23 July 2016

கபாலி - KABALI - Not A Complete Man ...


டிசம்பர் வெள்ளத்துக்கு பிறகு தமிழகத்தை மட்டுமல்ல  , உலகத்தையே உலுக்கியிருக்கிறது இந்த கபாலி சுனாமி . சூப்பர் ஸ்டார் னாலே சும்மா அதிரும் , அதோட பணத்த தெறிக்க விடுற தயாரிப்பாளர் தாணு கெடைச்சா கேக்கவா வேணும் ? . ஆனா இது ரெண்டையும் தாண்டி படத்த பார்க்கத் தூண்டிய முக்கிய நபர் இயக்குனர்  ரஞ்சித் . மூணாவது படத்துலயே சூப்பர் ஸ்டார இயக்கற வாய்ப்பு கெடைச்சாலும் அதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்காம தன் பாணியிலேயே படம் எடுக்கிறார் என்பதும் , தனது வழக்கத்திலிருந்து மாறி சூப்பர் ஸ்டார் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடிப்பதுமான அந்த மாஸ் ப்ளஸ் க்ளாஸ் கூட்டணி டிக்கெட் விலை என்ற பெயரில் நடந்த பகல் கொள்ளையையும் தாண்டி நிச்சயம் வெற்றி பெறுமென்ற நம்பிக்கை எனக்கு இருந்தது . ஆனா கபாலி A Costly Mistake  
( அவுங்களுக்கில்லை நமக்கு ) என்று பொட்டில் அடித்தது போல சொல்லாமல் லேசாக தடுப்பது சூப்பர் ஸ்டார் மட்டுமே ...

மலேசிய சிறையிலிருந்து 25 வருடங்கள் கழித்து வெளியே வரும் கபாலீஸ்வரன் ( ரஜினிகாந்த் ) தன் பழைய பகையை தீர்ப்பதும் , பிரிந்த மனைவியை தேடி கண்டுபிடிப்பதுமே கபாலி . ஒரு பக்கா ரிவென்ஜ் ஆக்ஸன் படமாக இருந்திருக்க வேண்டியது தடம் மாறி ஸ்லோ மோஷன் பிட்சர் ஆகிவிட்டது . சுருக்கமா சொல்லனும்னா சதாப்தில எக்ஸ்டரா ரூவா ல தட்கல் டிக்கட் எடுத்து அவசரம் அவசரமா போகணும்னு ஏறி உக்காந்தா ட்ரெயின் பேசஞ்சர் வேகத்துல போனா எப்புடி இருக்குமோ அதே கதி நிறைய இடங்களில் ...

சூப்பர் ஸ்டாரை ஒரு சூப்பர் ஆக்டராக நீண்ட வருடங்கள் கழித்து அடையாளம் காட்டியிருக்கும் படம் .   மனுஷன் நடிப்புல சும்மா பின்னி பெடலெடுத்திருக்கார் . மனைவியை தேடி அலைவதிலாகட்டும் , ரித்விகா அப்பா என கூப்பிட்டவுடன் காட்டும் ரியாக்ஸனிலாகட்டும் , உண்மை மகளை கண்டவுடன் உருகுவதிலாகட்டும் என படம் முழுவதும் அவரது பன்ச் , ஸ்டைல் இதையெல்லாம் தாண்டி நம்மை கட்டிப்போடுகிறது அவரது நடிப்பு . ஆனால் கதைக்களம் ஒரு சூப்பர் ஹீரோ கையில் சோன்  பப்புடியை கொடுத்தது போலாகிவிட்டது . ரஜினியை தவிர நம்மை ரசிக்க வைத்த மற்றொரு நபர் ராதிகா ஆப்டே . அம்பிகா , மீனா வுக்கு பிறகு ரஜினிக்கு நல்ல ஆப்டான நடிகை . அவர் கண்கள் காட்டும் எஸ்ப்ரஷன் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் . கிஷோர் நன்றாக நடித்திரிந்தும் ரஜினிக்கு முன் பெரிதாக எடுபடவில்லை . அதிலும் மெயின் வில்லனாக வரும் டோனி லீ ஜெட் லீ போல  இருப்பார் என்று பார்த்தால் சரியான பிம்பிலி ...


