30 May 2013

பிச்சைக்கார கிழவி - சிறுகதை ...


ன்றும் என்றும் போலவே வழக்கமாகத்தான் இருந்தது . குப்பைத் தொட்டிகள் இருந்தும் ரோட்டில் சிதைந்து கிடக்கும் குப்பைகள் , காரை பற்றி நினைத்து பார்க்காத காலத்தில் வீட்டை வாங்கி விட்டதால் உள்ளே  அடைபடாமல் சுதந்திரமாய் ரோட்டோரம் வரிசையில் நிற்கும் கார்கள் , ரியல் எஸ்டேட் பூதங்களிடமிருந்து தப்ப முடியாமல் தங்கள் சுயத்தை இழந்து இடிபட்டுக் கொண்டிருக்கும் வீடுகள் , குழந்தைகளும் , செல்லப்பிராணிகளும் ஒன்றாகவே வளரும் குடிசைகள் , சூதாட்டத்தில் சிக்கித் தவிக்கும்  ஐ.பி.எல் பற்றி டீக்கடைகளில் நடக்கும் விவாதங்கள் என்று நான் வாக்கிங் போகும் போது புதிதாய் ரோட்டோரத்தில் பார்த்த பிச்சைக்கார கிழவியை தவிர  மற்ற  விஷயங்கள்  அன்றும் என்றும் போலவே வழக்கமாகத்தான் இருந்தன  .

அந்த மூதாட்டிக்கு 70 வயதுக்கு மேலிருக்கலாம் . தினமும் அவள் அங்கிருந்து நான் பார்க்கவில்லையா அல்லது புதிதாய் வந்திருக்கிறாரா என்று தெரியவில்லை . ஒடிசலான தேகம் , ஒட்டிய கண்கள் , பக்கத்தில் தடி , பிச்சைக்காக நீட்டிய கைகள் என எல்லாமே அவள் வறுமையை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தன . பொதுவாகவே நான் பிச்சை போடுவதை ஊக்குவிப்பதில்லை . ஒரு கூட்டத்தையே சோம்பேறிகளாக்குவதோடு நாமும் ஏமாற்றப்படுகிறோம் என்கிற உள்ளுணர்வு எனக்கு உண்டு . இரயில் , பேருந்து பயணங்களில் இதை தவிர்ப்பதற்காகவே  அதிக நேரங்கள் புத்தகங்களில் மூழ்கி விடுவது என் வழக்கம் . ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி நடந்து விடுவதில்லை . வயதானவர்கள் பிச்சை எடுப்பதை பார்க்கும் போது மட்டும் என் கொள்கை பிடிப்பு தளர்ந்து விடும் . வாழும் போதிருக்கும் கஷ்டம் சாவு வரை தொடர்வது கொடுமை . ப்ளாட் கலாசாரம் வந்த பிறகு யாரோ வயதானவர்களை பார்த்து குழந்தைகளுக்கு தாத்தா , பாட்டி என்று  சொல்லித் தருகிறோம் . உண்மையான தாத்தா , பாட்டிகள் ஒரே வீட்டில் நிரந்தரமாக தங்க முடியாமல் அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் .

நிச்சயம் இந்த கிழவிக்கும்  மகனோ , மகளோ இருந்து கவனிக்காமல் விரட்டி விட்டிருக்கலாம் . அவள் அங்கங்கே பிச்சையெடுத்து வயிற்றை கழுவிக்கொள்ளலாம் , ஆனால் உடம்புக்கு ஏதாவது வந்து விட்டால் எங்கே போவாள் என்று நினைத்த போது உள்ளுக்குள் ஏதோ செய்து அந்த முகம் தெரியாத மகன் , மகள் மேல் கோபம் வந்தது . வாழ்க்கை முழுவதும் படிப்பு , வேலை இந்த இரண்டை மட்டுமே பிறந்தற்கான நோக்கமாக கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் லோகத்தில் அவர்கள் மட்டும்  விதிவிலக்கா என்ன ? . எந்த ஒரு இடத்தில் முதலீடு செய்தாலும் அதற்க்கான லாபத்தை எதிர்பார்க்கிறோம் , ஆனால் லாபத்தை எதிர்பார்க்காமல் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு பெற்றோர்களின் பணம் செலவழிக்கப்படுகிறது . எந்தவித வாக்குறுதியும் இல்லாமல் தங்கள் வாழ்நாள் சம்பாத்தியத்தை இழந்து விட்டு தவிக்கும் லட்சோப லட்ச ஆத்மாக்களுள் இந்த கிழவியும் ஒருத்தியோ ?! . சிந்தனைகள் ஒருபக்கம் ஓட அவளுக்கு ஏதாவது கொடுக்கலாம் என்று பையை துழாவிய போது தான் அதில் ஒன்றுமில்லை என்று தெரிந்தது .

