12 February 2013

கமலுக்கு ஒரு கடிதம் ...
டியர் கமல் ,
                       உங்களின் பெயருக்கு முன்னால் பத்மஸ்ரீ , டாக்டர் என்றெல்லாம் போட்டு என்னை போன்ற சாதாரண ரசிகனுக்கும் உங்களுக்குமுள்ள இடைவெளியை மேலும் அதிகப்படுத்த விரும்பாத காரணத்தால் கமல் என்றே விளித்துள்ளேன் .  " தடைகளை வென்றே சரித்தம் படைப்பான் " என்று வைரமுத்து விஸ்வரூபம் படத்திற்கு எழுதிய பாடல் வரிகள் உங்கள் நிஜ வாழ்க்கையிலும் அப்படியே பொருந்தும் என்று நிச்சயம் நீங்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் . நான்கு தேசிய விருதுகள்  , எண்ணிலடங்கா  பிலிம் பேர் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகளின்  விருதுகள் , 50 வருடங்களாக தமிழ் சினிமாவிற்காக தன்னையே  அர்ப்பணித்தவர் , ஒழுங்காக வருமான வரி செலுத்தும் நடிகர் , ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றிய முதல் நடிகர் போன்ற பெருமைகளை எல்லாம் தாண்டி ஒவ்வொரு படத்திற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறீர்கள் என்கிற காரணத்துக்காகவே உங்களை அதிகம் மதிக்கிறேன் ...

இன்று விஸ்வரூபம் படத்திற்கு எதிரான தடையே பெரிய விளம்பரத்தை அள்ளிக் கொடுத்து ஓரளவு மட்டுமே வெற்றியடைந்திருக்க வேண்டிய படத்தை உலகளாவிய வெற்றிக்கு தள்ளியிருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் . உங்கள் படம் தடை செய்யப்பட போதும்  , நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று நீங்கள் கதறிய போதும் துடித்த கோடானு கோடி பேர்களில் ஒருவனாக இருந்தாலும் இன்று  உணர்ச்சி கொந்தளிப்பு அடங்கி  பிரச்சனையின் சூடு தணிந்த பிறகு உங்கள் பக்கம் இருக்கும் தவறுகளையும்  சுட்டிக் காட்டுவது ஒரு ரசிகனாக மட்டுமல்லாமல் சமூகத்தில்  ஒருவனாக ஒவ்வொருவரது  கடமை என்றே நினைக்கிறேன்  . அதனால் தான் முன்பே யோசித்திருந்தாலும் தமிழகத்தில் படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன பிறகு இந்த கடிதத்தை எழுதுகிறேன் . " அடுத்த  நொடி ஒழித்து வைத்திருக்கும் ஆச்சர்யம் தான் வாழ்க்கை " என்று நீங்கள் அன்பே சிவம் படத்தில் சொன்னது போல உங்களின் விஸ்வரூப பயணம் ஆரம்பத்திலிருந்தே உங்களை ஆச்சர்யத்திற்க்கும்  , அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி வந்திருந்தாலும் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்ற வாக்கினை நீங்கள்  நினைவு கொள்வீர்கள் என நம்புகிறேன் . அந்த நம்பிக்கையில் சில கேள்விகளை  உங்கள் முன் வைக்கிறேன்...

தனியார் தொலைக்காட்சிகளையும் , கேபிள் டிவி  யையும் எதிர்த்து திரையுலகமே திரண்ட போது  அது காலத்தின் கட்டாயம் என்று நீங்கள் குரல் கொடுத்தீர்கள் , அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு . இப்பொழுதும் டி.டி.எச்  சில் படத்தை வெளியுடுவதன் மூலம் தயாரிப்பளர்களுக்கு புது வருவாய்க்கான வாசலை திறந்து வைத்திருக்கிறீர்கள் . இதுவும் விஞ்ஞான வளர்ச்சி தான் என்றாலும் இத்தனை நாட்கள் உங்களை தூக்கிப் பிடித்த விநியோகஸ்தர்களையும் , திரையரங்கு உரிமையாளர்களையும் தடாலடியாக தூக்கியடித்து விட்டு உடனடி முடிவு எடுத்ததும்  , ஒரு தயாரிப்பாளராக  உங்கள பொருளை விற்கும் முழு உரிமை உங்களுக்கு இருந்தாலும் இத்தனை காலம் உங்கள் வியாபாரத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களின் எண்ணங்களை கருத்தில் கொள்ளாமல் உங்களின் சுயலாபத்தில் மட்டுமே கவனமாய் இருந்ததும்  நியாயம் தானா ?  ...

