12 February 2017

சிங்கம் 3 - SI3 - சர்க்கஸ் ...


ரு வழியாக பதுங்கி பதுங்கி கடைசியில் வந்தே விட்டது சிங்கம் 3 . முதல் இரண்டு பாகங்களில் இருந்த கர்ஜனை குறைந்து சத்தம் அதிகமாக கேட்டாலும் ஹரி - சூர்யா காம்பினேஷனில் வேறெதையும் புதிதாக எதிர்பார்க்க முடியாதென்பதால் ஏமாற்றமில்லை . சூர்யா  வின் தெலுங்கு மார்க்கெட்டை கணக்கில் கொண்டு ஆந்திராவில் கதைக்களனை அமைத்திருக்கிறார்கள் ...

ஆந்திர  உள்துறை அமைச்சரின் வேண்டுகோளிற்கிணங்க  அங்கே சென்று கமிஷனர் கொலை  வழக்கை கையிலெடுக்கிறார் துரைசிங்கம் ( சூர்யா )  . அதன் பின்னணியில் இருக்கும் சதியை ஆஸ்திரேலியா வரை சென்று முறியடிக்கிறார் . என்ன நமக்கு  தான் காதுல ங்கொய்னு கேட்டுக்கிட்டே இருக்கு ...

சூர்யா ஏழு வருடமாகியும் உடலையும் குரலையும்  அப்படியே கிண்ணென்று வைத்திருக்கிறார் . இந்த உயரத்துக்கு தமிழ்நாடு போலீஷே அதிகம்  இதுல இன்டர்நேஷனலா என்று நெருடினாலும் தனது உடல்மொழியால் அதை சமன் செய்கிறார் . முதல் பாகத்தில் லவ்வராக இருந்தவர் படிப்படியாக முன்னேறி இப்போது சிங்கத்துக்கு ஆன்டியாகியிருக்கிறார்  அனுஷ்கா . ரெஸ்ட் ரூம் என்றால் என்னவென்று தெரியாதவரை  எல்லாம் எப்படி போலீசில் சேர்த்தார்கள்  ? சூரி யை வைத்து சிரிக்க வைக்கிறேன்  பேர்வழி  என்று முகம் சுழிக்க வைக்கிறார்கள் ...


ஸ்ருதி க்கு சூர்யாவை சைட் அடிப்பது தவிர பெரிய  வேலையில்லை . இவரை சாகடிக்காதது  ஆறுதல் என்றாலும் சூரியோடு சேர்ந்து காமெடி செய்ய வைத்து நம்மை சாவடிக்கிறார்கள் . நான் தமிழன்டா  என்று கூவும் ஹீரோக்கள் படத்திலேயே ஹிந்தி வில்லன்கள் தான் இருப்பார்கள் . நான் இந்தியன் என்று கர்ஜிக்கும் சூர்யா படத்தில் வேறு யார் இருக்கப்போகிறார்கள் ?! . அதிலும் சூர்யா விடம் அடி வாங்கி சாவதற்கு அவ்வளவு பெரிய எக்சர்ஸைஸ் எதற்கு ?. ராதிகா கொஞ்ச நேரம் வந்தாலும் நடிப்பால் சிலிர்க்க வைக்கிறார் ...

தேவி ஸ்ரீ பிரசாத் ஒரே மாதிரி உருட்டினாலும் பாட்டில் தாளம் போடவாவது வைப்பார் . இதில் ஹேரிஸ் ஜெயராஜ் சாரி ஜெயராஜ் . ப்ரியனின் ஒளிப்பதிவு பெர்ஃ பெக்ட் . விஜயனின் எடிட்டிங்கில் கட்டிங் ஓட்டிங் சிங்கத்தின் வேகத்தை கூட்டுகின்றன . தமிழ்த்திமிரு பேசாமல் ஒரு கட்டம் மேல போய் இந்திய இறுமாப்பை காட்டும் ஹரி யின் வசனங்கள் விறுவிறு ...

ஹரியின் டெம்ப்லேட் படம் . என்ன ஏதென்று யோசிப்பதற்குள் ரோலர் கோஸ்டரில் உட்கார்ந்து போல படம் கடகடவென ஓடி  இடைவேளை வந்து விடுகிறது . திரும்பவும் பாப்கார்ன் சாப்பிட்டு முடிப்பதற்குள் சூர்யா பக்க பக்க மாய் டயலாக் பேசி முடித்து விடுகிறார் . முடிவில் என்ன நடக்குமென்பது கண்ணை மூடிக்கொண்டாலும் தெரியுமென்பதால் நாம் சாவகாசமாக சாப்பிட முடிகிறது . காமெடி , காதல் இவை சொதப்பினாலும் அதிரடி ஆக்சன்களால் படத்தை  நிறுத்துகிறார் ஹரி . முதல் இரண்டு பாகங்களை விட படம் குறைவு தான் என்றாலும் பரபரவென்று கத்திக்கொண்டே பறந்து பறந்து ஏதாவது சாகசம் செய்து கொண்டேயிருக்கிறது இந்த சர்க்கஸ் சிங்கம் ...

ஸ்கோர் கார்ட் : 41 

ரேட்டிங்   : 2.75 * / 5 * 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...