17 November 2011

கூட்டணி தர்மம் ...


            
    " ர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் " என்றார்  பாரதி . " எது தர்மம் " என்பது பற்றி அர்த்தசாஸ்திரத்தில் தெளிவாக விளக்கினார் சாணக்கியன் , ஆனால் இதையெல்லாம் விட தர்மம் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அரசியல்வாதிகளால் இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் தர்மம் " கூட்டணி தர்மம் " ...

    பொது ஜனம் எக்கேடு கெட்டுப்போனாலும் தங்கள் பதவி பறிபோய் விடக்கூடாதென்பதே இந்த தர்மத்தின் முக்கிய குறிக்கோள்..இது மட்டுமல்ல இன்னும் நிறைய கிளை குறிக்கோள்கள் , கொள்கைகள் ... இந்த கூட்டணி தர்மத்திற்காக கட்சி தலைவர்கள் என்னவெல்லாம்  செய்கிறார்கள் அல்லது செய்யலாம் என்பது பற்றிய சில குறிப்புகள் இதோ ...

    முதலில் தன் கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சர் ஊழல் செய்ய போகிறார் என்று திட்டவட்டமாக தெரிந்திருந்தாலும் பிரதமர் கடிதம் எழுவதை தவிர வேறொன்றையும் செய்து விடக்கூடாது , அதிலும் அந்த கடிதத்தில்  ஊழல் செய்யலாமா , கூடாதா என்பதையெல்லாம் தெளிவாக விளக்காமல் விட வேண்டும் ...

                                                         
     பதில் கடிதத்தில் அமைச்சர் இல்லையில்லை நான் என் கட்சிக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி ஊழல் தான் செய்வேன் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தாலும் அதை தடுப்பது போல நேரடியாக எந்தவொரு பதில் கடிதமும் போட்டு விடக்கூடாது , அதே சமயம் நீங்கள் செய்யப்போகும் ஊழல் நிச்சயம் நல்ல திட்டமே , இருப்பினும் பிற்காலத்தில் ஏதும் சிக்கல் வராமல் இருக்க மற்ற இலாக்கா அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து செய்யலாம் என்று வேண்டுமானால் அறிவுரை வழங்கலாம் ...

    இரண்டாவது , கூட்டாக எவ்வளவு கொள்ளையடித்தாலும் தனியாக யாரையும் மாட்டி விடக்கூடாது   , அப்படியே ஊழல் சில லட்சம் கோடிகளை தாண்டும் போது அது சம்பந்தமாக நடவடிக்கைகளே எடுக்காமல் ஏதாவது அறிக்கைகள்  விட்டும் பத்திரிக்கைகளும் , எதிர்க்கட்சிகளும் நிறைய அமளி துமளி செய்தால் கூட்டணி கட்சி தலைவருடன் அமர்ந்து பேசி அவர் கை காட்டும் நபரை சில நிபந்தனைகளுடன் மாட்டி விடலாம்...
                                       
    நிபந்தனைகளின் படி மாட்டிவிடப்படும் நபருக்கு சி.பி.ஐ ரெய்ட் வரப்போவதை  முன் கூட்டியே தெரிவித்து முடிந்தவரை சம்பந்தப்பட்ட ஆவணங்களை மறைக்குமாறு சொல்லிவிட வேண்டும் . அதையும் மீறி அவர் மாட்டும் போது சட்டம் தன்  கடமையை செய்யும் என்று அறிக்கை விடலாம்...

                         
    அடுத்ததாக , கைதானவரை வெளியில் விட சொல்லி கூட்டணி கட்சி தலைவர் நச்சரிக்கும் சமயத்தில் சட்டசபை தேர்தல் வந்தால் நிற்க வைப்பதற்கு வேட்பாளர்களே இல்லையென்றாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் போது , எப்படியிருந்தாலும் தோறகத்தானே போகிறோம் என்ற உண்மை தெரிந்தும் ஏன் இவ்வளவு தொகுதிகள் கேட்கிறார்கள் என்றெல்லாம் எதிர் கேள்வி கேட்காமல் கூட்டணி கட்சி தலைவரும் விட்டுக்கொடுத்து விட வேண்டும் ...

     இலங்கை அரசு ஈழ தமிழர்களை அழிப்பதற்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்வது தெரிந்திருந்தும் அதை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் .அதையும் மீறி  மனம் வெதும்பினால் ஏர் கூலரில் காற்று வாங்கியபடியே சொந்தங்கள் புடை சூழ  கூட்டணி கட்சி தலைவர் குடும்ப தொலைக்காட்சியில் கொலு பொம்மை போல அரை நாள் லைவ் ஷோ காட்டலாம் .

    அதுவும் போதாதென்றால் தன் தமிழ் உணர்வை வெளிப்படுத்த பிரதமருக்கு தமிழிலேயே கடிதம் எழுதலாம் , பிரதமருக்கு தான் தமிழ் தெரியாதே என்று யாராவது தமிழ் பற்றே இல்லாமல் கேள்வி கேட்டால் , புரிந்தாலும் பிரயோஜனம் இல்லை என்று சாமர்த்தியமாக பதில் சொல்லலாம் .

                               
     ஈழ தமிழர்களுக்காக என் உயிரையே தருவேன் என கட்டுரை எழுதலாம் , யாராவது ஏன் இன்னும் உயிரை விடவில்லை என்று குசும்பாக கேட்டால் நான் போய் விட்டால் தமிழர்களை யார் காப்பற்றுவார்கள் என்று பதில் கேள்வி கேட்டு மடக்கி விடலாம் ...

