1 May 2011

"அசல்" நாயகன் அஜித்

                                                  
      "அமராவதி"யில் அறிமுகம் ஆகி "ஆசை"க்கு பிறகு இளம் பெண்கள் மனதில் ஆசை நாயகனாக உருமாறி "காதல் கோட்டை"யில் தன்
வெற்றிக் கொடியை  நட்டு ,"வாலி"க்கு பிறகு தனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகை அமர்களப்படுதியவர் அஜித்...
இவரின் "மங்காத்தா" ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலாய் 
காத்துக் கொண்டிருக்கிறார்கள்... ....                                                            
          " உழைப்பாளர் தின" மன்று தன் பிறந்த நாள் காணும் அஜித் சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர் ..அஜித் திரை உலகிற்கு வந்து 20 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் அவரின் 50 வது படமான "மங்காத்தா" இந்த வருடம் வெளிவருவது மற்றொரு சிறப்பம்சம்....
              சிவாஜி,கமல்,விக்ரம் என மிக சிறந்த நடிகர்கள் வரிசையில் அஜித்
இல்லையென்றாலும் எல்லா தரப்பிலும் இவருக்குள்ள ரசிகர்களால் இவர்
படங்களுக்கு கிடைக்கும் முதல் வாரத்திற்கான வசூலையும்,வரவேற்பையும் யாரும் மறுக்க முடியாது .....அதனால் தான்
தோல்வி படங்கள் அதிகம் கொடுத்திருந்தும் வர்த்தக ரீதியாக இவர்
படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள் ....
          அஜித்தின் கடந்த பதினெட்டு   வருட கால வளர்ச்சியை உற்று நோக்கினால் அதில் நிறைய ஏற்ற தாழ்வுகள் இருப்பதை காணலாம்...
முதல் படமே  தோல்விப் படம்...மூன்றாவது படமான "ஆசை" பெரிய வெற்றியை பெற்ற போதும் அதை தொடர்ந்து ஒரே வருடத்தில் "உல்லாசம் ","ராசி" உட்பட ஐந்து தோல்வி படங்கள் ...வேறு யாராவதாக
இருந்திருந்தால் தொடர்ந்து இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்திருப்பார்களா என்பது சந்தேகமே.....
                                          
            ஆரம்ப காலங்களில் அஜித் பத்திரிக்கையாளர்களிடம் அதிகமாக கோபப்படுகிறார்  என்ற சர்ச்சையும் இருந்தது...இவர் எடுத்த சில முடிவுகளும் தவறாகவே இருந்தன..திரை உலகில் இவரை வழி  நடத்த  "காட் பாதர் " யாரும் இல்லாததும் காரணமாக இருக்கலாம்...
          ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிம்பு,ஜெய் போன்ற சம கால
நடிகர்களே இவரை "காட் பாதர் " என்று சொல்வது தமிழ் சினிமா வரலாற்றில் அஜித்தின் வெற்றியை குறிக்கும் வார்த்தைகள்...
           சிவாஜி, ரஜினி,கமல் வரிசையில் அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நடித்த பெருமையும் அஜித்திற்கு உண்டு...அதில் "வாலி","வரலாறு","வில்லன்" ,"பில்லா" உட்பட பெரும்பாலான படங்கள் வெற்றிபடங்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.....
             விஜயகாந்தை போல இவரும் நிறைய புது முக இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறார் .... அதில் சரண்,எஸ்.ஜே.சூர்யா,துரை போன்றவர்கள் 
குறிப்பிடத்தக்கவர்கள் ..ஆனால் அஜித் கே.எஸ். ரவிக்குமார்,லிங்கு சாமி  தவிர பெரிய 
இயக்குனர்கள் யார் படத்திலும் நடிக்காதது ஒரு குறை ...
           ஏனெனில் பாலா,அமீர்,கெளதம் மேனன் போன்ற நல்ல இயக்குனர்கள் படங்களில் நடித்திருந்தால் தன் நடிப்பு திறமையை மேலும் வளர்த்து கொள்வதற்கு 
பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும் ..மேலும் புது இயக்குனர்கள் பெரும்பாலும் 
"இமேஜ்" வட்டத்தை தாண்டி யோசிக்காததாலும் , அஜித்தும் வட்டத்தை தாண்டி வெளியே வராததாலும் நிறைய தோல்வி படங்களே மிஞ்சின ...
"ரெட்","ஜனா" போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்...
             தோல்விகளுக்கு பிறகு அஜித் "முகவரி","ஜி","கிரீடம்"  போன்ற படங்களில் "இமேஜ்' வட்டத்தை தாண்டி நடித்திருந்தது வரவேற்ப்பை பெற்றது....
             விஜய் ,சூர்யா போன்ற நடிகர்களை போல அஜித்தால் நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் பிரகாசிக்க முடிவதில்லை..அவர் உடல் எடையை கவனிக்காததும் காரணமாக இருக்கலாம்...எது எப்படியோ
அவர் தான் எங்க "தல" என்கிறார்கள் ரசிகர்கள்...

                                                              
          தனக்கு சரியென பட்டதை சொல்லும்,செய்யும் தைரியம் அஜித்திற்கு உண்டு...விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் ,எந்த ஒரு சினிமா சம்பத்தப்பட்ட விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டேன், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன்
(பிற்காலத்தில் இதை தளர்த்தி கொண்டார் )   என்று அவர் சொன்ன 
வார்த்தைகளில் முடிந்த அளவு எந்த ஒரு சமாதானமும் செய்து கொள்ளாதது அவர் தனித்துவம் ...
           முதல்வர் உட்பட அனைவரும் அமர்ந்திருந்த  மேடையில் தன்னை 
வலுக்கட்டாயமாக வர சொன்னார்கள் என்று  அஜித் தைரியமாக சொன்னதும்,
அதற்கு ரஜினி எழுந்து நின்று கை தட்டியதும் யாவரும் அறிந்த உண்மை...
           அரசியல் லாபங்களுக்காக தன் ரசிகர் மன்றங்கள் உபயோகப்படுத்தப்படுவதை 
உணர்ந்த அஜித் ரசிகர் மன்றங்களையே கலைக்க சொன்னதும் அவரின் 
தைரியத்திற்கு மற்றுமொரு சான்று...
            புகழின் உச்சியில் இருந்த போதே சினிமா தவிர ரேசிங் போன்ற தனக்கு 
பிடித்த விசயங்களில் கலந்து கொள்ளும் துணிவும் இவருக்கு இருந்தது....
             நடிப்பு திறமையால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும்
தன் முயற்சி,உழைப்பு,துணிவு மற்றும் போலித்தனமில்லாத இயல்பு இவற்றின் மூலம் "அசல்" நாயகனாகவே
நம் கண் முன் தெரிகிறார்  அஜித் ....
    
   

28 April 2011

கோ - விமர்சனம்

                                                                         கோ - 
       அரசன்  ஆவதற்கு  ஒருவன் அரசியலில் செய்யும் சதிகளை மையமாக கொண்டு பின்னப்பட்டதே இப்படம் .
            ..                               
           படத்தை  ...காதல்,ஆக்ஸன்,நட்பு,சோகம்,
துரோகம் என எல்லா மசாலாவையும் தூவி  தனிப்பட்ட பாணியில் கின்டி இருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்....
        "தின அஞ்சல்" பத்திரிக்கையில் புகைப்பட கலைஞராக வேலை செய்கிறார் ஜீவா...வங்கியில் 
கொள்ளையடித்து விட்டு வேனில் தப்பித்து ஓடுபவர்களை விரட்டி விரட்டி அவர்
 போட்டோ எடுக்கும் அறிமுக காட்சியே நல்ல விறுவிறுப்பு...பியா மற்றும் கார்த்திகா (ராதாவின் மகள் இதில் அறிமுகம் ) இருவரும் ஜீவாவுடன் வேலை செய்கிறார்கள்..பியா ஜீவாவை சுற்றி சுற்றி வருவதை தவிர வேறு எதுவும் வேலை செய்ததாக தெரியவில்லை ....
                                 
             தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது , நடிகையை வைத்து பிரச்சாரம் செய்வது , ஆளுங்கட்சி எதிர்க்கட்சி போட்டி விவாதங்கள் என்று நடப்பு தேர்தல் களத்தை கண் முன் நிறுத்துகிறார்கள் ....தேர்தலுக்கு முன் வந்திருந்தால் நல்ல பொருத்தமாக 
இருந்திருக்கும் ...அதற்காகவே படத்தை வாங்கி தேர்தலுக்கு பின் வெளியிட்டது 
போல தெரிகிறது .....
              ஆளுங்கட்சி முதல் அமைச்சராக பிரகாஷ்ராஜ் , எதிர்க்கட்சி தலைவராக   கோட்டா சீனிவாசராவ்  , இவர்களுக்கு நடுவில் மாற்றத்தை கொண்டு 
வர வேண்டும் என்ற லட்சியத்தில் தேர்தலில் நிற்கும் "சிறகுகள்" அமைப்பின் 
தலைவன்,படித்த இளைஞன்  வசந்தனாக "அஜ்மல்"....அனைவரும் படத்தில் 
எளிதாக பொருந்துகிறார்கள் ..
            ஜன நெரிசலில் வண்டியை விட்டு இறங்கி நடக்கும் போதும் , தப்பாக கேள்வி
கேட்கும் நிருபரை செருப்பால் அடிக்கும் இடத்திலும் தெரிவது பிரகாஷ்ராஜ் "டச்" ..ஆனால் அதையே ஜீவா "தின அஞ்சல்" பத்திரிக்கையில் போட்டு கிழிப்பது இயக்குனர் "டச்"...
         "கோட்டா" பதிமூணு வயசு சிறுமியை  ரகசியமாக திருமணம் செய்வதை ஜீவா தெரியாமல் படம் பிடிப்பதும் அது சம்பத்தப்பட்ட காட்சிகளும் அற்புதம் ...ஆனால் "தின அஞ்சல்" மட்டுமே பத்திரிக்கை போலவும் ,இவர் ஒருவர் மட்டும் தான் எல்லா வேலையும் செய்வதாக காட்டுவதும் திரும்ப
திரும்ப ஒரே காட்சிகளே வருவது போல சலிப்பை ஏற்படுத்துகின்றன ....
       ஜீவா தான் துப்பறிகிறார் என்றால் கார்த்திகாவும் அவர் பங்கிற்கு ஒரு
பழைய போட்டோவை வைத்து கொண்டு ஜீவா , அஜ்மல் இருவரும் பழைய கல்லூரி நண்பர்கள் என்று கண்டுபிடிக்கிறார் .. , அதற்காக ஒரு பிளாஷ்பேக் பாடல் வேறு ....இழுவையை தவிர்த்திருக்கலாம்..
                         
