28 November 2015

144 - தடங்கல் ...


டிகர்களுக்கும் , இயக்குனர்களுக்கும் ஓப்பனிங் இருப்பது போல தரமான படங்களை தயாரித்து வருவதால் தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கும் அது இருக்கிறது . ஆனால் அவர் தயாரிப்பில் சிவா , அசோக் செல்வன் நடிப்பில் மணிகண்டன் ( எத்தனை மணிகண்டன் ?! ) இயக்கத்தில் வந்திருக்கும் 144 முந்தைய படங்களைப் போல நம்மைக் கவராமல் ஏமாற்றம் அளிக்கிறது ...

சண்டை சச்சரவால் 144  தடையில் இருக்கும் முண்டாசுப்பட்டி போன்ற கிராமத்தில் வசிக்கும் தேசு ( சிவா ) , மதன் ( அசோக்செல்வன் )
& கோ ராயப்பனிடம் ( மதுசூதனன் ) இருந்து தங்க பிஸ்கட்களை சூதாய் கவ்வ நினைப்பதே 144 . ஆனால் அந்த இரண்டு படங்கள் போல இல்லாமல் திரைக்கதையில் தத்தளிக்கிறது இந்த படம் ...

சிவா வுக்கு ஏற்ற கலகலப்பான திருடன் வேடம் .  தன் ஒன்லைனர்களால் ஆடியன்ஸைக் காப்பாற்றுகிறார் . இவரது எபிசோட்  சுஜாதாவின் வசந்தகாலக் குற்றங்கள் நாவலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது . இதனை டைட்டிலில் ஒப்புக்கொண்ட இயக்குனரின் நேர்மைக்கு பாராட்டுக்கள் . இதை சொல்லாமல் விட்டிருந்தால் நாவலைப் படிக்காத எத்தனையோ பேருக்கு விஷயம் தெரியாமலேயே போயிருக்கும் . அசோக் செல்வன் வழிய பேசும் மதுரை பாஷை ஒட்டவேயில்லை . வரலேன்னா விற்றுங்களே ? ஏன் மதுரைக்காரைங்களை வெறுப்பேத்துறீங்க ?! . அவருக்கு ஜோடியாக வருபவர் படம் லோ பட்ஜெட் என்பதை நிரூபிக்கிறார் . அகலமான கண்களுடன் ( கண்கள் மட்டுமா ?! ) வரும் ஓவியா சிவாகுக்கு ஏற்ற ஜோடி முண்டாசுப்படியில் பேசியே நம்மை கவர்ந்த ராமதாஸ் இதில் ஊமையாக வந்து கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார் ...


டாக்டரை  உதவிக்கு வைத்துக்கொண்டு வில்லத்தனம் செய்யும் உதயபானு மகேஸ்வரன் ரசிக்க வைத்தாலும் இவர் எதிரிகளுக்கு செய்யும் டார்ஜர்களில் அதிகம் பாதிக்கப்படுவது நாமே . ராயப்பனாக வரும் மது மற்றும் இன்ஸ்பெக்டராக வருபவரின் காம்பினேஷன் க்யூட் . சான் ரோல்டனின் இசையில் பூவே , விநாயகா பாடலகள் அருமை . ஆனால் பேமென்ட் பாக்கியோ ? என்பது போல இருக்கிறது அவர் பின்னணி இசை ...

தனது பாதுகாப்பை பற்றி மது பீத்தியடிக்கும் அதே  நேரத்தில் ராமதாஸ் உதவியுடன் சிவா தங்க பிஸ்கட்களை லபக்கும் இடம் படத்துக்கு ஹைலைட் . அதேபோல தங்கபிஸ்கட்களை  பாதுகாக்கும் வேலையாட்களும் கவர்கிறார்கள் . பொங்கல் சாப்பிடும் போது முந்திரி மாட்டுவதைப் போல உற்றுப்பார்த்தால் சில காமெடிகள் மாட்டுகின்றன . மற்றபடி ப்ளாக் காமெடி நிறைய இடங்களில் ப்ளாங்காகவே இருக்கிறது . காமெடி என்கிற பெயரில் பெரும்பாலும் மொக்கை போடுவதை தவிர்த்திருக்கலாம் . மொத்தத்தில் புது முயற்சிகளுக்கு கைகொடுத்து அதில் தொடர் வெற்றியும் பெற்று வரும் தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு தடங்கலான திரைக்கதையால் இந்த 144 கைகொடுக்கவில்லை ...

ஸ்கோர் கார்ட் : 39 

ரேட்டிங் : 2.25 * / 5 * 

24 November 2015

காட்டுப்பசி - சிறுகதை ...


ன்னும் எத்தனை நாட்கள் இங்கேயே இருப்பது தெரியவில்லை . இந்த அத்துவானக் காட்டுக்குள் எப்போது வந்து மாட்டிக்கொண்டோம் என்பதே மறந்துவிடும் போலிருக்கிறது . சிறுவனாய் இருக்கும் போது அம்மா , அப்பா இருவரின் கைகளையும் பிடித்துக்கொண்டே நடந்தது நினைவுக்கு வருகிறது . அம்மாவுக்கு எப்போதும் சிரித்த முகம் . அப்பா அவ்வளவு கோவப்படும் போதும் அவளிடம் சின்னதாய் ஒரு புன்முறுவல் இருந்துகொண்டே இருப்பது ஆச்சர்யமாக இருக்கும் . நான் என்ன தப்பு செய்தாலும் அம்மா என்னை அப்பாவிடம் அடிவாங்க விட்டதேயில்லை . அந்த கோபமும் அம்மா மேல் அடியாக வந்திறங்கும் . இந்த இடத்திற்கு சுற்றுலா வருவதற்கு நான் தான் காரணமாக இருந்தேன் . எதிர்பாராத மழை வெள்ளத்தில் நான் அடித்துக்கொண்டு இங்கே வந்து சேர்ந்ததற்கும் சேர்த்து அம்மாவிற்கு நிறைய அடி விழுந்திருக்கும் .  இந்த காடும் , தனிமையும் பழகிவிட்டது . அப்பா என்னை மறந்திருப்பாரா ?  அவர்  ஒரு நாள் கூட என்னை பசியால்  வாட விட்டதில்லை . கோபப்பட்டாலும் எங்கும் கடன் கிடன் வாங்காமல் வீட்டிற்கு தேவையானதை செய்து கொண்டுதானிருந்தார் ...

ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருந்த நான் இங்கே எத்தனை நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறேன் . கிடைத்ததை தின்று , சின்ன விலங்குகளை கொன்று , பெரிய விலங்குகளிடம் இறையாகமால் தப்பித்து ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகவே கழிந்தது . பின் மெதுவாக இந்த காட்டு வாழ்க்கையும் பிடித்துவிட்டது  . பகலில் எங்கும் அமைதி , இரவில் பேரிரைச்சல் . அது இல்லையென்றால் இப்பொழுதெல்லாம் தூக்கம் வருவதேயில்லை . நிறைய இரவுகள் பசியோடு படுத்திருக்க வேண்டும் . எப்பொழுதாவது மனிதர்கள் தென்படும்போது தான்  உயிரே வரும் . அந்த சில நாட்கள் பசியில்லாமல் இருக்கலாம் . ஆனால் இந்த அத்துவானக் காட்டுக்குள் யாரும் அடிக்கடி வருவதில்லை . சில அரிய மூலிகைகளை எடுக்க , போட்டோ எடுக்க , இயற்கையை ரசிக்க , விலங்குகளை ஆராய்ச்சி செய்ய என்று ஏதாவது ஒரு காரணத்துக்காக அரசின் எச்சரிக்கையையும் மீறி சிலர் எப்போதாவது வருவார்கள் . அப்படி வரும் போது வயிற்றுக்கு ஏதாவது கிடைக்கும் . மற்றபடி மரணப்பசியுடன் காலம் தள்ள வேண்டியதுதான் ...

ஏதோ சத்தம் கேட்கிறது . தூரத்தில் யாரோ வரும் சத்தம் . காலடி ஓசைகள்  பெரிதாக கேட்கின்றன . டார்ச் லைட் வைத்துக்கொண்டு ஒருவன் நடந்து வர பின்னால் ஒரு பெண் நடந்து வருகிறாள் . வருபவள் அழகாக இருந்தாள் , அதோடு கைகைளில் ஏதோ பை . நிச்சயம் ரெண்டு நாட்களுக்கு தேவையான உணவாக இருக்கும் . இருக்கட்டும் நல்லது . மரத்திலிருந்து நான் மெல்ல இறங்குகிறேன். அவர்கள் என்னை கவனிக்கவில்லை . அவர்கள் ஏதோ மொழியில் பேசிக்கொள்கிறார்கள் . மனிதர்களை அடிக்கடி பார்க்காததால்  ஏதோ ஒரு பரபரப்பு , பயம் , அன்னியம் தொற்றிக்கொள்கிறது . இன்றும் அப்படி ஏதோ ஒரு உணர்வு  தள்ள ஒதுங்கி நின்றேன் . அதைப்போல சிலர் என்னைப்பார்தவுடன் அலறி விடுவதுண்டு . அதற்காகவே கூட நான் ஒதுங்கி நின்று கொள்வேன் . ..

அவர்கள் என்னமோ பேசிக்கொள்ள அவன் மட்டும் கழுத்தில் கேமராவை மாட்டிக்கொண்டு ஓடைப்பக்கம் செல்கிறான் . அனேகமாக பறவைகளை படம் பிடிக்கப்  போகிறான் . நேரம் ஆகிறது அவன் வரவில்லை . அவள்  கவலையாகிறாள் . அவன் போன திசையில் நடக்கலாமா என யோசித்து அவள் பின்வாங்குவது தெரிகிறது . இதுதான் சரியான சந்தர்ப்பம் . அவளுக்கு பின் மெதுவாக செல்கிறேன் . மிக அருகில் போனதும் அவள் முடியிலிருந்து ஏதோ இதுவரை முகர்ந்திரத வாசனை . அவள் தோள்களில் என் கையை வைக்கிறேன் . என்னைப் பார்த்ததும் ஒரு அலறலுடன் லேசாக மேலே சாய்கிறாள் .  நினைத்தபடியே அவள் பை என் கைக்குள் மாட்டுகிறது . அத்தோடு சேர்த்து எனது உணவையும்  தூக்கிக்கொண்டு நான் வேகமாக  எனது இடத்திற்கு போகிறேன் . எடையைப் பார்த்தால்  நிச்சயம் இவள் நான்கு  நாட்களுக்கு மேல் தாங்குவாள் . அவளை கீழே கிடத்தியவுடன் எனது முன்பற்கள் என்னை விட வேகமாக அவள் கழுத்தை நோக்கி போவது போலிருந்தது ...

18 November 2015

அஜித் Vs விஜய் (5) - AJITH Vs VIJAY (5) - The Final Verdict ...


ஜித் Vs விஜய் இருவரில் யார் பெஸ்ட் என்கிற வரலாற்று சிறப்பு மிக்க ! கேள்வியின் பதிலைக் காண ஆவலுடன் அனைவரும் காத்திருப்பீர்கள் . உங்களைப் போல காத்திருந்த எனக்கும் சேர்த்து இந்த பதிவில் மக்களின் தீர்ப்பு வருகிறது . இதுவரை 4 பதிவுகளையும் தொடர்ந்து படித்த , படித்ததோடு நிற்காமல் அதைப் பற்றிய கமெண்டும் அடித்த , அதோடு விடாமல்  அஜித் , விஜய் இருவரில் யாருக்கோ வாக்கையும் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி . மீண்டும் சொல்கிறேன் . இது என்னமோ தமிழ் சினிமா நடிகர்களில் யார் பெஸ்ட் என்கிற வாக்கெடுப்பு அல்ல . அஜித் , விஜய் இருவருக்குமான வாக்கெடுப்பு மட்டுமே . இருவருமே இல்லை என்கிற ஆப்சனையும் சேர்த்திருக்கலாமே என்றும் சிலர் கேட்டிருந்தார்கள் . அதே போல் உங்களின் முடிவு என்ன என்றும் ஒரு நண்பர் கருத்திட்டிருந்தார் . மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு எனும் போது இந்த சாதாரண மனிதனுக்கும் அது பொருந்தாதா ? . இதோ யார் பெஸ்ட் அஜித் Vs விஜய் ...

