7 September 2011

சந்திப்போம் பிரிவோம்...- சிறுகதை

   
    இரயில் பயணங்களின்  போதெல்லாம் பழைய நினைவுகள் தட தட என மனதுக்குள் ஓடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது...சுரேஷ் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல...ஆனாலும்  அவன் எப்போதும் அவள் நினைவிலிருந்தாலும்  இன்னும் சில  நிமிடங்களில் அவளை பார்க்க போகிறோம் என்று  நினைக்கவில்லை...

     அவள் பெயர் ரேவதி , பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் அழகு..  இருவரும் காதலித்தார்கள்...இவர்கள் காதல் கல்லூரி முழுவதும் பிரபலம்...இன்று  அவள் வேறொருவன் மனைவி...அவன் கனவுகளில் வந்தவள்  இன்றோ வெறும்  நினைவுகளாய்...

   கல்லூரி நாட்களில் எப்போதும் நன்பர்களுடனே இருப்பவன் கடந்த ஆறு வருடங்களாக தனியாளாகவே இருக்கிறான்..அதுவே அவனுக்கு பிடிக்கிறது...தனிமையை நிரப்ப சினிமாவும், புத்தகங்களும்...கூடவே சில உதவி இயக்குனர்களும், அவர்களுடன் சினிமா பற்றிய விவாதங்களும்...


    இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தில் சென்னைக்கு வந்து இத்தனை வருடங்களில் தனிமை,  துக்கம், அவமானம் எல்லாம் அவனுக்கு பழகி விட்டது...ரேவதியின் பிரிவு கொடுக்காத துக்கமா ? இல்லை அவள்  குடும்பம் தராத அவமானமா?.."ரேவதி" அவனால் எந்த நிலையிலும் மறக்க முடியாத பெயர்...

    முதல் காதலையும், அதோடு முடிந்த காதலையும் யாரால் தான் மறக்க முடியும்..இரயில் தாமதமாக வரும் என அறிவுப்பும் வரவே நினைவுகளில் மூழ்கினான் சுரேஷ்...

     'என்ன சுரேஷ்,பயமா இருக்கா ? காலேஜ் முடிச்சு ரெண்டு    வருஷம் ஆச்சு..இன்னும் வீட்ல பேசலேனா எப்படி ?..ரேவதி கேட்டவுடன் ஏதோ சிந்தனையில் இருந்தவன் சட்டென்று நிமிர்ந்தான்...

    "இல்ல இல்ல கண்டிப்பா பேசணும்,ஆனா இப்ப தான் என் ப்ரோக்ராம்லாம் லோக்கல் சானல்ல வர ஆரம்பிச்சுருக்கு..இன்னும் ஒரு வருஷம் போச்சுன்னா கொஞ்சம் ஸ்டடி ஆயிடுவேன்"...

   "ம்ம்..அப்புறம்  என் புருசனோட உட்காந்து உன் ப்ரோக்ராம் பாப்பேன் பரவாயில்லையா ?...

   "என்ன ரேவதி இப்படி சொல்ற ?

   "வேற எப்படி சொல்வாங்களாம்..நானே வீட்ட இந்த ரெண்டு வருஷம் சமாளிக்கறுதுக்குள்ள போதும், போதும்னு ஆயிருச்சு...நான் உனக்கு
வேணும்னா  என் வீட்டுக்கு நாளைக்கு நாலு மணிக்கு வந்து அப்பாட்ட
பொண்ணு கேளு".. அவள் சொல்லிவிட்டு விறு விறு வென சென்று விட சென்ற தடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் சுரேஷ் ...
                                
                
     காதல் இருவர் சம்பத்தப்பட்டது,  ஆனால் கல்யாணம் இரு  குடும்பம் சம்பத்தப்பட்டது எனவே  பல கேள்விகள் முளைக்கின்றன..அங்கும் முளைத்தது...

     "சார்,உங்க பொண்ண எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு, அவளுக்கும் தான், எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னா   நல்லா இருப்போம்"

     "என்னடா , ஏதோ பொண்ணோட   கூட படிச்சவன்னு ஒட்கார வைச்சு பேசினா என்னமோ உளர்ற"

    "இல்ல சார், உங்க பொண்ணு சொல்லி தான் வந்தேன் "

    "ஓஹோ , இது வேறவா" அவர் பொண்ணைப் பார்க்க அவள் தூணின் பின் மறைந்தாள்...