       "ராம்" , "ஈ" வரிசையில் ஜீவாவின்  நடிப்பிற்கு பெரிய தீனி "கோ" படத்தில் இல்லையென்றாலும் தன் பங்கை ஜீவா இயல்பாக செய்திருக்கிறார்.."பியா" இறந்த பின் உருகும் இடம் உதாரணம் .."கார்த்திகா"விற்கு  நல்ல உயரம் ,அழகான கண்கள் ..ஆனால் அவரை போலவே அவர் புருவத்தையும் உயரமாக வரைந்தது ஏனோ உறுத்துகிறது ..."பியா" குறுகுறுப்பான நடிப்பில் மனதை
கொள்ளை அடிக்கிறார்...ஒரு சிறுவன் இவரை சைட் அடிப்பது போல் வைத்த காட்சியில் விரசத்தை தவிர்த்து இருக்கலாம்....
        இவர்கள் எல்லோரையும் விட மனதில் பதிவது வசந்தனாக வரும் 
அஜ்மலின் கதாபாத்திரம்.. கட்சிகாரர்களிடம் அடிவாங்குவது ,
 மேடையில் வீராவேசமாக பேசுவது ,ஆட்சியை பிடிப்பதற்கு இவர் செய்யும் சூழ்ச்சிகள் , கடைசி காட்சியில் ஜீவாவை வழிக்கு கொண்டு வர இவர் செய்யும் தந்திரம் என எல்லாமே நன்றாக அமைந்து இருக்கின்றன...
ஆனால் இவர் உடல் மொழியில் முன்னேற்றம் தேவை ..
            சுபா வசனங்கள் சுருக்கம் பிளஸ் தெளிவு..ஒளிப்பதிவு பலம் ,இசை பலவீனம்..."என்னமோ ஏதோ" பாடல்கள் தவிர மற்றவை "அயன்"-"ஆதவன்" கலவை ...
            பத்திரிக்கைக்காரன்  கதை என்றதும் இப்படத்தில் புதுமையான , 
வித்தியாசமான இதழியல்  சம்பத்தப்பட்ட காட்சிகள் இருக்கும் என்று எதிபார்த்தால் ஏமாற்றமே .."அயன்" படம் கடத்தல் பின்னணியை கொண்டு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டதை போல இல்லாமல் 
இதில் வழக்கமான  அரசியல் நிகழ்வுகளே வருவதால் ஈடுபாடு குறைகிறது ..
               உண்மையை எழுதுவதால் ஏற்படும் இடர்பாடுகளையும் உரக்க சொல்லியிருக்கிறார்கள்.....
        கல்லூரியை முடிக்கும் நண்பர்கள் திடீரென ஒரு நாள் அரசியலில் குதிப்பது
 மற்றும் குடிசையில் எரியும் தீயை அணைப்பது, ஏழைகளுக்கு மருத்துவம் பார்ப்பது ,
பிரச்சார மேடையில் வெடிக்கும் குண்டு - அதன் மூலம் ஏற்படும் பரிதாபம் இதையெல்லாம் வைத்து ஒரே தேர்தலில் 
"சிறகுகள்" கட்சி ஜெயித்து   ஆட்சியை பிடிப்பது என லாஜிக் மீறல்கள் ஏராளம்...
சில காட்சிகள் "ஆயுத எழுது" படத்தை நினைவுபடுத்துகின்றன  ...          
         அதிலும் ஆட்சியை பிடிப்பதற்கு தீவிரவாதிகளின் உதவியை நாடுவது ரொம்ப பழைய "பார்முலா"....இருப்பினும் முடிந்த அளவு பழைய நெடியை
 தவிர்த்து இருக்கிறார்கள்...படத்தின் முடிவு நிறைவை தருகிறது...
 . .இன்றைய சூழலில்  நல்லவனாகவே இருந்தாலும் நேர்மையான முறையில் வெற்றியை
அடைய முடியாது என்பது படம் உணர்த்தும் உண்மை ...




19 April 2011

தேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள்

        இந்த முறை தேர்தலை நல்ல முறையில் நேர்மையாக நடத்தியதற்காகவும் , விழிப்புணர்வு  பிரச்சாரங்கள்  மூலம் அதிகமான வாக்குப்பதிவு ஏற்பட காரணமாக இருந்ததற்காகவும் , எந்த ஒரு கட்சி சார்புமின்றி நடுநிலையுடன் நடந்ததற்க்காகவும் எல்லா தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை
பாராட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில் ...
       தேர்தலை நல்ல முறையில் நடத்தியதற்கு   காட்டிய அக்கறையை தேர்தலில் பணி புரிந்த பணியாளர்களிடம் தேர்தல் ஆணையம் காட்ட வில்லை என்ற  நிதர்சன உண்மையை பத்திரிக்கையாளரான திரு.பத்மன் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி இருந்தார்......
      இந்த பதிவு தேர்தல் ஆணையம் கட்சிக்காரர்களிடம் மட்டும் கடுமையாக நடந்து கொள்ளவில்லை ..தன் பணியாளர்களிடத்திலும் மிக கடுமையாக
நடந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையின் மறுபக்கத்தை 
 உணர்த்துவது  போல உள்ளது...இந்த பதிவில் உள்ள கருத்துக்களை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளுமானால் அதன்
வலிமைக்குள் உள்ள "வலி"க்கு ஒரு "வழி" பிறக்கும்...

                   தேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள்
                                                              பத்மன்





                                      உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதற்கு வலுவான தேர்தல் ஆணையமே அடிப்படைக் காரணம் என்பதை தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி அனைத்திந்திய அளவிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை, பெருமளவில் வன்முறைக் கீறலின்றி பேரமைதியாகவே தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது. சில குற்றச்சாட்டுகள் வீசப்படுகின்றபோதிலும், பணப்பாய்ச்சலைத் தடுத்துவிட்டதாகப் பாராட்டு மழையில் நனைகிறது தேர்தல் ஆணையம். இரவு 10 மணிக்குமேல் உண்மையிலேயே பிரசார கூக்குரல்கள் ஏதுமில்லை. வழக்கமான சுவரொட்டிகளும் வர்ண விளம்பரங்களும் இல்லாமல் வீட்டுச்சுவர்கள் வெறிச்சோடிக் கிடந்தாலும் பொதுமக்களிடம் நிம்மதி பளிச்சிட்டது. புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடிச் சீட்டு அறிமுகத்தால் கள்ளவாக்குகளையும் 99.9 சதவீதம் தடுத்திருக்கிறது. வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் தேர்தல் ஆணையம் பெருவெற்றி பெற்றிருப்பதற்கு வாக்குப்பதிவு சதவீதமே சாட்சி.

இத்தனை விஷயங்களும் ஜனநாயகத்தின் முதுகெலும்பான தேர்தல் ஆணையத்தின் வலிமையைப் பறைசாற்றினாலும், அதன் நடைமுறைகளில் சில முட்கள் அதன் சதையைக் கிழித்து வழியை ஏற்படுத்துகின்றன. அரசியல் ரீதியில் சில கட்சிகள் அவ்வப்போது தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் அல்ல இவை. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் அமைப்பான தேர்தல் ஆணையத்தின் போக்கில் ஒருவித சவாதிகரம் புரையோடிக் கிடப்பதைக் கண்டதால் எழுந்த வேதனையின் வெளிப்பாடு இது.

அரசுப் பணியாளர்களுக்கு ஆங்கிலத்தில் கவர்மென்ட் சர்வன்ட் என்ற பெயர் இருப்பதை அப்படியே அச்சுஅசல் பிசகாமல் கடைப்பிடிப்பது தேர்தல் ஆணையம் மட்டும்தான். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களை அது நடத்துகின்ற விதத்தில் பழைய பிரிட்டிஷ் தர்பார் மாறாமல் நீடிக்கிறது. ஜனநாயகத் திருவிழாவான தேர்தலை சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும் என்ற அசுர வேகத்தில், அந்த ஜனநாயகப் பணியில் ஈடுபடும் ஊழியர்களிடம் அசுரனாகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மனிதநேய முகத்தைக் கழற்றி எறிந்துவிட்டுத்தான் இந்த ஜனநாயகப் பணியை தேர்தல் ஆணையத்தால் ஆற்றமுடிகிறது என்பது முரண்சுவை.

தேர்தல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் விருப்பத்தின் பேரில் வருவதில்லை, கட்டாயத்தின் பேரில் நியமிக்கப்படுகிறார்கள். இதற்கு, தேர்தல் பணியை ஆற்ற அவர்களுக்கு விருப்பம் இல்லை என்று அர்த்தமல்ல, அந்தப் பணிகளை ஆற்றுவோருக்கு அளிக்கப்படும் 'உபசரிப்பு' யாருமே விரும்பாத வகையில் இருக்கிறது என்பதே உண்மை. தேர்தலை வெற்றிகரமாகத் தேர்தல் ஆணையம் நடத்தினாலும், அதன் திறமை, நேர்த்தி இதில் பளிச்சிட்டாலும் தேர்தல் பணியாளர்களிடம் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையில் ஒரு தொழில் நேர்த்தி இல்லை, திறமைக் குறைவும் தென்படுகிறது. சரி, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு அப்படி என்னதான் இன்னல்கள் இழைக்கப்படுகின்றன என்கிறீர்களா?

தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அவசர கதியிலும், அலைக்கழிக்கப்பட்டும் இதற்குத் தயார் செய்யப்படுகிறார்கள். தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் வீட்டுக்கும் அவர் பணியாற்ற வேண்டிய வாக்குச்சாவடிக்கும் உள்ள தொலைவு, அந்தச் சமயத்தில் தேர்தல் பணியாற்ற வேண்டியவருக்குள்ள இதர கடமைகள் உள்ளிட்டவை கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை. தேர்தலுக்கு முந்தைய நாள் தொடங்கி, ஏறக்குறைய தேர்தல் தினத்தன்று நள்ளிரவு வரையில் நீடிக்கும் இந்த இமாலாயப் பணியில் இம்சைகள் அதிகம். கடினமான இந்த வேலைக்குப் பெண்களே அதிக அளவில் தேர்ந்தெடுக்கப் படுவது ஏன் என்று தெரியவில்லை. அவர்களுக்கே உரியப் பிரத்யேகப் பிரச்சினைகளும் கண்டுகொள்ளப்படுவதில்லை. உதாரணத்துக்கு, கைக்குழந்தையுடன் இருக்கும் பெண் என்றாலும், 5 மாதம் வரியுடைய குழந்தையாக இருந்தால் மட்டுமே விதிவிலக்கு. அதுவும் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடில், அவர்களது கைக்குழந்தைகள் 2 நாட்களுக்கு தாயார் இல்லாமல் தவிக்க வேண்டியதுதான்.

உண்மையான காரணங்கள் இருந்தாலும்கூட, இந்தக் கட்டாய ஜனநாயகப் பணியில் இருந்து சில அரசு ஊழியர்களால் தப்ப முடியவில்லை. மகன் அல்லது மகள் அல்லது நெருங்கிய உறவினர் திருமணத்தை வைத்துக்கொண்டு தவிர்க்க முடியாமல் பணிக்கு வந்து தவித்தவர்களும் உண்டு. வெளிநாடு சென்று உடனடியாகத் திரும்ப முடியாத நிலையில் இருந்த அதிகாரிகளுக்கும் கட்டாயம் அவர்கள் கடமையை ஆற்றத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டது தேர்தல் ஆணையம். இல்லையேல் உடனடி நடவடிக்கை. தாயகம் திரும்பிய பிறகு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து அவர்கள் தண்டனையைப் போக்கிக்கொள்ளலாம் என்று 'காருண்யத்துடன்' கூறிவிட்டது தேர்தல் ஆணையம். ஒரு அரசு வங்கிக் கிளையில் அனைத்து ஊழியர்களுக்குமே தேர்தல் பணி. ஒருசிலரையாவது வங்கிப் பணிக்கு விட்டுவைக்குமாறு வங்கிக் கிளை அதிகாரி கெஞ்சியும் மசியவில்லை தேர்தல் ஆணையம். வேறு கிளைகளில் இருந்து தற்காலிக ஊழியர்கள் தருவிக்கப்பட்டு நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டது.

தேர்தல் பணிக்கு நியமிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் ஆசிரியர்களே. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு, பிளஸ்டூ விடைத்தாள் திருத்தும் வேலை ஆகிய பணிகளும் ஆசிரியர்களை ஏற்கனவே ஆக்கிரமித்திருந்தன. மத்தளத்துக்கு இருபக்கம் இடி. ஆசிரியர்களுக்கோ எல்லாபக்கமும் இடி. பல்வேறு பணிகளால் ஆசிரியர்களுக்குப் பணமழை பொழிவதாக மற்றவர்கள் வயிறு எரிந்தாலும், தேர்தல் பணிக்குக் கிடைத்த ஊதியத்தைவிட போக்குவரத்து, சாப்பாடு உள்ளிட்டவற்றுக்கு அவர்கள் செலவழித்ததும், பணிச்சுமையால் ஏற்பட்ட மன உளைச்சலும் அதிகம் என்பதே உண்மை.

இந்த முறை தேர்தல் பணி நியமன உத்தரவு, தேர்தலுக்கு முதல் நாள் காலை 8 மணியளவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், இதற்கான பணியாளர்கள் அனைவரும் அரக்கப்பரக்க வந்து சேர்ந்தனர். ஆனால், பணி நியமன ஆணை நண்பகல் 12 மணிக்குத்தான் கொடுக்கப்பட்டது. அவர்கள் பணியாற்ற வேண்டிய வாக்குச்சாவடியோ, பலருக்குப் பல மைல் தூரத்தில் இருந்தது. இந்த ஆணை கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு அவர்கள் சென்றாக வேண்டும். ஆனால் இதற்குரிய வாகன ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யவில்லை. ஆணையம் என்பதால் ஆணையிட்டதோடு தேர்தல் ஆணையத்தின் பணி முடிந்துவிட்டது. பொறுப்புணர்வுள்ள அலுவலர்கள் தங்களுக்குரிய இடங்களுக்கு வந்து சேர வேண்டியது அவைகளுடைய பொறுப்பு.