யார் பெஸ்ட்

அஜித் தான் ஜெயிப்பார் என்று யூகித்திருந்தாலும் இந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தது ஆச்சர்யம் . வேதாளம் தீபாவளிக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது அஜித் மேல் க்ரேஸ் அதிகமானதற்கான ஓர் காரணமாக இருந்தாலும் , அஜித் எந்த ஒரு வலைத்தளங்களிலும் இல்லாததும் , தன் படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாததும் , குறிப்பாக தன் படத்தை மட்டும் பேச விட்டு கருத்து  சொல்கிறேன் பேர்வழி என்று வேறு எதையாவது சொல்லாததும் , பொதுவாக
சக நடிகர்களாலாயே  தல என்று அழைக்கப்பட்டும் அந்த கனத்தை தனது தலைக்குள் தள்ளாததும் இவரின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக நான் கருதுகிறேன் . அதே போல அட்லி இயக்கத்தில் விஜய் படம் வந்து வெற்றியடைந்தால் இந்த நிலை மாறுமா ?. பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் இப்போதைக்கு இதுதான் ரசிகர்களின்  ரிசல்ட் ...

அஜித் எந்த நிகழ்ச்சிக்கும் வராததால்  ஒரு மேடை போட்டு அங்கே தல ய பாராட்ட டி .ஆர் வந்திருந்தால் என்ன என்று ஒரு சின்ன கற்பனை ...

இவன் தல

பணத்துக்கு ஆட்ட மாட்டான் வால
அன்புக்கு முன்னால பூமால

எதிரிகளுக்கு இவன் காள 
நட்புக்கு கொடுப்பான் தோள 

உட்டுப்பாக்காத நூல
ஊத்திருவான் பால

இவன் பைக் ஓட்டுறது ஈ.சி.ஆர் சால
ஜெயிச்சாலும் இருப்பான் எப்பயும் போல

நம்பி பணம் போட்டவன் ஆக மாட்டான் திவால
இவன் படம் பாக்குறவனுக்கு போகும் கவல

இராவணனுக்கு பத்து தல
தமிழ்நாட்டுக்கு இவன் தான் ஒரே தல ! ...

( அட்டாக் புலி , அட்டகாச புலி என்கிற டி.ஆர் மாடுலேஷனிலேயே படிக்கவும் )
13 November 2015

அஜித் Vs விஜய் (4) - AJITH Vs VIJAY (4) - THE CONCLUSION ...


ந்த பதிவை படிப்பதற்கு முன்னால் இது  தொடர்பான முந்தைய மூன்று பதிவுகளையும் படித்து விட்டு வருவது நல்லது . அதே போல இந்த பதிவு அஜித் , விஜய் இருவரில் யார் சிறந்த நடிகர் என்பதற்கானது அல்ல . அந்த வகையில் பார்த்தால் இது விக்ரம் , சூர்யா ( இவர் நடிப்பு சமீபகாலமாக  ஒரே மாதிரியாக இருந்தாலும் ) , தனுஸ் ஆகியோருக்கான பதிவாக இருந்திருக்கும். ஆனால் இவர்கள் மூவரை விட இன்றைய தேதியில் அதிக அளவு ரசிகர் பட்டாளத்தையும் , பிசினசையும் வைத்திருப்பது இவ்விருவர் மட்டுமே . இந்த தெளிவோடு பதிவை தொடரவும் ...

இதை எழுதும் அதே நேரத்தில் தீபாவளி அன்று ரிலீசான வேதாளத்தின் முதல் நாள் கலெக்சன் தமிழ்நாட்டில் மட்டும் 15.5 கோடி என்பது நிறைய பேருக்கு செய்திகள் வாயிலாக தெரிந்திருக்கும் . இதன் நம்பகத்தன்மையை ஆராய்வது ஒரு புறம் இருக்கட்டும் . ஆனால் நிச்சயமாக பெரிய வித்தியாசம் இருக்காது . ஏனெனில் படம் தமிழகத்தில் மட்டும் 530 ஸ்க்ரீன்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது. முதல் நாள் அதுவும் தீபாவளி என்பதால் சின்ன தியேட்டரிலேயே 4 ஷோக்களுக்கு குறைவாக இருக்காது . அதிலும் மாயாஜால்  போன்ற மல்டிப்ளெக்சுகளை கணக்கில் கொண்டால் குத்து மதிப்பாக 6 ஷோக்கள் வைத்துக்கொள்ளலாம் . இதை பெருக்கிப் பார்த்தல் மொத்தம் 3180 ஷோக்கள் வருகின்றன . தோராமயமாக ஒரு ஷோவை 500 பேர் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் . இதன் படி மொத்தம் 1590000 பேர் படத்தை முதல் நாள் பார்த்திருக்கிறார்கள் . டிக்கெட் விலை முதல் நாள் பெரிய ஹீரோ படத்துக்கு 120 க்கு குறைவாக நிறைய தியேட்டர்களில் இருக்காது . இருந்தாலும் ரூ .100 என்று  எடுத்துக்கொண்டால் மொத்தம் 15.9 கோடிகள் வருகிறது . இந்த படத்திற்கு அரசின் வரிச்சலுகை உண்டு என்பதால் மொத்தத்தையும் அப்படியே கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் . ( என்ன ரமணா விஜயகாந்த் ரேஞ்சுக்கு போய்க்கிட்டுருக்கு ! ) ...

இதை சொல்வதற்கு காரணம் எந்த ஒரு பெரிய ஸ்டார் படம் வந்தாலும் , குறிப்பாக அஜித் , விஜய் படம் வந்தால் அவர்களின் ரசிகர்கள் நெட்டில் அடித்துக்கொள்வது இந்த வசூலை வைத்துதான் . என்னை அறிந்தால் முதல் நாள் வசூலை புலி  முறியடித்தது என்று விஜய் ரசிகர்கள் சொன்னால் இப்போது வேதாளம் , விஜய் நடித்த கத்தி படத்தின் முதல் நாள் வசூலை ( 12.5 கோடி ) முறியடித்து விட்டது என்று அஜித் ரசிகர்கள் சொல்கிறார்கள் . ஆனால் எந்த ஒரு படமும் முழுமையான் வெற்றி பெறுவதற்கு முதல் நாள் வசூல் மட்டும் போதாது . 20 - 20 மேட்சில் முதல் பத்து ஓவருக்கு 120 ரன்கள் எடுத்து ஆள் அவுட் போலத் தான் இதுவும் . இதற்கு தனிஒருவன் , பாபநாசம் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம் . ஒப்பனிங்  குறைவாக இருந்தாலும் மவுத் பப்ளிசிட்டி மூலம் இரண்டு படங்களும் 50 நாட்களை கடந்து ஓடி நல்ல வசூலை குவித்தன . ( எல்லாம் குடும்பத்தோட போய் நம்ம எழுதுற 120 ரூவா மொய் தான் ) ...