உங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் தூரமில்லை என்றாலும் முழு படமும் சொன்ன தேதியில் ரிலீசாகாமல் தடை செய்யப்பட்டதற்கு  முழுக்காரணம் உங்களை தவிர யாரிருக்க முடியும் ? சென்சார் மூலம் தணிக்கை செய்யப்பட விஸ்வரூபம்  படத்தை இஸ்லாமிய அமைப்பினருக்கு போட்டுக் காட்டியதன் மூலம்  நீங்களே வரலாறு காணாத ஒரு வழக்கத்திற்கு முன்னுதாரணம் ஆகி விட்டர்கள் . இதுவே உங்களுக்கு கிடைத்த முதல் அடி . இதே போல தசாவதாரம் படத்தை இந்து அமைப்பினருக்கும் , உன்னைப் போல் ஒருவன் படத்தை இஸ்லாமிய அமைப்பினருக்கும் நீங்கள் போட்டுக் காட்டினீர்களா ? இல்லாத பொழுது இந்த தடவை மட்டும் ஏனிந்த  மாற்றம் ? படத்தை முன்கூட்டியே போட்டு காட்டுவதற்குறிய  கட்டாயத்திற்கு  நீங்கள் உள்ளானீர்கள் என்று வைத்துக் கொண்டாலும் படத்தை பார்த்து விட்டு  இஸ்லாமிய சகோதரர்கள் எனக்கு பிரியாணி தருவார்கள் , நான் என்றுமே இஸ்லாமிய அனுதாபி , படத்தை பார்க்கும்  ஒவ்வொரு முஸ்லிமும் பெருமைப்படுவார்கள் என்றெல்லாம்  அறிக்கைகள் விட்டு விட்டு படம் பார்க்கும் ஒவ்வொரு முஸ்லீமையும் தர்ம சங்கடத்திற்கு  உள்ளாகியுள்ளது தான் உங்களின் நேர்மையா ? . இந்த படத்தின்  ஹீரோவே ஒரு முஸ்லிம் தானே என்றெல்லாம் சாக்கு சொல்வது ஒருவனை  பலமாக தாக்கி விட்டு உன் இனத்தவர்களை வைத்து தானே உன்னை அடித்தேன் என்று சொல்வது போல இல்லையா ? ...

நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக  இருக்கலாம் . அது உங்களின் தனிப்பட்ட விருப்பம் ஆனால் பகுத்தறிவாளன் என்ற போர்வையில் பல  தடவை இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்யும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது ? அன்பே சிவம் படத்தில் சிவ பக்தனை வில்லனாகாவும் , உங்களை போன்ற  நாத்திகனை நல்லவனாகவும் சித்தரித்தீர்கள் .  மதம் , கடவுள் இரண்டுமே ஒருவனை நல்வழியில் கொண்டு செல்வதற்கான விஷயங்கள் . இதை பின்பற்றுபவர்கள் சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக இரண்டையும் ஒதுக்குவது மடமை . ஒரு பேச்சுக்கே எடுத்துக் கொண்டாலும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் அனைவரும் நல்லவர்களா ?  தசாவதாரம் படத்தில் கற்பனை என்ற பெயரில்  சைவ , வைணவ சண்டையை நேரில் பார்த்தது போல திரித்துக் காட்டினீர்கள். இன்றும் சிதம்பரம் சிவன் கோவிலில் பெருமாளுக்கு சிலை இருக்கிறது . ஆனால் அதை அதை கடலில் தூக்கிப் போட்டதாக கதை விட்டீர்கள் . பெரும்பாலானோரால் வணங்கப்படும் பெருமாளை  கழிவறைக்குள் தூக்கிப் போனீர்கள் . மன் மதன் அம்பு படத்தில் நல்ல நேரம் பிறக்கும் போது சர்ச் பெல்லை ஒலிக்க விட்டும் , தீய வழியில் செல்ல முடிவெடுக்கும் போது  காவி ஜிப்பாவை தொட்டுக் காட்டுவதும் தான் உங்களின் உண்மையான மதசார்பின்மையா ?