ரஞ்சித் தனது சகாக்களுக்கெல்லாம் இந்த படத்திலும் வாய்ப்பளித்திருப்பது சந்தோசம்  . ஆனால் தினேஷ் தவிர மற்றவர்கள் எல்லாம் வெறும் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவியிருக்கிறார்கள் . தினேஷை வில்லன் கோஷ்டி காலி பண்ணும் காட்சி கபாலியில் ஹைலைட் .  மற்றபடி படத்தில் எல்லோரும் பேசுகிறார்கள் , பேசுகிறார்கள் , பேசிக்கொண்டே இருக்கிறார்கள் . தாவி தாவி சண்டை போடும் தன்ஷிகா நல்ல தேர்வு . ஓப்பெனிங் பிஜிஎம் இல் நிமிர்ந்து உட்கார வைக்கும் சந்தோஷ் நாராயணன் நடுவில் தூங்கி விட்டார் போல . நெருப்புடா சவுண்ட் வரும் போது தான்  நாம் எந்திரிக்க முடிகிறது . சீரியஸான சண்டைக்காட்சிகளில் இவரது ஸ்லோ மியூசிக் சவ சவ . முரளியின் ஒளிப்பதிவு டாப் ஆங்கிள் ஷாட்களில் மலேசியாவை மனதில் பதிய வைக்கிறது ...

படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள் நம்மை கட்டிப் போடுகின்றன . சிம்பிளான ஆனால் பவர்ஃபுல்  ஹீரோயிசம் ஆஸம் . அடுத்தது ஸ்லோவாக இருந்தாலும் ரஜினியின் பழைய வாழ்க்கையை பற்றி டீட்டையிலிங்காக படம் போகிறது . ஆனால் போய்க்கொண்டேயிருக்கிறது . ஒரு கட்டத்தில் இந்த தியேட்டர்ல பப்ஸ் நல்லா இருக்கும்ல என்று பக்கத்து சீட்காரர் கேட்கும் அளவுக்கு போனது தான் கொடுமை . கோட் சூட் போட்டதற்குள் இருக்கும் அரசியலை ரஜினி பேசுவது திணிக்கப்பட்டது போலிருந்தாலும் வில்லனுக்கு முன் கெத்தாக அமர்ந்தபடி " ஏன் நான் கோட் சூட் போடக்கூடாதா ? கால் மேல கால் போட்டு உக்காரக்கூடாதா ? என்று கேட்கும் இடம் கைத்தட்டல் வாங்கும் சில இடங்களில் முக்கியமான ஒன்று . அதேபோல வில்லன் வீட்டு பார்ட்டியில் இருந்தபடியே அவன் சாம்ராஜ்யத்தை காலி பண்ணுவது கபாலி டா ...

படத்தின் முதல் பத்து நிமிடங்கள் , இண்டெர்வெல் பிளாக் , க்ளைமேக்ஸ் என எல்லாமே மகிழ்ச்சி . ரஜினியின் ஃப்ளாஷ்பேக் அவரது விக்கை போலவே கவராமல் கடந்து போகிறது . ரஜினியை இந்த மாதிரி ஒரு பாத்திரத்தில் நடிக்க வைத்த ரஞ்சித்தின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் . ஆனால் டானாக இல்லாமல் ஒரு மாறுபட்ட கதாபாத்திரமாக    ( பாபநாசம் போன்ற கதையம்சம் கொண்ட படத்தை உதாரணமாக சொல்லலாம் ) இருந்திருந்தாலோ, திரைக்கதை க்ரிப்பாக இருந்திருந்தாலோ நிச்சயம் எழுந்து நின்று சல்யூட் அடித்திருக்கலாம் . ஆனால் தனது சொந்த சித்தாந்தங்களை  திணிப்பதற்கு ரஜினியை ஒரு மீடியமாக பயன்படுத்தியது போலவே படுகிறது ...


சூப்பர் ஸ்டாரை  வைத்து நாயகன் போல ஒரு படத்தை ரஞ்சித் எடுக்க நினைத்ததில் தப்பில்லை , ஆனால் அதை ரஜினி படம் போல எடுக்காமல் கமல் படம் போல எடுத்ததில் தான் பிரச்சனை . தன்  எண்ணத்தில் உள்ளதை அப்படியே படமாக்கும் விதத்தில் சறுக்கியிருக்கிறார் . மெட்ராஸ் படத்திலிருந்த ஒரு வாழ்வியல் இதில் டோட்டலி மிஸ்ஸிங் . அடித்தட்டில் இருக்கும் மக்களை மேம்படுத்தும் மெஸ்ஸையாவாக ரஜினி நடித்திருக்கும் படத்தை அந்த மக்களே குடும்பத்துடன் பார்க்க முடியாதபடிக்கு கார்பரேட்களுக்கு டிக்கெட்டுகளை தாரை வார்த்திருக்கும் தயாரிப்பாளரை என்ன சொல்ல ?. கபாலி - கடுப்புடா என்று நெட்களில் வரும் விமர்சனத்தை போல படத்தை நிச்சயம் அப்படி ஒதுக்கி தள்ளி விட முடியாதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டார் , ஒரு புதியவருக்கு அவர் கொடுத்திருக்கும் வாய்ப்பு மற்றும் மாறுபட்ட நடிப்பில் சூப்பர் ஸ்டாரை நமக்கு காட்டிய விதம் ...

