அவன் இவன் படத்தில் வித்தியாசமாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற விஷால் பிரபு தேவாவுடன் கை கோர்த்து தன் வழக்கமான ஆக்சன் பார்முலாவிற்கு திரும்பியிருக்கும் படம் " வெடி " ... தங்கை செண்டிமெண்ட் , போலீஸ் - தாதா மோதல் , பிளாஷ்பேக்கில் உடையும் சஸ்பென்ஸ் , குத்து பாட்டு , காமெடி என மசாலா படத்திற்குரிய அத்தனை சமாச்சாரங்கள் இருந்தும் வேகம் குறைந்ததால் டல்லடிக்கிறது வெடி ...
வழக்கமான ஹீரோ - வில்லன் சேசிங் கதையை இடைவேளை வரை சஸ்பென்சுடன் நகர்த்தி பின் விஷால் ஏன் கொல்கட்டா வந்தார் , அவருக்கும் அவர் காப்பாற்றும் ஐஸ்வர்யாவுக்கும் என்ன உறவு , அவரை ஏன் வில்லன் ஆட்கள் துரத்துகிறார்கள் என்று ஒவ்வொரு முடிச்சையும் வழக்கம் போல பிளாஷ்பேக்கில் அவிழ்க்கிறார்கள் ...
முதல் காட்சியிலேயே பெரிய சண்டைக்கான ஸ்கோப் இருந்தும் ஒரே அடியில் முடித்து விட்டு அடுத்த காட்சிக்கு தாவும் போதே நமக்கு கொஞ்சம் நிம்மதி வருகிறது ... விஷால் பாலாவின் பட்டறைக்கு போய் வந்தது நடிப்பில் நன்றாக தெரிகிறது ... விறைப்புடன் இருந்தாலும் வில்லன் சியாஜி ஷிண்டேவை உயிர் பயம் காட்டி அலைய விடும் போது புன்னகைக்க வைக்கிறார் ... வழக்கம் போல சண்டைக்காட்சிகளில் எதிரிகளை பந்தாடுகிறார் இவரிடம் எவ்வளவு அடி வாங்கினாலும் அடியாட்கள் அடுத்த சண்டைக்கு எப்படியோ பிரெஷ்ஷாக வந்து மறுபடியும் உதை வாங்குகிறார்கள் ...
இவர் உயரத்திற்கு பொருத்தமான சமீரா ரெட்டியை ஹீரோயினாக்கியது நடனக்காட்சிகளில் விஷாலுக்கு நிம்மதி கொடுத்திருக்கும் ... சமீரா ஆறடியில் கொஞ்சம் ஆண்மை சாயலில் இருந்தாலும் அசத்தல் ... க்ளோஸ் அப் காட்சிகள் பயமுறுத்துகின்றன ... மேக் அப் மேன் யாரோ ?... இந்த மாதிரி படத்துல ஹீரோயினுக்கு நடிக்கறதுக்கு பெரிசா என்ன இருக்கும் ? ...
விவேக் யாரையாவது இமிடேட் செய்து இரிடேட் செய்யாமல் நடித்தது நலம். இவர் பேசுவதை விட உடலெங்கும் பலூனை சுத்திக் கொண்டு இளைய திலகம் பிரபு போல இவர் செய்யும் சேட்டைகள் சிரிக்க வைக்கின்றன ... படத்தின் முதல் பாதி நகர்வதற்கு இவர் காமெடி கொஞ்சம் கை கொடுக்கிறது ...
விஷாலின் தங்கையாக வரும் பூனம் அழகாக இருப்பதோடு நடிக்கவும் செய்கிறார் ... சியாஜி சிண்டே நன்றாக நடித்திருந்தாலும் வட இந்திய தோற்றம் அவருடைய தூத்துக்குடி வில்லன் கேரக்டரை துவம்சம் செய்கிறது ... என்று தணியும் இந்த தமிழ் பட வில்லன் பஞ்சம் ?...
பெரிய சண்டை வருமோ என எதிர்பார்க்கும் இடத்தில் அதை தவிர்த்திருப்பது உத்தமம் ... விஷால் வில்லனுக்கு விஷ ஊசி போட்டதாக சொல்லி உயிரை காப்பாற்றி கொள்வதற்காக அலைய விடும் காட்சிகளில் ஊர்வசி , ஸ்ரீமன் , பாண்டு இவர்கள் மூவரையும் வைத்து பிரபு தேவா நன்றாக கிச்சு கிச்சு மூட்டுகிறார் ...
கதை பழசாக இருந்தாலும் அதை புதுசு போல விறுவிறுப்பாக காட்டுவதே ஆக்சன் படங்களின் ஆணிவேர் ... அதரப் பழைய கதைக்கு பிரபு தேவா தன் பாணியில் காமெடி , ஆக்சன் மருந்தை ஆங்காங்கே கலக்கியிருந்தாலும் நிறைவாக இல்லாததால் வெடி முழுசா வெடிக்கல ... போக்கிரி படத்திற்கு பிறகு தமிழில் எதுவும் ஹிட் கொடுக்காத பிரபு தேவா தெலுங்கு படமான " சௌர்யம் " கதையை தேர்ந்தெடுத்தது சௌர்யமாக இல்லை ..
இந்த மாதிரி படங்களில் லாஜிக் பார்க்க கூடாது என்றாலும் போலீசாக இருந்து கொண்டு ஒரு தகவலும் சொல்லாமல் தங்கைக்காக திடீரென விஷால் கொல்கொத்தா சென்று விடுவது , கிளைமாக்சில் ஏ.சி.பி யான விஷால் இறந்து விட்டதாக வில்லன் டி.வி. யில் விளம்பரம் கொடுத்து அவர் தங்கையை பிடிப்பது என்று லாஜிக் சொதப்பல்கள் ஏராளம் ...
பிரபு தேவா - விஜய் ஆண்டனி கூட்டணியில் பாடல்களும் சொல்லும் படி பெரிதாக இல்லாததும் ஒரு குறை ... ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை ... இரண்டே மணி நேரத்தில் முடிந்து விடுவதால் பொழுதுபோக்கை மட்டும் மனதில் வைத்து பார்ப்பவர்களுக்கு படம் ஓரளவு பிடிக்கலாம் ... இருப்பினும் காவல்துறையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட சாமி , சிங்கம் , தபங் ( ஹிந்தி ) போன்ற கமெர்சியல் ஆட்டோ பாம்களை பார்த்த நமக்கு இந்த வெடி வெறும் பிஜிலி வெடியாகவே தெரிகிறது ...
ஸ்கோர் கார்ட் : 39
( இந்த பதிவில் இருந்து அறிமுகம் )
5 comments:
Prabhu Deva please stop direction, sick of your movies.
ரொம்ப நல்லா, (வழக்கம் போல) எழுதியிருக்கீங்க அனந்த்..பக்கா ப்ரொஃபெஷனல் ரைட்டிங்..குட்டு, கமெடின்னு கலக்குறீங்க..
நன்றி ஷஹி ...
சூப்பர்
வைரை சதிஷ் said...
சூப்பர்
நன்றி ...
Post a Comment