24 July 2011

முனி 2 - காஞ்சனா - காமெடி பீஸ்

                                    
     ராகவேந்திரா லாரன்ஸ் இயக்கிய முனி படமும் , சரத்குமார் திருநங்கையாக நடிக்கிறார் என்ற செய்தியும் தான் முனி 2 - காஞ்சனா படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பை உண்டாக்கிய விஷயங்கள் ..திகிலையும்,காமெடியையும் சக விகிதத்தில் கலந்து கொடுத்ததால் தான் முனி படம் வெற்றி பெற்றது...காஞ்சனாவில் இரண்டையும் கோட்டை விட்டு விட்டார் லாரன்ஸ்..

     பயந்தாங்குளியின் உடம்புக்குள் புகுந்து கொள்ளும் ஆவி தன் பழி கணக்கை தீர்த்து கொள்வதே கதை...இதில் ஒன்றுக்கு பதில் மூன்று ஆவிகள் புகுந்து கொள்வதும்,அதில் ஒன்று திருநங்கை என்பதுமே சற்று வித்தியாசம்..முனி படத்தில் நடித்த அம்மா-பையன் வேடத்தில் கோவை சரளா-ராகவேந்திரா லாரன்ஸ் ,கதாநாயகியாக லக்ஷ்மி ராய், அண்ணன்,அண்ணியாக ஸ்ரீமன் - தேவதர்ஷினி,வில்லனாக தேவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்....
                                
      பயந்தாங்குளி கதாபத்திரத்திலும்,பின்னர் ஆவி புகுந்த பின் பெண்தன்மை நிறைந்த கதாபத்திரத்திலும் கலக்கியிருக்கிறார் ராகவா..(படத்தில் இவர் பெயர்  இதுவே)..அண்ணன் குழந்தைகளிடம் பயத்துடன் பேய்கதை கேட்பது , அனுமார் படம் பொறித்த போர்வையை போத்திக் கொள்வது , பயந்தவுடன் ஓடி சென்று அம்மா மடியில் உட்கார்வது என முன்பாதியில் கலக்கும் ராகவா பின் ஆவி புகுந்தவுடன் செய்யும் சேட்டைகள் அமர்க்களம்.. குறிப்பாக பெண்ணைப்போல மஞ்சள் பூசிக் கொண்டதை கேள்வி கேட்கும் அண்ணன் ஸ்ரீமன் இவரிடம் அறை வாங்கும் இடத்தில் அரங்கமே கல..கல... ஓபனிங் சாங்,பைட் என வெறுப்பேற்றினாலும் பின் தன் நடிப்பால் அதை சமன் செய்கிறார் ராகவா...

      சரளா சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் ஓவரான முக பாவங்களாலும்,வடிவேலு மாதிரியான வசன உச்சரிப்புகளாலும் வெறுப்பேற்றுகிறார்..காமெடி என்ற பெயரில் இவரை கிளாமர் உடையில் எப்படி இருப்பார் என்று ராகவா நினைத்துப் பார்ப்பது அம்மா கதாபாத்திரத்தையே அவமதிப்பது போல உள்ளது..பேயை விரட்ட தேவதர்ஷினியுடன் இவர் அடிக்கும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன...
                                  
     சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று பிராமண பாஷை பேசிக்கொண்டு படம் முழுவதும் ஓவர் ஆக்டிங் செய்தே நம்மை எரிச்சலடைய வைக்கிறார் தேவதர்ஷினி..கோவை சரளா கவுண்டர் பாஷை பேசுகிறார்,தேவதர்ஷினியின் தங்கையாக வரும் லக்ஷ்மி ராய் சாதாரணமாக பேசுகிறார்..படத்தில் எல்லோருமே சாதாரணமாக பேச இவர் மட்டும் சம்பந்தமில்லாமல் பேசுவது ஏன்..? ராகவேந்திரா லாரான்சுக்கே வெளிச்சம்...
                                     
   லக்ஷ்மி ராய் கிளாமராக வந்து போவதை தவிர வேறு வேலை எதுவும் இல்லை.. அம்மணி தன் உடல் எடையை கவனித்தல் நலம்..இந்த கூட்டத்திற்கு மத்தியில் ஒரு ஆறுதல் ஸ்ரீமன்..தம்பியின் அடிக்கு பயந்து வாய் கோணி இவர் நடிக்கும் காட்சி அற்புதம்..

    "ஆணழகன்" பட்டம் பெற்ற சரத்குமாரை அரவாணியாக நடிக்க வைத்தது வித்தியாசமான சிந்தனை..சரத்குமாரின் துணிவினை பாராட்டலாம்..முடிந்த வரை முயற்சி செய்து நடித்திருக்கிறார்..சண்டைக்காட்சிகளில் இவர் சேலை கட்டிய சரத்குமாராக தெரிகிறாரே தவிர திருநங்கையாக அல்ல..பல்லை கடித்துக் கொண்டு இவர் ஓடி வரும் காட்சிகள் ஆக்ரோஷம்..குறிப்பாக திருநங்கைகள் படும் கஷ்டங்களை பற்றி இவர் மேடையில் பேசும் இடம்   நெகிழ்ச்சி..
                                               
    ராகவேந்திரா லாரன்சின் நடிப்பும்,நடனமும் ( வளைந்து வளைந்து அருமையாக ஆடுகிறார்..ஆனால் இவரின் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு பாடல்கள் வேகமாக இல்லை ) , தமனின் பின்னணி இசையும் , சரத்குமாரின் திருநங்கை வேடமும் மட்டுமே படத்தின் சில பலங்கள்...மற்றவை எல்லாம் சொதப்பல்ஸ்...
                                    
