14 April 2014

நான் சிகப்பு மனிதன் - NAAN SIGAPPU MANITHAN - அரிதாரம் ...


பாண்டிய நாடு ஹிட் டான மகிழ்ச்சியில்  அடுத்ததிலும் பழி வாங்கும் கதைக்கு ஓகே சொல்லி தனது ஃபேவரட் இயக்குனர் திருவின் இயக்கத்தில் தயாரித்து நடித்திருக்கிறார் விஷால் . படம் பாண்டியநாடு அளவிற்கு இல்லாவிட்டாலும் போரடிக்காமல் இருக்கிறது ...

ஹீரோ இந்திரனுக்கு உணர்ச்சிவசப்பட்டால் தூங்கி விடுகிற நார்கோலெப்சி  எனும் வியாதி .  தூங்கினாலும் அவரால் மற்றவர்கள் பேசுவதை  உணர முடியும் . இந்த வியாதியால் கண்ணெதிரிலேயே காதலி கற்பழிக்கப்பட்டும் கண்களில் கண்ணீரோடு தூங்கிக் கொண்டிருக்கிறார் விஷால் . பின்னர் முகம் தெரியாத அந்த நான்கு பேரையும் தன் நினைவுகளின் உதவி கொண்டு எப்படி பழி வாங்குகிறார் என்பதே கதை ...


புரட்சி தளபதி என்கிற டைட்டிலை விட்டதிலிருந்து உருப்படியான படங்களில் நடித்து விருகிறார் விஷால் . படம் பார்ப்பவர்களையும் தனது நடிப்பால் கேரக்டருடன் சேர்ந்து பயணப்பட வைக்கிறார் . ஒரே ஒரு சண்டைக்காட்சி  அதிலும் க்ளைமேக்ஸில் மட்டும் வருவது பொருத்தம் . விஷாலுடன் லிப்லாக் , குளியல் காட்சி என்று போல்டான கேரக்டரில் லக்ஷ்மி மேனன் .  பக்கத்து வீட்டுப் பெண் போலிருப்பவரை பென்ஸ் காரில் வரும் பெண்ணாக மாற்றுவதற்கு மேக்கப் மேன் மெனக்கட்டிருப்பது தெரிகிறது . விஷாலுடன் ஷகிலா படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ போவது , கல்யாணத்திற்கு  முன்னே கர்ப்பமாவது போன்றவற்றால் கற்பழிக்கப்படும் போது இந்த கேரக்டரின் மேல் ஏற்ப்படவேண்டிய பரிதாபம் மிஸ்ஸாகி விடுகிறது ...

சின்ன சின்ன ஒன் லைனரால் கிச்சு கிச்சு மூட்டுகிறார் ஜெகன் . சரண்யா , ஜெயப்ரகாஷ் இருவரும் இயல்பான நடிப்பால் கவர்கிறார்கள் . சுந்தர் ராமு வின் நடிப்பு பசிக்கு படம் நல்ல தீனி . இனியா இடைவேளைக்கு பின் வந்தாலும் அழுத்தமாக மனதில் பதிகிறார் . ஜி.வி யின் இசையில் லவ்லி லேடீஸ் , பெண்ணே பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன . பின்னணி இசை வசனங்களை மீறி வருவதை தவிர்த்திருக்கலாம் ...


விஷாலின் குறைபாட்டை தெளிவாக  புரிய வைத்து அதனையொட்டி பின்னப்பட்ட முதல் பாதி திரைக்கதை சில இடங்களில் நம்மை தூங்க வைத்தாலும் வேகமாகவே போகிறது . கதைப் பின்னணி கஜினி போல இருந்தாலும் காதல் காட்சிகள் முன்னதைப் போல நம்மை கவராமல் போவது குறை . இடைவேளைக்குப் பின் கதை நம்மை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றாலும் இனியா - சுந்தர் ராமு சம்பந்தப்பட்ட காட்சிகள் தையிரியமாக படமாக்கப்பட்டதற்கு பாராட்டுக்கள் ...

திரு தனது முந்தைய  படங்களை போலவே இந்த  படத்திலும் ஒரு மெகா கமர்சியல் வெற்றியை நழுவ விட்டிருக்கிறார் . உணர்ச்சிவசப்பட்டால் தூங்கி விடும் ஹீரோ தேவைப்படும் சில  இடங்களில் தூங்காமலிருக்கும் லாஜிக் சொதப்பல் , வழக்கமான பழி வாங்கும் கதை போன்ற குறைகள் இருந்தாலும் நார்கோலெப்சி  என்னும் புது அரிதாரத்தைப் பூசி நாம் சிகப்பு மனிதனை கவனிக்க வைத்திருக்கிறார்கள் ...

ஸ்கோர் கார்ட் : 41


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...