12 January 2014

ஜில்லா - JILLA - தீவிர விஜய் ரசிகர்கள் வசிக்கலாம் ...




ண்பன் , துப்பாக்கி என்று புது பாணியில் ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த விஜய் தலைவா வின் தோல்விக்கு பிறகு தன் பழைய பாணிக்கு திரும்பியிருக்கும் படம் ஜில்லா . தனது தீவிர ரசிகர்கள் மட்டுமே கல்லாவை  நிரப்பி விடுவார்கள் என்கிற அதீத நம்பிக்கையில் ஜில்லாவில் நேசனுடன் இணைந்து களம் இறங்கியிருக்கிறார் விஜய் . நினைத்தது பலித்ததா ?. பார்க்கலாம் ...

மதுரையின் பெரிய தாதா சிவன் ( மோகன்லால் ) , அவரது வளர்ப்பு மகன் சக்தி ( விஜய் ) . போலீஸ் என்றாலே பிடிக்காத சக்தியை தன்னுடைய சவுகரியத்துக்காக ஏ.சி ஆக்குகிறார் சிவன் . வளர்த்த கடா மார்பில் பாய்வது போல போலீசானவுடன் சிவனுக்கு எதிராக திரும்புகிறார் சக்தி . ஜெயித்தது சிவனா ? சக்தியா ? என்பதே மூன்று மணி நேர படம் ...



விஜய் தன் வழக்கமான துள்ளல் நடிப்பில் மனதை அள்ளுகிறார் . அவர் குரலில் வரும் கண்டாங்கி பாடலுக்கும் , சிவனும் பாடலில் அவர் நடனத்துக்கும் தியேட்டரே அதிர்கிறது .  என்ன தான் மந்திரி சிபாரிசில் போலீசானாலும் முதல் நாளே ஏதோ  காலேஜுக்கு போவது போல கலர்  ட்ரெஸ்ஸில் வருவது , கமிசனருக்கு சல்யூட் போடாமல் சவடாலாய் பேசுவது எல்லாம் ர்ரொம்பவெ ஓவர்ங்கண்ணா . போக்கிரியாக மனதில் பதியும் விஜய் போலீசாக , சாரி பாஸ் ...

டைட்டிலில் விஜய்க்கு முன்னாள் பெயர் வருவதோடல்லாமல் படம் முழுவதும் " நான் சிவன்டா " என்று விஜய் பேசாத பஞ்ச் டயலாக்ஸ் பேசி ரணகளப்படுத்துகிறார் சேட்டன் மோகன்லால் . மலையாள வாடையில் பேசினாலும் இந்த மதுரை தாதாவை ரசிக்கலாம் . பொதுவாக ராஜ்கிரண் செய்யக்கூடிய சாதாரண தாதா பாத்திரமானாலும் அதற்கு மோகன்லாலை தேர்ந்தெடுத்தது சிறப்பு . ஆனால் தன் மகன் ( மகத் ) செய்த தவறால் ஊரே பற்றியெரிய அதற்காக ஒரு சிறு வருத்தம் கூட காட்டாத இவரது கேரக்டர் பெரிய சறுக்கல் ...

காஜல் அகர்வால் மசாலா படங்களில் வரும் வழக்கமான ஹீரோயினாக வந்து போகிறார் . சூரி சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் டபுள் மீனிங் வசனங்கள் நெளிய வைக்கின்றன . இவர் அபாய இடத்தில் அடி வாங்கி அடிக்கடி கதறுவதும் எரிச்சல் . சம்பத் போன்ற சிறந்த நடிகர் வில்லனாக வந்து உதை வாங்குவது வருத்தமாக இருந்தாலும் விஜயுடனான இவரது மோதல் படத்திற்கு பலம் . தம்பி ராமையா , அட்டாக் பாண்டி எல்லாம் வீணடிக்கப்பட்டிருக்கிரார்கள் . டி.இமானின் இசையில் பாடல்கள் ஹம்மிங் செய்ய வைத்தாலும் பின்னணி இசை இரைச்சல் ...



கேரளாவில் விஜய்க்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து இணைக்கப்பட்டிருக்கும் மோகன்லால் , இடைவேளையில் விஜய் எடுக்கும் போலீஸ் அவதாரம் , விஜயின் துள்ளல் , சம்பத் கொடுக்கும் ட்விஸ்ட் இப்படி ஜில்லாவில் சில விஷயங்கள் நல்லாவே இருக்கின்றன ...

அதரப்பழசான கதை தான் என்றாலும் புதிதாய் யோசித்து சீன்கள் பிடிக்காமல் போனதில் கோட்டை விடப்பட்ட திரைக்கதை , படத்தின் நீளம் , மோகன்லால் கேரக்டரின் சறுக்கல் , அதனால் விஜய் - மோகன்லால் பிரிவு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்ப்படுத்தாது , தங்கை சென்டிமெண்டிற்காக புகுத்தப்பட்ட ஆர்.கே எபிசோட் இவையெல்லாம் ஜில்லாவின் கல்லாவை ரொம்பவே பாதிக்கின்றன . கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் கில்லி , போக்கிரி வரிசையில் வந்திருக்க வேண்டிய படம் வில்லு , சுறா அளவிற்கு மோசமாக இல்லாததால் ஜில்லாவில் தீவிர விஜய் ரசிகர்கள் வசிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...