18 June 2015

ரோமியோ ஜூலியட் - ROMEO JULIET - கமர்சியல் காவியம் ...


ங்கேயும் காதல் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி - ஹன்சிகா இருவரும் காதலித்திருக்கும் சாரி கை கோர்த்திருக்கும் படம் ரோமியோ ஜூலியட் . கல் தோன்றி மண் தோன்றா காலத்தே பார்த்து பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் நல்ல வேளை படத்தின் இயக்குனர் லக்ஷ்மன் இவர்களை காதலில் கசிந்துருக வைத்து நம்மை வெறுப்பேற்றாமல் சரியாக பயன்படுத்தி டைம் பாஸ் செய்து அனுப்புகிறார் ...

கோடீஸ்வரனை கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாக நினைக்கும் ஏர் ஹோஸ்டஸ் ஐஸ்வர்யா ( ஹன்சிகா ) ஜிம் கோச் கார்த்திக்கை ( ஜெயம் ரவி ) பணக்காரன் என்று நினைத்து வழிய வழிய போய் லவ்வி விட்டு உண்மை தெரிந்தவுடன் கழட்டி விடுகிறார் . பெரும்பாண்மை ஆண்களைப் போல வெறும் சரக்கடிப்பதோடு நின்று விடாமல் ஹன்சிகா வின் மனதை மாற்ற முயற்சிக்கிறார் ரவி . அதில் ஜெயம் கண்டாரா ? என்பதை பெரிசாக யோசித்து மண்டையை உடைத்துக் கொள்ளாமல் படம் பார்க்க வரும் இளம் காதல் ஜோடிகளை மனதில் வைத்து ஜாலி ரோந்து வந்திருக்கிறார் லக்ஷ்மன் ...

ஜீவா , ஆர்யா க்களுக்கு எளிதாக செட்டாகும் ரோலில் சீரியஸ் பேஸ்  ஜெயம் ரவி முதலில் கொஞ்சம்  ஏமாற்றம் கொடுத்தாலும் போக போக பழகி விடுகிறார் . சரக்கடித்து விட்டு விடிவி கணேஷை கலாய்க்கும் போதும் , ஹோட்டலில் ஹன்சிகா வை மிரட்டும் போதும் இலசுகளிடம் கைத்தட்டல் வாங்குகிறார் . சில தோல்விகளுக்கு பிறகு கம்ர்சியலாக இந்த படம் ரவிக்கு ஜெயம் கொடுக்கும் . ஹன்சிகா வை பிடித்தவர்களுக்கு படம் ரொம்ப பிடிக்கும். ஹன்சிகா வை பிடிக்காதவர்களுக்கு இனி அவரை பிடிக்கும் . ஜோதிகா போல ஆங்காங்கே ஓவர் ஆக்ட் தெரிந்தாலும் நெகடிவ் சேட் உள்ள கேரக்டரிலும் தன்  இன்னொசன்ட் நடிப்பால் நன்றாக கவர்கிறார் . பணத்துக்காக ஆளை மாற்றும் போதும் ஏனோ அந்த மைதா மாவு மூஞ்சி மேல் கோவம் வரவில்லை. ..


விடிவி கணேஷ் விடிவி கணேஷாகவே வந்து கரகர குரலில் கலகலக்க வைக்கிறார்  . கொஞ்ச நேரம் வந்தாலும் ரெண்டாவது ஹீரோயின் ரோலுக்கு ஆண்ட்ரியா தான் வேணும் என்று அடம்பிடிக்கும் ஆர்யா ஆஸ்ம் . டி.இமானின் இசை படத்துக்கு பெரிய பலம் . டண்டணக்கா வில் டேன்ஸ் ஆட வைப்பவர் தூவானம் மெலடியில் நனைய வைக்கிறார் . முதல் பாதியில் மூன்று பாடல்களை நிரப்பியிருந்தாலும் போரடிக்கவில்லை ...

