19 March 2013

ஈழ விடுதலையும் , ஈன அரசியலும் ...



ராமாயண காலத்திலிருந்தே இலங்கைக்கும் போருக்கும் தூரமில்லை . இலங்கை அரசுக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சக்கட்ட போர் 2009 ஆம் ஆண்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது . போரின் போது அப்பாவி தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை இனப்படுகொலை செய்ததும் , இந்த நான்கு ஆண்டு காலத்தில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு ஒப்புக்கொண்ட படி இலங்கை அரசு எந்தவொரு சீரமைப்பு நடவடிக்கைகளும் செய்யாததும் தமிழர்களை மட்டுமல்ல அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிதன் விளைவே  இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழகம் மூலமாக ஒரு தீர்மானத்தை அமெரிக்காவே கொண்டு வருமளவிற்கு கொண்டு போய் விட்டிருக்கிறது .

2014 பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதாலோ என்னவோ இத்தனை வருடங்கள் காங்கிரஸ் அரசிடமிருந்து வெளியேறி விடுவேன் என்று பூச்சாண்டி காட்டிக்  கொண்டிருந்த கலைஞர் இன்று கடைசியாக இலங்கை அரசுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்காத காரணத்தினால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் . அதே சமயம் வழக்கம் போல மத்திய அரசுக்கு சில நாட்கள் கால அவகாசம் கொடுப்பதாக சொல்லி எந்த நேரமும் தன் முடிவு மாறக் கூடும் என்பதையும்  சொல்லாமல் சொல்லியிருக்கிறார் . காவிரி நதி நீர் ஆணைய தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வைத்து சரித்திரத்தில் முதல்வர் முக்கிய இடம் பிடித்து விட்டதால் தானும் எதையாவது செய்ய வேண்டுமென்கிற உத்வேகத்தில் கலைஞர் ஈழப் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதாக விஷயமறிந்தவர்கள்  சொல்கிறார்கள் . எது எப்படியோ இப்பொழுதாவது அந்த முடிவை எடுத்தாரே என்று பாராட்டினாலும் அதனால் மத்திய அரசிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்ப்படப் போவதில்லை . மேலும் கலைஞரின் அரசியல் உலகறிந்ததே , அவரை விமர்சிப்பது இந்த பதிவின் நோக்கமல்ல .

ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து இலங்கையில் நடந்ததை  சமுதாயக் கொலைகளாக  கருதி பொது விசாரணை நடத்த வேண்டுமென்றும் , பொது வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழம் அமைவதற்கு வழி வகுக்க வேண்டுமென்றும் அவர் வைத்துள்ள கோரிக்கைகள் நடைமுறையில் சாத்தியமா என்கிற கேள்வி  ஒருபுறம் இருந்தாலும் கீழ்கண்ட பல கேள்விகள்  நம் முன் எழுகின்றன .

போரே  குற்றம் எனும் பொழுது  ராஜபக்ஷே மட்டும் தான் போர்க்குற்றவாளியா ? பிற்காலத்தில் தன மகனையே கொல்வார்கள் என்று தெரியாமல் பிரபாகரனுக்கு உதவிகள் செய்து வளர்த்து விட்ட இந்திரா காந்தி குற்றவாளி இல்லையா ? அண்டை நாட்டு உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்ற இந்திய அரசியல் மரபை மீறி இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பிய ராஜீவ் காந்தி குற்றவாளி இலையா ? அதற்காக  நம் நாட்டிற்குள் புகுந்து முன்னாள் பிரதமரும் ,  முக்கிய தலைவருமான ராஜீவ் காந்தியை கொன்று அதன் மூலம் அண்டை நாட்டுடன் தீராப் பகையை சம்பாதித்துக் கொண்ட விடுதலைப்புலிகள் குற்றவாளிகள் இல்லையா ? தனி ஈழம் அமைவதற்கான வாய்ப்பு வராத போது கூட தனி மாகாணமாக சுதந்திரத்துடன் வாழ்வதற்கு வந்த வாய்ப்பை  ஏற்காமல்  அது தன்  தலைமையின் கீழ் தான் வர வேண்டுமென்ற எண்ணத்தில் சக தமிழின தலைவர்களை கொன்று குவித்த பிரபாகரன் குற்றவாளி இல்லையா  ? ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்கவே இந்த உதவிகள் செய்யப்பட்டன என்று பரவலாக பேசப்பட்டாலும் ஒரு உயிருக்கு  பதிலாக ஒரு லட்சத்திற்கும் மேலான தமிழ் உயிர்கள் பலியாவதற்கு காரணமாக அமைந்த  அரசியல்வாதிகள் குற்றவாளிகள்  இல்லையா ?  இலங்கைக்கு மறைமுக  உதவிகள் செய்யப்படுவது தெரிந்தும் கண்டன  அறிக்கைகைகள் மட்டும் வெளியிட்டு விட்டு பதவிக்காக மௌனம் காத்த கலைஞர் குற்றவாளி இல்லையா ? இப்படி அந்நியன் படத்தில் வரும் சுஜாதா வசனம் போல நிறைய பேர் மேல் நாம் குற்றம் சாட்டினாலும் அதில்  பலர் உயிருடன் இல்லை . உயிருடன் இருக்கும் மற்றவர்களும்  ஈழ மறு வாழ்விற்கு ஏதாவது செய்வார்கள் என்று இன்னமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் நாம் தான் குற்றவாளிகள் ஆகி விடுவோம் . இவை தவிர இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பிழைப்பு தேடி சென்ற தமிழர்களை அங்கிருந்த பூர்வக் குடி தமிழர்கள் சம உரிமையுடன் நடத்தவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது ...