சரி மேட்டருக்கு வருவோம் . படத்துக்கு மிக்சட் ரெஸ்பான்ஸ் இருப்பதால் அஜித்தின் வேதாளம் 100 கோடி வசூலை தாண்டி இந்த வருடத்தின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஆக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . ஆனால் தல படம் லிங்கா , கத்தி படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து விட்டது  என்பதே நிதர்சனம் . அதிலும் உலகநாயகனின் படத்தோடு ரிலீசாகி இந்த சாதனையை படைத்திருப்பது சத்தியமாக எதிர்பார்த்திராத ஒன்று . என்ன தான் வசூலை குவித்திருந்தாலும்  அஜித்துக்கு இருக்கும் மாஸுக்கு வேதாளம் படமாக சரியான தீனி அல்ல என்பதே என் கருத்து ...


மங்காத்தா படம் முடிந்து வரும் போது அஜித்துக்கு இருக்கும் ஒபெனிங்கை பார்த்து விட்டு ஒரு சினிமா நண்பரிடம் பேசினேன் . அவரோ ரொம்ப கேசுவலாக இதெல்லாம் கொஞ்ச நாள்ல காணாமல் போயிடும் என்றார் . அதோடு ஷங்கர் , ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் படங்கள்  வந்து விட்டால் அஜித்தை யாரும் சீண்ட மாட்டார்கள் என்றும் சொன்னார் . அவர் சொன்னதை ஈசியாக விட முடியாதற்கு காரணம் அவர் சினிமா வட்டாரத்தில் நல்ல தொடர்புள்ளவர் என்பதோடு கண்டிப்பாக விஜய் ரசிகர் இல்லை . ஆனால் அவர் சொன்னது போல் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று நான் ஆணித்தரமாக நம்பினேன் . அன்றிருந்த நம்பிக்கை பத்து வருடங்களுக்கு முன்னால் எனக்கு அஜித் மேல் இருந்ததில்லை . எங்கள் பேச்சிலர் ரூமுக்கு வரும் நண்பன் பக்கா அஜித் ரசிகன் . அதிலும் சிட்டிசன் படத்தின்  " நான் தனி ஆள் இல்ல " என்ற வசனத்தை அவன் அஜித் போலவே பேசுவான் . அஜித் மேல் எந்த ஈடுபாடும் இல்லாத நாங்களோ அவனை ஓட்டுகிற ஓட்டில் ரூம் பக்கம் வருவதையே நிறுத்திக்கொண்டான் . நாங்களும் " மாப்புள அத்திப்பட்டி மாதிரி அவனும் காணாம போயிட்டாண்டா " என்று சொல்லி சிரித்துக் கொள்வோம் ...

என் கல்லூரி காலங்களில் அஜித்தை விட விஜய்க்கு தான் கூடுதல் மாஸ் இருந்தது . அவரை போலவே ரிம்லெஸ் க்ளாஸ் , டிசர்ட் அதே ஸ்டைலுடன் நிறைய பேரை பார்க்க முடியும் . காதல் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்த விஜய் மேல் பெண்களுக்கும் நிறைய கிரேஸ் இருந்தது , நானோ ஒன்ஸ்மோர் படம் முடிந்தவுடன் ஒன்ஸ்மோர் பார்க்கலாமா என்று கேட்ட நண்பனை செவுட்டில் அறையலமா என்று கேட்பது போல பார்த்தேன் .  ஆனால் என்னைத் தவிர அங்கிருந்த எல்லோரும் படத்தை என்ஜாய் பண்ணி பார்த்தார்கள் . இதே நிலைமை தான் விஜய் நடிப்பில் வந்த துள்ளாத மனமும் துள்ளும் பார்த்த போதும் . இப்படி விஜய் , அஜித் இருவருமே தனிப்பட்ட முறையில் பெரிதாக கவர்ந்ததில்லை . அதே சமயம் வாலி படத்தை பார்த்த பிறகு இயக்குனராக வேண்டுமென்கிற வெறி அதிமாகி  எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக சேர்வதற்கு சென்னை வந்தது இன்றும் நினைவிருக்கிறது . அது தனிக்கதை ...

இப்படி ஈக்குவலாக போய்க்கொண்டிருந்த ட்ராக் சொல்லப்போனால் அஜித்தை விட அதிக வெற்றிகளின் காரணமாக விஜயின் க்ராஃப் மேலே இருந்த நேரத்தில் பில்லா வின் வெற்றி ரஜினியின் ரசிகர்கள் பலரை அஜித் பக்கம் ஈர்த்தது . கடந்த ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் அமர்ந்திருந்த மேடையிலேயே தங்களை வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறார்கள் என்று அஜித் தைரியமாக சொன்னதும் ,  அதற்கு சூப்பர் ஸ்டார் எழுந்து நின்று கை தட்டியதும் பலரை புருவம் உயர்த்த செய்தது . இந்த சம்பவம் நடுநிலையாளர்கள் பலரை அஜித் பக்கம் கொண்டு போனது  . நிஜத்திலும் லார்ஜர் தென் லைஃப் ஹீரோ போல அஜித் பார்க்கப்பட்டார் . விஜய் போல பிறந்த நாளுக்கு நலத்திட்ட உதவிகள் பெரிதாக எதுவும் செய்யாத போதும் அஜித் மேல் உள்ள ஈர்ப்பு அடிமட்ட ரசிகர்களுக்கு குறையவில்லை ...


