29 September 2017

ஸ்பைடர் - SPYDER - வேவலாம் ...


மிழ் , ஹிந்தி , தெலுகு என இந்தியா  முழுவதும் ரவுண்ட் வரும் ஏ.ஆர். முருகதாஸின் லேட்டஸ்ட் படைப்பு ஸ்பைடர் . இந்த முறை மகேஸ் பாபு - எஸ்..ஜே.சூர்யா இருவருடனும் இணைந்திருக்கிறார் . 125 கோடி பட்ஜெட்டில் இரு மொழிகளில் தயாராகியிருக்கும் படம் அதற்கு வொர்த்தா ? பார்க்கலாம் ...

இன்டெலிஜென்ஸ் பீரோ வில் வேலை செய்யும் சிவா (   ) பொது மக்களின் ஃபோன் கால்களை வேவு பார்த்து ஏதாவது  பிரச்சனை என்றால் தனிப்பட்ட முறையில் போய் உதவி செயகிறார் . அவரது வழியில் குறுக்கிடும் சீரியல் கில்லர் சுடலை ( எஸ்.ஜே.சூர்யா ) யிடம் இருந்து இந்த ஸ்பை கொஞ்சம் கூட டர் இல்லாமல் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ஸ்பைடர் ( ஹப்பாடா டைட்டிலுக்கு விளக்கம் கொடுத்தாச்சு ) ...

மகேஸ் பாபு அஜித்தின் கலர் , விஜய் யின் துறுதுறு வுடன் இருக்கிறார் . அழும்போது மட்டும் எம்.ஜி,.ஆர் மாதிரி முகத்தை மூடிக் கொள்கிறார் . ஆத்ம திருப்திக்காக இவர் மக்களை காப்பாற்றுவதெல்லாம் சரி ஆனால் நடுவுல ஹீரோயின் பின்னால 28 நாட்கள் சுத்துறதெல்லாம் தேவையில்லாத இடைச்செருகல் . ஸ்பை யாக மட்டுமில்லாமல் ஸ்பைடர் மேன் வேலையெல்லாம் ஹீரோ செய்வதை லாஜிக் பற்றி யோசிக்காவிட்டால் ரசிக்கலாம் ...

எஸ்.ஜே.சூர்யா ஹீராவாக நடித்து நம்மை கொன்றதற்கு பிராயச்சித்தமாக வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார் . ஓவர் ஆக்டிங் அவ்வப்போது வெளிப்பட்டாலும் மனுஷன் குரூரமான சிரிப்பால் மனசை அள்ளுகிறார் . தம்பியுடன் சேர்ந்து தனி மனிதர்களை கொல்வதெல்லாம் ஓகே ஆனால் இவர்
ஹாலிவுட் வில்லன்கள் போல பெரிய பெரிய சேதாரங்களை ஏற்படுத்தும் போது தான் நமக்கும் சேதாரம் அதிகம் ஆகிறது ...


காமெடி டிராக் கை கழட்டி விட்டது போல இந்த ஹீரோயின் , காதல் டூயட் எழவையெல்லாம் கழட்டி விட்டால் தேவலை . அதுவும் படம் தெலுங்கிலும் வருவதால் கண்ணாடி போட்ட ஹீரோயின் ( ராகுல் ப்ரீத் ) பாடலின் போது அதோடு சேர்த்து முக்கால்வாசி உடையையும் கழட்டி விட்டு ஆடுகிறார் .  ஆர்.ஜே.பாலாஜியை வீணடித்திருக்கிறார்கள் . பட வாய்ப்பில்லாத பரத்துக்கு இது ஓ.கே . படத்திற்கு ஹேரிஸ் ஜெயராஜ் இசையாம் . வில்லனுக்கு  கொடுக்கும் பி.ஜி.எம் மோடு அவர் நிறுத்தியிருக்கலாம்  . படத்தின்  சிறந்த பாடல் " மருதமலை மாமணியே முருகையா " தான் ...

ஹீரோ வேலையினை செட் செய்வதிலேயே சிறிது நேரம் எடுத்துக்கொண்டாலும் போக போக டெம்போவாக போகிறது படம் . வில்லனுக்கான சின்ன வயசு சைக்கோ பிளாஷ்பேக் படத்துக்கு ஹைலைட் . இண்டெர்வெல் ப்ளாக் சரியான இடத்தில்  விடுகிறார்கள் . அது வரை நம்மூரு ஸ்டைலில் இருக்கும் படம் பிறகு ஹாலிவுட் ரேஞ்சுக்கு தாவும் போது இன்டென்சிட்டியை இழக்கிறது ...

எஸ்.ஜே.சூர்யா வின் ரோல் ராமன் ராகவ் , வேட்டையாடு விளையாடு சீரியல் கில்லர்களை நியாபகப்படுத்தினாலும் தனித்திருப்பது சிறப்பு . குடும்ப பெண்களை வைத்து அதிரடியாக சூர்யா விடம் சிக்கிய குடும்பத்தை மகேஸ் பாபு காப்பாற்றுவது காதில் பூ சுத்துவது போலிருந்தாலும் விறு விறு . ஹீரோ வை அதிகம் பேச விடாமல் ஆக்சனில் பேச வைத்திருப்பது அருமை . மொத்தத்தில் லாஜிக் பற்றியெல்லாம் ரொம்ப யோசிக்கவில்லையென்றால் இந்த  ஸ்பைடெரை  ஒரு முறை வேவலாம்  ...

ரேட்டிங்  : 2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 41 


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...