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருவதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு ஏதாவது செய்யும் என்றோ , அப்படி செய்வதற்காகத் தான் நாங்கள் மத்திய அரசை நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்றோ இங்கே யாராவது சொன்னால் அது போகாத ஊருக்கு வழி சொல்வது போலத்தானிருக்கும் . ஏற்கனவே இலங்கையே  தமிழர்களுக்கான மறு சீரமைப்பை செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்து பல கோடி ரூபாயை வாரி வழங்கிய மத்திய அரசு அதற்கான கணக்கையாவது கேட்டதா  என்று கூட தெரியவில்லை . இந்த லட்சணத்தில் மனமுவந்து  மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது செய்யும் என எதிர்பார்ப்பது மடத்தனம் . மத்திய  அரசின் மீதும் , அந்த அரசில் அங்கம் வகித்த கூட்டணி கட்சிகள்  மீதும் நம்பிக்கை இழந்ததால் தான் மாணவர்களும் , பொது மக்களும் களத்தில் குதித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் . இது ஆரோக்கியமாக தெரிந்தாலும் வன்முறைக்கு வழி வகுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...

இது போன்ற போராட்டங்கள் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவாக சர்வதேச அரங்கில் ஒரு முக்கியத்துவத்தை கொடுக்கும் என்ற போதிலும் இங்கே வரும் புத்த பிட்சுக்களை அடிப்பது அங்கே வாழும் எஞ்சிய தமிழர்களுக்கு மேலும் பிரச்சனைகள்  உருவாவதற்கு காரணமாக அமைந்து விடக் கூடும் என்பதோடு வன்முறை எதற்கும் தீர்வாகாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் . தனிப்பட்ட  முறையில் தீவிரவாதத்திற்கு எதிரான குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாடுடையவர்கள் கூட 2009 க்கு பிறகு விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒடுக்கப்பட்ட பிறகு அங்கே வாழும் எஞ்சிய தமிழர்கள்  சம உரிமையுடன் சுதந்திரமாக வாழ வேண்டுமென்றே விரும்புகிறார்கள் . அதையே தான் அங்கிருக்கும் தமிழர்களும் விரும்புவார்கள் என்றே நினைக்கிறேன் ...

விடுதலைப்புலிகள் மக்களுடன் இரண்டறக் கலந்திருந்ததால் தான் மக்களையும் தாக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானோம் என்று சொன்ன இலங்கை அரசு போரின் போதும் , முடிந்த பிறகும் பாதுகாப்பு தருவதாக சொல்லி அப்பாவி மக்களை அழைத்து வந்து இனப் படுகொலைகள் செய்ததை ஆதரப்பூரவமாகச சேனல் 4 ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது . எனவே இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றத்தை சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் பாரபட்சமின்றி விசாரித்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் அதற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென்பதில் அனைத்து நாடுகளுக்கும் ஒருமித்த கருத்து வர வேண்டும் . இதற்கு உண்மையிலேயே தார்மீக அடிப்படையில் வலியுறுத்த வேண்டிய மத்திய அரசு திருடனுக்கு தேள் கொட்டியது போல காலம் தாழ்த்தி வருகிறது ...

கத்தியை  எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பார்கள் .  இன்று பிரபாகரனின் இளம் வயது  மகன் கொலை செய்யப்பட்டதை அறிந்து நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது போல் தானே அன்று விடுதலைப்புலிகள் குண்டு வைத்து பல சிங்கள சிறுவர்களை கொன்று குவித்த போது அவர்களும் வடித்திருப்பார்கள் . போருக்காக வலுக்கட்டாயமாக பல தமிழ் சிறுவர்களை இழுத்து சென்ற போது  அவர்களின் பெற்றோர்களும் வடித்திருப்பார்கள் .
" There is no rule in War & Love " என்பது இரண்டு தரப்பிற்கும் பொருந்துகிறது. இலங்கையில் உளநாட்டுப் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்து விட்ட இன்றைய சூழ்நிலையில் ராஜபக்ஷே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்படுவதிலும் , தனி ஈழம் அமைவதிலும் சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ள போதிலும் சர்வதேச நாடுகளின் மேற்பார்வையின் கீழ் ஈழத் தமிழர்களின்  மறு வாழ்வு சீரமைப்பு பணிகள் விரைவாக நடந்து அவர்களை சுதந்திரமாகவும் , சம உரிமையுடனும் வாழ  வைப்பதற்கான சாத்தியம்  இருப்பதாகவே கருதுகிறேன் ...