குடும்பத்தோடு பார்ப்பதற்கு விஜய் படங்கள் தான் மினிமம் கேரண்டி . அதில் பாட்டு , டான்ஸ் , காமெடி என்று சாமானியனை கவரும் அம்சங்கள் நிறையவே உண்டு . விஜய்யிடம் எப்போதும் ஒரு துறுதுறுப்பு இருந்து கொண்டே இருக்கும் . அஜித் தை விட மூன்று வயதே( 41 )  சின்னவராக இருந்தாலும்  பார்ப்பதற்கு இன்னும் சின்னப்பையன் போல இருப்பது விஜய்க்கு ப்ளஸ் . அதனால் தான் ஏகன் படத்தில் கல்லூரிக்கு போன அஜித்தை அவர் ரசிகர்களே கிண்டல் செய்த போதும் விஜயை காவலனில் யாரும் கிண்டல் செய்ததில்லை . பலரால் கிண்டல் செய்யப்பட்ட வேலாயுதம் , புலி போன்ற படங்கள் கூட 60 , 70 கோடிக்கு மேல் வசூலை குவித்திருக்கின்றன ...

கிட்டத்தட்ட இருவருமே சம பலத்தோடு இருப்பது போல பட்டாலும் விஜய்யின் 50 வது படமான சுறா சுருட்டி வாரிக்கொள்ள அஜித்தின் 50 வது படமான மங்காத்தா சக்கை போடு போட்டது . அஜித்துக்கு இந்த வெற்றி மற்றுமொரு திருப்புமுனை . விஜய் ரசிகர்கள் அஜித்தின் மிகப்பெரிய ஹிட்டான மங்காத்தா, ஆரம்பம் இரண்டுமே அர்ஜுன் மற்றும் ஆர்யா இருந்ததால் அஜித்தின் தனிப்பட்ட வெற்றி கிடையாது என்றும் சொல்கிறார்கள் . இது ஒரு சப்பை காரணம் போல் பட்டாலும் விஜய் சோலோ ஹீரோ வாக நடித்த துப்பாக்கி , கத்தி இரண்டுமே மிகப்பெரிய ஹிட் என்பதையும் மறுக்க முடியாது . கத்தி , துப்பாக்கி இரண்டுமே விஜய் எனும் ஹீரோவையும் தாண்டி  படமாகவும் நல்ல படங்கள் . வேதாளத்தை நிச்சயம் அந்த வரிசையில் சேர்க்க முடியாது . ஆனாலும் அந்த படங்களை தாண்டி வேதாளம் வசூலைக் குவித்ததைத்  தான் அஜித் தின் பலம் என்கிறார்கள் . அதாவது விஜய் ஒரு படம் ஹிட் கொடுக்க கதை , திரைக்கதை , இயக்கம் எல்லாமுமே கை கொடுக்க வேண்டியிருக்கிறது , அதாவது அவர் மெனெக்கெட வேண்டியிருக்கிறது . ஆனால் தல ஸ்க்ரீனில் நின்னாலே போதும் படம் ஹிட் என்கிற கருத்து பரவலாக நிலவுகிறது . இது ஆரோக்கியமான விஷயமாக இல்லாமல் போனாலும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு தேவையான ஸ்க்ரீன் ப்ரெசென்சில் அஜித் முன்னே நிற்கிறார் . அதனால் தான் சக ஹீரோக்களே தல தல என்று அஜித்தை கொண்டாடுகிறார்கள் ...

இரண்டு ஹீரோக்களையும் இவ்வளவு  நேரம் அலசினாலும் இறுதி முடிவை மக்கள் கையிலே விட்டு விடுகிறேன் . மக்கள் தீரப்பே மகேசன் தீர்ப்பு . இந்த பதிவுக்கு கீழ் யார் பெஸ்ட் என்கிற தலைப்பில் அஜித் , விஜய் இருவரின் பெயரும் இருக்கும் . நீங்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அந்த புள்ளியை அழுத்தவும் . வருகிற 18 ஆம் தேதியோடு வாக்கெடுப்பு முடிவடையும் . இன்னும் ஐந்து நாட்களே இருகின்றன . யார் பெஸ்ட் ?...
தேர்ந்தெடுப்பதற்கு முன் கீழே உள்ள முந்தைய பதிவுகளையும் படிக்கவும் ...


அஜித் Vs விஜய் (1) - AJITH Vs VIJAY ...

அஜித் Vs விஜய் (2) - AJITH Vs VIJAY ...

அஜித் Vs விஜய் (3) - AJITH Vs VIJAY ...
11 November 2015

வேதாளம் - VEDHALAM - வியாபாரம் ...


வீரம் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சிறுத்தை சிவா வுடன் அஜித் சேர்ந்திருக்கும் மற்றுமொரு மாஸ் படம் வேதாளம் . நார்மலாகவே நல்ல ஒப்பனிங் கிடைக்கும் அஜித்துக்கு இது தீபாவளி ரிலீஸ் என்பதால் உலகநாயகன் படத்தையே ஓரங்கட்டும் அளவிற்கு மிகப் பெரிய ஒப்பனிங் கிடைத்திருக்கிறது . ஸ்டோரியை நம்பாமல் அஜித்தின் தெறி மாஷை மட்டும் நம்பி வந்திருக்கும் படம் நம்மை திருப்திப்படுத்துமா ? பார்க்கலாம் ...

கொல்கொத்தாவிற்கு தங்கை தமிழ் ( லக்ஷ்மிமேனன் ) உடன் வந்து செட்டில் ஆகும் கணேஷ் ( அஜித்குமார் ) தங்கை மேல் பயங்கர பாசத்தோடு படு பாந்தமாக காரோடு வாழ்க்கையையும் ஓட்டிக்கொண்டிருக்கிறார் . தங்கை செண்டிமெண்டுக்கு நடுநடு வே இண்டர்நேஷனல் தாதாவின்
( ராகுல்தேவ் ) தம்பிகளை கண்ணாமூச்சி ரே ரே என்று அன்பாக ஆட்டத்துக்கு அழைத்து போட்டுத்தள்ளுகிறார் . அமுல்பேபி போல இருப்பவர் ஏனிப்படி குழந்தைகளை பயமுறுத்தும் அளவிற்கு அட்ராசிட்டி செய்கிறார் என்பதை இண்டர்வெலில் பெரிய ஜெர்க் கொடுத்து பிறகு  ஸ்லோவாக சொல்லி முடிப்பதே வேதாளம் ...

