7 February 2012

விடியல் ... ( நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை )



" டைரக்டர் சார் , உள்ள வாங்க , கூப்புடறாங்க "

ஆபீஸ் பாய் அப்படி அழைத்தவுடன் வெங்கட்டிற்கு காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது ... இந்த ஒற்றை வார்த்தைக்காக பதிமூன்று வருடங்களை தொலைத்தது அவன் கண்களிலும் , முடிகள் இல்லாத முன் நெற்றியிலும் நன்றாகவே தெரிந்தது ... 

சினிமாவில் வருவது போல சென்னைக்கு வந்தவுடன் ஒரே பாடலில் பெரிய இயக்குனராகி விடுவோம் என்று வெங்கட்  கனவு காணவில்லை தான் , இருந்தாலும் கடந்து வந்த பாதை இவ்வளவு கடுமையாக இருக்கும் என்றும் கொஞ்சமும் நினைக்கவில்லை ... நிச்சயமில்லாத வாழ்க்கை , நிரந்தரமில்லாத வருமானம் , நிம்மதி தொலைந்த இரவுகள் என ஒவ்வொரு நாட்களுமே அவனுக்கு ஒரு யுகமாக கடந்தன ... 

கூட படித்த நண்பர்களெல்லாம் காதல் , கல்யாணம் என்று செட்டிலாகி விட ஒரு நாள் நாமும் இயக்குனராகி விடுவோம் என்ற நம்பிக்கை மட்டுமே அவனை  உந்து சக்தியாக இயக்கிக்கொண்டிருந்தது ... பட வேளைகளில் ஈடுபட்டிருக்கும் போது பொழுதுகள் இயந்திரத்தனமாக கழியும் ... முதலில் பயமுறுத்திய தனிமையும் போக போக மிகவும் பழகி விட்டது , ஆனால் எங்கோ எதிர்பாரா விதமாக சொந்தக்காரர்களையோ , பழைய நண்பர்களையோ சந்திக்க நேரும் போது தான் அவனுக்கு பெரும் சங்கடமாக இருக்கும் ... 

ஒன்று , அவனுடைய பயணத்தை புரிந்து கொள்ளாமல் மாத சம்பளத்தில் செட்டிலாகி விட்ட அவன் வயதை ஒத்த மற்றவர்களை ஒப்பிட்டு பேசி வெறுப்பேற்றுவார்கள் , இல்லை சினிமா பற்றி எல்லாம் தெரிந்தது போல அறிவுரை செய்து நேரத்தை வீணடிப்பார்கள் , இதனால் வெங்கட் யாரையும் சந்திப்பதையே தவிர்த்து வந்தான் ... அவர்கள் குறிப்பிடும் மாத சம்பளக்காரர்கள் மனதுக்குள் சினிமா ஆசையை முற்றிலும் புதைக்க முடியாமல் புலம்புவதை யாரரிவார்கள் ... 

ஊரில் விவசாயத்தை அப்பாவும் , தம்பியும் கவனித்து வந்ததால் அவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லையென்றாலும் , அவர்களை தொந்தரவு செய்ய மனமில்லாததால் முடிந்த அளவு வாயை கட்டி , வயித்தை கட்டி வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தான் வெங்கட் ...

இதோ கனவு நெனவாகி அவன் சொன்ன கதை தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்து போய் , படத்திற்கான டிஸ்கசனில்  இருக்கும் போது தான் , தம்பியிடமிருந்து அப்பா உடல் நிலை மோசமாகிவிட்டதென சொல்லி அழைப்பு வந்தது ... இந்த விசயத்தை நேரடியாக சொல்லி விட்டு ஊருக்கு சென்று வரவே வெங்கட் வந்திருந்தான் ...

" வாங்க வெங்கட் உட்காருங்க ,  டிஸ்கசன்லாம் எப்படி போயிட்டு இருக்கு?"

" நல்லா போயிட்டு இருக்கு சார் "

 " கதைல கேன்சர் வந்து ஹீரோ சாகறதா க்ளைமாக்ஸ் வச்சீங்க பாருங்க , அது எல்லாரையும் ரொம்பவே பாதிச்சிருச்சு , அதுக்காகவே படம் நிச்சயம் ஜெயிக்கும் "

" ம் ம் சார் "

 " என்ன வெங்கட் உங்க முகமே வாடியிருக்கு , ஏதாவது பிரச்சனையா ? "

 " ஆமா சார் , அப்பாவுக்கு உடம்பு ரொம்ப சரியில்லைன்னு தம்பிட்ட இருந்து போன்  வந்துச்சு , அதான் ஊருக்கு  போகலாம்னு  "

" என்ன வெங்கட் யோசிக்கிறீங்க , உடனே போயிட்டு வாங்க , பணம் ஏதாவது வேணுமா ? "

" அதெல்லாம் வேணாம் , ரொம்ப நன்றி சார் , நான் வரேன் "

 " ஒ,கே, அவசரப்படாம பொறுமையா இருந்து பாத்துட்டு வாங்க "

அவரிடம் விடைபெற்று விட்டு வேகமாக வெளியேறினான் வெங்கட்...