விஸ்வரூபம் படத்தில் பிராமணப் பெண்ணை அறிவாளியாகவும் , அதே சமயம் ஒழுக்கமில்லாதவளாகவும் காட்டுகுறீர்கள் . இவையிரண்டும் என்ன அந்த சாதிக்கு மட்டும் சொந்தமானவைகளா ? படத்திற்கு சம்பந்தமில்லாமல் பாடலுக்கு நடுவில் பாப்பாத்தியம்மாளை சிக்கன் சாப்பிட சொல்கிறீர்கள் . இதிலென்ன என் வீட்டிலேயே நாங்கள் எல்லா எழவையும் சாப்பிடுவோமே என்று நீங்கள் சாக்கு சொல்லலாம் . உங்களின் அடுத்த படத்தில் வீட்டிற்குள் நடக்கும் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்ட உங்களுக்கு தைரியம் இருக்கிறதா ? பிறப்பால் பிராமணரான நீங்கள் தமிழகத்தில் எங்கே தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்ற பயத்திலும் , சில பகுத்தறிவுவாதிகளை குஷிப்படுத்தவும் இது போன்ற காட்சிகளை திணித்து  கமல் - "நிஜ" நடிகன் என்பதை நிரூபிக்கிறீர்கள் . ரெட் ஓன் , லைவ் எடிட்டிங் , ஆரோ சவுண்ட் என்று உங்கள்  படங்களில் தொழில் நுட்ப புதுமைகளை புகுத்தும் நீங்கள் குறிப்பிட்ட சாதியை  மேலே பிடித்தும் , குறப்பிட்ட சாதி , மதங்களை கேலி செய்தும் உண்மையான பகுத்தறிவாளியாக இல்லாமல் பழமைவா( வியா ) தியாக இருக்கிறீர்களே ஏன் ? நான் ஒரு வியாபாரி என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் உங்களின் பகுத்தறிவாள பேச்சை பேட்டிகளோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் படங்களிலும் புகுத்துவது தான் வியாபாரத்தின் அழகா ? அல்லது தந்திரமா ? ...

உங்களுக்கு பிரச்சனை என்ற போது  பகுத்து ஆராய்ந்து கொண்டிருக்காமல் ஓடி  வந்தவர்கள் எல்லாம் உங்களை வியாபாரியாகவோ அலல்து பகுத்தறிவாளனாகவோ பார்க்காமல் நல்ல கலைஞனாக மட்டுமே பார்த்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் . உங்களுக்காக திரையுலகில் இருந்து முதலில் குரல் கொடுத்த உங்களின் நண்பர் ரஜினிகாந்த் ஒரு பழுத்த ஆன்மீகவாதி என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை . அவர் படங்களில் இது போல ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய காட்சிகளை சுட்டிக்காட்ட முடியுமா ? பாபா படத்தில் அவர் புகை பிடிப்பதற்கு எதிர்ப்பு வந்ததற்கு பிறகு இன்று வரை அவர் திரையில் அதை தவிர்த்து வருவதே  அவரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்று . ஆனால் நீங்களோ விஸ்வரூபம் 2 வெளிவரும் போது பிரச்சனை ஏற்பட்டால் நாட்டை விட்ட சென்று விடுவேன் என எமோஷனல் ப்ளாக்மெயில் செய்கிறீர்கள் . நான் உங்களின் ரசிகனாக இருந்தாலும் உண்மைகளை மறைக்க முடியுமா ?...