ரஜினிக்காக கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் சேர்க்காமல் ரியலிசமாக எடுக்க முற்பட்டிருக்கும் படத்தில் அவர் ஒரு சின்ன கன்னை வைத்துக்கொண்டு எதிரிகளை சுடுவதும் , கிட்டத்தட்ட ஐந்து குண்டுகள் பாய்ந்து சரிந்தவர் ஏதோ பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டேன் என்பது போல ப்ளாஸ்டரோடு  வருவதும் என்ன சாரே நியாயம் ? .  அளவுக்கதிகமான மார்கெட்டிங் நிச்சயம் படத்தின் வியாபாரத்திற்கு உதவியிருக்கலாம் , ஆனால் இது பக்கா ரஜினி ரசிகனுக்கான படமில்லை நாங்கள் வித்தியாசமா ட்ரை  பண்ணியிருக்கோம் அப்படின்னு ஒரு சின்ன கண்டிஷன்  அப்ளை ஆஸ்ட்ரிச் ஆவது போட்டிருக்கலாம் . மொத்தத்தில் கோட் , சூட் , கூலர்ஸ் என்று ஸ்டைலாக இருந்தாலும் ரஜினி ரசிகர்களை எண்டெர்டைன் பண்ணும் பக்கா மாஸாகவும் இல்லாமல் , ஒரு புது முயற்சியை எழுந்து நின்று பாராட்டும் க்ளாஸாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட புள்ளியில் நிற்கும் கபாலி - Not A Complete Man ...


ரேட்டிங் : 2.75 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 42



8 July 2016

அரையாண்டு தமிழ் சினிமா 2016 - TAMIL CINEMA 2016 HALF YEARLY REVIEW ...


2016 இல் ஜுன் மாதம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் வழக்கம் போல பத்து சதவிகிதத்துக்கும் குறைவான படங்களே ஹிட் ஆகியிருக்கின்றன . ஒருபக்கம் மாஸ் ஹீரோ விஜய் படம் தெறி ப்ளாக்பஸ்டர் என்றால் , இன்னொரு பக்கம் விசாரணை தேசிய விருதுகளோடு மக்களிடையேயும் நல்ல வரப்பேற்பை பெற்றிருக்கிறது. இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியம் . மொத்தத்தில் சூப்பராகவும் இல்லாமல் , மொக்கையாகவும் இல்லாமல் போதையேறியும் , ஏறாத ஒருவித நிலையில் ஆறு மாதங்கள் போனது என்றே சொல்லலாம் ...

இசைஞானியின் ஆயிரமாவது படம் என்பதோடு குரு - சிஷ்யன் பாலா - சசிகுமார் கூட்டணியில் வந்த தாரை தப்பட்டை பாலாவின் வழக்கமான வன்முறை வெறியாட்டத்தால் தாறுமாறாகிப் போனது . கொடுத்த காசுக்கு வரலட்சுமியின் தொடைகள் மட்டுமே ஆறுதல் . சிவகார்த்திகேயன் தவிர்த்து யார் நடித்திருந்தாலும் சுமார் மூஞ்சி குமாராகியிருக்க வேண்டிய ரஜினி முருகன் பொங்கல் ரிலீஸின் சூப்பர் ஸ்டார் . விஷால் கதகளி யில் வித்தியாசமாக ட்ரை பண்ணியிருந்தாலும் ஆட்டம் எடுபடவில்லை . அரண்மனை அளவிற்கு வெற்றி பெறாமல் ஆவெரேஜாக போனது சுந்தர்.சி யின் அரண்மனை 2 . ஜனவரி மாதக்கடைசியில் வந்தாலும் இறுதிச்சுற்று வசூல் , விமர்சனம் இரண்டிலும் முதலிடம் பெற்றது . 2015 இல் தனிஒருவன் அரவிந்த்சாமி கலக்கல் கம்பேக் என்றால் இந்த வருடம் இறுதிச்சுற்று மேடி ...

