடு அதை தொடர்வார்கள் என்கிற நம்பிக்கையில் ...

ரயில்வே பட்ஜெட்டால் நடுத்தர மக்களுக்கு ஏறியிருந்த உஷ்ணம் பொது பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வருமான வரி சலுகைகளால் தணிந்திருக்கும் என்று நம்பலாம் . புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால் சென்னையிலிருந்து மதுரைக்கு நான்கு மணி நேரத்துக்குள் செல்லலாம் என்கிறார்கள் . எல்லாம் சரி அதுலயும் வித்அவுட்ல போவ முடியுமா ? . கிறிஸ்துவம் எனது மதம் , இந்து எனது கலாச்சாரம் என்று , கிறிஸ்துவ மதம் வந்து 2000 வருடங்கள் தான் ஆகிறது ஆனால் இந்து கலாச்சாரம் இங்கே 5000 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது என்று கோவா துணை முதல் மந்திரி பேசியிருப்பது பிரச்சனையை கிளப்பியிருக்கிறது . நல்ல வேளை  இதை  சொன்னவர் ஒரு கிறிஸ்துவர் , அதுவே இந்துவாக இருந்திருந்தால் ?! ...

28 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை ஜெயித்தது போலவே லார்ட்ஸ் மைதானத்திலும் தோனி தலைமையிலான கிரிக்கெட் அணி டெஸ்ட் மேட்சை ஜெயித்திருக்கிறது . நீண்ட நாட்கள் சோபிக்காமல் இருந்த இஷாந்த் சர்மா-விக்கெட்டுகளை வீழ்த்தி மேன் ஆப் தி மேட்ச் அவார்ட் வாங்கிய  சந்தோஷம் வடிவதற்குள் அவர் இஞ்சூரி காரணமாக அடுத்த மேட்சில் ஆடவில்லை . பின்னிக்கு பதில் அஸ்வினை எடுப்பார்கள் என்று பார்த்தால் பேட்டிங்கை வலுப்படுத்த ரோஹித்தை எடுத்திருக்கிறார்கள் . கடந்த முறை ஏற்பட்ட  4-0 தோல்விக்கு பழி தீர்க்கும்  வகையில் தோனி டீம் சீரியசை  ஜெயிக்க வாழ்த்துவோம்  .  கங்குலி ஜெயித்த பிறகு சட்டையை கழட்டி சுற்றியது போல தோனி பேண்டை  கழட்டி சுத்துவாரோ ? ! ...

போன் பேசிக்கொண்டே ரயில்வே கிராசிங்கை கவனிக்காமல் ஸ்கூல் வேனை ரயிலோடு மோதியதில் அந்த முட்டாள் டிரைவர் உட்பட அனைவரும் பலியான சம்பவம் நெஞ்சை உலுக்கியது . கால் சென்டர்களில் வேலை பார்ப்பவர்களிடமிருந்தே நிர்வாகம் வேலை நேரங்களில் செல்போனை வாங்கி வைத்துக் கொள்ளும்  போது பல உயிர்களுடன் விளையாடும் இது போன்ற சம்பவங்களை தடுக்க  எல்லா டிரைவர்களிடமிருந்தும் பயண நேரங்களில் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டாலென்ன ? .ஆறு வயது சிறுமி ஸ்கூலில் வைத்து கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது . அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரூ மக்கள் நடத்திய அமைதி போராட்டம் மனதை கவர்ந்தது . பள்ளிக்கூடங்களிலேயே இந்த நிலைமை என்றால் பிள்ளைகளை எங்கு தான் அனுப்புவது ? ...

