29 March 2013

சென்னையில் ஒரு நாள் - ட்ராஃபிக் ஜாம்..


ட்ராபிக் என்ற மலையாள படத்தை கண்டிப்பாக பார் என்று என்  சில வருடங்களுக்கு முன்பு என் நண்பன் சொல்லியிருந்தான் . தமிழில் அதை ரீ மேக் செய்யப் போகிறார்கள் என்கிற விஷயமறிந்ததுமே படத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன் . ஒரிஜினல் படத்தை பார்க்காததால் கதை என்னை மிகவும் கவர்ந்த அளவிற்கு எடுத்த விதம் கவரவில்லை ...

சென்னை சாலை விபத்தில் மண்டையில் அடிபட்டு மூளை சாவில் இருக்கும் ஒரு இளைஞனின் இதயத்தை ஒன்றரை மணி நேரத்துக்குள் வேலூரில் சாவை எதிர் நோக்கி இருக்கும் ஒரு சிறுமிக்கு பொருத்தி அவள் உயிரை காப்பாற்ற வேண்டும் . பிரபல நடிகர் கவுதம்  ( பிரகாஷ்ராஜ் )  தன் மகளின் உயிரை போக்குவரத்து ஆணையர் பாண்டியன்  ( சரத்குமார் )  , காவலர் சத்தியமூர்த்தி ( சேரன் ) , மருத்துவர் ராபின் ( பிரசன்னா )  இவர்கள் உதவியுடன் காப்பாற்றினாரா என்ற ஒரு நாள் சம்பவத்தை கொஞ்சம் வேகம் , கொஞ்சம் மந்தம் மற்றும் நட்சத்திர கூட்ட நெரிசலுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஷஹீத் காதர் ...

கதையில் ஹீரோ கிடையாது என்றாலும் படத்தில் பிரபல ஹீரோவாக வரும் பிரகாஷ்ராஜ் பிரதானமாக இருக்கிறார் . ஏற்க்கனவே  டூயட் , வெள்ளித்திரை போன்ற படங்களில் பார்த்த வேடம் என்பதால் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை . மகளை பற்றிய பேட்டி கொடுக்கும் இடத்திலும் , என் பேரை சொன்னியா என்று கண்களை உருட்டி கோபப்படும் இடத்திலும் மட்டும் ரசிக்க வைக்கிறார் . " நீங்க ஹீரோவா ஜெயிச்சிருக்கலாம் , ஆனா மனுஷனா தோத்துட்டீங்க " என்று மனைவியாக  இவருக்கு அறிவுரை சொல்லும் போது ராதிகா நடிப்பில்  மிளிர்கிறார் ...


படம் முழுவதும் சின்ன சின்ன சோகமான முகபாவம் மட்டுமே என்பதால் சேரனை ரசிக்க முடிகிறது . சரத்குமாரின் கம்பீரமான தோற்றத்துக்கு ஏற்ற வேடம் . நிறைவாக இருந்தாலும் இயல்பான நடிப்பு மட்டும் ஏனோ மிஸ்ஸிங் . நல்ல நடிகர் பிரசன்னா பெரிய வாய்ப்பு இல்லாமல்  வீணடிக்கப்பட்டிருந்தாலும் வந்த வரை கச்சிதம் . இவருடைய மனைவியாக நடித்திருக்கும் இனியாவிற்கு நோ ஸ்கோப் . பார்வதி மேனன் , மிதுன் போன்றோரும் படத்தில் இருக்கிறார்கள் . பையன் இறந்த பிறகு அழும் இடத்தில் லக்ஷ்மி யின் நடிப்பு அருமை ...

சமூக அக்கறையுள்ள இது போன்ற படத்திற்கு சுருக்கென்று வசனங்கள் இருக்க வேண்டாமோ ? அந்த விதத்தில் அஜயன் பாலா வாய்ப்பை வீணடித்திருக்கிறார் . பாபி சஞ்சய் யுடன் இணைந்து இவர் அமைத்திருக்கும் திரைக்கதையும் முதல் பாதியில் அநியாத்துக்கு அலைபாய்ந்து  பொறுமையை சோதிக்கிறது .மெஜோ ஜோசப் இசையில் ஸ்பீட் பிரேக்கர் போல இரண்டு பாடல்கள் , இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து போடப்பட்ட டெம்ப்ளேட் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு பெரிய மைனஸ் ...


உடல் உறுப்பு தானம் மற்றும் மனித நேயத்தை வலியுறுத்தும் கதையை ரீமேக் செய்ததற்கு  இயக்குனருக்கு பாராட்டுக்கள் .  முதல் பாதியில் எல்லோர் கதையையும் சொல்வதால் ஸ்லோவாக இருந்தாலும் இதய மாற்று சிகிச்சைக்காக சென்னையில்  இருந்து பயணப்பட ஆரம்பித்ததும் படம் சூடு பிடிக்கிறது . பிரசன்னா மனைவியை காமுக நண்பன் கரக்ட் செய்வதெல்லாம் ட்விஸ்ட் என்ற பெயரில் வைக்கப்பட்ட திணிப்பு . அதே  போல படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்குள் இரண்டு பாடல்கள் மற்றும் அதீத சோக மயமான ஆஸ்பத்திரி சீன்கள் போன்றவற்றையும் தவிர்த்திருக்கலாம் ...

