20 April 2014

மாற்றம் நம் கையில் - 2014 ELECTION ...


மிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் யாருக்கு ஒட்டு என்கிற குழப்பம் குறிப்பாக முதன்முறை ஒட்டு போடப்போகிற இளைஞர்களுக்கு மட்டுமின்றி பரவலாக நிறைய பேருக்கு  இருக்கும் என்றே நினைக்கிறேன் . ஊடகங்களில் வெளிவரும் கருத்துக் கணிப்புகளும் தமிழக வாக்காளர்களிடையே உள்ள குழப்பத்தை ஊர்ஜிதம் செய்வது போலவே இருக்கின்றன ...

நகரம் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட அடுத்த பிரதமராக யார்  வர வேண்டும் என்கிற கேள்விக்கு நரேந்திர மோடி என்கிற பதிலையே பரவலாக காண முடிகிறது .  அதே சமயம் யாருக்கு ஒட்டு போடுவீர்கள் என்கிற கேள்விக்கு அ .தி.மு.க வே முன்னணி வகிக்கிறது . பொதுவாக தமிழக மக்கள்  மாநில கட்சிகளுக்கே வாக்களிக்க முன்னுரிமை தருவார்கள் என்பது வரலாறாக இருந்தாலும் கிட்டத்தட்ட எல்லா கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் பதவிக்கு மோடியை யே மக்கள் முன்னிறுத்துவது அவர்களின் எண்ண  ஓட்டத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது . அதே சமயம் அந்த தெளிவு ஒட்டு போடும் விஷயத்தில் சிலருக்கு இல்லை என்பதும் புலனாகிறது ...

ஒரு நாள் தெரிந்த நண்பருடன் பேசும் போது காங்கிரஸ் , தி.மு.க இரண்டையும் கடுமையாக சாடினார் . மத்தியில் மோடி தான் பிரதமராக  வேண்டும் என்று உறுதியாக சொன்னார் . ஆனால் அ.தி.மு.க வுக்கே எனது ஒட்டு என்றும்  குழப்பினார் . பா.ஜ .க வுக்கு ஒட்டு போட்டு அது வீணாகி தி.மு.க வந்து விடுமோ என்கிற பயமே  அ.தி.மு.க  பக்கம் சாய காரணம் என்று விளக்கமும் தந்தார் . நான் இதே போல அ.தி.மு.க வுக்கான ஒட்டு வீணாகி அதன் மூலம் தி.மு.க வந்து விட்டால் அப்போது என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்ட பிறகு அவரிடம் கொஞ்சம் தெளிவு பிறந்தது . இந்த உரையாடல் ஒரு சோறு பதம் . நிச்சயம் அவர் அ.தி.மு.க வின் அனுதாபியாக இருந்து அதற்கு தான் எனது ஒட்டு என்று சொல்லியிருந்தால் குழப்பமே இல்லை . ஆனால் மோடி பிரதமராக வருவதற்கு அ.தி.மு.க வுக்கு ஒட்டு என்பது நான் ஏற்கனவே முகநூலில் சொன்னது போல தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்றது ...

பா.ஜ.க போட்டியிடாத தொகுதிகளில் அ.தி.மு.க வுக்கு வாக்களியுங்கள் என்று சோ தனது துக்ளக் தலையங்கத்தில் எழுதியதும் கொஞ்சம் குழப்பத்தில் இருப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் உக்தி . அதே போல பா.ஜ.க - அ.தி.மு.க இரண்டிற்கும் ரகசிய உடன்பாடு இருப்பது போல ஒரு வதந்தி தி.மு.க , காங்கிரஸ் போன்றவற்றால் பரப்பப்பட்டு வருவதும் , தேர்தலுக்கு பின் நிச்சயம் அ.தி.மு.க - பா.ஜ.க சேர்ந்து விடும் என்பது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் . ஆனால் இது போன்ற ஹேஷ்யங்களின் அடிப்படையில் நிச்சயம் ஒட்டு  போட முடியாது . ஏற்கனவே 13 மாதங்களில் அ.தி.மு.க வால் வாஜ்பாய்  அரசு கவிழ்ந்ததையும் யாரும்  மறந்திருக்கவும்  முடியாது ...