     தன் கட்சியை சேர்ந்த தமிழர்களின் பதவிக்காகவும் , தமிழச்சியான தன் மகளின் ஜாமீனுக்காகவும் தான் நாம் டில்லி போகிறோம் என்பது கூட  தெரியாமல் ஏன் ஈழ தமிழர்கள் பிரச்சனைக்காக நீங்கள் டில்லி செல்லவில்லை என்று யாராவது கேட்டால் அப்படி கேட்பவர்கள் தமிழர்களே அல்ல , ஆரியர்கள் என்று பதில் சொல்லலாம் ...

     பெட்ரோல் விலையை குறைக்கா விட்டால் நான் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன் என பிரதமர் நாட்டில் இல்லாத சமயம் பார்த்து சொல்லிவிட்டு , அவருடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு தனக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு மம்தா அந்தர் பல்டியடித்ததை விடவா என்  தமிழ்பற்று மோசம் என்று கூட சொல்லி மழுப்பலாம் ...

    விலைவாசி உயர்வுக்கு மக்கள் அதிகமாக மீன் முட்டை என்று உணவை வெளுத்து வாங்குவது தான் காரணம் என்று பிரணாப் சொன்னதை மேற்கோள்காட்டி அன்னா வழியில் எல்லோரையும் உண்ணாவிரதம் இருக்க சொல்லலாம்... ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு பிறகும் " தீவிரவாதம் மிகவும் கண்டிக்கத்தக்கது " என்று சொல்லும் பிரதமரை விட வேறு யாரால் தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்கவோ , ஒடுக்கவோ முடியும் என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்கலாம் ...


                           
     மக்களின் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல் , டீசல் , காய்கறி இவற்றின் விலைகளை ஏற்றி இந்திய பொருளாதாரத்தையே ஏற்றத்தில் வைத்திருக்கும் மத்திய அரசின் நல்லாட்சி கவிழ்ந்து விட கூடாது என்ற நல்லெண்ணத்தில் கூட்டணியில் தொடர்ந்தால் அது புரியாமல் மாநிலத்தில் ஆட்சி பறிபோய் ,  மகளும் ஜாமீனில் வர முடியாமல் இருக்கும் காரணத்தினால் தான் மத்திய அரசுடன் நீங்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி சுயமரியாதையை சுரண்டி பார்க்கும்  போது உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று சுயத்தை காட்டலாம் ...

     இப்படி பல கட்சிகள் தனித்தனியாக கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதோடு , தீவிரவாதம் , ஊழல் , விலைவாசி உயர்வு , சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் இப்படி மத்திய அரசுக்கு எதிராக நிறைய  குற்றச்சாட்டுக்கள் இருந்தும் தங்கள் ஆதரவை மட்டும் வாபஸ் பெற்று விடக்கூடாது என்ற தர்மத்தையும் கூட்டாக கடைபிடிக்கின்றன ...

    இதற்கு கட்சிகளின் பதவி ஆசையோ , இந்த கூட்டணி தொடர்ந்தால் தான் சௌகரியமாக கொள்ளையடிக்க முடியும் என்ற நினைப்போ , தேர்தலை சந்திக்க பயமோ மட்டும் காரணம் அல்ல . சினிமாவில் ஹீரோ என்ன வேண்டுமானால் செய்யலாம் , ஆனால் ஹீரோயின் மட்டும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என அடிமட்ட ரசிகன் நினைப்பது போல காங்கரஸின் குறைகள் மக்களுக்கே பழகிப் போன பிறகு , பல கட்சிகளுக்கு மாற்று கட்சியை விட காங்கிரசுடன் கூட்டு சேர்வது வசதியாகி விட்டதும் மிக முக்கிய காரணம் ...

6 comments:

Anonymous said...

கொள்ளை கூட்ட அணி தர்ம அலசல் நல்லாயிருந்தது அனந்து...இவர்களும் திருந்த மாட்டார்கள்...நாமும் தான்...

ananthu said...

ரெவெரி said...
கொள்ளை கூட்ட அணி தர்ம அலசல் நல்லாயிருந்தது அனந்து...இவர்களும் திருந்த மாட்டார்கள்...நாமும் தான்...

நன்றி நண்பா !

Anonymous said...

போடற ஓட்ட சரியாய் போட்ட ஏன் இவங்கலாம் திரும்பா வரபோறாங்க... பைசா வாங்கிகிட்டு போட்ட அவங்களும் பைசா பாக்கத்தான் செய்வாங்க
madhan

Anonymous said...

Congress & Corruption are inseparable twins,scam a day is their hidden agenda that keeps the alliance intact.People of Democratic India patiently waiting for their turn to kick these scumbags out in next elections.So don't worry Ananthu

ananthu said...

Anonymous said...
Congress & Corruption are inseparable twins,scam a day is their hidden agenda that keeps the alliance intact.People of Democratic India patiently waiting for their turn to kick these scumbags out in next elections.So don't worry Ananthu
Friday, November 18, 2011

Eagerly waiting for 2014...Thanks...

ananthu said...

Anonymous said...
போடற ஓட்ட சரியாய் போட்ட ஏன் இவங்கலாம் திரும்பா வரபோறாங்க... பைசா வாங்கிகிட்டு போட்ட அவங்களும் பைசா பாக்கத்தான் செய்வாங்க
madhan...

அது சரி தான் ...! ஆனா பைசா வாங்காத நம்மளும் சேர்ந்துள்ள அவஸ்தை படுறோம் ... நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...