23 May 2012

வழக்கு எண் 18/9 - சில விவாதங்கள் ...



ல்ல விமர்சனத்தையும் , அதே சமயத்தில் வசூலையும் ஒரு சேர பெறக்கூடிய படங்கள் தமிழ் சினிமாவிற்கு அரிதாகவே கிடைக்கின்றன ...மே 4 ஆம் தேதி வெளியாகி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வழக்கு எண் 18/9 படத்தை அந்த வகையில் சேர்க்கலாம்...பல தரப்பினராலும் பாராட்டப்பட்டு வரும் இந்த படம் உண்மையிலேயே அப்படியொரு வலுவானதொரு பாதிப்பை பொது மக்களிடத்திலும் ஏற்படுத்தியிருக்கிறதா அந்த படம் தமிழ் சினிமா உலகையே புரட்டிப் போட்ட படமா ? இல்லை அனைவரும் ஓவர் ரியாக்ட் செய்து கொண்டிருக்கிறோமா ? விவாதிப்போம் ...

யதார்த்தமான கதை, பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் திரைக்கதை, சமூக அக்கறையுடன் சொல்லப்பட்ட காட்சிகள் , புதுமுகங்களை திறம்பட இயக்கிய நேர்த்தி இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது வழக்கு எண் 18/9 - வளர்ச்சிக்கான பாதை ... என்பதை யாரும் மறுக்க முடியாது ...
பொதுவாக ஒரு படம் வெற்றியடைந்து விட்டாலே அதைப் பற்றி விமர்சிக்க தேவையில்லை , ஏனெனில் மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று சொல்வார்கள் ... அப்படி இருக்கும் போது ஏற்கனவே விமர்சனம் எழுதி விட்ட ஒரு படத்தை பற்றி மற்றொரு பதிவுபோடுவதன் அவசியம் என்னவென்று கேள்வி எழலாம் ...

சினிமா விமர்சனங்களுக்கு பெயர் போன ஆனந்த விகடன் " தமிழ் சினிமா குறித்து பெருமிதம் கொள்ள வைக்கும் படம் வழக்கு எண் 18/9 " என விமர்சித்து 55 மார்க்குகளை வாரி வழங்கியிருக்கிறது ...எந்த ஒரு சிறந்த படத்திற்கும் நன்று என விமர்சனம் செய்து வரும் குமுதம் வழக்கு படத்தை அதிகபட்சமாக சூப்பர் என்று விமர்சித்துள்ளது ...இவை தவிர சினிமா விமர்சனம் செய்யும் ஆங்கில பத்திரிக்கைகளும் ,வலைப் பத்திரிக்கைகளும் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகின்றன ...

பதிவர்களை பொறுத்த வரையில் சிலரை தவிர அனைவருமே படத்தை வானளாவ புகழ்கிறார்கள் ...அதிலும் சினிமா விமர்சனங்களை பொதுவாக எழுதாத சில பதிவர்கள் கூட இந்த படத்தை விமர்சித்தே தீர வேண்டுமென்கிற அளவிற்கு தங்கள் கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்கள்... இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அனைவரின் மதிப்பையும் பெற்ற இயக்குனர் பாலு மகேந்திரா நான் பாலாஜி சக்திவேலின் காலில் விழக்கூட தயார் என கூறியிருக்கிறார் ...


தரமான படத்தை அனைவரும் பாராட்டுவது இயல்பு தானே ? கேட்கலாம்.. படத்தின் தயாரிப்பாளர் ஒரு இயக்குனர் என்பதால் மற்ற இயக்குனர்களின் பாராட்டுக்களை விளம்பரப்படுத்தி படத்தின் வசூலை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதில் தவறேதுமில்லையே ? நியாயப்படுத்தலாம் ... ... ஆனாலும் அனைவரும் இப்படி படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கரகம் ஆடும் பொழுது தான் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல நெஞ்சுக்குள் ஏதோ நெருடுகிறது ...