சரி, வந்து சேர்ந்த இடத்திலாவது உரிய வசதிகள் உண்டா? 2 நாள் இரவு தங்க வேண்டுமே? அதுவும் பிரத்யேகப் பிரச்சினைகள் கொண்ட பெண்களின் கதி என்ன? பாதுகாப்புக்கு போலீசார் உண்டு. ஆனால், இரவில் தங்குவதற்கு, இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு, காலையில் குளிப்பதற்கு உரிய வசதிகள் கிடையாது. நகர வாக்குச்சாவடிகள் என்றால் பரவாயில்லை. கிராமப்புற வாக்குச்சாவடிகள் என்றால் சரியான சாப்பாடும் கிடையாது. கிராம, குக்கிராம வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் உணவுப் பொட்டலம் எதுவும் வழங்கவில்லை. பரிதாபப்பட்டு கிராம நிர்வாக அதிகாரிகள் வாங்கிக் கொடுத்தால்தான் உண்டு. இல்லையேல், கையேடு கொண்டு சென்ற பிஸ்கட்டுகளும் பழன்க்களும்தன் 2 நாட்களுக்கும் ஆகாரம்.

அதுவும் இந்த முறை, கட்சி முகவர்கள் வாங்கிக் கொடுக்கும் காபி, டீயைக்கூட குடிக்கக் கூடாது என்ற கட்டளை வேறு. ஐயோ பாவம் என்று அந்த முகவர்கள் சாப்பாடு, வெயிலுக்கு குளிர்பானம் என்று தருவித்துக் கொடுத்தாலும்கூட அதைப் பெற்றுக்கொண்டால் அரசியல் தீட்டு ஒட்டிக்கொள்ளுமே! அவ்வாறெனில், அடிப்படைத் தேவையான உணவு உள்ளிடவற்றிற்கான உரிய ஏற்பாடுகளை வருவாய் அதிகாரிகள், கிராம அலுவலர்கள் மூலம் தேர்தல் ஆணையமே முறைப்படி செய்ய வேண்டும் அல்லவா? தேர்தல் வாக்குப்பதிவுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தலாம், ஆனால் தேர்தல் பணியைச் செய்பவர்கள் இயந்திரங்கள் இல்லையே?

இதேபோல், வாக்குப்பதிவு மாலை 5 மணியோடு முடிவடைந்து, மற்ற நடைமுறைகள் ஐந்தரை 6 மணிக்கு நிறைவடைந்தாலும்கூட தேர்தல் பணியாளர்கள் வீட்டுக்குத் திரும்ப முடியாத சூழ்நிலை. வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாங்கினால்தானே அந்த இடத்திலிருந்து அவர்கள் நகர முடியும். ஒரு மண்டலத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடியாக வந்து பரிசோதித்து, இந்த இயந்திரங்களை வாங்கிச் செல்வது நடைமுறை. இதனால் சில வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு நேரத்தில்தான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டன. தேர்தல் பணியாளர்களைப் பொறுத்தவரை அத்தோடு தேர்தல் ஆணையத்தின் கடமை முடிந்துவிட்டது. அத்துவானக் காட்டில் நள்ளிரவு நேரத்தில் தேர்தல் பணி கடமையை பூர்த்தி செய்த பணியாளர்களின் கதி அதோகதிதான். அவர்கள் சொந்த வாகனத்தில், அல்லது வாகன ஏற்பாடுகளில் திரும்பிச் செல்ல வேண்டியதுதான். இல்லையேல், துணைக்கு யாரும் இல்லாவிட்டாலும் வாக்குச்சாவடியிலேயே தங்கிச் செல்ல வேண்டியதுதான். ஆண்களாக இருந்தால் பரவாயில்லை. பெண்களின் கதி? ஒன்று, பாதுகாப்பான இடவசதி, இல்லையேல் முறையான வாகன வசதி செய்து தர வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை அல்லவா?

பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி மனமுவந்து விருப்பத்துடன் வாக்களிக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கொண்டுவந்துவிட்டது. பாராட்டுகள். அதேபோல், தேர்தல் பணியாற்றுவோரும் எவ்வித அச்சமுமின்றி விருப்பத்துடன் பணியாற்றவரும் சூழ்நிலையை தேர்தல் ஆணையம் எப்போது கொண்டுவரும்?

9 April 2011

அன்னாவின் உண்ணாவிரதம் வெற்றியா ?

             நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து நாட்டையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார் 72 வயது இளைஞர் அன்னா ஹசாரே ...ஒரு கிராமத்தையே முன் மாதிரியாக மாற்றி காட்டியதற்காக 1992  ம் ஆண்டு "பத்ம பூஷன்"   வாங்கிய சமூக தொண்டர் இந்த "அன்னா ஹசாரே "..
                  
             ஊழலுக்கு எதிராக "ஜன் லோக்" மசோதாவை கடுமையான சட்ட திருத்தங்களுடன் நிறைவேற்றக்கோரி அற வழியில் அவர் செய்த போராட்டத்திற்கு மத்திய அரசு இப்போது பணிந்திருக்கிறது...ஜூன் மாத பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதனை நிறைவேற்றுவதாக உறுதியும் அளித்திருக்கிறது ..
                .தனி மனிதனாக எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் அவர் தொடங்கிய போராட்டத்திற்கு நாடு முழவதும் கிடைத்த வரவேற்பு ஊழலுக்கு எதிராக மக்கள் விழித்தெழ தொடங்கி விட்டார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது ...
               "அண்ணா" வழியில் வந்ததாக சொல்லிக்கொள்ளும் அரசியில்வாதிகள் தமிழகத்தில் ஊழலுக்கு உரம் போட்டு வளர்த்துக் கொண்டிருக்க அங்கு நடந்த அன்னாவின் உண்ணாவிரதம் ஜனநாயகவாதிகளுக்கு  ஒரு உற்சாக டானிக் .... 
                                   
     2 ஜி அலைவரிசை ஊழல் மூலமாக உலகமே தமிழகத்தை கேவலமாக  பார்த்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நிச்சயம் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கான விதை இங்கிருந்து தான் முளைத்து இருக்க வேண்டும் ...ஆனால்  வாக்குக்கு பணம்  கொடுத்தால் கூட வாங்கிக்கொள்ளுங்கள் ஏன் என்றால் அது உங்கள் பணம் என்று மக்களைப் பார்த்து
கூறும் அளவிற்கு இங்கு ஊழல் பழகி விட்டது வேதனைக்குரிய விஷயம் ... 
        மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஒத்துக்கொண்டதாலேயே இதனை ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கான முடிவாக எடுத்துக்கொள்ளலாமா ? நிச்சயம் முடியாது ....ஏனென்றால் மகளிர் இட ஒதுக்கீடு பல முறை விவாதிக்கப்பட்ட 
போதும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது நாடறிந்த விஷயம் ...
           அரசியல்வாதிகளின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது என்பது நிதர்சன உண்மை ..
  .     இந்த   மசோதாவை நிறைவேற்றுவதற்க்கான   திட்டக்குழுவில் "அன்னா", "பூஷன்" போன்றவர்கள் இடம் பெற்றிருந்தாலும்  மத்திய அரசின் அமைச்சர்கள் ஐந்து பேர் இடம் பெற்றிருக்கிறார்கள் ...இவர்களுக்கு எதிராக பெரிய அளவில் எந்த ஊழல் வழக்கும் இல்லா விட்டால் கூட இவர்கள் சார்ந்திருக்கும் கட்சி ஊழலையே மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பதை உலகமே அறியும் ....
                               
          அதிலும்  2 ஜி  அலைவரிசை ஊழலில் அரசிற்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை  என்று கூசாமல் பொய் சொன்ன கபில் இந்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார் ...            லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைவராக தாமசை நியமித்ததற்கு முழு பொறுப்பையும்    நான் ஏற்றுக் கொள்கிறேன் ,கூட்டணி தர்மத்திற்காக வளைந்து கொடுக்க வேண்டி இருக்கிறது என்றும் ஒப்புக்கொண்டதன் மூலம் அப்பழுக்கற்றவர் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருந்த மன்மோகன் சிங்கின் நேர்மை
மண்ணைக்கவ்வியதையும் நாம் அறிவோம் ... 
          மசோதா நிறைவேற்றப்பட்டால் ஊழலுக்கு எதிராக பிரதமர் உட்பட உயர் பதவி வகிக்கும் எவரையும் கேள்வி கேட்கும் உரிமை குழுவிற்கு வந்து விடும்.  அது மட்டும் அல்லாமல் ஒரு வருடத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும்..ஊழல் செய்தது நிரூபணம் ஆனால் கொள்ளையடித்த பணம் முழுவதும் 
பறிக்கப்படும் என்பவை இதன் மற்ற சாரம்சங்கள் ...
              .
           ஆனாலும் எவ்வளவு பெரிய ஊழலாக இருந்ததாலும் அதற்கு எதிராக கொடுக்காப்படும் 
கடுங்காவல் தண்டனை மட்டும் போதுமானதா ? அந்த ஊழல் பணம் மூலம் தங்களை வளர்த்துக்கொண்ட மற்றவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாதா ?
ஊழல் புரிபவரை அமைச்சராக்கிய கட்சிக்கு என்ன தண்டனை ? ஊழலுக்கு நேரடியாகவோ , மறைமுகமாகவோ , கூட்டணி தர்மத்திர்க்காகவோ ஒத்துழைப்பு கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கும் , தொழிலதிபர்களுக்கும் 
என்ன தண்டனை ?....இப்படி பல கேள்விகள் நம்முள் எழாமல் இல்லை ...
               அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொன்னால் போதுமா ?..இலவசமாக கொடுக்கிறார்கள் 
என்பதற்காக எல்லாம் இருந்தும் அதை ஓடி ஓடி வாங்கியது குற்றம் இல்லையா ?....நம்முடைய காரியத்தை சாதித்துக்கொள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதும் , ஊழல் நடக்கிறது என்று தெரிந்தும் அதற்கு எதிராக
முறையிடாமல் ஒதுங்கிப்போவதும் குற்றம் இல்லையா ? இப்படி பல கேள்விகள் நம்முள் எழாமல் இல்லை ....
         முன்பே சொன்னது போல் இது ஊழலுக்கு எதிரான முடிவு அல்ல ...ஒரு ஆரம்பம் .."அக்னிக் குஞ்சொன்று கண்டேன் " - மகாகவியின் பாடலுக்கு ஏற்ப ஒரு தீப்பொறியின் ஆரம்பம் ....
          மசோதா நிறைவேற்றப்பட்டு , ஊழல் புரிபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு, ஊழல் முற்றிலும் மலிந்து இன்னுமொரு "அன்னா" இதற்காக "உண்ணா" விரதம் இருக்கும் நிலை ஏற்படாமல் இருப்பதே
முழுமையான வெற்றி ...
                  
                  

        
                 

7 April 2011

விஜயகாந்த் பிரச்சாரம் உளறலா ? உண்மையா ?

               
         இப்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அதிகமாக தலைப்பு செய்திகளில் இடம்பிடித்திருப்பது விஜயகாந்தின் பிரச்சாரம்...
          குடித்து விட்டு உளறுகிறார் ...தன் கட்சி வேட்பாளரையே போட்டு அடிக்கிறார்...கூட்டணிக் கட்சிக்காரர்களையே மிரட்டுகிறார் ..கோயம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்று தினமும் ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது ..
           போதாக்குறைக்கு இவரை விமர்சித்து வடிவேலு செய்யும் பிரச்சாரம் தி.மு.க ஆதரவு தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது....வடிவேலுவின் பிரச்சாரம் சிரிக்க வைத்தாலும் உண்மை என்ன என்பதை சிந்திக்க வேண்டியதும் நமது கடமை ..
            "கண்ணால் காண்பதும் பொய் , காதால் கேட்பதும் பொய் , தீர விசாரிப்பதே மெய் " என்னும் கூற்றுக்கேற்ப விஜயகாந்தின்  பிரச்சாரங்களை கூர்ந்து கவனித்தால் தான் ஏன் தி.மு.க அவரை குறி வைத்து தாக்குகிறது என்று புரியும் ...இந்த முறையும் விஜயகாந்த் தனியாக நின்றிருந்தால் யாருக்கு லாபம் என்று எல்லோருக்கும்  தெரியும் ..
       
