26 January 2011

ஆடுகளம் விமர்சனம்

         சென்னை பின்னணியில் எடுத்த  "பொல்லாதவன்" படத்திற்கு பிறகு தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணி  மதுரை பின்னணியில் சேவல் சண்டையை மையப்படுத்தி  ஆடுகளத்தில் குதித்து இருக்கிறார்கள் ....இதற்காக இவர்கள் இருவரும் எடுத்திருக்கும் மெனக்கடல் படம் நெடுக தெரிகிறது ...
                மதுரை படம் என்றவுடன் படம் நெடுக அருவாள் வெட்டு , ஜாதி சண்டை , திருவிழா பாட்டு , ரத்த சகதியில் கிளைமாக்ஸ் என வழக்கமான பாணியில் பயணிக்காமல் சற்று வித்தியாசமாக திரைக்கதையை அமைத்ததற்கு பாராட்டுக்கள் ...
        .சேவல் சண்டையை மையப்படுத்தி இடைவேளை வரை செல்லும் படம் பிறகு மனிதர்களின் ஈகோ சண்டைக்குள் நுழையும் போது நிமிர்ந்து உட்கார வைக்கிறது ...ஆனால் சேவல் சண்டையில் இருந்த விறுவிறுப்பு படம் முடியும் வரை இல்லாதது குறை .......
       இமேஜ் வட்டத்தை விட்டு விட்டு கதைக்கேற்ப நடிக்கும் நடிகர்களுள் தனுஷும் ஒருவர்...இப்படத்திலும் உடல் மொழி , வட்டார உச்சரிப்பு , கைலி , சைக்கிள் சகிதம் மதுரைக்காரன் கருப்பாகவே  நம் கண் முன் நிற்கிறார் ....  புதுப்பேட்டை , பொல்லாதவன்  வரிசையில் தனுஷின் நடிப்புக்கு நல்ல தளம் இந்த "ஆடு களம்"....
        ஆங்கிலோ இந்திய பெண்ணாக வரும் டாப்சீ அழகாக இருக்கிறார்..நடிப்பில் சொல்வதற்கு ஏதுமில்லை ...இன்னும் எத்தனை நாளைக்கு தான் ஒரு வேலை வெட்டியும் இல்லாத ஹீரோவை நம்பி வீட்டை விட்டு ஓடி வரும் ஹீரோயின்களை காட்டுவார்களோ ??...
         படத்தின் முக்கியமான மற்ற இருவர் பேட்டைக்காரனாக வரும் ஜெயபால் மற்றும் துரையாக வரும் கிஷோர்...சுருக்கமாக "தன் நிழலில் இருக்கும்  இளைஞனின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஒரு கிழவனின் வன்மமே கதை" என ஓற்றை வரியில் சொல்லி விடலாம் ..அந்த அளவிற்கு படத்தின் முக்கிய கதா பாத்திரம் "பேட்டைக்காரன்" ....        தன் முடிவை மீறி சேவல் சண்டையில் ஜெயிக்கும் கருப்பு மீது ஏற்படும் கோபம் , அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்கும் போது வன்மமாக மாறி  , தன் மனைவியுடன் அவனை இணைத்து பேசும் அளவிற்கு பின் குரூரமாக மாறுவதையும் மிக அழகாக சித்தரித்து இருக்கிறார்கள் ...கிஷோர் இயல்பான நடிப்பில் நம்மை கவர்கிறார் ..எனினும் அவரின் செயற்கை முடியையும், குரலையும் தவிர்த்து இருக்கலாம் ..சமுத்திர கனியின் குரல் இவருக்கு பொருந்தினாலும் ஏனோ வலு சேர்க்கவில்லை ....
                ஜி.வி.பிரகாஷின் இசையில் ஆத்தே,ஒத்த கண்ணாலே பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.. S P B.யின் குரலில் "அய்யய்யோ" பாடல் இஞ்சி இடுப்பழகி பாடலை நினைவு படுத்தினாலும் உருக வைக்கிறது ....
               யதார்த்தமான கதை, நடிப்பு , விறுவிறுப்பான முதல் பாதி , இசை , வில்லனை மன்னிக்கும் ஹீரோ இவையெல்லாம் படத்தின் பலம்...
              மெதுவாக நகரும் இரண்டாம் பாதி , சில இடங்களில் கதையை விட்டு விலகி செல்லும் திரைக்கதை , பொல்லாதவனை நினைவு படுத்தும் சில காட்சிகள், இடைவேளையோடு காணாமல் போகும் ரத்னவேலு கதா பாத்திரம் ,  சினிமாத்தனமான கிளைமாக்ஸ் இவையெல்லாம் பலவீனம் ....
               ஆடுகளம் - மனிதர்களின் பகல் இரவு ஆட்டம் ....



Related Posts Plugin for WordPress, Blogger...