8 July 2016

அரையாண்டு தமிழ் சினிமா 2016 - TAMIL CINEMA 2016 HALF YEARLY REVIEW ...


2016 இல் ஜுன் மாதம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் வழக்கம் போல பத்து சதவிகிதத்துக்கும் குறைவான படங்களே ஹிட் ஆகியிருக்கின்றன . ஒருபக்கம் மாஸ் ஹீரோ விஜய் படம் தெறி ப்ளாக்பஸ்டர் என்றால் , இன்னொரு பக்கம் விசாரணை தேசிய விருதுகளோடு மக்களிடையேயும் நல்ல வரப்பேற்பை பெற்றிருக்கிறது. இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியம் . மொத்தத்தில் சூப்பராகவும் இல்லாமல் , மொக்கையாகவும் இல்லாமல் போதையேறியும் , ஏறாத ஒருவித நிலையில் ஆறு மாதங்கள் போனது என்றே சொல்லலாம் ...

இசைஞானியின் ஆயிரமாவது படம் என்பதோடு குரு - சிஷ்யன் பாலா - சசிகுமார் கூட்டணியில் வந்த தாரை தப்பட்டை பாலாவின் வழக்கமான வன்முறை வெறியாட்டத்தால் தாறுமாறாகிப் போனது . கொடுத்த காசுக்கு வரலட்சுமியின் தொடைகள் மட்டுமே ஆறுதல் . சிவகார்த்திகேயன் தவிர்த்து யார் நடித்திருந்தாலும் சுமார் மூஞ்சி குமாராகியிருக்க வேண்டிய ரஜினி முருகன் பொங்கல் ரிலீஸின் சூப்பர் ஸ்டார் . விஷால் கதகளி யில் வித்தியாசமாக ட்ரை பண்ணியிருந்தாலும் ஆட்டம் எடுபடவில்லை . அரண்மனை அளவிற்கு வெற்றி பெறாமல் ஆவெரேஜாக போனது சுந்தர்.சி யின் அரண்மனை 2 . ஜனவரி மாதக்கடைசியில் வந்தாலும் இறுதிச்சுற்று வசூல் , விமர்சனம் இரண்டிலும் முதலிடம் பெற்றது . 2015 இல் தனிஒருவன் அரவிந்த்சாமி கலக்கல் கம்பேக் என்றால் இந்த வருடம் இறுதிச்சுற்று மேடி ...

ஆனந்தவிகடன் விசாரணை படத்தின் முஸ்லீம் இளைஞன் கேரக்டரை வைத்து கொஞ்சம் குசும்பாக விமர்சனம் செய்திருந்தாலும் இரண்டாவது அதிகபட்ச மார்க்குகள் வழங்கி படத்தை கவுரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட வருடம் கழித்து கனத்த இதயத்துடன் வெளியே வரவைத்த படம் விசாரணை . நானும் ரவுடி தான் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி ஆக்சன் அவதாரம் எடுத்த சேதுபதி பேசப்பட்டதோடு வசூலையும் பெற்றது. ஒவ்வொரு படத்திலும் புது ஜெனரை கையில் எடுக்கும் அறிவுமதி ஈரம் அறிவழகனோடு சேர்ந்து கொடுத்த ஆறாது சினம் கொஞ்ச நாட்களில் ஆறிப்போனது துரதிருஷ்டம் . ஒரிஜினலில் இருந்த டச் ரீமேக் பெங்களூரு நாட்களில் இல்லாததால் ஜஸ்ட் கடந்து போனது . மிருதன் போட்ட காசுக்கு மேலே எடுத்தது என சொல்லப்பட்டாலும் கழுத்து வலிக்கும் அளவுக்கு கடித்தே அனுப்பி வைத்தார்கள் ...

பெயர் பிச்சைக்காரனாக இருந்தாலும் வசூலில் தமிழ் , தெலுகு இரண்டிலும் விஜய் ஆண்டனியை மேலும் கோடீஸ்வரனாக்கியது படம் . காதலும் கடந்து போகும் பெரிய வசூலை அள்ளா விட்டாலும் மனதை விட்டு கடந்து போக நாட்கள் ஆனது . புகழ் பட பாடல்கள் பேசப்பட்ட அளவிற்கு படம் புகழ் பெறவில்லை . தோழா நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக்கு வசூல் ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் தோள் கொடுத்த படம் . டார்லிங் 2 , ஹலோ பேய் பேசுறேன் , ஜித்தன் 2 எல்லாமே பேய் பட சீஸன் இன்னும் முடியவில்லை என்கிற ரீதியில் வந்த எண்ணிக்கைக்கான படங்களே . இந்த அரையிறுதி ஆண்டின் அதிகம் வசூலித்த படம் தெறி . புலி க்கு பிறகு துவண்டிருந்த விஜய் ரசிகர்களை தெறிக்க வைத்திருக்கிறது தெறி யின் வெற்றி.  மனித நேயத்தை பேசிய விதத்தில் கவர்ந்தான் மனிதன் ...

சூர்யா நடிப்பில் டைம் மிஷினை மையப்படுத்தி வந்த 24 அர்பன் சென்டரில் கவர்ந்த அளவிற்கு ஆல் சென்டரில் ஓடவில்லை . நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் ஒரு பெரிய வெற்றியை தக்க வைக்க செய்யும் முயற்சியில் மீண்டும் சறுக்கியிருக்கும் படம் மருது . சிம்பு ரசிகர்கள் சொன்ன அளவிற்கு இது நம்ம ஆளு என்று அனைவரும் சொல்லவில்லை . ஐடி வேலையை விட்டுவிட்டு தனது சொந்த பணத்தை போட்டு உச்சக்கட்ட ரிஸ்க் எடுத்த விஜய் குமாரின் முயற்சிக்கு உறியடி உழைப்புக்கேற்ற தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது ...

முதல் இரண்டு படங்களிலேயே மிகப்பெரிய அளவிற்கு பேசப்பட்ட கார்த்திக் சுப்பாராஜின் இறைவி நெட்டிசன்களால் கொண்டாடப்பட்ட அளவிற்கு ரியலில் வசூலை குவிக்கவில்லை . ஆனாலும் எஸ்.ஜே சூர்யா என்கிற நடிகனை அறிமுகப்படுத்தியதற்கு இயக்குனருக்கு நன்றி . வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் நீண்ட நாட்கள் கழித்து வயிறு வலிக்க வைத்தான் . சில குறைகள் இருந்தாலும் ஒரு நாள் கூத்து மோர் தென் ஓகே ரகம் . மெட்ரோ செயின் ஸ்னாட்சிங்கை வைத்து தையிரியமாக எடுக்கப்பட்ட படம் . கொஞ்சம் காஸ்டிங் கில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் அடுத்த லெவலுக்கு போயிருக்கும் . உறியடி , மெட்ரோ என சீரியஸ் படங்களுக்கு நடுவே முதல் படத்திலேயே சிம்பிள் அன்ட் சென்ஸிபிளாக ராஜா மந்திரி யை கொடுத்திருக்கிறார் பெண் இயக்குனர் உசா கிருஷ்ணன் . இது மாதிரி ஃபீல் குட் படங்களுக்கான ஆடியன்ஸ் டிவி சீரியல்களுக்குள் மூழ்கிப் போனதும் , பார்த்தே ஆக வேண்டுமென தூண்டும் வகையில் ப்ரமோ இல்லாததும் சறுக்கல்கள் . இப்பொழுது குழந்தை முதல் கிழவர் வரை உச்சரிக்கும் பெயர் கபாலி . தலைவா எப்போ வர ?...


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...