ஆனந்தவிகடன் விசாரணை படத்தின் முஸ்லீம் இளைஞன் கேரக்டரை வைத்து கொஞ்சம் குசும்பாக விமர்சனம் செய்திருந்தாலும் இரண்டாவது அதிகபட்ச மார்க்குகள் வழங்கி படத்தை கவுரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட வருடம் கழித்து கனத்த இதயத்துடன் வெளியே வரவைத்த படம் விசாரணை . நானும் ரவுடி தான் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி ஆக்சன் அவதாரம் எடுத்த சேதுபதி பேசப்பட்டதோடு வசூலையும் பெற்றது. ஒவ்வொரு படத்திலும் புது ஜெனரை கையில் எடுக்கும் அறிவுமதி ஈரம் அறிவழகனோடு சேர்ந்து கொடுத்த ஆறாது சினம் கொஞ்ச நாட்களில் ஆறிப்போனது துரதிருஷ்டம் . ஒரிஜினலில் இருந்த டச் ரீமேக் பெங்களூரு நாட்களில் இல்லாததால் ஜஸ்ட் கடந்து போனது . மிருதன் போட்ட காசுக்கு மேலே எடுத்தது என சொல்லப்பட்டாலும் கழுத்து வலிக்கும் அளவுக்கு கடித்தே அனுப்பி வைத்தார்கள் ...

பெயர் பிச்சைக்காரனாக இருந்தாலும் வசூலில் தமிழ் , தெலுகு இரண்டிலும் விஜய் ஆண்டனியை மேலும் கோடீஸ்வரனாக்கியது படம் . காதலும் கடந்து போகும் பெரிய வசூலை அள்ளா விட்டாலும் மனதை விட்டு கடந்து போக நாட்கள் ஆனது . புகழ் பட பாடல்கள் பேசப்பட்ட அளவிற்கு படம் புகழ் பெறவில்லை . தோழா நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக்கு வசூல் ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் தோள் கொடுத்த படம் . டார்லிங் 2 , ஹலோ பேய் பேசுறேன் , ஜித்தன் 2 எல்லாமே பேய் பட சீஸன் இன்னும் முடியவில்லை என்கிற ரீதியில் வந்த எண்ணிக்கைக்கான படங்களே . இந்த அரையிறுதி ஆண்டின் அதிகம் வசூலித்த படம் தெறி . புலி க்கு பிறகு துவண்டிருந்த விஜய் ரசிகர்களை தெறிக்க வைத்திருக்கிறது தெறி யின் வெற்றி.  மனித நேயத்தை பேசிய விதத்தில் கவர்ந்தான் மனிதன் ...

சூர்யா நடிப்பில் டைம் மிஷினை மையப்படுத்தி வந்த 24 அர்பன் சென்டரில் கவர்ந்த அளவிற்கு ஆல் சென்டரில் ஓடவில்லை . நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் ஒரு பெரிய வெற்றியை தக்க வைக்க செய்யும் முயற்சியில் மீண்டும் சறுக்கியிருக்கும் படம் மருது . சிம்பு ரசிகர்கள் சொன்ன அளவிற்கு இது நம்ம ஆளு என்று அனைவரும் சொல்லவில்லை . ஐடி வேலையை விட்டுவிட்டு தனது சொந்த பணத்தை போட்டு உச்சக்கட்ட ரிஸ்க் எடுத்த விஜய் குமாரின் முயற்சிக்கு உறியடி உழைப்புக்கேற்ற தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது ...

முதல் இரண்டு படங்களிலேயே மிகப்பெரிய அளவிற்கு பேசப்பட்ட கார்த்திக் சுப்பாராஜின் இறைவி நெட்டிசன்களால் கொண்டாடப்பட்ட அளவிற்கு ரியலில் வசூலை குவிக்கவில்லை . ஆனாலும் எஸ்.ஜே சூர்யா என்கிற நடிகனை அறிமுகப்படுத்தியதற்கு இயக்குனருக்கு நன்றி . வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் நீண்ட நாட்கள் கழித்து வயிறு வலிக்க வைத்தான் . சில குறைகள் இருந்தாலும் ஒரு நாள் கூத்து மோர் தென் ஓகே ரகம் . மெட்ரோ செயின் ஸ்னாட்சிங்கை வைத்து தையிரியமாக எடுக்கப்பட்ட படம் . கொஞ்சம் காஸ்டிங் கில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் அடுத்த லெவலுக்கு போயிருக்கும் . உறியடி , மெட்ரோ என சீரியஸ் படங்களுக்கு நடுவே முதல் படத்திலேயே சிம்பிள் அன்ட் சென்ஸிபிளாக ராஜா மந்திரி யை கொடுத்திருக்கிறார் பெண் இயக்குனர் உசா கிருஷ்ணன் . இது மாதிரி ஃபீல் குட் படங்களுக்கான ஆடியன்ஸ் டிவி சீரியல்களுக்குள் மூழ்கிப் போனதும் , பார்த்தே ஆக வேண்டுமென தூண்டும் வகையில் ப்ரமோ இல்லாததும் சறுக்கல்கள் . இப்பொழுது குழந்தை முதல் கிழவர் வரை உச்சரிக்கும் பெயர் கபாலி . தலைவா எப்போ வர ?...