                                      
    பிரசாரங்களில் விஜயகாந்த் பேசும் பேச்சுக்களில் முக்கியமான சிலவற்றை கீழே காணலாம்....
     "நான் கருணாநிதி மாதிரி அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்கலை ,,சம்பாதிச்சுட்டு தான் அரசியலுக்கு வந்தேன்" - -   "நான் என் வேட்பாளரை அடிக்கலை .."அய்யோ கொலை பண்றாங்கன்னு" பொய்யா டி.வியில் போட்டாங்களே அது மாதிரி தான் இதுவும் --
       " அப்படியே பார்த்தாலும் நான் கழுத்துல தான் அடிச்சேன் , ஆனா அவங்க சொந்த கட்சி காரர் தா.கிருஷ்ணன் கழுத்தையே எடுத்துட்டாங்களே " - 
                               "நான் ஏன் அ.தி.மு.க வோட கூட்டணி வைச்சேன் ..அர்ஜுனனுக்கு எப்படி கிளியோட கழுத்து தான் 
குறியா இருந்தததோ அதே போல என்னோட முக்கிய நோக்கமே அராஜக தி.மு.க ஆட்சியை கீழே
இறக்குவது தான் ..அதனால தான் எனக்கு 500 கோடி கொடுக்க முன் வந்த போதும் நான் அவங்க 
கூட சேரலை , புரிஞ்சுக்குங்க மக்களே"
   "மதுரை தினகரன் ஆபீசில் மூணு பேர் அநியாயமா செத்தாங்களே அதுக்கு என்ன தண்டனை கிடைத்தது ?..
   "தன குடும்பத்துக்கு பதவி வேணும்னா டெல்லி போறாரே கருணாநிதி ..இலங்கையிலே இத்தனை தமிழன் செத்தானே அதுக்கு என்ன செஞ்சாரு ? ...
     " நான் ஒன்னும் பதவிக்காக இந்த கூட்டணியோட சேரலை ..எனக்கு பதவி ஆசையே இல்லை என்று சொல்லும் கருணாநிதி ஆறாவது முறையா என்னை முதல்வர்  
ஆக்குங்கன்னு ஏன் கெஞ்சனும் ? சிந்தியுங்க மக்களே ...
   "உங்களுக்கு (தி.மு.க ) ஆப்பு அடிச்சா தான் சரிப்படுவிங்க"- இதை ஹாப் என்று மாற்றியது
வேறு விஷயம்....
          "உண்மையிலே அவர் மக்களுக்கு நல்லது செஞ்சிருந்தா ஏன் தேர்தல் கமிசன் நடவடிக்கைகளை 
 பார்த்து பயப்படனும் ?  ...
       இப்படி எல்லா இடங்களிலும் சூடு பிடிக்க பிரச்சாரம் செய்து வருகிறார் ..அதனால் தான் சரியான   
நேரத்தில் வடிவேலுவை தன பக்கம் இழுத்து இருக்கிறது தி.மு.க ...விஜயகாந்துடன் தனக்கு
இருக்கும் சொந்த பிரச்சனைக்கு பழி தீர்க்க அவரும்    ஒத்து கொண்டிருக்கிறார் ..அதே முறையை தான் சிங்கமுத்துவை தன் பக்கம் இழுத்ததன் மூலம் அ.தி.மு.கவும் செய்து இருக்கிறது...
            இப்படி தன் சொந்த பகைமைக்காக அரசியலை கையில் எடுப்பவர்கள் மத்தியில் நேரடியாக அரசியலில் அடி எடுத்து வைத்தவர் விஜயகாந்த்..தன் கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டதை கூட அவர் பெரிய அரசியலாக்கவில்லை...தன் குடும்ப உறுப்பினர்கள் கட்சியில் இருந்தாலும் இந்த முறை யாருக்கும் அவர் சீட் வழங்கவில்லை ...அதே போல
பணப்பெட்டியுடன் நிறைய பேர் அவரை முற்றுகை இட்டாலும் தன் ஆரம்ப காலத்தில் இருந்து தன் கூட இருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கே அவர் சீட் வழங்கியிருக்கிறார் என்று ஒரு செய்தி ...

                        
           தி.மு.க , அ.தி.மு.க இரண்டிற்கும் மாற்று சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட   தே .மு.தி.க இந்த முறை கூட்டணி சேர்வதை தவிர வேறு வழியில்லை ..சென்ற முறை தனித்து நின்று பெற்ற கணிசமான வாக்குகளை இந்த முறையும் தனித்து நின்றால் பெற முடியும் என முழுமையாக சொல்ல முடியாது ...
      கிராமப்புறங்களில் ஓரளவு செல்வாக்கு பெற்றிருக்கும் தே.மு.தி.க நகரங்களில் குறிப்பாக                                                                                              படித்தவர்களிடத்தில் வளர்ச்சி அடைவது ரொம்ப முக்கியம் .."கருப்பு எம்.ஜி.ஆர்." என்று சொல்லிக்கொள்ளும்                                               விஜயகாந்த்  படித்தவர்களிடத்தில் எம்.ஜி.ஆர்க்கு இருந்த செல்வாக்கை
மறந்து விடக்கூடாது ..
       அ.தி.மு.க தலைமையில் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளாவிட்டாலும் அதே நேரத்தில்   அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்....      
    அவர் நிதானம் இல்லாமல் நடந்து கொள்வதும் , அதிகமாக கோபப்படுவதும் பெரிய குறை.. 
ஊடகங்களை தன் கையில் வைத்து இருக்கும் தி.மு.க விஜயகாந்திற்கு எதிராக பிரச்சாரம்
செய்து வருவதில் எந்த ஆச்சிரியமும் இல்லை .ஆனால் இந்த அளவிற்கு விஜயகாந்திற்கு
முக்கியத்துவம் கொடுப்பதில் இருந்தே அவர்கள் பயந்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.....

        தன் மீது வைக்கப்படும் " குடிகாரன்" என்ற விமர்சனத்திற்கு அதே பாணியில்  பதில் சொல்லாமல் கௌரவமாக நடந்து கொண்டாலும் இதனால் ஏற்பட்ட சந்தேகத்தை
முழுமையாக நிவர்த்தி செய்வது விஜயகாந்தின் கடமை ....
          ஒரு வேலை அ.தி.மு.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி சோனியா காந்தியிடம் சரணாகதி அடைந்தது போல விஜயகாந்தும் ஜெயலலிதாவிடம்  சரணாகதி அடைவாரா ? அல்லது தனித்துவத்தை காப்பாற்றுவாரா என்பது பொதுமக்களின் கேள்வி ...
          விஜயகாந்தின் பிரச்சாரம் தள்ளாட்டமா ? ஆட்சியை பிடிப்பதற்கான வெள்ளோட்டமா ?  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ......
         

30 March 2011

தேர்தல் களம் - 2011

            பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத குறையை நிவர்த்தி செய்யும் வகையில்   அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி இருக்கிறது தி.மு.க , அ.தி.மு.க. வின் தேர்தல் வாக்குறிதிகள்...சென்ற முறை ஆட்சியை பிடித்ததற்கு தங்கள் இலவச திட்டங்களே காரணம் என்று முழுமையாக நம்பும் தி.மு.க இந்த முறையும் அதே போல செய்திருப்பதில் எந்த வித ஆச்சர்யமும் இல்லை.. இது எதிர்பார்த்த ஒன்று தான்.
..                ஆனால் கடந்த தேர்தலில் இருந்து சமீப காலம் வரை  தி.மு.க வின் இலவச திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்த அ.தி.மு.க இப்போது அதையே காப்பி அடித்து வெளியிட்டிருப்பது நடுநிலையாளர்களிடம் அதன் நம்பகத்தன்மையை குறைத்திருக்கிறது ...
                இலவசங்கள் கொடுத்தால் தான் ஒட்டு கிடைக்கும் என்று அ.தி.மு.க வும் நம்ப தொடங்கி இருப்பது காலத்தின் கொடுமை...குடும்ப அரசியல், 2 ஜி அலைவரிசை ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு   , ஊடகங்களில் ஆக்ரமிப்பு , மின் வெட்டு , மணல் கொள்ளை ,இலங்கை தமிழர் பிரச்சனை  இதையெல்லாம் இலவச திட்டங்கள் மறைத்து விடும் என தி.மு.க உறுதியாக நம்புகிறது...குறிப்பாக கிராமப்புறங்களில் தன் கட்சியின் செல்வாக்கு கூடியதற்கு இத்திட்டங்களே காரணம் என்று தி.மு.க உறுதியாக நம்புகிறது .... 
                  உண்மையான மக்கள் நலத்திட்டங்கள் என்றுமே வரவேற்கத்தக்கவை..ஆனால் இலவச டி.வி . மிக்சி , லாப்டாப் , கிரைண்டர் என இரண்டு கட்சிகளுமே போட்டி போட்டு கொண்டு 
அறிவித்து இருப்பது மக்களின் முன்னேற்றத்தில் எந்த வித அக்கறையும் இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது ..
                2 ஜி அலைவரிசை ஊழல் நகர்ப்புறங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பயத்தால் தி.மு.க அதிக இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுத்ததாக சொல்லப்படுகிறது...ஆனால்   2 ஜி அலைவரிசை ஊழல் மற்றும் இலங்கை தமிழர்  பிரச்சனை  இவை இரண்டும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பை 
பாதிக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை ...
                ஆளுங்கட்சியின் குறைபாடுகளை மூலதனமாக்கி ஓட்டுக்களை அதிகரிப்பதற்கு
அ.தி.மு.க விற்கு நல்ல வாய்ப்பு...எனினும் இந்த சமயத்தில் வைகோ , நாஞ்சில் சம்பத் போன்ற நல்ல பேச்சாளர்கள் கூட்டணியில் இல்லாதது அ.தி.மு.க விற்கு பெரிய குறை ..
                அ.தி.மு,க இலவச திட்டங்களை முன் வைத்ததற்கு பதில் இலவச டி.வி வேண்டுமா ? இல்லை தடையில்லா மின்சாரம் வேண்டுமா ? ....
இலவச பொருட்கள் வேண்டுமா ? ஊழல் இல்லாத நிர்வாகம் வேண்டுமா ?
பணம் கொடுக்க வேண்டுமா ? பணம் சம்பாதிக்க வேலை வாய்ப்பு வேண்டுமா ?
இலவச நிலம் வேண்டுமா ? நிர்வாகம் ஒழுங்காக நடக்க வேண்டுமா ? என்று கேட்டிருக்கலாம்.......
     முதியோர்களுக்கு இலவச பேருந்து பயண வசதி கொடுப்பதை விட அவர்களுக்கு எதிராக சென்னை போன்ற மாநகரங்களில் நடக்கும் வன்முறை, கொலை,திருட்டு இவற்றிக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையை முன் வைத்திருக்கலாம் ....
       நம்மை விட பின் தங்கி இருக்கும் பீகார் மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதல்வர் ஆகி இருக்கும் நிதிஷ் எந்த விதமான இலவச திட்டங்களையும் அறிவிக்கவில்லை...மாறாக தன் செய்த வளர்ச்சி திட்டங்களையே முன் வைத்தார் ...
         மூன்றாவது முறையாக குஜராத் மாநில முதல்வராகி இருக்கும் மோடி அம்மாநிலத்தை
முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் ....இங்குள்ளவர்கள் இதையெல்லாம் பார்த்து திருந்தவில்லையே என்ற வேதனை ஒரு பக்கம் இருந்தாலும்..இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பி.ஜே.பி கூட
தமிழக சட்டசபை தேர்தலுக்காக இலவச பசு என்றெல்லாம் அறிவித்து இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறது ...
           எது எப்படி  போனால் என்ன நமக்கு வரிசையாக விடுமுறை வருகிறதே என்று நினைக்காமல் தயவு செய்து அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்வது
மிக மிக முக்கியம் ...
                   

