27 December 2012

டாப் 20 மூவீஸ்- T20 TAMIL MOVIES 2012...


ந்த வருடம் ஒன்றிரண்டை தவிர பெரிய எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் ஊத்திக்கொள்ள புது இயக்குனர்களின் மாறுபட்ட  சிந்தனையுடன் வெளிவந்த சிறு முதலீட்டு படங்கள் வெற்றியோடு சேர்த்து நம் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன . ஒரு படத்தால் தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் , தியேட்டர்காரர்கள் எல்லாம் எவ்வளவு லாப , நஷ்டம் அடைந்தார்கள் என்பதோடு அது ரசிகர்களையும் , விமர்சகர்களையும் எந்த அளவு கவர்ந்தது என்பதையும் பார்க்க வேண்டும். அந்த வகையில் 2012 தமிழ் சினிமாவை பொறுத்த வரை ஒரு ஆரோக்கியமான   வருடமாக இருந்தாலும் நம்மை புரட்டிப்  போடும் படியான படங்கள் ஒன்றிரண்டை தவிர எதுவும் வராதது குறை . ரிலீசான மாதங்களின் அடிப்படையில் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன . பெரிய வெற்றியையடைந்தும் ரீ ரிலீஸ் என்பதால் கர்ணன் படத்தை சேர்க்கவில்லை ...

நண்பன் 

வசூல் குறித்த சர்ச்சைகள் இருந்தாலும் நமது கல்வி கற்பிக்கும் முறையில் உள்ள குளறுபடிகளை சாட்டையுரித்த 3 இடியட்ஸ்  என்ற ஹிந்திப்படத்தின் அருமையான ரீ மேக் . விஜய் , ஜீவா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அந்த படத்தை போலவே நல்ல பெயரை தட்டிச் சென்றவன் நண்பன் ...

விமர்சனம் படிக்க : நண்பன் - வெற்றியாளன் ...

காதலில் சொதப்புவது எப்படி 

நாளைய இயக்குனர் வெற்றி மூலம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்ற குறும்படத்தை அனைவரும் ரசிக்கும் படியான திரைப்படமாக மாற்றி அதில் வணிக ரீதியாக வெற்றியும் அடைந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜி ...

அரவான் 

எதிர்பார்த்து ஏமாந்த படமாக இருந்தாலும் சாகித்திய விருது பெற்ற ஒரு நாவலை படமாக்க எடுத்துக்கொண்ட சிரத்தைக்காகவும் , அதை நேர்மையாக படமாக்கிய விதத்திற்காகவும் என்னை கவர்ந்த படம் ...

விமர்சனம் படிக்க : அரவான் - கள்வன் பாதி ! காவலன் பாதி ...

மெரினா 

தர்க்க ரீதியாக பெரிய அளவிற்கு கவரா விட்டாலும் , நல்ல ப்ரமோ மற்றும் இயக்குனர் பாண்டியராஜின்  ப்ராண்ட் நேம் இரண்டாலும் கிடைத்த ஒப்பனிங் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு நல்ல வசூலை கொடுத்திருக்கிறது ...

விமர்சனம் படிக்க : மெரினா - கால் தொடாத அலைகள் ...

கழுகு 

அருமையான கதைக்களன் , இசை , ஒளிப்பதிவு நடிப்பு இவை எல்லாமே இருந்தும் கவராத காதலும் , திரைக்கதையுமே கழுகு அதிக உயரம் பறக்காததற்க்கு காரணம் . இருப்பினும் இந்த வருடம் கவனிக்க வைத்த  படம் கழுகு . யுவனின் இசை படத்திற்கு பெரிய பலம் ...

விமர்சனம் படிக்க : கழுகு - பறக்கும் உயரம் குறைவு ...

ஒரு கல் ஒரு கண்ணாடி  

வருடத்தின் முதல் பெரிய ஹிட் . சந்தானத்தின்  காமெடி , ஹாரீஷின் இசை இரண்டுமே படத்திற்கு பெரிய பலம் . நடிப்பில் ஓ.கே என்கிற அளவிற்கு  இருந்தாலும் தயாரிப்பாளராக டபுள் ஓ.கே அந்தஸ்தை இயக்குனர் ராஜேஷ் மூலமாக உதயநிதிக்கு கொடுத்த படம் ...