நான் நிச்சயம் இந்த கேள்விகளின் மூலம்  உங்களின் கடவுள் மறுப்பு கொள்கையோ, முற்போக்கு எண்ணங்களையோ மாற்றிக்கொள்ள சொல்லவில்லை , அது என் நோக்கமுமில்லை . ஆனால் உண்மையான பகுத்தறிவு  என்பது வெறும் கடவுளை மறுப்பதும் , கடவுள் நம்பிக்கையுள்ளவர்களை கேலி செய்வதும் மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் . ஹிந்துக்களின் சகிப்புத்தன்மையை மட்டுமல்ல எந்த மதத்தினரின் சகிப்புத்தன்மையையும் சுரண்டிப்பார்த்துக் கொண்டிருப்பதை கொஞ்சம் நிறுத்துங்கள் . உங்களின் சொந்த கருத்துக்களை புகுத்தாமல் உங்களால் நல்ல சினிமா எடுக்க முடியாதா ? சாதி , மதங்களை தாண்டி எங்கேயும் எப்போதும் , வழக்கு எண் 18/9 போன்ற சமூக அக்கறையுள்ள படங்கள் வரவில்லையா ?  கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டுமென்று முழுமையாக நம்பும் அதே வேளையில் உங்களை போன்ற சிறந்த கலைஞனுக்கு சமூக அக்கறையும் வேண்டுமென்று தான் எல்லோரும் நினைக்கிறோம் ...

எனக்குஅரசியல் தெரியாது என்று சொல்லும் நீங்கள் " வால்மார்ட் அனுமார் வாலில் வாய்த்த தீ போல சிறு வணிகத்தை அழித்துவிடும் " என்று சொன்ன ஒரு மாதத்திலேயே அதற்கு காரணமான ஒருவரை மறைமுகமாக " வேட்டி கட்டிய தமிழன் தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் " என்று சொன்னதில் எந்த அரசியலும் இல்லை என்று நம்ப சொல்கிறீர்களா ? ஏற்கனவே பெண்களுக்கான 33 சதவிகித ஒதுக்கீடு ஏட்டளவில் மட்டுமே இருக்கும் போது உங்களின் பேச்சு பெண்ணுரிமைக்கு எதிரானதாக இருக்கிறது ...

இறந்து பல வருடங்கள் ஆன பிறகும் எம்.ஜி.ஆர் , சிவாஜி போன்றோரை நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு காரணம் திரையிலும் அவர்கள் காட்டிய சமூக அக்கறையே என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது . சினிமாவில் சம்பாத்தித்ததை சினிமாவிலேயே போடும் தையிரியம் உள்ள கலைமகன் கமல் நீங்கள் நிச்சயம் வெறும் பணத்திற்காக மட்டும் படம் எடுக்க மாட்டீர்கள் என்பது உங்களின் உண்மையான ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே . அதே நேரம் படங்களின் வாயிலாக மற்றவரின் மனங்களை புண்படுத்தும் செயலை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் உண்மையில் நீங்கள் நாட்டை விட்டு செல்கிறீர்களோ இல்லையோ மக்கள் மனதை விட்டு சென்று விடுவீர்கள் என்ற ஆதங்கத்திலும் , இணையத்தில் உங்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நீங்கள் நன்றி சொன்னவர்கள் பட்டியலில் நானுமிருக்கிறேன்  என்கிற உரிமையிலும்  , ஒரு நாள் இல்லை ஒரு நாள் இதை படிக்கிறீர்களோ இல்லையோ உங்களின் அடுத்த முயற்சிகளில் " அனுபவமே  நல்ல ஆசான் " என்னும் சொல்லிற்க்கேற்ப  விஸ்வரூப அனுபவம் தந்த பாடங்களை உங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையுடனும் இந்த கடிதத்தை சமர்ப்பிக்கிறேன் ...

இப்படிக்கு ,
உங்கள் ரசிகர்களில் ஒருவன் ...

8 February 2013

விஸ்வரூபம் - VISHWAROOPAM - விவேகம்...


ண்மையில் விஸ்வரூபம்படம் தடை செய்யப்படாமல் இருந்திருந்தால் வழக்கமான கமல் படம் போலவே சென்டர்களில் நல்ல வரவேற்புடனும் மற்ற இடங்களில் ஆவரேஜாகவும் ஓடியிருக்கும் .ஆனால்  தமிழ்நாட்டின் தடை காரணமாக உலகம் முழுவதும் படம் வசூலை குவித்திருப்பதோடு இங்கேயும் மிகப்பெரிய ஒப்பனிங் கிடைத்திருக்கிறது . இதற்கு காரணமான அனைவருக்கும் கமல் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார் ...

