28 September 2013

ராஜா ராணி - RAJA RANI - ரசிக்கலாம் ...

 
எந்த ஒரு படத்திற்கும் மார்க்கெட்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை  ராஜா ராணி படத்திற்கு கிடைத்த ஒப்பனிங் மூலம் நன்றாகவே உணர முடிந்தது . ஷங்கரின் உதவி இயக்குனர் அட்லீக்கு இது முதல் படம் என்பதை நல்ல காஸ்டிங்கும் , ஏ.ஆர்.முருகதாசின் தயாரிப்பும் மறக்கடிக்கின்றன ...

காதலியை இழந்த ஜான் ( ஆர்யா ) , காதலனை இழந்த ரெஜினா ( நயன்தாரா) இருவரும் கொஞ்சம் கூட விருப்பமில்லாமல்  திருமணம் செய்து கொள்கிறார்கள் . ஒரு கட்டத்தில் இருவருக்கும் அடுத்தவரது பழைய காதல் வாழ்க்கை  பற்றி தெரிய வர அதை புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா என்பது படத்தின் கேப்சனை பார்த்தாலே புரியும் ...
 
ஆர்யா வுக்கு  அதிகம் மெனக்கெடாத கேரக்டர் . கிளீன் ஷேவை விட கொஞ்சம் தாடியில் கூடுதல் அழகாக இருக்கிறார் . சந்தானத்துடனான இவரது காம்பினேஷன்  இதில் மீண்டும்  வொர்க் அவுட்  ஆகியிருக்கிறது . நீண்டநாட்களுக்கு பிறகு நயன்தாரா தனக்கு  கிடைத்த நல்ல வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . க்ளோஸ் அப் காட்சிகளில் முகம் கொஞ்சம் பயமுறுத்தினாலும் நடிப்பை  ரசிக்க முடிகிறது . எங்கேயும் எப்போதும் படத்தின் எக்ஸாகரேட்டட் வெர்சன் போல இருந்தாலும் நயனின் பழைய காதலனாக வந்து கிடைத்த அரை மணி நேரத்தில் மனதை அள்ளுகிறார் ஜெய் . விளம்பரங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும் தியேட்டரில் ஜெய்க்கு நல்ல ரெஸ்பான்ஸ் . ஆனால் இவரது கதாபாத்திரமும் , அதற்கான முடிவும் தெளிவில்லாமல் இருப்பது படத்திற்கு மைனஸ் ...
 
 
நயனின் தங்கை போல இருக்கும் நஸ்ரியா  நைட்டியுடன் அறிமுகம் ஆகும் முதல் காட்சியிலேயே நைண்டி போட்டது போல கிறங்க வைக்கிறார் . இந்த படத்திற்கு பிறகு ஆர்யா மேல் சக நடிகர்கள் மேலும் பொறாமைப்படுவார்கள் என்று நம்பலாம் . சந்தானம் இந்த படத்திற்கும் வழக்கம் போல கமர்சியல் நன்பெண்டா . நயனின் அப்பாவாக சத்யராஜ் நல்ல பொருத்தம் . ஜி.வி  ஹாரிஸ் போலவே அங்கங்கே சுட்டிருந்தாலும் பாடல்களை  ஹிட் செய்து விட்டார்  . ஜார்ஜின் ஒளிப்பதிவும் , ரூபனின் எடிட்டிங்கும் படத்திற்கு பலம் ...

சிம்பிளான ஒன்லைன் , காதல் படமாக இருந்தாலும் மேக்கிங்கில் உள்ள நேர்த்தி , போரடிக்காத திரைக்கதை , பொருத்தமான காஸ்டிங்  இவற்றின் மூலம் அட்லி குட்லி சொல்ல வைக்கிறார் . ரசிக்க வைத்தாலும் மனதில் ஒட்டாத ப்ளாஷ்பேக் காதல்கள் ,  சொல்லி வைத்தார்ப் போல பழைய காதலை கேட்டவுடன் இருவருக்கும் ஏற்படும் நாடகத்தனமான மனமாற்றம் , எப்படியும் சேர்ந்து விடுவார்கள் என்று தெரிந்து விடுவதால் வரும் சலிப்பு இவையெல்லாம் ராஜா ராணி யை ஆள விடாமல் செய்கின்றன . குறிப்பாக ராஜா ராணி காதலில் உயிர்ப்பு  குறைவாக இருந்தாலும் பொழுது போக்கு அலங்காரத்திற்காக ஒரு முறை ரசிக்கலாம் ...

ஸ்கோர் :கார்ட் : 42
 

27 September 2013

மோடி - MODI - மாற்றம் வருமா ? ...


கடந்த மாதம் என்னுடைய பதிவில் மோடி முன்னிறுத்தப்படுவாரா ? ... என்கிற கேள்விக்கு எதிர்பார்த்தது போலவே அவரை பிரதம வேட்பாளராக பி.ஜே.பி அறிவித்ததன் மூலம் தக்க விடையளித்து பத்து நாட்கள் பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் அவரது தலைமையில் நேற்று திருச்சியில் முதல் மாநாடு பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் மத்தியில் நடந்து முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது . முதலில் முரண்டு பிடித்த அத்வானி , சுஷ்மா இருவரும் இப்பொழுது ஒத்துப்போனது கட்சிக்குள் இருந்த சிறிய சலசலப்பையும் முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என்று சொல்லலாம் . மற்ற கட்சிகள் போல ஒரு குடும்பத்தை மட்டும் நம்பியிருந்தால் தலைமைப் பொறுப்புக்கு ஆளை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருந்திருக்காது .என்ன செய்வது பி.ஜே.பி யில் அப்படியொரு சூழல் இல்லாமல் ஜனநாயக முறைப்படி கட்சியை நடத்துவதால் உண்டானதே இந்த சிக்கல் . இப்படி பல சிக்கல்களை கடந்து மோடி பிரதமர் மகுடம் சூட்டுவாரா ? அலசுவோம் ...

கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்ப்பட்டதன் மூலம் முதல் படியை கடந்திருக்கும் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் பல கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இரண்டாவது படியை கடக்க வேண்டும் . இப்போதைக்கு அகாலி தள் மற்றும் சிவசேனா மட்டுமே 
நேரடியாக மோடியின் தலைமைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன . ஹரியானாவில் சவுதாலா மற்றும் ஓடிஷாவில் பட்நாயக் இருவரையும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியும் நடந்து கொண்டு தானிருக்கின்றன . தென் இந்தியாவை தவிர்த்து மற்ற இடங்களில் பி.ஜே.பி க்கு வலுவான கூட்டணி தானாகவே அமைந்து விடும் என்று ஓரளவு எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் 180 - 200 இடங்களை தனித்து கைப்பற்றும் கட்சி மத்தியில் பிராந்திய கட்சிகளின் துணையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சரத் பவார் சூசகமாக கருத்து தெரிவித்திருப்பது அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்று தெளிவாகவே காட்டுகிறது ...

தென் இந்தியாவியில் தனித்து ஆட்சியமைத்த கர்நாடகாவை பி.ஜே.பி இழந்ததும் , மற்ற தென் மாநிலங்களில் கட்சியை வளர்க்காததும் அதற்கு பெருத்த பின்னடைவு . எடியூரப்பா கட்சிக்குள்  மீண்டும் இணையாமல் தனித்திருந்த படியே நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருப்பது ஓட்டு வங்கியை அதிகப்படுத்துமா அல்லது மோடியின் இமேஜை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . பி.ஜே.பி தெலுங்கானாவை ஆதரித்ததால் தள்ளியிருந்த சந்திர பாபு நாயுடு இப்பொழுது நெருங்கி வருவது போல் தெரிகிறது . ஜெகன் மோகன் காங்கிரசை வீழ்த்த பி.ஜே.பி பக்கம் சாயலாம் அல்லது சி.பி.ஐ வழக்கை சமாளிக்க கைக்குள் அடங்கலாம் . தமிழ்நாட்டில் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமையும் பட்சத்தில் 40 லும் வெற்றியை எதிர்பார்க்கலாம் . ஆனால் முதல்வருக்கும் பிரதமர் கனவு இருப்பதால் அது சாத்தியமாகாதது போலவே படுகிறது . சோ வின் முயற்சி பலித்தால் ஏதாவது நல்லது நடக்கலாம் . அப்படி இல்லாத பட்சத்தில் வை.கோ , விஜயகாந்த் , ராமதாஸ் 
போன்றோர் கூட்டணிக்குள் வரும் வாய்ப்பும் பிரகாசமாகவே இருக்கிறது . கேரளாவை பொறுத்த வரை முன்னை விட கட்சி கொஞ்சம் வளர்ந்திருப்பதும்  , மோடியின் தலைமையும் மட்டுமே அதற்கு ஆறுதல் ... 

டிசம்பரில் நடக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் டில்லி  உட்பட மூன்றில் பி.ஜே.பி ஜெயிக்கும் என்று கருத்து கணிப்பு வந்திருப்பது கட்சியினருக்கு தெம்பை கொடுத்திருக்கும் . தமிழ் நாட்டில் ஜூ .வி எடுத்த சர்வேயின் படி மோடி பிரதமராவதற்கு ஆதரவாக 52 சதவீதமும் , மன்மோகன் சிங்கிற்கு 6 சதவீதமும் கிடைத்திருப்பது மக்களின் மன ஓட்டத்தை பிரதிபளிக்கிறது . படித்த இளைஞர்களிடம் மட்டுமின்றி அனைத்து தரப்பிலும் மோடிக்கு ஆதரவும் , அவர் பிரதமாராக வர வேண்டும் என்ற வேட்கையும் இருப்பதை பல இடங்களில் கண்கூடாக காண முடிகிறது . அதே போல மைனாரிட்டிக்கு அவர் எதிரானவர் என்பது போல பரப்பப்படும் பொய் பிரச்சாரங்களை மக்கள் நிராகரிக்க தொடங்கி விட்டார்கள் ...

ஏனெனில் எத்தனையோ முறை காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் குறிப்பாக டில்லி யில் நடந்த சீக்கியர் இனப் படுகொலை மற்றும் அஸ்ஸாம் , குஜராத் மாநிலங்களில் நடந்த இனக்கலவரங்களை பற்றியும் , கலவரங்களுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பற்றியும் அவர்கள் தெளிவாக மறந்திருக்கலாம் , ஆனால் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் . இந்த லட்சணத்தில் இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் திரும்ப திரும்ப கோத்ரா கலவரத்தைப் பற்றி பேசப் போகிறார்கள் என்பதே மக்கள் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி . கடந்த ஒன்பது வருடங்களாக அவதியிலிருக்கும் மக்கள் மோடி வந்தால் மாற்றம் வரும் என்று நம்புகிறார்கள் . ஆனால் அப்படி மாற்றத்தை எதிர்பார்க்கும் அனைவரும் மோடி வருவாரா ? மாட்டாரா என்று ஆராய்வதை விட்டு விட்டு சொந்த் விருப்பு வெறுப்புகளை பார்க்காமல்அவருக்காக ஒட்டு போடுவார்களேயானால் நிச்சயம் 
மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம் ...



 

27 August 2013

தலைவா - THALAIVAA - TIME TO LEARN ...


ஒரு படம் சொல்லப்பட்ட தேதியில் ரிலீசாகாமல் ஏதோ ஒரு காரணத்தால் தடை செய்யப்படும் போது அதற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது . அதற்கு சமீபத்திய உதாரணம் விஸ்வரூபம் . தமிழகத்தை விடுத்து உலகமெங்கும் படம் ரிலீசானாலும் மற்ற இடங்களில் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்சாலும் , ரசிகர்களின் மனமார்ந்த ஆதராவலும் படம் இரண்டு வாரங்கள் கழித்து ரிலீசாகியும் தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது . ஆனால் அதே வரிசையில் பிரச்சனையில் சிக்கிய தலைவா ஏனோ திக்குமுக்காடி விட்டது ...

மும்பை வாழ் தமிழர்களின் நலனுக்காக பாடுபடும் தாதா அண்ணா (எ) ராமதுரை  ( சத்யராஜ் ) . வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் மகன் விஷ்வா
( விஜய் ) வின் கண் முன்னாலேயே அண்ணா இறந்து விட அவர் விட்ட பணியை தொடர தலைமைப் பொறுப்பேற்கும் மகனின் கதையே தலைவா ...


விஜய் வழக்கம் போல ஆட்டத்திற்கு தவிர வேறெதற்கும் அதிகம் மெனக்கெடவில்லை . இவர் வெள்ளை சட்டை , தடிமன் மீசை யுடன் தலைவனாக வரும் பின்பாதியை விட ஆட்டம் பாட்டம் என முன் பாதியில் வரும் நார்மல்  விஜயாகவே அதிகம் கவர்கிறார் . இதுவே கூட படத்திற்கு பெரிய சறுக்கலோ என்று தோன்றுகிறது . அமலா பால் இயக்குனர் விஜய் படங்களில் கூடுதல் அழகாக இருக்கிறார் . அவர் என்ன தான் அடக்க ஒடுக்கமாக வந்தாலும் சிந்து சமவெளி சீன்கள் கண் முன் வந்து நம்மை சீழ் படுத்துகின்றன ...