     திகில் படத்தின் பலமே அதன் நடிக,நடிகையர்கள் முகத்தில் காட்டும் பய உணர்ச்சிகள் தான்... ஆனால் இதிலோ சரளா,தேவதர்ஷினி என்று எல்லோருமே முகத்தில் அஷ்ட கோணத்தை காட்டுவதால்  திகில் காட்சிகளில் கூட சிரிப்பு வருகிறது.. ஒரு வேலை முழு நீள திகில் படமாக எடுத்தால் குடும்பத்துடன் யாரும் வரமாட்டார்கள் என லாரன்ஸ் நினைத்திருக்கலாம்..ஆனால் இது போல ரெண்டுக்கட்டான் படத்திற்கும் பெரிய வரவேற்பு இருக்காது என்பது ஏனோ லாரன்சுக்கு தெரியவில்லை..

     முதல் பாதி தான் மொக்கையாக இருக்கிறதே, அட சரத்குமார் வரும் ப்ளாஷ் பாக்கிலாவது அதிரடி முடிச்சு வைத்திருப்பார்கள் என்று பார்த்தால் அதிலும் நில அபகரிப்பு செய்யும் எம்.எல்.ஏவைக் காட்டி கொட்டாவி விட வைக்கிறார்கள்...சரத்குமார் மிகவும் கஷ்டப்பட்டு பாத்திரம் தேய்த்து ஏதொ கொஞ்சம் பணம் ( வெறும் 25 லட்சம் ) சேர்த்து ஒரு இடம் வாங்குகிறாராம்..காதுல பூ வைக்கலாம்..பூக்கடையேவா..?.

      கடைசியில் படம் முடிந்து வெளியே வரும் போது தான் எல்லோரும் பயத்துடன் வந்தார்கள் ..ராகவேந்திரா லாரன்ஸ் முனி 3 க்கு லீட் வைத்ததே அதற்கு காரணம்.. போதும் லாரன்ஸ் விடுங்க....

      ஆக மொத்தத்தில் அமெச்சூர் காமெடிகளாலும் ,கோணலான திரைக்கதையாலும் குறைந்த பட்சம் கமர்சியல் ஹிட் ஆகியிருக்க வேண்டிய காஞ்சனா - காமெடி பீசாகி விட்டது ..

ஸ்கோர் கார்ட் : 38

.

22 July 2011

தெய்வதிருமகள் - திருட்டு தேவதை

       முதலில் தெய்வமகன் பிறகு பெயர் மாற்றி தெய்வதிருமகன் பின்னர் சர்ச்சைக்கு பயந்து கடைசியில் "தெய்வதிருமகள்" என்று பெயர் குழப்பங்களை தாண்டி வெளிவந்திருக்கும் படம் "தெயய்வதிருமகள்" - பெயரில் தான் குழப்பமே தவிர i am sam என்ற ஆங்கில படத்தின் கதையை திருடியதில் எந்த குழப்பமுமில்லை..
               
       ஒரு அழகான பெண்ணை பார்த்தவுடன் மனதை பறி கொடுத்து விட்டு அவள் பின்னாலேயே சுற்றி சுற்றி கடைசியில் அவள் ஒரு விபச்சாரி என தெரியவரும் போது என்ன மனநிலையில் இருப்போமோ அதே மனநிலை தான் "தெயய்வதிருமகள்" ஏற்படுத்திய அனுபவமும்...சிலாகித்து எழுதியிருக்க வேண்டிய இந்த பதிவு சிதைந்ததன் காரணம் தெய்வதிருமகள் i am சாம் ன் அப்பட்டமான தழுவல் என்பதே...

       அன்போடும்,பாசத்தோடும் பின்னிப் பிணைந்த இரண்டு சிறார்களை பிரித்தால் என்னவாகும் என்பதே கதை..இதில் உடலால் இளைஞனாக இருந்தாலும் மூளை வளர்ச்சியில் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்
அப்பா கிருஷ்ணாவாக விக்ரம் , அவனின் ஐந்து வயது மகள் நிலாவாக சாரா..விக்ரமிடம் இருந்து நிலாவை பிரிக்கிறார் அவள் தாத்தா..சட்டப்படி நிலாவை விகரமிடம் ஒப்படைக்க பாடுபடுகிறார்கள் வக்கீல்கள் அனுஷ்காவும் , சந்தானமும்..கடைசியில் இருவரும் சேர்ந்தார்களா என்பதே கிளைமாக்ஸ்..
                                       
          திருடியதை தவிர்த்து விட்டு பார்த்தால் இது தமிழ்நாட்டிற்கு புதுக் கதை..விக்ரம் - சாரா இவர்களது நடிப்பில் மற்ற குற்றங்கள் மறக்கப்படுகின்றன .. இவர்களின் உடல்மொழியும், நடிப்பும் அவ்வளவு அற்புதம்..காலங்கள் கடந்தாலும் நிலாவாக நடித்த சாராவின் நடிப்பு ஒழி வீசும்..இன்னும் பத்து வருடங்கள் கழித்து இவறும் வழக்கமான கவர்ச்சி நடிகையாகி விடக் கூடாதென்பது இப்போதே வைக்கும் வேண்டுகோள்..

