9 March 2014

பதிவு போடலையோ பதிவு ! ...


திவெழுதி ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது . உடல் நிலை சரியில்லையா அல்லது சினிமா பார்ப்பதை விட்டு விட்டீர்களா என்றெல்லாம் கேள்விகள்  வர ஆரம்பித்த பிறகு தான் இந்த இடைவெளியின் நீளம் நன்றாக உறைக்கிறது.
எனக்கு அம்மை போட்டதன் காரணமாக இதே போன்றதொரு இடைவெளி சென்ற வருடம் இதே நேரம் ஏற்பட்டது . அப்பொழுது கூட விஸ்வரூபம் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் வீட்டிலிருப்பவர்கள் திட்டையும் பொருட்படுத்தாமல் எழுத  ஆரம்பித்து விட்டேன் ...

மற்றபடி எழுதாமல் இருப்பதற்கு கணினியில்  கோளாறோ அல்லது இணையத்தில் தடையோ தான் பொதுவாக காரணமாக இருக்கும் . ஆனால் இந்த முறை அப்படி எந்தவித தடையும் இல்லாமல் நான் பதிவு போடாதது  மட்டுமல்ல இணையத்திலேயே உலவாமல் போனதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை .  அதே நேரம் திடீரென ஒரு நாள் ஷஹி மூலம்  மூன்றாம் கோணம் இணைய தள நிறுவனரும் , நண்பருமான அபி கார் விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி வேறெதையும் பற்றி சிந்திக்க விடாமல் சில நாட்கள் என்னை கட்டிப்போட்டதும் உண்மை ...

படங்கள் ரிலீசானவுடன் பார்க்காமல் போனது விமர்சனங்கள் எழுதாததற்கு காரணாமாக இருந்தாலும் அப்படி பார்க்காமல்  போனது ஏனென்று யோசித்தால் அதற்கும் விடையில்லை . ஆனால் ஒரு விஷயம் நமக்கு பிடித்திருந்தாலும் அதையே திரும்ப திரும்ப செய்யும் போது  ஏற்படும் அயர்ச்சி தான் இதற்க்கெல்லாம் அடித்தளமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .  கணவன் மனைவிக்குள் என்ன தான் பிடித்தம் இருந்தாலும்
ஒரு இடைவெளி ஏற்படும் போது பிறக்கும்  சுதந்திரத்தை எல்லாரோலும் உணர முடியும் . பிரிவிற்கு பிறகு இணையும் போது உறவு இன்னும் வலுப்படும் . ஒரு மாத இடைவெளிக்கு ஓவர் பில்ட் அப் கொடுக்கிறேனோ . சரி விடுங்க மேட்டருக்கு வருவோம் ...

கடைசியாக விமர்சனம் எழுதிய படம் ரம்மி . ஒரு வேளை அது தான் அடுத்து படங்களை ரிலீசானவுடன் பார்க்காதற்கு  காரணமோ என்றெல்லாம் யோசித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை . வீரம் , ஜில்லா என்று கமர்சியல் அதிரடியில் ஆரம்பித்த 2014 பிறகு கொஞ்சம்  தொங்க ஆரம்பித்து விட்டது . விஜய் சேதுபதியின் ரம்மி , பண்ணையாரும் பத்மினியும் இரண்டுமே சரியாக போகவில்லை . பார்ட்டி உஷாராக வேண்டிய நேரமிது . கதையை  தேர்ந்தெடுப்பதில்  கவனம் செலுத்தாவிடில் காணாமல் போய்  விடும் அபாயம் உள்ளது ...

