Showing posts with label SUPER STAR. Show all posts
Showing posts with label SUPER STAR. Show all posts

23 July 2016

கபாலி - KABALI - Not A Complete Man ...


டிசம்பர் வெள்ளத்துக்கு பிறகு தமிழகத்தை மட்டுமல்ல  , உலகத்தையே உலுக்கியிருக்கிறது இந்த கபாலி சுனாமி . சூப்பர் ஸ்டார் னாலே சும்மா அதிரும் , அதோட பணத்த தெறிக்க விடுற தயாரிப்பாளர் தாணு கெடைச்சா கேக்கவா வேணும் ? . ஆனா இது ரெண்டையும் தாண்டி படத்த பார்க்கத் தூண்டிய முக்கிய நபர் இயக்குனர்  ரஞ்சித் . மூணாவது படத்துலயே சூப்பர் ஸ்டார இயக்கற வாய்ப்பு கெடைச்சாலும் அதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்காம தன் பாணியிலேயே படம் எடுக்கிறார் என்பதும் , தனது வழக்கத்திலிருந்து மாறி சூப்பர் ஸ்டார் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடிப்பதுமான அந்த மாஸ் ப்ளஸ் க்ளாஸ் கூட்டணி டிக்கெட் விலை என்ற பெயரில் நடந்த பகல் கொள்ளையையும் தாண்டி நிச்சயம் வெற்றி பெறுமென்ற நம்பிக்கை எனக்கு இருந்தது . ஆனா கபாலி A Costly Mistake  
( அவுங்களுக்கில்லை நமக்கு ) என்று பொட்டில் அடித்தது போல சொல்லாமல் லேசாக தடுப்பது சூப்பர் ஸ்டார் மட்டுமே ...

மலேசிய சிறையிலிருந்து 25 வருடங்கள் கழித்து வெளியே வரும் கபாலீஸ்வரன் ( ரஜினிகாந்த் ) தன் பழைய பகையை தீர்ப்பதும் , பிரிந்த மனைவியை தேடி கண்டுபிடிப்பதுமே கபாலி . ஒரு பக்கா ரிவென்ஜ் ஆக்ஸன் படமாக இருந்திருக்க வேண்டியது தடம் மாறி ஸ்லோ மோஷன் பிட்சர் ஆகிவிட்டது . சுருக்கமா சொல்லனும்னா சதாப்தில எக்ஸ்டரா ரூவா ல தட்கல் டிக்கட் எடுத்து அவசரம் அவசரமா போகணும்னு ஏறி உக்காந்தா ட்ரெயின் பேசஞ்சர் வேகத்துல போனா எப்புடி இருக்குமோ அதே கதி நிறைய இடங்களில் ...

சூப்பர் ஸ்டாரை ஒரு சூப்பர் ஆக்டராக நீண்ட வருடங்கள் கழித்து அடையாளம் காட்டியிருக்கும் படம் .   மனுஷன் நடிப்புல சும்மா பின்னி பெடலெடுத்திருக்கார் . மனைவியை தேடி அலைவதிலாகட்டும் , ரித்விகா அப்பா என கூப்பிட்டவுடன் காட்டும் ரியாக்ஸனிலாகட்டும் , உண்மை மகளை கண்டவுடன் உருகுவதிலாகட்டும் என படம் முழுவதும் அவரது பன்ச் , ஸ்டைல் இதையெல்லாம் தாண்டி நம்மை கட்டிப்போடுகிறது அவரது நடிப்பு . ஆனால் கதைக்களம் ஒரு சூப்பர் ஹீரோ கையில் சோன்  பப்புடியை கொடுத்தது போலாகிவிட்டது . ரஜினியை தவிர நம்மை ரசிக்க வைத்த மற்றொரு நபர் ராதிகா ஆப்டே . அம்பிகா , மீனா வுக்கு பிறகு ரஜினிக்கு நல்ல ஆப்டான நடிகை . அவர் கண்கள் காட்டும் எஸ்ப்ரஷன் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் . கிஷோர் நன்றாக நடித்திரிந்தும் ரஜினிக்கு முன் பெரிதாக எடுபடவில்லை . அதிலும் மெயின் வில்லனாக வரும் டோனி லீ ஜெட் லீ போல  இருப்பார் என்று பார்த்தால் சரியான பிம்பிலி ...