             விக்ரம் நடிப்பிற்கு இப்படம் ஒரு மைல்கல்...கமலிற்கு பிறகு தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்..கொஞ்சம் பிசகினாலும் "ஓவர் ஆக்டிங்" ஆகி விடக்கூடிய அபாயத்தை உணர்ந்து மிக இயல்பாகவே நடித்திருக்கிறார்...மகள் பிறந்தவுடன் முகத்தில் சந்தோசத்தையும்,மனைவி இறந்ததை அறிந்தவுடன் சோகத்தையும் வேறுபடுத்தி காட்டும் இடம் ஒரு உதாரணம்...பட ஆரம்பம் முதல்
இறுதி வரை நிலா,நிலா என்று சொல்லி எல்லோரையும் உருக வைத்துவிடுகிறார்..
                                           
        அனுஷ்கா,அமலா பால் இருவரும் ரொம்ப அழகாக இருக்கிறார்கள்..அளவாக நடித்திருக்கிறார்கள்..சந்தானம் சிரிக்க வைப்பதோடு சீரியசான ரோலிலும் நடித்திருக்கிறார்..பாவம் கார்த்திக் குமாரை வீணடித்திருக்க   வேண்டாம்....நாசர்,எம்.எஸ்.பாஸ்கர்,ஓய.ஜி.மகேந்திரா இப்படி சீனியர் நடிகர்கள் படத்தில் நிறைந்திருக்கிறார்கள்...படத்தில் சிலாகிக்க வைக்கும் காட்சிகளும் உண்டு ..சினிமாத்தனங்களும் உண்டு....

       பாதி வழியில் இறக்கி விடப்பட்டு நிலாவை தேடி விக்ரம் அலையும் காட்சிகள் , பிரிந்திருக்கும் தருணத்தில் இருவரும் நிலவைப் பார்த்து பேசும் காட்சி , விக்ரமுடன் நிலா சேர்வாரா என்று பதைபதைக்க
வைக்கும் கோர்ட் காட்சிகள் , நாசர் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க நிலா-விக்ரம் இருவரும் சைகையில் குழந்தைத்தனமாக பேசிக்கொள்ளும் காட்சி , கடைசியில் கிளைமாக்ஸ் இவை எல்லாமே சிலாகிக்க வைத்த காட்சிகள்..
                                                               
     எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியுடன் விக்ரமை இணைத்து பேசும் காட்சிகள் , பொம்மைகள் போல விக்ரமின் மனநிலை குன்றிய நண்பர்கள் உலா வரும் காட்சிகள் , மழை பெய்தவுடன் அனுஷ்கா விக்ரமை காதலிப்பது  போல வரும் தேவையற்ற பாடல் காட்சி, நாசரின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் விக்ரம் ஓடிச்சென்று மருந்து வாங்கி வரும் காட்சி , அனுஷ்கா,ஒய்.ஜி சம்பந்தப்பட்ட காட்சிகள்  இவையெல்லாம் சினிமாத்தனமான காட்சிகள்...

          மிக மெதுவாக நகரும் முதல் பாதியை கோர்ட் காட்சிகள் நிறைந்த இரண்டாம் பாதி சமன் செய்கிறது...
ஜி.வி.பிரகாசின் இரண்டு பாடல்களும் பின்னணி இசையும் மனதில் நிற்பவை...
                                            
     கிரீடம் , பொய் சொல்ல போறோம் இரண்டும் ரீ மேக் படங்கள் என்றாலும் நேர்த்தியாக எடுத்திருப்பார் விஜய்...மதராசப்பட்டினம் டைட்டானிக் படத்தின் சாயலாய் தெரிந்தாலும் நிச்சயம் கதைக்களமும் , திரைக்கதையும் இரண்டு படங்களையும் அழகாக வித்தியாசப்படுத்திக் காட்டியது...இது விஜயின் புத்திசாலித்தனம்..ஆனால் இந்தப் படத்தை அப்பட்டமாக தழுவி விட்டு "எழுத்து - இயக்கம் " என்று
போட்டுக் கொண்டது விஜயின் மொள்ளமாரித்தனம்...
                         