    "ஏம்ப்பா உங்களுக்கு காதல் வேணா விளையாட்டா இருக்கலாம், கல்யாணம் அப்படியில்ல' என்னோட மூத்த மாப்பிள அமெரிக்காவுல இருக்கார்..உனக்கு என்ன தகுதி இருக்கு என் பொண்ண கட்ட, நீ என்ன வேல பாக்குற , என்ன  சம்பளம் ? "

    "சார்,நான் லோக்கல் சானல்ல இப்ப தான் தனியா ப்ரோக்ராம் பண்ற அளவுக்கு வளந்துக்கிட்டு வரேன், பெரிய சம்பளம் இல்லேன்னாலும் மனசுக்கு பிடிச்ச வேல சீக்கிரம் முன்னுக்கு வந்துருவேன்"

    "இதெல்லாம் ஒரு வேலையா, மனசுக்கு புடிச்சுருந்தா அதையே கட்ட வேண்டியது தானே, எதுக்கு என் பொன்னு ?. இந்த வேலைல்லாம்  நிரந்தரம் இல்ல, ஒரு நாள் இழுத்து மூடிடுவான் ..என் ஆபீஸ்ல   கேட்டா  காறித் துப்புவா"   

    "உங்க ஆபீஸ்ல  கூட தான் அப்பப்போ  ஸ்ட்ரைக் வருது,அப்போ அத மூடிடுவாங்களா ?..தன் வேலையைக் குத்தவும் சுருக்கென கேட்டான் சுரேஷ்...

    "உன் வாயை மூடு, அபசகுனமா பேசாத,அது எத்தனை பேருக்கு சோறு போடுற கம்பெனி, அதப்போய் உன்னோட துக்கடா கம்பனியோட சேத்து பேசறதா..? முதல்ல வெளில போடா"..கோபத்தில் கத்தினார் அப்பா...

    "உங்க பொண்ணு இல்லாம நான் வெளியே போக மாட்டேன்"  திடமாக சொன்னான் சுரேஷ்...நிலைமையை இன்னும் விபரீதம் ஆக்குவது போல்
"அம்மா" என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தாள் ரேவதியின் அம்மாள்..

   "சுரேஷ் , முதல்ல நீ போ இங்கிருந்து" , யார் சொல்லி வந்தானோ அவளே இப்படி சொல்ல ஒரு நிமிடம் அவன் ஆடிப் போனான்...

   "நான் தான் சொல்றேன்ல ,காதலும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் எனக்கு என் அம்மா தான் முக்கியம்"... 

    "டே , முதல்ல வாடா , அப்புறம் பாத்துக்கலாம்" அவன் நண்பன் கையை பிடித்து இழுத்து சென்றான்..அவனுடன் நடைபிணமாய் நடந்தான் சுரேஷ்...
                                      
    அதன் பிறகு எவ்வளவோ முயற்சி செய்தும் அவளை பார்க்கவோ,பேசவோ முடியவில்லை...அம்மாவின் உடல்நிலையோடு சேர்த்து உலக நடப்பும் , உத்தியோகத்தின் அவசியமும் சொந்தக்காரர்களால் அவளுக்கு ஓதப்பட்டது...அவளும் திருமணத்திற்கு சம்மதித்தாள்...ஏதோ ஊரில்  வைத்து திருமணம் செய்து விட்டதாக அவள் தோழி சொன்னவுடன் பூமிக்குள் போவது போல் இருந்தது அவனுக்கு...

    காலம் எதையும் மறக்கடிக்க செய்யும் மருந்து...சினிமாவும் ,சூழலும் அவனையும் ஓரளவு மாற்றின...இவ்வளவு நடந்தும் அவள் மேல் அவனுக்கு கோபம் இல்லை..இவன் நிலையை நினைத்தே நொந்து கொண்டான்..அதுவே காதல்...

   அவன் யாரை இனிமேல் பார்க்கவே மாட்டேன் என்று  நினைத்தானோ அவளை மீண்டும் பார்த்தான்...ஆம் ஒரு அம்மாவாக நான்கு வயது சிறுவனுடன்...அவள் சம்மதித்தால் அவளை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்  என்று நினைப்பு தோன்ற அதை உடனே பொசுக்கி விட்டு ,

   "எப்படி இருக்கே ரேவதி" என்றான்...

   "ம்ம்.ரொம்ப  நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க, என்ன  பண்ற ? உன் மனைவி எங்க ?  - எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் ரேவதி ..

   "நான் உதவி இயக்குனரா இருந்து இப்போ தனியா படம் டைரக்ட் பண்ற முயற்சில இருக்கேன், இன்னும் கல்யாணம் பண்ணிக்கல" இந்த இடத்தில்   கொஞ்சம் கம்மியது அவன் குரல்..