ரஞ்சித் தனது சகாக்களுக்கெல்லாம் இந்த படத்திலும் வாய்ப்பளித்திருப்பது சந்தோசம்  . ஆனால் தினேஷ் தவிர மற்றவர்கள் எல்லாம் வெறும் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவியிருக்கிறார்கள் . தினேஷை வில்லன் கோஷ்டி காலி பண்ணும் காட்சி கபாலியில் ஹைலைட் .  மற்றபடி படத்தில் எல்லோரும் பேசுகிறார்கள் , பேசுகிறார்கள் , பேசிக்கொண்டே இருக்கிறார்கள் . தாவி தாவி சண்டை போடும் தன்ஷிகா நல்ல தேர்வு . ஓப்பெனிங் பிஜிஎம் இல் நிமிர்ந்து உட்கார வைக்கும் சந்தோஷ் நாராயணன் நடுவில் தூங்கி விட்டார் போல . நெருப்புடா சவுண்ட் வரும் போது தான்  நாம் எந்திரிக்க முடிகிறது . சீரியஸான சண்டைக்காட்சிகளில் இவரது ஸ்லோ மியூசிக் சவ சவ . முரளியின் ஒளிப்பதிவு டாப் ஆங்கிள் ஷாட்களில் மலேசியாவை மனதில் பதிய வைக்கிறது ...

படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள் நம்மை கட்டிப் போடுகின்றன . சிம்பிளான ஆனால் பவர்ஃபுல்  ஹீரோயிசம் ஆஸம் . அடுத்தது ஸ்லோவாக இருந்தாலும் ரஜினியின் பழைய வாழ்க்கையை பற்றி டீட்டையிலிங்காக படம் போகிறது . ஆனால் போய்க்கொண்டேயிருக்கிறது . ஒரு கட்டத்தில் இந்த தியேட்டர்ல பப்ஸ் நல்லா இருக்கும்ல என்று பக்கத்து சீட்காரர் கேட்கும் அளவுக்கு போனது தான் கொடுமை . கோட் சூட் போட்டதற்குள் இருக்கும் அரசியலை ரஜினி பேசுவது திணிக்கப்பட்டது போலிருந்தாலும் வில்லனுக்கு முன் கெத்தாக அமர்ந்தபடி " ஏன் நான் கோட் சூட் போடக்கூடாதா ? கால் மேல கால் போட்டு உக்காரக்கூடாதா ? என்று கேட்கும் இடம் கைத்தட்டல் வாங்கும் சில இடங்களில் முக்கியமான ஒன்று . அதேபோல வில்லன் வீட்டு பார்ட்டியில் இருந்தபடியே அவன் சாம்ராஜ்யத்தை காலி பண்ணுவது கபாலி டா ...

படத்தின் முதல் பத்து நிமிடங்கள் , இண்டெர்வெல் பிளாக் , க்ளைமேக்ஸ் என எல்லாமே மகிழ்ச்சி . ரஜினியின் ஃப்ளாஷ்பேக் அவரது விக்கை போலவே கவராமல் கடந்து போகிறது . ரஜினியை இந்த மாதிரி ஒரு பாத்திரத்தில் நடிக்க வைத்த ரஞ்சித்தின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் . ஆனால் டானாக இல்லாமல் ஒரு மாறுபட்ட கதாபாத்திரமாக    ( பாபநாசம் போன்ற கதையம்சம் கொண்ட படத்தை உதாரணமாக சொல்லலாம் ) இருந்திருந்தாலோ, திரைக்கதை க்ரிப்பாக இருந்திருந்தாலோ நிச்சயம் எழுந்து நின்று சல்யூட் அடித்திருக்கலாம் . ஆனால் தனது சொந்த சித்தாந்தங்களை  திணிப்பதற்கு ரஜினியை ஒரு மீடியமாக பயன்படுத்தியது போலவே படுகிறது ...