சத்யராஜ் சண்டைக் காட்சிகளில் வாயை கோணிக் கொள்வதை இன்னும் விடவில்லை . மற்றபடி வயதான தாதா கதாபாத்திரத்தில் கவர்கிறார் . சந்தானம் ஜவ்வென்று இழுக்கும் முன்பாதியை ஜிவ்வென்று ஆக்குகிறார் . சாம் ஆன்டர்சன் அனாவசிய இடைசெருகல் . நாசர் , பொன்வண்ணன் போன்றோர் சரியான தேர்வு . வில்லன் விஷயத்தில் அப்படி சொல்ல முடியவில்லை . ஜி.வி யின் இசையில் " வாங்கன்னா " தாளம் போட  வைத்தாலும் பின்னணி இசை பின்னடைவு . ஒளிப்பதிவு , எடிட்டிங் இரண்டும் படத்திற்கு தேவையான அளவு இருக்கின்றன ...



டைட்டிலிலேயே மணிரத்னம் , ராம்கோபால் வர்மா , ப்ரியதர்சன்  போன்றோருக்கு நன்றி தெரிவித்து தனது முந்தைய படங்கள் போலல்லாமல் கொஞ்சம் நேர்மையை காட்டியதற்காக இயக்குனர் விஜயை பாராட்டலாம் . இன்ஸ்பைர் ஆகி படம் எடுக்கலாம் , அதற்காக சீன்களை கூட புதிதாய் யோசிக்காமல் ஈயடிச்சான் காப்பியா அடிப்பார்கள் ? சாரி விஜய்  . இன்டர்வெல் ப்ளாக் , டேப்பிற்காக வில்லனும் , விஜயும் அலையும் சீன் போன்ற சிலவற்றை தவிர பெரும்பாலும் படம் நீளமாக இழுத்து ஒருவித அயர்ச்சியை தருகிறது ...

ஆய் , ஊய் என்ற சத்தமில்லாமல் ஒரு நாயகன் ஸ்டைல் ஆக்சன்  படத்தை விஜயை  வைத்து இயக்குனர் விஜய் எடுக்க நினைத்ததில் தப்பில்லை . ஆனால் அதை செயல்படுத்தியதில் நிறைய கவனம் செலுத்தியிருக்க வேண்டும் . ஏனெனில் இது போன்ற தாதாயிச படங்களில் இருக்கும் விறுவிறுப்பு படத்தில் டோட்டலி மிஸ்ஸிங் . மணிரத்னம் காட் பாதர் இன்ஸ்பிரேஷனில் எடுத்திருந்தாலும் அடுத்த தலைமுறைக்கு ஒரு ட்ரென்ட் செட்டராக இருந்த படம் நாயகன் . அதே போல நடிகர் விஜய் நடிப்பை மட்டுமல்ல ஒரு பிரச்சனையை நேரடியாக சமாளிக்கும் தைரியத்தையும் கமல்ஹாசனிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் . தலைவா இரண்டு விஜய்களுக்கும் டைம் டு லேர்ன் ...

ஸ்கோர் கார்ட் : 40


25 August 2013

மழலை - எனது குறு குறும்படம் ...


கலைஞர் டி.வி யில் ஒளிபரப்பாகும் நாளைய இயக்குனர் போல ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் விளம்பர உலகம் என்றொரு நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள் . இறுதி சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படத்தின் இயக்குனருக்கு பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்குவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்பதே இதன் சிறப்பம்சம் . இந்த போட்டிக்கான முதல் சுற்றில் எனது குறும்படம் நல்லதோர் வீணை தேர்ந்தெடுக்கப்படவே அடுத்த சுற்றுக்கான போட்டியாக மழைநீர் சேகரிப்பு என்கிற தலைப்பில் அதனை பற்றி விளக்கும் விதமாக இரண்டரை நிமிடங்களுக்கு மிகாமல் ஒரு குறும்படத்தை இயக்க சொல்லியிருந்தார்கள் ...

இது போன்ற நிபந்தனைக்குட்பட்ட போட்டிகளில் நமது சுதந்திரம் பாதிக்கப்படும் அசௌகரியம் இருந்தாலும் நமது திறமையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருந்ததால் எனது டீமுடன் களத்தில் இறங்கிவிட்டேன் . முப்பது செகன்ட்களுக்குள் ஒரு விளம்பரம் எடுத்து விடலாம் , அதே போல ஐந்து நிமிடங்களுக்கு குறும்படம் எடுக்கலாம் . ஆனால் இதில் இரண்டரை நிமிடங்களுக்குள் படம் இருக்க வேண்டும் அதே நேரம் அந்த தலைப்பை பற்றிய முழு விளக்கமும் இடம்பெற வேண்டுமென்பதே எனக்கு விடப்பட்ட சவால் . ஒரு வழியாக படத்தை எடுத்து சேனலுக்கு கொடுத்தாகிவிட்டது ..

ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து தகவல் வர நீண்ட நாட்கள் ஆகவே சேனலை தொடர்பு கொண்ட போது தான் நிகழ்ச்சி தயாரிப்பாளர் விலகி விட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது  தெரிய வந்தது . பிறகு நீண்ட தாமதத்திற்கு பிறகு இப்பொழுது தான் யூ டியூபில் ஏற்ற முடிந்தது . இந்த குறு குறும்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய  அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . குறிப்பாக எனக்கு உறுதுணையாக இருந்த இயக்குனர் திரு.ஸ்ரீஹரி மற்றும் பட வேலைகள் இருந்தும் நான் கூப்பிட்டவுடனேயே நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட திரு.சங்கரநாராயணன் (துப்பாக்கி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்தவர் ) அவர்களுக்கும் எனது மனமார்ந்த  நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் . குறு குறும்படத்தை கீழே பார்க்கவும் ...




18 August 2013

ஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...


கடந்த  ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால்  தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை  மனதில் அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் இயக்குனர் சுசீந்திரன் ராஜபாட்டையால்  தனக்கு ஏற்பட்ட சரிவை சமன் செய்து விட்டார் என்றே சொல்லலாம் ...

கல்லூரி மாணவ மாணவிகளிடையே காதல் என்ற பெயரில் நடக்கும் காம களியாட்டங்களையும் , அதனால் ஏற்படும் விபரீதங்களையும்  கார்த்திக்
( சந்தோஷ் ) , ஸ்வேதா ( மனிஷா ) ஆகிய இருவரின் வாழ்க்கையின் மூலம் ஆபாசமில்லாமல் படம் பிடித்துக்காட்டுவதே " ஆதலால் காமம் சாரி காதல் செய்வீர் " ...


ஹீரோ சந்தோஷ் பக்கத்து வீட்டுப்  பையன் போல என்றெல்லாம்  சொல்ல முடியாத படிக்கு படு சுமாராக இருக்கிறார் . அழகான பொண்ணுங்க அட்டு பசங்களுக்கு தான் மாட்டும் என்றெல்லாம்  லாஜிக் சொன்னாலும் இவரது காஸ்டிங் சறுக்கல் . ஆனால் ஒரு லெவலுக்கு மேல் அவரையும் உற்று கவனிக்க வைப்பதே திரைக்கதையின் பலம் . மனிஷாவுக்கு  வழக்கு எண்ணை விட இதில் வெயிட்டான கேரக்டர் .  கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . காதல்  காட்சிகளை விட சோக காட்சிகளில் நடிப்பு மிளிர்கிறது . இவர்களுடன் வரும் நண்பர்கள் குழுவும் நம்மை கவனிக்க வைக்கிறார்கள் ...

டெம்ப்ளேட் அம்மாக்களுக்கு மத்தியில் மனிஷாவின் அம்மாவாக வரும் துளசியின் நடிப்பு ரியலி சூப்பர்ப் . மகளிடம் கோபப்படும் போதும் சரி , மகளுக்காக மற்றவர்களுடன் சண்டை போடும் போதும் சரி யதார்த்த அம்மாவை கண் முன் நிறுத்துகிறார் "மகாநதி "  துளசி . இவரது நடிப்புக்கு முன்னால்  நீண்ட இடைவெளிக்குப் பின்  நடிக்க வந்திருக்கும் பூர்ணிமா பாக்யராஜ் , ஜெயப்ரகாஷ் போன்றோர் கொஞ்சம் மறைந்து விடுகிறார்கள். புதுமுகங்களை வைத்து குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு யுவனின் இசையும் , சூர்யாவின் ஒளிப்பதிவும் பெரிய பலம் . டைட்டில் பாடல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது ...


நாடோடிகள் , ராட்டினம் போன்ற படங்களின் சாயல் கதையில் இருந்தாலும் சொன்ன விதத்தில் நம்மை  சொக்க வைக்கிறார் சுசீந்தரன் . புரிதலை விட பைக் இருந்தால் போதும் என்று நினைக்கும் காதலி , காரியம் முடிந்தவுடன் காதலின் வீரியத்தை குறைக்கும்  காதலன் , வேறு வழியில்லாமல் பிள்ளைகளின் போக்கிற்கு தலையாட்டும் பெற்றோர் என்று எல்லா கதாபாத்திரங்களிலும் யதார்த்தத்தோடு அதில் உள்ள சுயநலத்தையும்  தோலுரித்துக் காட்டுகிறது படம் . திரைக்கதை டீட்டைலாக இருக்கும் அதே சமயம் என்ன என்று யோசிப்பதற்குள் படம் முடிந்தும் விடுவது மற்றொரு சிறப்பு ...

க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று யூகித்திருந்ததால் முடிவு பெரிய ஜெர்க்கை கொடுக்கா விட்டாலும் அதனை சொல்லி முடித்த விதம் நிச்சயம் நெகிழ்ச்சியை கொடுத்தது .  ஹீரோ , கவித்துவமாக இருந்தாலும் சம்பந்தமில்லாத படத்தின் தலைப்பு , திட்டமிட்டு தப்பு செய்பவர்கள் முக்கியமான விஷயத்தில் திட்டமிடாமல் கோட்டை விட்டது ( படத்தின் திருப்புமுனையான அந்த சம்பவம் ஆக்சிடண்டலாக நடந்திருந்தால் இன்னும் யதார்த்தமாக இருந்திருக்கும் ) போன்ற குறைகள் படத்தில் இருந்தாலும் ஏதோ இருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நேரில் நின்று பார்த்தது போன்ற ஒரு உணர்வை கொடுத்த விதத்தில் படம் நிச்சயம் பார்ப்பவர்களை கவரும் ...

ஸ்கோர் கார்ட் : 44 

8 August 2013

தலைவா - THALAIVAA - கதை என்ன ? ...


இளைய தளபதி விஜய் , இயக்குனர் விஜய் இருவரும் இணைந்திருக்கும் தலைவா படத்தை எஸ்.ஆர்.எம். க்ரூப் சேர்மன் பாரி வேந்தரின் மகன் மதன் வேந்தர் மூவீஸ் சார்பில் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். நாளை படம் ரிலீஸ் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்   இருக்கும் நிலையில் இரண்டு காரணங்களுக்காக பட வெளியீடு தள்ளிப்போகும் என்று தெரிகிறது ...

முதலாவதாக , எஸ்.ஆர்.எம் க்ரூப்பை எதிர்க்கும் சில மாணவர் அமைப்புகள் தலைவா படம் வெளியிடப்படும் திரையரங்குகளில் பாம் வைப்போம்  என்று தியேட்டர்களுக்கு கடிதம் அனுப்பியதாகவும் , அதை தொடர்ந்து காவல்துறை தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் பட்சத்திலேயே படத்தை வெளியிடுவோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது . அடுத்ததாக தலைவா படம் மும்பை தாராவியில் உண்மையில் வாழ்ந்த எஸ்.எஸ்.கே மற்றும் அவரது புதல்வன் எஸ்.கே.ஆர் ஆகிய இருவரையும் தவறுதலாக சித்தரிப்பதாக சொல்லி அவர்களது வாரிசு படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருப்பதும் , அதற்கு பதில் விளக்கம் தருமாறு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருப்பதும் படம் நாளை  ரிலீஸ் ஆகாததற்கு காரணமாக அறியப்படுகிறது ...

வழக்கில் குறிப்பிட்டுள்ள படி படத்தின் கதை யாதெனில் மும்பையில் வாழும் தமிழர் தீய வழியில் சம்பாதித்தாலும் அங்கிருப்பவர்களுக்கு நல்லது செய்கிறார் . இது பிடிக்காத எதிரிகள் அவரை கொன்று விடுகிறார்கள் . வெளிநாட்டிலிருந்து வரும் அவரது மகன் தந்தையின் நற்பணியை தொடர்வதோடு அவரை கொன்றவர்களையும் பழி தீர்க்கிறார் .  உண்மையில் இந்த காரணத்துக்காக வழக்கு தொடரப்பட்டிருந்தால் அது மணிரத்னம்  , ராம்கோபால் வர்மா போன்றோர் மீதும் தொடரப்பட்டிருக்க வேண்டும் . ஏனெனில் இதே கதையை தான் அவர்கள் நாயகன் , சர்க்கார் என்று ஏற்கனவே எடுத்துவிட்டார்கள் . அதே கதையை கொஞ்சம் களத்தை மாற்றி கமல் தேவர்மகன் எடுத்துவிட்டார் . இவர்கள் அனைவரின் மீதும் உண்மையிலேயே ப்ரான்சிஸ் போர்ட் தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் . அவர் தான் இது போன்ற படங்களுக்கெல்லாம் அக்மார்க் காட் பாதர் . அவரின் இயக்கத்தில் வெளிவந்த காட் பாதர் தான் மற்ற இயக்குனர்களுக்கெல்லாம் இன்ஸ்பிரேஷன் ...