    பிட் பாக்கெட் , வழிப்பறி இதையெல்லாம் செய்யும் திருடனை பொடனியிலே தட்டும் போலீஸ் பல கோடி ஊழல் செய்பவர்களுக்கு விருந்து உபச்சாரம் செய்வது வழக்கம்..இதைப் போலத்தான் இருந்தது சினிமா விமர்சனங்களுக்கு பெயர் போன "ஆனந்த விகடன்" இந்த படத்திற்கு கொடுத்த ஐம்பது மார்க்குகளும்..

     தியேட்டருக்கு சென்று தான் படம் பார்க்க வேண்டும் என்ற கொள்கையுடைய என்னைப் போன்ற பலரின் நெஞ்சங்களை திருட்டு வி.சி.டி யை விட மோசமான இது போன்ற கதை திருட்டுக்கள் பதைபதைக்க வைக்கின்றன...இயக்குனர்களே முதலில் இதை சரி செய்து விட்டு பிறகு "திருட்டு வி.சி.டி யில் படம் பார்க்காதீர்கள்" என்று அறைகூவல் விடுங்கள்...திவ்ய தரிசனமாக இருந்திருக்க வேண்டிய தெய்வதிருமகள் ஒரு திருட்டு தேவதையாக மாறியது சோகக்கதை...

ஸ்கோர் கார்ட் : 43 

14 July 2011

நான் "வெஜ்" - நயன்தாரா

                                
       பிரபுதேவா மனைவியை விவாகரத்து செய்தார் , பிரபுதேவா - நயன்தாரா திருமணம் எப்போது?.., "ஸ்ரீ ராம ராஜ்ஜியம்" தெலுங்கு படத்தோடு நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு, ஷூட்டிங் கடைசி நாளில் நயன்தாரா கண்ணீர் மல்க விடை பெற்றார் ... இவையெல்லாம் சமீப காலமாக பத்திரிக்கைகளை அலங்கரிக்கும் முக்கிய செய்திகள் ..                      

              பிரபலங்களைப் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வருவது சகஜம் தான் என்றாலும்,மிக சமீபத்தில் நயன்தாரா பற்றி நான் படித்த செய்தியே இந்த பதிவிற்கு மூல காரணம்......"ஸ்ரீ ராம ராஜ்ஜியம்" படத்தில் சீதையாக நடிக்கும் நயன்தாரா அந்தப் படத்தில் நடித்த காலகட்டத்தில் சுத்த சைவ உணவையே உண்டதாகவும்,கடுமையான ஒழுக்கத்தை கடைபிடித்ததாகவும் சொல்லியிருக்கிறார்..மேலும் அம்மன் வேடத்தில்
நடிக்கும் நடிகைகள் கூட படம் முடியும் வரை கோயில்களுக்கு தொடர்ந்து செல்வதாகவும் கூறியிருக்கிறார் ...
                                          
                   நடிகர்கள் தான் ஒரு படத்திற்காக நான் அதை செய்தேன் , இதை செய்தேன் என்று ஓவர் பில்ட் அப் கொடுப்பார்கள் என்று பார்த்தால் இப்போது அந்த வரிசையில் நயன்தாரா.. கதா நாயக, நாயகிகள் சினிமாவில் இருப்பது போல் தான் நிஜத்திலும் இருப்பார்கள் என்ற மக்களின்
நம்பிக்கையெல்லாம் மலையேறி விட்ட இன்றைய கால கட்டத்தில் இந்த மாதிரியான ஜோடனைகலெல்லாம் தேவை தானா..?
                                                                        
            நயன்தாரா சைவ உணவையும் , ஒழுக்கத்தையும் தன் வாழ்நாள் முழுக்க கடைபிடிக்கப் போவதாக சொல்லியிருந்தால் அதைப் பாராட்டலாம்..இந்தப் படத்திற்காக இவற்றை கடைபிடித்தேன் என சொல்வது ஏமாற்று வேலை...ஏனெனில் தனி மனித ஒழுக்கம் என்பது எப்போதும் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று....
அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான விஷயம் அல்ல...மேலும் ஓர் நடிகை அம்மனாக நடித்தாலும் சரி இல்லை அம்மணமாக நடித்தாலும் சரி அது வெறும் நடிப்பு தான்....அதைத்தாண்டி வேறொன்றுமில்லை..
                                               
                நல்ல வேலை நயன்தாரா வானம் படத்தில்
அனுஷ்கா நடித்த வேடத்தில் நடிக்கவில்லை... அவர் பாட்டுக்கு நடைமுறைப் பயிற்சியில் இறங்கியிருந்தால் கோர்ட்,கேஸ் என்று அலைய வேண்டியிருந்திருக்கும் ....
                                          
               பொதுவாக இந்த காலத்து நடிகைகள் உடல் அழகை மட்டுமே மூலதனமாக்குவதால் அவர்களுக்கு பொது மக்களின் மதிப்பும்,மரியாதையும் கிடைப்பது கடினம்...தேசிய விருது பெற்ற பிரியா மணி கூட தன்னை விருது நடிகை என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்ற பயத்தில் அடுத்தடுத்த படங்களில் ( தெலுங்கு ) முடிந்த வரை கவர்ச்சி காட்டி வருகிறார்..இது அவர்களது தொழில்..அவர்களது விருப்பம்..அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை..அதே போல் அவர்களும் "ஒழுக்க" அறிக்கைகள் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை..

