30 August 2015

தனி ஒருவன் - THANIORUVAN - தலைவன் ...


ஜெயம் ரவிக்கு இந்த குருப்பெயர்ச்சி நன்றாக வொர்கவுட் ஆகியிருக்கிறது என நினைக்கிறேன் . ஒரே வருடத்தில் மூன்று  படம் , அதிலும் இதுவரை  அவர் நடித்த படங்களிலேயே தனித்து நிற்கிறான் இந்த தனி  ஒருவன் . ஜெயம் ரவியை வைத்து ரீமேக் மட்டுமே செய்து கொண்டிருந்த மோகன்ராஜா ( முன்னர் ஜெயம் ராஜா ) தனது தம்பிக்கு முதன்முறை ஆகச்சிறந்த சொந்த கதையை தேர்வு செய்து அதை எழுத்தாளர்கள் சுபா வோடு சேர்ந்து திரைக்கதையாக்கி முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியை அட்டகாசமாக நடிக்க வைத்து ஜெயித்திருக்கிறார் ...

தனது  வழியில் குறுக்கிடும் வில்லன்களை மட்டும் துவம்சம் செய்யும் ஹீரோக்கள் மத்தியில் தனக்கு நிகரான எதிரியை டார்க்கெட் செய்து தானாகவே சென்று அடிக்கிறான் இந்த தனி ஒருவன் . ஐபிஎஸ் போஸ்டிங்குக்கு முன்னரே சக பேட்ச் மேட்களுடன் சேர்ந்து இரவில் குற்றவாளிகளை பிடிக்கும் மித்ரன் ( ஜெயம் ரவி ) எல்லா குற்றங்களுக்கும்  மூலமான சித்தார்த் அபிமன்யு ( அரவிந்த்சாமி ) வை  தேடிப்பிடித்து களையறுப்பதே கதை ...

படத்தின் டைட்டிலே அரவிந்த்சாமிக்கு தானோ என்பது போல படமே அவரின் சிறு வயதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது . மங்காத்தா அஜித்துக்கு பிறகு இந்த அளவு நெகடிவ் கேரக்டருக்கு ரசிகர்களிடையே அவ்வளவு  வரவேற்பு . அஜித் போல ரசிகர் பட்டாளம் எல்லாம் இல்லாத ஒருவருக்கு இவ்வளவு கைதட்டல் கிடைக்க காரணம் அந்த கேரக்டரின் வடிவமைப்பும் , அதை தனது  அசால்டான நடிப்பால் அனாயசமாக செய்த அரவிந்த் சாமியும் . இந்த படத்திற்காக உடல் இளைத்து செம மேன்லியாக  இருக்கிறார் ரோஜா நாயகன் . இந்த படம் அரவிந்த்சாமிக்கு ஒரு மைல்கல் ...

ஜெயம்ரவி நிமிர்ந்து நில் மூலம் கவனிக்க வைத்தவர் தனி ஒருவனில் அதையும் தாண்டி மித்ரனாகவே மாறி ரசிக்க வைக்கிறார் . தோற்று விட்டோம் என்று கோபப்படும் இடத்திலும் , நண்பன் சாவை நேரில் பார்த்து கலங்கும் இடத்திலும் ஜெயம் ரவியிடம் தேர்ந்த நடிப்பு . சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்து விட்டு டகால்டி செய்யாமல் படத்தோடு வரும் முக்கியமான ரோலில் நயன்தாரா . க்ளோசப் காட்சிகள் அம்மணியின் வயதை காட்டுகிறது . அரவிந்த்சாமியின் அப்பாவாக வரும் தம்பி ராமையா தனியாக காமெடி ட்ராக் இல்லாமல் திரைக்கதையோடு சேர்ந்து சிரிக்க வைக்கிறார் . முதலமைச்சராக நாசர் , நண்பனாக கணேஷ் வெங்கட்ராமன் எல்லோருமே சரியான தேர்வு ...


ராம்ஜி யின் ஒளிப்பதிவு இருட்டுப் பக்கங்கள் நிறைந்த படத்துக்கு நல்ல வெளிச்சம் . ஹிப் ஹாப் தமிழா இசையில் காதல்  கிரிக்கெட் , தனி ஒருவன் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றான் . படத்திற்கு பிஜி ப்ளஸ். க்ரைம் நாவல் போன்ற விறுவிறுப்பை திரைக்கதையில் இயக்குனரோடு இணைந்து சுபா கொடுத்திருக்கிறார்கள் . அதிலும் அடுத்தடுத்த சீன்களுக்கான சிங்கிங் சூப்பர் . " மைனாரிட் டி  அரசு " போன்ற வசனங்கள் வரி விலக்குக்காக யாரையோ திருப்திப்படுத்த வைக்கப்பட்டதோ ?! ...

காக்க காக்க , என்னை அறிந்தால் ஸ்டைலில் நல்ல காப் , கொடூரமான வில்லன் மோதல் தான் கதை . ஆனால் போரடிக்காமல் , ட்ராக் மாறாமால் நிறைய யோசித்து புது புது சீன்களை வைத்த விதத்தில் நம்மை கட்டிப்போடுகிறான் தனி ஒருவன் . எல்லோரும் ட்ரைனிங் கில் இருக்கும் போது ஜெயம் ரவி மட்டும் சீனியர் போல ஆர்டர் போடுவது ஏன் ? , இவர்கள் செய்யும் இரவு வேலைகளை எந்த போலீசும் கண்டு கொள்ளாதது ஏன் ? , அரவிந்த் சாமியின் குற்றங்களில் முதலமைச்சர் நாசரின் பங்கு என்ன ? பல்லாயிரம் கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வரும் ஏன்ஜெலினா வுக்கு எதற்கு இவ்வளவு குறைவான பாதுகாப்பு ? மருந்து மாபியா அரவிந்தசாமிக்கு ஒரு கார் ட்ரைவர் கூடவா இல்லை ? கோர்ட்டில் வீடியோ ஆதாரத்தை எடிட் செய்து கொடுக்கும் ஜெயம் ரவிக்கு அதுவே ஆப்பாகி விடாதா ? போன்ற கேள்விகளை நமது ஆறாம் அறிவு எழுப்பினாலும் இரண்டேமுக்கால் மணி நேரம் நம்மை வேறெதையும் யோசிக்க விடாமல் மெஸ்மெரிசம் செய்து கூட்டத்தை கூட்டும் இந்த தனி ஒருவன் - தலைவன் ...

ஸ்கோர் கார்ட் : 45


ரேட்டிங் : 3.75* / 5*





1 comment:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...