தனிப்பட்ட ஒரு நபரையோ , சமூகத்தையோ நேரடியாக படம் புண்படுத்தாத பட்சத்தில் மேலும் சிக்கல் இருக்காது  என்று எதிர்பார்க்கலாம் . இந்த பிரச்சனை படத்தின் பப்ளிசிட்டிக்காக செய்யப்பட்ட ஸ்டண்டாகவும்  இருக்கலாம் என்கிறார் விஷயமறிந்த உதவி இயக்குனர். அதே போல விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்காக போடப்பட்ட  முட்டுக்கட்டை என்றும் சொல்கிறார்கள் .  எது  எப்படியோ 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பலரது உழைப்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் வெளி வரவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு . இந்த வருட ஆரம்பத்தில் இதே போல சிக்கலில் மாட்டிய விஸ்வரூபம் பின்னர் விஸ்வரூப வெற்றியடைந்ததை போல தலைவா தடைகளை தாண்டி மாபெரும் வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ...


27 July 2013

பட்டத்து யானை - PATTATTHUYANAI - பழைய யானை ...


முதல் மூன்று படங்களிலேயே தொடர் வெற்றியை கொடுத்து தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கிக்கொண்டவர் விஷால் . இப்பொழுது தொடர் தோல்விகளால் தவித்துக் கொண்டிருப்பவரை பூபதி பாண்டியனின் பட்டத்து யானை தூக்கி விட்டதா ? பார்க்கலாம் ...

காரைக்குடியில் சமையல் கான்ட்ராக்டர் கௌரவத்திடம் ( சந்தானம் ) வேலைக்கு சேரும் சரவணன் ( விஷால் ) அவரது பிசினசை காலி செய்து விட்டு திருச்சிக்கு கூட்டி செல்கிறார் . விஷால் அங்கு ஒரு பெண்ணை
( ஐஸ்வர்யா அர்ஜூன் ) லவ்வ சந்தானத்தை சந்தியில் விட்டு விட்டு ஐஸ்வர்யாவிற்க்காக வில்லன் கோஷ்டியை பின்னி பெடலெடுக்கிறார் . கடைசியில் வழக்கமாக என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து சுபமாய் படத்தை முடிக்கிறார்கள் ...

விஷால் வழக்கம் போல தலைக்கு பதில் முகத்தில் எண்ணெய் வடிய வருகிறார். பார்த்தவுடன் ஒரு பெண்ணை காதலிக்கிறார் , அந்த பெண்ணிற்க்காக தனி ஆளாக ஊரையே அடிக்கிறார் , அதிலும் முதலில் தனியாக வரும் அடியாள் இவரிடம் இடது கன்னத்தில் அடி வாங்கி வலது பக்கம் பறந்து விழுகிறான் . வழக்கம் போல இவருக்கு ஒரு மொக்கை ப்ளாஷ்பேக் . இந்த வழக்கமான வழக்கங்களில் பொறுமையை சோதிக்கும் பஞ்ச்கள் இல்லாதது மட்டும் பெரிய ஆறுதல் ...


ஹீரோயின் அறிமுகத்தின் போது புன்னகைத்துக் கொண்டே வரவேண்டுமென்று விதியோ என்னமோ ! . ஆனால் இதில் அதற்காக ஐஸ்வர்யா பஸ் ஏறுவதற்காக ஓடி வரும் போதும் இளித்துக் கொண்டே வருவது லூசோ என்று எண்ணத்தோன்றுகிறது . பள்ளிக்கூட மாணவியாக காட்டினாலும் முகத்தில் முதுமை தெரிகிறது ...

கிரி படத்தில் வடிவேலுவுக்கு என்ன வேடமோ அதே தான் சந்தானத்துக்கும் . இதில் பேக்கரிக்கு பதில் ஹோட்டல் . மொட்டை ராஜேந்திரனுடன் இவர் காம்பினேஷன் வழக்கம் போல கல கல . இவர் உடல் மொழியில் கவுண்டமணியின் இமிடேஷன் இதில் ஓவராகவே இருக்கிறது . பட்டத்துயானை முதல் பாதியில் இவரை வைத்து நன்றாகவே சவாரி செய்திருக்கிறது . ஜான் விஜய் மற்றும் அவரது அடியாட்கள் , மயில்சாமி போன்றோர் சிரிக்க வைக்கிறார்கள் . நண்டு ஜெகனை  இன்னும் நன்றாக உபயோகப்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது . அதே போல தடையர தாக்க வில் நல்ல அறிமுகம் கிடைத்த வில்லனை இதில் வீணடித்திருக்கிறார்கள் ...


தமன் இசையில் 20 - 20 பாடல் மட்டும் ஹம்மிங் செய்ய வைக்க மற்றதெல்லாம் ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் . பின்னணி இசைக்கு இசைஞானி , எம்.எஸ்.வி இருவரும் கை கொடுத்திருக்கிறார்கள் . ஆனால் டைட்டிலில் பெயர் சபேஷ் முரளி என்று வருகிறது . படத்தின் கதை இதற்கு முன் பூபதிபாண்டியன்   எடுத்த மலைக்கோட்டை யை நினைவுபடுத்தினாலும் கிரி வலம் வந்திருக்கிறார்கள் ...

திருச்சியில் தனியாக தவிக்கும் சந்தானத்தின் காமெடி , அது தவிர வில்லன் கோஷ்டியை வைத்து காமெடி செய்த விதம் , போவது தெரியாமல் போகும் முதல் பாதி , ஆக்சன் படங்களில் குறிப்பாக விஷால் படங்களில் வரும் வளவளா பஞ்ச் வசனங்களை தவிர்த்திருப்பது போன்றவை பட்டத்துயானையை பவனி வர வைக்கின்றன ...

கதை , லாஜிக் இதையெல்லாம் தவிர்த்து விட்டு பார்க்கும் போது இந்த படத்திலும் ரசிக்கும் படியாக கமர்சியல் எலிமென்ட்ஸ் சரியாக பொருந்தியிருந்தாலும் தேவையேயில்லாமல் இரண்டு வில்லன் கோஷ்டி, இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் என்ற பெயரில் திணிக்கப்பட்ட எந்தவித பாதிப்பையும் ஏற்ப்படுத்தாத ப்ளாஷ்பேக் , பெண்ணை பார்த்தவுடன் ரேப் செய்யும் வில்லன் , பழி வாங்கும் ஹீரோ , மலைக்கோட்டை , கிரி போன்ற படங்களை கலந்து கட்டிய கதை இவையெல்லாம் சந்(தா)ன காப்பு செய்தும் பட்டத்துயானையை பழைய யானையாகவே காட்டுகின்றன ...

ஸ்கோர் கார்ட் : 40


20 July 2013

மரியான் - MARIYAAN - மாரத்தான் ...


தேசிய விருதுக்கு பிறகு தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சமுள்ள படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ் . அந்த வரிசையில் ராஞ்சானா  வெற்றிக்கு பிறகு பாரத்பாலா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் அவர் கை கோர்த்திருக்கும் படம் மரியான் . அவர் நடிப்பு அருமை . ஆனால் படம் ? அலசலாம் ...

வெளிநாடு  செல்ல வேண்டுமென்கிற தன்  தாயின் விருப்பத்தை மீறி கடலை நம்பி வாழும் மீனவன் மரியான் ( தனுஷ் ) . சிறு வயதிலிருந்தே தன்னை விரும்பும் பனிமலரின் ( பார்வதி ) காதலை ஏற்றுக்கொண்ட பிறகு அவள் வீட்டுக் கடனை அடைப்பதற்காக இரண்டு வருட காண்ட்ராக்டில் மரியான் சூடான் செல்கிறான் . நாடு திரும்பும் வேளையில் அங்கே தீவிரவாதிகளிடம் பணயக்கைதியாக பிடிபடும் மரியான் மீண்டு வந்தானா ? என்பதை தனுஷ் , பார்வதி நடிப்பை மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார்கள் ...


பத்து வருடங்களுக்கு முன் பார்த்த பையனா  என்று நம்ப முடியாத அளவிற்கு நடிப்பில் மெருகேறியிருக்கிறார் தனுஷ் . உடல்மொழியில் கமல் , ரஜினி யை சிற்சில இடங்களில் நினைவுபடுத்தினாலும் தனியாளாக மரியானை மேலே தூக்கி நிறுத்தியிருக்கிறார் . காதலியை உதைக்கும்  இவர் கதாபாத்திரம் பழசாக இருந்தாலும் நடிப்பை ரசிக்க முடிகிறது . குறிப்பாக கம்பெனிக்கு போன் பேசுவதாக சொல்லி விட்டு காதலியிடம் தன் நிலைமையை விளக்கும் இடம் க்ளாஸ் . கமர்சியல் வெற்றிக்கு பின்னால் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் நடிகர்கள் மத்தியில் தனுஷ் ஆரோக்கியமான விதிவிலக்கு ...

பூ படத்திற்கு பிறகு மலையாளத்துக்கு போய் விட்ட பார்வதி ஐந்து வருட இடைவெளி விட்டு வந்திருந்தாலும் மரியானில் பனிமலராய் நடிப்பில்  மலர்ந்திருக்கிறார் . இறுக்கமான பாவாடை சட்டையில் வந்து லோ ஆங்கில் சாட்களில் கிறங்கடிக்கிறார் . இவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் தனுஷ் நடிப்பிற்கு முன் காணாமல் போயிருப்பார்கள் . காதலன் தன்னை அடித்த பிறகு ஆதங்கமும் , அழுகையும் கலந்த நடிப்பில் பார்வதி படு பாலன்ஸ்ட் . தமிழ் இயக்குனர்கள் இவரை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்லது ... 

லீட் நடிகர்களை தவிர அப்புக்குட்டி , உமா ரியாஸ் , சலீம் குமார் , ஜெகன் என்று பாத்திரத்தேர்வுகள் அருமை . சூடான் தீவிரவாதிளை தேர்ந்தெடுத்ததில் மட்டும் கோட்டை விட்டிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் மார்க் கோனிக்ஸ் , இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் படத்திற்கு சர்வதேச தரத்தை கொடுத்திருக்கிறார்கள் .  ஏ.ஆர்.ஆர் இசையில் " நெஞ்சே எழு " , " கடல் ராசா " , " நேற்று அவள் " போன்ற பாடல்கள் இனிமை . பின்னணி இசையில் இரண்டாம் பாதி பிரமாதம் . வாலிப கவிஞர் வாலியின் கை வண்ணத்தில் " நிலவே அந்த நேற்றுகளை கொண்டு வா " போன்ற வரிகள் அவர் மறைவிற்கு பொருத்தமாக அமைந்திருப்பது சோகத்திலும் ஆச்சர்யம் ... 


பாரத் பாலா இயக்கிய " வந்தே மாதரம் " ஆல்பம் சர்வதேச அளவில் புகழ் பெற்று ஏ.ஆர்.ரஹ்மானை பல படிகள் மேலே கொண்டு சென்றது . இந்த படத்திலும் அதே போல ஒரு சர்வதேச டச் இருப்பதை மறுக்க முடியாது . தனுஷ் - பார்வதி நடிப்பில் கெமிஸ்ட்ரி , பயாலஜி , பிஸிக்ஸ் என்று எல்லாவற்றையும் வெளிக்கொணர்ந்து அவர்களை கையாண்ட விதத்திற்காக இயக்குனரை பாராட்டலாம் . பார்வதி தனுஷை லிப் கிஸ் அடிக்கும் இடம் கூட விரசமாக தெரியாமல் படத்தோடு ஒன்றியிருப்பது நேர்த்தி . தனுஷ் கடத்தப்பட்ட பிறகு வரும் சூடான் காட்சிகள் ரியாலிட்டி ... 

யதார்த்தமான படம் என்றாலும் ஒரு லெவலுக்கு மேல் தனுஷ் , பார்வதி மாறி மாறி அழும் சோக காட்சிகள் ரசிகர்களை சோதிப்பது , எல்லோரையும் யோசிக்காமல் சுடும் தீவிரவாதி தனுஷிடம் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும் , லோக்கல் ரவுடியிடம் பேசுவது போல தனுஷ் அவரிடம் கத்துவதும் என்று ரியாலிட்டியை சிதைப்பது , கடத்தல் மேட்டரை இடைவேளையில் வைத்து ஜெர்க் கொடுத்து விட்டு அதன் பிறகு படத்தை ஜவ்வாக இழுத்திருப்பது என்று படத்தின் குறைகளை அடுக்கலாம் . நடிப்பு , டெக்னிக்கல் விஷயங்கள் போன்றவை சர்வதேச தரத்தில் இருந்தாலும் ரசிகனை கட்டிப்போடும் சமாச்சாரங்கள் எதுவும் இல்லாமல் படம் மாரத்தான் போல மெதுவாக செல்வதை தவிர்த்திருந்தால் மரியான் மரித்திருக்க மாட்டான் ... 

ஸ்கோர் கார்ட் : 40 




9 July 2013

அரையாண்டு சினிமா 2013 ...


இந்த வருடம் இதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் தந்த படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் தேசிய விருதோடு  விஸ்வரூபம் பெரிய வெற்றியடைந்ததும் , பரதேசி பெரிய வரவேற்பைப் பெற்றதும் ஆறுதல் . எப்பொழுது பார்த்தாலும் சலிக்காத இன்று போய் நாளை வா வை கண்ணா லட்டு தின்ன ஆசையா தந்து சந்தானம் விநியோகஸ்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் கொடுத்து விட்டார் . சமர்சுமாராக இருந்த போதும் விஸ்வரூபம் 
ரிலீஸ் தள்ளிப்போனதால் தியேட்டரில் சிறிது நாட்கள் கூடுதலாகவே அமர்ந்தது என்று சொல்லலாம் . முதல் படத்தில் சம்பாதித்த நல்ல பெயரை வருட்த்திற்கு ஒரு மொக்கை படம் மூலம் காலி செய்து கொண்டிருக்கும் கார்த்தியின் இந்த வருட கணக்கில் அரைத்த மாவு  அலெக்ஸ் பாண்டியன்...