                                                 
            கற்புக்கரசி சீதா தேவி வேடத்தில் அடுத்தவள் கணவனை தட்டிப் பறித்த நயன்தாரா நடிப்பதா என்று சிலர் சர்ச்சையை கிளப்பினார்கள்..."தீ" என்றால் நாக்கு சுட்டு விடுமா ? அது போலத்தான் இதுவும்..ஆனால் நெருடலான ஒரு விஷயம் என்னவென்றால் கடவுள் பெயரை சொல்லி படம் எடுப்பவர்களும் சரி, கடவுளே இல்லை என்று பகுத்தறிவு வாதம் பேசுபவர்களும் சரி குறி வைக்கும் ஒரே எளிமையான இலக்கு இந்து கடவுள்களும்,இந்து மத பழக்கவழக்கங்களும்...

            இங்கு எவரும் சரஸ்வதியை நிர்வாணமாக படம் வரையலாம்,ராமர் எந்த கல்லூரியில் படித்தார் என்று சான்றிதழ் கேட்கலாம் ,சீதையின் ஒழுக்கத்தை கேலி செய்யும் விதத்தில் திரைப்படம் எடுக்கலாம்,ஏன்  நான் தான் சீதை என்றே சொல்லிக் கொள்ளலாம்..ஏனெனில் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி இந்தியா "மத சார்பற்ற நாடு"..  இவர்களைப் பொறுத்த வரை இந்தியா "இந்து மத சார்பற்ற நாடு"...அதையும் மீறி உண்மையை சொல்பவர்கள் பழமை வாதிகள் ,கேள்வி கேட்பவர்கள் மத வெறியர்கள்....

12 July 2011

மு.க.வின் குடும்ப அரசியல் தி.மு.க செயற்குழுவில் வெடிக்குமா ..?

                                               
    2 ஜி ஸ்பெக்டெர்ம் ஊழலில் ராஜா கைது ,தேர்தலில் படு தோல்வி, கூட்டணி தர்மம் கொஞ்சம் கூட இல்லாமல் சி.பி.ஐ யை வைத்து துரத்தி துரத்தி அடிக்கும் காங்கிரஸ், கனிமொழி கைது அதைத் தொடர்ந்து ஜாமீன் மறுப்பு,  தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்த நில அபகரிப்பு விவகாரங்களில் தற்போதைய அரசு காட்டி வரும் ஆர்வம் ,
2 ஜி ஸ்பெக்டெர்ம் விவகாரத்தால் தயாநிதி ராஜினாமா இப்படி தி.மு.க விற்கு அடுத்து அடுத்து விழுந்த அடிகளால் கொஞ்ச காலம் அடங்கியே இருந்தது மு.க.அழகிரி - ஸ்டாலின் இவர்களுக்கு இடையேயான பனிப்போர்.....

      ஆனால் கோவையில் 23 ஆம் தேதி நடக்கவிறுக்கும் தி.மு.க செயற்குழு கூட்டத்தில் குடும்ப அரசியல் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... தேர்தல் தோல்விக்கு 2 ஜி விவகாரம் மட்டும் காரணம் அல்ல கட்சிக்குள் நிலவும் குடும்ப ஆதிக்கமே முழுக் காரணம் என்று ஸ்டாலின் தரப்பு நம்புவதோடு மட்டுமல்லாமல் அதை ஆதாரத்தோடு செயற்குழுவில் முன்வைக்கவும் முனைப்பு காட்டி வருவது அழகிரி தரப்பினரிடையே புகைச்சலை உண்டாக்கியிருக்கிறது...
                                      
           ஸ்டாலின் தரப்பு குடும்ப ஆதிக்கத்தை எதிர்ப்பதில் எந்த வித ஆச்சரியமும் இல்லை..பொதுவாக தி.மு.க வின் குடும்ப அரசியலை எதிர்ப்பவர்கள் கூட ஸ்டாலின் தி.மு.க வில் வளர்ந்த விதத்தை விமர்சிப்பதில்லை ..அவர் வலுக்கட்டாயமாகவோ , வேறு யாருடைய வளர்ச்சியைத் தடுப்பதற்கோ தி.மு.க விற்கு வரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே...கலைஞரின் மகன் என்பதையும் தாண்டி கட்சியினரிடையே அவருக்குள்ள செல்வாக்கையும், மதிப்பையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது ...
                                                   
     தென் தமிழ்நாட்டில் தி.மு.க கட்சி வளர்ந்ததற்கு அழகிரி முக்கிய காரணம் என்றாலும் கடந்த தேர்தலில் கட்சி வீழ்ந்ததற்கும் அவரின் நடவடிக்கைகள் தான் காரணம் என்பது கட்சியினரிடையே தற்போது பரவலாக நிலவி வரும் கருத்து...தயாநிதியின் வளர்ச்சியை தடுப்பதற்காக கவிதை எழுதிக் கொண்டிருந்த கனிமொழியை கட்சிக்குள் கொண்டு வந்தார் கலைஞர்.. இன்று அதுவே அவர் கண் கலங்குவதற்கு காரணமாகிவிட்டது                  
                                                                                  
                              அரசியலையும் தாண்டி சினிமா,ரியல் எஸ்டேட் , பத்திரிக்கை என்று குடும்ப அரசியலின் ஆதிக்கம் விரிவானது...உழைத்து பணம் அதிகம் சம்பாதித்தாலே ஊரில் கண் போடுவார்கள் என்று ஒரு வழக்கு உண்டு..இங்கோ ஊரையே அடித்து சம்பாதித்தால் மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா ?..தேர்தலில் தக்க பதிலடி கொடுத்தார்கள்..