இங்க என்ன சொல்லுது , இது கதிர்வேலன் காதல் இரண்டுமே காமெடி என்ற பெயரில் வந்த மொக்கைகள் தான் என்றாலும் இரண்டாவது கொஞ்சம் பரவாயில்லை . சின்ன பட்ஜெட்டில் வந்த  கோலி சோடா பாராட்டுக்களோடு பைசாவையும் அள்ளியது சந்தோசம் . படம் பிடித்திருந்தாலும் எனக்கென்னமோ ரேணிகுண்டாவில் நடித்தது போன்ற பையன்கள் நடித்திருந்தால் படம் இன்னும்  பிக் அப் ஆகியிருக்கும் . ஏனா பசங்க ரொம்ப பால்வாடி யா இருக்காங்க . வல்லினம் , தெகிடி இரண்டுமே நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள் . இன்னும் பார்க்கவில்லை . நிமிர்ந்து நில் ரிலீசாகி இருக்கிறது . பார்த்தவுடன் பதிவு போடலாம் என்றிருக்கிறேன் ...

நாடாளுமன்ற தேர்தலுக்கு தேதியையே அறிவித்தாகி விட்டது . அரசியலை தொடாமல் போனால் நன்றாக இருக்குமா ? . நான் எனது முந்தைய பதிவுகளில் சொன்னது போல எதிர்பார்த்த படி பி.ஜே.பி - ம.தி.மு.க - பா.ம.க - தே.மு.தி.க கூட்டணி அமையவிருப்பது இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல அடுத்த சட்டசபை தேர்தலுக்கும் தி.மு.க , அ.தி.மு.க விற்கு நல்ல மாற்றாக இருக்கும் என நம்பலாம் . கம்யூனிஸ்டுக்களை கழட்டி விட்டதிலிருந்து அ.தி.மு.க அதீத நம்பிக்கையிலிருப்பது தெரிகிறது . தோழர்களுக்கு தோள் கொடுக்க மு.க காத்திருக்கிறார் . அவர்கள் செவி சாய்ப்பார்களா தெரியவில்லை . நான் பல முறை சொன்னது போல காங்கிரஸ் தனித்து விடப்பட்டிருக்கிறது . இப்படி பல்முனை போட்டி நடப்பது குழப்பத்தை கொடுத்தாலும் அந்தந்த கட்சிகளின் பலத்தை நிரூபிப்பதற்கு ஏதுவாக இருக்கும் ...

வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்கும் வழக்கம்  இருந்தாலும் நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதையும் , மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டுமென்பதையும் மறக்காமல்மக்கள்  வாக்களிப்பார்கள் என்று நம்பலாம் . ஏனெனில் டில்லியில் ஆம் ஆத்மி அடித்த 48 நாள் கூத்தை யாராவது மறக்க முடியுமா ? சொன்ன வாக்குறுதிகளை  நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தவுடன் அரவிந்த் அடித்த அந்தர் பல்டி பழுத்த அரசியல்வாதிகளையும் மிஞ்சி விட்டது . மத்தியிலும் இது போன்றதொரு நிலை ஏற்படாமல் இருக்க மக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும் ...

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாங்க... வளர்க...!

அரசியலையும் தொட்டு இனி பகிர்வுகள் தொடர வாழ்த்துக்கள்...

சீனு said...

ம்ம் மிகவும் பிடித்த விசயத்தில் சிறிய அயர்ச்சி (தற்காலிகமாக) வருவதும் நல்லதுதான் அப்போதுதானே அதன்பின் இன்னும் வேகமெடுத்து ஓட முடியும்.. மீண்டும் உற்சாகத்துடன் வலம் வர வாழ்த்துக்கள்

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
வாங்க... வளர்க...!
அரசியலையும் தொட்டு இனி பகிர்வுகள் தொடர வாழ்த்துக்கள்...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...

ananthu said...

சீனு said...
ம்ம் மிகவும் பிடித்த விசயத்தில் சிறிய அயர்ச்சி (தற்காலிகமாக) வருவதும் நல்லதுதான் அப்போதுதானே அதன்பின் இன்னும் வேகமெடுத்து ஓட முடியும்.. மீண்டும் உற்சாகத்துடன் வலம் வர வாழ்த்துக்கள்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...