ஓரளவு மட்டுமே வெற்றி பெற்றிருக்கக் கூடிய விஸ்வரூபம்தடையாலும் , உலகநாயகனின் விவேகமான நடவடிக்கைகளாலும் விஸ்வரூப வெற்றியை பெற்றது . உண்மையிலேயே உலக நாயகனின் கைவண்ணத்தில் வந்த உலகத்தரமான படம் விஸ்வரூபம் . ஸ்டான்ட் அப் காமெடிகளின் கோர்வையாக இருந்தாலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா வணிக ரீதியாக வெற்றிப்படம் . இந்தியாவே கூர்ந்து நோக்கும் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல்கலங்கலாகிப் போனதில் வருத்தமே ...

சன் பிக்சர்ஸ் நல்லாசியுடன் வந்த சென்னையில் ஒரு நாள்நல்ல கரு இருந்தும் கஞ்சஸ்டடான திரைக்கதையால் ட்ராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டது போலாகிவிட்டது . பரதேசிபாலாவின் படங்களில் ஒரு மைல்கல். இது போன்ற படங்களை வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியடைய வைத்திருக்க வேண்டியது தரமான சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவனின் கடமை . புதுமுகத்தை ஆக்சன் ஹீரோவாக்கும் முயற்சியில் வத்திக்குச்சி 
நமுத்து விட்டது . இல்லையேல் வத்திக்குச்சி பற்றி  எரிந்திருக்கும் ...

ஹிந்தியில் ஹிட்டடித்த டெல்லி பெல்லியை தமிழாக்கம் செய்யும் முயற்சியில்  சேட்டைசறுக்கி விட்டது . யாருடா மகேஷ்ஆய்ப்பையனாக இருந்தாலும் நண்டு ஜெகனின் காமெடிப் பிடியால் ரசிக்க முடிந்தது . சாக்லேட் பாய் சித்தார்த்திற்கு தமிழில் உதயம் NH4ஒரு சீரியஸ் ப்ரேக் . உதயம் NH 4 இல் கொஞ்சம் தடம் மாறினாலும் சாதாரண காதல் கதையை ஸ்டைலிஷான திரைக்கதையால் ரசிக்க வைத்திருப்பார்கள் ...

மே 1 இல் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் அதில் அனைவரின் மனதையும் கவ்வி வசூலில் முன்னணி வெற்றி பெற்றதென்னமோ சூது கவ்வும்மட்டும் தான் . சிவ கார்த்திகேயனுக்கு சுக்ர  திசை போல . கேடி பில்லாவை தொடர்ந்து எதிர்நீச்சலும் வெற்றிப்படமாக அமைந்து விட்டது . மூன்று பேர் மூன்று காதல் நிறைய திரையரங்குகளில் மூன்று நாட்கள் கூட ஓடாமல் போனது  இயக்குனர் வசந்த் இளம் தலைமுறையினரின்  பல்சை  சரியாக பிடிக்காமல் போனதை காட்டுகிறது . ஒரு சின்ன தீமை 2 மணிநேர திரைப்படமாக கொடுத்து நம் நேரத்தை வீணாக்காமல் ரசிக்க வைத்த படம் நேரம்.  குட்டிப்புலிகமர்சியல் புலியாக இருந்தாலும் கதை , திரைக்கதையை நம்பாமல் சசிக்குமாரை மட்டுமே நம்பியதால் ஒன்டிப்புலியாகி விட்டது ...

தமிழ் சினிமாவில் தற்போது நடந்து கொண்டிருப்பது காமெடி சீசன் என்பதை மீண்டும் ஊர்ஜிதமாக்கும் வகையில்  ஜூன் 14 ம் தேதி வெளியான இரண்டு படங்கள் தீயா வேலைசெய்யணும் குமாரு மற்றும் தில்லு முல்லு . இரண்டுமே போரடிக்கவில்லை என்றாலும் வெல்டன் சொல்ல வைத்தவன் குமாரு மட்டுமே . பழம் பெரும் இயக்குனர் பாரதிராஜா ராதாவின் பெண்ணை வைத்து இயக்கிய அன்னக்கொடி - அவலக்கொடியானதில் வருத்தமே . அடுத்த அரையாண்டின் ஆரம்பமே சிங்கம் 2வின் கமர்சியல் கர்ஜனையுடன் தொடங்கியிருக்கிறது . வரும் ஐந்து மாதங்களும் இது போல வெற்றிப்படங்கள் தொடர்ந்து வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ...


6 July 2013

சிங்கம் 2 - SINGAM 2 - கமர்ஸியல் கிங் ...



சூர்யா - ஹரி காம்பினேஷனில் இது வரை வெளிவந்திருக்கும் மூன்று படங்களுமே ஹிட் , அதிலும் மெகா ஹிட்டடித்த சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் என்பது எதிர்பார்ப்பை கொடுத்திருந்தாலும் சூர்யா பேசும் வீர வசனங்களை ட்ரைலரில் பார்த்து விட்டு கொஞ்சம் பயந்ததென்னமோ உண்மை . ஆனாலும் சிங்கத்தின் வேகமான ஓட்டம் ரெண்டே முக்கால் மணி நேரத்தை மறக்க செய்ததென்றே சொல்லலாம் ...

போலீஸ் வேலையை பொய்யாக உதறிவிட்டு பள்ளியில் என்.சி.சி மாஸ்டராக வேலை செய்து கொண்டே தூத்துக்குடியில் நடக்கும் கடத்தல் வேலைகளை துப்பறிகிறார் துரைசிங்கம் ( சூர்யா ) . உள்ளூர் கடத்தல்காரர்ளை மட்டுமின்றி இண்டர்நேஷனல் கடத்தல் மன்னன் டேனி யையும் தன்  ஆபரேஷன் டி மூலம் சூர்யா அடித்தாரா சாரி பிடித்தாரா என்பதே கதை  . ஆக்சன் சிங்கத்தை அவ்வப்போது கூல்  செய்ய பழைய காதலி காவ்யா ( அனுஷ்கா ) , புதிய காதலி சத்யா ( ஹன்சிகா ) என்கிற இரண்டு புள்ளி மான்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் ...

சூர்யா மிடுக்கான போலீஸ்காரனாக கம்பீரம் காட்டுகிறார் . ஆக்சன் காட்சிகள் அனல் பறக்கிறது. அன்பு செல்வனிடம் இருந்த ரியாலிட்டி துரை சிங்கத்திடம் இல்லாத போதும் கண்களில் அதே குறும்பு மின்னுகிறது . ஹீரோ வொர்ஷிப் படம் என்பதால் சூர்யா  சகட்டுமேனிக்கு எல்லோரையும் சரிப்பதை கூட சகித்துக் கொள்ளலாம்  ஆனால் அவர் பேசிக்கொண்டேயிருப்பதையும் , அதிலும் இவர் ஆர்டர் போட உள்துறை அமைச்சர் ( விஜயகுமார் ) என்னவோ சரக்கு கடை அண்ணாச்சி  போல ஆ வென்று கேட்டுக்கொண்டிருப்பதையும் மட்டும் தாங்க முடியவில்லை ...



சேட்  வீட்டு ரசகுல்லா போல ஹன்சிகா இருந்தாலும் அவரை  +2 மாணவி என்னும் போது இடிக்கிறது . ஆன்டி போல தெரிந்தாலும் அரை ட்ராயருடன் ஆட்டம் போடும் போது அனுஷ்கா மனதை அள்ளுகிறார் . சந்தானம் வழக்கம் போல தன் ஒன் லைனர்களால் கலக்குகிறார் . முதல் பாதி படம் மூவ் ஆவதற்கு இவர் காமெடி பெரிதும் உதவியிருக்கிறது . விவேக் தன் பஞ்ச்களால் கொஞ்சம் கவர்ந்தாலும் சந்தானத்திற்கு முன் எரிமலை பெரிதாக எடுபடவில்லை . நாசர் , ராதாரவி என முதல் பாகத்தில் இருந்த அனைவரும் இதிலும் வந்தாலும் நாசரின் மனைவியாக நடித்தவர் மட்டும் கவனிக்க வைக்கிறார் . மூன்று வில்லன்கள் இருந்தும் சூர்யாவிடம் தோற்றுக் கொண்டேயிருப்பதால் கொஞ்சம் போரடிக்கிறது ...

முதல் பாகத்திலிருந்து கதை கொஞ்சம் மாறுபட்டிருந்தாலும் டி.எஸ்.பி யின் இசையில்  எந்த மாற்றமுமில்லை . " சிங்கம் டான்ஸ் " மட்டும் தாள போட வைக்கிறது . ஹரி - ப்ரியன் கூட்டணி இந்த படத்திலும் ஒளிப்பதிவில் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது . எடிட்டிங்கில் மட்டும் ஜம்பை தவிர்த்திருக்கலாம் . ஏற்கனவே ஹிட் டடித்த படத்தின் பார்ட் 2 வாக இருந்தாலும் திரைக்கதையில் வேகத்தை கூட்டி முதல் பாகத்தின் சாயல் வராமல் தவிர்த்தற்காக இயக்குனரை பாராட்டலாம் . சூர்யா சார்ஜ் எடுத்தவுடன் சாதி கலவரத்தை தடுப்பதில் ஆரம்பித்து மெயின் வில்லனை பிடிப்பது வரை படம் படு ஸ்பீட் . ஏழாம் அறிவு போல தமிழ் , தமிழன் என்றெல்லாம் சொல்லாமல் இந்தியன் போலீஸ் என்று சொன்னதில் இன்னும் பெருமைப்படலாம் ...


இடைவேளையில் நல்ல ப்ரேக் கொடுத்து விட்டு அதன் பிறகு தடுமாறியிருக்கிறார்கள் . கேரளாவிற்கு செல்ல மூன்று மணிநேரம் ஆகும் என்று சொல்லும் சூர்யா அடுத்த சீனிலேயே தன் படையுடன் அங்கிருப்பது லாஜிக் சொதப்பல் . சகாயத்தை சூர்யா கொலை செய்யும் இடம் சூப்பர் . ஆனால் ஏன் மூன்று வில்லன்களையும் கைதோடு மட்டும் விட்டு விடுகிறார் ? ஒரு வேளை  சிங்கம் 3 க்காகவா ? வில்லனை பிடிக்க சூர்யா சவுத் ஆப்பிரிக்கா போவது கொஞ்சம் மாற்றானை நினைவு படுத்துகிறது . பொதுவாக ஹீரோயிச படங்களிலும் இருக்கும் ஹீரோ  - வில்லன் மோதலில் ஹீரோவும் தோற்று ஜெயிக்கும் போதே படம் சுவாரசியம் பிடிக்கும்  . அதற்கு சிங்கம் 1 ஐயே உதாரணமாக சொல்லலாம் . சிங்கம் 2 அது போலல்லாமல் ஃப்ளாட்டாக இருப்பது பின்னடைவு . இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும் சரிந்து கொண்டிருக்கும் சூர்யாவின் மார்க்கட்டை சிங்கம் 2 தூக்கி நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை ...

ஸ்கோர் கார்ட் : 42 


30 June 2013

அன்னக்கொடி - அவலக்கொடி ...




வயதானாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் இளைஞர்களுடன் சரிக்கு சமமாக விளையாடும் பெரியவர்களை பார்த்திருப்போம் . நாமும் அவர்கள சந்தோஷத்துக்காக அவர்களிடம் தோற்பது போல நடிப்போம் . ஆனால் அவர்களில் சிலர் உண்மையை உணர்ந்து கொள்ளாமல் தங்களிடம் நிறைய பலம் இருப்பவதாகவே இன்னும் நம்பிக் கொண்டிருப்பார்கள் . அந்த வரிசையில் தன் முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட இயக்குனர் பாரதிராஜா சேர்ந்திருப்பது துரதிருஷ்டம் ...

அன்னக்கொடி ( கார்த்திகா ) யும் , கொடிவீரனும் ( லக்ஷ்மன் ) காதலிக்கிறார்கள் . சாதி அவர்களை பிரித்து அன்னக்கொடியை கொடுமைக்கார கணவன் சடையனிடம் ( மனோஜ் கே.பாரதி ) சேர்க்கிறது . கடைசியில் அன்னக்கொடி என்ன ஆனால்  என்பதை கல் தோன்றா மண் தோன்றா முன் தோன்றிய காதல் காட்சிகளை வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் இமயம் ...

கிராமத்து இளைஞனாக நன்றாகவே பொருந்துகிறார் லக்ஷ்மன் . அவருக்கு குரல் கொடுத்தவர் யாரென்று தெரியவில்லை , நன்றாக கணீரென்று இருக்கிறது . மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை . கோ வெற்றிக்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு வந்திருந்தாலும் கார்த்திகா விற்கு தனிப்பட்ட முறையில் அன்னக்கொடி முக்கியமான படம் . அவருடைய நடிப்பும் , இளமைத்துடிப்பும் ரசிக்க வைக்கின்றன ...


தாஜ்மஹால் படத்தில் மனோஜை கதாநாயனாக நடிக்க வைத்த பாவத்திற்கு பாரதிராஜா இந்த படத்தில் ஓரளவு பிராயச்சித்தம் செய்து கொண்டார் என்றே சொல்லலாம் . மனோஜின் நடிப்பு சில இடங்களில் ஓவர் டோசாக தெரிந்தாலும் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என நம்பலாம் ...