சூப்பர் ஸ்டாரை  வைத்து நாயகன் போல ஒரு படத்தை ரஞ்சித் எடுக்க நினைத்ததில் தப்பில்லை , ஆனால் அதை ரஜினி படம் போல எடுக்காமல் கமல் படம் போல எடுத்ததில் தான் பிரச்சனை . தன்  எண்ணத்தில் உள்ளதை அப்படியே படமாக்கும் விதத்தில் சறுக்கியிருக்கிறார் . மெட்ராஸ் படத்திலிருந்த ஒரு வாழ்வியல் இதில் டோட்டலி மிஸ்ஸிங் . அடித்தட்டில் இருக்கும் மக்களை மேம்படுத்தும் மெஸ்ஸையாவாக ரஜினி நடித்திருக்கும் படத்தை அந்த மக்களே குடும்பத்துடன் பார்க்க முடியாதபடிக்கு கார்பரேட்களுக்கு டிக்கெட்டுகளை தாரை வார்த்திருக்கும் தயாரிப்பாளரை என்ன சொல்ல ?. கபாலி - கடுப்புடா என்று நெட்களில் வரும் விமர்சனத்தை போல படத்தை நிச்சயம் அப்படி ஒதுக்கி தள்ளி விட முடியாதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டார் , ஒரு புதியவருக்கு அவர் கொடுத்திருக்கும் வாய்ப்பு மற்றும் மாறுபட்ட நடிப்பில் சூப்பர் ஸ்டாரை நமக்கு காட்டிய விதம் ...

ரஜினிக்காக கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் சேர்க்காமல் ரியலிசமாக எடுக்க முற்பட்டிருக்கும் படத்தில் அவர் ஒரு சின்ன கன்னை வைத்துக்கொண்டு எதிரிகளை சுடுவதும் , கிட்டத்தட்ட ஐந்து குண்டுகள் பாய்ந்து சரிந்தவர் ஏதோ பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டேன் என்பது போல ப்ளாஸ்டரோடு  வருவதும் என்ன சாரே நியாயம் ? .  அளவுக்கதிகமான மார்கெட்டிங் நிச்சயம் படத்தின் வியாபாரத்திற்கு உதவியிருக்கலாம் , ஆனால் இது பக்கா ரஜினி ரசிகனுக்கான படமில்லை நாங்கள் வித்தியாசமா ட்ரை  பண்ணியிருக்கோம் அப்படின்னு ஒரு சின்ன கண்டிஷன்  அப்ளை ஆஸ்ட்ரிச் ஆவது போட்டிருக்கலாம் . மொத்தத்தில் கோட் , சூட் , கூலர்ஸ் என்று ஸ்டைலாக இருந்தாலும் ரஜினி ரசிகர்களை எண்டெர்டைன் பண்ணும் பக்கா மாஸாகவும் இல்லாமல் , ஒரு புது முயற்சியை எழுந்து நின்று பாராட்டும் க்ளாஸாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட புள்ளியில் நிற்கும் கபாலி - Not A Complete Man ...


ரேட்டிங் : 2.75 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 42



12 December 2012

12.12.12 ...