அரசு பேருந்தில் ஊருக்கு சென்ற போது மேல்மருவத்தூரில் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்கள் வண்டி ஊர்ந்து தான் சென்றது . விசாரித்தால் ஆடி அம்மாவாசையை முன்னிட்டு கோவிலில் பயங்கர கூட்டம் என்று சொன்னார்கள்  . கோவிலுக்கு வருபவர்களுக்காக  ஏதாவது நடை மேம்பாலம் கட்டி விட்டால் பக்தர்கள் மட்டுமல்லாமல் பயணிகளும் பிழைப்பார்கள் . நிர்வாகம் கவனிக்குமா ?! . டாஸ்மாக்கை தவிர மற்ற எல்லா அரசு திட்டங்களுக்கும் அம்மா பெயரை வைத்து நன்றாகவே பிராண்டிங் செய்கிறார்கள் . அம்மா உணவகம் , குடிநீரை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரிகளை கருத்தில் கொண்டு அம்மா வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் . மற்றதைப் போலவே அதுவும் வெற்றி பெற வாழ்த்துக்கள் . அம்மான்னா சும்மா இல்லேடா! ...

வேலையில்லா பட்டதாரி என்றவுடன் தனுஷ் நியாபகத்திற்கு வருகிறார் . தான் வளர்த்து விட்ட சிவ கார்த்திகேயனுடன்  அவருக்கு ஏதோ லடாய் என்கிறார்கள் . கொடுக்கல் வாங்கலில் ஏதாவது பிரச்சனையோ ?. இருந்து விட்டுப் போகட்டும் . கூத்தாடிகள் ரெண்டுபட்டாலும் ஊருக்கு கொண்டாட்டம் தானே ! . திரைப்படமாக வி.ஐ.பி யை விட சதுரங்க வேட்டை நன்றாக இருந்தாலும் தனுஷின் மாஸ் , அணிருந்தின் இசை இரண்டுமே வி.ஐ.பி க்கு நல்ல வசூலை கொடுத்திருக்கின்றன . சதுரங்க வேட்டை நன்றாக இருந்தாலும் அதற்கு ஆனந்த விகடன் 52 மார்க்குககளை அள்ளிக்  கொடுத்திருப்பது ஆச்சர்யம் தருகிறது . ஆனால் ராஜா ராணி , கடல் , எதிர்நீச்சல் என்று தங்களால் வாங்கப்பட்ட படங்களுக்கு விஜய் டி.வி விருதுகளை அள்ளிக் கொடுத்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை . விஜய் , சூர்யா இருவரும் வந்திருக்க மேடையில் டி.டி யோ வராத அஜித்துக்கு தல , தல என்று வழிந்தது இருவருக்கும் வயிற்றெரிச்சலை கிளப்பியிருக்கும் . ரஜினிக்கு அடுத்து  சூப்பர் ஸ்டார் பட்டத்த  யாருக்கு கொடுத்தாலென்ன ! தல போல வருமா ?!...

மீண்டும் கூடுவோம் ...3 comments:

‘தளிர்’ சுரேஷ் said...

தெருக்கூத்து ரசித்தேன்! அந்த முட்டாள் டிரைவர் தன்னோடு அந்த குழந்தைகளின் எதிர்காலத்தையும் புதைத்துவிட்டான்!

Angelin said...

தெருக்கூத்து // நல்லா இருக்கு ..
எப்போ மொபைல் பயன்பாடு வந்ததோ அப்போதிருந்து எல்லாம் தலை கீழ் ..
ரெண்டு வருடமுன் சேனையில் நேரில் பார்த்தேன் ,..துக்க வீட்டில் கூட அமைதி இல்லாம மொபைல் சத்தம் .
அமைதி அமைதி என்று சொன்ன பாதிரியாரின் சட்டைப்பையில் இருந்தும் ..ஒலிக்கும் மொபைல் .

டிரைவ் பண்னும்போது மொபைல் முற்றிலும் தவிர்க்கணும் பாவம் அந்த பிள்ளைகள் :(

பெங்களூர் ..இனி பிள்ளைகளுக்கு பள்ளி நிர்வாகம்தான் பொறுப்புனு நீதிமன்றம் சொல்லியிருக்கு .
இதெல்லாம் முதலிலேயே கவனிதிருக்கணும் :(

jegan kumar said...

அணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...