ஜி.வி.பிரகாஷ் குமாரரின் இசையில் பாடல்கள் , சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு போன்றவை படத்திற்கு பலம் . கிராமத்தில் இருக்கும் சாதிக்கொடுமை , ஆண்மை குன்றிய கணவனிடம் மாட்டிக்கொண்டு கார்த்திகா படும் அவஸ்தை  , தன் குறையை சீண்டுபவர்களிடம் வெறித்தனமாக நடந்து கொள்ளும் மனோஜின் கதாபாத்திரம் போன்றவற்றை சித்தரித்த விதத்தில் பழைய பாரதிராஜா கொஞ்சம் தெரிகிறார் ...


காலையில் ஃபேஸ்புக்கில் பிக்கப் செய்து விட்டு மாலையில் பிரிந்து விட்டோம்  என்று ட்வீட் செய்யும் இந்த காலத்தில் காதலன் காதலியின்  விரலை சப்புவது, இருவரும் பாறையை சுற்றி கண்ணாமூச்சி ஆடுவது , காதலியின் செருப்பை பூஜை செய்வது என்று இன்னும் பாரதிராஜா பழைய ராஜாவாகவே இருப்பது கொடுமை . வெள்ளையுடை அணிந்த தேவதைகள் வராதது மட்டுமே ஆறுதல். கொடுமைக்காரனாக இருந்தாலும் கணவன் செய்த உதவியை கார்த்திகா நினைத்துப் பார்ப்பது  , காதலியை பிரிந்தவுடன் லக்ஷ்மன் வேறு திருமணம் செய்து கொள்வது போன்றவற்றால்  ஏற்கனவே பலவீனமாக இருக்கும் காதல் படு பாதாளத்துக்கு  போய் விடுகிறது . படம் முடிந்து வரும் போது ஒருவர் கார்ததிகாவோட முதுகுக்காக கொடுத்த காசுல காவாசி ஒ.கே என்று சொன்ன போது பாரதிராஜா வை நினைத்து மனம் லேசாக கனத்தது ...

ஸ்கோர் கார்ட் : 37


15 June 2013

தீயா வேலைசெய்யணும் குமாரு - TVSK - வெல்டன் ...


ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவுக்கு ஒரு சீசன் இருக்கும் . இப்பொழுது தமிழ் சினிமாவிற்கு காமெடி சீசன் போலும் . ஒரு பக்கம் இது ஆரோக்கியமானது தானா  என்கிற கேள்வி இருந்தாலும் வியாபரத்திற்கு அது தவிர்க்க முடியாதது என்பது ஒரே நாளில் ரிலீசாகி இருக்கும் இரண்டு காமெடி படங்களிலிருந்தே விளங்கும் . அந்த வகையில் கலகலப்பு வெற்றிக்கு பிறகு யுடிவி யுடன் இணைந்து தீயா வேலை செய்திருக்கிறார் சுந்தர்.சி ...

பரம்பரை பரம்பரையாக காதலித்து கல்யாணம் செய்து வரும் குடும்பத்தில் பிறந்த குமார் ( சித்தார்த் ) சிறு வயதிலிருந்தே எந்த ஒரு ஃபிகரையும் கரக்ட் செய்ய முடியாமல் தத்தளித்து வருகிறார் . கடைசியில் உடன் வேலை பார்க்கும் சஞ்சனாவை ( ஹன்சிகா ) காதலை சேர்த்து வைப்பதையே தொழிலாக செய்து கொண்டிருக்கும் மூக்கையா ( சந்தானம் ) வின் உதவியுடன் தன்னை காதலிக்க வைக்கிறார் . பிறகு தன் தங்கை தான் சஞ்சனா என்று தெரிய வர காதலை பிரிக்கும் முயற்சியில் மூக்கையா ஜெயித்தாரா ? என்பதை இயக்குனர் தன் வழக்கமான பாணியிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு சொல்லியிருப்பதே தீவேகு  ...

உதயம் பாதிப்பிலிருந்து இன்னும் சித்தார்த் வெளிவரவில்லை போல , இதிலும் உம்மனாமூஞ்சியாகவே இருக்கிறார் . ஸ்மார்டாக இருக்கும் சித்தார்த் தன் கேரக்டருக்காகவும் , சந்தானத்தின் காமெடிக்காகவும் அடக்கியே வாசித்திருப்பதை பாராட்டலாம் . அசத்தலான அறிமுகத்துடன் வரும் சந்தானம் படம் நெடுக எஸ்.எம்.எஸ் , ஒ.கே.ஒ.கே வரிசையில் குமாரையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார் . தன் வழக்கமான கவுண்டர் , பஞ்ச் வசனங்களில் கலாய்க்கும் சந்தானம் டபுள் மீனிங்கை தவிர்த்திருப்பது ஆச்சர்யம் . சித்தார்த்திற்கு காதல் பாடம் எடுக்கும் போதும் சரி , அதற்காக பணத்தை கறக்கும் போதும் சரி நன்றாகவே சிரிக்க வைக்கிறார் சந்தானம் ...


ஒப்பனிங் சீனிலேயே ஒருபக்கம் ஹெட்லைட்டை காட்டிக்கொண்டே வரும் ஹன்சிகா தனக்கு விடப்பட்ட பணி  என்னவோ அதை சரியாக செய்திருக்கிறார் . க்யூட்டாக இருக்கும் கணேஷ் வெங்கட்ராமன் க்ளைமேக்ஸில் காணாமல் போகும் ஐ.டி மாப்பிள்ளை போல படத்தின் பாதியிலேயே காணாமல் போயிருப்பது பரிதாபம் . சித்தார்த்தின் ஐ.டி நண்பர் , பாஸ்கி , ஹன்சிகாவின் தோழியாக வரும் மோகன்ராமின் மகள் என்று எல்லோரும் கவனிக்க வைக்கிறார்கள் . சிறிது நேரமே வந்தாலும் டெல்லி கணேஷ் , மனோபாலா இருவரும் நன்றாகவே கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள் ...

பீட்சா வை ஒளிப்பதிவிய கோபி அம்ர்நாத்தா இது என்று ஆச்சர்யப்படும் படி இருக்கிறது ஒளிப்பதிவு . சத்யாவின் இசையில் சஞ்சனா பாடல்  தவிர மற்றவை புகை பிடிப்பவர்களுக்கும் , சக்கரை வியாதி இருப்பவர்களுக்கும் மட்டும் உதவியிருக்கின்றன . எஸ்.எம்.எஸ் . ஒகே பாணி கதை என்றாலும் நலன் குமாரசாமி - வெங்கட் ராகவனின் வசனங்களும் , அவர்கள் சுந்தர்.சி யுடன் இணைந்து அமைத்திருக்கும் திரைக்கதையும் படத்தை ஒருபடி மேலே எடுத்து செல்கின்றன . குறிப்பாக திருமணத்திற்காக சித்தூர் கூப்பிடும் நண்பனிடம் " அவனவன் வீட்ல பொணம் இருந்தாலே ஃபேஸ்புகல மட்டும் அப்டேட் போட்டுட்டு சும்மா இருக்கான் " என்பது போல வரும் வசனங்கள் நச்..


குமாரை அறிமுகப்படுத்தும் ஆரம்பக் காட்சியிலேயே நம்மை கவனிக்க வைக்கும் திரைக்கதை பின் இரண்டு மணிநேரங்கள் தொய்வில்லாமல் நம்மை கட்டிப்போடுகிறது . சந்தானத்தை தவிர்த்து ஐ.டி நண்பர்கள் வரும் காட்சிகளையும் ரசிக்க வைத்ததில் சுந்தர்.சி யின் உழைப்பு தெரிகிறது . கணேஷை காதலித்து விட்டு சித்தார்த்தின் தில்லு முல்லுகளை நம்பி அவரை காதலிப்பது போல வரும் ஹீரோயின் கேரக்ட்ரைசேஷன் , நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் போல காணாமல் போய்விடும்  கணேஷ் வெங்கட்ராமன் , ஸ்பீட் ப்ரேக்கர் பாடல்கள் , நோ லாஜிக்ஸ் போன்ற குறைபாடுகள் இருந்தாலும் நம்மை போரடிக்காமல் சிரிக்க வைத்தற்காக குமாரின் வேலைக்கு வெல்டன் சொல்லலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41

8 June 2013

மோடி முன்னிறுத்தப்படுவாரா ? ...


2014 நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படுவாரா  என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்று கோவாவில் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்ககுகிறது . ஏற்கனவே  2014 தேர்தல் - மன்னராட்சியா ? மக்களாட்சியா ? என்கிற பதிவில் மோடி பிரதமராவதற்கான  வாய்ப்புகளை அலசிவிட்டோம்.

இன்றைய சூழ்நிலையில் கட்சியினரின் அலை மோடிக்கு சாதகமாக இருந்தாலும் பி.ஜே.பி யில் பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்த அத்வானி , ராஜ்நாத் சிங் , அருண் ஜெட்லி போன்ற மற்ற தலைவர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது . அதிலும் குறிப்பாக வாஜ்பாய் அரசில் துணை பிரதமாராகவும் , உடல்நிலை காரணமாக வாஜ்பாய் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி விட்ட நிலையில் கட்சியின் மூத்த தலைவராகவும் இருக்கும் அத்வானியின் பெயரும் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது . இவர்கள்  இருவருக்கும் இடையே இருக்கும் சிறு இடைவெளியை மீடியாக்கள் ஊதி பெரிதுபடுத்தினாலும் அதை முற்றிலும் ஒதுக்கி விட முடியாது ...

உடல்நிலை சரியில்லாததால் அத்வானி இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் நாளை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மோடி , அத்வானி இருவருக்கும் மிக நெருக்கமான உமா பாரதிக்கு தர்ம சங்கடத்தில் மாட்டிக்கொள்வோம் என்கிற பயத்திலேயே காய்ச்சல் வந்துவிட்டதாகவும் , அதனால் அவரும் கூட்ட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன . மற்ற கட்சிகள் போல இல்லாமல் உண்மையிலேயே ஜனநாயக ரீதியில் இயங்கும் பி.ஜே.பி யை  பொறுத்தவரை மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் சின் ஆதரவு இருந்தாலும் கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்ப்பட்ட பிறகே அவரை பிரதம வேட்பாளராக அறிவிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை ...


சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் இடைத்தேர்தலில் 2 பாராளுமன்ற மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளை காங்கிரசிடமிருந்து மோடி தலைமையிலான பி.ஜே.பி கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது . அதே போல பீகாரில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு மோடியை எதிர்த்து வரும் நிதிஷ் குமாரின் நிலைப்பாடில் மாற்றம் அவசியம் என்பதும் ஊர்ஜிதமாகிறது . மோடிக்கு இந்த அளவு செல்வாக்கு வளராமல் இருந்திருந்தால் வாஜ்பாய் பிரதமாரக இருந்த போது அவருக்கு பக்கபலமாக இருந்த அத்வானி யின் பெயர் பிரதமர் பதவிக்கு இப்பொழுது ஒருமனதாக அறிவிக்கப்பட்டிருக்கும் . அத்வானிக்கு இதில் மனஸ்தாபம் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை ...

கட்சியின் சீனியர் என்ற முறையிலும் , தகுதியின்  அடிப்படையிலும் மோடிக்கு அத்வானி சளைத்தவரில்லை என்ற போதிலும் இப்போழுதுள்ள சூழ்நிலையில் மோடி காலத்தின் கட்டாயம் . சுயநலமில்லாமல் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அத்வானி இந்த உண்மையை புரிந்து கொண்டு மோடிக்கு வழிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம் . பொதுவாக அதிக திறமை வாய்ந்தவர்கள் ஒருமித்த முடிவை உடனடியாக எடுக்க முடியாது என்பார்கள் . ஒருவர் கட்டளையிட மற்றவர்கள் அடிபணியும் வழக்கத்திற்கு மாறாக அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பது ஆரோக்கியமான விஷயம் என்றாலும் எல்லா விதத்திலும் பிரதமர் பதிவிக்கு தகுதி வாய்ந்த மோடி முன்னிறுத்தப்படுவாரா என்கிற மக்களின் கேள்விக்கு தாமதிக்காமல் இந்த தேசிய செயற்குழு கூட்டம் முடிவதற்குள்ளாகவே பி.ஜே.பி அறிவிக்கும் என நாம் எதிர்பார்க்கலாம் ...


2 June 2013

குட்டிப்புலி - KUTTI PULI - ஒண்டிப்புலி ...


ஒரு நடிகனாக தனக்கென்று தனி மார்கெட்டை உருவாக்கிக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு சுந்தரபாண்டியன் வெற்றிக்கு பிறகு வந்திருக்கும் படம் குட்டிப்புலி . வழக்கமான நண்பர்கள் சென்டிமெண்டிலிருந்து அம்மா சென்டிமெண்டிற்கு மாறியிருக்கும் சசிகுமார் வெற்றியடைந்தாரா ? பார்க்கலாம் ...

