27 January 2015

தொட்டால் தொடரும் - THOTTAL THODARUM - மைல்ட் டச் ...


டத்தை பார்த்து இரண்டு நாட்களாகி விட்டது . இருந்தாலும்  பிரபல பதிவர் என்பதையும் தாண்டி 2013 பதிவர் சந்திப்பின் பயனாக தனிப்பட்ட முறையிலும் நன்கு தெரிந்தவரான கேபிள் சங்கரின் படத்தை விமர்சிக்கலாமா ? வேண்டாமா என்பதில் சின்ன தயக்கம் . கடைசியில் தனது பட்டவர்த்தமான விமர்சனங்களின் மூலம் பல இயக்குனர்களின் படங்களை கிழித்துக் காயப் போட்டவரின் முதல் படத்தை விமர்சிக்காமால் விட்டு விட்டால் அது காலச்சொல் ஆகிவிடாதா ?! . இனி ...

ஒரு அமைச்சர் ( பிரமிட் நடராஜன் ) சாலை விபத்தில் இறப்பதிலிருந்து தொடங்குகிறது படம் . அது கொலையா ? விபத்தா ? என்று போலீஸ் விசாரணை செய்யும் த்ரில்லர்  ட்ராக் ஒரு புறம் . ஐ.டி கம்பெனி எச்.ஆர் சிவா
( தமன்குமார் ) , கால் சென்டர் சேல்ஸ் கேர்ள் மது ( அருந்ததி ) இருவரும் பார்த்துக் கொள்ளாமலேயே செல்போனில் லவ்விக்கொள்ளும் ரொமாண்டிக் ட்ராக் மறுபுறம் என இடைவேளை வரை செல்லும் படம் கொலைகளை விபத்து போல திட்டமிட்டு செய்யும் கொலைகார கும்பலிடம் வழிய சென்று மது மாட்டிக்கொண்டவுடன் நேர்கோட்டில் பயணிக்கிறது ...

ஐ,டி யில் வேலை செய்பவராக கனகச்சித பொருத்தம் தமன் . இவருக்கு சொந்த குரலா ? டப்பிங்கா என்று தெரியவில்லை . ஆனால் வாய்ஸ் கம்பீரம் . மற்றபடி பெரிதாக மெனக்கெடாமல் அளவாக நடித்திருக்கிறார் தமன்குமார் . இரண்டு படங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும் இந்த படம் அருந்ததிக்கு நல்ல ப்ரேக் . இவரை சுற்றியே நடக்கும் கதையில் முடிந்த வரை ஸ்கோர் செய்கிறார் . முகம் கொஞ்சம் முத்தலாக இருப்பதாலோ என்னமோ சோகக் காட்சிகள் கை கொடுக்கும் அளவிற்கு இவருக்கு காதல் காட்சிகள் கை கொடுக்கவில்லை . இவருடைய கேரக்டர் ஸ்கெட்சில் இருக்கும் குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் ...


" அடுத்தடுத்து பஞ்ச் சொல்ல  நான் என்ன சந்தானமா ? " என்று கேட்டாலும்
" பொண்ணுங்க கார் மாதிரி , இருக்குறவனுக்கு செலவு , இல்லாதவனுக்கு கனவு " , " கடலை போடுறது கருவாடு மாதிரி , ஊரெல்லாம் நாறினாலும் போடுறவனுக்கு மட்டும் மணக்கும் " என்று படம் நெடுக பஞ்ச்களை அள்ளித் தெரிக்கிறார் பாலாஜி . முதலில் ரசிக்கும் படியாக இருந்தாலும் முதல் பாதி முழுவதையும் இவர் தோள்களில் சுமத்தியிருப்பது ஓவர் டோஸ் . கேபிளுடன் சேர்ந்து கார்க்கி எழுதியிருக்கும் வசனங்கள் க்யூட்டாக இருந்தாலும் சந்தானத்திடம் இருக்கும் டைமிங் பாலாஜிக்கு மிஸ் ஆவதால் நல்ல வசனங்கள் கூட ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுவது துரதிருஷ்டம் . " கேட்குறது பெர்சனல் லோன் , அதுக்கு ஏன் அபிசியலா பேசணும் " என்று பாலாஜி போனில் கலாய்ப்பதை உதாரணமாக சொல்லலாம் ...

