17 June 2011

ஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்

                                   
       நீண்ட நாட்களுக்கு பிறகு குறிப்பாக இந்த வருடத்தில் வந்திருக்கும்  தமிழ்
படங்களில் என்னை மிகவும் பாதித்த படம் "ஆரண்ய காண்டம்"....கடந்த ஆண்டு சர்வதேச திரை அரங்கில் தெற்கு ஆசியாவின் சிறந்த படத்திற்கான ஜூரி  விருதினைப் பெற்றதில் இருந்தே இந்த படத்தின் வரவிற்காக 
நான் காத்துக் கொண்டிருந்தேன்  என்று  சொல்லலாம்...சர்வதேச விருதிற்கான காரணத்தை  படமும் நிரூபித்திருக்கிறது....

        இயக்குனர் என்ன சொல்கிறார் என்பதை விட எப்படி சொல்கிறார் என்பதே முக்கியம் என்பது  படத்தின் திரைக்கதை மூலம் நிரூபணம் ஆகிறது...
                      எது தர்மம் ?
                      எது உனக்கு சரியோ அதுவே தர்மம்....   

     மேற்கண்ட வரிகளை படம் தொடங்கும் போதும் முடியும் போதும்
போடுகிறார்கள்..இதுவே படத்தின் மூலம் .

           பெரிய கடத்தல் தாதாவான சிங்கம்பெருமாள் ( ஜாக்கி ஷெராப் ), 
வயதானாலும்  அவன் கட்டாயப்படுத்தி  வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இளம்பெண் சுப்பு ( யாஸ்மின் பொன்னப்பா) , அவளுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் சப்பை ( ரவி கிருஷ்ணா ) , கடத்தல் கூட்டத்தில் ஒருவனான பசுபதி ( சம்பத் ), இவர்களின் கடத்தல் விளையாட்டுக்குள் வந்து சிக்கிக்கொள்ளும் கலையன் ( குரு சோமசுந்தரம் ) மற்றும் அவன் பையன் கொடுக்காப்புளி ( மாஸ்டர் வசந்த் ) இவர்களுக்கு இடையில் 
நடக்கும் சம்பவங்களே கதை....
                          
                     
             படம் மெதுவாக நகர்வது போல இருந்தாலும் இடையில் சிறிது நேரம் 
கூட நம்மை அங்கே,இங்கே நகர விடாமல் ஒன்ற வைப்பது திரைக்கதையும் , 
நடிகர்களும்...அதிலும் குறிப்பாக குரு சோமசுந்தரம் மற்றும் மாஸ்டர் வசந்த் 
வரும் காட்சிகளில் நகைச்சுவையை தெளித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்....
இயல்பான வசனங்களும் , புத்திசாலித்தனமான காட்சி அமைப்புகளும் படத்தை 
அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன ...

             எல்லோருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்..தன்னுடன் இருக்கும் 
இளம் பெண்ணை சந்தோசப்படுத்த முடியாமல் எரிச்சல் பட்டு   அவளை அடிக்கும்
முதல் காட்சியில் இருந்தே கலக்குகிறார் ஜாக்கி..அவர் பல்லைக் காட்டுவது  ,
ஆங்கிலம் பேசுவது  , மெதுவாக ஆடிக்கொண்டே மாடிப்படிகளில்
ஏறுவது என எல்லாமே அசத்தல்...ஒருவனை இரக்கமே 
இல்லாமல் அடித்து விட்டு அதன் ரத்தக்கறை சட்டை எங்கும் பரவி இருக்க அதை கொஞ்சம் 
கூட சட்டை செய்யாமல் தன் செருப்பின் அசுத்தத்தை துடைக்கும் 
ஒரு காட்சி ஜாக்கியின் நடிப்பிற்கும் , ஒருவனை கொடூரமானவனாக காட்ட வசனமோ , வீச்சறுவாலோ தேவையில்லை என்பதற்கும் 
ஒரு உதாரணம்.... 
 இவருக்கு பின்குரல் கொடுத்தவர் இன்னும் 
நேர்த்தியாக சென்னை பாஷை பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
                                           