காசப் பாத்தவுடனே கால வாரும் ஹீரோயின்  , திரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று அந்த மேட்டரை டீலில் விடாமல் சீரியசாகும் ஹீரோ கதையை நிறைய படங்களில் பார்த்திருப்போம் . அதே போல படம் பார்க்கும் மூணாவது சீனிலேயே " நான் சொல்லல அடுத்து இப்படி வரும்னு " என்று பக்கத்து சீட் காரரின் அதி மேதாவித்தனங்களையும் அனுபவித்திருப்போம் . ரோமியோ ஜூலியட் அந்த வகையறா படம் தான் என்றாலும் காதல் , காதல் தோல்வி சென்டிமென்ட் , குறிப்பாக ஹீரோ காதல்னா என்று ஆரம்பித்து க்ளைமேக்சில் கிளாஸ் எடுக்கும் கொடுமை என்றெல்லாம் நம்மை மொக்கை போடாமல் சொல்ல வந்ததை நேர்கோட்டில் குறிப்பாக ஒருநாள் டேட்டிங்கில் ஜெயம் ரவி யை ஹன்சிகா வெறுப்பேற்றும் சீன்களில் கொஞ்சம் அழுத்தமாகவே சொன்ன விதத்தில் ரோமியோ ஜூலியட் ரெப்ரெஷிங் . ஜெயம் ரவி - ஹன்சிகா கெமிஸ்ட்ரி , ஹிட் பாடல்கள், வித்தியாசமான டைட்டில்  கார்ட் ,  போரடிக்காத அல்லது பொறுமையை சோதிக்காத ஸ்க்ரீன்ப்ளே இவையெல்லாம்  படத்தை காதல் காவியமாக்காவிட்டாலும் கமர்சியல் காவியமாக்கும் ...

ஸ்கோர் கார்ட் : 41

7 June 2015

காக்கா முட்டை - KAKKA MUTTAI - குயில் ...


சில வருடங்களுக்கு முன்னாள் நண்பன் ஒருவன் மூலம் காக்கா முட்டை படம் பற்றி கேட்ட மாத்திரத்திலேயே அந்த டைட்டிலுக்காக பிடித்திருந்தது . பிறகு அவ்வப்போது படத்தின் போஸ்டர் பார்க்கும் போதே ஒரு விதமான ஆவலைக் கொடுத்தது . பல வருடங்கள் ரிலீசாகாமல் கிடப்பில் இருந்த படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் என்று தெரிந்ததுமே நிச்சயம் பார்க்க வேண்டுமென தோன்றியது . கடைசியில் படத்தை பார்த்த பிறகு சினிமா ஆசையில் சென்னைக்கு வந்துவிட்டு இன்னும் என்னடா புடுங்கிட்டு இருக்க என்று என் மனசாட்சியின் கேள்வி எனை தூங்க விடாமல் செய்தது ...

சேரியில் இருக்கும் இரண்டு ஏழை சிறுவர்களின்  ( ரமேஷ் , விக்னேஷ் ) பீட்சா தின்ன வேண்டுமென்கிற கனவும் , அதற்கான போராட்டமுமே காக்கா முட்டை . டிக்கெட் பின்னால் எழுதிவிடக் கூடிய கதை , ஆனால் அதை அந்த இரண்டு சிறுவர்களுடன் பீட்சா வுக்காக நம்மையும் சேர்த்து இரண்டு மணிநேரம் பயணிக்க வைத்த விதத்தில் பிரமிக்க வைக்கிறார் புதுமுக இயக்குனர் மணிகண்டன் ...