வாக்கிங் போகும் போது ஏதாவது வாங்க வேண்டுமாயிருந்தாழொலிய நான் பணம் எடுத்து வருவதில்லை என்ற ஞாபகம் வர கொஞ்சம் அலுத்துக்கொண்டேன் . நாளை மறக்காமல் பணம் எடுத்து வர வேண்டுமென்று அப்பொழுதே மனதில் குறித்துக் கொண்டேன் . அந்த கிழவி மீது ஒரு படி  மேலே பரிவு வர காரணம் இறந்து போன எனது பெரியம்மா . எனது பள்ளி காலங்களில் அம்மா வீட்டிலில்லாத போது எனக்கு சமைத்து போட்டவள் . என் அப்பா சாப்பிடும் போது ஏதோ தேர்வு  எழுதி விட்டு  முடிவுக்கு காத்திருக்கும் மாணவி போல கதவருகில் நின்று கொண்டு பயத்துடன் பார்க்கும் அந்த கண்கள் இன்றும் என் நினைவில் இருக்கிறது . நான் என்றுமே பெரியம்மாவை எனக்கு சாதம் போட அனுமதித்ததில்லை . அதற்கு காரணம் அந்த கருப்பு கைகள் . சமையலறையில் வேலை பார்த்து பார்த்து காய்த்துப் போன அந்த கைகளை பார்க்கவே எனக்கு சிறு வயதில் பயமாக  இருக்கும் . கொஞ்சம் பெரியவனான பிறகு " என்னடா நான் சாதம் போடலாமா" என்று பெரியம்மா குறும்பாக கேட்கும் போது அசடு வழிந்திருக்கிறேன் . பத்தாவதுக்கு  மேல் படிப்பதற்கு எனது அப்பா உதவி செய்தும் பெரியம்மா மகன் சரியாக படிக்காமல் ஊதாரியாக சுற்றியதால் எனது வீட்டிற்கு வரவே அவள்  பயந்து கொண்டிருந்த காலமது . ஒரு நாள் நேரே பார்க்கும் போது எனது அப்பா அதை பற்றி ஒரு வார்த்தை கூட பெரியம்மாவிடம் கேட்காதது எனக்கு   ஆச்சர்யமாக இருந்தது .

பெரியவன் ஆக ஆக நான் என் நண்பர்கள் வட்டத்துக்குள் ஐக்கியமாகி விட பெரியம்மா மகள் வீட்டை பகைத்துக் கொண்டு திருமணம் செய்து எங்கோ சென்று விட்டது , மகன் சரியாக படிக்காததால் ஆட்டோ ஒட்டிக் கொண்டிருப்பது இதையெல்லாம் என் அம்மா மூலம் அவ்வப்போது தெரிந்து கொண்டேன் . ஒரு நாள் என் நண்பன் வீட்டை விட்டு வெளியே வரும் போது தான் நீண்ட நாட்கள் கழித்து எனது பெரியம்மாவை பார்த்தேன் . தெருவோரம் அமர்ந்து கொண்டு வருவோர் போவோரிடம் அப்பளம் விற்றுக் கொண்டிருந்தாள் . நண்பன் கூட இருந்ததால் பேசலாமா வேண்டாமா என்ற யோசனையில் நானிருக்கும் போதே " ராசா " என்று ஆசையாக கூப்பிட்டாள் . சுற்றியிருப்பவர்கள் என்னை ஒரு மாதிரி பார்ப்பது போலவே எனக்கு அப்போது பட்டது . " உங்க அப்பாருக்கு அரிசி அப்பளம்னா உசுரு " என்று சொல்லி எனது கைகளில் நான்கைந்து அப்பளப் பொட்டலங்களை திணித்தாள். இதற்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே " காலேஜெல்லாம் நல்லா படிக்கிறியா , என் புள்ள மாதிரி ஆயிடாத " என்று சொல்லி கொஞ்சம் பணத்தை என் பாக்கெட்டில் வைக்கும் போது அவள் குரல் தழுதழுத்தது . நான் எவ்வளவோ வற்புறுத்தியும்  என்னிடமிருந்து பணத்தை அவள் வாங்கிக் கொள்ளவேயில்லை . என் அப்பா தான் பெரியம்மாவிற்கு நிறைய செய்திருக்கிறாரே என்றும் , சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு திரும்ப கொடுத்துக்கொள்ளலாம் என்றும் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன் .