ஊர்ப்பெண்ணை அசலூர்க்காரன் கிண்டல் செய்ததற்காக அவனை போட்டு விட்டு தானும் சாகும் ஒரு நல்ல ! மனிதனின் ( லால் ) பிள்ளை குட்டிப்புலி
( சசிகுமார் ) . அப்பனை போலவே  இருப்பதால் உசுருக்கு உத்திரவாதம் இல்லை என்று காரணம் சொல்லி  கல்யாணம் செய்ய மறுக்கும் குட்டிப்புலிக்கு கால்கட்டு போட நினைக்கிறார் அம்மா ( சரண்யா ) . இதற்கிடையில் தெருப்பெண் பாரதி ( லக்ஷிமேனன் ) இவரை லவ்வ அம்மாவின் எண்ணம் நிறைவேறியதா என்பதை வழக்கமான பாணியில் சொல்லியிருக்கிறார்கள் ...


விருமாண்டி , பருத்திவீரன் ஸ்டைலில் இருந்தாலும்  கைகளை பின்னே கட்டிக்கொண்டு தலையை தொங்கப்போட்டு நடக்கும் மேனரிசத்தில் ரசிக்க வைக்கிறார் சசிகுமார் . சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷத்தையும் , காதல் காட்சிகளில் வெட்கத்தையும் காட்டி தனக்கும் நடிக்க வரும் என்று நிரூபிக்கிறார் . என்ன தான் ஹீரோயிச படம் என்றாலும் தனியாளாக எந்திரன் ஸ்டைலில் பற்றியெறியும் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை காப்பாற்றுவதெல்லாம் ரொம்ப ஓவர் . சசி ரசிக்க வைத்தாலும் அவரை மாஸ் ஹீரோவாக ஏற்க மட்டும் ஏனோ மனம் மறுக்கிறது ...

மாநிறமாக இருந்தாலும் மேக்கப்பும்  , உயரமான உடல்வாகும்  லக்ஷ்மிமேனனை கவனிக்க வைக்கின்றன  . அம்மணி பத்தாவது பரீட்சை இப்பொழுது தான் எழுதினார் எனும் போது தான் எத்தனாவது தடவை என்று கேட்கத் தோன்றுகிறது . பெரிய வேலை வெட்டியில்லாமல் சண்டை போட்டுத்திரியும் ஹீரோவை வழக்கமான தமிழ் சினிமா கலாச்சாரத்தின் படி காதலித்துத் தொலைக்கிறார் லக்ஷ்மி . இவர் உயரத்தை கணக்கில் கொண்டு  சசியை லாங் ஷாட்டில் நடக்கவிட்டே சமாளித்திருக்கிறார்கள் . நான்கைந்து நண்பர்களுடன் திரியும் சசிக்கு இந்த படத்தில் முருகதாஸ் மட்டுமே இருப்பது ஆறுதல் . இவரை தவிர காமெடிக்காக சிலர்  இருந்தும் ( பப்பு & கோ ) பெரிய அளவிற்கு சிரிப்பு வரவில்லை . சித்தப்பா , மாமா என்று வரும் ஊர்க்காரர்கள் ரசிக்க வைக்கிறார்கள் ...

டெம்ப்ளேட் அம்மாவாக சரண்யா . அவரை விட அவருடன் வரும் ரமா பிரபா கவனிக்க வைக்கிறார் . மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் முதல் சில சீன்கள் மிக சிறப்பு . கிப்ரான் இசையில் சசியின் சண்டியரே அறிமுக பாடலும் , காதல் பாடலும் அருமை . பின்னணி இசையை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை . இசைஞானியின் பாடல்களை வைத்தே நிறைய சீன்களை ஒட்டிவிட்டார்கள் ...


பெருசாக எதையும் யோசிக்காமல் சேஃபாக முதல் படத்தில் கமர்சியல் ரூட்டை  கையில் எடுத்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் முத்தையா . முதல் காட்சியில் நம்மை நிமிர வைத்ததில் , சசிகுமார் கேரக்டரை எஸ்டாப்ளிஷ் செய்த விதத்தில் , " நான் ஒண்ணுமே செய்யலம்மா " எனும் ஊர்க்காரனிடம் " அதானே செஞ்சுட்டாதான் இந்நேரம் குருவம்மாவுக்கு நாலு பிள்ளை பொறந்துருக்குமே " என்று சரண்யா முணுமுணுப்பது உட்பட ஆங்காங்கே வரும் வட்டார வசனங்களில் , சசிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பயத்தை கொடுத்து விட்டு பின் க்ளைமேக்சில்
வைத்த ட்விஷ்டில் இப்படி நிறைய இடங்களில் இயக்குனர் பளிச் ...

கதை தான் பழசு சீன்களில் எதையாவது புதிதாய்  யோசித்திருக்க வேண்டாமோ ? ! . இந்த இடத்தில் கோட்டை விட்டு விட்டார் முத்தையா . சசிகுமார் செய்யும் அளப்பரைகளை வைத்தே இடைவேளை வரை ஒப்பேற்றியிருப்பது போர் . இண்டெர்வல் ப்ளாக் அதிர்ச்சி கொடுத்தாலும் , குத்துயிரும் , கொலையுயிருமாக வெட்டப்படும் சசி பின் சக்திமான் போல மீண்டு வந்து ஒத்தையாளாக வில்லன் கோஷ்டியை அடித்து சாய்ப்பதெல்லாம் போங்கு . அம்மா சென்டிமெண்டில் இருக்கும் அழுத்தம் கூட ஹீரோ - வில்லன் மோதலில் இல்லை .  சென்டிமெண்ட் , காதல் , காமெடி , சண்டை என்று பழசானாலும் புளியோதரையாய்  ருசிக்க வைத்தாலும் , மாஸ் ஹீரோவாக சசிகுமாரை முன்னிறுத்தும் முயற்சியில் ஒண்டிப்புலியாக அவரை மட்டுமே நம்பி வந்திருக்கும் படம் குட்டிப்புலி . சசிகுமாரை ரசிப்பவர்களுக்கு  படம் விருந்து , மற்றவர்களுக்கு பத்தில் ஒன்று ...

ஸ்கோர் கார்ட் : 40


30 May 2013

பிச்சைக்கார கிழவி - சிறுகதை ...


அன்றும் என்றும் போலவே வழக்கமாகத்தான் இருந்தது . குப்பைத் தொட்டிகள் இருந்தும் ரோட்டில் சிதைந்து கிடக்கும் குப்பைகள் , காரை பற்றி நினைத்து பார்க்காத காலத்தில் வீட்டை வாங்கி விட்டதால் உள்ளே  அடைபடாமல் சுதந்திரமாய் ரோட்டோரம் வரிசையில் நிற்கும் கார்கள் , ரியல் எஸ்டேட் பூதங்களிடமிருந்து தப்ப முடியாமல் தங்கள் சுயத்தை இழந்து இடிபட்டுக் கொண்டிருக்கும் வீடுகள் , குழந்தைகளும் , செல்லப்பிராணிகளும் ஒன்றாகவே வளரும் குடிசைகள் , சூதாட்டத்தில் சிக்கித் தவிக்கும்  ஐ.பி.எல் பற்றி டீக்கடைகளில் நடக்கும் விவாதங்கள் என்று நான் வாக்கிங் போகும் போது புதிதாய் ரோட்டோரத்தில் பார்த்த பிச்சைக்கார கிழவியை தவிர  மற்ற  விஷயங்கள்  அன்றும் என்றும் போலவே வழக்கமாகத்தான் இருந்தன  .

அந்த மூதாட்டிக்கு 70 வயதுக்கு மேலிருக்கலாம் . தினமும் அவள் அங்கிருந்து நான் பார்க்கவில்லையா அல்லது புதிதாய் வந்திருக்கிறாரா என்று தெரியவில்லை . ஒடிசலான தேகம் , ஒட்டிய கண்கள் , பக்கத்தில் தடி , பிச்சைக்காக நீட்டிய கைகள் என எல்லாமே அவள் வறுமையை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தன . பொதுவாகவே நான் பிச்சை போடுவதை ஊக்குவிப்பதில்லை . ஒரு கூட்டத்தையே சோம்பேறிகளாக்குவதோடு நாமும் ஏமாற்றப்படுகிறோம் என்கிற உள்ளுணர்வு எனக்கு உண்டு . இரயில் , பேருந்து பயணங்களில் இதை தவிர்ப்பதற்காகவே  அதிக நேரங்கள் புத்தகங்களில் மூழ்கி விடுவது என் வழக்கம் . ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி நடந்து விடுவதில்லை . வயதானவர்கள் பிச்சை எடுப்பதை பார்க்கும் போது மட்டும் என் கொள்கை பிடிப்பு தளர்ந்து விடும் . வாழும் போதிருக்கும் கஷ்டம் சாவு வரை தொடர்வது கொடுமை . ப்ளாட் கலாசாரம் வந்த பிறகு யாரோ வயதானவர்களை பார்த்து குழந்தைகளுக்கு தாத்தா , பாட்டி என்று  சொல்லித் தருகிறோம் . உண்மையான தாத்தா , பாட்டிகள் ஒரே வீட்டில் நிரந்தரமாக தங்க முடியாமல் அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் .

நிச்சயம் இந்த கிழவிக்கும்  மகனோ , மகளோ இருந்து கவனிக்காமல் விரட்டி விட்டிருக்கலாம் . அவள் அங்கங்கே பிச்சையெடுத்து வயிற்றை கழுவிக்கொள்ளலாம் , ஆனால் உடம்புக்கு ஏதாவது வந்து விட்டால் எங்கே போவாள் என்று நினைத்த போது உள்ளுக்குள் ஏதோ செய்து அந்த முகம் தெரியாத மகன் , மகள் மேல் கோபம் வந்தது . வாழ்க்கை முழுவதும் படிப்பு , வேலை இந்த இரண்டை மட்டுமே பிறந்தற்கான நோக்கமாக கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் லோகத்தில் அவர்கள் மட்டும்  விதிவிலக்கா என்ன ? . எந்த ஒரு இடத்தில் முதலீடு செய்தாலும் அதற்க்கான லாபத்தை எதிர்பார்க்கிறோம் , ஆனால் லாபத்தை எதிர்பார்க்காமல் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு பெற்றோர்களின் பணம் செலவழிக்கப்படுகிறது . எந்தவித வாக்குறுதியும் இல்லாமல் தங்கள் வாழ்நாள் சம்பாத்தியத்தை இழந்து விட்டு தவிக்கும் லட்சோப லட்ச ஆத்மாக்களுள் இந்த கிழவியும் ஒருத்தியோ ?! . சிந்தனைகள் ஒருபக்கம் ஓட அவளுக்கு ஏதாவது கொடுக்கலாம் என்று பையை துழாவிய போது தான் அதில் ஒன்றுமில்லை என்று தெரிந்தது .

வாக்கிங் போகும் போது ஏதாவது வாங்க வேண்டுமாயிருந்தாழொலிய நான் பணம் எடுத்து வருவதில்லை என்ற ஞாபகம் வர கொஞ்சம் அலுத்துக்கொண்டேன் . நாளை மறக்காமல் பணம் எடுத்து வர வேண்டுமென்று அப்பொழுதே மனதில் குறித்துக் கொண்டேன் . அந்த கிழவி மீது ஒரு படி  மேலே பரிவு வர காரணம் இறந்து போன எனது பெரியம்மா . எனது பள்ளி காலங்களில் அம்மா வீட்டிலில்லாத போது எனக்கு சமைத்து போட்டவள் . என் அப்பா சாப்பிடும் போது ஏதோ தேர்வு  எழுதி விட்டு  முடிவுக்கு காத்திருக்கும் மாணவி போல கதவருகில் நின்று கொண்டு பயத்துடன் பார்க்கும் அந்த கண்கள் இன்றும் என் நினைவில் இருக்கிறது . நான் என்றுமே பெரியம்மாவை எனக்கு சாதம் போட அனுமதித்ததில்லை . அதற்கு காரணம் அந்த கருப்பு கைகள் . சமையலறையில் வேலை பார்த்து பார்த்து காய்த்துப் போன அந்த கைகளை பார்க்கவே எனக்கு சிறு வயதில் பயமாக  இருக்கும் . கொஞ்சம் பெரியவனான பிறகு " என்னடா நான் சாதம் போடலாமா" என்று பெரியம்மா குறும்பாக கேட்கும் போது அசடு வழிந்திருக்கிறேன் . பத்தாவதுக்கு  மேல் படிப்பதற்கு எனது அப்பா உதவி செய்தும் பெரியம்மா மகன் சரியாக படிக்காமல் ஊதாரியாக சுற்றியதால் எனது வீட்டிற்கு வரவே அவள்  பயந்து கொண்டிருந்த காலமது . ஒரு நாள் நேரே பார்க்கும் போது எனது அப்பா அதை பற்றி ஒரு வார்த்தை கூட பெரியம்மாவிடம் கேட்காதது எனக்கு   ஆச்சர்யமாக இருந்தது .