மிழ் சினிமாவில் சிவாஜிக்கு பின் நடிப்பில் ஏற்பட்ட வெற்றிடத்தை கமல் நிரப்ப , எம்.ஜி.ஆருக்கு பின் வசூலில் ஏற்பட்ட வெற்றிடத்தை இன்று வரை நிரப்பிக்கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . எனக்கு தெரிந்து ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்த பிறகு  விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே  வியாபார ரீதியாக தோல்வியை சந்தித்திருக்கும் . அதோடு நஷ்டமடைந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கமல் எடுத்து வரும்  பரீட்சார்த்த முயற்சிகளை சமன் செய்யும் விதமாக ரஜினியின் கமர்சியல் படங்கள் அமைந்து வந்திருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது .
வேறு எந்த ஒரு நடிகருக்கும் இவருக்கு வாய்த்தது போல உணர்ச்சிப்பூர்வமான ரசிகர் பட்டாளம் வாய்த்தது இல்லை . 12.12.12 அன்று  பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு எல்லோர் சார்பாகவும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்வதோடு எனக்கு பிடித்த சூப்பர் ஸ்டாரின் 12 படங்களையும் இதோ வரிசைப்படுத்தியுள்ளேன் . உங்களுக்கு பிடித்த 12 படங்கள் என்னென்ன ?

மூன்று முடிச்சு 

கமல் , ரஜினி இருவர் நடிப்பில் அவர்களின் குரு கே.பாலச்சந்தர் இயக்கிய படம் . காதலுக்காக நண்பனையே கொலை செய்யும் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார் ரஜினி . ஆற்றில் விழுந்து கமல் இறந்த பிறகு ரஜினி பார்க்கும் குரூர பார்வை இன்றும் நம் கண்களில் நிற்கும் . சிகரெட்டை தூக்கி போட்டு பிடிக்கும் ஸ்டைல் , நடை இவற்றோடு தன் சிற்றன்னையாக ஸ்ரீதேவியே வந்த பிறகு நன்றாக நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி...

16 வயதினிலே 

தமிழ் சினிமாவின் சிறந்த பத்து படங்களில் நிச்சயம் இடம்பிடிக்கும் படம் பாரதிராஜாவின் " 16 வயதினிலே " . சப்பாணியாக கமல் , மயிலாக ஸ்ரீதேவி இருவரின் நடிப்பும் எப்படி நம் மனதில்  பதிந்ததோ அதே போல " இது எப்படி இருக்கு " என்று வசனம் பேசும் பரட்டையாக ரஜினியின் நடிப்பும் மனதில் என்றென்றும் பதிந்திருக்கும் ...

ஆறிலிருந்து அறுபது வரை 

ரஜினியை வைத்து 25 படங்கள் இயக்கிய பெருமை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அவர்களுக்கு மட்டுமே உண்டு . ரஜினியை வைத்து அவர் முரட்டுக்காளை , பாயும்புலி என்று எத்தனையோ கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் ஒரு பாசமிகு அண்ணனாக நடிப்பில் ரஜினியின் மற்றொரு பரிமாணத்தை காட்டும் படம் ...

முள்ளும் மலரும் 

விசுவலாக கதை சொல்வதில் முன்னோடி மகேந்திரன் . அவர் இயக்கத்தில் வழக்கமான கோபக்கார இளைஞன் வேடமென்றாலும் தன் யதார்த்தமான நடிப்பால் அதற்கு தனி முத்திரையை கொடுத்திருப்பார் ரஜினி . தங்கை ஷோபாவிற்காக சரத்பாபுவிடம் பேசும் இடம் சூப்பர் ஸ்டார்  நடிப்பில் ஒரு மைல்கல் ...

பில்லா 

ரஜினி நடித்த அமிதாப்பின் பல ரீ மேக் படங்களில் எத்தனையோ  வருடங்கள் கழித்து மீண்டும் வேறொரு நடிகரை வைத்து ரீ மேக் செய்த போதும்  மெகா ஹிட்டடித்த படம் பில்லா . மிரட்டும் டான் , மிரளும் அப்பாவி என்று இரண்டு வேடங்களிலும் புகுந்து விளையாடிருப்பார் சூப்பர் ஸ்டார் .