வீட்டிற்கு வந்து என் அம்மாவிடம் இதை சொல்லிய பிறகு ஒரு களேபரமே நடந்தது  . ஒரு கட்டத்துக்கு மேல் நான் கோபமாக " நம்மட்ட எவ்வளோ வாங்கித் தின்னிருப்பாங்க , ரொம்ப தான் கத்துறியே  " என்று சொன்னது தான் மிச்சம் .என் அம்மாவிடமிருந்து பெரிய அழுகை வந்தது . சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்ட அம்மாவை  தாயும் , தந்தையுமாய் இருந்து பார்த்துக் கொண்ட பெரியம்மாவிற்கு என்ன செய்தும் நன்றிக் கடனை தீர்க்க முடியாது  என்பதை புரிந்து கொண்டேன் . நான் நின்று கொண்டிருக்கும் வீட்டை கட்டுவதற்காக வாங்கிய கடனையே இன்னும் என் அப்பா முழுமையாய் அடைக்கவில்லை என்பதையும் தெரிந்து கொண்ட பிறகு  எனக்கு லேசாய் தலை சுற்றியது  . கடைசி வரை என் பெரியம்மா யாரிடமும் கையேந்தாமல் தன் சொந்த உழைப்பிலேயே வாழ்ந்து போய் சேர்ந்து விட்டாலும் ஏனோ  எனக்கு இந்த மூதாட்டியை பார்க்கும் பொழுது பெரியம்மா ஞாபகம் வந்தது . நிச்சயம் நாளை வரும் போது ஏதாவது செய்ய வேண்டுமென்கிற நினைப்பில் வீடு திரும்பினேன் .

அடுத்த நாள் வந்த போது கிழவி அங்கே இல்லை . நாளை பார்க்கத்தானே போகிறோம் என்று திரும்பி விட்டேன் . அடுத்த நாளும் வந்தது . கிழவியும் இருந்தாள் . நான் அருகே சென்று என் பைக்குள் கையை விட்டேன் , அதில் ஒன்றுமேயில்லை . ஒரு நிமிடம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை , பை எதுவும் ஓட்டையா என்று மீண்டுமொருமுறை சரி பார்த்துக் கொண்டேன் . பிறது தான் தெரிந்தது நான் இன்று வேறு ட்ராக் சூட் போட்டிருக்கிறேன் என்று . ஒவ்வொரு முறையும் அருகில் வந்து விட்டு வெறும் கையை வீசிக்கொண்டு போகும் என்னை கிழவி எந்தவொரு சலனமுமில்லாமல் பார்த்தாள் . எனக்கு என்னமோ போலிருக்க விறுவிறுவென்று நடையை கட்டினேன் . இன்று வீட்டிலிருந்து கிளம்பும் போதே பேன்ட் , சட்டை போடிருக்கிறேனா எனபது  உட்பட எல்லாவற்றையுமே ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக்கொண்டேன் . பர்சிலிருந்து எடுத்து வைத்துக்கொண்ட பணம் பேண்டுக்குள் பதுங்கியிருந்தது . எனது நடவடிக்கைகளை என் மனைவி வேறு மாதிரியாக பார்ப்பது போலவே தெரிந்தது . அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் எனது நடை பயணத்தை தொடங்கினேன் .

