24 October 2014

கத்தி - KATHTHI - ஷார்ப் ...


துப்பாக்கி வெற்றியை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டுமொரு தீபாவளி ரிலீஸில் இணைந்திருக்கிறார்கள் விஜயும் , ஏஆர்.முருகதாசும் . கதைக்காக கத்தி மேலெல்லாம் நடக்காமல கல் தோன்றா மண் தோன்றா காலத்து டபுள் ஹீரோ ஆள்மாறாட்ட கத்திக்கு சோசியல்
மெஸேஜ் என்னும் சானை பிடித்து பளபளப்பாக்கியிருக்கிறார்கள் ...

கொல்கொத்தா ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கைதி கதிரேசன் (எ) கத்தி
( மேக்கப் போட்ட விஜய் ) , தன்னூத்து கிராமத்தை கார்ப்பரேட் குளிர்பான கம்பெனியின் நில ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற நினைக்கும் ஜீவானந்தம்
( மேகப்பில்லாமல் எண்ணை வழியும் முக விஜய் ) இந்த இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையில் இடம் மாறுகிறார்கள் . இட மாற்றத்தால் மனம் மாறும் கத்தி தன்னூத்து கிராமத்தை எம்.என்.சி முதலாளி ( நீல் நிதின் முகேஷ் ) யிடமிருந்து காப்பாற்றினானா என்பதை கொஞ்சம் நீட்டி முழக்கினாலும் ( ரெண்டேமுக்கா மணிநேரம் ) ஃப்ரெஸ்ஸான திரைக்கதையால் திறம்பட சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...

எத்தனை வேடம் போட்டாலும் கெட்டப்பில் ரிஸ்க் எடுக்கத் தயங்கும் விஜய்க்கு ஏற்றபடியான டபுள் ஹீரோ சப்ஜெக்ட் . டான்ஸ் , ஃபைட் என்று துள்ளி விளையாடியிருக்கும் கத்தி விஜய் எமோஷனல் சீன்களில் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார் . போலீசுக்கே கைதியை பிடிக்க ஸ்கெட்ச் போட்டு கொடுப்பது , ரூபாயை சுண்டி விட்டு 50 அடியாட்களை அடிப்பது , ஏரியை அபகரித்து சென்னை மக்களை ரெண்டு நாட்கள் தண்ணியில்லாமல் தவிக்க விடுவது , ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் பிரஸ் மீட்டில் புள்ளி விவரங்களை அள்ளி தெளிப்பது என்று லாஜிக் பார்க்காமல் இருந்தால் இந்த விறு விறு விஜய்யின் மேஜிக்கை நன்றாகவே ரசிக்கலாம் . ஆனாலும் ஒரு விஜய் கண்ணை மட்டும் சிமிட்டி வித்தியாசம் காட்டியிருப்பது உலக சினிமாக்களிலேயே இது தான் முதல்முறை ...


மூணு  பாட்டுக்கு விஜய்யோடு சேர்ந்து அரைகுறை ஆடையில் ஆட ஆள் வேண்டும் . அந்த வேலைக்கு சமந்தா சரியாக பொருந்துகிறார் .( இதுக்கு எத்தன கோடியோ ! ) . அதெப்படியோ  தமிழ் சினிமாவில் ஹீரோ மட்டும் யாராக இருந்தாலும் பக்கா ப்ளான் போடும் புத்திசாலியாக இருக்கிறார்கள் . ஆனால் ஹீரோயின்கள் மட்டும் லூசு போலவே சித்தரிக்கப்படுகிறார்கள் . என்று தணியும் இந்த ஆணாதிக்க மோகம் ?! . ( ஹி ஹி கொளுத்திப் போட்டாச்சு ) . சோலோ காமெடியனாக வரும் சதீசுக்கு இந்த படம் செம ப்ரேக் . ஆல் தி பெஸ்ட் ப்ரோ . வில்லன் முகேஷ் பல்லை காட்டியெல்லாம் பயமுறுத்தாமல் கூலாக நடித்து ஸ்கோர் செய்கிறார் . இவருக்கு டப்பிங் பேசியவர் சூப்பர் தேர்வு ...