26 January 2011

ஆடுகளம் விமர்சனம்

         சென்னை பின்னணியில் எடுத்த  "பொல்லாதவன்" படத்திற்கு பிறகு தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணி  மதுரை பின்னணியில் சேவல் சண்டையை மையப்படுத்தி  ஆடுகளத்தில் குதித்து இருக்கிறார்கள் ....இதற்காக இவர்கள் இருவரும் எடுத்திருக்கும் மெனக்கடல் படம் நெடுக தெரிகிறது ...
                மதுரை படம் என்றவுடன் படம் நெடுக அருவாள் வெட்டு , ஜாதி சண்டை , திருவிழா பாட்டு , ரத்த சகதியில் கிளைமாக்ஸ் என வழக்கமான பாணியில் பயணிக்காமல் சற்று வித்தியாசமாக திரைக்கதையை அமைத்ததற்கு பாராட்டுக்கள் ...
        .சேவல் சண்டையை மையப்படுத்தி இடைவேளை வரை செல்லும் படம் பிறகு மனிதர்களின் ஈகோ சண்டைக்குள் நுழையும் போது நிமிர்ந்து உட்கார வைக்கிறது ...ஆனால் சேவல் சண்டையில் இருந்த விறுவிறுப்பு படம் முடியும் வரை இல்லாதது குறை .......
       இமேஜ் வட்டத்தை விட்டு விட்டு கதைக்கேற்ப நடிக்கும் நடிகர்களுள் தனுஷும் ஒருவர்...இப்படத்திலும் உடல் மொழி , வட்டார உச்சரிப்பு , கைலி , சைக்கிள் சகிதம் மதுரைக்காரன் கருப்பாகவே  நம் கண் முன் நிற்கிறார் ....  புதுப்பேட்டை , பொல்லாதவன்  வரிசையில் தனுஷின் நடிப்புக்கு நல்ல தளம் இந்த "ஆடு களம்"....
        ஆங்கிலோ இந்திய பெண்ணாக வரும் டாப்சீ அழகாக இருக்கிறார்..நடிப்பில் சொல்வதற்கு ஏதுமில்லை ...இன்னும் எத்தனை நாளைக்கு தான் ஒரு வேலை வெட்டியும் இல்லாத ஹீரோவை நம்பி வீட்டை விட்டு ஓடி வரும் ஹீரோயின்களை காட்டுவார்களோ ??...
         படத்தின் முக்கியமான மற்ற இருவர் பேட்டைக்காரனாக வரும் ஜெயபால் மற்றும் துரையாக வரும் கிஷோர்...சுருக்கமாக "தன் நிழலில் இருக்கும்  இளைஞனின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஒரு கிழவனின் வன்மமே கதை" என ஓற்றை வரியில் சொல்லி விடலாம் ..அந்த அளவிற்கு படத்தின் முக்கிய கதா பாத்திரம் "பேட்டைக்காரன்" ....        தன் முடிவை மீறி சேவல் சண்டையில் ஜெயிக்கும் கருப்பு மீது ஏற்படும் கோபம் , அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்கும் போது வன்மமாக மாறி  , தன் மனைவியுடன் அவனை இணைத்து பேசும் அளவிற்கு பின் குரூரமாக மாறுவதையும் மிக அழகாக சித்தரித்து இருக்கிறார்கள் ...கிஷோர் இயல்பான நடிப்பில் நம்மை கவர்கிறார் ..எனினும் அவரின் செயற்கை முடியையும், குரலையும் தவிர்த்து இருக்கலாம் ..சமுத்திர கனியின் குரல் இவருக்கு பொருந்தினாலும் ஏனோ வலு சேர்க்கவில்லை ....
                ஜி.வி.பிரகாஷின் இசையில் ஆத்தே,ஒத்த கண்ணாலே பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.. S P B.யின் குரலில் "அய்யய்யோ" பாடல் இஞ்சி இடுப்பழகி பாடலை நினைவு படுத்தினாலும் உருக வைக்கிறது ....
               யதார்த்தமான கதை, நடிப்பு , விறுவிறுப்பான முதல் பாதி , இசை , வில்லனை மன்னிக்கும் ஹீரோ இவையெல்லாம் படத்தின் பலம்...
              மெதுவாக நகரும் இரண்டாம் பாதி , சில இடங்களில் கதையை விட்டு விலகி செல்லும் திரைக்கதை , பொல்லாதவனை நினைவு படுத்தும் சில காட்சிகள், இடைவேளையோடு காணாமல் போகும் ரத்னவேலு கதா பாத்திரம் ,  சினிமாத்தனமான கிளைமாக்ஸ் இவையெல்லாம் பலவீனம் ....
               ஆடுகளம் - மனிதர்களின் பகல் இரவு ஆட்டம் ....



26 December 2010

மன் மதன் அம்பு - விமர்சனம்

       "மன்" மன்னாராக கமல் , "மதன்" மதன கோபாலாக மாதவன் , "அம்பு" அம்புஜம் ( எ) நிஷாவாக த்ரிஷா இவர்கள்  மூவரை பற்றிய கதையே "மன் மதன் அம்பு"
                  கோடீஸ்வரன் மாதவன், நடிகை த்ரிஷா இருவரும் காதலிக்கிறார்கள் ...நிச்சயதார்த்தம் வரை செல்லும் காதல் மாதவனின் சந்தேக புத்தியாலும் ,இருவரின் ஈகோவாலும் விரிசல் அடைகிறது ...த்ரிஷா ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார் ..அவருடன் அவர் தோழி கீதா ( சங்கீதா) வும், அவளின் இரண்டு குழந்தைகளும் சேர்ந்து கொள்கிறார்கள் ...அங்கு த்ரிஷாவை வேவு பார்க்க மாதவனால் நியமிக்கப்படுகிறார் மேஜர் மன்னார் ( கமல் )...வேவு பார்க்க வந்த இடத்தில் இருவருக்கும் பரஸ்பர நட்பு ஏற்பட்டு அதுவே காதலாக மலர்கிறது ...முடிவில் யார் யாருடன்  சேர்கிறார்கள் என்பதே மீதி கதை ...
       முதல் காட்சியிலேயே மாதவனுக்கும் ,அவர் அம்மாவுக்கும் த்ரிஷா நடிகை என்பதால் ஏற்படும் சந்தேகத்தையும் , அதை தொடர்ந்து வரும் கார் பயணத்தில் மாதவன், த்ரிஷா இருவருக்கும் ஏற்படும் ஈகோ பிரச்சனையையும் தெளிவாகவும் , புத்திசாலித்தனமாகவும் சொல்லி இருக்கிறார்கள் ....அதே தெளிவும் , புத்திசாலித்தனமும் படம் முழுவதும் இல்லாதது பெரிய குறை ..........
       மன்னார் கமல் தன் வழக்கமான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார் ...அவர் அறிமுகமே அசத்தல் ..மேஜர் என்றவுடன் விறைபபுடன் அலையாமல் யதார்த்தமாக இருக்கிறார் ...தகிடத்த்தம் பாடலுக்கு அவர் ஆட்டம் இளமையாக இருந்தாலும் தொப்பை இடிக்கிறது .."ப்ளாஷ்பாக்" என்றாலும் இவர் மனைவி சம்பத்தப்பட்ட காட்சிகளை இழுக்காமல் ஒரு பாடலுடன் முடித்திருப்பதை பாராட்டலாம் ....
         தன் நண்பன் ( ரமேஷ் அரவிந்த் ) ஆபரேஷன் செலவிற்கு பணம் புரட்டவே வேவு பார்க்கும் வேலைக்கு வந்திருக்கிறார் என தெரியும் போது மனைதை தொடுகிறார் ..பணத்திற்காக இவர் மாதவனிடம் கெஞ்சும் போதும், பணம் தர மறுக்கவே அதை பெற குறுக்கு வழியை கையாளும் போதும் கைத்தட்டல் பெறுகிறார் ...
       மாதவனுக்கு காமெடி, சீரியஸ் இரண்டும் எளிதாக வருகிறது ..த்ரிஷாவை பிரியும் இடத்தில நல்ல முகபாவம் ...குடிபோதையில் உலறும் போதும், கழிவறையில் கைபேசியை தவற விட்டு பின் அதை கையில் எடுத்து அலம்பி, ஸ்ப்ரே அடித்து  பேசும் போதும் கல ...கல....ஆனால் படம் முழுவதும் மாதவனை ஏதோ மயில்சாமி போல போதையிலேயே உலவ விட்டிருப்பது அபத்தம் ..த்ரிஷாவை சந்தேகப்படுகிறார் என்பதற்காக அவரை முட்டாள் போலவும் , அம்மா பேச்சை அப்படியே கேட்கும் அசடாகவும் , கடைசியில் பணத்திற்காக விவாகரத்து வாங்கி இரண்டு பசங்களுடன் இருக்கும் சங்கீதாவுடன் சேருவதாக காட்டுவதும்  அவரின் கதாபாத்திரத்திற்கே பெரிய சறுக்கல் .......
          த்ரிஷா நடிகையாகவே வருவதால் இயல்பாக வந்து போகிறார் ..ஒரு காட்சியில் கமல் த்ரிஷாவிடம் இவ்வளவு அழகாக தமிழ் பேசும் நீங்கள் உங்கள் படங்களில் இது போல பேசுவதில்லையே என்று ஆதங்கப்படுகிறார் ..அனால் இந்த படத்திலேயே ஏதோ ஆங்கில படத்திற்கு வந்து விட்டோமோ என்று சந்தேகப்படும் அளவிற்கு எக்கச்சக்க ஆங்கில வசனங்கள் .......
            சீமான் , ஆகாஷ் சிறிது நேரமே வந்தாலும் கிச்சு ...கிச்சு ...களவானி படத்தில் மனதை திருடிய ஓவியா இதில் ஏதோ வேலைக்காரி போல வந்து போவது துரதிருஷ்டம் ...           இப்படத்தின் கதை ,திரைக்கதை , வசனம் , சில பாடல்கள் என நிறைய பொறுப்புகள் கமலின் தலையில் ..கதை மின்சார கனவு ,குரு என ஆளு போன்ற படங்களின் கலவை ..அதற்கு  காமெடி சாயம் பூச பார்த்திருக்கிறார்கள் ஆயினும் வெளுத்து விட்டது ..ஆள் மாறாட்ட கட்சிகளில் இவர்கள் செய்யும் காமெடி பெரிய குழப்பம் ..கிரேசி மோகன் வசனம் எழுதாது ஏமாற்றம் ...
         படத்தின் சில ஆறுதல்கள் சங்கீதாவின் பையனாக வரும் சிறுவன்  மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை.. குறிப்பாக பாடல்கள் ....
        மாதவன் அம்மா பேசுவது வலிய திணிக்கப்பட்ட பிராமண வசனங்கள் ...ஒரு நடிகை தன் மருமகளாக வருவதை விரும்பாத தாய் பிராமணராக தான் இருக்க வேண்டுமா ? ??..
"வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை " , " நேர்மையானவனுக்கு திமிர் தான் ஆயுதம் " போன்ற வசங்கள் அருமை ...கமல் அதே நேர்மையை இந்த படத்திலும் காட்டி இருக்கலாம் ..ஏனெனில் ஒரு காட்சியில் கமல் தனக்கும் வழி பிறக்கும் எனும் போது  சர்ச் மணி ஒலிக்கிறது ...காவி உடை தரித்த கள்ளகாதலன் என்று கமல் மாதவனிடம் காவியையும் , கள்ளகாதலையும் இணைத்து பேசுவது போல  காட்சி வருகிறது ...கடவுளே இல்லை என்று பகுத்தறிவு வாதம் பேசும் கமலிடம்  ஏன் இந்த முரண்பாடு ?...
கள்ள காதலுடன் சம்பத்தப்பட்டவரும் ஒரு நடிகை தான் என்பதை ஏனோ மறந்து விட்டார் ....செலக்டிவ் அம்னீசியா போலும் ....
            கமல் அவர்களே உங்கள் கருத்துக்களை திணிப்பதற்கும் , மக்களை குழப்புவதற்கும் , பதவியில் இருப்பவர்களை குஷி படுத்துவதற்கும் தான் டிவி பேட்டி இருக்கிறதே .. அதை விட்டு விட்டு ஏன் காசு கொடுத்து படத்தை பார்க்க வரும் ரசிகர்களை கொல்கிறீர்கள்....
         திரைப்பட விமர்சனங்களில் பொதுவாக தனிப்பட்ட எவரையும் நான் விமர்சிப்பதில்லை ...இருந்தும் இந்த படத்தை விமர்சிப்பதற்கு பெரிதாக எதுவும் இல்லை என்பதாலும் , சமீப காலமாகவே உங்கள் படங்களில் கருத்து திணிப்பு அதிகமாக இருப்பதே இந்த தனிப்பட்ட விமர்சனத்திற்கு காரணம்.... 
       மொத்தத்தில் வலுவில்லாத கதை , திரைக்கதையாலும் வலுக்கட்டாய வசன திணிப்புகளாலும் மண்ணை கவ்வியது - " மன் மதன் அம்பு "

 

18 December 2010

ஈசன் திரைவிமர்சனம்

                        கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு பிறகு இயக்குனர் சசிகுமார் அவர்களின் இயக்கத்தில்
 வந்திருக்கும் இரண்டாவது படம் ..முதல் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகர பின்னணியில்
 எடுத்திருக்கிறார் ..முதல் பட கூட்டணி இதிலும் தொடர்கிறது ...
                அரசியலில் பெரும் புள்ளியாக இருக்கும் அமைச்சர் தெய்வநாயகமாக அழகப்பன் , அவரின் ஒரே பையன் செழியனாக வைபவ், நேர்மையான துணை ஆணையர் (ACP ) சங்கையாவாக சமுத்திரகனி   நடித்திருக்கிறார்கள் ..