     எம்.ஜி.ஆர் கட்சியை தன் குடும்பம் போல பாவித்தார்..அதுவே அவரின் வெற்றி...கலைஞரோ தன் குடும்பத்தையே கட்சியாக்கினார்..பொதுமக்களையும் விட தி.மு.க வின் உண்மையான தொண்டர்களையே இது அதிகம் பாதித்தது... கடந்த வருடம் கலைஞர் தன் பிறந்த நாள் விழாவில் தனக்கு அடுத்ததாய் முதல்வர் பதவிக்கு ஸ்டாலினை முன்மொழியப் போவதாக அறிவித்தார்.. ஆனால் அழகிரியின் தலையீட்டால் அது பாழாய்ப் போனது...

      ஒரு தகப்பனாக இரு மகன்களை மட்டுமல்ல ஒரு தலைவனாக கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கலைஞர் வைக்கவில்லை என்பதையே இது காட்டியது...பொதுவாக எந்த ஒரு கேள்வி கேட்டாலும் அதற்கு வேறு
ஏதாவது ஒரு பதிலை சொல்லி ( தி.மு.க வின் தேர்தல் தோல்விக்கு பிராமணர்களே காரணம் , பத்திரிக்கைகளின் தவறான சித்தரிப்பால் தான் தயாநிதி ராஜினாமா செய்தார் இப்படி சில உதாரணங்கள் ).
சமாளிக்கும் திறன் படைத்த கலைஞர் இந்த செயற்குழு கூட்டத்திலும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த ஏதாவது ஒரு அஸ்திரம் வைத்திருப்பாரா? மு.க வின் குடும்ப அரசியல் தி.மு.க செயற்குழுவில் வெடிக்குமா..? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ....


....

10 July 2011

ரெட் டஸ்ட்- உலக சினிமா

                                                                  
   " ரெட் டஸ்ட்" ட்ராய் எழுதி டாம் ஹூப்பர் இயக்கத்தில் 2004  ஆம்  ஆண்டு வெளி வந்த ரஷ்ய படம்....சவுத் ஆப்பிரிக்காவில் 1986  ஆம் ஆண்டு ஹென்ரிக்ஸ் என்ற காவல் துறை அதிகாரியின் கீழ் நடந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை நடத்த ட்ராக் என்ற குழு 2000  ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்கா வருகிறது...காவல் துறையின் கொடுமைகளுக்குள்ளான அலெக்ஸ்   பாண்டோ ( சிவேடேல் ) சார்பில் வாதாடுவதற்காக நியூ யார்க்கில் இருந்து வருகிறார் லாயர் சரா ( ஹிலாரி ஸ்வன்க் )...

         1986  ஆம் ஆண்டு  அலெக்ஸ் உடன் சேர்த்து விசாரிக்கப்பட்ட ஸ்டீவ் என்ன ஆனான் என்ற உண்மையை அறிவதற்காக அமைக்கப்பட்ட இந்த குழு ஹென்ரிக்ஸ் , அலெக்ஸ் இருவரையும் விசாரித்து கடைசியில் உண்மையை கண்டுபிடிப்பதே கதை...    இன வெறியால் கருப்பு இன  மனிதர்களை   விசாரணை என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமாக கொடுமைப்படுத்தும் காட்சிகளை அலெக்ஸ்  நினைவுகளில் ஆங்காங்கே படத்தின் சுவாரஷ்யம் குறையாமல் காட்டியிருப்பது அருமை... 

         பழைய நினைவுகளில் மூழ்கும் போது கண்களில் பயம் காட்டுவது , விசாரணையில் உண்மையை வரவழைப்பதற்க்காக ஹென்றிக்ஸுடன் நேருக்கு நேர் நின்று வாதாடுவது , நண்பனைக் காட்டிக்கொடுத்து விட்டோமோ என்று குற்ற உணர்ச்சியில் புலம்புவது என நிறைய இடங்களில் சிவேடேல் நன்றாக நடித்திருக்கிறார்...சிரிக்கும் போது அழகாக இருக்கும் சிவேடேல் படத்தில் முக்கால் வாசி அழுத வண்ணமே  இருக்கிறார்....