பெரியவன் ஆக ஆக நான் என் நண்பர்கள் வட்டத்துக்குள் ஐக்கியமாகி விட பெரியம்மா மகள் வீட்டை பகைத்துக் கொண்டு திருமணம் செய்து எங்கோ சென்று விட்டது , மகன் சரியாக படிக்காததால் ஆட்டோ ஒட்டிக் கொண்டிருப்பது இதையெல்லாம் என் அம்மா மூலம் அவ்வப்போது தெரிந்து கொண்டேன் . ஒரு நாள் என் நண்பன் வீட்டை விட்டு வெளியே வரும் போது தான் நீண்ட நாட்கள் கழித்து எனது பெரியம்மாவை பார்த்தேன் . தெருவோரம் அமர்ந்து கொண்டு வருவோர் போவோரிடம் அப்பளம் விற்றுக் கொண்டிருந்தாள் . நண்பன் கூட இருந்ததால் பேசலாமா வேண்டாமா என்ற யோசனையில் நானிருக்கும் போதே " ராசா " என்று ஆசையாக கூப்பிட்டாள் . சுற்றியிருப்பவர்கள் என்னை ஒரு மாதிரி பார்ப்பது போலவே எனக்கு அப்போது பட்டது . " உங்க அப்பாருக்கு அரிசி அப்பளம்னா உசுரு " என்று சொல்லி எனது கைகளில் நான்கைந்து அப்பளப் பொட்டலங்களை திணித்தாள். இதற்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே " காலேஜெல்லாம் நல்லா படிக்கிறியா , என் புள்ள மாதிரி ஆயிடாத " என்று சொல்லி கொஞ்சம் பணத்தை என் பாக்கெட்டில் வைக்கும் போது அவள் குரல் தழுதழுத்தது . நான் எவ்வளவோ வற்புறுத்தியும்  என்னிடமிருந்து பணத்தை அவள் வாங்கிக் கொள்ளவேயில்லை . என் அப்பா தான் பெரியம்மாவிற்கு நிறைய செய்திருக்கிறாரே என்றும் , சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு திரும்ப கொடுத்துக்கொள்ளலாம் என்றும் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன் .

வீட்டிற்கு வந்து என் அம்மாவிடம் இதை சொல்லிய பிறகு ஒரு களேபரமே நடந்தது  . ஒரு கட்டத்துக்கு மேல் நான் கோபமாக " நம்மட்ட எவ்வளோ வாங்கித் தின்னிருப்பாங்க , ரொம்ப தான் கத்துறியே  " என்று சொன்னது தான் மிச்சம் .என் அம்மாவிடமிருந்து பெரிய அழுகை வந்தது . சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்ட அம்மாவை  தாயும் , தந்தையுமாய் இருந்து பார்த்துக் கொண்ட பெரியம்மாவிற்கு என்ன செய்தும் நன்றிக் கடனை தீர்க்க முடியாது  என்பதை புரிந்து கொண்டேன் . நான் நின்று கொண்டிருக்கும் வீட்டை கட்டுவதற்காக வாங்கிய கடனையே இன்னும் என் அப்பா முழுமையாய் அடைக்கவில்லை என்பதையும் தெரிந்து கொண்ட பிறகு  எனக்கு லேசாய் தலை சுற்றியது  . கடைசி வரை என் பெரியம்மா யாரிடமும் கையேந்தாமல் தன் சொந்த உழைப்பிலேயே வாழ்ந்து போய் சேர்ந்து விட்டாலும் ஏனோ  எனக்கு இந்த மூதாட்டியை பார்க்கும் பொழுது பெரியம்மா ஞாபகம் வந்தது . நிச்சயம் நாளை வரும் போது ஏதாவது செய்ய வேண்டுமென்கிற நினைப்பில் வீடு திரும்பினேன் .

அடுத்த நாள் வந்த போது கிழவி அங்கே இல்லை . நாளை பார்க்கத்தானே போகிறோம் என்று திரும்பி விட்டேன் . அடுத்த நாளும் வந்தது . கிழவியும் இருந்தாள் . நான் அருகே சென்று என் பைக்குள் கையை விட்டேன் , அதில் ஒன்றுமேயில்லை . ஒரு நிமிடம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை , பை எதுவும் ஓட்டையா என்று மீண்டுமொருமுறை சரி பார்த்துக் கொண்டேன் . பிறது தான் தெரிந்தது நான் இன்று வேறு ட்ராக் சூட் போட்டிருக்கிறேன் என்று . ஒவ்வொரு முறையும் அருகில் வந்து விட்டு வெறும் கையை வீசிக்கொண்டு போகும் என்னை கிழவி எந்தவொரு சலனமுமில்லாமல் பார்த்தாள் . எனக்கு என்னமோ போலிருக்க விறுவிறுவென்று நடையை கட்டினேன் . இன்று வீட்டிலிருந்து கிளம்பும் போதே பேன்ட் , சட்டை போடிருக்கிறேனா எனபது  உட்பட எல்லாவற்றையுமே ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக்கொண்டேன் . பர்சிலிருந்து எடுத்து வைத்துக்கொண்ட பணம் பேண்டுக்குள் பதுங்கியிருந்தது . எனது நடவடிக்கைகளை என் மனைவி வேறு மாதிரியாக பார்ப்பது போலவே தெரிந்தது . அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் எனது நடை பயணத்தை தொடங்கினேன் .

கிழவியிடம் பணத்தை கொடுத்த பிறகு அவள் முகம் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்துக் கொண்ட நடந்தேன் . அன்று போல் சலனமில்லாமல் இருக்குமா ? அல்லது பெரியமாவின் பார்வை  போல குறும்பாக இருக்குமா ? எப்படியிருந்தாலும் பணத்தை கையில் திணித்து விடுவது என்ற முடிவில் அவள் இடம் நோக்கி சென்றேன் . கூட்டம் கூட்டமாக வழி மறித்துக் கொண்டு பேசுவது தமிழர்களின் இயல்பா ? இல்லை இந்தியர்களின் இயல்பா ? என்று தெரியவில்லை . ரோட்டை மறித்துக் கொண்டு வெட்டிக்கதை பேச யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது ? நான்சென்ஸ் என மனதுக்குள் திட்டிக்கொண்டே அவர்களை கடந்து சென்ற எனக்கு ஏதோ உறுத்த கூட்டத்தை விளக்கிக் கொண்டு எட்டிப்பார்த்தேன் . அங்கே ரோட்டில் கண்கள் வெறித்திருக்க கிழவி மூர்ச்சையாகியிருந்தாள் . சலனமில்லாத அந்த பிச்சைக்கார கிழவியின் முகத்தின் வழியே என் பெரியம்மா என்னை பார்ப்பது போலவே இருந்தது ...



24 May 2013

2014 தேர்தல் - மன்னராட்சியா ? மக்களாட்சியா ? ...


இன்னும் ஒரு வருடத்திலோ அல்லது அதற்கு முன்னரோ 2014 ல் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது . அனைத்து இந்தியர்களுக்கும் குறிப்பாக நடுத்தர , உயர் நடுத்தர வகுப்பினருக்கு இது மிக முக்கியமான தேர்தல் என்றே சொல்லலாம் . தற்போதைய நிலையில் விலைவாசி உயர்வு  , அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மை  , ஊழல் இவையனைத்தும் ஏழை , பணக்காரர்களை விட நடுத்தர வர்க்கத்தையே அதிகம் பாதிக்கின்றன .  ஏனெனில் ஏழைகள் இலவசத்தின் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள்  , பணக்காரர்கள் எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படுவதில்லை .

2004 இல் இருந்து தொடர்ந்து பத்து வருடங்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் காங்கிரஸின் மேல் மக்கள் அதிக அதிருப்தியோடு இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை . 2009 இல் நாட்டின் ஸ்திரத்தன்மை போய் தொங்கு நாடாளுமன்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அதிருப்தி இருந்தும் அதையும் மீறி ஒட்டு போட்டு காங்கிரஸை மக்கள் ஆட்சி பீடத்தில் ஏற்றினார்கள் . இந்த முறையும் அதே போல ஒரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதென்பதில் அனைவரும் கவனமாக இருப்பார்கள் என நம்புவோமாக ! 2 ஜி , காமன்வெல்த் தொடங்கி நிலக்கரி , ரயில்வே என்று எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது . அதோடில்லாமல் ஊழலை தடுக்க வேண்டிய அரசே சி.பி.ஐ யை கையில் போட்டுக் கொண்டு குற்றப்பத்திரிக்கைய மாற்றியமைத்ததையும்  அதற்காக உச்சநீதிமன்றத்தில் வாங்கிக் கட்டிக்  கொண்டதையும் இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டோம் . ஊழல் இந்தியாவில் பல வருடங்களாக புரையோடியிருந்தாலும் இந்த அளவிற்கு வெளிப்படையாக ஒரு அரசு செயல்படுவதாக உச்சநீதி மன்றமே  கண்டித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ...

பொருளாதாரம் , ஊழல் இரண்டையும் தாண்டி கவலையளிக்கும் மற்றொரு விஷயம்  சீனா , பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளால் நாட்டிற்கு  ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் . ஏற்கனவே 1962 போரில் நம் நாட்டின் ஒரு பகுதியை கைப்பற்றி விட்ட சீனா இப்பொழுது நம் நாட்டிற்க்குள் 19 கி.மீ புகுந்து தங்களின் டெண்டை போட்டிருக்கிறார்கள் . ஒரு மாத போராட்டத்திற்கு பின் அவர்களை வெளியேற்றினாலும் அதற்கு பதிலாக நம் படை வீரர்களும் பின் வாங்கியிருப்பது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குறியாக்குகிறது  . தனக்கும் அஜ்மலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பகல் வேஷம் போட்ட பாகிஸ்தான் அப்சல் குரு தூக்குக்கு எதிராக கண்டனம் தெரிவித்து நம் உள்நாட்டு விவகாரங்களில் வெளிப்படையாகவே தலையிடுவதும் , சிறைக்குள் வைத்து நம் இந்திய  கைதி சர்பஜித் சிங்கை கொடூரமான முறையில் கொன்றிருப்பதும் நம் நாட்டின்மேல் அதற்கிருந்த கொஞ்ச நஞ்ச பயமும் போய் விட்டதென்பதை வெளிப்படையாகவே காட்டுகின்றன . இவை தவிர இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் அரசு நடந்து கொண்ட விதம் மாணவர்களை கூட ரோட்டிற்கு வரவைத்து விட்டது .  இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை ஒட்டு போட வைப்பதற்கே பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியதாய் இருக்கிறது . இப்படி உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமல்லாமல் வெளி நாடுகளுடனும் ஒரு ஆரோக்கியமான உறவு இல்லாமல் அச்சத்துடனேயே நமது அரசாங்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது ...

இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸிற்கு எதிராக இருக்கும் ஒரே மாற்று பி.ஜே.பி மட்டுமே . தேர்தலை ஒட்டி உருவாகும் மூன்றாவது அணி என்றுமே மழையில்  முளைக்கும் காளான் தான் . இருப்பினும் தேசிய அளவில் காங்கிரஸிற்கு  எதிரான வாக்குகளை பி.ஜே,பி ஒட்டுமொத்தமாக திரட்ட தவறியது அந்தந்த மாநில கட்சிகளை தேசிய அளவில் அதிகமாக முக்கியத்துவம் அடைய வைத்திருப்பதையும் யாரும் மறுக்க முடியாது . அர்விந்த் கேஜ்ரால் , அன்னா ஹசாரே போன்றோரின் வருகை படித்த நடுத்தர மக்களிடையே பி.ஜே,பி யின் செல்வாக்கை சரித்திருப்பதும் உண்மை . உட்கட்சி பூசல் , மோடி யை பிரதமாராக அறிவிப்பதில் உள்ள சிக்கல் , கர்நாடகாவில் அடைந்த படு தோல்வி போன்றவைகளும் பி.ஜே.பி க்கு பெரும் பினடைவை ஏற்ப்படுத்தியிருக்கின்றன . இவை எல்லாவற்றையும் விட காங்கிரஸ் என்ன தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் மக்கள் பி.ஜே.பி சிறிய தவறு செய்தாலும் மன்னிக்க முடியாத மனப்பான்மையுடன் இருப்பதும் , ஊடகங்களிடையே தனது உறவை பி.ஜே.பி மேம்படுத்திக் கொள்ளாததும் அந்த கட்சிக்கு சறுக்கலாக இருக்கும் மற்ற அம்சங்கள் . இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும் காங்கிரசுடன்  ஒப்பிட்டுப் பார்க்கும் போது பி.ஜே.பி சிறந்த தேர்வாகவே படுகிறது . இத்தனை வருட சுதந்திர இந்தியாவில் காங்கிரஸு க்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு வேறெந்த கட்சிக்கும் கொடுக்கப்படவில்லை . எனவே பி.ஜே.பி க்கு மற்றொரு வாய்ப்பு கொடுப்பதில் தவறிருப்பதாக தெரியவில்லை ...

பி.ஜே.பி க்கு எதிராக முக்கியமாக வைக்கபடும் மதவாத குற்றச்சாட்டு ஒரு சந்தர்ப்பவாத குற்றச்சாட்டே . மதவாதம் என்று சொல்லப்படும் பி.ஜே.பி ஓட்டுக்காக எந்தவொரு மதத்துக்கும்  சலுகைகள் வழங்கி உதவிகள் செய்யவில்லை . ஓட்டுக்காக மைனாரிட்டிகளை  தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல் தனித்தே வைத்திருக்கும் பல கட்சிகளின் கூட்டு சதியே இந்த மதவாத பிரச்சாரம்  . உலக மக்கள் தொகையில்  மைனாரிட்டியாக இருக்கும் ஹிந்துக்களை சாதி ரீதியாக பிரித்து வைப்பதே இங்குள்ள அரசியல் கட்சிகளின் முக்கிய நோக்கம் . எங்கே அவர்கள் ஒன்றுபட்டு விடுவார்களோ என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த போலி மதவாத பிரச்சாரம் . ஒரு கட்சி  எந்தவொரு குறிப்பிட்ட மதத்தை ஆதரித்தாலோ அல்லது அதன் சார்பாக நடந்து கொண்டாலோ அதை மதவாத கட்சி என்று சொல்லலாம் . அந்த அடிப்படையில்  ஹிந்துக்கள் சார்பாக நடப்பதாக சொல்லப்படும் பி.ஜே.பி மதவாத கட்சி என்றால் மற்ற மதங்களை தலையில்  தூக்கிப் பிடிக்கும் மற்ற கட்சிகள் மட்டும் மிதவாத கட்சிகளா ? இதை யோசித்தாலே அரசியல் கட்சிகள் போடும் பகல் வேடம் தெளிவாகும் ...