ஜன சந்தடியான தெருவை சேரனின் ஜீப் கடக்கும் போது நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது . ஆனால படத்தில் பிரபல நடிகராக பிரகாஷ்ராஜ் இருக்கும் போது இன்னொரு பிரபலமாக சூர்யாவையையும் சேர்த்திருப்பது செயற்கையாக  இருக்கிறது . இதே லைனில் வந்து நம்மை பிரமிக்க வைத்த எங்கேயும் எப்போதும் போல இந்த படத்தில் ப்ரெஷ்னஸ் இல்லாதது பெரிய குறை . சன் பிக்சர்ஸின் நல்லாசி இருப்பதால் படத்தை மார்கெட் டிங்  செய்வதற்கு பஞ்சமிருக்காது என்றாலும் மந்தமான திரைக்கதையையும் , நடிகர் பட்டாளத்துக்கு சொல்லப்பட்ட கதை பின்னணியால் ஏற்படும் ட்ராபிக் ஜாமையும்  தவிர்த்திருந்தால் சென்னையில் ஒரு நாள் இன்னும் விறுவிறுவென்று இருந்திருக்கும் ...

ஸ்கோர் கார்ட் : 42 19 March 2013

ஈழ விடுதலையும் , ஈன அரசியலும் ...ராமாயண காலத்திலிருந்தே இலங்கைக்கும் போருக்கும் தூரமில்லை . இலங்கை அரசுக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சக்கட்ட போர் 2009 ஆம் ஆண்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது . போரின் போது அப்பாவி தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை இனப்படுகொலை செய்ததும் , இந்த நான்கு ஆண்டு காலத்தில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு ஒப்புக்கொண்ட படி இலங்கை அரசு எந்தவொரு சீரமைப்பு நடவடிக்கைகளும் செய்யாததும் தமிழர்களை மட்டுமல்ல அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிதன் விளைவே  இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழகம் மூலமாக ஒரு தீர்மானத்தை அமெரிக்காவே கொண்டு வருமளவிற்கு கொண்டு போய் விட்டிருக்கிறது .

2014 பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதாலோ என்னவோ இத்தனை வருடங்கள் காங்கிரஸ் அரசிடமிருந்து வெளியேறி விடுவேன் என்று பூச்சாண்டி காட்டிக்  கொண்டிருந்த கலைஞர் இன்று கடைசியாக இலங்கை அரசுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்காத காரணத்தினால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் . அதே சமயம் வழக்கம் போல மத்திய அரசுக்கு சில நாட்கள் கால அவகாசம் கொடுப்பதாக சொல்லி எந்த நேரமும் தன் முடிவு மாறக் கூடும் என்பதையும்  சொல்லாமல் சொல்லியிருக்கிறார் . காவிரி நதி நீர் ஆணைய தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வைத்து சரித்திரத்தில் முதல்வர் முக்கிய இடம் பிடித்து விட்டதால் தானும் எதையாவது செய்ய வேண்டுமென்கிற உத்வேகத்தில் கலைஞர் ஈழப் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதாக விஷயமறிந்தவர்கள்  சொல்கிறார்கள் . எது எப்படியோ இப்பொழுதாவது அந்த முடிவை எடுத்தாரே என்று பாராட்டினாலும் அதனால் மத்திய அரசிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்ப்படப் போவதில்லை . மேலும் கலைஞரின் அரசியல் உலகறிந்ததே , அவரை விமர்சிப்பது இந்த பதிவின் நோக்கமல்ல .

ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து இலங்கையில் நடந்ததை  சமுதாயக் கொலைகளாக  கருதி பொது விசாரணை நடத்த வேண்டுமென்றும் , பொது வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழம் அமைவதற்கு வழி வகுக்க வேண்டுமென்றும் அவர் வைத்துள்ள கோரிக்கைகள் நடைமுறையில் சாத்தியமா என்கிற கேள்வி  ஒருபுறம் இருந்தாலும் கீழ்கண்ட பல கேள்விகள்  நம் முன் எழுகின்றன .