விமர்சனம் படிக்க : ஒரு கல் ஒரு கண்ணாடி - ஓ.கே ...

வழக்கு என்  18/9 

புது முக நடிகர்களை வைத்து தன்னால் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடியுமென்று  இயக்குனர் பாலாஜி சக்திவேல் மீண்டும் நிரூபித்த படம் . தனிப்பட்ட முறையில் இந்த படத்தை பற்றிய விவாதங்கள் எனக்கு இருந்தாலும் 2012 ஆம் ஆண்டின் சிறந்த படம் என்று இதை அடித்து சொல்லலாம் ... 

விமர்சனம் படிக்க : வழக்கு எண் 18/9 - வளர்ச்சிக்கான பாதை ...
மேலும் படிக்க        : வழக்கு எண் 18/9 - சில விவாதங்கள் ...

கலகலப்பு 

நீண்ட நாள் கழித்து கமர்சியல் இயக்குனராக மீண்டும் சுந்தர்.சி யை நிலைநிறுத்திய படம் . பெயருக்கேற்றார்ப்போல நேரம் போவதே தெரியாமல் கலகலப்பாக போனதே படத்தின் வெற்றி ... 

விமர்சனம் படிக்க : கலகலப்பு @ மசாலா கபே - மினி மீல்ஸ் ...

ராட்டினம் 

சிறு முதலீட்டு படமாக இருந்தாலும் வேந்தர் மூவீஸ் வாங்கியதால் கொஞ்சம் கவனத்தை பெற்ற படம் . அமெச்சூர் நடிகர்களால் வசூல் ரீதியாக சறுக்கியிருந்தாலும் கதையால் கவர்ந்த படம் ...

விமர்சனம் படிக்க : ராட்டினம் - சுற்றலாம் ...

தடையறத்  தாக்க 

அருண் விஜய்க்கு நல்ல ப்ரேக் கொடுத்த படம் .  விறுவிறு திரைக்கதை , ஸ்டைலிஷான மேக்கிங் இருந்தும் வெகுஜன ரீதியாக அனைவரையும் கவராமல் போனதில் வருத்தமே ...

நான் ஈ 

தரமான க்ராபிக்ஸும் , விறுவிறுப்பான திரைக்கதையும் இருக்கும் போது படத்தின் ஹீரோ ஈயாக இருந்தால் கூட தப்பில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி  . தமிழ் , தெலுங்கு  இரண்டிலும் சக்கை போடு போட்ட படம் ஹிந்திக்கும் பறக்கிறது . சுதீப் , சமந்தா இருவரும் ஈ உயரே பறக்க முக்கிய காரணமாய் இருந்தவர்கள் ...

விமர்சனம் படிக்க : நான் ஈ - நான் ஸ்டாப் பேன்ட்ஸீ ...

பில்லா 2 

பில்லா வை போலல்லாமல் படத்திற்கு மிக்ஸட் ரெஸ்பான்ஸ் இருந்தாலும் ஸ்டைலிஷான மேக்கிங்கிலும் , அஜித்தின் நடிப்பிலும் குறை சொல்ல முடியாத படம் . அஜித் ஓபனிங்கில் கிங் என்பதை திரையுலகிற்கு மீண்டுமொருமுறை உணர்த்திய படம்  ...

விமர்சனம் படிக்க :  பில்லா 2 - டான் ஃபார் ஃபேன் ( DON FOR FAN )...

அட்டகத்தி 

யதார்த்தமான படம் என்றால் சோகமாக தான் இருக்க வேண்டுமா என்ன ? அட்டகத்தி பார்த்த பிறகு தேவையில்லை என்று அனைவரையும் சொல்ல வைத்திருக்கிறார்  அறிமுக இயக்குனர் ரஞ்சித் . கத்தியின்றி ரத்தமின்றி ஜாலியாக குத்திய படம் அட்டகத்தி .