அனிருத்தின் பி.ஜி.எம் சான்சே இல்ல . சாதாரண சீன்களை கூட இவருடைய இசை பிரம்மாண்டமாக்குகிறது . அஜித் படங்கள் போல விஜய்க்கும் பின்னணி இசை பேசியிருக்கிறது . " செல்பி புள்ள " தாளம் போட வைத்தால் , யேசுதாஸ் குரலில் " யார் பெற்ற " பாடல் தழுதழுக்க வைக்கிறது . ,ஆனால் வழக்கமான விஜய்யின் மாஸ பாடல்கள் இதில் மிஸ்ஸிங் . படத்தில் சண்டைக்காட்சிகளும் பிரமாதம் ...


" ஐயாயிரம் கோடி கடன் வாங்கி திரும்ப கொடுக்காதவன் தற்கொலை பண்ணிக்கல , ஆனா அஞ்சாயிரம் வாங்கின விவசாயி வட்டி கட்ட முடியாம சாகுறான் " போன்ற வசனங்கள் படத்திற்கு பெரிய பலம் . விவசாயிகள் தற்கொலையைப் பற்றி எந்த அக்கறையும் காட்டாமல் டி.ஆர்.பி க்காக மட்டும் நியூஸ் தேடி அலையும் மீடியாக்களையும் இயக்குனரின் வசனங்கள் விட்டு வைக்கவில்லை . ஆனால் அதே சமயம் 2 ஜி உட்பட எவ்வளவோ  பெரிய ஊழல்களை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நான்காம் தூண்களின்  செயல்களை மறந்து விட்டு அவற்றை வெறும் மூன்றாம் தரமாக மட்டும் சித்தரித்திருப்பதை தவிர்த்திருக்கலாம் . இன்று சிட்டியிலிருக்கும் முக்கால் வாசி பேர் கிராமத்திலிருந்து வந்து செட்டிலானவர்கள்  என்பதை தெளிவாக விட்டு  விட்டு நகரவாசிகளை வில்லன்கள் போலவும் , கிராமத்து வாசிகளை நல்லவர்கள்  போலவும் சித்தரிக்கிறது படம் ...

டபுள் ஹீரோ ஃபார்முலா கதை , பாண்டவர் பூமி உட்பட பல படங்களில் பார்த்த விவசாயிகள் பிரசசனை போன்ற குறைகளை , சொல்ல வந்த விஷயத்திற்காக இயக்குனர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல்கள் மறக்கடிக்கின்றன . சின்ன ஏ.வி என்று சொல்லிவிட்டு ஜீவானந்தத்தின் முழுக் கதையையும் காட்டுவது முதலில் நெளிய வைத்தாலும் ஆறு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி நெகிழ வைக்கிறது . மொத்தத்தில் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வந்திருக்கும் இந்த கத்தி கொஞ்சம் பழசாக இருந்தாலும் சொன்ன விதத்தில் நல்ல ஷார்ப் ...

ஸ்கோர் கார்ட் : 42

( பின்குறிப்பு ) : அரசியல்வாதிகள் , காவல்துறையினர் , அரசு அதிகாரிகள் , மீடியாக்கள் , ஆசிரியர்கள் , கார்பரேட்கள் என்று எல்லோரையும்  தோலுரிக்கும் நம்மூர் சினிமாக்காரர்கள் ஏன் இதுவரை சினிமாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் , வரி ஏய்ப்புகள் , அதிகார துஷ்பிரயோகங்கள்,
ஊழல்கள் , பிரபலங்களின் இருட்டு பக்கங்கள் போன்றவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களை தைரியமாக எடுக்க முன்வரவில்லை ? அப்படி எடுத்தால் நிச்சயம் அந்த படத்தை நல்ல சினிமா ரசிகர்களுக்கு சமர்ப்பணம் என்று போடலாம )


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...