       வக்கீல் சராவாக வரும் ஹிலாரி திறமையாக வாதாடி உண்மையை வரவழைக்கிறார்..குறிப்பாக விசாரணை நடந்த இடம் காவல் நிலையம் அல்ல பண்ணை வீடு என்கிற உண்மையை ஹென்ரிக்ஸ் வாயில் இருந்து வரவழைப்பது ஒரு உதாரணம்...கோர்ட் சம்பத்தப்பட்ட   காட்சிகள்  மிக  யதார்த்தம்...தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி  இருக்கிறார் ஹிலாரி..      
  
         படத்தில் மனதை பிசையும் காட்சிகள் நிறைய...ஸ்டீவ் கொடுமைப்படுத்தப்படும் காட்சிகள்..குறிப்பாக   ஸ்டீவ் ரத்த புழுதியில் கடைசியாக அலெக்ஸ்ஐ பார்க்கும் காட்சி நிறைய அர்த்தங்கள் சொல்கிறது...தன்னை துரோகி என்று சொல்லும் ஒருவனை அடித்து வலி என்றால் என்ன என்று அலெக்ஸ் புரிய வைக்கும் காட்சி ..அலெக்ஸ் வாந்தியெடுக்கும் போது உடனே தான் அணிந்திருக்கும் டீ சர்ட்டை சிறுவன் கழட்டிக் கொடுக்கும் காட்சி.. ஸ்டீவ் என்ன ஆனான் என்று தெரிந்தவுடன் அவனுடைய வயதான தாயார் அழும் காட்சி என்று சில  உதாரணங்களை சொல்லலாம்..

        ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வசனங்கள் மிகவும் கூர்மை....ஒரு காட்சியில் அலெக்ஸ்  சாராவிடம்  சொல்லும் வசனம்.."நான் ச்டீவை அவன் வலியில் இருந்து காபாற்றுவதற்க்காக அவனை நோக்கி விரல்களை நீட்டினேனா..இல்லை என்னுடைய வலியில் இருந்து தப்பிப்பதற்கு செய்தேனா? ...   சிறு வயதில் தான் விளையாடிய மைதானத்திற்கு வரும் சாராவைப்             பார்த்து "மரத்தில் என்ன தேடுகிறீர்கள்?" என காவலாளி கேட்க "என் முதல் காதலனின்  பெயரை தேடுகிறேன்"..என சரா சொல்லும் பதில் மற்றொரு உதாரணம்...மனதை வருடும் இசை படத்தின் பலம்...
                                                     
          டாம் ஹூப்பருக்கு இது முதல் திரைப்படம் என்பது கூடுதல் செய்தி...மனித உரிமை மீறல்கள் என்றவுடன் அறுவறுக்கத்தக்க வகையில் ரத்த புழுதியில் படம் எடுக்காமல் பட தலைப்பை மட்டும் "சிவப்பு   புழுதி" என்று வைத்திருக்கிறார் இயக்குனர்...ரத்தம் குறைவாக இருந்தாலும் காட்சிகளில் அழுத்தம் அதிகம்........

         ரஷ்யன் கல்ச்சுரல் அகாடமியில் படம் முடிந்து வெளி வந்தவுடன் வழக்கம் போல நண்பர்களுடன்        சினிமாவைப் பற்றிய அரட்டை மிக நேரம் நீண்டது ...... உலக சினிமாக்களை பார்க்கும் போதெல்லாம்  தோன்றும் ஒரு கேள்வி.
    .ஏன் நம்மூர் இயக்குனர்கள் நல்ல நாவல்களை படமெடுக்க முற்படுவதில்லை?.   
      கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் என்று எல்லாமே தானே செய்ய வேண்டும் என்ற எண்ணம்                                      
காரணமாக இருக்கலாம்...மற்றவர்கள்  கதைகளையும் எடுக்க முற்படாததால் தான் கற்பனை மலட்டுத் தன்மை  தவிர்க்க முடியாததாகி விட்டது ...   அதே சமயத்தில் அந்த காலத்திலேயே உலக தரத்தில் எடுக்கப்பட்ட அந்த நாள் , உதிரி பூக்கள்,முள்ளும் மலரும் , 16 வயதினிலே   போன்ற சில படங்களையும் நினைவு கூர்ந்தோம்.........             
                                                                                    
     ஒரு காலத்தில் நேரத்தைப்  போக்குவதற்காக சினிமாவைப் பற்றி பேச ஆரம்பித்து இன்று சினிமா பற்றி பேச ஆரம்பித்தால்  நேரம் போவதே தெரிவதில்லை.... 

9 July 2011

முக்காலம்...

            
நினைவுகள்
இறக்க மறுக்கும்
இறந்த காலம்...

நினைப்பவை
நிகழ மறுக்கும்
நிகழ்  காலம்...

எது நடக்குமோ
என்ற அச்சத்தில்
எதிர் காலம்...

மொத்தத்தில்
முரண்பாடுகள் நிறைந்ததே
முக்காலம்...4 July 2011

அரையாண்டு சினிமா (2011)-ஓர் அலசல்


         இந்த வருடம் உலகக்கோப்பை கிரிக்கெட்,சட்டசபை தேர்தல்,ஐ.பி.எல் என்று வரிசையான பரபரப்புகளுக்கிடையில் கடந்த ஆறு மாத கால சினிமா கொஞ்சம் அசமந்தமாகவே  போனது என்று தான் சொல்ல வேண்டும்...