போரே  குற்றம் எனும் பொழுது  ராஜபக்ஷே மட்டும் தான் போர்க்குற்றவாளியா ? பிற்காலத்தில் தன மகனையே கொல்வார்கள் என்று தெரியாமல் பிரபாகரனுக்கு உதவிகள் செய்து வளர்த்து விட்ட இந்திரா காந்தி குற்றவாளி இல்லையா ? அண்டை நாட்டு உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்ற இந்திய அரசியல் மரபை மீறி இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பிய ராஜீவ் காந்தி குற்றவாளி இலையா ? அதற்காக  நம் நாட்டிற்குள் புகுந்து முன்னாள் பிரதமரும் ,  முக்கிய தலைவருமான ராஜீவ் காந்தியை கொன்று அதன் மூலம் அண்டை நாட்டுடன் தீராப் பகையை சம்பாதித்துக் கொண்ட விடுதலைப்புலிகள் குற்றவாளிகள் இல்லையா ? தனி ஈழம் அமைவதற்கான வாய்ப்பு வராத போது கூட தனி மாகாணமாக சுதந்திரத்துடன் வாழ்வதற்கு வந்த வாய்ப்பை  ஏற்காமல்  அது தன்  தலைமையின் கீழ் தான் வர வேண்டுமென்ற எண்ணத்தில் சக தமிழின தலைவர்களை கொன்று குவித்த பிரபாகரன் குற்றவாளி இல்லையா  ? ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்கவே இந்த உதவிகள் செய்யப்பட்டன என்று பரவலாக பேசப்பட்டாலும் ஒரு உயிருக்கு  பதிலாக ஒரு லட்சத்திற்கும் மேலான தமிழ் உயிர்கள் பலியாவதற்கு காரணமாக அமைந்த  அரசியல்வாதிகள் குற்றவாளிகள்  இல்லையா ?  இலங்கைக்கு மறைமுக  உதவிகள் செய்யப்படுவது தெரிந்தும் கண்டன  அறிக்கைகைகள் மட்டும் வெளியிட்டு விட்டு பதவிக்காக மௌனம் காத்த கலைஞர் குற்றவாளி இல்லையா ? இப்படி அந்நியன் படத்தில் வரும் சுஜாதா வசனம் போல நிறைய பேர் மேல் நாம் குற்றம் சாட்டினாலும் அதில்  பலர் உயிருடன் இல்லை . உயிருடன் இருக்கும் மற்றவர்களும்  ஈழ மறு வாழ்விற்கு ஏதாவது செய்வார்கள் என்று இன்னமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் நாம் தான் குற்றவாளிகள் ஆகி விடுவோம் . இவை தவிர இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பிழைப்பு தேடி சென்ற தமிழர்களை அங்கிருந்த பூர்வக் குடி தமிழர்கள் சம உரிமையுடன் நடத்தவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது ...

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருவதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு ஏதாவது செய்யும் என்றோ , அப்படி செய்வதற்காகத் தான் நாங்கள் மத்திய அரசை நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்றோ இங்கே யாராவது சொன்னால் அது போகாத ஊருக்கு வழி சொல்வது போலத்தானிருக்கும் . ஏற்கனவே இலங்கையே  தமிழர்களுக்கான மறு சீரமைப்பை செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்து பல கோடி ரூபாயை வாரி வழங்கிய மத்திய அரசு அதற்கான கணக்கையாவது கேட்டதா  என்று கூட தெரியவில்லை . இந்த லட்சணத்தில் மனமுவந்து  மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது செய்யும் என எதிர்பார்ப்பது மடத்தனம் . மத்திய  அரசின் மீதும் , அந்த அரசில் அங்கம் வகித்த கூட்டணி கட்சிகள்  மீதும் நம்பிக்கை இழந்ததால் தான் மாணவர்களும் , பொது மக்களும் களத்தில் குதித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் . இது ஆரோக்கியமாக தெரிந்தாலும் வன்முறைக்கு வழி வகுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...

இது போன்ற போராட்டங்கள் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவாக சர்வதேச அரங்கில் ஒரு முக்கியத்துவத்தை கொடுக்கும் என்ற போதிலும் இங்கே வரும் புத்த பிட்சுக்களை அடிப்பது அங்கே வாழும் எஞ்சிய தமிழர்களுக்கு மேலும் பிரச்சனைகள்  உருவாவதற்கு காரணமாக அமைந்து விடக் கூடும் என்பதோடு வன்முறை எதற்கும் தீர்வாகாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் . தனிப்பட்ட  முறையில் தீவிரவாதத்திற்கு எதிரான குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாடுடையவர்கள் கூட 2009 க்கு பிறகு விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒடுக்கப்பட்ட பிறகு அங்கே வாழும் எஞ்சிய தமிழர்கள்  சம உரிமையுடன் சுதந்திரமாக வாழ வேண்டுமென்றே விரும்புகிறார்கள் . அதையே தான் அங்கிருக்கும் தமிழர்களும் விரும்புவார்கள் என்றே நினைக்கிறேன் ...

விடுதலைப்புலிகள் மக்களுடன் இரண்டறக் கலந்திருந்ததால் தான் மக்களையும் தாக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானோம் என்று சொன்ன இலங்கை அரசு போரின் போதும் , முடிந்த பிறகும் பாதுகாப்பு தருவதாக சொல்லி அப்பாவி மக்களை அழைத்து வந்து இனப் படுகொலைகள் செய்ததை ஆதரப்பூரவமாகச சேனல் 4 ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது . எனவே இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றத்தை சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் பாரபட்சமின்றி விசாரித்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் அதற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென்பதில் அனைத்து நாடுகளுக்கும் ஒருமித்த கருத்து வர வேண்டும் . இதற்கு உண்மையிலேயே தார்மீக அடிப்படையில் வலியுறுத்த வேண்டிய மத்திய அரசு திருடனுக்கு தேள் கொட்டியது போல காலம் தாழ்த்தி வருகிறது ...

கத்தியை  எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பார்கள் .  இன்று பிரபாகரனின் இளம் வயது  மகன் கொலை செய்யப்பட்டதை அறிந்து நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது போல் தானே அன்று விடுதலைப்புலிகள் குண்டு வைத்து பல சிங்கள சிறுவர்களை கொன்று குவித்த போது அவர்களும் வடித்திருப்பார்கள் . போருக்காக வலுக்கட்டாயமாக பல தமிழ் சிறுவர்களை இழுத்து சென்ற போது  அவர்களின் பெற்றோர்களும் வடித்திருப்பார்கள் .
" There is no rule in War & Love " என்பது இரண்டு தரப்பிற்கும் பொருந்துகிறது. இலங்கையில் உளநாட்டுப் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்து விட்ட இன்றைய சூழ்நிலையில் ராஜபக்ஷே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்படுவதிலும் , தனி ஈழம் அமைவதிலும் சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ள போதிலும் சர்வதேச நாடுகளின் மேற்பார்வையின் கீழ் ஈழத் தமிழர்களின்  மறு வாழ்வு சீரமைப்பு பணிகள் விரைவாக நடந்து அவர்களை சுதந்திரமாகவும் , சம உரிமையுடனும் வாழ  வைப்பதற்கான சாத்தியம்  இருப்பதாகவே கருதுகிறேன் ...