கிழவியிடம் பணத்தை கொடுத்த பிறகு அவள் முகம் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்துக் கொண்ட நடந்தேன் . அன்று போல் சலனமில்லாமல் இருக்குமா ? அல்லது பெரியமாவின் பார்வை  போல குறும்பாக இருக்குமா ? எப்படியிருந்தாலும் பணத்தை கையில் திணித்து விடுவது என்ற முடிவில் அவள் இடம் நோக்கி சென்றேன் . கூட்டம் கூட்டமாக வழி மறித்துக் கொண்டு பேசுவது தமிழர்களின் இயல்பா ? இல்லை இந்தியர்களின் இயல்பா ? என்று தெரியவில்லை . ரோட்டை மறித்துக் கொண்டு வெட்டிக்கதை பேச யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது ? நான்சென்ஸ் என மனதுக்குள் திட்டிக்கொண்டே அவர்களை கடந்து சென்ற எனக்கு ஏதோ உறுத்த கூட்டத்தை விளக்கிக் கொண்டு எட்டிப்பார்த்தேன் . அங்கே ரோட்டில் கண்கள் வெறித்திருக்க கிழவி மூர்ச்சையாகியிருந்தாள் . சலனமில்லாத அந்த பிச்சைக்கார கிழவியின் முகத்தின் வழியே என் பெரியம்மா என்னை பார்ப்பது போலவே இருந்தது ...



12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பெரியம்மா ஒரு தெய்வம்...

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
பெரியம்மா ஒரு தெய்வம்...

அப்போ அம்மா குல தெய்வமா ?! ... உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

மாதேவி said...

கதை நெகிழ்ச்சி.

இதேபோல தினந்தோறும் எத்தனைபேர் வீதிகளில் ....

Yaathoramani.blogspot.com said...

பெறுவதற்கு மட்டுமல்ல
கொடுப்பதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும்
மனம் கவர்ந்த கதை
வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

ரமணி சார் சொல்வது போல கொடுப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

மனதைத் தொட்ட பகிர்வு..... வாழ்த்துகள்.

Padman said...

கதையின் நீதி: கையில் ஒத்தை ரூபா கூட இல்லாம வெளியில போகாதே. இரண்டாவது நீதி: உதவியை உடனே செய். மூன்றாவது நீதி: மூர்ச்சையான கிழவியை ஆஸ்பத்திரியில் சேரு. அது இருக்கட்டும். கதையின் போக்கு அருமை

ananthu said...

மாதேவி said...
கதை நெகிழ்ச்சி.
இதேபோல தினந்தோறும் எத்தனைபேர் வீதிகளில் ....
Thursday, May 30, 2013

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Ramani S said...
பெறுவதற்கு மட்டுமல்ல
கொடுப்பதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும்
மனம் கவர்ந்த கதை
வாழ்த்துக்கள்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

வெங்கட் நாகராஜ் said...
ரமணி சார் சொல்வது போல கொடுப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
மனதைத் தொட்ட பகிர்வு..... வாழ்த்துகள்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Ananda Padmanaban Nagarajan said...
கதையின் நீதி: கையில் ஒத்தை ரூபா கூட இல்லாம வெளியில போகாதே. இரண்டாவது நீதி: உதவியை உடனே செய். மூன்றாவது நீதி: மூர்ச்சையான கிழவியை ஆஸ்பத்திரியில் சேரு. அது இருக்கட்டும். கதையின் போக்கு அருமை

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

Unknown said...

கதையின் நீதி: கையில் ஒத்தை ரூபா கூட இல்லாம வெளியில போகாதே. இரண்டாவது நீதி: உதவியை உடனே செய். மூன்றாவது நீதி: மூர்ச்சையான கிழவியை ஆஸ்பத்திரியில் சேரு. அது இருக்கட்டும். கதையின் போக்கு அருமை
ரமணி சார் சொல்வது போல கொடுப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
மனதைத் தொட்ட பகிர்வு..... வாழ்த்துகள்.

ananthu said...

Senthil kumar Subramaniam said...
கதையின் நீதி: கையில் ஒத்தை ரூபா கூட இல்லாம வெளியில போகாதே. இரண்டாவது நீதி: உதவியை உடனே செய். மூன்றாவது நீதி: மூர்ச்சையான கிழவியை ஆஸ்பத்திரியில் சேரு. அது இருக்கட்டும். கதையின் போக்கு அருமை
ரமணி சார் சொல்வது போல கொடுப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
மனதைத் தொட்ட பகிர்வு..... வாழ்த்துகள்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...