பி.சி சிவனின் இசையில் " பாஸு  பாஸு " , " பெண்ணே பெண்ணே " பாடல்கள் ரம்யம் . சேசிங் சீன்களில் மட்டும் பின்னணி இசையை கவனிக்க வைக்கிறார் . ஈ.சி.ஆர் ரோடுகளில் ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்கின் டாப் ஆங்கிள் ஷாட் கவர்கிறது . எடிட்டிங்கில் சாய் அருண் தூங்கி விட்டாரா இல்லை இயக்குனர் தூங்கி விட்டாரா என்று தெரியவில்லை ...

தன் முதல் படத்திற்கு நாவல் போல இன்ட்ரெஷ்டிங்கான இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குனருக்கு கை குலுக்கலாம் . அதே போல ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்டாக கொடுத்தமைக்கும் சபாஷ் . பேஷ் புக் , ட்விட்டர் காலத்தில் பார்க்காமலேயே போனில் காதல் செய்யும் காட்சிகளை முடிந்தவரை நம்பும்படியாகவே எடுத்திருக்கிறார் கேபிள் . காதல் ப்ளாட் பழசாக இருந்தாலும் காட்சிகளை ப்ரெஸ்ஸாக வைத்தமைக்கு பாராட்டுக்கள் ...


பாலாஜியின் ஓவர் டோஸ் வசனங்கள் , ஹீரோயினின் சித்தி எபிசோட் , தம்பி ஆக்ஸிடெண்டுக்கு பணம் தேவைப்படுவது என்று நிறைய பழைய நெடி அடித்தாலும் இன்டர்வெல் ப்ளாக்கில் சரியாக ட்விஸ்ட் வைக்கும் கேபிள் அதன் பிறகு அதை தக்க வைக்காமல் தடுமாறியிருக்கிறார் . அதிலும் வில்லனை கண்டுபிடிக்க போகும் இடத்தில் கட்டிங்கை பார்த்தவுடன் கை நடுங்கும் குடிமகனைப் போல ரூமை போட்டவுடன் ஜல்சா வுக்கு ரெடியாகும் ஹீரோயின் எல்லாம் " என்னம்மா இப்படீ பண்ணுறீங்கலேம்மா " ...

கொலையை விபத்து போல செய்யும் வின்சென்ட் ஹீரோயினை நேரடியாக துரத்துவது சொதப்பல் . அதிலும் க்ளைமேக்ஸில் காரை துரத்திக் கொண்டு அவர் பைக்கில் போவதெல்லாம் ஹை வே காமெடி . படத்தை முடித்திருப்பதிலும் அவசர கதி தெரிகிறது . இந்த படத்திற்கு ப்ளஸ் மைனஸ் இரண்டுமே கேபிள் தான் . அதிகம் பரிச்சியமில்லாதவர்கள் நடித்திருக்கும் படத்திற்கு பிரபல ப்ளாகரான கேபிளும் , அவருடைய கதையும் ப்ளஸ் . அதே  சமயம் அவருக்காக எதிர்பார்ப்புடன் வருபவர்களை ஏமாற்றும் வகையில் ஆவெரேஜாக படம் இருப்பது மைனஸ் . எந்த படமாக இருந்தாலும் அதன் நிறை குறையை நேர்த்தியாக அலசி ஆராய்ந்து  அழுத்தமான எழுத்துக்களால் கவரும் கேபிள் சங்கர் தனது முதல் படமான தொட்டால் தொடரும் மூலம் நம்மை மைல்டாகவே டச் செய்கிறார் . இருப்பினும் முதல் படத்தையே குடும்பத்துடன் பார்க்கும் படியான டீசண்ட் டச்சுடன் கொடுத்ததால் அவருடைய பணி தொடர வாழ்த்துக்கள் ...