வழக்கு எண் என்ன குறைகளே இல்லாத படமா? நிச்சயம் இல்லை. இப்படத்தை எதிர்மறையாக விமர்சித்தால் எங்கே தங்களுக்கு உலக சினிமா ரசனையே இல்லையென்று யாராவது சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் சிலர் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம் , அல்லது வழக்கத்திலிருந்து மாறுபட்ட இது போன்றதொரு சினிமாவை குறை கூற வேண்டாமென பெருந்தன்மையாக விட்டிருக்கலாம் ...

படத்தை மறுபடியும் ஒரு முறை சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்களுடன் சேர்ந்து பார்த்த பொழுது சினிமா உலகினரால சொல்லப்படுவது போல அப்படியொன்றும் மிகப்பெரிய தாக்கத்தை படம் அவர்களிடையே ஏற்படுத்தவில்லை என்பதும் , சிறந்த படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் அதே ஆர்வத்துடன் பார்க்கும் எனக்கும் படம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதும் தவிர்க்க முடியாத உண்மைகள்


முழு படமுமே ரோட்டோரக் கடையில் வேலை பார்க்கும் வேலு , பள்ளி மாணவி ஆர்த்தி இருவரின் பாயிண்ட் ஆப் வியூவில் தான் சொல்லப்படுகிறது. இருவரையும் விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் அவர்கள் சொல்ல சொல்ல ஆதாரப்பூர்வமாக தன் போனில் பதிவும் செய்து கொள்கிறார்... ஆடியன்சுக்கு நடந்தது என்ன என்பதை இந்த இருவரும் தான் சொல்கிறார்கள் ...

முதலில் முதல்பாதியில் விசாரிக்கப்படும் வேலுவிற்கு வருவோம் ...வேலு தன்னுடைய பிள்ளை பருவம் , குடும்பத்தின் ஏழ்மை நிலை , சென்னையில் அடைக்கலம் புகுந்த விதம் , ஜோதியை சந்தித்து காதல் வயப்பட்டது என்ற எல்லாவற்றையுமே சொல்கிறார்... வேலுவை பொறுத்த வரை ஜோதியுடன் பழக்கம் இல்லாததால் அவளுடைய குடும்பம் பற்றியோ , குறிப்பாக ஜோதியின் தந்தை கம்யூனிச ஆதரவாளர் என்பது பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை... அப்படியிருக்கும் போது வேலுவின் பாயிண்ட் ஆப் வியூவில் இது போன்ற காட்சியை வைத்ததில் சுத்தமாக லாஜிக் இல்லை.
...
மற்றொரு சீனில் ஜோதி வீட்டுக்கார பெண் ஆர்த்தியிடம் ஷாம்பூ தீர்ந்து விட்டது வாங்க வேண்டுமென்கிறாள் ...அடுத்த சீனில் வேலு அவளை கடையில் சந்திக்கிறான் ...ஜோதி வேலை செய்யும் வீட்டுக்குள் நடந்த விஷயம் வேலுவிற்க்கு எப்படி தெரியும் ? இங்கேயும் அதே லாஜிக் மிஸ்ஸிங்...

முதல் பாதியில் இது போன்ற சில லாஜிக் சொதப்பல்கள் என்றால் இரண்டாம் பாதியில் நிறையவே வருகின்றன ... ஆர்த்திக்கு தினேஷ் ஒரு பணக்கார ஸ்கூல் கரஸ்பாண்டண்டின் பையன் என்று தெரியும் ...ஆனால் அதற்காக தினேஷ் வீட்டிற்க்குள் பணம் கேட்டு அவன் அம்மாவிடம் சண்டை போடுவதும் , அவன் அம்மாவிற்கும் மந்திரிக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ஆர்த்திக்கு தெரிவதற்கு வாய்ப்பே இல்லை , அப்படியிருக்க அவள் தனக்கு தெரிந்ததை இன்ஸ்பெக்டரிடம் சொல்லும் போது இது போன்ற காட்சிகள் எப்படி இடம்பெற்றன ? ... இதே லாஜிக் சொதப்பல்கள் தான் தினேஷ் தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன் பேசிக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெறும் போதும் நம் மனதை குடைகின்றன ...