பாபர் மசூதி இடிப்பும் , கோத்ரா கலவரமும் பி.ஜே.பி க்கு எதிராக வைக்கப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள். பாபர் மசூதி பிரச்சனைக்கு ஏற்கனவே உச்ச நீதி மன்றம் சுமூகமான தீர்ப்பை வழங்கிவிட்டது . கோத்ராவை பொறுத்தவரை எதி ர்கட்சிகள் எவ்வளவோ முயன்றும் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை . சமீபத்தில் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது . எந்தவொரு கட்சியின் வளர்ச்சிக்கு பின்னாலும் ஆராய்ந்து பார்த்தால் ஏதாவது குற்றச்சாட்டுகள் கண்டிப்பாக இருக்கும் என்பதே வரலாறு .  இதற்கு பி.ஜே.பி மட்டும் விதிவிலக்கல்ல . இந்த குற்றச்சாட்டுக்கள் மட்டுமே அந்த கட்சிக்கான ஓட்டுக்களை சிதைத்து விட முடியாது . ஏனெனில் தேசிய அளவில் மூன்று  விதமான ஒட்டு வங்கிகள் உள்ளன . அதில் முதலாவது மற்றும் முக்கியமானது ஏழைகள் ஒட்டு , இரண்டாவது மைனாரிட்டிகள் ஒட்டு , மூன்றாவது படித்த நடுத்தர வர்க்கத்தினர் ஒட்டு ...


அந்தந்த ஏரியாவில் வினியோகிக்கப்படும் பணமும் , இலவசங்களும் முதலாவது ஒட்டு வங்கியை கவனித்துக் கொள்கின்றன . மத்திய அரசு
 " உங்கள் பணம் உங்கள் கையில் " திட்டத்தை எல்லா மாநிலங்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு செல்வதில் முனைப்பாக இருப்பதற்கு காரணத்தை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை . இரண்டாவதாக இருக்கும் மைனாரிட் ஓட்டை சிறிய விழுக்காடேனும் பி.ஜே.பி பக்கம் போக விடாமல் வைத்திருப்பதே மற்ற கட்சிகளின் முக்கியமன நோக்கமாக இருக்கிறது . ஹிந்துக்களை போல அல்லாமல் மைனாரிடிகள் ஒட்டு விஷயத்தில் ஒற்றுமையாக இருப்பது இந்த வகை ஒட்டு வங்கியை பலப்படுத்துகிறது . மூன்றாவதாக இருக்கும் நடுத்தர ஒட்டு வங்கி அந்தந்த சூழ்நிழைக்கு ஏற்றவாறு தங்களின் நிலையை வெளிப்படுத்திக் கொள்கிறது . காங்கிரசின் மேல்  இருந்த நம்பிக்கை நடுத்தர வர்க்கத்தினருக்கு  வெகுவாக சரிந்திருப்பது பி.ஜே.பி க்கு சாதமாக இருந்தாலும் முன்னமே சொன்ன மாதிரி அவை முழு மையாக பி.ஜ.பி க்கு சென்றடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . வரப்போகிற தேர்தலில் இந்த மூன்றாவது வாக்கு வங்கி முக்கிய பங்கு வகிக்கப் போவது உண்மை . முன் போல இல்லாமல் ஒட்டு போடும் வழக்கம் அதிகமாகி வருவதும்  அதற்கு மற்றொரு முக்கிய காரணம் ...

இரண்டாவது வகை ஒட்டு வங்கியில் தனக்கு ஏற்படும் இழப்பை பி.ஜே.பி இதில் சமன் செய்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன . அதே நேரம் இந்த வகை ஒட்டு மொத்தமாக பி.ஜே,பி பக்கம் சாயும் போது தான் பலன் அதிகமாக இருக்கும் . ஆனால் இந்த வகை மக்கள் சென்ற தேர்தலை போல நாம் ஓட்டுப் போட்டாலும் தனித்த மெஜாரிட்டியில் பி.ஜே.பி வராது என்றோ அல்லது மூன்றாவது அணி அதிக இடங்களை பெற்று கம்யூனிஸ்ட் தலைமையில் ஆட்சி வந்து விடும் என்றோ பயத்தில் திரும்பவும் காங்கிரஸ் பக்கமே சாய்ந்து விடுகிற அபாயமும் உள்ளது . இதை சரி கட்டுவதற்கு பி.ஜே.பி க்கு உள்ள ஒரே பிரம்மாஸ்திரம் நரேந்திர மோடி . சமீபத்தில் பிரபல எழுத்தாளர் சேட்டன் பகத் பேஸ் புக்கில் நடத்திய கருத்துக்கணிப்பில் 84 சவிகிதம் பேர் நரேந்திர மோடி பிரதமராக வர  விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்  . மூன்றாவது வகை ஒட்டு வங்கியில் அதிகம் இருப்பவர்கள் இவர்களே . இதே கருத்துக்கணிப்பில் ராகுல் காந்திக்கு 13 சதவீதம்  பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருப்பதும்  குறிப்பிடத்தக்கது . மோடியை  முன்னிருத்தினால் மைனாரிட்டிகள் புறக்கணிப்பார்கள் என்ற நினைப்பில் வரை தவிர்த்து அத்வானியையோ அல்லது வேறு யாரையோ பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவித்தாலும் அந்த ஓட்டு வங்கியில் பெரிய மாற்றம் ஏற்ப்பட்டுவிடப் போவதில்லை .  மாற்றாக மோடியை அறிவிப்பதன் மூலம் படித்த நடுத்தர மைனாரிட்டிகளிடையே ஒட்டு பெறுவதற்கு பி.ஜே.பி க்கு வாய்ப்பு உள்ளது . பாராளுமன்ற தேர்தல் கமிட்டியில் மோடி இடம் பெற்றிருப்பதும் , மோடிக்கு நெருக்கமான அமித் ஷா உத்திர பிரதேசத்திற்கு பொறுப்பேற்றிருப்பதும் அவர் பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படுவ்தற்கான வாய்ப்பை ஊர்ஜிதம் செய்கின்றன ...

மோடிக்கு ஏற்பட்டிருக்கும் பாப்புலாரிட்டி  ஒரே நாளில் ஏற்பட்டதில்லை  எனபது கடந்த 12 ஆண்டு கால குஜராத் மாநில வளர்சியயை கூர்ந்து பார்த்தாலே புரிய வரும் . அவரின் மேல் மதசார்பு சாயத்தை எவ்வளவோ காங்கிரஸ் பூசிப்பார்த்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை . முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் அவருக்கு ஆதரவாக அதிக ஓட்டுக்கள்  விழுந்திருப்பது அவர்  மேல் மைனரட்டிகள்  வைத்திருக்கும் நம்பிக்கையை கா ட்டுகிறது . 2002 இல் நடந்த கலவரத்தை தாண்டி அவர்கள் முன்னேறி வந்திருப்பது தெரிகிறது . ஏனெனில் குஜராத் என்றுமே அமைதி பூங்காவாக  இருந்ததில்லை . 2002 க்கு முன்  அடிக்கடி அங்கே இந்து - முஸ்லிம் கலவரம் நடப்பது வாடிக்கை . ஆனால் 2002 கலவரத்திற்கு பின் கடந்த 11 ஆண்டுகளில் மத வேற்றுமைகளை  கடந்து அனைவரும் ஒற்றுமையாக  முன்னேறி வருகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை . குஜராத்தின் உண்மை நிலைமை அங்கிருப்பவ்ர்களுக்கே தெரியும் . இந்திரா காந்தி  படு கொலை செய்யப்பட பிறகு 1500 சீக்கியர்களுக்கு மேல் கொல்லப்பட்டார்கள் . ஆனால் இன்று காங்கிரஸ் தலைமையிலான அரசில் பிரதமராக இருப்பவர் மன்மோகன் சிங் என்பதே வரலாறு ...

ஏதோ மோடியே  முன்னிருந்து கலவரத்தை நடத்தியது போல போலியாக சித்தரிக்கிறார்கள் . அது சம்பந்தப்பட வழக்குகளிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டிருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் . மோடியை முன்னிருத்தினால்  கூட்டணியிலிருந்து விலகி விடுவோமென பீஹார் முதல்வர் நிதிஸ் குமார் சொல்லியிருக்கிறார் . அப்படி நடக்கும் பட்சத்தில் பீகாரில்  15 - 20 இடங்கள் பி.ஜே.பி க்கு கிடைக்காமல் போகலாம் .
ஆனால் இந்தியா முழவதும் வெற்றி வாய்ப்புள்ள இடங்களை ஆராய்ந்து பார்த்தால்  பீகாரின் இழப்பு பி.ஜே.பி க்கு பெரிதாக இருக்காது . எந்த கட்சியும் தனித்து பெரும்பான்மை அடையப் போவதிலலை . 160 -180 இடங்களை  தனித்து கைப்பற்றினாலே மற்ற கட்சிகள் தங்கள் ஆதரவை  வெளியிலி ருந்தோ உள்ளிருந்தோ கொடுத்து விடுவார்கள் என்பதே இன்றைய இந்திய அரசியலின் நிலை . தென் இந்தியாவில்  வளர்ச்சியடையாததும் , கர்நாடகாவில் இருந்த ஒரே ஆட்சியை ஊழலாலும்  , உட்கட்சி பூசலாலும் பறிகொடுத்ததும்  , உத்திர பிரதேசத்தில் சரிந்த செல்வாக்கும் பி.ஜே,பி க்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் . ஆனால் இன்று கர்நாடகாவில் பி.ஜே.பிக்கு நேர்ந்த  நிலை நாளை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கும்  ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை . ஊழல் மற்றும்  நிர்வாகத் திறன் இல்லாத அரசை  மக்கள் தூக்கி எறிவார்கள் என்பதே கர்நாடக மக்கள்  கற்றுத்தந்த பாடம் ...

காங்கிரஸை பொறுத்தவரை பி.ஜே.பி யை நோக்கி மற்ற கட்சிகள் செல்லாததும் , பி.ஜே.பி போலல்லாமல் தென்னிந்தியாவில் தமிழகம் தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களிலும்  ஆட்சியமைத்திருப்பதும்  அதற்கு பெரிய பலம் .  அது மட்டுமல்லாமல் பண பலம் ,அரசியல் பலம் இரண்டும்  வேறெந்த கட்சிகளை விடவும் காங்கிரஸிற்கு அதிகமாகவே உள்ளன . கட்சிகளும் சரி , மக்களும்  சரி கடைசி நேரத்தில் மனது மாறி தங்களிடம் தான் வருவார்கள் என்கிற நம்பிக்கையும் காங்கிரஸிற்கு உண்டு . இரண்டு முறை பிரதமாராக இருந்து விட்டதால் இந்த முறை  மன்மோகனை தவிர்த்து ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக காங்கிரஸ்  அறிவிப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது . விலைவாசி உயர்வு , தீவிரவாதம் , ஊழல்  , அயல்நாடுகளின் அச்சுறுத்தல் இப்படி பல காரணங்களால்  காங்கிரஸ் மேல் மக்களுக்கு வெறுப்பு இருந்தாலும் ராகுலின் வருகை அவற்றை மாற்றி புது உத்வேகத்தை கொடுக்கும் என்பது காங்கிரஸ்காரர்களின் நம்பிக்கை . உ.பி , குஜராத் மாநிலங்களில் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது என்பது உண்மையாக இருந்தாலும் அவரை கழித்துக் கட்டி விட முடியாது . 2004 இல் சோனியாவின் வருகை காங்கிரஸை எட்டு வருடங்களுக்கு பிறகு ஆட்சி பீடத்தில் ஏற்றியதையும் யாரும் மறுக்க முடியாது ...

வரும் நவம்பரில் ராஜஸ்தான் , டில்லி , சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2014 பொது தேர்தலுக்கு வெள்ளோட்டமாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள் . பாராளுமன்ற தேர்தல் கமிட்டியில் மோடி இடம் பெற்றிருப்பதும் , மோடிக்கு நெருக்கமான அமித் ஷா உத்திர பிரதேசத்திற்கு பொறுப்பேற்றிருப்பதும் அவர் பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படுவ்தற்கான வாய்ப்பை ஊர்ஜிதம் செய்கின்றன . காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை பி.ஜே.பி க்கு சாதகமான ஓட்டாக மாறினால் மட்டுமே அதன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும் . அப்படி நடக்காமல் காங்கிரஸ் மற்றும் உதிரி கட்சிகள் அதிக இடங்களை பெரும் பட்சத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைமையில் அரசு அமைவதற்க்கான வாய்ப்பே உருவாகும் . சுதந்திரம் அடைந்ததில் இருந்து வாழையடி வாழையாக நேரு குடும்பத்தினரோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவரோ தான் இந்தியாவை ஆண்டு வந்திருக்கிறார்கள் . எனவே 2014 தேர்தலில் ஜெயிக்கப் போவது காங்கிரஸா ? பி.ஜே,பி யா ? அல்லது மோடியா ? ராகுலா ? என்பதை விட பழமையில் ஊறிய மன்னாராட்சியா ? முன்னேற்றம் கொடுக்கும் மக்களாட்சியா ? என்பதே நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது ...


Related Posts Plugin for WordPress, Blogger...