பெரும்பாலான இந்திய அரசியல்வாதிளின் நடவடிக்கைகளை பொறுத்தவரை ஈழ பிரச்சனை என்பது அந்தந்த சந்தர்ப்பங்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் , அரசியல் நடத்துவதற்கும் உதவிகரமாக இருந்திருக்கிறதே ஒழிய உண்மையான தீர்வு காண்பதற்கான முயற்சியாக இல்லை . எனவே அனைவரும் உணர்ச்சிப் பூர்வமாக சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக சிந்தித்து ஈழத்தை வைத்து இன்னும் ஈன அரசியல் நடத்துபவர்களை அடையாளம் கண்டு புறந்தள்ளி தேசிய ஒருமைப்பாடு சீர்குலையாமல் அற வழியில் போராட வேண்டிய தருணமிது  ... 

17 March 2013

வத்திக்குச்சி - VATHIKUCHI - பற்றி எரிந்திருக்கும் ...ங்கேயும் எப்போதும்  வெற்றிக்குப்  பிறகு பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ -  ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்சன் இணைந்து தயாரித்த படம் என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது . முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தை கையில் எடுத்த வகையில் வெற்றி பெற்றவர்கள் அதை செயல்படுத்திய விதத்தில் பெரிய வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம்  ...

ஷேர் ஆட்டோ ஓட்டும்  சக்தி ( திலீபன் ) யை கொலை செய்வதற்கு ரவுடி பென்னி ( சம்பத் ) , சவுக்கார்பேட் சேட் ( ஜெயப்ரகாஷ் ) , இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ( ஜெகன் ) ஆகிய மூவரும் தனித்தனியே திட்டமிடுகிறார்கள் .  இதை அறியாத சக்தி ஒரே குடியிருப்பில் இருக்கும் லீனா ( அஞ்சலி ) யை டாவடிக்கிறார் . காதல் என்னானது என்பதையும் , சாதாரண ஆளுக்கு ஏன் இத்தனை பகை என்பதையும்  நம்மை கொஞ்சம் என்கேஜ் செய்தும் கொஞ்சம்  டேமேஜ் செய்தும் சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குனர் கின்ஸ்லின் ...


ஏ.ஆர்.முருகதாசின் தம்பி என்பதற்காக மட்டுமே ஹீரோ வேஷம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது  . ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரத்துக்கு ஏற்ற படியான முகமும் , ஆக்சனுக்கு ஏற்ற உடல்வாகும் மட்டுமே ஹீரோவுக்கு ப்ளஸ் . மற்றபடி திலீபன் அஞ்சலி , சம்பத் இருவருக்குமிடையே முகபாவம் ஏதுமின்றி பாவமாய் சிக்கித் தவிக்கிறார் . அதே நேரம் சண்டைக்கு முன் கை கால்களை முறுக்கிக் கொண்டு நிறுக்கும் போது கவனிக்க வைக்கிறார் ...

அஞ்சலி பெயர் வந்தவுடனே கை தட்டுகிறார்கள் . அரைகுறை ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு இவர் விடும் அலட்டலும் , திலீபனுக்கு விடும் மிரட்டலும் ரசிக்க வைக்கின்றன . இருந்தாலும் எங்கேயும் எப்போதும் நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை ...


ச்மப்த் போன்ற ஒரு நடிகருக்கு ஆரண்ய காண்டம் போல படம் மீண்டும் கிடைக்காதது துரதிருஷ்டமே . சாதாரண வில்லன் பத்திரத்தை தன் தேர்ந்த நடிப்பின் மூலம் சில படிகள் மேலே உயர்த்துகிறார் சம்பத் . குடி போதையில் ரவி மரியாவுடன் இவர் பேசும் காட்சி க்ளாஸ் . ஜெகன் வன்மமான புன்னகையால் வசீகரிக்கிறார்  , ஆனால் அதையே படம் முழுவதும் செய்து வெறுப்புமேற்றுகிறார் . இவருடைய கேரக்டரில் உள்ள குழப்பமும் , லாஜிக் மீறலும் படத்திற்கு பெரிய சறுக்கல் . ஜெயப்ரகாஷிற்கு  தாடியை சொரிந்து கொள்வதை தவிர வேறு வேலையொன்றுமில்லை . சரண்யா அன்பான தாயாக வந்து இட்லிகளை அள்ளி அள்ளி வைக்கிறார் அவ்வளவே ...