இப்போது மற்றவர்களின் தூண்டுதலினாலோ என்னவோ முதலில் காவிரி பிரச்சனையை வைத்து முதல்வர் பா.ஜ.க வை சாட பிறகு மோடி அ.தி.மு.க வும் , தி.மு.க வும் தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு வழி செய்யாமல் மாறி மாறி பழி வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்று சாடினார் . ஜெ பா.ஜ .க வை திடீரென திட்டுவதற்கு சிறுபான்மையினர் ஒட்டு வங்கியோ , நிர்பந்தமோ மட்டும் காரணம் அல்ல . முதலில் நாற்பதும் நமதே என்கிற நினைப்பில் பா.ஜ க அணியை சாதாரணமாக எடுத்துக் கொண்டவருக்கு  நிறைய தொகுதிகளில் தி.மு.க வை விட பா.ஜ .க வே தனக்கு சவாலாக இருக்கும் என்கிற தகவல்கள்  வர ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட மாற்றமே இது.
என்ன நடந்தாலும் இந்த கட்சிக்கு தான் ஒட்டு போடுவேன் என்று சொல்லும் சொல்லும் தீவிர அனுதாபிகள் கூடுதலோ குறைவோ எல்லா  கட்சிகளுக்கும் உண்டு . ஆனால் அவர்கள் மட்டும் தேர்தல் முடிவுகளை தீர்மானித்து விட முடியாது .  சூழ்நிலைக்கேற்ப  தங்கள் முடிவுகளை எடுக்கும் நடுநிலையாளர்களும் அரசியல்  மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக இருக்கிறார்கள்...

ஒரு பக்கம் மோடி பிரதமராக வர அ.தி.மு.க வுக்கு ஒட்டு போடுங்கள் என்று அவர்கள் ரகசிய பிரச்சாரம் செய்வதாக செய்திகள் கசிய , இன்னொரு பக்கம் 15 வருடங்களாக மாறி மாறி  மத்தியில் நடைபெற்ற ஆட்சியில் அங்கம் வகித்து விட்டு 10 வருடங்களாக நடந்த அவலங்களுக்கும் தனக்கும்   சம்பந்தம் இல்லாதது போல பால் விலை  ஏறிப் போச்சு , பவர் கட் ஆகிப் போச்சு என்று பிரச்சாரங்களிலும் , விளம்பரங்களிலும் அ.தி.மு.க  வை மட்டும் குறை கூறி கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் தி.மு.க வினர் மக்களின் ஞாபக மறதியின் மேல் நம்பிக்கை வைத்து ஒட்டு கேட்க , மற்றொரு பக்கமோ கை கொடுக்க யாருமின்றி  திரும்ப திரும்ப மோடி மதவாதி என்று சொல்லிக்கொண்டே முஸ்லீம் மதத் தலைவர் புஹாரியிடம் ஆதரவை பெற்றுக் கொண்டு மக்களை முன்னேற்றுவதற்கு வகை செய்யாமல் போலி மதவாதத்தை மட்டுமே நம்பி காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும் இந்த தருணத்தில் மத்தியில் நிலையான , வலுவான அரசாங்கம் அமைவதற்கு மோடியின் தலைமையிலான பா.ஜ.க வை அரியணையில் ஏற்றுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் ...

இது இப்பொழுதிருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவேயொழிய நிரந்தரமான முடிவல்ல . ஒரு வேளை நாம் எதிர்பார்த்தது போல தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்படாத பட்சத்தில் அடுத்த தேர்தலில் அதனை ஜனநாயக ரீதியில் மாற்றுவதற்கான அதிகாரம் நம் கையில் இருக்கிறது . ஏனெனில் எப்பொழுதுமே மாற்றம் நம் கையில் ...

4 comments:

Ramani S said...

தங்கள் கருத்து மிகச் சரியானதாகத்தான் படுகிறது
மக்கள் என்ன நினைக்கிறார்கள் எனப் பார்ப்போம்
சரியோ தவறோ இப்படி ஒரு திட்டவட்டமான கருத்தை
முன்வைத்தது பாராட்டுக்குரியது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

karthik sekar said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...