என்ன பாஸ் இது ? இப்படில்லாம் லாஜிக் பாத்தா சினிமாவே எடுக்க முடியாது என்றோ ,கதைக்கு கால் உண்டா என்றோ சிலர் கேட்கலாம் ...ஒரு பக்கா கமர்சியல் படத்திற்கே லாஜிக் பார்க்கும் பொழுது உலக சினிமாக்களோடு ஒப்பிடப்படும் ஒரு படத்திற்கு பார்க்காமல் இருக்கலாமா ?புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசேவா சொன்ன பாணியில் தான் இந்த படத்தின் கதையும் சொல்லப்பட்டிருக்கிறது .... ஏற்கனவே இதே பாணியில் வந்த விருமாண்டி நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம் ... இது போன்ற லாஜிக் சொதப்பல்கள் விருமாண்டியில் இல்லை என்று அடித்து சொல்லலாம்... கமல் ,பசுபதி இருவருமே தங்கள் கதைகளை சொல்லும் பொழுது அவரவர் சம்பந்தப்பட்ட காட்சிகளே இடம்பெற்றிருக்கும்...இரண்டு படங்களின் பின்னணியும் வேறு வேறு என்றாலும் கதை சொன்ன விதம் ஒரே முறையில் இருப்பதால் தான் இந்த ஒப்பீடே தவிர வேறெந்த காரணமும் இல்லை ...


ஏற்கனவே என் விமர்சனத்தில் தப்பு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டுமென்ற ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போன்ற
க்ளைமாக்ஸ் , அங்காடி தெருவை போலவே குறையுடன் காதலியை ஏற்றுக்கொள்ளும் காதலன் , நமக்கு சிம்பதி வர வேண்டுமென்பதற்காகவே இன்ஸ்பெக்டரிடம் வேலு சொல்லும் நீண்ட பிளாஷ்பேக் போன்ற மற்ற குறைகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறேன் ... தொடர்ந்து இப்படத்திற்கு கொடுக்கப்பட்டு வரும் எக்கச்சக்க பில்ட் அப்களே இந்த பதிவு போட தூண்டுதலாய் இருந்ததே ஒழிய , எல்லோரும் பாராட்டும் படத்தை நாம் குறை சொல்வோம் என்ற எண்ணமோ , யதார்த்தமான சினிமாக்களுக்கு எதிரான நிலைப்பாடோ நிச்சயம் காரணமல்ல என்பதையும் நான் தெளிவு படுத்திக்கொள்கிறேன் ...

சினிமா எடுப்பவர்களுக்குஎப்பொழுதுமே ஒரு படம் ஹிட்டடித்தால் அது மாதிரியே தொடர்ந்து படம் எடுக்கும் வியாதி உண்டு ... அதே போல ரசிகர்களுக்கும் ஒரு படத்திற்கு தொடர்ந்து ஒரு படத்தை பற்றிய நல்லடாக் இருந்தால் அதை நோக்கியே படையெடுக்கும் பழக்கமுமுண்டு. ஒரு ரசிகனாக நல்ல படங்களை ஊக்குவிப்பதில் எனக்கு எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை ...அதே சமயத்தில் விமர்சகனாக எந்த ஒரு படமாக இருந்தாலும் அதை வேறொரு கோணத்தில் இருந்தும் பார்க்க வேண்டுமென்பதில் எனக்கு சிறிதளவு கூட ஐயப்பாடும் இல்லை ...

சினிமாவில் என்ன சொல்கிறோம் என்பதை விட எப்படி சொல்கிறோம் என்பதே மிக முக்கியம் என்பார்கள் ..அந்த வகையில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் படத்தை மிக அழகாக தொய்வில்லாமல் பிரசன்ட் செய்திருக்கிறார், இருந்தாலும் காதல் படத்தை பார்த்த பிறகு ஒரு வாரத்திற்கும் மேல்இருந்த பாதிப்பு வழக்கு படத்தை பார்த்த பிறகு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை ... மகாநதி,சேது ,காதல் , சுப்ரமணியபுரம் வரிசையில் என்னால் இந்த படத்தை வைக்க முடியவில்லை , அதனால் தானோ என்னவோ வழக்கு எண் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட படமென்றோ , இப்படியொரு படம் வந்ததேயில்லை என்றோ வானுக்கும் பூமிக்கும் குதிப்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை ...