தன் சினிமா ஆசையை சொன்னவுடனேயே கோபப்படாமல் , எதிர்காலத்தை பற்றி பேசி பயமுறுத்தாமல் அவன் ஆசைக்கேற்ப செய்யும் படி அனுப்பி வைத்த அப்பாவை நினைக்கும் போதே வெங்கட் கண்களில் கண்ணீர் சுரந்தது...காடு , மேடு என்று குடும்பத்துக்காகவே சுற்றி தன்னை மறந்த ஒரு ஜீவன் ... இத்தனை வயதாகியும் இன்று வரை உடன் பிறந்த தங்கைகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்து கொண்டிருக்கும் நல்ல மனிதர் ...

வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மாவின் அழுகையுடன்  கூடிய விசாரிப்புகளுக்கு பதில் சொல்லி விட்டு தம்பியை தனியாக தோட்டத்திற்கு அழைத்து சென்றான் வெங்கட் ...

" என்ன ஆச்சுடா ? போன தடவ வந்த போது கூட நல்லா தான இருந்தாரு "

" இல்லன்னே , முதல்ல கழுத்துல ஒரு கட்டி மாதிரி வந்துச்சு , அப்பாவும் அத பெரிசு படுத்தாம , ரொம்ப வலிக்கும் போது மட்டும் மாத்திர போட்டுக்குட்டு விட்டுட்டாரு "

" என்னடா இது ? நீயாவது டாக்டர்ட்ட கூட்டிக்கிட்டு போனியா ? "

" போனேன்னே , அவங்க ஏதேதோ சொல்றாங்க "

 " என்னடா சொல்றாங்க ? "

 " அப்பாவுக்கு கேன்சராம்னே , உடனே ஆஸ்பத்திரியில சேக்கணுமா , எனக்கு ரொம்ப பயமா இருக்குன்னே "

தம்பிக்கு முன்னாள் அழுதால் அவன் மேலும் உடைந்து  விடுவான் என்பதால் அவனை தன் தோள்களில் சாய்த்து ஆறுதல் சொன்னான் வெங்கட் ...

உள்ளூர் டாக்டரின் அறிவுரையின் படி பெரிய ஆஸ்பத்தரியில்  கேன்சருக்கு உண்டான தனி பிரிவில் அப்பாவை சேர்த்து விட்டு அங்கேயே தங்கினான் வெங்கட் ... விவசாயத்தை பாதியில் விடமுடியாததாலும் , மற்ற ஏற்பாடுகளை செய்யவும் அம்மாவும் , தம்பியும் கிராமத்திலேயே இருந்தார்கள் ...

கட்டுமஸ்தான் போன்ற அப்பாவின் உடல் வாகு நன்கு இளைத்திருந்தது  , கொஞ்சம் நிறம் கூட மாறியிருப்பது போல உணர்ந்தான் வெங்கட் ... ஆஸ்பத்திரியில் பலதரப்பட்ட மனிதர்களை கேன்சர் என்ற வியாதி ஆக்ரமித்திருந்தது ...வந்த சில நாட்களிலேயே நோயாளிகளும் , உறவினர்களும் வெங்கட்டிற்கு நன்றாக பரிச்சியமானார்கள்  , அப்படி தான் சுதாகரும் அவனுக்கு நன்றாக நட்பானார். அவரை முதலில் பார்த்த போது யாருக்கோ உதவி செய்ய வந்தவர் என்று தான் நினைத்திருந்தான் , பிறகு அவரும் ஒரு கேன்சர் நோயாளி என தெரிய வந்த போது அவனால் நம்ப முடியவில்லை , அந்த அளவுக்கு அவர் உற்சாகமாக இருந்தார் ...

தமிழ் சினிமா என்ற வட்டத்துக்குள்ளேயே இத்தனை காலம் கழித்தவனுக்கு அரசியல் , வணிகம் , இலக்கியம் , உலக சினிமா இதை பற்றியெல்லாம் அவர் தெளிவாக பேசும் போது மிகவும் சுவாரசியமாக இருந்தது ... அவரிடம் இருந்து வாங்கிய உலக மொழிபெயர்ப்பு நாவலை திரும்ப கொடுக்க போகும் போது அவர் அறையிலிருந்த அசாதாரண கூட்டம் அவனுக்கு ஏதோ அபாயத்தை உணர்த்தியது ...