கிப்ரான் சையில் " குறு குறு " , " கண்ணா கண்ணா " பாடல்கள் முணுமுணுக்க வைத்தாலும் பின்னணி இசை தேவையில்லாமல் இறைந்து எர்ச்ச்சலை கிளப்புகிறது . பிரவீன் - ஸ்ரீகாந்த் எடிட்டிங் அங்கேயிங்கே அலைபாயும் திரைக்கதையை ஒரு நேர்கோட்டில் கொண்டு வர முயற்சித்து தோற்றிருக்கிறது . படத்தில் பாராட்டப்பட வேண்டியவர் ஸ்டண்ட் இயக்குனர் ராஜசேகர் . சாமான்யனின் சண்டையை கவனிக்க வைத்திருக்கிறார் .

சரண்யா பையனிடம் " நம்ம அப்பா ப்ரோக்கர் ஆனா அவ அப்பா கவர்மெண்ட் ஆபீஸ்ல  வாட்ச்மேன் " என்று சொல்வது , சம்பத் குடிபோதையில் " அவன் அடி வாங்கிட்டு போன பிறகு ஒரு மாசம் நல்லா ஜிம்முக்கு போயிருப்பான் இல்ல சுண்டக்கடலையை ஊற வச்சு தின்னுருப்பான்னு நினைக்கிறேன் " என்று ரவி மரியாவிடம் சொல்வது போன்ற இடங்களில் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன .

ஸ்போக்கன் இங்க்லீஷ் படிக்கும் அஞ்சலி , தன்னிடம் பணம் பறித்தவர்களை  பயிற்சி எடுத்துகொண்டு போய் அடிக்கும் திலீபன் , சாமான்யனிடம் தோற்று விட்ட வெறுப்பில் சம்பத் , குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிடும் ஜெகன் இவர்களை வைத்து முதல் பாதியை முடிந்த வரை சுவாரசியமாகவே கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் . ஆனால் முதல் பாதியில் போட்ட முடிச்சுகளை சரியாக அவிழ்க்க முடியாமல் இடைவேளைக்கு பிறகு திரைக்கதையில்  திணறியிருக்கிறார் .


வாட்டர் கேனில் சரக்கை ஊற்றி வைத்து டம்ளரில் பிடித்து குடிப்பது , காலை 9.15 மணிக்கு யாரையோ கொலை செய்யப்போகிறார்கள் என்று தெரிந்தவுடன் அதை சாமர்த்தியமாக ஹீரோ தடுப்பது ,  திலீபனுக்கு நேர்ந்ததை அஞ்சலி கடைசி வரை நம்ப மறுப்பது, அடியாட்களிடம் இருந்து  தப்பி வரும் வழியில் உண்டு , உறங்கி திலீபன் தன்னை தேத்திக் கொள்வது போன்ற இடங்களில் கின்ஸ்லி கவனிக்க வைக்கிறார் . சென்னை மற்றும் புற நகரங்களில் சர்வ சாதாரணமாக நடக்கும் குற்றங்களை காட்டி நம்மை மிரளவும் வைக்கிறார் ...

இரண்டாம் பாதியில் தான் திலீபனை ஆக்சன் ஹீரோவாக காட்டும் முயற்சியில் லாஜிக் என்கிற வஸ்துவை சுத்தமாக மறந்து விட்டிருக்கிறார் .  மூவரும் ஏதோ பிரதமரை கொல்வது போல ஒரு ஆட்டோ டிரைவருக்கு திட்டமிட்டுக் கொண்டே இருப்பது சுத்த பேத்தல் . அதிலும் காசுக்கு கொலை செய்யும் சம்பத் ஒரு கொலை செய்வதற்கு  இவ்வளவு யோசிப்பதும் , மாட்டிக்  கொள்ளாமல் புத்தியை பயன்படுத்தி சம்பாதிக்க நினைக்கும் ஜெகன் & கோ துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு கண்டபடி சுடுவதும் , வெறும் பதினைந்து லட்சத்திற்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பதும் கதையின் பெரிய ஓட்டைகள் . அதிலும் அரை மயக்கத்தில் இருக்கும் திலீபனை அங்கேயே போட்டுத் தள்ளாமல் ஊர் ஊராக  சுற்றிக் கொண்டிருப்பதெல்லாம் ஓவர் ...

ஹீரோவுக்கு ஏன் இப்படி நடக்கிறது எனபதை அறியும்  ஆர்வத்தை கொடுத்த இயக்குனர் அதற்கான காரணங்களிலும் , திலீபனை மாஸ் ஹீரோவாக்கும் முயற்சியிலும் தடுமாறியிருக்கிறார் . ஒரு வேளை கொஞ்சம் பிரபலமான ஹீரோ நடித்து கதையில் லாஜிக்கை யோசித்திருந்தால் வத்திக்குச்சி பற்றி எரிந்திருக்கும் ...

ஸ்கோர் கார்ட் : 41


16 March 2013

பரதேசி - PARADESI - பார்க்க வேண்டிய தேசி ...வன்-இவன் மூலம் புதிதாய் ஏதோ முயற்சி செய்வதாக சொல்லி விட்டு நமக்கு அயர்ச்சியை கொடுத்த பாலாதனது வழக்கமான பாணியில் மிக அழுத்தமாக பரதேசி யை தந்து பிரமிக்க வைத்துவிட்டார் . பாலா ஒரே மாதிரியாக படம் எடுக்கிறாரே என்ற மனப்புண்ணிற்கு பரதேசிமூலம் மருந்து தடவியிருக்கிறார்  . இந்த படமும் ட்ராஜடி தான் என்றாலும் எடுத்த விதத்தில் தான் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் பாலா ...

