29 May 2011

இந்தியன் பைசா லீக்

                         தோனியின்  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி  தொடர்ச்சியாக இரண்டாவது முறை  ஐ.பி.எல் கோப்பையை தட்டிச் சென்றதன் மூலம் தான் ஒரு தலை சிறந்த கேப்டன் என்பதை தோனி  மீண்டும் நிரூபித்து இருக்கிறார்..நேற்று சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை சென்னை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ...
                      
       2007  ஆம் ஆண்டு நடந்த 20 -20  உலக கோப்பையை தொடர்ந்து , 2010  ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பை , அதே ஆண்டு நடந்த ஏர்டெல் சாம்பியன்ஷிப் கோப்பை , 2011  ஆம்  ஆண்டிற்கான 
50 ஓவர் உலகக்கோப்பை   என்று நான்கு ஆண்டுகளில் அவர் தலைமையின் கீழ் 
அணிகள் ஐந்து  பெரிய   வெற்றிகளை குவித்திருப்பது தோனியின் சிறப்பம்சம்...
             இதையெல்லாம் விட டெஸ்ட் போட்டிகளில் அவர் தலைமையிலான இந்திய அணி சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தை ஒரு வருடத்திற்கும்  மேலாக தக்க வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது...
             தோனியின் வருகை வெறும் வேகம் -விவேகம் அல்ல என்பதை நிரூபிப்பதோடு உத்வேகத்திற்க்கான அடையாளத்தையே மாற்றியிருப்பதும் தோனியின் பாணி...
                                    
              கேப்டன் என்பவன் அணியை முன் நின்று வழி நடத்தி செல்பவன் மட்டும் அல்ல அணியில் உள்ளவர்களை அவர்களின் திறமைக்கேற்ப முன்னிறுத்தி அவர்களை பின் நின்று காப்பவனும் கூட
என்ற  தத்துவத்தை விளையாட்டு உலகிற்கு மட்டுமல்லாமல் 
 தலைமைப் பொறுப்பில் உள்ள எல்லா துறையினருக்கும்
தன் வெற்றிகளின் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார் தோனி   ...
               தன் தலைமையின் கீழான அணியை தனிப்பட்ட எவரையும் நம்பும்
படி வைக்காமல் அணியாக ஆட வைத்ததும், அவரவர் தங்கள் பங்கிற்கு சிறப்பாக செயல்பட்டதும் தோனியின் பலம்..
               சரியோ தவறோ தனக்கு தோன்றும் முடிவுகளை தயக்கமின்றி எடுப்பது , அதனை எந்த வித மறு யோசனையும்  இல்லாமல் செயல்படுத்துவது , தான் எடுக்கும் முடிவுகளின்
எதிர் மறையான பின் விளைவுகளின் முழுப் பொறுப்பையும் தானே
ஏற்றுக்கொள்வது , சரிவு ஏற்படும் நேரங்களில் முன்
நின்று தன்னம்பிக்கையுடன் வழி நடத்துவது என்று தலைமைப் பண்பிற்கான அனைத்து அம்சங்களும் தோனியிடம் உள்ளன...உலகக்கோப்பை
இறுதிப்போட்டி இதற்கு ஒரு உதாரணம்.....
                                          
