1 May 2017

பாகுபலி 2 - BAHUBALI 2 - The Conclusion - கோடை கொண்டாட்டம் ...


" Why Kattappa Killed Bahubali " ? - இந்த கேள்வியை  தான் கடந்த மூன்று வருடங்களாக இந்தியாவே கேட்டுக்கொண்டிருந்திருக்கும்  . ஆனால் இந்த கேள்விக்கான பதிலை படம் பார்க்கும் போதே யூகிக்க முடிந்தாலும் அந்த பிரம்மாண்டம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறது . பாகுபலி 1 வசூல் மூலம் ஷாருக் , சல்மான் , அமீர் என்று எல்லா கான்களையுமே  கலங்கடித்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி . பாகுபலி 2 மூலம் ஹாலிவுட்டுக்கே சவால்  விட்டிருக்கிறார் என்றே சொல்லலாம் ...

கட்டப்பா ( சத்யராஜ் ) வின் வாக்குமூலம் வாயிலாக தொடங்கும் படம் அமரேந்திர பாகுபலி ( பிரபாஸ் ) யின் அட்டகாசமான அறிமுகம் , தேவசேனா
( அனுஷ்கா ) வுடனான காதல் ,   அன்னை சிவகாமியுடன் மனக்கசப்பு , அரியணைக்காக சகோதரன் பல்லதேவன்
( ராணா டக்குப்பட்டி ) செய்யும் சூழ்ச்சி என்று விரியும் படம் மகன் மஹேந்திர பாகுபலி ( பிரபாஸ் ) மகிழ்மதி யின்  ஆட்சியை கைப்பற்றுவதோடு முடிகிறது ...


தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஸ்க்ரீனில் வந்தவுடனேயே தியேட்டரில் விசில் பறக்கிறது . அதுவே ஒரு மிகப்பெரிய வெற்றி . முதல் பாகத்தை விட இதில் அவருடைய உழைப்பு கடுமையானது . ஹீரோயிசம் இதில் படு தூக்கலாக இருப்பது கொஞ்சம் சலிப்பை கொடுத்தாலும் அந்த பிரம்மாண்ட பாகுபலிக்கு பிரபாஸ் படு கச்சிதம் . ராணா தன்  பார்வையிலேயே வில்லத்தனத்தை காட்டுகிறார் . வில்லன் கேரக்டருக்கு உடம்பை இந்த அளவு வருத்தி ஏற்றியது இவராக தான் இருக்கும் . அரசணை வேண்டுமென்றால் அண்ணனாவது , தம்பியாவது என்கிற வன்மம் படம் நெடுக அவர் உடல்மொழியிலேயே தெரிகிறது ...

அரசிக்கேற்ற கச்சிதமான வேடத்தில்  அனுஷ்கா . என்ன படம் ரொம்ப வருடம் எடுத்ததாலோ என்னமோ அம்மணி டயட்டை மறந்துவிட்டார் . விளைவு சில சீன்களில் ஆன்டி போல தெரிகிறார் ஆனா அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் . " நான் இந்த பெரிய படத்தில் சின்ன நடிகன் " என்று மன்னிப்பு கடிதம் வாசித்தார் சத்யராஜ் . படம் பார்த்த பிறகு புரிகிறது . ஹீரோவுக்கு அடுத்த படியாக வரும் ரொம்ப சின்ன வேடம் என்று . முதல் பாதி வேகமாக நகர்வதற்கு இவரது காமெடி நிறையவே கை கொடுக்கிறது . படையப்பா வுக்கு பிறகு ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் . ஆஜானுபாகுவான ஆண்களுக்கு மத்தியில் உருவத்தில் சின்னவராக  இருந்தாலும் கம்பீரமான நடிப்பால் மிரட்டுகிறார் .  நாசர் நடிப்புக்கு கோபத்தில் சுவற்றை உடைக்கும் அந்த ஒரு சீனே போதும் . அனுஸ்கா வின் மாமா வாக வருபவரும் இந்த ஸ்டார் பட்டாளத்துக்கு நடுவே ஸ்கோர் பண்ணுகிறார் ...


மேலைநாடுகளுக்கு எந்தவிதத்திலும் இந்தியன் சளைத்தவனில்லை என்று நிரூபிக்கிறார் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் . காதல் , ஆக்சன் , செண்டிமெண்ட் என்று எல்லா காட்சிகளிலும் படத்தின் பிரம்மாண்டத்தை நம் கண்களிலும் தக்க வைக்கிறது அவரது ஒளிப்பதிவு . சி.ஜி . ஆக்சன் , செட் என்று எல்லாமுமே சேர்ந்து நம்மை புது உலகுக்குள் கொண்டு செல்கின்றன .
கீரவாணி யின் பின்னணி இசை இதில் முந்தையதை விட ஒரு மாற்று குறைவு தான் . கார்க்கியின் பாடல்கள் டப்பிங்க் நெடியில் இருந்தாலும் வசனங்கள் கவர்கின்றன .  ஆனால் இந்த டெக்கனிகள் பூச்சாண்டிகளை மட்டுமே நம்பாமல் திரைக்கதையில் தனது தனி முத்திரையை பதிக்கிறார் ராஜமௌலி ...

கிட்டத்தட்ட மூன்று மணி நேர படம் ஒரு வித தொய்வை கொடுத்தாலும் முதல்  பாதி போவதே தெரியவில்லை . படத்திற்கு ஆக்சன் காட்சிகள் தான் பலம்னாலும்  ஒரு சின்ன பெஞ்சில் முட்டிக்கொண்டாலே நமக்கு முட்டி ரெண்டு நாளைக்கு விண்ணுன்னு தெறிக்குது இதுல என்னென்னா கோட்டையே இடிஞ்சு விழுந்தாலும் திரும்பவும் எந்திருச்சு ஃப்ரெஷ்ஷா சண்டை போடுறாய்ங்க . பிரபாஸ் தாவி தாவி ஓடும் போது சோட்டா பீம் கண் முன் வந்து போகிறார் . பாகுபலி 1 இல் " ஐஸ்தராப்பூ ஸ்வஞிக " என்று நமக்கு புது பாஷை சொல்லிக்கொடுத்த வில்லன் இதில் மிஸ்ஸிங் . ஹாலிவுட்டின்  ஹீ மேன் , ஸ்பைடேர் மேன் , சூப்பர் மேன் இதுக்கெல்லாம் தாத்தா நம்ம ஹனுமான் . அதை திரையில் சொல்வதற்கும் நம்மிடம் ஆள் இருக்கிறது எனும் வகையில் உலக அரங்கில்  நம்மை தலைநிமிர வைத்திருக்கும் படம் பாகுபலி . "பாகூகூ கூ கூ  பலி " , " மகிழ் மதீஈ " என்று வீட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளையும் கூவ வைத்திருக்கும் பாகுபலி 2 நிச்சயம் கோடை கொண்டாட்டம் ...

ரேட்டிங்க்           : 3.75 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 48








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...