14 October 2011

இந்திய அணி பழி தீர்க்குமா ? பதுங்கி விடுமா ? ...


                                                   
    இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது ... இந்திய மண்ணில் போட்டி நடைபெறுவதும் , ஏற்கனவே இந்தியா இங்கிலாந்தை ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் சொந்த மண்ணில் தோற்கடித்திருப்பதும் நமக்கு சாதகமாக இருந்தாலும் , இங்கிலாந்தில் இந்திய அணி எட்டுக்கு பூஜ்ஜியம் என்று வாங்கிய உதையை யாரும் மறக்கவில்லை ... 


    உலககோப்பை வெற்றி தந்த மமதையில் மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்பப்பட்ட கத்துக்குட்டி இந்திய அணி நன்றாக ஆடி வெற்றி வாகை சூடினாலும் வலிமையான இங்கிலாந்து அணிக்கு முன் அந்த ஜம்பம் எடுபடவில்லை...


     ஐ.பி.எல் போட்டிக்கு எல்லா நாட்டு வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆட வர அப்பொழுது கூட இங்கிலாந்து அணியினர் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளுக்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டதன் பலன் வீண்போகவில்லை ... சவாலாக இருக்கும் என்று நினைத்த இந்திய அணி இப்படி சரண்டர் ஆகுமென்று அவர்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் ... 



    இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு எதிரான வியூகம் சரியில்லாததும் , காயம் காரணமாக ஜாகிர் , சேவாக் போன்றோர் ஆடாததும் , திராவிட் தவிர யாரும் பார்மில் இல்லாததும் தோல்விக்கான காரணங்களாக கூறப்பட்டாலும் , இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியன் பைசா லீக்  கிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை டெஸ்ட் போட்டிகளுக்கு கொடுக்காததே மிக முக்கிய காரணம் ... 
                                      
     இதற்கு நேர்மாறான போக்கே இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் நல்ல வெற்றிகளை தேடித்தந்தது ... இது போன்ற டூர்களில் வழிநடத்த கிறிஸ்டன் இல்லாததும் பெரிய இழப்பு ... டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதல் இடத்தை இழந்ததும் , நூறாவது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் அதை நிறைவேற்றாததும் பெரிய ஏமாற்றங்கள் ... கேப்டன் ஆனதிலிருந்து 11 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் கூட தோல்வியை கண்டிராத தோனிக்கும் இது மறக்க வேண்டிய தொடராகவே அமைந்திருக்கும் ... 

                                 
    டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து ட்வென்டி - ட்வென்டி , ஒரு நாள் தொடர் இவற்றிலும்  சச்சின் , சேவாக் , யுவராஜ் , ஜாகிர் போன்ற சீனியர்கள் ஆடா விட்டாலும் தோனியின் தலைமையிலான ரைனா , கோலி , பிரவீன் உள்ளிட்ட இளம் இந்திய அணி கிடைத்த ஒன்றிரண்டு வெற்றி வாய்ப்புகளையும் நழுவ விட்டது ...

   சீனியர் வீரர்களின் காயம் ஒருபுறம் , தோல்வி கொடுத்த பயம் மறுபுறம் இவையிரண்டிற்கும் இடையே தேர்வுக்குழு திராவிட மாயையில் சிக்கியதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை ... அவரும் இந்த ஒரு நாள் தொடருடன் நிம்மதியாய் நிறைவு பெற்றார் ... அறிமுக வீரர் அஜன்கிய ரஹானேவின் ஆட்டம் மட்டுமே ஓரளவு நிம்மதி கொடுத்தது ...


    ஆனால் இந்த முறை ஆட்டம் இந்திய மண்ணில் நடைபெறுவதால் அணியில் அரவிந்த் , வரோன் , ராகுல் ஷர்மா உள்ளிட்ட இளம் பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து இந்த பரீட்சார்த்த முயற்சி தொடருமா என்பது கேள்விக்குறியே ... பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச்களில் தங்களை நிரூபிக்க அவர்களும் போராட வேண்டியிருக்கும் ...  ஹர்பஜனுக்கு இது நல்ல பிரேக் ... சாம்பியன் லீக் இறுதி போட்டியில் மும்பையின் வெற்றிக்கு அவர் வழிவகுத்தது இதற்கு சான்று ...

    சச்சின் , சேவாக் இல்லாத நிலையில் குக் தலைமையின் கீழ் வலுவான இங்கிலாந்து அணியை தோனியின் இளம் இந்திய அணி சொந்த மண்ணில் பழி தீர்க்குமா ? இல்லை பதுங்கி விடுமா ? இரு வாரங்களில் தெரிந்து விடும் ...

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஹர்பஜனுக்கு இது நல்ல பிரேக் ... சாம்பியன் லீக் இறுதி போட்டியில் மும்பையின் வெற்றிக்கு அவர் வழிவகுத்தது இதற்கு சான்று ...

அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

ananthu said...

இராஜராஜேஸ்வரி said...
ஹர்பஜனுக்கு இது நல்ல பிரேக் ... சாம்பியன் லீக் இறுதி போட்டியில் மும்பையின் வெற்றிக்கு அவர் வழிவகுத்தது இதற்கு சான்று ...
அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

நன்றி ...

Anonymous said...

வீட்டைப்பூட்டிட்டு சண்டை போடுரதல நம்மாட்கள் கெட்டிக்காரங்க...

வெளிய போனாதான் ப்ராப்ளம்...

ananthu said...

மொத்தமா அப்படி சொல்ல முடியாது ... கங்குலியின் தலைமைக்கு பிறகு வெளிநாடுகளிலும் வெற்றி வரத்தான் செய்தது ...தோனியும் இங்கிலாந்து தொடர் தவிர வேறு எந்த தொடரிலும் தோற்றதில்லை ... நேற்றைய வெற்றி நல்ல ஆரம்பம் ... நன்றி ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...