பெரும்பாலான இந்திய அரசியல்வாதிளின் நடவடிக்கைகளை பொறுத்தவரை ஈழ பிரச்சனை என்பது அந்தந்த சந்தர்ப்பங்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் , அரசியல் நடத்துவதற்கும் உதவிகரமாக இருந்திருக்கிறதே ஒழிய உண்மையான தீர்வு காண்பதற்கான முயற்சியாக இல்லை . எனவே அனைவரும் உணர்ச்சிப் பூர்வமாக சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக சிந்தித்து ஈழத்தை வைத்து இன்னும் ஈன அரசியல் நடத்துபவர்களை அடையாளம் கண்டு புறந்தள்ளி தேசிய ஒருமைப்பாடு சீர்குலையாமல் அற வழியில் போராட வேண்டிய தருணமிது  ... 

7 comments:

ப.கந்தசாமி said...

//பெரும்பாலான இந்திய அரசியல்வாதிளின் நடவடிக்கைகளை பொறுத்தவரை ஈழ பிரச்சனை என்பது அந்தந்த சந்தர்ப்பங்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் , அரசியல் நடத்துவதற்கும் உதவிகரமாக இருந்திருக்கிறதே ஒழிய உண்மையான தீர்வு காண்பதற்கான முயற்சியாக இல்லை .//

உண்மை

Unknown said...

wrong info about LTTE chief

ananthu said...

பழனி. கந்தசாமி said...
//பெரும்பாலான இந்திய அரசியல்வாதிளின் நடவடிக்கைகளை பொறுத்தவரை ஈழ பிரச்சனை என்பது அந்தந்த சந்தர்ப்பங்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் , அரசியல் நடத்துவதற்கும் உதவிகரமாக இருந்திருக்கிறதே ஒழிய உண்மையான தீர்வு காண்பதற்கான முயற்சியாக இல்லை .//

உண்மை ...
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

குருநாதன் said...
wrong info about LTTE chief

Do not think so ... உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

XXXXXXXXXXXXXXXXXX said...
This comment has been removed by the author.
XXXXXXXXXXXXXXXXXX said...

மிக மிக உண்மையாகவும் நடுநிலையுடனும் எழுதியிருக்கிறீர்கள்.
வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நிதானம் தவறிப் போராடுவதில் எந்தப் பலனும் இல்லை. மாறாக இலங்கை அரசினைத் தூண்டி விட்டு மேலும் அங்கே இருக்கும் மிச்சமீதி உயிர்களையும் சிரமப்படுத்த வேண்டாம்.

எல்லாவற்றையும் விட கட்டுரையின் கடைசி வரி மிக மிக முக்கியமானது.
இந்தப் போராட்டத்தை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கம் தமிழகத்தில் களம் அமைக்க முயற்சிப்பதாகப் படுகிறது. ஆரம்பத்திலேயே ஒடுக்கப்பட வேண்டிய விசயம் இது.

தொடர்ந்து எழுதுங்கள். இதே நிதானத்துடன்.

அன்புடன்,
ஆனந்தன் அமிர்தன்.

ananthu said...

XXXXXXXXXXXXXXXXXX said...
மிக மிக உண்மையாகவும் நடுநிலையுடனும் எழுதியிருக்கிறீர்கள்.
வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நிதானம் தவறிப் போராடுவதில் எந்தப் பலனும் இல்லை. மாறாக இலங்கை அரசினைத் தூண்டி விட்டு மேலும் அங்கே இருக்கும் மிச்சமீதி உயிர்களையும் சிரமப்படுத்த வேண்டாம்.

எல்லாவற்றையும் விட கட்டுரையின் கடைசி வரி மிக மிக முக்கியமானது.
இந்தப் போராட்டத்தை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கம் தமிழகத்தில் களம் அமைக்க முயற்சிப்பதாகப் படுகிறது. ஆரம்பத்திலேயே ஒடுக்கப்பட வேண்டிய விசயம் இது.
தொடர்ந்து எழுதுங்கள். இதே நிதானத்துடன்.
அன்புடன்,
ஆனந்தன் அமிர்தன்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...