ரெட் டீ  என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் பரதேசி . பிரிட்டிஷ் காலகட்டத்தில் ( 1939 ) கதை நடக்கிறது . சாலூர் கிராமத்திலிருந்து தேயிலைத் தோட்ட வேலைக்கு ஆட்களை எடுத்து விட்டு அவர்களை சொந்த ஊருக்கே திரும்ப அனுப்பாமல் கொத்தடிமைகளாக நடத்துவதோடு மூளை சலவை செய்து மதமாற்றம் செய்வதையும் அழுத்தமாக பதிவு செய்கிறது படம் . " நாம் இன்று கதகதப்பாக குடிக்கும் தேநீருக்கு பின்னால் பலரின் இரத்தம் இருக்கிறது " என்ற எழுத்துக்களுடன் தொடங்கும் படம் இரண்டு மணி நேரம் நம் இதயத்தை இறுகப் பிடிக்கிறது ...அதர்வா தன் அப்பா முரளி பல படங்களில் சம்பாதித்த பெயரை இந்த ஒரே படத்தில் எடுத்து விட்டார் . ஒட்டுப்பொறுக்கி ( எ ) ராசாவாக நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார் . சாக்லேட் பாயாக இருந்த இவரை சாக்குத்துணி கேரக்டருக்குள் அடைத்து அனைவரையும் ஏற்றுக்கொள்ள் வைக்க பாலாவால் மட்டுமே முடியும் . ஊர் மக்கள்  சாப்பிடும் போது தனக்கு மட்டும் உணவில்லையே என்று அழும் போதும் , அடிக்காதே என்று கங்காணியிடம் கெஞ்சும் போதும் , ஊருக்கு திரும்ப முடியவில்லையே என்று ஏங்கும் போதும் , க்ளைமாக்ஸ் இல் கதறும் போதும் ஏதோ ஒரு விருது நிச்சயம் உண்டு என நம்ப வைக்கிறார் அதர்வா ...

வேதிகாவை கருப்பாக பார்ப்பதற்கு மனம் கஷ்டமாக தான் இருக்கிறது . அந்த கஷ்டத்தை தன் நடிப்பால் நிவர்த்தி செய்கிறார் . அதர்வா வை சீண்டி விட்டு பின் அவருக்காக இரக்கப்படும் இடத்தில் இவர் நடிப்பு மிளிர்கிறது ... இடைவேளைக்கு பிறகு வேதிகா இல்லாத வெற்றிடத்தை ஓரளவு நிரப்புகிறார் தன்ஷிகா . கணவன் ஓடி விட அதை காரணம் காட்டியே இவரது பணியை நீட்டிப்பு செய்யும் போது  பரிதாபம் வருகிறது ...வசனமே பேசாமல் கண்களால் மட்டுமே பேசும் அதர்வா வின் நண்பன் , அப்பாவியான முகத்துடன் வரும் அவர் மனைவி , லோக்கல் டாக்டராக வரும் சுப்ரமணியபுர சித்தன் , வேட்டி அவிழ ஆட்டம் போட்டு விட்டு இறந்து போகும் ஊர் பெரியவர் , கங்காணி , அதர்வா வின் கூன் விழ வரும் பாட்டி இப்படி எல்லோரும் சின்ன சின்ன பாத்திரத்தில் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள் . சிறிது நேரமே வந்தாலும் டாக்டராக இருந்து கொண்டு மக்களின் அறியாமையையும் , ஏழ்மையையும் பயன்படுத்தி அவர்களை மத மாற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் வரும் சிவசங்கரும் , அவருடைய வெள்ளைக்கார மனைவியும் மனதில் இடம் பிடிக்கிறார்கள் . " அல்லேலூயா " பாடலில் இவர்களது ஆட்டமும் , நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்காமல் மத மாற்றம் செய்து விட்டு மது அருந்துவதும் நிஜத்தை தோலிருத்துக் காட்டுகின்றன . சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் இது போன்ற மத மாற்றங்கள் தொடர்ந்து வருவது வேதனையே ...

சாலூர் கிராமங்களுக்குள் கேமராவை வளைந்து வளைந்து போக விடும் செழியன் , ஊர் மக்கள் பயணப்படுவதை வைட்  ஆங்கிளிலும் ,  தேயிலைத் தோட்டத்தை டாப் ஆங்கிளிலும் காட்டி மிரள வைக்கிறார் . ஊர் வட்டார சொற்கள் பழக்கப்பட்ட சில நிமிடங்கள் பிடித்தாலும் அதன் பிறகு தன்  நக்கல் , நையாண்டி வசனங்களால் சிரிக்கவும் , சிலிர்க்கவும் வைக்கிறார் நாஞ்சில் நாடன் ... ஜி.வி.பிரகாஸ்குமாரின் இசையில் " செந்நீர் தானா " , " செஞ்காடே " பாடல்கள் இதமாக இருக்கின்றன . அவரின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் இசைஞானி இல்லாதது குறை போல தெரிகிறது . அந்த குறையை கங்கை அமரன்  " செந்நீர் தானா " பாடல் மூலம் ஓரளவு தீர்த்து வைக்கிறார் ...