அஜித்துக்கு ரசிகர் மன்றத்தை கலைத்தும் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது கடவுள் வரம் . மனுஷன் நிச்சயம் அவரை நம்பி வரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை  . அமைதியாக  வரும் கனேசனாகவும் , ஆக்சன் அடாவடி  வேதாளமாகவும் பின்னி பெடலெடுக்கிறார் . அப்படியிப்படி தொங்கும் வேதாளத்தை தூக்கி நிறுத்துவது இவரே . அதேசமயம் சிரிக்கும் போது  ரசிக்க வைப்பவர் சில சீன்களில் சீரியசாக பேசும் போதும் நமக்கு சிரிப்பு வருவதை தவிர்த்திருக்கலாம் . இவரை சரியாக பயன்படுத்தியிருக்கும் இயக்குனர் கொஞ்சம் கதை , திரைக்கதைக்கும் மெனக்கட்டிருந்தால் படம் மரண மாஸாக இருந்திருக்கும் . வீரம் படத்தில் இருந்த க்ரிப் கூட இதில் ஏனோ மிஸ்ஸிங் ...


லக்ஷ்மிமேனன் ஹீரோயின் இல்லையே தவிர அதுக்கும் மேலான ரோல் . தங்கையாக அஜித்துடன் இவர் கெமிஸ்ட்ரி சிம்ப்ளி சூப்பர் . அஜித் அடிபட்டவுடன் நன்றாகவே துடிக்கிறார் . பொதுவாக மாஸ் ஹீரோ படங்களில் ஹீரோயின்கள் ரெண்டு டூயட்டாவது வருவார்கள் . அதில் ஒரு குத்தாட்டம் கண்டிப்பாக இருக்கும் . இந்த படத்தில் பாவம் ஸ்ருதிஹாசனுக்கு அந்த வாய்ப்பு  கூட இல்லை . சூரி வடிவேலுவை காப்பியடிப்படிதை நிறுத்தினால் தேவலை . சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று இவர் அடிக்கும் லூட்டிகளை விட ஐந்து நிமிடமே வந்தாலும் கலகலக்க வைக்கிறார் மொட்டை ராஜேந்திரன் . பெரிய பில்டப்புடன் அறிமுகமாகும் வில்லன் ஃபாரினிலுருந்து வந்து வழக்கம் போல ஹீரோவிடம் அடிபட்டு சாகிறார் . ஃப்ளாஷ்பேக் பெரிதாக கவராவிட்டாலும் தம்பிராமையாவின் நடிப்பு கச்சிதம் ...

அனிருத் இசையில் ஆலுமா டோலுமா ஆட வைத்தால் ரவிசங்கர் குரலில் உயிர் நதி உருக வைக்கிறது . மற்றபடி பி,ஜி நிறைய இடங்களில் வீரம் படத்தை நினைவுபடுத்துகிறது . அஜித் , விஜய் என்றல்ல எந்த ஒரு மசாலா படத்துக்கும் லாஜிக் பார்ப்பதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம் . அதையெல்லாம் பப்ஸ் சாப்பிட்டுவிட்டு கையை உதறுவது போல விட்டுவிட வேண்டும் . இந்த படத்தில் மாஸ் ஹீரோவை சரியாக பயன்படுத்திய சிவா சீன்களையும் இன்னும் மாஸாக அமைத்திருந்தால் படம் வேறொரு லெவெலில் இருந்திருக்கும் . குறிப்பாக இன்டர்வெல் ப்ளாக்கும் , அதை தொடர்ந்து வரும் ப்ளாஷ்பேக்கும்  பத்து  சவரன்  சங்கிலியை இரவில்  தொலைத்து விட்டு பகலில் சாவகாசமாக தேடுவது போல இருக்கிறது ...

வில்லன் கூடாரத்துக்குள் இருந்து தங்கையை அஜித் புத்திசாலித்தனமாக மீட்பது  , கடைசி வரை தன்னுடைய அதிரடி முகத்தை தங்கைக்கு காட்டாதது போன்றவை பாட்ஷா , ஏய் வகையறா  டெம்ப்ளேட் கதைக்குள்ளும் கவனிக்க வைக்கின்றன . ரஜினி , விஜய் என்று மாஸ் ஹீரோக்கள் தங்கச்சி பாசம் படம் பண்ணும் போது தலயும் பண்ணிட்டு போட்டுமே ! . கண்டைனரில் பெண்களை கடத்துவது , தம்பியை கொன்றவனை பிடிக்க வில்லன் ஏதோ ஒசாமா பின் லேடனை பிடிப்பது போல ஸீன் போடுவதெல்லாம் நம்மை தியேட்டரை விட்டு தெறிக்க வைக்கின்றன . முழுக்க முழுக்க அஜித் தை  நம்பி பழைய முருங்கை மரத்தில் வேதாளம் ஏறியிருந்தாலும் சேதாரம் குறைவாக இருப்பதால் வியாபாரத்தில் பிரச்சனை  இருக்காது ...

ஸ்கோர் கார்ட் : 41

ரேட்டிங் : 2.75 * / 5 * 

10 November 2015

தூங்காவனம் - THOONGAVANAM - தூள் வனம் ...


பொதுவாக ஹாலிவுட் படங்களிலிருந்து இன்ஸ்பைர் ஆகி அல்லது சுட்டு இங்கே தனது கதை , திரைக்கதையில் அவ்வைசண்முகி , தெனாலி , பஞ்சதந்திரம் என்று படமெடுத்து ஹிட் ஆக்கும் உலகநாயகன் முதன்முறையாக ஒரு ஃப்ரெஞ்ச் படத்தை ( Sleepless night ) வாங்கி திரைக்கதை அமைத்து ! தன் உதவி இயக்குனர் ராஜேஸ் ம செல்வா வை வைத்து இயக்கியிருக்கிறார் . இதே போல நேர்மையாக அவர் நிறைய நல்ல படங்களை வாங்கி இங்கே தரமாக ரீ மேக்கினால் தமிழ் சினிமாவுக்கு நல்லது..

ஒரு நாள் இரவில் காப் & மாஃபியா கேங் இடையே நடக்கும் மோதலே தூங்காவனம் . மாஃபியா விடமிருந்து திவாகர் ( கமல்ஹாசன் ) போதைப்பொருளை கடத்த பதிலுக்கு விட்டல் ராவ் ( பிரகாஷ்ராஜ் ) கமலின் மகனை கடத்திவிடுகிறார் . கடத்திய போதைப்பொருளும் கை நழுவிப் போய் விட மகனை கமல் மீட்டாரா ? என்பதை தனது வேகமான திரைக்கதையால் படு ஸ்டைலிஷாக சொல்லியிருக்கிறார் கமல் ...