                     பணக்கார இளைஞர்,இளைஞிகள் இடையே உள்ள போதைபழக்கம் , இரவு நேர விடுதி (பப்) கலாச்சாரம் ,  சட்ட திட்டங்களை மதிக்காத ஆணவம் , அரசியல் பலம் , இதற்கு மத்தியில் நேர்மையான காவல் துறை அதிகாரியின் தைரியம் என்று இதை வைத்து  அடுத்தடுத்து பின்னப்பட்ட
சுவாரஸ்யமான காட்சிகள் முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றன ..திடீரென காணாமல் போகிறார் வைபவ் ..இரண்டாவது பாதியில் அவரை தேடி விசாரணை மேற்கொள்கிறார் சமுத்திரக்கனி ...முடிவில் கொலையாளியை கண்டு பிடிப்பதோடு அவனை அழகப்பனிடம் இருந்தும் காப்பாற்றுகிறார் ....வைபவ் ஏன் கடத்தப்பட்டார் ? அவர் நண்பன் வினோத் ஏன் கொல்லப்பட்டான் ? இதனை விளக்க சற்று நீண்ட ப்ளாஷ்பாக்....    இதற்கு காரணம் பழி  வாங்கல் எனும்போது ஏமாற்றம் ... நிறைய ரத்த சிதறல்களோடு முடிகிறது கிளைமாக்ஸ்
                       .நண்பர்களுடன் இரவு நேர விடுதிகளில் கூத்தடிக்கும் வைபவ்      ஒரு பெண்ணின் கொலைக்கு காரணம் ஆகி விடும்    தன் நண்பர்களை ACP யின்  காவலில் இருந்து     தன்   அப்பாவின் உதவியோடு வெளியே கொண்டு வருகிறார் ....
             நண்பர்களுடன் ஊரை  சுற்றுவதோடு தனக்கு பிடித்த பெண்ணையும் காதலிக்கிறார் ...இதை தவிர இவருக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை ...இரவு நேர விடுதியில் ஒரு பெண்ணை முதல் முறையாக பார்த்து விட்டு அவளை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று நண்பரிடம் சொல்லும் போது சிரிப்பு வருகிறது ......
                   நேர்மையான காவல் துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி கட்சித பொருத்தம்... விறைப்புடனே இருக்கும் இவர் கொஞ்சம் உடற்கட்டையும் ஏற்றி இருந்தால் கன கச்சிதம் ஆகி  இருக்கும்..  அமைச்சர் வீட்டிற்கே  சென்று அவர் மகனை மிரட்டும் இடம் அற்புதம் .. கமிசனர் இவரிடம் அரசியல்வாதிகளுக்கு பணிந்து போக சொல்லி அறிவுரை வழங்கும் காட்சி யதார்த்தம் ... கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் இவர் நடிப்பு அருமை ...
                            
                  தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல அறிமுகம் அரசியல் வில்லன் அழகப்பன்.... .கண்களில் .கருப்பு கண்ணாடி  ,வெள்ளை வேட்டி சட்டை , வட்டார பேச்சு என அமைச்சர் தெய்வ நாயகமாகவே கண் முன் நிற்கிறார் ...இட பிரச்சனைக்காக ஒரு பெண்ணையும் , அவள் குழந்தையையும் கொலை செய்து விட்டு காவல் துறையிடம்  கள்ள காதல் என்று சொல்லி வழக்கை முடித்து விடுங்கள் என்று சொல்லும் இடம் குரூரம் ...
                  கோடிஸ்வர பெண்ணாக வரும் அபர்ணா வைபவை காதலிப்பதோடு நிறுத்தி கொள்கிறார் ...இவர் இன்னும் அழகாக இருந்திருந்தால் பார்த்தவுடன் காதலிக்கும் வைபவின் செயலிற்கு நியாயம் கிடைத்திருக்கும் ... நமோ நாராயனாவிற்கு நல்ல வாய்ப்பு  நன்றாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்  ..இவர் பிரமாதம் சொல்லும் இடம் உண்மையிலேயே பிரமாதம் .... ஏசி வண்டிக்குள்ளேயே     ஏசி இல்லையா  என்று நக்கல் செய்யும் போது கைதட்டல் ....
                     சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் அபிநயா, இவர் தம்பியாக வரும் ஈசன் நல்ல தேர்வு....தோற்றத்தில் அப்பாவியாக இருந்தாலும் கண்களில் கொலை வெறி ...என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் ஒரு பள்ளி சிறுவன் ஈ மெயில் ஹாக் செய்வதாக காட்டுவது கொஞ்சம்  ஓவர்...அபிநயாவின் தோழியாக வரும் பெண் , விபச்சாரம் செய்யும் அக்கா, அதிகாரி நீதிராஜன் , பெண் ப்ரோக்கர் என அனைவரும் கவனிக்க வைக்கிறார்கள் ....
                 பின்னணி இசை பிரமாதம் , படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் அதில்  மூன்று மட்டுமே முனுமுனுக்க  வைக்கின்றன...குறிப்பாக கடற்கரை கானா பாடலில் அக்காவின் ஆட்டம் அருமை ...கதிரின் ஒளிப்பதிவிற்கு ஒரு கைகுலுக்கல் ....
                         சுப்ரமணியபுரம் வெற்றிக்கு பிறகு அதன் பாணியில் பலர் படம் எடுத்து கொண்டிருக்க  அதன் பாதிப்பே இல்லாமல் படம் எடுத்திருக்கும் இயக்குனர் சசிகுமாருக்கு பாராட்டுக்கள் ... வசனங்களாக மட்டும் இல்லாமல் இல்லாமல்  காட்சிகளில்  நேர்த்தி , பாத்திர தேர்வு ,   முதல் பாதியில் இருந்து சற்றும் எதிபாராமல்  திரைகதையில்  திருப்பம் என ஒவ்வொன்றிலும் இயக்குனரின் டச் ...
                        இவை எல்லாம் இருந்தும் பழிவாங்கும் கதை  அதிலும்  ஒரு பெண்ணிற்காக பழி வாங்குகிறான் என்னும் போது பெரிய சறுக்கல் ...பழிவாங்குவதற்கு என்ன தான் நியாயம் கற்பித்தாலும் இதை எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் செய்கிறான் என்று தெரியும் போது நெருடல் ..தொடர்ந்து வரும் பப் காட்சிகள் போர் ..விசாரணைக்காக தோழியின் வீட்டிற்கு செலும் சமுத்திரக்கனியை யார் என்று அவள் கணவன் விசாரிப்பதும் பின்னர் போலீஸ் என்று தெரிந்தவுடன் பம்முவதும் , வேலைக்கு செல்லும் அந்த பெண் வீட்டில் அடக்கமாக இருந்து விட்டு வேலைக்கு சென்றவுடன் முடியை விரித்து விட்டு பரவலாக பழகுவதாக காட்டுவதும் , தானுண்டு தன்  வேலையுண்டு என்று இருக்கும் நடுத்தர வர்க்கத்தையும் , பொருளாதார நெருக்கடிக்காகவும் , முன்னேற்றத்திற்காகவும் வேலைக்கு செல்லும் பெண்களையும் இழிவு படுத்துவது போல உள்ளது .....
                        காவல்துறை சம்பத்தப்பட்ட காட்சிகளை நேர்மையாக எடுத்திருக்கும் இயக்குனர் செல்வாக்குள்ள ஒரு குடும்பம் கிராமத்தில்  இருந்து சென்னைக்கு வருவதற்கு பேஷன் டெக்னாலஜி படிப்பை காரணமாக காட்டுவது நம்பும் படியாக இல்லை ...சம்பத்தப்பட்ட காட்சிகளை தெளிவாக சேர்த்திருக்கலாம் ...
                 சுப்ரமணியபுரம் படம் முடிந்தவுடன் ஏற்பட்ட பிரமிப்பு நிச்சயம் இல்லை ...இந்த படத்தை அப்படத்தோடு ஒப்பிடுவது நியாயம் இல்லை....இரண்டும் வெவ்வேறு களம் ...சுப்ரமணியபுரம் படத்தை பார்த்து விட்டு எல்லோருக்கும் போன் செய்து போய் பார்க்க சொன்னதும், படம் நிச்சயம் பெரிதாக ஓடும் என்று சான்றிதழ் கொடுத்ததும் நினைவிற்கு வருகிறது ....
       அந்த படத்தை நினைவில் வைத்து கொள்ளாமல் இப்படத்தை புதிதாக பார்த்தால் நன்றாக இருக்கும் ......
 ,