தமிழ் முஸ்லிம் ஆப்கான் தீவிரவாத முஸ்லிம்களால் அமெரிக்காவிற்கு ஏற்படவிருந்த பேராபத்தை தவிர்க்கிறார் என்பதே படத்தின் கரு.அமெரிக்க வாழ் கதக் நடனக்கலைஞர் விஸ்வநாத்தை ( கமல்ஹாசன் ) அணுக்கதிர் ஆராய்ச்சியில் டாக்டரேட் பட்டம் பற்ற அவர் மனைவி நிருபமா ( பூஜா ) தன்னை போலவே கணவனுக்கும்  ஏதாவது கள்ளத்தொடர்பு இருக்கிறதா என்று வேவு பார்க்கிறார் . கிணறு வெட்ட பூதமாய் கமல் முஸ்லிம் என்பதும் அவர் ஆப்கான் தீவிரவாதிகளுக்கே பயிற்சி கொடுத்தவர் என்பதும் தெரிய வருகிறது . இதற்கான முடிச்சுகள் ஒவ்வொன்றையும் விலாவாரியாக விஸ்வரூபம் எடுத்து சொல்லியிருக்கிறார் கமல் ...


தயாரிப்பு , இயக்கம் என்று எந்த சுமைகளையும் காட்டிக்கொள்ளாமல் கமல் கதக் கலைஞராக பெண்ணியல் தன்மையோடு நடிப்பில் பிண்ணியெடுத்திருக்கிறார் . அழுது கொண்டே அடிவாங்கும் போதும் , ஆக்ரோஷமாய் அவர்களை பின்னியெடுக்கும் போதும் அட்டகாச ஆக்சன் கமல் . கதக் கலைஞராகவும் , தீவிரவாதியாகவும் நம்மை கவர்ந்த அளவிற்கு நார்மல் கமல் படத்தில் கவரவில்லை . " ஆ ... ஆ " என்று அழுவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தும் கமல் அடக்கியே வாசித்திருப்பது ஆறுதல் ... 

படத்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ் பூஜா . அழகாக இருப்பதோடல்லாமல் திறந்த மனதுடன் போல்டாக நடித்திருக்கிறார் . பொதுவாக் கமல் படங்களில் காட்டப்படும் லூசு பிராமணப் பெண்ணாக இல்லாமல் கணவனுக்கு  துரோகம் ( மனசால மட்டும் தானாம் ) செய்யும் அறிவாளி அறிவியல் பெண்ணாக வருகிறார் பூஜா . சுய லாபத்திற்காக கல்யாணம் செய்து கொண்டு , அவருக்கு துரோகம் செய்யும் பிராமணப் பெண்ணாக ஹீரோயினை காட்டும் கமல் , அது போதாதென்று அவள் அசைவம் விரும்பி சாபிடுவதாகவும் சொல்கிறார் . கதைக்கு எந்த விதத்தில் இது தேவை என்பது கமலுக்கே வெளிச்சம் . பிறப்பால் பிராமணராக இருப்பதால் அவர்களை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற அலட்சிய போக்கு கமலிடம் அதிகரித்து வருகிறது ... 

                    
ஆண்ட்ரியா படத்தில் இருக்கிறார் . பூஜாவுடன் இவர் பேசும் சில சீன்கள் க்யூட் . கமலுக்கு சரி சமமான ரோலில் ராகுல் போஸ் தமிழுக்கு நல்ல அறிமுகம் . கண் உருட்டலிலும் , தொண்டை கரகரப்பிலும் அவர் காட்டும் வில்லத்தனம் வசீகரம் . நாசர் , சேகர் கபூர் போன்றோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள் ... 

