24 April 2013

உதயம் NH4 - UDHAYAM NH4 - தடம் மாறிய பயணம் ...


தேசிய நெடுஞ்சாலை என்கிற டைட்டிலை பவர் பறித்துக்கொண்டதால் உதயம் NH4 என்ற பெயர் மாற்றத்துடன் வந்திருக்கிறது படம் . வழக்கமான காதல் கதை தான் என்றாலும் சொன்ன விதத்தில் படத்தின் தலைப்பை போலவே  மாற்றம் காட்டியிருக்கிறார்கள் ...

பெங்களூருவில் படிக்கும் வடசென்னை மாணவர்கள் பிரபு ( சித்தார்த் ) & கோ பெரிய அரசியல்வாதியின் பெண்ணை ( அர்ஷிதா செட்டி ) கடத்துகிறார்கள் . விஷயம் வெளியே தெரியாமல் பெண்ணை மீட்டு விட்டு கடத்தியவர்களை கொல்வதற்கு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டை ( கே.கே.மேனன் ) பணிக்கிறார் அரசியல்வாதி . கே.கே. மேனனுக்கு இது கடத்தல் அல்ல காதல் என்று தெரியவருகிறது . கடைசியில் என்ன ஆனது என்பதை வழக்கமான முடிவுடன் சொல்லியிருக்கிறார்கள் ...

சித்தார்த் திற்கு படம் முழுவதும் உம்மென்று வருவதை தவிர வேறு வேலையில்லை . நல்ல நடிகர் தான் என்றாலும்  சொல்லிக்கொள்ளும் படியாக படத்தில் ஏதுமில்லை ... அர்ஷிதா செட்டி சில காட்சிகளில் அழகாக இருக்கிறார் ( மேக் அப் உபயம் ?! ) . பல காட்சிகளில் சுமாராக இருக்கிறார் . யார் சொன்னாலும் நம்பி விடக்கூடிய அந்த வயதிற்கான இம்மெச்சூரிட்டியை அழகாக சொல்லியிருக்கிறார்கள் . ஆனாலும்  அம்மணி இன்னும் மேஜராகவில்லை ( 18 வயசுங்கோ ...! ) எனும் போது இடிக்கிறது ...

 

நீண்ட நாள் கழித்து நெகட்டிவ் கேரக்டரை ரசிக்க வைத்திருக்கிறார் கே.கே.மேனன் . படத்தின் ஹீரோவே இவர் தானோ என்று நினைக்குமளவிற்கு தமிழில் வெயிட்டான அறிமுகம் . இவரையும் வழக்கம் போல ஆய் , ஊய் என்று கத்தவிட்டு ஹீரோவிடம் அடிவாங்க மட்டுமே விடாமல் கோலிவுட் காப்பாற்றக்கடவது . இவர்களை தவிர சித்தார்த்தின் நண்பனாக வரும் குண்டு பையன் , அர்ஷிதாவின் நண்பனாக வரும் பெங்களூரு பையன் , புதிதாய் வேலைக்கு சேர்ந்திருக்கும் சைபர் க்ரைம் போலீஸ்  போன்றோரும் ரசிக்க வைக்கிறார்கள் ...

வேல்ராஜின் ஒளிப்பதிவும் , ஜி.வி யின் பி.ஜி யும் படத்திற்கு பலம் . பாலாவின் கானா பாடலும் , " யாரோ இவன் " மெலடியும் முணுமுணுக்க வைக்கின்றன ... வெற்றிமாறன் கதை , வசனம் எழுதி தயாரித்திருக்கிறார் . கதை , வசனம் இரண்டிலுமே புதிதாய் எதுவுமில்லை என்றாலும் ப்ளாஷ்பேக்  நகரும் முதல் பாதி திரைக்கதை வேகத்தையும் , என்ன நடக்குமோ என்கிற விறுவிறுப்பையும் கொடுக்கத்  தவறவில்லை ...


கடத்தல் என்கிற போது இருந்த ஆர்வம் காதல் ரூட்டுக்குள் பயணிக்கும் போது படுத்து விடுகிறது . பண்ணிரெண்டு மணியை  கடந்து விட்டால் பெண் மேஜராகி விடுவாள் என்பதும்  , தன் அரசியல் லாபத்திற்காக பெண்ணையே  அப்பா கொல்ல சொல்வதும் ஐந்தாம் நூற்றாண்டு தமிழ் சினிமா . செல்போன் டவரை வைத்து சித்தார்த்தை கண்டுபிடிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தாலும் உடனுக்குடன் அவர் அனுப்புகிற எஸ்.எம்.எஸ் சை கூட போலீஸ் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை ...

அர்ஷிதா சித்தார்த் மேல் காதல் வயப்படுவதற்க்கான காரணங்கள் க்யூட்டாக இருந்தாலும் இருவரும் எந்நேரமும் பப்புக்குள்ளேயே மப்பாக இருப்பதால் அவர்கள் காதல் சேர வேண்டுமே என்கிற பரபரப்பு  டோட்டல் மிஸ்ஸிங் . அதனால் தானோ என்னமோ ஆரம்பிக்கும் போதிருந்த ஆர்வத்துடன் நம்மால் படத்தோடு தொடர்ந்து பயணப்பட முடியவில்லை ...

புதுமுகம் மணிமாறன் இயக்கத்தில் ஸ்டார்ட் செய்தவுடன் இண்டர்வல் வரை ஸ்பீடாக செல்லும் படம் பின் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தடம் மாறி  ஊருக்குள் சென்றது போல சொங்கி விடுகிறது ...

ஸ்கோர் கார்ட் - 41


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தனுஷ் நடித்திருக்க வேண்டுமோ...?

Yaathoramani.blogspot.com said...

படத்தில் குறைந்தது ஒரு மணி நேரம்
குடி குறித்த சட்டப்படியான விளம்பரம்
இடது ஓரம் ஓடிக்கொண்டே இருந்தது
கதையும் கதாப்பாத்திரங்களும்
குடித்துக் கொண்டோ குடிக்கிற இடத்தில்
இருந்து கொண்டோ இருந்தார்கள்
பெங்களூரில் வந்து படிக்காவிட்டாலும்
பரவாயில்லை குடிக்காமல் இருப்பது போன்ற
வசனங்க்கள் இளைஞர்களைக் கவரும் என
நினைக்கிறேன்
பிழைக்கத் தெரிந்த இயக்குனர்கள்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்.... பார்க்க நினைத்திருந்தேன்.. பார்க்கப் போவதில்லை!

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
தனுஷ் நடித்திருக்க வேண்டுமோ...?

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Ramani S said...
படத்தில் குறைந்தது ஒரு மணி நேரம்
குடி குறித்த சட்டப்படியான விளம்பரம்
இடது ஓரம் ஓடிக்கொண்டே இருந்தது
கதையும் கதாப்பாத்திரங்களும்
குடித்துக் கொண்டோ குடிக்கிற இடத்தில்
இருந்து கொண்டோ இருந்தார்கள்
பெங்களூரில் வந்து படிக்காவிட்டாலும்
பரவாயில்லை குடிக்காமல் இருப்பது போன்ற
வசனங்க்கள் இளைஞர்களைக் கவரும் என
நினைக்கிறேன்
பிழைக்கத் தெரிந்த இயக்குனர்கள்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...