தீபாவளி என்றாலே நம் எல்லோருக்கும் அதிகாலையில் எழுந்து தலைக்கு எண்ணை வைத்து குளிப்பது , குடும்பத்தாருடன் சந்தோசமாக புத்தாடைகள் அணிந்து கொண்டு வித விதமாக வெடிகள் வெடிப்பது , சாமிக்கு படையல் வைத்து விட்டு பலகாரம் சாப்பிடுவது இப்படி வழக்கமான பழக்கங்கள் பல சட்டென்று நினைவுக்கு வரும் ...
இவற்றையெல்லாம் தாண்டி பல வருடங்களாக கடைபிடித்து வரும் மற்றொரு பழக்கம் தீபாவளிக்கு ரிலீசாகும் நமக்கு பிடித்த ஹீரோவின் படத்தை அடித்து பிடித்து முதல் நாள் முதல் ஷோவே பார்ப்பது ... நினைத்து பார்க்கும் போதே அவரவர் மனத்திரையில் பிளாஷ்பேக் ஓடும் ...அப்படி தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய தமிழ் படங்களின் நினைவலைகளே " திரை " தீபாவளி ...
தமிழ் சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் ... இவர் குரல் வளத்திற்கு சொக்காதவர்கள் குறைவு ... இவர் நடிப்பில் 1944 ஆம் ஆண்டு தீபாவாளிக்கு வெளிவந்த " ஹரிதாஸ் " படம் ஜி.ராமனாதனின் இசையில் எம்.கே.டி பாடிய பாடல்களுக்காகவே மூன்று தீபாவளி வரை தொடர்ந்து மரத்தான் ஓட்டம் ஓடியது ... அம்மா வேடத்தில் பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை பண்டரிபாய் இதில் தான் அறிமுகம் ஆனார் ...
பாடல்களாகவே இருந்த தமிழ் சினிமாவை வசனங்களின் வீச்சால் திரும்பி பார்க்க வைத்தது கலைஞரின் கதை வசனத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் அறிமுக நடிப்பில் 1952 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த " பராசக்தி " ... கலைஞரின் கூரிய வசனங்களும் , சிவாஜியின் சிம்ம குரலும் பகுத்தறிவு பிரசாரங்களை இப்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பரப்பின ...
இதன் பிறகு இவருடைய பல படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகி பெரிய வெற்றியடைந்தாலும் அதில் மிக முக்கியமானது சிவாஜி 9 வேடங்களில் நடித்த அவருடைய நூறாவது படமான " நவராத்திரி " ... அவருக்கு இணையாக நடிகையர் திலகம் சாவித்திரியும் மிக அருமையாக நடித்திருப்பார் ... இந்த படம் 1964 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்தது ... ரஜினி , கமல் இருவரின் வளர்ச்சிக்கு பிறகும் சிவாஜி பிரபுவுடன் இணைந்து நடித்த " வெள்ளை ரோஜா " 1983 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்து நூறு நாட்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடியது ...
சிவாஜியை போல எம்.ஜி.ஆர் அவர்களின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை ... 12 வருடங்கள் சிறு சிறு வேடங்களில் நடித்து தன்னுடைய 16 வது படத்தில் தான் அவரால் ஹீரோவாக முடிந்தது ... இவருடைய பெரும்பாலான படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகி பெரிய வெற்றியடைந்திருக்கின்றன ... தீபாவளிக்கு வெளியாகி பெரிய வெற்றியடைந்த இவரின் குறிப்பிடத்தக்க படங்கள் " மன்னாதி மன்னன் " மற்றும் " படகோட்டி " ...
எம்.ஜி.ஆரை போலவே வசூலை அள்ளி குவிக்கும் சூப்பர் ஸ்டாரின் படங்கள் பெரும்பாலும் சித்திரை திருநாளன்று வெளிவருவது வழக்கம் ... வெற்றி பெற்ற இவருடைய தீபாவளி படங்களில் மிக முக்கியமான படம் " முத்து " ... 1995 ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூலை அள்ளிக் குவித்ததோடு மட்டுமல்லாமல் அடுத்து வரப்போகும் அரசியல் மாற்றத்திற்கு ஒரு முன்னோடியாகவும் இருந்தது ...
வெற்றியையும் , தோல்வியையும் சரி சமமாய் சந்திக்கும் கமலின் படங்கள் தீபாவளியை பொறுத்தவரை பெரும்பாலும் வெற்றியடைந்தன என்றே சொல்லலாம் ... இவர் சைக்கோவாக நடித்த " சிகப்பு ரோஜாக்கள் " , டைம் வெளியிட்ட உலகின் சிறந்த நூறு படங்களில் இடம்பிடித்து கமலுக்கு தேசிய விருதும் வாங்கிக்கொடுத்த " நாயகன் " , நடிகர் திலகத்துடன் இணைந்து இவர் நடிப்பிலும் , திரைக்கதையிலும் வெளிவந்த " தேவர் மகன் " போன்றவை சில உதாரணங்கள் " முத்து " அளவிற்கு பெரிய வெற்றியடையாவிட்டாலும் நல்ல பெயர் சம்பாதித்ததோடு , பெண்கள் கூட்டமே இல்லமால் நூறு நாட்கள் ஓடியது " குருதிபுனல் " ...
