23 March 2014

குக்கூ - CUCKOO - கலர்ஃபுல் ஹைக்கூ ...


த்திரிக்கையாளர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வந்திருக்கும் படம் குக்கூ . இந்த இருவரின் கூட்டணி லோ பட்ஜெட் ரியலிஸ்டிக் மூவிக்கு நல்ல ஒப்பனிங் கிடைக்க காரணமாக அமைந்திருக்கிறது ...

மோதலுக்குப்  பின் காதலிக்கும் இருவர் , காதலியின் அண்ணன் எதிர்ப்பால் பிரிகிறார்கள் . கடைசியில் சேர்ந்தார்களா என்பதே கதை . இந்த சாதாரண காதல் கதையை அசாதாரணமாக மாற்றுவது சம்பந்தப்பட்ட இருவரும் மாற்றுத்திறனாளிகள் என்பதும் , அதை உணர்வுப்பூர்வமாக படமாக்கிய இயக்குனரின் திறமையும் ...

அட்டக்கத்தி தினேஷ் கண் பார்வை இழந்தவராக  அட்டகாசமாக நடித்... சாரி வாழ்ந்திருக்கிறார் . காதலியை பிரிந்த பின்  அவளை தேடி அலையும் போது நம்மையும் சேர்த்து பரிதவிக்க வைக்கும்  அந்த நடிப்பு ஆஸம் . கண் விழிகளை உருட்டிக் கொண்டும்  , விரல்களை பின்னிக் கொண்டும்  தன் உடல் மொழியால் நம்மை கட்டிப்போடும்  மாளவிகா  தமிழுக்கு நல்ல வரவு . காதல் தோல்வியில் துவழும் போதும் , காதலனுடன் சண்டை போடும் போதும் இந்த சுதந்திரக்கொடி நடிப்பால் உயரே பறக்கிறார் . தமிழ் - சுதந்திரக்கொடி இருவருமே நீண்ட காலம் பேசப்படுவார்கள் ...


தினேஷின் நண்பனாக வரும் இளங்கோ , எம்.ஜி.ஆர், சந்திரபாபு, விஜய், அஜித் கெட்  அப்புகளில் வலம் வரும்  நட்சத்திரங்கள் , கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் கதையோடு  ஒன்றி வரும் முருகதாஸ் இவர்கள் எல்லோருமே  படத்திற்கு  பலம் சேர்க்கிறார்கள் . இவர்களோடு சேர்ந்து பார்வையற்றவர்களை இணைக்கும் பாலமாக இசைஞானியின் பாடல்களும் நடித்திருக்கிறது ...

மூர் மார்க்கெட் , ரயில்வே ஸ்டேஷன் என்று பி.கே.வர்மா வின் கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது . படத்தின் தன்மைக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் லைட்டிங் அருமை . சந்தோஷ் நாராயண் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டிருக்கிறார் . இந்த படத்திலும் பாடல்கள் , குறிப்பாக  பின்னணி இசை பிரமாதம் . எடிட்டிங் சொதப்பலை சில இடங்களில் காண முடிகிறது ...

தொடுதலின் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது  , ஒரு இடத்திலும் தங்கள் குறைகளை பற்றி புலம்பாமல் தன்னம்பிக்கையோடு வாழ்வது , கேலி, நையாண்டி என்று இருட்டு வாழ்க்கையில் உள்ள வெளிச்சத்தை காட்டுவது இப்படி பார்வையிழந்தவர்களின் உலகத்திற்குள் நம்மை கொண்டு சென்று வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் ...


குடும்பத்துக்காக  உழைக்கிறேன் என்று சொல்லி கர்ப்பமான மனைவியின் வயிற்றை தடவும் அண்ணன் , பணம் கேட்டவுடன் தன் கழுத்தில் இருக்கும் செயினை அவுத்துத்தரும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரம் , உதவி செய்வது போல செய்து ஒரு லட்சத்தை அபேஸ் செய்யும் போலீஸ்காரர் , பழைய துணிகளை தானம் செய்வதை ஃபேஸ் புக்கில் அப்டேட் செய்யத் துடிக்கும் பெண் , எல்லோருக்கும் மார்க் போடும் பிச்சைக்கார தாத்தா , இடியே விழுந்தாலும் அசராத அய்யர் இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் கவனிக்க வைக்கிறது திரைக்கதை ...

சாதாரண கதை , படத்தின் நீளம் , ஸ்லோவான காட்சிகள் போன்ற சில குறைகள் இருந்தாலும் விளிம்பு  நிலை மனிதர்களின் கதை என்றவுடன் சோகத்தை பிழிந்து நம்மை வாட்டி எடுக்காமல் இயல்பான ஆனால் அதே நேரம் உணர்வுப் பூர்வமான படத்தை கொடுத்ததன் மூலம் வட்டியும் முதலுமாக நம்  மனதை அள்ளுகிறார் ராஜுமுருகன் . மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்தி இதுவரை வந்த படங்களில் நிச்சயம் தனித்து நிற்கும் இந்த கலர்ஃபுல் ஹைக்கூ ...

ஸ்கோர் கார்ட் : 48 

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம். பாடல்கள் கேட்டேன். பிடித்திருந்தது. படம் பார்க்க நினைத்திருக்கிறேன்.

குரங்குபெடல் said...

"ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வந்திருக்கும் படம் குக்கூ " . . . . ?

ananthu said...

வெங்கட் நாகராஜ் said...
நல்ல விமர்சனம். பாடல்கள் கேட்டேன். பிடித்திருந்தது. படம் பார்க்க நினைத்திருக்கிறேன்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

குரங்குபெடல் said...
"ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வந்திருக்கும் படம் குக்கூ " . . . . ?

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...