தமிழில் சரித்திர கால படங்கள் வருவதில்லையே , அப்படியே வந்தாலும் ஸ்டீரியோ டைப்பாக இருக்குமே என்கிற குறையை தீர்த்து வைத்ததற்கும் , விளிம்பு நிலை மனிதர்களின் நிலை , அவர்களுக்குள்ளும் உள்ள ஏற்றத் தாழ்வுகள் , வசனங்களாக  இல்லாமல் விசுவலாக அவர்கள் படும் வேதனைகளை காட்டிய விதம் , வெள்ளைக்காரர்களை மட்டும் வில்லன்களாக சித்தரிக்காமல் அவர்களுக்கு துணை போகும் இந்தியர்களையும் தோலுரித்துக் காட்டியது , மத மாற்ற வித்தைகளை ஒரே பாடலில் சாமர்த்தியமாக பதிவு செய்த விதம் இவற்றிற்க்காகவும் , ஜெயமோகன் , எஸ்.ரா , நாஞ்சில் நாடன் போன்ற இலக்கியவாதிகளுடன் பாலா செய்து வரும் ஆரோக்கியமான பயணத்திற்காகவும் அவரை எழுந்து நின்று பாராட்டலாம் . அவருக்கு இந்த  படத்திற்காக  ஒரு தேசிய  விருதையும் எதிர்பார்க்கலாம் ...போகும் வழியில் நோய்வாய்ப்பட்ட கணவனை அப்படியே போட்டு விட்டு மனைவியை தரதர வென கங்காணியின் ஆட்கள் இழுத்து செல்ல கணவனின் கை விரல்களை க்ளோஸ் அப்பில் காட்டி இன்டர்வெல் ப்ளாக் விடும் ஒரு காட்சியே பின்னா வரப்போகும் விபரீதங்களுக்கு காட்டப்பட்ட ஒரு சோறு பதம் .எமது கடன் சினிமாவை பொழுதுபோக்காக மட்டும் பார்ப்பதே என்றோ , மென்மையான படங்கள் தான் பிடிக்கும் என்றோ சொல்பவர்கள் பரதேசியை பார்த்து விட்டு புலம்புவதாக இருந்தால் பார்க்காமல் இருப்பதே நலம் . ஆனால் ஒரு முறை பார்த்தால் அவர்களையும் படம் பாதிக்கும் என்பதே என் கருத்து.. .

இடைவேளை வரை காதல் , கல்யாணம் என்று நேரத்தை கடத்துவது , அதர்வா தன் நண்பனின் மனைவியிடம் நிலைமையை புரிந்து கொள்ளாமல் கோவித்துக் கொள்வது , தகப்பன்சாமி , அங்காடிதெரு போன்ற படங்களில் சொல்லப்பட்ட கதை போன்ற சில குறைகளையும்  தாண்டி இரண்டு மணி நேரம் சாலூர் கிராம மக்களுடன் நம்மையும் சிரித்து , அழுது , கோபப்பட்டு , பயப்பட்டு பயணப்பட வைத்த பாலா பிரம்மாண்டமாய் நம் கண் முன் தெரிகிறார் . பரதேசி யை " பெஸ்ட் ஆப் பாலா" என்று சொல்வதில் சிறு தயக்கம் இருந்தாலும் நிச்சயம் " பாலா அட் ஹிஸ் பெஸ்ட் " என்று அடித்து சொல்லலாம் . உலக சினிமா தரத்தில் இருக்கும் பரதேசி -  பார்க்க வேண்டிய தேசி ...

ஸ்கோர் கார்ட் : 51 

15 March 2013

பாலாவும் பரதேசியும் ...


ன்றைய காலகட்டத்தில் ஒரு படம் வெளி வருவதற்கு முன்பே அதை பற்றிய டீசரையோ , ட்ரைலரையோ  இணையதளத்தில் வெளியிட்டு அதன் மூலம் பப்ளிசிட்டி தேடுவதென்பது  தவிர்க்க முடியாததாகி விட்டது . சமீபத்தில் யு ட்யூப்பில் வெளியிடப்பட்ட " யாருடா மகேஸ் " படத்தின் ட்ரைலர் அதன் டபுள் மீனிங் வசனங்களுக்காக இளைஞர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது ...

பொதுவாக இங்கே இது போன்ற டீசர் பப்ளிசிட்டிகள் புதியவர்கள் பங்கு பெறும்  படங்களுக்கு தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன . ஆனால் அந்த வரிசையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா சில நாட்களுக்கு முன் வெளியிட்ட பரதேசி படத்தின் உருவாக்கம் பற்றிய டீசர் வரவேற்பை பெறுவதற்கு பதில் அதிகம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது . பாலா படப்பிடிப்பில் ஆதர்வ் உட்பட சில நடிகர்களை கம்பால் அடிப்பது போல வரும் காட்சிகளே இந்த அதிர்வலைகளுக்கு காரணம் ...

பாலா நார்மலானவர் கிடையாது கொஞ்சம் சைக்கோத்தனம் உள்ளவர் என்ற அபிப்பிராயம் திரையுலகத்தில் பொதுவாகவே உண்டு . அதிலும் இது போன்ற தன்னை பற்றிய  தகவல்களை பத்திரிக்கைகளின் மூலம் அவரே வெளிப்படுத்தியிருக்கிறார் . அவர் படங்களில் வரும் ஹீரோக்கள் என்றுமே நார்மலாக இருந்ததில்லை . அழகாக இருக்கும் ஹீரோக்களை கூட ஏதாவது செய்து கர்ண கொடூரமாக்குவது அவரது வாடிக்கை . விக்ரம் , ஆர்யா , விஷால் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கும் அப்பாவி ஆதர்வ் . பாலா இது போன்றே தொடர்ந்து எல்லா  படங்களிலும் செய்து வருவது சலிப்பை தருவதையும் மறுப்பதற்கில்லை ...