தில்லுக்கு துட்டு - DHILLUKKU DHUDDU - வேஸ்டாவாது ...


காமெடியனாக பீக்கில் இருக்கும் போதே மேலும் காலம் தாழ்த்தாமல் ஹீரோ வாக தில்லாக களம்  இறங்கியவர் சந்தானம் . அவரின் முடிவு அவருக்கு பெரிதாக கை கொடுத்ததோ இல்லையோ நிச்சயம் சூரி , சதீஷ் போன்ற சக காமெடியன்களுக்கு நிறையவே கொடுத்திருக்கிறது . சோலோ ஹீரோவாக தனது மூன்றாவது படத்தில் " லொள்ளு சபா " ராம்பாலா வுடன் கை கோர்த்து தமிழ் சினிமாவின் கரெண்ட் ட்ரெண்ட் ( இன்னுமா முடியல ! ) ஹாரர் காமெடியில்  சேஃபாக கால் பதித்திருக்கும் படம்  தில்லுக்கு துட்டு ...

ஹீரோ வென்று களம் இறங்கியவுடன் சும்மா இராமல் உடலை எடையை குறைத்து ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி ஸ்மார்ட்டாக இருக்கிறார் சந்தானம் . ஆனால் என்ன சிவகார்த்திகேயன் போலல்லாமல் பத்து வருடமாய் சினிமாவில் பக்கா காமெடியனாக பார்த்தவரை காதல் , ஆக்சன் காட்சிகளில் பார்க்கும் போது லேசாக நெருடுகிறது . அதை தவிர்த்து பார்த்தால் தனது வழக்கமான ஒன் லைனர்களில் படம் நெடுக கலாய்த்து நம்மை கிடுக்கி பிடி போடுகிறார் சந்தானம் . ஹீரோயின் கேரக்டர் சேட் பொண்ணு என்பதால் செவப்பாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்து விட்டார்கள் போல . சனயா சின்ன வயது கோவை சரளா போல இருக்கிறார் . இவர் வரும் க்ளோஸ் அப் காட்சிகள் Zee டி வி யில் ஹிந்தி டப்பிங் சீரியல் பார்ப்பது போல இருக்கிறது ...



மொட்டை ராஜேந்திரன் வரும் போது சந்தானம் அளவுக்கு கை தட்டுகிறார்கள் . அவரும் தனது கட்டை குரலில் பேசி கூலாக நடிக்கிறார் . இவர் டீமுடன் அடிக்கும் பேய் ரகலைகளை ரசிக்க முடிந்தாலும்  ஒரே மாதிரியான மேனரிசம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்து விட்டது . சிறந்த நடிகர் சவுரப் சுக்லா வை முடிந்தவரை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள் . ஆனந்தராஜ் மற்றும் கார்த்திக் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் . தமன் இசையில் " சிவன் மகன் டா " மட்டும் முணுமுணுக்க வைக்கிறது . கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் , தீபக் குமார் பாடி யின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் ...

படத்தில் வரும் காதல் காட்சிகள் ஹீரோயினின் லிப் மூவ்மெண்ட் போல படத்தோடு சரியாக சிங்க் ஆகாமல் தனியாக ஓடுகிறது . முதல் பாதி சுமாராக போனாலும் பேய் பங்களாவுக்குள் நுழையவதற்கு முந்தைய சீன்களில் இருந்து படம் சூடு பிடிக்கிறது . அதன் பிறகு ரியல் பேய் - ரீல் பேய் என்று சுத்த விட்டு நம்மை சிரிக்க வைக்கிறார்கள் . சந்தானம் - ராம்பாலா கூட்டணி யில் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தாலும் சந்தானம் ஹீரோ , ஹாரர் காமெடி ஜெனர் படத்தில் புதுசாக என்ன செய்து விட முடியும் ? என்றே தோன்றுகிறது . பொழுதுபோக்காக சினிமாவுக்கு செல்லும் யாருக்கும் இந்த தில்லுக்கு துட்டால் துட்டு வேஸ்டாவாது ...

ரேட்டிங்  :   2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 41 


Related Posts Plugin for WordPress, Blogger...