பாபநாசம் படத்திற்கு பிறகு அதே போல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் வித் எமோஷனல் டச் படம் கமலுக்கு கிடைத்தது பார்ப்பவர்களுக்கு விருந்து . அவர் எங்கும் வானத்தில் எகிறிக் குதித்து யாரையும் அடிக்கவில்லை ( அதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தும் ) , மகனை மீட்பேன் என்று பஞ்ச் டயலாக் எல்லாம் பேசவில்லை ஆனால் படம் முழுவதும் ஒரு ஹீரோயிசத்தை நிலை நாட்டியிருப்பது கமல் எனும் லெஜென்டால் மட்டுமே முடியும் . கோபம் , வீரம், சோகம் என நிறைய உணர்சிகளை அவர் கண்களாலேயே காட்டியிருப்பது கிளாசிக் . ஒவ்வொன்றையும் விலாவாரியாக விளக்காமல் ஆடியன்ஸ் மேல் நம்பிக்கை வைத்து திரைக்கதை அமைத்திருப்பது கமலின் மெச்சூரிட்டி ...

கமலை சேஸ்  செய்யும் காப் ரோலில் த்ரிஷா படு ஃபிட் . சிரித்துக் கொண்டே வில்லத்தனம் செய்யும் பிரகாஷ் ராஜ் , அவரது உதவியாளராக வந்து கிடைக்கும் கேப்பில் சிரிக்க வைக்கும் குரு சோமசுந்தரம் , காப் திரவியமாக கிஷோர் , கமலின் கொலீக் மணியாக யூகி சேது , சின்ன ரோலில் வந்தாலும் கவனிக்க வைக்கும் சாம்ஸ் மற்றும் சம்பத் , ஜெகன் , ஆஷா என சின்ன படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் படத்திலிருந்து கொஞ்சம் கூட விலகாமல் நம்மை ஒன்ற வைக்கிறார்கள் . கமலின் மகனாக வரும் அப்துல்லா , பப்பில் ஏதோ பிராண்டி வாங்கி அடிப்பது போல மவுத் கிஸ் அடிக்கும் மது ஷாலினி என இருவருமே ப்ளஸ் ...

முதல் சீனிலேயே கதைக்குள் சென்று விடும் படம் இடைவேளை வரை விறுவிறுப்புடன் அதே நேரம் சஸ்பென்ஸ் வைக்க தவறாமல் செல்கிறது இடைவேளைக்குப் பின் கொஞ்சம் வேகம் குறைவது போல் பட்டாலும் நம் கண்களை திரையில் இருந்து எடுக்க விடாமல் பார்த்துக்கொள்கிறார் கமல்.
சம்பவ இடத்திற்கு சென்று கமல் , யூகி சேது நடந்ததை விசாரிக்கும் ஸீன் , , நிமிஷ கதிக்குள் எல்லோரையும் அடித்துவிட்டு கமல் தப்பிக்கும் ஸீன் ,, கமல் - த்ரிஷா அண்ட் கமல் - கிஷோர் சண்டை போட்டுக்கொள்ளும் ஸீன் என படத்தில் நிறையவே மாஸ்டர் பீஸ்கள் . சானு ர்கீஷின் ஒளிப்பதிவு , ஜிப்ரானின் பின்னணி இசை இரண்டுமே படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து செல்கின்றன ...


படம் முழுவதுமே பெரும்பாலும் ஒரு நாள் இரவு ஹோட்டலில் நடந்தாலும் பார் , ரெஸ்டாரன்ட் , பப் என வரும் ரிப்பீட்டட் லொகேஷன்ஸ் கொஞ்சம் சலிப்பை தருவதை மறுப்பதற்கில்லை . கமல் எதிலுமே ஒரு நேர்த்தியை எதிர்பார்ப்பார் என்பது யாவரும் அறிந்ததே . ஆனால் ஒரு சீனில் டாய்லெட்டில் கக்கா போய்க்கொண்டிருப்பவன் மேல் விழுந்து கமல் ஓடுவார் . அதற்கு அடுத்த ஷாட்டில் தண்ணீர் விடாததால் அப்படியே கிடக்கும் கக்கா வை கூட காட்டும் அளவிற்கு நேர்த்தியாக இருப்பார் ( தேவையா ?! ) என எதிர்பார்க்கவில்லை .

உத்தமவில்லன் ஒடாததால் கமலுக்கு தயாரிப்பாளராக இந்த படம் முக்கியமான படம் . அப்படியிருக்க மனுஷன் போன வெள்ளிக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்யாமல் எதுக்கு தேவையில்லாமல் வேதாளத்துடன் தீபாவளிக்கு வரிந்து கட்டுகிறார் என்று ஓர் ஆதங்கம் இருந்தது . வேதாளத்தை விட மிக குறைவான ஒப்பணிங்கே படத்துக்கு கிடைத்திருப்பதோடு நிறைய தியேட்டர்களில் வேதாள பிரம்மாண்டத்துக்கு முன் ஏதோ புது பட ஹீரோ போஸ்டர் போல கமல் படம் இருந்ததை பார்த்த போது  50 வருடத்துக்கு மேல் சினிமா அனுபவம் , பல வெற்றிகள் , விருதுகள் , உலக அளவிலான ரசிகர்கள் இதெல்லாம் பொய்யா ? வெறும் நடிப்பா என புதிய பறவை சிவாஜி ரேஞ்சுக்கு அந்த ஆதங்கம் கொஞ்சம் அதிகமானது . ஆனால் படத்தை பார்த்த பிறகு கமல் தன்  மேல் மட்டுமல்ல தனது ரசிகர்களின் ரசனை  மேலும் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது புரிகிறது  . மொத்தத்தில் வழக்கமான காப் கதையாக இருந்தாலும் அதை எடுத்த விதத்தில் கமல் நடித்திருக்கும் தூங்காவனம் தூள் வனம் ...

