3 December 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - நிறைவு...


வித்தியாசமான தலைப்பு , வசீகரமான ப்ரொமோ இவற்றோடு மட்டும் நின்று விடாமல் தன் முதல் படத்தையே தமிழ் சினிமாக்களின் பார்முலாக்களை உடைக்கும் படமாக தந்திருக்கிறார்  இயக்குனர் பாலாஜி தரணீதரன் . லோ பட்ஜெட்டாக இருந்தாலும் படம் ஹை இம்பாக்ட் கொடுக்கிறது ...

இரண்டு நாளில்  காதலித்த பெண்ணுடன் கல்யாணத்தை வைத்துக்கொண்டு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் பிரேமிற்கு ( விஜய் சேதுபதி ) பின்னந்தலையில் , அதிலும் குறிப்பாக மெடுலா வில் அடிபட்டு விடுவதால் தற்காலிக நினைவுகளை இழந்து தனலட்சுமி ( காயத்ரி ) யின் காதல் உட்பட கடந்த ஒரு வருடங்களில் நடந்த எல்லாவற்றையும் மறந்து விடுகிறார் . பிரேமின் நண்பர்கள் பக்ஸ் ( பகவதி பெருமாள் ) , சரஸ் ( விக்னேஸ்வரன் ) , பஜ்ஜி ( ராஜ்குமார் ) மூவரும் நடந்த சம்பவத்தை மறைத்து பிரேமிற்கு எப்படி திருமணத்தை முடித்து வைக்கிறார்கள் என்பதை நீளமாக இருந்தாலும் நிறைவாக சொல்லியிருக்கிறார்கள் ...


இந்த வருடம் பீட்சா வை தொடர்ந்து விஜய் சேதுபதி  புகுந்து  விளையாடியிருக்கும் மற்றொரு படம் இது . பக்கத்து வீட்டு பையன் போல  பாந்தமாக  இருந்தாலும் மனிதர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சின்ன சின்ன முகபாவங்களில் சிக்ஸர் அடிக்கிறார் . " என்ன ஆச்சு , கிரிக்கெட் விளையாண்டோம் " , " நீ சொன்னா பில்டிங்லருந்து குதிப்பேண்டா " என்று சொன்ன வசனங்களையே படம் நெடுக திரும்ப திரும்ப சொன்னாலும் நம்மை முடிந்தவரை சோர்வடையாமல் வைத்ததற்காகவே இவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் ...

லீடிங் கேரக்டரை விஜய் சேதுபதி செய்தாலும் நண்பர்களாக நடித்திருக்கும் மற்ற மூவரும் உண்மையான ஹீரோக்களே . இவர்களுள் ஸ்கேன் , கெமிக்கல் ரியாக்ஷன் பற்றியெல்லாம் சீரியசான முகத்துடன் பேசி நம்மை சிரிக்க வைக்கும் பக்ஸ் முதலிடம் வகிக்கிறார் . இவரை போன்ற ஒருவரை நம் வாழ்நாளில் நிச்சயம் சந்தித்திருப்போம் அல்லது சந்தித்துக்கொண்டிருப்போம் என்பதே இந்த கேரக்டரின் பெரிய ப்ளஸ் . மற்ற இருவரும் மிக யதார்த்தமாக நடித்திருந்தாலும் ராஜ்குமாரின் முகபாவங்களில் மட்டும் சில இடங்களில் செயற்கைத்தனம் தெரிகிறது . படம் போகிற போக்கில் இந்த குறை பெரிதாக தெரியவில்லை .

இடைவேளைக்கு பிறகு இன்ட்ரோ ஆகியிருந்தாலும் காயத்ரி நம்மை கவர தவறவில்லை . குறிப்பாக ரிசப்ஷன் காட்சிகளில் இவர் நடிப்பு அருமை . பிரேமின் தந்தை , ஒன்று விட்ட அண்ணனாக  நடித்திருப்பவர்கள் , சலூன் கடை பையன் , டாக்டர் , மதன் சார் ( படத்தில் ) இப்படி துணை கதாபாத்திரங்கள் எல்லோருமே இயல்பாக நடித்து அசத்துகிறார்கள் ...


படத்தில் நால்வரின் அறிமுக பாடல் , ப்ரோமோ பாடல் என மொத்தம் இரண்டே பாடல்கள் தான் என்றாலும் இசையமைப்பாளர் வேத்சங்கர் கவனிக்க வைக்கிறார் . சித்தார்த்தின் முதல் பாதி பின்னணி இசை ஏதோ திகில் படம் போல இருந்து வெறுப்பேற்றினாலும்  பின் பாதி ஓகே . படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் வாழ்க்கையில் உணமையிலேயே நடந்த சம்பவன் தான் கதையின் கரு . அந்த ஒன்லைனை இவ்வளவு அழகாக , இயல்பாக சொன்ன விதம் உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது ...

சீரியசாக படத்தில் நடக்கும் விஷயங்கள் நம்மை விடாமல் சிரிக்க வைப்பதே படத்தின் ஹைலைட் . குறிப்பாக மதன் சார் ஒரு பெண்ணை பற்றி சொல்லிவிட்டு நடந்து போகும் போது கூட வந்தவர் அந்த பெண்ணின் பெர்சனாலிட்டியை பற்றி விசாரிப்பது வாய்ஸ் ஓவரில் கேட்பது , பக்ஸ் தனத்தை சமாளிக்க செல்போனில் தனியாக பேசுவது என்று நிறைய சீன்களை சொல்லிக்கொண்டே போகலாம் ...

படத்தின் நீளம் , சில இடங்களில் நெளிய வைக்கும் ரிப்பீட்டட் வசனங்கள்  , மிதமிஞ்சிய யதார்த்த சூழல் , ஒரு வருடத்தில் நடந்ததை மறப்பவன் எப்படி பத்து வருடங்களுக்கு முன் இறந்த சிவாஜியையும் , ஐந்து வருடங்களுக்கு முன் வந்த சிவாஜி படத்தையும் மறக்க முடியும்  , ஏன் வேறெந்த நரம்பியல் நிபுணரையும் நண்பர்கள் அணுகவில்லை என்பது போன்ற கேள்விகள் உட்பட சில குறைகள் படத்தில் நிறைய பக்கத்த காணோமோ என்கிற நினைப்பை ஏற்ப்படுத்தினாலும் ஏதோ நமக்கு தெரிந்த நாலு நண்பர்களை பார்த்து விட்டு வந்த உணர்வை அழுத்தமாக  பதிவு செய்த விதத்தில் படம் கொஞ்சமல்ல நிறைவாகவே  மனதில் பதிகிறது ...

ஸ்கோர் கார்ட் : 45


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...