இதை விட மிக மோசமான கூத்து தான் சமீபத்தில் வந்த " ராட்டினம் " படத்திற்கும் நடந்து கொண்டிருக்கிறது .. ராட்டினம் - சுற்றலாம்   தவறேதுமில்லை , ஆனால் மௌனகுரு , வழக்கு எண் வரிசையில் ஒரு படம் என்று சொல்வதையே ஜீரணிக்க முடியாத பொழுது தூத்துக்குடியில் ஒரு விடிவி என்று கௌதம் மேனனும் , அழகி , ஆட்டோக்ராப் , மைனா வரிசையில் ராட்டினம் என்று சேரனும் புகழாரம் சூட்டுவதை பார்க்கும் பொழுது சிரிப்பதா?அழுவதா ? என்று கூட தெரியவில்லை ...

சபா கச்சேரிகளுக்கு செல்பவர்களில் நிறைய பேருக்கும் சங்கீதம் புரியாவிட்டாலும் அடுத்தவர்களுக்காக தலையை ஆட்டி வைப்பார்கள்.
எங்கே தனக்கு சங்கீத ஞானம் இல்லையென்று சொல்லி விடுவார்களோ என்ற பயமே அதற்கு காரணம் ... இந்த சபா கச்சேரி மனப்பாங்கு சினிமா உலகிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருவது பயத்தையும் , பதிவுலகில் உள்ளது போன்ற மொய்க்கு மொய் கலாச்சாரம் இயக்குனர்களிடையேயும் இருப்பது வேதனையையும் தருகிறது ... வித்தியாசமான முயற்சிகளை வரவேற்பது நம் கடமை , அதே சமயம் அது ஓவர் டோஸாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்புணர்வும் அவசியம் , இல்லையெனில் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மாஸ் ஹீரோக்களை வைத்து ரசிகர்களை ஏமாற்றுவதற்காக கொடுக்கப்படும் எக்ஸ்ட்ரா பில்ட் அப்புகளுக்கும் இதற்கும் வித்தியாசமில்லாமல் போய் விடும் ...

கொஞ்சம் பணமும் , நான்கு வெகுஜன முகங்களும் , மனதை உலுக்கும் க்ளைமாக்ஸும் இருந்தால் படத்தை உலக சினிமா என்றெல்லாம் விளம்பரப்படுத்தி நாலு காசு பார்த்து விடலாம் என்ற எண்ணம் பரவி விட்டால் அது தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல ... இந்த பதிவிற்கு எதிர் கருத்துரையிட நினைப்பவர்கள் தயவு செய்து இரு படங்களையும் இன்னொரு முறை பார்த்து விட்டு , இந்த படங்களுக்கான என் விமர்சனத்தையும் படித்து 
விட்டு நேர்மையுடன் வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ...

19 comments:

அனுஷ்யா said...

//அதிலும் சினிமா விமர்சனங்களை பொதுவாக எழுதாத சில பதிவர்கள் கூட இந்த படத்தை விமர்சித்தே தீர வேண்டுமென்கிற அளவிற்கு தங்கள் கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்கள்.//

நம்மள அட்டாக் பண்ணீட்டீங்க போல??? ஹ்ம்ம்.. :))

எனக்கு காதல் படத்தைவிட இது பெட்டெர் என்றுதான் இப்போதும் தோன்றுகிறது...
இதையே வெற்றிக்கான சூத்திரமாக கொண்டு இன்னும் பத்து படங்கள் வந்து படுதோல்வி அடையும்.. சுப்ரமணியபுரம் தாண்டி வந்த மதுரை படங்கள் போல.. அதற்காக இந்த படங்களை குறை சொல்ல முடியாது..

Anonymous said...

well said

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் ! நன்றி நண்பரே !

ananthu said...

Anonymous said...
well said...