ஸ்கோர் கார்ட் : 40 


4 comments:

IlayaDhasan said...

நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். எங்கள் ஊரில் இன்னும் போடவில்லை. இனிமேல் பார்க்கும் தைரியம் இல்லை. தினமலரில் , 'தொடரவில்லை' என்ற விமரிசனத்தைப் பார்த்தவுடன் மைல்டா சந்தேகம் இர்ந்துச்சு , இப்ப தெளிவாக்கிடீங்க . நல்ல படங்களை எல்லாம் கண்டமேனிக்கு வம்புக்கு இழுக்கும் ஆ.மு சேனாக்கள் ஜல்லி அடிப்பதைப் பார்த்தால் இவர்களின் விமர்சனத்தை பார்த்து படம் பார்க்கும் ஆவல் அதிகரிக்கிறது என்று சொரிந்து விடும் அல்லக்கைகள் இனிமேலாவது திருந்துவார்களா என்பது சந்தேகமே.

கேபிள் அடிக்கடி கேட்பார் , 'படத்தை பொது வெளியில் வைத்துவிட்டு , விமர்சிக்க கூடாதென்றால் எப்படி?' .
கேபிள் நலம் விரும்பிகள் அவர் நலத்தை பார்த்து கமுக்கமாக இல்லாமல் , உண்மை விமரிசனத்தை வைக்க வேண்டும். அதுவே அவர் எதிர்கால முயற்சிகளுக்கு உண்மையான உதவியாக இருக்கும்.

IlayaDhasan said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், நீங்கள் சொல்வதில் இருந்து , ஹீரோயன் நேரம் கெட்ட நேரத்தில் , மூட் வந்த அலைவது போல் காட்சி வைதிருக்கும் கேபிள் அவர்களின் 'எண்ண ' அலைகளை எந்த விதத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. அது சரி , அடல்ட்ஸ் ஜோக்கை பெருமையாக நினைக்கும் அவரின் எண்ண ஓட்டத்தின் விளைவு தான் இது . நைசாக , சீன் இல்லையென்றால் படம் ஓடாது என்று நினைத்திருப்பார். பெண்ணியம் பேசும் பதிவர்கள் எல்லாம் ஏன் பெண் என்றால் இப்படிதான் என்று சிறுமை படுத்தும் கேபிளை கண்டிக்காமல் வாளாது இருக்கிறார்கள் என்று தெரியவில்லை .

Online Jobs for Tamil People said...

முதலீடு இல்லாமல் Onlineல் தினமும் 100ரூபாய் உறுதியாக சம்பாரிக்க மூடியும்! மேலும் விவரங்களுக்கு - http://www.bestaffiliatejobs.blogspot.in/2015/01/paidverts-earning-opportunities-in-tamil.html

தமிழ்பிரியன் said...

பல நல்ல திரைப்படங்களையும் அது நொட்டை இது நொள்ளை என தன்னை பெரிய ஜீனியஸ் என நினைத்துக் கொண்டு கமேண்டு எழுதும் கேபிள் சங்கர் அவர்கள், ஒரு கொரிய படத்தின் கதையைத் திருடி தன்னுடைய சொந்தக் கதை போல காட்சிப்படுத்தி விட்டார். ஆனால் அதில் எவ்வளவு நொட்டையும் நொள்ளையும் உள்ளது என படம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். ஏண்டா இந்தப் படத்திற்கு வந்தோம் என மண்டையை பிய்த்துக் கொண்டு நிற்கும் நிலையில் தான் இருந்தோம். கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம். அந்தக் கதைதான் கேபிளின் கதை. இனியாவது மற்ற சினிமாக்களை விமர்சனம் செய்வதை அடியோடு நிறுத்துங்க கேபிள். 'சொல்லுதல் யாருக்கும் எளியவாம்
அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...