14 November 2010

மைனா திரைவிமர்சனம்

              சிறு வயதில் இருந்தே மைனாவை காதலிக்கிறார் சுருளி , மைனாவிற்கும் அவள் அம்மாவிற்கும் எல்லா உதவிகளையும் செய்கிறார்...மைனா பெரியவள் ஆனவுடன் அவளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்கிறார் அவள் அம்மா ...இதனால் ஆத்திரம் அடையும் சுருளி மைனா அம்மாவை அடிக்க , கொலை முயற்சி குற்றத்தின் கீழ் போலீஸ் கைது செய்து 15 நாள் காவலில் வைக்கிறது ..மைனாவின் கல்யாண ஏற்பாட்டை தடுக்க காவலில் இருந்து தப்புகிறார் சுருளி...தலை தீபாவளிக்கு மனைவி வீட்டுக்கு கூட செல்ல முடியாமல் சுருளியை தேடி செல்கிறார் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் , அவருக்கு உதவியாக ராமையாவும்  உடன் செல்கிறார்  .   .சுருளியை போலீஸ் பிடிக்க அவர்களுடன் மைனாவும் வருகிறாள் ...இவர்கள் நால்வருடன் மலைகளுக்கு இடையில் நாமும் பயணம் ஆகிறோம் ...
         சுருளியாக விதார்த் , மைனாவாக அமலா இருவரும் கதைக்கு எளிதாக பொருந்துகிறார்கள் ..மைனாவை காதலிப்பதையே முழு நேர வேலையாக செய்யும் விதார்த் அவள் இல்லையென்று அம்மா சொன்னவுடன் ஆத்திரப்படும் இடத்திலும் , காதல் செய்வது தப்பா என்று போலீசிடம் கேட்கும் போதும் , மைனாவை தூக்கி கொண்டு காட்டுக்குள் ஓடும் போதும் கைதட்டல் வாங்குகிறார்....சில இடங்களில் பருத்திவீரனை ஞாபகபடுத்துகிறார் ...உணர்ச்சி வயப்படும் இடங்களில் யதார்த்தத்தை மீறுகிறார் ....                   அமலாவிற்கு வசனங்கள் குறைவு ..அதை கண்களிலேயே நிறைவு செய்கிறார்....கிளைமாக்ஸ் காட்சியில் மனதில் நிற்கிறார் ..இவர் சுருளியை காதலிப்பதற்கான காரணங்கள் அழுத்தமாக சொல்லப்படாதது ஒரு குறை ....
        இவர்கள் இருவரை தவிர படம் முழுவதும் நம்மை அழைத்து செல்லும் மற்ற இருவர் பாஸ்கர் மற்றும் ராமையா ...தலை தீபாவளியை கொண்டாட முடியாமல் இப்படி காட்டுக்குள் அலைய விட்டதற்காக சுருளியை கொன்று விடுவதாக மிரட்டும் பாஸ்கர் கடைசியில் அவர்களுக்காகவே தன் வாழ்கையை தொலைக்கும் போது மனதில் நிற்கிறார் ...சீரியசான கதையை ஜாலியாக எடுத்து செல்வதற்கு "தம்பி" ராமையா பெரிதும்  உதவி செய்கிறார்...ஆனாலும் ஒரே விதமான முக பாவங்களை தவிர்ப்பது நல்லது ...அவர் மனைவியாக வரும் செந்தாமரையை  நேரே காட்டா விட்டாலும் மனதில் பதிய வைத்தது இயக்குனரின் திறமை ....
               பாஸ்கரின் மனைவியாக வரும் சூசன் ஆரம்ப காட்சியிலும் , இறுதி காட்சியிலும் வந்து நம்மை அசர வைக்கிறார்....அவருடைய அண்ணன் ,அண்ணிகள்
 அனைவரும் கதாபதிரத்திற்கு ஒத்து போகிறார்கள் ... 
                  சுகுமாரின் ஒளிப்பதிவு நம்மை கதை நடக்கும் இடத்திற்கே கொண்டு செல்கிறது ...அதிலும் விபத்து காட்சியை கஷ்டப்பட்டு எடுத்து இருக்கிறார்கள் .... இமான் இதற்கு முன்னர் கிரி ,விசில் படங்களில் ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தாலும்
 இந்த படம் நல்ல திருப்புமுனை ...பின்னணி இசையில் பின்னி இருக்கிறார் ."மைனா பாடல் மனதிலயே நிற்கிறது ..... 
 ஒளிப்பதிவு,இசை இரண்டும் படத்திற்கு பெரிய பலம் ......
                  எளிமையான கதை , தெளிவான திரைகதை , யதார்த்தமான கதா பாத்திரங்கள் , மிரள வைக்கும் கிளைமாக்ஸ்,ஒரு கைதி தப்பி விட்டால் போலீஸ் காரனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஆழமாக காட்டியது  என எக்கச்சக்க பலங்கள் படத்திற்கு இருந்தாலும் , மெதுவாக நகரும் ஆரம்ப காட்சிகள் , பருத்திவீரனின் பாதிப்பு , மைனாவிற்கு சுருளி மேல் ஏற்படும் காதலை ஆழமாக காட்டாதது , சில இடங்களில் பைத்திய காரனோ என சந்தேகப்படும் அளவிற்கு சுருளியின்  காதல் என்று சில குறைகளையும் தவிர்த்திருந்தால் மைனா "பருத்திவீரன்" , "சுப்ரமணியபுரம்"  வரிசையில் மைல் கல்லாக அமைந்திருக்கும் ,,,,
            எனினும் "மைனா" மனதை உலுக்கும் படம்...
    இப்படத்தை  ரெட் ஜைன்ட் நிறுவனம் மார்கெடிங் செய்வதால் நல்ல ஒபெனிங் இருக்கிறது ...  ஒரு வகையில்இது சந்தோசமாக இருந்தாலும் சின்ன தயாரிப்பாளர்கள் நிலைமையை நினைக்கும் 
போது கவலையாக இருக்கிறது ....எந்த விதமான பின் பலமும் இல்லாமல் ரிலீஸ் ஆன "களவானி"   நல்ல பெயர் எடுத்தாலும் நான்கு மாதங்களுக்குள் டிவி யில் போட்டு விட்டார்கள் என்பதே நிதர்சன உண்மை ..

7 November 2010

கமல் - "நிஜ" நடிகன்

                                                               
         இன்று 56   வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்...கடந்த 50 வருடங்களாக  இவர் தமிழ் சினிமாவிற்கு ஆற்றி வரும் அளப்பெரும் பணியை யாரும் தமிழ் சினிமா இருக்கும் வரை மறக்கவோ , மறைக்கவோ முடியாது ..

        நடிப்பையும் தாண்டி தொழில்நுட்பம் , இயக்கம் , திரைக்கதை , வசனம் , தயாரிப்பு ,இலக்கியம்  என அவரின் பல்துறை திறன் அவரை உண்மையான "தசாவதாரி" என்று நிரூபிக்கிறது ..இத்தனை வருடம் ஆகியும் ஒவ்வொரு படத்திற்கும் முதல் படத்தை போல அவர் காட்டும் அர்பணிப்பு , தேடல் , உழைப்பு அனைவரையும்  வியக்க வைக்கிறது ...

        தன் ரசிகர்களை வெறும் ஆரத்தி காட்டுவதிற்கும் ,   பாலாபிஷேகம் செய்வதிற்கும் , வியாபார ரீதியாக மட்டும் பயன்படுத்தி  வரும் பல நடிகர்களுக்கு மத்தியில் தன்  ரசிகர் மன்றங்களை "நற்பணி" மன்றங்களாக மாற்றி  இன்று வரை  அதன் மூலம் பல இயலாதவர்களுக்கு நல்லுதவிகளை செய்து வருகிறார்...சினிமாவில் சம்பாதித்ததை எல்லாம் தெளிவாக பல இடங்களில் முதலீடு செய்து வருபவர்களுக்கு மத்தியில் தன் பணத்தை எல்லாம் நஷ்டம் ஏற்பட்டாலும் புது முயற்சிகளுக்காக சினிமாவிலேயே முதலீடு செய்யும் இவர் நிச்சயம் ஒரு கலை "ஞானி" .....

       நடிப்பில் இவர் "உலக நாயகன் " என எல்லோரும் அறிவோம் ...எனினும் "அபூர்வ சகோதரர்கள் " , " தேவர் மகன்" , " தசாவதாரம்" போன்ற படங்களில் இவரின் திரைகதை பலரால் பாராட்டபட்டதோடு நல்ல வசூலையும் பெற்று தந்தது கூடுதல் செய்தி ....
    " உனக்குள்ள முழிச்சிட்டு  இருக்கற அதே மிருகம் தான் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு " - தேவர்மகன் ... " நல்லவங்களுக்கு  கிடைக்கிற அதே மாலையும் மரியாதையும் கெட்டவங்களுக்கும் கெடைக்குதே " - மகாநதி ... " வீரம்ன்றது பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது " - குருதிபுனல் ..."கடவுள் இல்லேன்னு யார் சொன்னா இருந்தா நல்ல இருக்குக்ம்னு தானே சொன்னேன் " - தசாவதாரம் ..... கமலின் வசனங்கள் இன்றும் , என்றும் மனதில் நிற்பவை .....

             இப்படி கமல்ஹாசனிடம் எவ்வளவோ நிறைகள் இருந்தாலும் அவரின் குறைகளையும் சுட்டி காட்ட வேண்டியது நம் கடமை ...பொதுவாக அவரின் மேதாவி தனமான பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தும் , அதிலும் தீபாவளி அன்று விஜய் டிவி " காபி வித் அனு "  வில் அவர் பேசிய பேச்சு எரிச்சலையே ஏற்படுத்தியது ...அதன் விளைவே இந்த பதிவு....
                                            
           வழக்கம் போல தன்னை பகுத்தறிவு வாதி என்று காட்ட   கடவுள் எதிர்ப்பு கொள்கையை  கையில் எடுக்கும் கமல் இந்த பேட்டியுலும் அதையே செய்தார் ..அதிலும் ஒரு படி மேலே போய் கடவுள் பக்தியை செக்ஸ் போல வீட்டுக்குள் வைத்து  கொள்ளுங்கள் ஏன் வெளியே தெரியும் படி நடந்து கொள்கிறீர்கள்  என்று ஏதோ கள்ள காதலை பற்றி பேசுவது போல பேசினார்...

            செக்ஸ் இதை  எல்லோரும் தெரியாமல் வைத்து கொண்டாலும் இதன் மூலம் உருவாகிற மனைவி . மகன் , மகள் என எல்லா பந்தத்தையும் யாரும் தெரியாமல் வைப்பது இல்லை .திருமணத்திற்கு பின் கணவன் மனைவி உறவில் செக்ஸ் பிரதானமாக இருந்தாலும் யாரும் அதை கொச்சையாக பார்ப்பது இல்லை ...அடுத்த சந்ததியை உருவாக்கும் தளமாகவே பார்கிறார்கள் ....அதை போல தான் கடவுள் பக்தி அனைவருக்கும் தெரியும் படி நடத்து கொள்வது ஒன்றும் கொலை குற்றம் அல்ல. ..அது அவரவர் விருப்பம் ...என் குளியலறையை  யாரும் எட்டி பார்க்காதீர்கள் என்று அறைகூவல் விடுக்கும் கமல் அடுத்தவரின் தனி மனித உரிமையில் தலையிடுவது எந்த  விதத்தில் நியாயம் ?...
   
            ஆரம்ப காலத்தில் இருந்தே தன்னை கமல் பிராமணர்  அல்லாதவராகவும் , அக்குலத்தை வெறுப்பவராகவும் , அசைவ உணவை விரும்பி உண்பவராகவும் முனைந்து காட்டி கொள்வதில் ஒரு காரணம் இருப்பதாக படுகிறது .. எல்லா திறமைகள் இருத்தும் தன்னையும் "ஜெமினி கணேசன்  " போல " சாம்பார்" என்று ஒதுக்கி விடுவார்களோ என்ற பயமாக இருக்கலாம் ...எனவே தான்  தன்னை ஆர்யன் அல்ல எல்லோரையும் போல திராவிடன் என்று பிரகனப்படுத்துவதில் முனைப்பாக  இருக்கிறார்... கமல் கூட போலி ஆர்ய - திராவிட மாயையில் விழுந்தது ஆச்சர்யமாக இருக்கிறது ...

         தன்னுடைய குடும்ப புகைப்படத்தை பார்த்து அண்ணன் மனைவியை மன்னி என்று கூறி விட்டு பிறகு அண்ணி என்று திருத்தி கொண்டார் ...மன்னி என்று சொல்வதில் ஒரு தவறும் இருப்பது போல பட வில்லை ..அவர் குல வழக்கப்படி அப்படி கூறுவது வழக்கமாக இருந்தால் அதை ஏன் மழுப்ப வேண்டும் ?...

           கமல் அவர்களே சினிமாவில் மட்டும் உங்கள் நடிப்பை காட்டினால் மிகவும் நல்லது ...அதுவே அனைவரின் விருப்பமும் கூட. ...கடவுள் எதிர்ப்பு என்பது ஏதோ நேற்று இன்று ஏற்பட்டது அல்ல ... பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்து மதத்தில் இரு விதமான வாதம் இருந்திருக்கிறது ...கண்ணதாசனின் " அர்த்தமுள்ள இந்து மதம் " பத்மனின் "ஆண்டவன் மறுப்பும் ஆன்மீகமே" போன்ற புத்தகங்களை படித்தால் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கலாம் .

         "பார்ப்பானை  ஐயன் என்ற  காலமும் போச்சே " என்று பாடிய பாரதியையே பார்ப்பான்  என ஒதுக்கிய கூட்டத்திற்கு மத்தியில்
யாரிடம் தமிழன் என சான்றிதழ் தேடுகிறீர்கள் ?...கடவுளே இல்லை என்றாலும் உங்களின் சில படங்களில் வைணவ தாக்கம் அதிகமாக இருப்பது ஏன் ?..."அன்பே சிவம் ' படத்திலேயே கடவுள்  பற்றிய கேள்விக்கு பதில் இருப்பது தெரியவில்லையா ?....

       உங்கள் பேட்டியில் ஹிந்தி நடிகர் திலிப் குமார் தன்னுடைய இயற்பெயரான " யூசுப் கானை  "     வெளியில் சொல்ல முடியாத கால கட்டத்தில் இருந்ததை எண்ணி நீங்கள் பரிதாபபடுவதாகவும் , அவரின் இயற்பெயரை சொல்லியே அழைப்பேன் என்றும் கூறியிருந்தீர்கள் .

       இன்றோ ஷாருக் கான் , சல்மான் கான் , அமீர் கான் என எல்லா கான்களும் உண்மைனையான பேருடன் முன்னணியில்   இருக்கிறார்கள் ...நீங்களும் உங்களின் முகமூடியை  கழட்டி விட்டு    முன்னே வாருங்கள் .....