Thanks

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல விமர்சனம் ! நன்றி நண்பரே !

உங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி...!

ananthu said...

மயிலன் said...
//அதிலும் சினிமா விமர்சனங்களை பொதுவாக எழுதாத சில பதிவர்கள் கூட இந்த படத்தை விமர்சித்தே தீர வேண்டுமென்கிற அளவிற்கு தங்கள் கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்கள்.//

நம்மள அட்டாக் பண்ணீட்டீங்க போல??? ஹ்ம்ம்.. :))
எனக்கு காதல் படத்தைவிட இது பெட்டெர் என்றுதான் இப்போதும் தோன்றுகிறது...
இதையே வெற்றிக்கான சூத்திரமாக கொண்டு இன்னும் பத்து படங்கள் வந்து படுதோல்வி அடையும்.. சுப்ரமணியபுரம் தாண்டி வந்த மதுரை படங்கள் போல.. அதற்காக இந்த படங்களை குறை சொல்ல முடியாது..

நண்பா உங்களை மனதில் வைத்துக் கொண்டு இதை எழுதவில்லை ... படம் அனைவருக்கும் பிடித்திருப்பதை மறுப்பதற்கில்லை ... படத்தில் உள்ள சில முக்கியமான குறைகளையும் , அளவுக்கு அதிகமாக கொடுக்கப்படும் பில்ட் அப்புகளையும் மட்டுமே நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன் ...

saravana said...

100 சதவீதம் சரியாக சொல்லியுள்ளீர்கள்.

ananthu said...

saravana said...
100 சதவீதம் சரியாக சொல்லியுள்ளீர்கள்.

உங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி...!

Unknown said...

ஆர்த்தியின் பார்வையில் இருந்து சொல்லும் போது, தினேஷ் வீட்டில் நடப்பதைக் கூறியுள்ளது கண்டிப்பாக சாத்தியம் இல்லாதது. ஆனால் வேலுவின் பார்வையில் இருந்து வீட்டைக் காண்பிக்கும் போது, கம்யுனிஸ்ட் அப்பாவின் படம் மட்டுமே காண்பிக்கப் படும். எனவே வேலு நின்ற இடத்தில் இருந்து அது தெரிந்ததாக காண்பிப்பதில் லாஜிக் சொதப்பல் இருந்ததாக தெரியவில்லை. அது போல, ஜோதி ஷாம்பு வருவதை தெரிந்து கொண்டு, வேலு வருவதாக படம் காண்பிக்க வில்லை. வேலு கடைக்கு வந்த நேரத்தில் ஜோதியும் யதேச்சையாக வந்து இருக்கலாம். இதுவும் எளிதாக சாத்தியமே! மற்றபடி படத்தில் நிறைய நுணுக்கங்கள் உள்ளன (எ.டு) - மாமா வேலை செய்யும் பெண்ணிற்கு ஜெயலட்சுமி என்ற பெயர், ஜெயலட்சுமி வீட்டில் நித்தியின் படம் என நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். பாலு மகேந்திரா போன்ற ஒருவர் பாராட்டி இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அது பொய்யாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

ananthu said...

ஆர்த்தியின் பார்வையில் இருந்து சொல்லும் போது, தினேஷ் வீட்டில் நடப்பதைக் கூறியுள்ளது கண்டிப்பாக சாத்தியம் இல்லாதது. ஆனால் வேலுவின் பார்வையில் இருந்து வீட்டைக் காண்பிக்கும் போது, கம்யுனிஸ்ட் அப்பாவின் படம் மட்டுமே காண்பிக்கப் படும். எனவே வேலு நின்ற இடத்தில் இருந்து அது தெரிந்ததாக காண்பிப்பதில் லாஜிக் சொதப்பல் இருந்ததாக தெரியவில்லை. அது போல, ஜோதி ஷாம்பு வருவதை தெரிந்து கொண்டு, வேலு வருவதாக படம் காண்பிக்க வில்லை. வேலு கடைக்கு வந்த நேரத்தில் ஜோதியும் யதேச்சையாக வந்து இருக்கலாம். இதுவும் எளிதாக சாத்தியமே! மற்றபடி படத்தில் நிறைய நுணுக்கங்கள் உள்ளன (எ.டு) - மாமா வேலை செய்யும் பெண்ணிற்கு ஜெயலட்சுமி என்ற பெயர், ஜெயலட்சுமி வீட்டில் நித்தியின் படம் என நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். பாலு மகேந்திரா போன்ற ஒருவர் பாராட்டி இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அது பொய்யாக இருக்காது

