11 November 2015

வேதாளம் - VEDHALAM - வியாபாரம் ...


வீரம் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சிறுத்தை சிவா வுடன் அஜித் சேர்ந்திருக்கும் மற்றுமொரு மாஸ் படம் வேதாளம் . நார்மலாகவே நல்ல ஒப்பனிங் கிடைக்கும் அஜித்துக்கு இது தீபாவளி ரிலீஸ் என்பதால் உலகநாயகன் படத்தையே ஓரங்கட்டும் அளவிற்கு மிகப் பெரிய ஒப்பனிங் கிடைத்திருக்கிறது . ஸ்டோரியை நம்பாமல் அஜித்தின் தெறி மாஷை மட்டும் நம்பி வந்திருக்கும் படம் நம்மை திருப்திப்படுத்துமா ? பார்க்கலாம் ...

கொல்கொத்தாவிற்கு தங்கை தமிழ் ( லக்ஷ்மிமேனன் ) உடன் வந்து செட்டில் ஆகும் கணேஷ் ( அஜித்குமார் ) தங்கை மேல் பயங்கர பாசத்தோடு படு பாந்தமாக காரோடு வாழ்க்கையையும் ஓட்டிக்கொண்டிருக்கிறார் . தங்கை செண்டிமெண்டுக்கு நடுநடு வே இண்டர்நேஷனல் தாதாவின்
( ராகுல்தேவ் ) தம்பிகளை கண்ணாமூச்சி ரே ரே என்று அன்பாக ஆட்டத்துக்கு அழைத்து போட்டுத்தள்ளுகிறார் . அமுல்பேபி போல இருப்பவர் ஏனிப்படி குழந்தைகளை பயமுறுத்தும் அளவிற்கு அட்ராசிட்டி செய்கிறார் என்பதை இண்டர்வெலில் பெரிய ஜெர்க் கொடுத்து பிறகு  ஸ்லோவாக சொல்லி முடிப்பதே வேதாளம் ...

அஜித்துக்கு ரசிகர் மன்றத்தை கலைத்தும் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது கடவுள் வரம் . மனுஷன் நிச்சயம் அவரை நம்பி வரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை  . அமைதியாக  வரும் கனேசனாகவும் , ஆக்சன் அடாவடி  வேதாளமாகவும் பின்னி பெடலெடுக்கிறார் . அப்படியிப்படி தொங்கும் வேதாளத்தை தூக்கி நிறுத்துவது இவரே . அதேசமயம் சிரிக்கும் போது  ரசிக்க வைப்பவர் சில சீன்களில் சீரியசாக பேசும் போதும் நமக்கு சிரிப்பு வருவதை தவிர்த்திருக்கலாம் . இவரை சரியாக பயன்படுத்தியிருக்கும் இயக்குனர் கொஞ்சம் கதை , திரைக்கதைக்கும் மெனக்கட்டிருந்தால் படம் மரண மாஸாக இருந்திருக்கும் . வீரம் படத்தில் இருந்த க்ரிப் கூட இதில் ஏனோ மிஸ்ஸிங் ...


லக்ஷ்மிமேனன் ஹீரோயின் இல்லையே தவிர அதுக்கும் மேலான ரோல் . தங்கையாக அஜித்துடன் இவர் கெமிஸ்ட்ரி சிம்ப்ளி சூப்பர் . அஜித் அடிபட்டவுடன் நன்றாகவே துடிக்கிறார் . பொதுவாக மாஸ் ஹீரோ படங்களில் ஹீரோயின்கள் ரெண்டு டூயட்டாவது வருவார்கள் . அதில் ஒரு குத்தாட்டம் கண்டிப்பாக இருக்கும் . இந்த படத்தில் பாவம் ஸ்ருதிஹாசனுக்கு அந்த வாய்ப்பு  கூட இல்லை . சூரி வடிவேலுவை காப்பியடிப்படிதை நிறுத்தினால் தேவலை . சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று இவர் அடிக்கும் லூட்டிகளை விட ஐந்து நிமிடமே வந்தாலும் கலகலக்க வைக்கிறார் மொட்டை ராஜேந்திரன் . பெரிய பில்டப்புடன் அறிமுகமாகும் வில்லன் ஃபாரினிலுருந்து வந்து வழக்கம் போல ஹீரோவிடம் அடிபட்டு சாகிறார் . ஃப்ளாஷ்பேக் பெரிதாக கவராவிட்டாலும் தம்பிராமையாவின் நடிப்பு கச்சிதம் ...

அனிருத் இசையில் ஆலுமா டோலுமா ஆட வைத்தால் ரவிசங்கர் குரலில் உயிர் நதி உருக வைக்கிறது . மற்றபடி பி,ஜி நிறைய இடங்களில் வீரம் படத்தை நினைவுபடுத்துகிறது . அஜித் , விஜய் என்றல்ல எந்த ஒரு மசாலா படத்துக்கும் லாஜிக் பார்ப்பதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம் . அதையெல்லாம் பப்ஸ் சாப்பிட்டுவிட்டு கையை உதறுவது போல விட்டுவிட வேண்டும் . இந்த படத்தில் மாஸ் ஹீரோவை சரியாக பயன்படுத்திய சிவா சீன்களையும் இன்னும் மாஸாக அமைத்திருந்தால் படம் வேறொரு லெவெலில் இருந்திருக்கும் . குறிப்பாக இன்டர்வெல் ப்ளாக்கும் , அதை தொடர்ந்து வரும் ப்ளாஷ்பேக்கும்  பத்து  சவரன்  சங்கிலியை இரவில்  தொலைத்து விட்டு பகலில் சாவகாசமாக தேடுவது போல இருக்கிறது ...

வில்லன் கூடாரத்துக்குள் இருந்து தங்கையை அஜித் புத்திசாலித்தனமாக மீட்பது  , கடைசி வரை தன்னுடைய அதிரடி முகத்தை தங்கைக்கு காட்டாதது போன்றவை பாட்ஷா , ஏய் வகையறா  டெம்ப்ளேட் கதைக்குள்ளும் கவனிக்க வைக்கின்றன . ரஜினி , விஜய் என்று மாஸ் ஹீரோக்கள் தங்கச்சி பாசம் படம் பண்ணும் போது தலயும் பண்ணிட்டு போட்டுமே ! . கண்டைனரில் பெண்களை கடத்துவது , தம்பியை கொன்றவனை பிடிக்க வில்லன் ஏதோ ஒசாமா பின் லேடனை பிடிப்பது போல ஸீன் போடுவதெல்லாம் நம்மை தியேட்டரை விட்டு தெறிக்க வைக்கின்றன . முழுக்க முழுக்க அஜித் தை  நம்பி பழைய முருங்கை மரத்தில் வேதாளம் ஏறியிருந்தாலும் சேதாரம் குறைவாக இருப்பதால் வியாபாரத்தில் பிரச்சனை  இருக்காது ...

ஸ்கோர் கார்ட் : 41

ரேட்டிங் : 2.75 * / 5 * 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...