                சூதாட்ட புகார்களில் சிக்கி சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டது
கங்குலியின் தலைமை..அது வரை தற்காப்பு ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த இந்திய
அணியை தலை நிமிர்ந்து எதிரிகளை கண்ணோடு கண் பார்க்க வைத்து ஓட விரட்டியது
கங்குலியின் உத்வேகம்..
              கங்குலியின்  தலைமையின் கீழ் மெருகேறிய  யுவராஜ் சிங்,ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் , சேவாக் போன்றவர்கள்
இன்று தோனி சர்வதேச போட்டிகளில் குவிக்கும் வெற்றிகளுக்கு பெரிதும்
காரணமாக இருபதையும் யாரும் மறுக்க முடியாது....
             கங்குலி,திராவிடுக்கு பிறகு கேப்டன் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சேவாக் சரியான பார்மில் இல்லாததும் , யுவராஜ்,ஹர்பஜன் போன்றவர்களின் நடவடிக்கைகளின் மீது தேர்வுக்குழுவினருக்கு
போதிய நம்பிக்கை இல்லாததும் தோனியின் மீது அதிர்ஷ்டக் காற்று வீச
காரணமான விஷயங்கள்...
               அதிர்ஷ்டம் இல்லையென்றால் சர்வதேச போட்டிகளில் மூன்றே வருட அனுபவம் பெற்ற தோனி தன்னை விட
மூத்த வீரர்களை தாண்டி கேப்டன் பதவியை அடைந்திருக்க முடியாது..
ஆனால் திறமையும்,உழைப்பும்,சாதுர்யமும் உள்ளவர்களையே அதிர்ஷ்டம்
அணைத்துக் கொள்ளும் என்பது தோனியின் வளர்ச்சியைப் பார்த்து
நாம் தெரிந்து கொள்ளும் உண்மை....அதே நேரத்தில் சர்வதேச போட்டிகளில் இந்திய அணி பெற்ற  வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக
இருந்தது க்ரிஷ்டனின் பயிற்சி...அர்ஜுனனுக்கு எப்படி ஒரு கிருஷ்ணனோ
அதே போல தோனிக்கு ஒரு க்ரிஷ்டன்..
                                             
            சென்னை ஐ.பி.எல் கோப்பையை வென்றது ஒரு பக்கம் சந்தோசமாக
இருந்தாலும் ஒன்றிரண்டு போட்டிகளை தவிர மற்றவை எல்லாம் விறுவிறுப்பாக இல்லாதது பெரிய குறை..சர்ச்சைகளுக்கு பெயர் போன
ஐ.பி.எல் இந்த முறையும் வீரர்கள் நாட்டுக்கு ஆடுவதை விட காசுக்கு ஆடுவதற்கே
முக்கியத்துவம் தருகிறார்கள் என்ற சர்ச்சையை கிளப்பி இருக்கிறது..
              இது உண்மை தான் என்பதை மலிங்கா , கிரீஸ் கெயில் போன்றவர்கள் ஏற்கனவே நிரூபித்து விட்டார்கள்....ஆனால்
கம்பீர்,யுவராஜ்,சச்சின் போன்றவர்களும்  ஐ.பி.எல் தொடரை முழுமையாக
ஆடி விட்டு இப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து
தங்களை விளக்கி கொண்டதன் மூலம் இந்த சர்ச்சை மேலும் வலுத்திருக்கிறது...அதிலும் குறிப்பாக நூறாவது சர்வதேச சத்தத்தை அடிப்பார் என்று எதிபார்க்கப்பட்ட சச்சின் விலகி இருப்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்.....
                                                
                மூத்த வீரர்கள் விலகிக் கொண்டதன் மூலம் பத்ரிநாத்,சிக்கர் தவான்,
மனோஜ் திவாரி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது
சந்தோசம்..முன்பிருந்தது போல மேற்கிந்திய தீவுகள் அணி பலம் வாய்ந்ததாக இல்லாததும் , அவர்களின் ஆடுகளம் வேகப்பந்திற்கு பெரிய
அளவு சாதகமாக இல்லாததும் மூத்த வீரர்கள் விலகியதற்க்கும், இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றதற்கும் ஒரு காரணமாக இருக்கலாம்...
              இருப்பினும் உலகக்கோப்பையை தொடர்ந்து ஐ.பில்.எல்,அதை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் தொடர்,பின்னர் இங்கிலாந்து தொடர் என்று வரிசையாக இருப்பது தெரிந்திருந்தும் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல்.
ஆடுவதற்கே அதிக ஆர்வம் காட்டியிருப்பது ஐ.பி.எல் ஐ
"இந்தியன் பிரீமியர் லீக்" என்று அழைப்பதை விட
"இந்தியன் பைசா லீக்" என்று அழைப்பதே பொருத்தம் என சொல்ல வைக்கிறது.........
           


         

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...