" உன்னை காணாமல் " , " விஸ்வரூபம் " போன்ற சிறப்பான பாடல்களோடு நின்று விடாமல் பின்னணி இசையிலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள் சங்கர் - எசான் - லாய் . வைரமுத்துவின்  " யாரென்று தெரிகிறதா " பாடலின் வரிகள் படத்தையும் தாண்டி  கமலின் நடைமுறை சிக்கலகளுக்கும் அருமையாய் பொருந்துகிறது . அமெரிக்க தெருக்களிலும் , ஆப்கான் குகைகளுக்குள்ளும் சானு வர்கீசின் கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது . ஆப்கான் மலைகளை நம் கண் முன் கொண்டு வருகிறார் கலை இயக்குனர் லால்குடி இளையராஜா . இவற்றோடு சேர்த்து எடிட்டிங் , கிராபிக்ஸ் என்று எல்லா டெக்னிக்கல் விஷயங்களும் உலகத்தரம் . மொத்தத்தில் கமலுடன் சேர்த்து எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்கள் ... 

தீவிரவாதி படம் என்றவுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டை , தேசப்பற்று வசனங்கள் என்றெல்லாம் வழியாமல் மிக நேர்த்தியாக தீவிரவாதிகள் பற்றிய டீட்டைளிங்கில் அசத்தியிருக்கிறார் இயக்குனர் கமல் . டாக்டருக்கு படிக்க ஆசைப்படும் மகனை போருக்கு தயார்படுத்தும் தந்தை , மனைவிக்கு வைத்தியம் பார்க்க வந்த டாக்டரையே முக்காடு போட  சொல்லும் மத வெறி பிடித்த கணவன்  , முதல் நாள் ஊஞ்சலில் சிறு பிள்ளை போல ஆடிவிட்டு மறு நாள் அமெரிக்க டாங்கியை அழிக்கும் தற்கொலை படை இளைஞன் , ஒருவனை தூக்கிலிட சொல்லி விட்டு புறாவுக்கு உணவு போடும் வில்லன் , மகன் தூக்கிலிடப்படுவதை பார்த்து கதறும் தாய் , கலவர பூமியிலும் ஒடியாடி விளையாடும்  சிறுவர்கள் என்று ஆப்கான் விவகாரங்கள் எல்லாமே களத்திலும் , எடுக்கப்பட்ட விதத்திலும் தமிழுக்கு முற்றிலும் புதிது ...


ஆப்கானை விட்டு கதை மறுபடியும் அமெரிக்காவிற்கு வந்த பிறகு கொஞ்சம் தடுமாறுகிறது . சீசியம் மூலம் வெடிகுண்டு தயாரிப்பது , அதை தயாரிப்பதன் மூலம் தங்களையே கொஞ்சம் கொஞ்சமாய் அழித்திக்கொள்ளும் ஜிகாதிகள் , புறாக்கள் மூலம் போலீசை திசை திருப்பி விட்டு வேறு இடத்தில் குண்டு வைப்பது போன்றவைகளும் புதிது தான் என்றாலும் அவற்றை சொன்ன விதத்தில் கமல் வேகம் காட்ட தவறிவிட்டார் . இடைவேளைக்கு பிறகு எல்லா சீன்களும் சப் டைட்டிலிலேயே ஓடுவதும் , கமல் கதை சொல்வதற்கு கையாண்ட விதமும் , படத்தை ரசிப்பதற்கு அறிவியல்  ஞானமும் வேண்டும் என்கிற அளவிற்கு விஸ்வரூபம் கொஞ்சம் குழப்பத்தை தருவதையும் மறுப்பதற்கில்லை ...

ஒரு போஸ்டரை மட்டும் காட்டி விட்டு  தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொள்ளும் கமல் , அமரிக்காவில் சர்வ சாதாரணமாக உலா வரும் ஆப்கான் தீவிரவாதிகள் இப்படி லாஜிக் குளறுபடிகளும் படத்தில் உண்டு ... கமல் ஹாலிவுட்டுக்குள் நுழைவதால் அமெரிக்க ஆதரவு படமெடுக்கிறார் என்று சொல்லப்பட்டாலும் ஒரு சீனில் அமரிக்கர்கள் பெண்கள்  , குழந்தைகளை தாக்க மாட்டார்கள் என்று உமர் சொன்ன அடுத்த செகண்ட் பெரிய குண்டு வீட்டை தாக்கி அனைவரும் பலியாவது கமலின் நடுநிலைக்கு சான்று ...