                                
     கடந்த ஆண்டின் முதல் ஆறு  மாத காலத்தில்  வெளி வந்த ஆயிரத்தில்   ஒருவன்,தமிழ்படம்,விண்ணைத்தாண்டி வருவாயா,
அங்காடித்தெரு,களவானி போன்று  வெரைட்டியாகவும்,வணிக ரீதியாக 
வெற்றியும் பெற்ற   படங்கள் இதுவரை வராவிட்டாலும் அதை ஓரளவு
சமன் செய்வது போல ஆடுகளம்,அழகர்சாமியின் குதிரை,ஆரண்ய காண்டம் போன்ற அழுத்தமான படங்களும் கோ ,சிறுத்தை போன்ற
வணிக ரீதியான வெற்றிப் படங்களும் வந்திருக்கின்றன....
      இதில் ஆடுகளம் இந்த வருடம் வெளியாகி இருந்தாலும் சென்ற ஆண்டு சென்சார் செய்யப்பட்டதால் கடந்த ஆண்டின் ஆறு தேசிய விருதுகளை அள்ளிச் சென்றிருக்கிறது..ஆடுகளத்துக்கு ஆறு தேசிய விருதுகள்...
       நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு   ஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்...
 அந்த அளவிற்கு  நேர்த்தியான திரைக்கதை , இயல்பான நடிப்பு , 
தரமான பின்னணி இசை...அதே சமயம் காமினி என்ற ஹிந்தி படத்தின் பாதிப்பு 
இதில்  இருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்...
நல்ல வேலை இந்தப் படத்தில் கமல் இல்லை..இருந்திருந்தால் இதை 
உலகப்படம் என்று புகழும் சிலர் அதே வாயால் உல்டா படம் என்று
தேளாய்க் கொட்டியிருப்பார்கள்....
      இலக்கியம் படமாக்கப்படும் போது வணிக ரீதியான சமாதானங்களால் வழி மாறி போய் விடுவதுண்டு ...ஆனால் பாஸ்கர் சக்தியின் கதையை அதன் மண் மனம் மாறாமல் இயக்கி இருப்பது இயக்குனர் சுசீந்தரனின் சாமர்த்தியம்....அழகர்சாமியின் குதிரை  - அனைவருக்கும் ஏற்ற சவாரி....

      தெலுங்கு டப்பிங் படம் போல இருந்தாலும் கார்த்திக்-சந்தானம்
கூட்டணியால் வணிக ரீதியாக வெற்றி பெற்று விட்டது சிறுத்தை....
                                        
      பத்திரிக்கை நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
என்று சொல்லும் படம் கோ..தேர்தலுக்கு முன் வந்திருந்தால் நல்ல பொருத்தமாக இருந்திருக்கும் ...அதற்காகவே படத்தை வாங்கி தேர்தலுக்கு பின் வெளியிட்டது போல தெரிகிறது ....காண்க கோ - விமர்சனம்...
இதன் வணிக ரீதியான வெற்றி "ஸ்டேட் ஆப் ப்ளே" என்ற ஆங்கிலப்படத்தின்  தழுவல் என்ற உண்மையை அமுக்கி விட்டது...
                                           
      வேட்டைக்காரன்,சுறா என்று வரிசையான தோல்விப் படங்களால்
துவண்டு போயிருந்த விஜய்க்கு காவலன் ஒரு நல்ல திருப்பம்..ஏய்..ஓய் என்று பஞ்ச் வசனங்கள் இல்லாத காமெடி கலந்த காதல் படம் காவலன்,,,

                   
      
     சில ஆங்கில படங்களை நினைவு படுத்தினாலும் மிஷ்கினின்   "யுத்தம் செய்" ஒரு நல்ல கிரைம் த்ரில்லர்....இதே பாணியில் மென்மையான காதல்
படமான "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திற்கு பிறகு சைக்கோ த்ரில்லர் படம் எடுத்த கௌதமின் முயற்சியை மட்டும் பாராட்டலாம்....
ஆனால்  நடுநிசி நாய்கள்-குறைக்கவும் இல்லை,கடிக்கவும் இல்லை...
                                                       
                             
      எதிர்பார்த்து ஏமாந்த படம் அவன் இவன்..அவன்-இவன் அழுத்தமில்லாதவன்.....அரசியல் மாற்றத்தால் நிறைய படங்கள்
வெளிவரக் காத்திருந்தாலும் இந்த வருட முடிவுக்குள் ரசிகர்கள்
அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது "அசல்" நாயகன் அஜித் ..
நடிக்கும்  மங்காத்தா...இளைய தளபதி விஜய் நடிக்கும் வேலாயுதம்...
இந்த இரண்டு படங்கள் மட்டும் அல்ல வரப்போகின்ற எல்லா படங்களும்
ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதே
என் விருப்பம்...

          
  

Related Posts Plugin for WordPress, Blogger...