7 February 2016

விசாரணை - VISARANAI - வீ ஆர் சரண்டர்ட் ...


முதல் படம் ஜெயித்தவுடன் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணி சம்பாதிக்க நினைக்கும் நிறைய இயக்குனர்கள் மத்தியில் ஒன்பது வருடங்களில் பேர் சொல்லும் மூன்றே படங்களை  எடுத்திருப்பதே  இயக்குனர் வெற்றிமாறனின் தரத்தை சொல்லும் .
முந்தைய தனுஷ் + வெற்றிமாறன் தயாரிப்பில் வந்த காக்கா  முட்டை போலவே சர்வதேச அங்கீகாரத்துடன் இங்கே ரிலீஸ் ஆகியிருக்கிறது விசாரணை ... 

ஆந்திராவில் மளிகை கடையில் வேலை செய்யும் பாண்டி மற்றும் நண்பர்கள் ( அட்டக்கத்தி தினேஷ் & முருகதாஸ் )  மேல் போலீசாரால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை தோலுரித்துக் காட்டுவதே விசாரணை . அப்பாவி விளிம்பு நிலை மனிதர்களை காவல்துறை எந்தவித மனசாட்சியும் இல்லாமல் எப்படி பந்தாடுகிறது என்பதை நெற்றிப்பொட்டில் வைத்து சுடுவது போல சொல்லியிருப்பதே விசாரணை . விலங்குகளை விட கேவலமாக நடத்தப்படும் இந்த மனிதர்களின் வலியை படம்  முடிந்தும் அழியாத ரணமாக நம்முள் பதிய வைத்ததில் நீண்ட நாட்கள் வாழும் இந்த விசாரணை ...

படம் முழுவதும் ஒருவித மிரட்சியுடன் வரும் தினேஷ் நடிப்பால் நம்மை மிரட்டியிருக்கிறார்  . எந்த ஒரு இடத்திலும் இவர் நடிக்காமல் வாழ்ந்து காட்டியிருப்பதே இவர் ப்ளஸ் . ஆந்திரா போலீசிடம் அடி வாங்கும் போதும் சரி சமுத்திரக்கனியிடம் சாவு பயத்தில் கெஞ்சும் போதும் சரி எப்படியாவது இவங்க கிட்டருந்து ஓடிருடா என்று நம்மை பதற வைத்ததில் மிளிர்கிறது தினேஷின் நடிப்பு . வெறும் காமெடியனாக அறியப்பட்ட முருகதாசுக்கு இந்த படம் ஒரு மைல்கல் . பல்ல  ஒடச்சுட்டாங்க என்று சொல்லும் இடத்தில் சிரிப்பையும் , பரிதாபத்தையும் ஒரு சேர வரவைக்கிறார் மனுஷன் . நண்பர்களாக வரும் மற்ற இருவரும் நல்ல தேர்வு ...

சுப்ரமணியபுரத்துக்கு பிறகு பெயர் சொல்லும் கேரக்டர் சமுதிரக்கனிக்கு . சாதாரண வில்லனாக வந்து அடி வாங்குவதை தவிர்த்து இது போன்ற படங்களில் அவர் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவுக்கு நல்லது . மேலதிகாரியிடம் போனில் பணிவையும் , ஆத்திரத்தையும் காட்டுவது , தனது வேலையை காப்பாற்றிக் கொள்ள குற்ற உணர்ச்சியுடன் சதிக்கு உடன்படுவது என நேர்மை மனதில் ஒட்டியிருந்தும் வேறு வழியில்லாமல் குற்றத்துக்கு துணை போகும் பல போலீஸ் அதிகாரிகளின் பிம்பமாக கண்முன் நிற்கிறார் கனி . கொடூர ஆந்திர போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அஜய்கோஸ் , சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் தமிழ்நாடு போலீஸ்காரர் ராமதாஸ் , அரசியல்வாதிகளின் பலியாடு ஆடிட்டர் கே.கே வாக வரும் கிஷோர் மற்றும் படத்தில் சின்ன சின்ன ரோல்களில் வரும் எவருமே நல்லவேளை நடிக்கவேயில்லை ...