5 October 2010

எந்திரன் திரை விமர்சனம்

                                   
   மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ரஜினி , ஷங்கர், ரஹ்மான் கூட்டணியில் ஒரு படம் , சன் பிச்சர்ஸ் நேரடி தயாரிப்பில் முதல் படம் , பட்ஜெட் 150 கோடி , உலகமெங்கும் மூன்று மொழிகளில் மூவாயிரம் பிரிண்ட் ரிலீஸ் , படம் வருவதற்கு முன்பே நிறைய எதிர்பார்ப்புகள் , விவாதங்கள் , விளம்பரங்கள் .......
     ஒரு வழியாக படத்தை பார்த்தாகிவிட்டது ...இது ஷங்கர் பாணி படமும் அல்ல , ரஜினி பாணி படமும் அல்ல , முழுவதும் கிராபிக்ஸை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம் ....
     விஞ்ஞானி வசீ ( ரஜினி ) பத்து வருட கடுமையான உழைப்பில் ஒரு ரோபோவை தயாரிக்கிறார் .... ரோபோவின் பெயர் சிட்டி ( ரஜினி ) ... அதை ராணுவத்தில் கொடுத்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது அவர் லட்சியம் ....ஆனால் இதற்கு அனுமதி அளிக்கும் பதவியில் இருக்கும் வசீயின் குருவான ப்ரோ . தோரா ( வில்லன் டானி )   பொறாமையுடன் மறுக்கிறார் .... ரோபோவிற்கு நல்லது கெட்டது தெரியாததால் நம் ராணுவதினரையே அது அழித்து விடும் அபாயம் இருக்கிறது என்று நிரூபித்து அதனை நிராகரிக்கிறார் .....வசீ சிட்டிக்கு உணர்ச்சிகளை சொல்லி கொடுக்க அது வசீயின் அழகான காதலியான  சனாவையே  ( ஐஸ்வர்யா ராய் ) , காதலிக்க தொடங்கி விடுகிறது......
       இதில் ஆத்திரமடையும் வசீ சிட்டியை அழித்து விடுகிறார் , பின்னர் அது வில்லன் கைக்கு போய் எவரையும் அழித்து விடக்கூடிய அபாயகரமான சக்தியாக மாறி விடுகிறது.....தன்னை போல ஆயிரம் ரோபோவை அது உருவாக்கி ஐஸ்வர்யா ராயை சிறை பிடிக்கிறது ....கடைசியில் ரோபோக்களை அழித்து விட்டு வசீ ராயை எப்படி மீட்கிறார் என்பதே கிளைமாக்ஸ் ....
          விஞ்ஞானி வசீ , ரோபோ சிட்டி , வில்லன் ரோபோ என மூன்று வேடங்களில் வருகிறார் ரஜினி ... எந்த வித ஒபெனிங் பில்ட் அப்பும் இல்லாமல் சாதாரணமாக அறிமுகம் ஆகிறார் சூப்பர்  ஸ்டார் ...காதலியின் கையை பிடிப்பவனை ( கலபாவன் மணி ) அடிக்காமல் கண்ணில் மண்ணை தூவி விட்டு ஓடுகிறார் ... இப்படி முற்றிலும் வித்தியாசமாக வசீ கதாபாத்திரத்தில் ரஜினி ...அவரை அவ்வளவு அழகாக காட்டியிருந்தும் ஒட்டு தாடி ஏனோ ஒட்டவில்லை....கடைசியில் சிட்டியை  அழிக்கும் இடத்தில மனதை தொடுகிறார் ....
       வசியை விட எல்லோரையும் வசீகரித்து இருபது சிட்டி ... சந்தானம் , கருணாஸை அடிக்கும் போதும் , பார்பர் ஷாப்பில் புக்ஸ் படிக்கும் போதும் , ஹனிபாவுடன் ( இவர் உயிருடன் இல்லாதது நிச்சயம் கலை துறைக்கு பெரிய இழப்பு )  உல்டாவாக பேசும் போதும்  , ஐஸ்வர்யாவிர்காக வசியுடன் சண்டை போடும் போதும் போதும், மக்னெடிக் பவர் மூலம் அடியாட்களின் பேண்டை உருவும்  இடத்திலும் என எங்கு பார்த்தாலும் சிட்டியின் சாம்ராஜ்யம் ...கோர்ட் உத்தரவின் படி தன்னை தானே அழித்து கொள்ளும் இடத்தில லேசாக மனம் கனக்கிறது......
             அசத்தலாக அறிமுகம் ஆகும் வில்லன் ரோபோ போக போக ஆயிரம் ரோபோக்கலாக மாறியவுடன் போரடிக்கிறார்....குரூர பார்வையுடன் ராயை அணுகும் போதும் , வில்லன் டானி யை கொல்லும் போதும் , ஸ்டைலாக சிரிக்கும் போதும் அந்த கால வில்லன் ரஜினியின் பஞ்ச் ....
           பொதுவாக ரஜினி படங்களில் பாடல்களுக்கு மட்டும் வரும் ஹீரோயினாக இல்லாமல் இதில் ஐஸ்வர்யா ராய்க்கு படம் முழுவதும் வருகின்ற முக்கியமான வேடம் , நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு .... நன்றாக பயன் படுத்தி இருக்கிறார் .....சிட்டிக்கு உறவு முறை பற்றி விளக்கும் இடம் உதாரணம் ....இடைவேளை வரை சிட்டியுடன்  கதையை இவரே நகர்த்துகிறார் ....பாடல்களில் நல்ல கவர்ச்சி ....
                 இசை , கேமரா , சண்டை , நடனம் என எல்லோரும் நன்றாக உழைத்து இருக்கிறார்கள் ..கிராபிக்ஸ் காட்சிகளை ஷங்கரே நேரடியாக மேற்பார்வை செய்து இருக்கிறார் ....
           இது போன்ற மிக பெரிய பட்ஜெட் படங்களை தமிழில் ஷங்கரை தவிர யாராலும் இயக்க முடியுமா என்பது கேள்விக்குறியே ..இருப்பினும் கதையை விட கிராபிக்ஸில் தான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார் .. .பாடல் , சண்டை காட்சிகளுக்கு செய்த செலவில் கொஞ்சமாவது  வசீயின் ஆராய்ச்சி கூடத்திற்கு செய்திருக்கலாம் .
                    பொதுவாக ஷங்கர் படங்களில் லாஜிக் பார்க்க கூடாது ....இருந்தும் இதில்  லாஜிக் சொதப்பல் ஏராளம் .....பத்து வருடமாக கஷ்டப்பட்டு ரோபோவை தயாரித்து அதை  எந்த வித எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் ஐஷ்வர்யா ராயுடன் அனுப்புகிறார் .... இதை தயாரித்தே ஏதோ எடுபிடி வேலை செய்வதற்கோ என யோசிக்கும் அளவிற்கு நிறைய காட்சிகள் .....முதலில் ரோபோ போல ஸ்டிப்பாக வரும் சிட்டி பின்னர் வில்லன் ஆக மாறியவுடன் சாதாரண மனிதன் போல நடந்து  கொல்வது சுத்த பேத்தல் ...எல்லா வித ஆற்றலும் படைத்த ரோபோ தன் இடத்தில  நுழைந்து  விட்ட வசியை கண்டுபிடிக்க ஏனோ இத்தனை குழப்பம் ....கிளைமாக்ஸ் கோர்ட் காட்சியில் வசிக்கு மரண தண்டனை விதிக்கும் நீதிபதி சிட்டி ரோபோ சாட்சி சொன்னவுடன் விடுதலை செய்வது ஆண்டாண்டு கால " தமிழ்படம் " .ENTHIRAN
             ஷங்கரின் ஜென்டில்மேன் ,  இந்தியன் , அந்நியன் , சிவாஜி என எல்லா படத்திலும் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் வேகமான திரைக்கதையும் , அழுத்தமான கதையும் அதை மறைத்து விடும் , ஆனால் இப்படத்தில் முழுவதும் கிராபிக்ஸ் ஆக்ரமித்து இருப்பதால் ரஜினி படம் என்பதை விட ஏதோ ஆங்கில படத்தின் டப்பிங் படம் பார்த்த உணர்வை தவிர்க்க முடியவில்லை .       ...
         ஒரே நாளில் இப்படம் பல கோடிகளை வசூலித்து   விட்டது என தெரு கோடியில் நின்று கொண்டு நிறைய பேர்  பேசிக்கொள்கிறார்கள் ....... ஆனால் எல்லா தரப்பு மக்களும் உடனே பார்க்க முடியாத படி எக்கச்சக்க டிக்கெட் விலை  .......இதனால் நான் படம் ரிலீஸ்  ஆன  அடுத்த நாளே பார்த்த போதும் கூட அரங்கம் பாதி கூட நிரம்ப வில்லை ...
சன் பிச்சர்ஸ் கவனிக்குமா ? .. ...
    ஒரு முழுமையான சூப்பர் ஸ்டார் படத்தை பார்ப்பது எப்போது ?.அரங்கத்தின் வெளியே ஒரு வெறி தனமான ரசிகனின் கேள்வி ..







22 September 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்

 
           
            பாஸ் ஐந்து வருடமாக ஆங்கில பரிட்சையில் அரியர் வைத்து கொண்டிருக்கும் ஹீரோ , அவருடைய ஒரே நண்பர் நல்லதம்பியாக சந்தானம்..இவர்கள் இருவரின் காமெடி கூட்டணியின் மத்தியில் கொஞ்சம் கதை....

           வெட்டியாக ஊரை சுற்றி கொண்டிருக்கும் ஆர்யா நயனை சந்தித்தவுடன் காதலிக்கிறார் ...பின்னர் நயனின் அக்காவே அவருக்கு அன்னியானவுடன் நயனை பெண் கேட்கிறார்.....வேலை வெட்டி இல்லாத ஒருவருக்கு எப்படி பெண் கொடுப்பது என்று கேட்டவுடன் ஆறு மாதத்தில் தன் தங்கையை பெரிய இடத்தில மணம் முடித்து வைப்பேன்  என்று சவால் விட்டு கிளம்புகிறார் ..இடைவேளைக்கு பிறகு நண்பன் சந்தானத்தின் உதவியுடன் டுடோரியல் ஆரம்பித்து வெற்றி பெறுகிறார்.......நயனை கை பிடிக்கிறார் ...

        டிக்கெட் சைஸ் கதை ...ஆனால் காமெடி எக்ஸ்ப்ரஸில் பயணம்....

        பரிட்சைக்காக பிட் ரெடி பண்ணும் காட்சியிலேயே ஆர்யாவின் அமர்க்களம் ஆரம்பமாகி விடுகிறது....நயனிடம் முதல் சந்திப்பிலேயே தன் பிட்டின் பெருமை பேசும் ஆர்யா பின்னர் அவரே எக்ஸாம் சூபெர்வைசெர் ஆக வரும் இடத்தில கல கல.......சிறிது நேரமே வந்தாலும் சுவாமிநாதன் சிரிக்க வைக்கிறார்......

      
         படம் முழுவதையும் தன் கவுன்டரில் தூக்கி நிறுத்துகிறார் சந்தானம்....ஆர்யாவை கலாய்க்கும் போதும் , அவருக்கு காதல் அறிவுரை கொடுக்கும் போதும் , அவருக்காக கடன் வாங்கி கொடுத்து விட்டு கண்ணீர் விடும் இடத்திலும், கடைசியில் நயனின் அப்பா "சித்ரா லக்ஷ்மணனை "" ஓட்டும் போதும் என அவர் செய்யும் எல்லா சேட்டைகளுக்கும் அரங்கமே அதிர்கிறது......

            நயன் அழகாக இருக்கிறார்....ஆனால் மிகவும் மெலிந்திருப்பது கவலை அளிக்கிறது....ஆர்யாவின் அண்ணன், அண்ணி , தங்கை , அம்மா என அனைவரும் பொருத்தமாக இருக்கிறார்கள்......
              
         கடன் கொடுக்கும் ராஜேந்திரன் , அவர் பையன், பாடம் எடுக்கும் பார்வை இழந்த பெண் என்று எல்லோரும் படத்தின் ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்..

         
         ஒன்றிரண்டு பாடல்கள் தவிர மற்றவை ஸ்பீட் ப்ரேக்கர்ஸ்..........

         காமெடி , டுடோரியலை முன்னுக்கு கொண்டு வர அவர்கள் எடுக்கும் முயற்சி , இயல்பான காட்சிகள் என நிறைய நல்ல  விஷயங்கள்  இருந்தாலும் சிரிக்க மட்டும் தான் முடிந்ததே ஒழிய படம் முடிந்து வெளியே வரும் போது எதுவும் மனதில் நிற்கவில்லை ...         

         பாஸ் வணிக   ரீதியாக பாஸ் செய்து விட்டார் ..........
      
Related Posts Plugin for WordPress, Blogger...