படத்தின் சீனை ஒரு முறை ரீ கலெக்ட் செய்து பாருங்கள் ஜோதியை வேலு கடையில் பார்ப்பதற்கு முந்தைய சீனில் ஆர்த்தியின் வீட்டிற்குள் ஷாம்பூ பற்றிய உரையாடல் நடந்திருக்கும் ... இதுவும் வேலுவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ... இவையெல்லாம் உன்னிப்பாக பார்த்தால் மட்டுமே புரியக்கூடிய தவறுகள் ... பாலு மகேந்திரா சிறந்த இயக்குனர் தான் , ஆனால் அவர் சொன்னதற்கு மாற்றுக்கருத்து இருப்பதில் தவறேதுமில்லை ... உங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி...!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

வேலு இன்ஸ்பெக்டரிடம் கதை சொல்லும் போது, இப்படி சொல்லி இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்து பாருங்கள் "ஒரு நாள் நான் கடைக்கு மாவு வாங்க போயிருந்தேன். அங்க ஜோதியும் வந்திருந்தா. அவ வேலை பார்க்கிற வீட்டில ஷாம்பு வாங்கிட்டு வர சொல்லி இருப்பாங்க போலிருக்கு. அதனால ஷாம்பு வாங்க கடைக்கு வந்திருந்தா". இப்படி ஸீனை எடுப்பதாக இருந்தால், ஜோதி வேலை பார்க்கிற வீட்டில் ஷாம்பு இல்லாததைப் பற்றி ஒரு உரையாடல் நடப்பதாக காண்பிப்பதில் தவறொன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.

ananthu said...

Aravinth Rajendran said...
வேலு இன்ஸ்பெக்டரிடம் கதை சொல்லும் போது, இப்படி சொல்லி இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்து பாருங்கள் "ஒரு நாள் நான் கடைக்கு மாவு வாங்க போயிருந்தேன். அங்க ஜோதியும் வந்திருந்தா. அவ வேலை பார்க்கிற வீட்டில ஷாம்பு வாங்கிட்டு வர சொல்லி இருப்பாங்க போலிருக்கு. அதனால ஷாம்பு வாங்க கடைக்கு வந்திருந்தா". இப்படி ஸீனை எடுப்பதாக இருந்தால், ஜோதி வேலை பார்க்கிற வீட்டில் ஷாம்பு இல்லாததைப் பற்றி ஒரு உரையாடல் நடப்பதாக காண்பிப்பதில் தவறொன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.

அவ்வளவு விளக்கங்கள் கூட தேவையில்லை ... இருவரும் கடையில் சந்திப்பதே போதுமானது ... அவள் வீட்டுக்குள் வைத்து ஆர்த்தியுடன் பேசும் சீன் தான் தேவையற்றது என்கிறேன் ... கடையில் ஷாம்பூ வேண்டும் என்று கேட்டாலே போதுமே ...

Anonymous said...

அய்யா... நம் ரசனை இருக்கே.. ரொம்ப ... சரி என் வாயல சொல்ல விரும்பல... கடந்த சில தினங்களா இணையத்தப் பாருங்க....போன ஞாயிறு அன்னிக்கி பவர் ஸ்டார்னு சொல்லித் திரியும் ஒருவரை கோபிநாத் கேள்வி கேட்டார் ஏன் இந்தப் போலி கௌரவைம் என்று..அந்தாளு அசராம எனக்கு போட்டியே சூப்பர்ஸ்டார்னு கூசாம சொல்றார்.. ஆனால் நம் இணைய மக்கள் பவருக்கு ஆதரவாகவும் நியாயமான கேள்வி கேட்ட கோபியை கண்ட படி திட்டியும் பதிவும் போடறங்க.. பின்னுட்டமும் எழுதறாங்க.. புரியவே யில்லை.. இதுல உலக சினிமானு நீங்க பேசினா எப்படி எடுபடும்.....

ananthu said...