சுந்தர பாண்டியன் 

ஈசன் , போராளி இரண்டு  படங்களின் தோல்விக்கு பிறகு கமர்சியல் நடிகனாகவும் , தயாரிப்பாளராகவும் சசிக்குமாரை தூக்கி நிருத்தியிருக்கின்றான்  சுந்தர பாண்டியன் . கலகலப்பான முதல் பாதி , கலங்க வைக்கும் இரண்டாம் பாதி  என கலந்து கட்டி அடிக்கிறான் . படத்தின் வெற்றிக்கு பிறகு சசி 5 சி கேட்பதாக பேச்சு அடிபடுகிறது ...

விமர்சனம் படிக்க :  சுந்தரபாண்டியன் - சறுக்க மாட்டான் ...

சாட்டை 

கொஞ்சம் நாடகத்தனத்தை தவிர்த்து விட்டு பார்த்தால் அரசு பள்ளியின் அவலங்களை தோலுரித்துக்காட்டும் சமூக அக்கறையுள்ள படம் . இயக்குனர் அன்பழகனின் வசனங்கள் படத்திற்கு பெரிய பலம் ...

விமர்சனம் படிக்க : சாட்டை - சடுதியில் தவறவிட்ட அடி ...

பீட்சா  

இந்த வருடத்தின் எதிர்பாராத மிகப்பெரிய வெற்றிப்படம் . சிறந்த ஒளிப்பதிவு , திறம்பட்ட திரைக்கதை , விஜய் சேதுபதியின் நடிப்பு இவற்றால் வசூலையும் , விமர்சகர்களின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்த திகில் ஜிகர்தண்டா . பாலாஜியை தொடர்ந்து குறும்பட உலகிலிருந்து திரையுலகிற்கு வெற்றிகரமாக கால் பதித்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ் ...

விமர்சனம் படிக்க :  பீட்சா - சாப்பிடலாம் ...

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 

வித்தியாசமான தலைப்பு , வசீகரமான ப்ரமோ இரண்டோடு மட்டும் நின்று விடாமல் வியாபாரிகள் , ரசிகர்கள் இருவரையும் நிறைவு செய்த படம் . தன் முதல் படத்திலயே முத்திரை பதித்து விட்டார் பாலாஜி தரணீ தரன் ...

விமர்சனம் படிக்க : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - நிறைவு...

துப்பாக்கி 

சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களால் சர்ச்சைக்கு உள்ளானாலும் வசூலுக்கு  எந்த பங்கமும் இல்லாமல் இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் துப்பாக்கி . க்ளைமாக்ஸ் சண்டையால் காமெடி பண்ணாலும் விறுவிறு திரைக்கதையால் இந்த வருடத்தின் இரண்டாவது வெற்றியை விஜய் க்கு கொடுத்திருக்கும் படம் . பெரிய இயகுன்ர்களிடம் ஈகோ பார்க்காமல் ஹீரோக்கள் தங்களை  ஒப்படைத்தால் வெற்றியை எதிர்பார்க்கலாம் என்பதை உணர்த்துகின்றன விஜய்யின் வெற்றிகள் ...

விமர்சனம் படிக்க :  துப்பாக்கி - ஏ. ஆர். 47...

போடா போடி 

சரியான தருணத்தில் ரிலீசாகி நல்ல படியாக ப்ரமோ செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் சிம்பு வின் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கக் கூடிய படம் ...

விமர்சனம் படிக்க : போடா போடி - பொழுதுபோக்கு ...

கும்கி 

மைனா வில் பாதியளவு கூட படம் கவரவில்லை என்றாலும் நல்ல ஒளிப்பதிவு , பாடல்கள்  , குடும்பத்துடன் பார்க்கும்படியான கதை , அதோடு மட்டுமல்லாமல் தற்போதைக்கு வேறெந்த நல்ல படமும் இல்லாதது போன்ற காரணங்களால் எதிர்பார்த்ததை விட வசூலை குவித்துக்கொண்டிருக்கிறது கும்கி ...

விமர்சனம் படிக்க : கும்கி - கோவில் யானை ...


1 comment:

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...