சிறுவர்களுக்கு தேசிய விருது கிடைத்ததில் எந்த ஆச்சர்யமுமில்லை . ஏனெனில் ஒரு சீனில் கூட அவர்கள் நடிக்கவில்லை . பீட்சா வுக்காக காசு சேர்த்தாலும் திருடாத , பிச்சை எடுக்காத அண்ணன் பெரிய காகா முட்டை , அப்பாவித்தனமான ரியாக்சன்களால் மனதை அள்ளும்  தம்பி சின்ன காக்கா முட்டை இருவருக்கும் , அவர்களை இந்த விதத்தில் வேலை வாங்கிய இயக்குனருக்கும் வாழ்த்துக்கள் . சிறுவர்களை  நமக்கு ஏற்ற மாதிரி நடிக்க வைப்பது அவ்வளவு சுலபமல்ல . சிறுவர்கள்  மட்டுமல்ல பசங்களின் அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா , பாட்டி , ரயில்வே தொழிலாளி பழரசம் ( ஜோ ) , அதிகம் பேசாத பீட்சா கடை ஓனர் பாபு ஆண்டனி , பேசியே தொல்லை கொடுக்கும் அவர் பால்ய நண்பன் கிருஷ்ணமூர்த்தி , வெள்ளை சட்டை லுங்கியுடன் பேட்டி  கொடுக்கும் அரசியல்வாதி , பாபு ஆண்டனியை ப்ளாக்மெயில் செய்யும் இரண்டு சேரி திருடர்கள் என்று எல்லோருமே இந்த எளிமையான படத்துக்கு வலிமையான தூண்கள் ...


இயக்குனர் படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இருந்தது சவுகரியம் . நாம் சட்டென்று கடந்து போகும் சேரியை சற்றும் சலிக்காமல் காட்டியிருக்கிறார் மணிகண்டன் . " கருப்பு கருப்பு " பாடல் மற்றும் பின்னணி இசையில் ஜி.வி நன்றாகவே தெரிகிறார் . இது போன்ற தரமான படத்தை தயாரித்ததற்கு தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள் . தனியாக சீன்கள் வைக்காமல் படம் நெடுக கேரக்டர்களின் சின்ன சின்ன வசனங்கள் மூலம் நம்மை சிரிக்க வைப்பது இயக்குனரின் திறமை ...

இரண்டு சேரி சிறுவர்களின் அறிமுகத்திலிருந்து ஆரம்பிக்கும் படம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் பீட்சா பாய்ண்டுக்கு வந்தவுடன் சூடு பிடிக்கிறது . பீட்சா வுக்காக பணம் சம்பாதிக்க சிறுவர்கள் செய்யும் முயற்சிகள் , பணம் கிடைத்தும் பீட்சாவை சாப்பிட முடியாமல் அடையும்  அவமானங்கள் , அதை வைத்து சுயலாபம் அடைய நினைக்கும் மற்றவர்கள் என்று  எல்லாமே எதையோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருக்கும் நம் எல்லோரின் ஆசைகளையுமே தோலுரித்துக் காட்டுகிறது . ஏழை என்றாலே நல்லவன் , பணக்காரன் எல்லோருமே கெட்டவன் என்பது போல நாடகத்தனமான சீன்களை வைக்காமல் இயல்பாக இரண்டு பக்கங்களையும் காட்டியிருப்பது உண்மையான யதார்த்தம் . சுருக்கமாக சொன்னால் பக்கம் பக்கமான வசனங்களால் உணர வைக்க முடியாத கம்யூனிசத்தை படம் பார்க்கும் போது ஒன்றாக வாழும் நம் மனிதர்களுக்குள் ஏனித்தனை வேறுபாடுகள் ? என்ற எண்ணத்தை எழுப்பியதன் மூலம் அறிய வைக்கிறது இந்த காக்கா முட்டைக்குள் இருக்கும் குயில் ...

ஸ்கோர் கார்ட் : 52

( பின்குறிப்பு : கமல் ஒரு பேட்டியில் அன்பே சிவம் படத்தை இப்பொழுது டிவிடி , நெட்டில் பார்த்து விட்டு அருமை என்று பாராட்டுகிறவர்கள் அப்பொழுதே தியேட்டரில் பார்த்திருந்தால் தயாரிப்பாளர் தப்பித்திருப்பார் என்று சொல்லியிருப்பார் . அதே மாதிரியொரு பேட்டி சின்ன பட்ஜெட் படம் என்பதாலும் , இன்றைய காலகட்டத்தில் இணைய தளங்கள் மூலம் நல்ல படங்களுக்கு நிறைய வரவேற்பு கிடைப்பதாலும் தனுஷ் வாயிலிருந்து நிச்சயம் வராது என்று நம்பலாம் )


Related Posts Plugin for WordPress, Blogger...