பாலா படங்களில் நடிப்பது கூட அவ்வளவு எளிதான விஷயமில்லை . எந்த நடிகராக இருந்தாலும் தனக்கு வேண்டிய நடிப்பு வரும் வரை அவர்களை கசக்கிப் பிழிந்து விடுவாரென்பது விவரமறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும் . இப்படி எவ்வளவோ இருந்தும்அவரது படங்களில் நடிப்பதற்கு ஹீரோக்கள் குறிப்பாக வளர்ந்து வரும் ஹீரோக்கள் அதிக ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் பாலாவின் படங்களில் நடித்ததற்கு பிறகு அவர்களுக்கு கிடைக்கும் இமேஜ் சேஞ்ச் ஓவர் ...

விக்ரம் , சூர்யா இருவரும் இதற்கு சிறந்த உதாரணங்கள் . சேதுவிற்கு முன் பல வருடங்கள் சினிமாவில் இருந்தும்தனக்கென்று ஒரு இடம் கிடைக்காமல் மற்ற ஹீரோக்களுக்கு டப்பிங் செய்து கொண்டிருந்தார் விக்ரம். பெரிய நடிகரின் பையனாக இருந்தும் நடிப்பு என்ன விலை என்று கேட்குமளவிற்கு இருந்த சூர்யா நந்தா விற்கு பிறகே அனைவராலும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கப்பட்டார் . மற்ற எல்லா துறைகளையும் விட சினிமாவில் அதிகமான சங்கடங்களும் , அவமானங்களும் இருந்தும் அதில் நிறைய பேர் விரும்பி வேலை செய்வதற்கு காரணம் அதில் எல்லா துறைகளையும் விட அதிகமாக கிடைக்கும் பணமும் ,புகழும் ...

பரதேசி டீசரை பார்த்து  விட்டு பொது மக்கள் அதிர்ச்சிடையலாம் ;, ஆனால் சினிமாவில்  இருப்பவர்களே பாலா வை கண்டபடி திட்டுவது ஆச்சர்யமாக இருக்கிறது . ஏனெனில் இந்த டீசரை  பாலா வெளியிடாமல் இருந்திருந்தால் மட்டும் சினிமாவில் எல்லாம் ஒழுங்காக நடக்கின்றன என்றோ அங்கே எந்த விதத்திலும் மனித உரிமை மீறலோ , பாலியில் ரீதியான இம்சைகளோ நடக்கவேயில்லை என்றோ இவர்கள் உறுதியாக கூற முடியுமா ? அதிலும் இந்த டீஸரை உன்னிப்பாக பார்த்தாலே அவர் நடிக்க சொல்லித் தருகிறார் என்பதும் , அந்த தடி சினிமாவிற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட போலி தடி என்பதும் நன்றாகவே விளங்கும் ...

இது போன்ற ஒரு டீஸரை வெளியிட்டு அதன் மூலம் படத்திற்கு எதிர்மறையாக இருந்தாலும் ஒரு பப்ளிசிட்டியை தேடிக்கொள்வதே ஒரு தயாரிப்பாளராகவும் , இயக்குனராகவும் பாலாவின் நோக்கமென்பது சினிமா ஆர்வலர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் . எனவே இளம் தலைமுறை சினிமாக்காரர்கள் இதை விமர்சிப்பதை விட்டு விட்டு இந்த துறையை ப்ரொபஸனலாக முன்னேற்றுவதற்கு தங்களால் முடிந்த முயற்சிகளை செய்தால் அதை பாராட்ட அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம் . ஹாலிவுட் படங்களுக்கு இதை விட மோசமான முறையில் ரியாலிட்டி பப்ளிசிட்டி செய்யப்படுவது மிகவும் வாடிக்கையான ஒன்று . எனவே பாலாவின் பரதேசி டீசர் ரியாலிட்டி அல்ல வெறும் பப்ளிசிட்டி ...

பரதேசி ரியாலிட்டி டீசர் - இங்கே பார்க்கவும் ...

10 March 2013

நல்லதோர் வீணை குறும்படம் - 100000 ஹிட்ஸ் ...நீண்டநாட்களாகவே குறும்படம் எடுக்க வேண்டுமென்ற எண்ணத்திலிருந்த நான் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான குறும்பட போட்டி என்ற அறிவிப்பை பார்த்தவுடன் மனதில் தோன்றிய கருவை என் நண்பன் சேஷனிடம் கூற அவனும் அருமையாக இருக்கிறது என்று சொல்லிவிடவே பெரிய திட்டமிடல் ஏதுமில்லாமல் திடீரென தொடங்கி இரண்டு நாட்களில் முடிக்கப்பட்டது " நல்லதோர் வீணை " குறும்படம் . இன்று இந்த ஒரு வருடத்தில் யூடியூப் பில் ஒரு லட்சம் ஹிட்ஸ்களை நல்லதோர் வீணை கடந்திருப்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதோடு அதற்கு காரணமான அனைவருக்கும், குறும்படத்தை  ஒளிபரப்பிய ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றியையும் இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் ...


Related Posts Plugin for WordPress, Blogger...