உலக சினிமாக்களை பார்த்து சுடாமல் திரு.சந்திரகுமார் தனது சொந்த அனுபவங்களை வைத்து எழுதிய லாக்கப் என்கிற உள்ளூர் நாவலை தழுவி அத்தோடு சாதிக் பாட்ஷா  தற்கொலை, வங்கி கொள்ளை தொடர்பாக சென்னையில் நடந்த என்கவுண்டர் இவற்றை வைத்து பின்னப்பட்ட விறுவிறுப்பான திரைக்கதையையும் சேர்த்து உலக தரத்திற்கு படமாக கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன் . இடைச்செருகல் போல படும் ஆனந்தி கேரக்டர் , கிஷோர் மரணத்தை சுற்றி நிகழும் சின்ன குழப்பம் , போலீஸ் டார்ச்சர்களாகவே நகரும் முதல் பாதி , ஒரு வழியாக அது முடிந்து தப்பிக்கும் தினேஷ் & கோ மூடிக்கொண்டு ஊருக்கு போகாமல் தேவையில்லாத மேட்டர்களில் மூக்கை நுழைக்கும் அதிகப்பிரசங்கித்தனம் போன்ற சில குறைகளை மட்டுமே படத்தில்,காண முடிகிறது . எடிட்டிங் , பின்னணி இசை , ஒளிப்பதிவு எல்லாமே நம்மை நன்றாகவே படத்தில் லாக் செய்கின்றன ,,,

வழக்கு எண் , மௌன  குரு உட்பட நிறைய படங்களில் பார்த்து பழகிய போலீசாரின் அதிகார துஷ்பிரயோகமும் , மனித உரிமை மீறல்களும் தான் படத்தின் கரு என்றாலும் அதை டீடைலிங்காக அதே சமயம் மிக மிக அழுத்தமாக சொன்ன விதத்தில் வித்தியாசப்படுகிறது விசாரணை . படமாக இருந்தாலும் தினேஷ் & கோ வினர் படும் டார்ச்சர்களில் இருந்து எப்போது தப்பிப்பார்கள் என்கிற பதைபதைப்பை படம் முழுவதும் கொடுத்த விதத்தில் வெற்றி பெறுகிறார்  வெற்றிமாறன் . குறிப்பாக இரண்டாம்பாதி அடுத்தடுத்து என்ன என்கிற ஆர்வத்தை கொடுத்துக்கொண்டே இருக்கிறது ...

நீண்ட வருடங்களுக்கு பிறகு நெஞ்சத்தை அழுத்தி பிசையும் ( என்ன தான் எதிர்பார்த்த முடிவாக இருந்தாலும் ) க்ளைமேக்ஸ் . அதே போல படத்தின் அந்த கடைசி பத்து நிமிடங்கள் கனமான இதயங்களை கூட கரைத்து விடும் . பொழுதுபோக்கிற்காக மட்டும் சினிமாவுக்கு போகிறவர்கள் இந்த படத்துக்கு குடும்பத்தோடு போய் வெற்றி மாறனை திட்டுவதை விட சிவகார்த்திகேயன் படங்களை கண்டுகளிக்கலாம் . மற்றபடி ஒரு உண்மையான சினிமா நம்மை எந்த அளவு பாதிக்க முடியும் என்று சோதித்துப் பார்க்க நினைப்பவர்கள் நிச்சயம் விசாரணைக்கு அழைக்காமலேயே சரண்டர் ஆகலாம் . படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது  நம்மை கடந்து செல்லும்  போலீஸ் பேட்ரோலை ஒருவித கொலைவெறியுடன் பார்க்க வைப்பது படத்தின் வெற்றியா இல்லை நமது ஜனநாயகத்தின் தோல்வியா என்கிற கேள்வி இன்னும் அரித்துக்கொண்டு தானிருக்கிறது ...

ரேட்டிங் : 4.25 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 52  


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...