Anonymous said...
அய்யா... நம் ரசனை இருக்கே.. ரொம்ப ... சரி என் வாயல சொல்ல விரும்பல... கடந்த சில தினங்களா இணையத்தப் பாருங்க....போன ஞாயிறு அன்னிக்கி பவர் ஸ்டார்னு சொல்லித் திரியும் ஒருவரை கோபிநாத் கேள்வி கேட்டார் ஏன் இந்தப் போலி கௌரவைம் என்று..அந்தாளு அசராம எனக்கு போட்டியே சூப்பர்ஸ்டார்னு கூசாம சொல்றார்.. ஆனால் நம் இணைய மக்கள் பவருக்கு ஆதரவாகவும் நியாயமான கேள்வி கேட்ட கோபியை கண்ட படி திட்டியும் பதிவும் போடறங்க.. பின்னுட்டமும் எழுதறாங்க.. புரியவே யில்லை.. இதுல உலக சினிமானு நீங்க பேசினா எப்படி எடுபடும்.....

உங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி...!

ananthu said...

More Entertainment said...
hii.. Nice Post

Thanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in

Thanks for your comments

Anonymous said...

பெரிய எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி எழுதியதற்கு வாழ்த்துக்கள்...ஆனால் உமக்கு யார் சொன்னது காட்சிகள் எல்லாமே அவர்கள் சொன்னதுதான் என்று? அவர்கள் சொன்னதோடு...உண்மையில் நடந்ததையும் சேர்த்துதான் காட்டுகிறார் இயக்குனர்....எனவே இது ஒரு அர்த்தமில்லாத விமர்சனம்!

-பாலா.

Anonymous said...

ஒரு உதாரணம்....வேலுவின் பெற்றோர் இறந்தது தெரிய வருவது முதலாளிக்குத்தான்...அந்தக் காட்சிகளில் உண்மையில் நடந்தது மற்றும் வேலுவுக்கு தெரிந்தது எல்லாம் கலந்துதான் காட்சிகள் வருகின்றன! அதே முறைதான் படம் முழுவதும் பின்பற்றப் படுகிறது....இதுவும் ஒரு படமாக்கும் மற்றும் கதை சொல்லும் உத்திதான்! மற்றபடி விருமாண்டியின் கதை சொல்லும் விதமும் இதுவும் வேறு வேறு என்ற உண்மையை உணரவும்!
-பாலா.

ananthu said...

அன்பு பாலா , உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி ... இருவரின் பார்வையிலிருந்து தான் இயக்குனர் கதையை கொண்டு செல்கிறார் ... அவர்களின் விளக்கங்களும் இன்ஸ்பெக்டரால் பதிவு செய்யப்படுகின்றன ... அப்படியிருக்கும் போது இயக்குனரும் சேர்ந்து கதை சொல்வதென்பது லாஜிக் மீறல் தான் ... விருமாண்டியில் கூட பசுபதி , கமல் இருவரும் தங்கள் தரப்பு சம்பவங்களை ரோஹிணியிடம் விளக்க அது வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது ... இரண்டும் வேறல்ல ... ஒரு படம் பிடித்திருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் , பிடிக்கவில்லை என்றால் கீழே போட்டு மிதிப்பதென்பதும் சொல்லாத மரபாகி வருகிறது ... இரண்டு விளிம்புகளுக்கும் செல்லாமல் நடுநிலையாக இருந்து எந்த ஒரு படத்தையும் அலச வேண்டுமென்பதே ஒரு விமர்சகனாக என்னுடைய ஆசை ... படம் பிடித்திருந்ததால் தான் வழக்கு எண் 18/9 - வளர்ச்சிக்கான பாதை ... என்று விமர்சித்தேன் ... அதே சமயம் குறைகளையும் விவாதித்திருக்கிறேன் ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...