   "என்னது பண்ணிக்கலையா ? ஆவலன்னு சொல்லு, என்னமோ பெரிய மாசம் பல லட்சம் சம்பாதிச்சு யாரும் பொண்ணு கொடுக்காத மாதிரி சொல்ற, இன்னும் ஒரு உருப்படியான வேல இல்லாம சினிமான்னு தான சுத்திக்கிட்டு இருக்க,  நல்ல வேலை நான் தப்பிச்சேன் "

   "என்ன ரேவதி, இப்படி பேசுற ? எப்படி எல்லாத்தையும் மறந்த , என்னால உன்ன சுத்தமா மறக்க முடியல..இன்னும் ஒரு வருசத்துல நான் எப்படியும் படம் பண்ணிருவேன் "...

   "இன்னும் எத்தன வருஷம்  தான் இப்படி சொல்ல போரையோ, அவருக்கு இந்த சினிமா, டிராமால்லாம் சுத்தமா பிடிக்காது, எல்லாம் வேஸ்ட் அப்படிம்பார் ,  சரி,சரி என்னையே பராக்கு பாத்துகிட்டு எங்கயாவது ட்ரைன்ல கியின்ல மோதிடாத , அந்த பாவம் என்ன சுத்தும்"

                  
    இனிமேல் தான் இவள் பாவம் செய்ய வேண்டுமா என்று கேட்பது போல அவளை ஒரு பார்வை பார்த்த சுரேஷ் , அங்கே வரும் இரயில் முன் சென்று குதித்து விடலாமா என்று கூட நினைத்தான்...

   "ச்சே,ச்சே, போயும் போயும் இவளுக்காக நான் சாகுறதா,இவளப் போய் காதலிச்சோமே ,இன்னும் ஒரு வருஷம் போகட்டும்டி அப்போ நான் யாருன்னு தெரியும்" என்று மனதுக்குள் நினைத்தவனாய் ,

   "உன்ன காதலிச்சது மட்டும் இல்ல இப்போ பார்த்ததையே கெட்ட கனவா நினைக்கறேன், என் மூஞ்சிலே முழிக்காத , குட் பை "  அங்கிருந்து விடு விடு வென நடந்தான் சுரேஷ்...

    "நீ நல்லா இருக்கணும் சுரேஷ் , பெரிய டைரக்ட்ராவனும் , என்  வாழ்க்கை தான் முடிஞ்சு போச்சு, எப்போ என் புருஷன் வெளி நாட்ல வேறொரு பொண்ண கல்யாணம் பண்ணான்னு தெரிஞ்சதோ அப்பவே பாதி செத்துட்டேன் , கேள்வி கேட்டதுக்கு "நீ என்ன பெரிய பத்தினியா ?..உன் மேட்டர்லாம் எனக்கும் தெரியும், பேசாம என்கூட இருக்கறுதுனா இரு இல்ல மூடிட்டு உன் அப்பன் வீட்டுக்கு போ"  என்று சொன்ன போது முழுசா செத்தேன்..

     உனக்கு பண்ண துரோகத்துக்கு  நல்லா அனுபவிச்சுட்டேன்..நீ நல்லவன் சுரேஷ், என் டிவேர்ஸ் விஷயம் தெரிஞ்சா என்ன விட மாட்ட , நான் உனக்கு வேணாம்...நீ ஜெயிச்சதுக்கப்புறம் நல்ல  பொண்ணா கிடைப்பா" 

    "அம்மா ஏம்மா அழுவுற யார் அந்த அங்கிள்" ,

    கேட்ட தன் மகனை  "இனிமேல் என் உலகமே  நீதானடா" என்பது போல் அழுகையுடன்  அள்ளி அணைத்தாள் ரேவதி...அங்கு அடுத்த இரயில் வருவதற்கான டிராக்குகளை மாற்றிக் கொண்டிருந்தார்கள்...

3 comments:

கடம்பவன குயில் said...

விறுவிறுப்பான நடையில் ஒரே மூச்சில் படிக்க வைத்துவிட்டீர்கள். அனந்துவின் சிறுகதை அற்புதம்.

ananthu said...

சற்று பெரிய கதையாய் இருக்கிறதே என்று நினைத்தேன்...உங்கள் பின்னூட்டம் பார்த்ததில் நிம்மதி...நன்றி...

Anonymous said...

Machi... Yaru karu katiyo sollaramathiri eurku...Avan padichana enda...?

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...