அதே நேரம் கதை நடப்பது ஆப்கானில் , ஆப்கான் தீவிரவாதிகள் தண்டனையை நிறைவேற்றும் போது குர்ரான் படிப்பது , ஜிஹாத் 
( புனிதப்போர் ) வெற்றியடைய தங்கள் உயிரையே பணயம் வைப்பது , அடிக்கடி காட்டப்படும் தொழுகைகள் , பிடிபட்ட அமெரிக்க பணயக்கைதியை கழுத்தை அறுத்து கொல்வது போன்றவற்றிற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றன என்றோ , ஹீரோவே ஒரு முஸ்லிம் தானே என்றோ எவ்வளவு  காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு முஸ்லிம் இடத்திலிருந்து படத்தை பார்க்கும் போது நிச்சயம் சிறிதாவது உறுத்தத்தான் செய்யும் என்பது என் எண்ணம் . சர்ச்சைகளையெல்லாம் தாண்டி படத்தை எடுத்த விதத்திலும் , அதை மார்க்கெட் செய்த விதத்திலும் , விஸ்வரூபம் பார்ட் 2 விற்கு எதிர்பார்ப் பை ஏற்ப்படுத்திய  விதத்திலும் நிறையவே விவேகம் காட்டியிருக்கிறார் எழுதி , இயக்கி , தயாரித்திருக்கும் கமல்ஹாசன் ... 

ஸ்கோர் கார்ட் : 47 


2 February 2013

கடல் - கலங்கல் ...


வணிக ரீதியான வெற்றி  , தோல்விகளை தாண்டி இந்தியாவே உற்று நோக்கும் முக்கியமான இயக்குனர்களுள் ஒருவர் மணிரத்னம் . கடல் மூலம் தனக்கு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் கை கோர்த்திருக்கிறார் . ராவணனை தொடர்ந்து மூன்று வருட காத்திருப்பில் கடல் மேல் பலன் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம் ...

நல் வழியில் செலும் தேவ ஊழியர் சாம் ( அரவிந்த்சாமி )  தீய வழியில் நம்பிக்கை கொண்ட தேவ ஊழியர் பெர்மேன்சன் ( அர்ஜுன் ) இவர்களுக்கிடையேயான முன் விரோதம் ,  விபச்சார தாயின் மறைவிற்குப் அனாதையான தாமஸ் ( கவுதம் கார்த்திக் ) , மன வளர்ச்சி குன்றிய பியா
( துளசி ) இவர்களின் காதல் இரண்டிற்குமிடையே  பிண்ணப்பட்ட  கதை கடலில் தத்தளிக்கிறது ...

கவுதம் கார்த்திக் இளைமையான தோற்றத்தால் கதைக்கு பொருந்துகிறார் . ஆக்ரோஷம் வரும் அளவிற்கு காதல் வரவில்லை . நல்ல படம் கிடைத்தால் மேலே வருவார் என்று நம்பலாம் ...


துளசியும் , அவர் கதாபாத்திரமும் படத்திற்கு மிகப்பெரிய சறுக்கல் . கர்ர்த்திக் கேரக்டருக்கு சொல்லப்பட்ட டீடைலிங்க் இவருக்கு சுத்தமாக இல்லை . மன வளர்ச்சி குன்றியவர் என்பதை அறிமுகத்தின் போதே விவரித்திருந்தால் ஒரு வேலை கொஞ்சமாவது டேமேஜை தவிர்த்திருக்கலாம் . 15 வயது என்கிறார்கள் , க்ளோஸ் அப் காட்சிகளில் காத்திக்கின் அக்கா போல இருக்கிறார் . இவர் அப்பா என்று அர்ஜுனிடம் உருகும் போது " ப்பா " என்று ந.கொ .ப.கா காமெடி வசனம் நியாபகம் வருமளவிற்கு பார்ட்டி அவ்வளவு வீக். " அடியே " பாடலில் இவரின் இடுப்பைக்  காட்டி வேறு பயமுறுத்துகிறார்கள் ...