ரஜினி , கமல் இருவரும் இணைந்து நடித்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி பெரிய வெற்றியடைந்த படம் " மூன்று முடிச்சு " ... கேப்டனை பொறுத்தவரை தீபாவளி வெற்றி படங்களில் குறிப்பிடத்தக்கது ஆக்சனை தாண்டி அவருடைய நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை காட்டிய "வைதேகி காத்திருந்தாள் " ... நன்றாக ஓடியதோடு மட்டுமல்லாமல் நவரச நாயகன் கார்த்திக்கின் இயல்பான நடிப்பை நினைக்க வைக்கும் படம் "கோகுலத்தில் சீதை " ...
அஜித் ஆஞ்சநேயா , ஏகன் என்று தீபாவளியில் தோல்வி படங்கள் கொடுத்திருந்தாலும் வில்லனையும் , வரலாறையும் வைத்து சமன் செய்கிறார்... இவையிரண்டையுமே இயக்கியது கே.எஸ்.ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது ... விஜய் அழகிய தமிழ் மகனில் அடக்கி வாசித்திருந்தாலும் சிவகாசியில் வசூல் வானவேடிக்கை காட்டினார் ...
விக்ரம் , சூர்யா இருவருக்கும் தீபாவளி கொண்டாட்டமாக அமைந்தது பாலா கொடுத்த " பிதா மகன் " , இதை தவிர சூர்யா தனியாக ஆதவனில் அசத்தியிருப்பார் ... சிம்புவிற்கு ஒரு " வல்லவன் " என்றால் தனுசிற்கு ஒரு " பொல்லாதவன் " ...
இப்படி பெரிய ஹீரோக்கள் படங்களை தவிர தீபாவளிக்கு அத்தி பூத்தாற்போல வந்து மைனா மாதிரி மனதை அள்ளும் படங்களும் உண்டு ... முன்பெல்லாம் தீபாவளி அன்று பெரிய ஹீரோக்கள் படங்கள் போட்டி போட்டுக் கொண்டு ரிலீஸ் ஆவதோடு மட்டுமல்லாமல் அவை எத்தனை நாட்கள் ஓடும் என்று ரசிகர்களுக்கிடையே ஒரு போட்டியே நடக்கும் ...
இப்போதெல்லாம் பெரிய ஹீரோக்களே வியாபாரம் பாதிக்கும் என்பதனால் நேரடி போட்டியை தவிர்ப்பதனாலும் , படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை விட எத்தனை பிரிண்ட்கள் போடுகிறார்கள் என்பதே வியாபார யுக்தியாய் இருப்பதினாலும் குறைவான படங்களே ரிலீஸ் ஆகின்றன ...
அதுவும் தவிர அடிக்கொரு தடவை சுட சுட " இந்திய தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக வந்து சில நிமிடங்களே ஆன , இன்னும் தியேட்டர்களில் ஒரு காட்சி மட்டும் ஓடிக் கொண்டிருக்கிற புத்தம் புது படம் " என்கிற அளவிற்கு சொல்லி முடிந்த வரை மக்களை டி.வி பொட்டிக்கு முன் உட்கார வைத்து விடுகிறார்கள் ...
இந்த தீபாவளியை பொறுத்தவரை 1000 பிரிண்ட்களுடன் சூர்யா நடித்த ஏழாம் அறிவும் , 350 ஸ்க்ரீன்களுக்கு மேல் விஜய் நடித்த வேலாயுதமும் வெளியாகின்றன... எதிர்பார்ப்பில் ஏழாம் அறிவே முந்துகிறது...
அனைவருக்கும் என் தீபாவளி நல் வாழ்த்துக்கள் ...
( பின் குறிப்பு ) : இந்த பதிவினை மூன்றாம்கோணம் தீபாவளி மலரிலும் காணலாம்....
11 comments:
தீபாவளி நல் வாழ்த்துக்கள் .
நன்றி ... தீபாவளி நல வாழ்த்துக்கள் ...
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...
இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்
Deepavalai vaazhthugal.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
அம்பாளடியாள் said...
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......
ananthu said...
நன்றி ... தீபாவளி நல வாழ்த்துக்கள் ...
ரெவெரி said...
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...
ananthu said...
நன்றி ... தீபாவளி நல வாழ்த்துக்கள் ...
angelin said...
இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்
நன்றி ... தீபாவளி நல வாழ்த்துக்கள் ...
Saravanaa said...
Deepavalai vaazhthugal.
நன்றி ... தீபாவளி நல வாழ்த்துக்கள் ...
வைரை சதிஷ் said...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
நன்றி ... தீபாவளி நல வாழ்த்துக்கள் ...
Post a Comment