ஸ்கோர் கார்ட் : 44

ரேட்டிங்   : 3.5* / 5* 

( படம் முடிந்த பிறகு வரும் " நீயே உனக்கு ராஜா " பாடல் ஹைலைட் )
5 November 2015

அஜித் Vs விஜய் (3) - AJITH Vs VIJAY ...
விஜய் 

பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்பதால் சிறு வயதிலேயே அவருடைய படங்களில் தலை காட்டினார் விஜய் . 1992 இல் தந்தை இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு சரியாக ஓடா விட்டாலும் ஆக்ரோஷமான இளைஞனாக நடித்து முதல் படத்திலேயே கவனிக்க வைத்தார் . பிறகு அப்பாவின் படத்தில் தொடர்ந்து நடித்தவருக்கு மூன்றாவது படமான ரசிகன் தனி ஹீரோவாக முதல் கமார்சியல் ஹிட் . தந்தையின் நிழலில் பயணத்தை தொடங்கியிருந்தாலும் தனக்கென்று தமிழ் சினிமாவில் தனியிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இந்த இளைய தளபதி ...

அதன் பிறகு அஜித் உடன் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே உட்பட சொல்லிக்கொள்ளும் படியாக எந்த படமும் இல்லாத நேரத்தில் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக , பாசில் இயக்கத்தில் , இசைஞானி இசையில் வந்த காதலுக்கு மரியாதை என அடுத்தடுத்து ஹிட்கள் பெண்களுக்கிடையே இவரை லவ்வபிள் பாயாக மாற்றியது. அதுவும் இவர் சொந்தக் குரலில் பாடிய பாடல்களும் ( இதை பாடிக்கொண்டிருப்பது உங்கள் விஜய் என்று மறக்காமல் போட்டுவிடுவார்கள் ) நடனமும் இளைஞர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. அம்மா ஷோபா பாடகி என்பதாலோ என்னமோ இவருடைய படங்களில் பாடல்களுக்கு என்றுமே விஜய் தனிக்கவனம் செலுத்துவார் . பிறகு லவ் டுடே , ஒன்ஸ் மோர் என்று தொடர் வெற்றிப்படங்கள் கொடுத்தவருக்கு மீண்டும்  நேருக்கு நேர் மூலம் அஜித்துடன் சேரும் வாய்ப்பு கிடைத்தும் அஜித் விலகிக் கொண்டதால் சூர்யா வின் அறிமுகம் ரசிகர்களுக்கு கிடைத்தது ...

ப்ரியமுடன் , துள்ளாத மனமும் துள்ளும் என்று வெற்றிகள் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக் கொண்டதோடு தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்களின் செல்லப் பிள்ளையாக மாறிக் கொண்டிருந்த விஜய் மேல் யார் கண் பட்டதோ கே.எஸ்.ரவிகுமார் , பாசில் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களான மின்சாரகண்ணா , கண்ணுக்குள் நிலவு இரண்டுமே தோல்வியை தழுவின . எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000 இல் வந்த குஷி மீண்டும் அவரை குஷிப்படுத்தியது . இப்படி அஜித் போல விஜய்க்கும் வெற்றி , தோல்விகள் மாறி மாறி வந்தாலும் 2001 - 2003 வரை ஷாஜஹான் , தமிழன் என தொடர் தோல்விகள் விஜயை வதைக்க ஆரம்பித்தன . தோல்விகளால் துவண்டிருந்தவரை மலை போல நிமிர்த்தியது புதுமுக இயக்குனர் ரமணா இயக்கத்தில் வெளிவந்த திருமலை . பக்கா மாஸ் ஹீரோவாக விஜயை ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்தியது இந்தப் படம் எனலாம்  . அதன் பிறகு கில்லி , போக்கிரி என நிறைய மெகா ஹிட்கள் வசூலை அள்ளிக் குவித்தன ...

விஜய் நடித்த கில்லி ,  போக்கிரி என ரீமேக் படங்கள் பெரிய ஹிட் அடித்தாலும் தெலுகு நடிகர் மகேஷ்பாபு வை பார்த்து அப்படியே உல்டா அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தன . அஜித் துக்கு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் சக்சஸ் என்றால் விஜயக்கோ அழகிய தமிழ் மகன் , வில்லு ஏன் லேட்டஸ்ட் புலி உட்பட மூன்றுமே ஃப்ளாப்புகள் . கதையை தவிர இரண்டு கேரக்டர்களுக்குமே எந்தவொரு வித்தியாசத்தையும் காட்ட விஜய் முற்படாததும் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது . பொதுவாக விஜய்க்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல ஈசியாக இருந்ததில்லை ...

விஜய்க்கு மிருக தோஷமோ என்னமோ குருவி , 50 வது படமான சுறா , பெரிய பில்ட் அப்புடன் வந்த புலி என எல்லாமே தோல்வி அடைந்ததோடு நெட்டிசன்களால் கழுவி , கழுவி ஊற்றப்பட்டன . இருப்பினும் ரஜினிக்கு பிறகு படத்தை எடுப்பவருக்கும் , வாங்குபவருக்கும் மினிமம் கேரண்டி யை கொடுக்கும் படியான ஸேஃப் பெட்டாகவே விஜய் படங்கள் அமைந்தன . குடும்பத்துடன் பார்க்கும் படியாக இவர் படங்கள் இருப்பதும்  , எம்.ஜி.ஆர் போல தன் மேல் நெகடிவ் ஸேட் விழாமல் ஒரு கிளீன் இமேஜை இவர் ஸ்க்ரீனில் மெய்ண்டைன் பண்ணுவதும் முக்கிய காரணமாக  இருக்கலாம் . அரசியல் ஆசையால்  இவர் படங்கள் சர்ச்சைக்கு உள்ளானாலும் தனது ஆக்சன் , டேன்ஸ் , காமெடி என்று காசு கொடுத்து தியேட்டருக்கு  வரும் பாமர ரசிகனை இவரது படங்கள் பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை எனலாம் ...

அறிமுகம்       :  நாளைய தீர்ப்பு 
முதல் ஹிட்  :   ரசிகன் 
ப்ரேகிங் பாயிண்ட் :  பூவே உனக்காக 
தளபதி  அவதாரம்         :  திருமலை 
அறிமுக இயக்குனர் :  எஸ்.ஏ.சந்திரசேகர் 
பேவரட் இயக்குனர்  :  அப்போது எஸ்.ஏ.சி , இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் 
100 க்ரோர் கிளப் :  துப்பாக்கி , கத்தி 
அடுத்த ரிலீஸ் : அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் 

அடுத்த பதிவில் அஜித் Vs விஜய் யார் பெஸ்ட் ? ...

Related Posts Plugin for WordPress, Blogger...