நெற்றிக்கண் 

காமுக அப்பா , ஒழுக்கமான பையன் என்று இரண்டு வேடங்களில் ரஜினி கலக்கிய படம் . " இது கட்டில் , நீ பொண்ணு , நான் பையன் " என்று வசனம் பேசிய படியே குறும்புப்பார்வை பார்க்கும் கிழட்டு ரஜினியின் நினைவுகள் இன்றும் இளமையாக நெஞ்சில் நிற்கின்றன ...

தில்லு முல்லு 

ஆக்சன் ஹீரோவாக மட்டும் வளம் வந்து கொண்டிருந்த ரஜினியை முழு நீள காமெடியில் கலக்க வைத்திருப்பார் கே.பாலச்சந்தர் . சந்திரன் , இந்திரன் என்று மாறி மாறி ரஜினி தேங்காய் ஸ்ரீனிவாசனை ஏமாற்றும் சீன்கள் உம்மனாமூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும் . எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ரஜினி படம் . இப்பொழுது மிர்ச்சி சிவாவை வைத்து இப்படத்தை ரீ மேக் செய்து கொண்டிருக்கிறார்கள் , படம் பெயரை கெடுக்காமல் இருக்கிறதா என்று பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும் ...

ஜானி 

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த மற்றுமொரு மனதில் நிற்கும் படம் ஜானி . முடி திருத்துபவர் , திருடன் என்று இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நிறைய வித்தியாசம் காட்டியிருப்பார் ரஜினி . ரஜினி - ஸ்ரீதேவி காதல் காட்சிகள் இன்றும் இனிப்பவை . இசைஞானியின் இசை படத்திற்கு பெரிய பலம் ...

தளபதி 

வழக்கமான ஸ்டைல்கள் எதுவும் இல்லாவிட்டாலும் ரஜினியை ரசிக்க வைத்திருப்பார் மணிரத்னம் . படம் முழுவதும் ரஜினியின் நடிப்பு , மம்முட்டியுடனான காம்பினேஷன் , " சுந்தரி " பாடலில் ரஜினியின் கெட்டப் என்று எல்லாமே படத்தின் ஹைலெட் . இசை , ஒளிப்பதிவு இவற்றிற்க்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய படம்...

அண்ணாமலை 

ரஜினி நண்பனுக்கு நண்பன் , எதிரிக்கு எதிரி என்பதை அனைவருக்கும் உணர்த்திய படம் . படத்தில் தீய அரசியவாதிக்கு எதிராக ரஜினி குரல் கொடுக்க நிஜத்திலும் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வர வேண்டுமென்று ரசிகர்களை ஏங்க வைத்த , வைத்துக்கொண்டிருக்கின்ற படம் ...

பாட்ஷா 

சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலுக்கு மிக கச்சிதமாக பொருந்தும்  படம் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளி வந்த பாட்ஷா . கமல் ரசிகனான  என்னை ரஜினியின் பக்கம் அதிகமாக ஈர்த்த படம் . " பாட்ஷா , பாட்ஷா " என்று பின்னணியில்  அதிர சூப்பர் ஸ்டார் நடந்து வரும் அழகுக்காகவே படத்தை பல தடவை பார்க்கலாம் ...

சிவாஜி 

ஷங்கரின் வழக்கமான சமூக சீர்திருத்த பாணி படம் தானென்றாலும் விறு விறு திரைக்கதையால் நம்மை கட்டிப்போடும் படம் . குறிப்பாக சில சீன்களே வந்தாலும் மொட்டை தலையுடன் வளம் வரும் ரஜினி சும்மா அரங்கத்தையே அதிரவிட்டிருப்பார் . ரஹ்மான் இசையில்  பாடல்கள் , விவேக் காமெடி , கிராபிக்ஸ் இவையெல்லாம் படத்தின் ஹைலைட் ... இன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு 3 டி யில் வந்து அனைவரையும் மீண்டும் குஷிப்படுத்த போகிறது சிவாஜி ...










Related Posts Plugin for WordPress, Blogger...