26 August 2014

தெருக்கூத்து - 3 ...


பா.ஜ.க வின் மாநில தலைவராக டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் . சீனியாரிட்டியை மட்டும் பார்க்காமல் சின்சியாரிட்டியை பார்த்து கட்சி இந்த பொறுப்பை கொடுத்திருக்கிறது . தொலைக்காட்சி விவாதங்கள் , இணையதளங்கள் மூலம் படித்த மக்களுக்கு நன்றாக பரிச்சியமாகியிருக்கும்  இவர் தன் உழைப்பால் கட்சி கிராமப்புறங்களிலும் நன்றாக வேரூன்ற பாடுபட வேண்டும் . ஏனெனில் படித்தவர்களில் பாதி பேர் ஓட்டுப் போட வருவதில்லை . வருபவர்களும் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதில்லை . அ.தி.மு.க , தி.மு.க இரண்டிற்கும் வலுவான மாற்றாக வரவேண்டுமென்றால் பா.ஜ.க பட்டி தொட்டிகளிலெல்லாம் வளர வேண்டியது அவசியம் . அந்தப் பணியை திறம்பட செய்ய அவருக்கு வாழ்த்துக்கள் .  அதே போல தேசிய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் ஹெச்.ராஜா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ...

சுதந்திர  தின உரையின் போது  பிரதமர் மோடியின் பேச்சு வழக்கமான
சம்பிரதாய பேச்சாக   இல்லாமல் உணர்வுபூர்வமாகவும் , ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது . ஆனால் அந்த  உரையில் சொன்னதையெல்லாம் நிறைவேற்ற நிறைய கால அவகாசம் தேவை .அது வரை மக்கள் பொறுத்திருப்பார்களா ?.
ஒரு பக்கம் சமாதானம் பேசிக்கொண்டே மறுபக்கம் பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் தனது வாலை ஆட்டிக்கொண்டிருக்கிறது . இந்த அரசாவது அதை ஓட்ட நறுக்குவார்களா ? ...

சரக்கு விலையை ஏற்றி குடி மகன்களுக்கு தமிழக அரசு ஷாக் கொடுத்தால், படிப்படியாக பத்து வருடங்களில் மதுபானக் கடைகளை மூடப்போவதாக அறிவித்து கேரள அரசு குடி மகன்களின் தலையில் இடியையே இறக்கி விட்டது . என்ன இது சேர நாட்டுக்கு வந்த சோதனை ? . ஆடிப்பெருக்கு அன்று கூட காவிரியில் தண்ணி இல்லாமல் பம்பு செட்டு வைத்து ஆடிப்பெருக்கை கொண்டாடும் அவல நிலையில் இருந்த மக்களுக்கு மேட்டூர் , கபினி அணைகளிலிருந்து தண்ணீரை திறந்து விட்டு வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள் . இதற்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் முதல்வருக்கு பாராட்டு விழாவும் நடத்தி விட்டார்கள் . கடமையை செய்ததற்கு ஒரு கடமைக்காக பாராட்டு விழாவா ? இல்லை மனமார்ந்த பாராட்டு விழாவா ?!...

தம்பித்துரைக்கு துணை சபாநாயகர் பதவி கொடுத்தது எதிர்பார்த்ததே . ஆனால் மைத்ரேயன் ராஜ்யசபா தலைமை பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டது சற்றும் எதிர்பார்க்காத அம்மா ட்விஸ்ட் . இந்த மாற்றங்கள் எதனாலே உருவாகுதோ ?. 23 வருடங்களாக எதிரிகளாக இருக்கும் லாலுவும் - நிதீஷும் பா.ஜ.க வின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமென்கிற ஒரே காரணத்துக்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் . அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பார்கள் . அதற்காக இப்படியா ?! ...

இங்கிலாந்தில் படு  கேவலமாக  உதை  வாங்கிய பிறகு கொஞ்சமா புத்தி வந்து பி.சி.சி.ஐ கோச் ப்லெச்சர் மற்றும் அந்நிய உதவியாளர்களை ஓரங்கட்டி ரவி சாஸ்திரியை கொண்டு  வந்திருக்கிறது . பி.சி.சி.ஐ ரவி தான் தல என்று சொல்கிறது . ரவியோ தோனி தான் கேப்டன் என்கிறார் . கேப்டனோ பெருசு ப்லெச்சர் தான்   எங்க எல்லோருக்கும் பாஸ் என்கிறார் . கேட்கும் போதே தலை சுத்துதே .  இவிங்க என்னத்த ஒன்டே ல ஆடி என்னத்த ஜெயிச்சு ! அட போங்கப்பா ...

லெட்டர் பேட் அமைப்புகள் பிரபலாமவதற்கு பிரபலங்களின் படங்களை எதிர்ப்பதை வாட்டிக்கையாக கொண்டிருக்கின்றன . துப்பாக்கி , விஸ்வரூபம் வரிசையில் லேட்டஸ்டாக அவர்களால் கையில் எடுக்கப்பட்டிருக்கும் படம் கத்தி . ராஜபக்சேவின் மைத்துனர் முக்கிய பொறுப்பிலிருக்கும் லைக்கா நிறுவனம் படத்தை தயாரிப்பதே பிரச்சனைக்கு காரணம் . இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆரோக்கியமானதல்ல . கத்தி தலைக்கு மேலேயே கத்தி . சமாளிக்குமா படக்குழு ?! ...

அஞ்சான் , க.தி.வ.இ இரண்டு படங்களில் அதீத எதிர்பார்ப்பின் காரணமாகவோ என்னவோ அஞ்சான் அமுங்கி விட , கதை விவாதத்தையே கதையாக்கி அதை சுவாரசியமான திரைக்கதையாக தந்ததால் பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார் பார்த்திபன் . வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் தான் சினிமா என்பது மாறி ரொம்ப நாட்களாகிவிட்டது . பொழுதை போக்க கையில் மொபைல் இருந்தால் போதாதா ? . அதை தவிர டி .வி , இணையதளம் என்று எவ்வளவோ இருக்கிறது. இதன் மூலம் தமிழுலக இயக்குனர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ஏதாவது புதுசா யோசிங்க , இல்லேன்னா பழசாயிடுவீங்க ...

மீண்டும் கூடுவோம் ...

2 comments:

Nat Chander said...

your analysis is good. keep it up.

Nat Chander said...

your analysis is good. keep it up.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...