               இந்த படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லா விட்டாலும் சம்பத் அந்த இடத்தில்
தானாக பொருந்துகிறார்.. தன் கூட்டாளிகளே எதிரியாக மாறியவுடன் சாமர்த்தியமாக 
அவர் தப்பும் இடம் அருமை... மனைவியை காப்பாற்றுவதற்க்காக இவர் 
மாஸ்டர் வசந்திடம் கத்தும் போது அரங்கமே அதிர்கிறது..இரண்டு கோஷ்டிகளுக்கு
இடையே சண்டையை மூட்டி விட்டு இவர் தப்பிப்பது பழைய பார்முலாவாக
இருந்தாலும் ரசிக்கும் படியாகவே இருக்கிறது...

        படத்தின் முக்கியமான இருவர் கூத்துப்பட்டறை சோமசுந்தரமும் அவர்
பையன் கொடுக்காப்புளியாக வரும் மாஸ்டர் வசந்தும்..வாழ்ந்து கெட்ட 
குடும்பத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறார்கள்.. அப்பா மகனாக இவர்கள் இருவரின் கூட்டணி , நடிப்பு , உடல் மொழி எல்லாமே அருமை..சேவல் சண்டையில்
வாய் சவடாளால் சேவலை பழி கொடுக்கும் அப்பாவுடன் சண்டை போடும் மகன் ஏக வசனங்களால் திட்டி விட்டு  பின்னர் அழுது கொண்டே   கட்டிக்  கொள்ளும் காட்சியை ஒரு உதாரணமாக சொல்லலாம்
இந்த இடத்தில் யுவனின் பின்னணி இசை உலகத்தரம்....
அடுத்த வேலை சோறு இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றி கவலைப்படாமல்  நிகழ்கால நொடியினை நேசிக்கும் , அனுபவிக்கும்
இவர்களின் இந்த மனம் நெகிழ வைக்கிறது...

       7g க்குப் பிறகு ரவி கிருஷ்ணா  நடித்திருக்கும் உருப்படியான  படம் இது..பொதுவாக யாரும் நடிக்க தயங்கும் "சப்பை" கதா பாத்திரத்தில் அவர் நடித்ததைப்  பாராட்டலாம்..
பொதுவாக கதா நாயகிகளை ஏமாளியாகவும் , முட்டாளாகவும் காட்டும்
தமிழ் சினிமாவில் யாஸ்மின் பொன்னப்பாவை கொஞ்சம் புத்திசாலியாகவும் , சுயநலவாதியாகவும்  காட்டியிருக்கிறார் இயக்குனர்...எனக்கு ஏன் சமோசா வாங்கி கொடுத்த ? என்று இழுத்து இழுத்து
இவர் ரவி கிருஷ்ணாவுடன் பேசும் போது குளுமை...கடைசியில் இவர் செய்யும் கொலை பெரிய திருப்பம்....
                        

         இவர்களை தவிர கஜபதி மற்றும் கஜேந்திரனாக வருபவர்களும் , அஜய் ராஜும் ஒரு காட்சியில் மட்டும் வந்தாலும் கிருஷ்ணாவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்....

          இதையெல்லாம் விட படத்தோடு நம்மை ஒன்ற செய்யும் முக்கிய
அம்சங்கள் இசையும் , ஒளிப்பதிவும்....புலிக்குப் பிறந்தது பூனையாகாது
என்று தன் பின்னணி இசை மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்து
இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா...இவரது இசை கதைக்குள் ஒரு கதை சொல்கிறது ..தேசிய விருதினை எதிர்பார்க்கலாம்...
             அதே போல பி.எஸ்.வினோத் தேவையான இடங்களில் போதுமான \
வெளிச்சத்தைக் கொடுத்து ஒளிப்பதிவில் அசதி இருக்கிறார்..
                                                       
               இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிற்க்கு  இது முதல் படம் என்று நம்ப முடியவில்லை..அந்த
அளவு நடிகர்களை வேலை வாங்கியிருக்கிறார்..இயல்பான  வசனங்களும் ,
நேர்த்தியான திரைக்கதையும் குமாரராஜாவின் கூடுதல் பலங்கள்..இவரை தமிழ் சினிமாவிற்கு
அறிமுகம் செய்த எஸ்.பி.பி.சரணை பாராட்டலாம்...குறிப்பாக அடுத்தடுத்த காட்சிகள் நேரடியாக தொடர்பில்லாதது போல் இருந்தாலும் சாமர்த்தியமாக அதை சேர்த்திருக்கும் திரைக்கதை உத்தி அருமை..
உதாரணமாக ஜாக்கி ஒரு காட்சியில் தன் கைத்துப்பாக்கியை காணவில்லை என்று தேடுகிறார்..உதவியாளர்களை சந்தேகப்படுகிறார்...ஆனால் கிளைமாக்ஸ் இல் யாஸ்மின் பொன்னப்பா
அதை உபயோகப்படுதும் போது தான் அவர் எடுத்திருப்பார் என்று நம்மால்
யூகிக்க முடிகிறது...
                   உனக்கு அப்பாவை ரொம்ப பிடிக்குமா?..
அப்படில்லாம் இல்ல...ஆனா அவர் எங்க அப்பா அதான்...
இது போன்ற வசனங்கள் எளிமை , அருமை ...

             படத்தில் இப்படி எவ்வளவோ சிலாகிக்கும் விஷயங்கள் இருந்தாலும்
குறைகளும் இல்லாமல் இல்லை..முதலில் இதன் தே...பையா, லூசு...கூ போன்ற
வசனங்களும், முதல் காட்சி உட்பட பல காட்சிகளும் குடும்பத்துடன் சென்று பார்க்கும் சூழலை
உருவாக்கவில்லை...இதன் நோக்கம் குடும்பப்படம் பார்ப்பவர்கள் அல்ல
என்றாலும் " "   சான்றிதழ் பெற்ற படம் என்று தெரிந்தோ தெரியாமலோ வந்து விட்டு அரை மணி நேரம் முடிந்தவுடன் பலர் ஏக வசனங்களில் இயக்குனரை
திட்டி விட்டு வெளியே சென்றதை பார்க்க முடிந்தது...காண்டம் என்று படத்தலைப்பில் இருக்கும் போதே அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
.
           அஜய் சொல்லும் ஆண்டிகளை கரெக்ட் செய்யும் விஷயம் , சேவல் சண்டை இவையெல்லாம் இடைசெருகல்கள்...படத்தோடு நாம் ஒன்றினாலும்
ஏதோ ஒன்று நம்மை அந்நியப்படுத்துகிறது.. கிளைமாக்ஸ்க்கு முந்தின
ஸ்லோ மோசென் சண்டைக்காட்சி இவ்வளவு பெரிய கடத்தல் கோஷ்டிகளிடம் ஒரு துப்பாக்கி கூட இல்லையா என்று
கேட்க வைக்கிறது...
         சில குறைகள் இருந்தாலும் நிச்சயம்
   "ஆரண்ய காண்டம் " - தமிழ் சினிமாவிற்கு ஒரு புது அத்தியாயம்

6 comments:

Anonymous said...

Good review.

Eswaran Kandaswamy said...

Nalla qualityana vimarsanam

EK ( Eswaran Kandaswamy) said...

Nalla qualityana vimarsanam... padatha pathi sollanum endral... operation success but patient dead madhiri... nalla padam... Box office collxn nothing ( no paisa vasool) may god bless SPB & his son from the debts...

ananthu said...

Anonymous said...
Good review.

Thanks

ananthu said...

Eswaran Kandaswamy said...
Nalla qualityana vimarsanam...

Thanks...

ananthu said...

EK ( Eswaran Kandaswamy) said...
Nalla qualityana vimarsanam... padatha pathi sollanum endral... operation success but patient dead madhiri... nalla padam... Box office collxn nothing ( no paisa vasool) may god bless SPB & his son from the debts...

What to do ? its sin of Tamil cinema

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...