படத்தின் ஹீரோ என்று அரவிந்தசாமியை சொல்லலாம் . உடல் இளைத்து இளைஞனாக வரும் முதல் காட்சியிலிருந்து , நடுத்தர வயது பாதிரியாராக
" அன்பின் வாசலே " என்று பாடிக்கொண்டு போகும் க்ளைமாக்ஸ் வரை மனதில் நிற்கிறார் . ஊரே இவரை அடித்துத் துரத்தும் போது நடிப்பால் பரிதாபப்பட வைக்கிறார் ...முன்னவர் போல இளமை தோற்றத்திலும் சரி , கதாபாத்திரத்திலும் சரி அர்ஜுன் நம்மை பெரிதாக கவரவில்லை . க்ளைமாக்ஸ் காட்சியில் அர்ஜுன் சைக்கோ போல நடந்து கொள்வது அபத்தத்தின் உச்சம் . குரு சோமசுந்தரம் ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . சிறு வயது தாமசாக வரும் பையன் , பொன்வண்ணன் போன்றோரும் கவனிக்க வைக்கிறார்கள் ...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் " ஏலே கீச்சான் " , " நெஞ்சுக்குள்ளே  " என்று பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டாலும் கடல் பின்னணிக்கு ஏற்றபடி பாடல்கள் பொருந்தவில்லை . படம் பெரும்பாலும் அமைதியாகவே நகர்வதால் பின்னணி இசைக்கும் அவர் மெனக்கெடவில்லை. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு ரணகளம் . படம் முடியும் போது  வரும் " அன்பின் வாசலே " பாடலில் வரும் லைட்டிங் சூப்பர் . கலை இயக்குனர் சசிதர் அடப்பா தன்  உழைப்பால் அடடா போட வைக்கிறார்...

பாதிரியார் என்றால் பாவ மன்னிப்பு வழங்குவார் , பிரச்சாரம் செய்வார் என்கிற ஸ்டீரியோ டைப்பாக இல்லாமல் அவர்களும் செய்யும் தவறுகள் , ஊர் மக்கள் அவர்களை நடத்தும்  விதம் , அவர்கள் படும் சங்கடங்கள் இவற்றையெல்லாம் துல்லியமாக விளக்கும் காட்சிகளில் எழுத்தாளர் ஜெயமோகன் மிளிர்கிறார். தேவ ஊழியம் செய்ய வந்துவிட்டு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் ப்ரதர் அர்ஜுன் , மழையை பொருட்படுத்தாமல் சிறுவனை வெளியே துரத்தி விட்டு அவள் அம்மாவுடன் சல்லாபம் செய்யப்போகும் பொன்வண்ணன் , அம்மா இறந்ததை புரிந்து கொள்ளாமல் அவள் மார்பின் மேல் தூங்கும் சிறுவன், இறந்தவளின் காலை சவப்பெட்டிக்குள் நுழைக்க முடியாமல் அதை வெட்டி எடுக்கும் ஒருவன் இப்படி சில மிரள வைக்கும்  முதல் இருபது நிமிட காட்சிகளால் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர் மணிரத்னம் ...


க்யூட்டான காதல் காட்சிகளுக்கு பெயர்  போன மணி சிறு சிறு கதாபாத்திரங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கூட கார்த்திக் - துளசி காதலுக்கு தராமல்  போனது பெருத்த ஏமாற்றம் . கதை வசனம் , திரைக்கதை என எல்லாவற்றிலும் அவர் ஜெயமோகனை மட்டுமே மலையளவு நம்பியதால் மணி டச்சிங் டோட்டலி மிஸ்ஸிங் . அடுத்த படங்களில் சுதாரித்துக் கொள்வார் என்று நம்பலாம் .ஹீரோ அரவிந்த்சாமி யின் வளர்ப்பு பையன் கார்த்திக் , வில்லன் அர்ஜுனனின்  மகள் துளசி இருவரின் காதல் என்கிற வழக்கமான பாணியில் பயணித்திருந்தால் கூட ரசித்திருக்கலாமோ என்னமோ ஆனால் கடல் திரைக்கதையில் அங்குமிங்கும் அலைபாய்ந்து நம்மை கலங்கடிக்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 39


Related Posts Plugin for WordPress, Blogger...