சுதாகர் உயிருடன் இல்லை என்பதை அவனால் நம்ப முடியவில்லை , இரண்டு மணி நேரத்திற்கு முன் தன்னுடன் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தவர் இன்று உயிருடன் இல்லை என நினைக்கும் போது அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது ...

சுதாகர் சொன்ன வார்த்தைகள் அவன் முன் நிழலாடின ,

" சார் , எல்லாரும் ஒரு நாள் சாக தான் போறாங்க , என்ன வியாதி வந்தா கொஞ்சம் அவஸ்தை அவ்வளவு தான் ... கொஞ்சம் முன் கூட்டியே நான் டெஸ்டெல்லாம் பண்ணி கண்டுபிடிச்சிருந்தா கட்டுப்படுத்தியிருக்கலாம் , ஆனா அதுக்காக நான் சோர்ந்து போகல   , என்னால முடிஞ்ச வரைக்கும்  கேன்சர் பத்தின விழிப்புணர்வ பரப்பிக்கிட்டு தான் வரேன் , நீங்களும் பாசிட்டிவாவே இருங்க , அப்பாவ ஜாக்கிரதையா பாத்துக்கிடுங்க " ..

அப்பாவின் நிலைமைக்காக டாக்டர்களையும் , கடவுளையும் சாடிக்கொண்டிருந்த வெங்கட்டிற்கு சுதாகரின் வார்த்தைகள் யதார்த்தத்தை உணர்த்தின ... அப்படிப்பட்டவர் இன்று உயிருடன் இல்லையென்பதும் நிதர்சனம் என நன்றாகவே உணர்ந்திருந்தான் வெங்கட் ...

அப்பாவுக்கு மிகவும் வயதாகிவிட்டதால் ஆபரேஷன் சாத்தியமில்லை என டாக்டர்கள் சொல்லவே , இனி வரும் நாட்களையும் அவருடனே கழிக்கலாமென ஊரிலேயே தங்கிவிட்ட வெங்கட் , சில மாதங்கள் கழித்து அப்பாவும் இறந்துவிடவே , அவரின் நினைவுகளுடனும் , அம்மாவின் ஆசீர்வாதத்துடனும்  சென்னைக்கு திரும்பினான் ...

" விசயத்தை கேள்விப்பட்டவுடனேயே ரொம்ப கஷ்டம் ஆயிருச்சு வெங்கட் , உடனே புறப்பட்டு வரணும்னு நினச்சேன் , ஆனா ஒரே வேல தப்பா எடுத்துக்காதீங்க "

 " பரவாயில்ல சார் , அதெல்லாம் ஒண்ணுமில்ல "

" எப்படி வெங்கட் வேலைய ஆரம்பிச்சுரலாமா  ? "

 " ஒ.கே சார் , ஆனா கதையில் ஒரு சின்ன சேஞ்சு ,  க்ளைமாக்ஸ்ல கேன்சர் வந்து ஹீரோ சாகல , எப்படியும் குணப்படுத்திடலாம்னு நம்பிக்கையோட ஹீரோயினும் அவன்  கூட சேர்ந்துடறாங்க "

" என்ன வெங்கட் , இதெல்லாம் செட்டாவாது  , நான் எத்தனை வருசமா சினிமாவுல இருக்கேன் , அவன் செத்தா தான்யா  சிம்பதி வரும் , படம் ஓடும் "

 " படம் ஒடனும்றதுக்காக  ஒரு நெகடிவ்வான விசயத்த நான் பரப்ப விரும்பல சார் "

" என்னைய்யா  பொழைக்க தெரியாத ஆளா இருக்க ! , சினிமா மட்டும் எடுக்கணும் , அனாவசிய சிந்தனையெல்லாம் கூடாது "

" சினிமாவுல இருக்கறவங்களுக்கும் சமூக பொறுப்புணர்வு இருக்கணும்னு  நம்பறவன்  சார் நான் "

" இப்ப முடிவா என்ன தான் சொல்றீங்க ? "

 " க்ளைமாக்ஸ்ல பாசிடிவ் என்ட் வைக்கிறேன் சார் "

" உங்கள ஒ.கே பண்ணதுக்கு காரணமே அந்த க்ளைமாக்ஸ் தான் அத மாத்தறதா இருந்தா எனக்கு நீங்களே வேணாம் "

" பரவாயில்ல சார், ஒரு நெகடிவ்வான விசயத்த சொல்லி என் வாழ்க்கைய நான் ஆரம்பிக்க விரும்பல , கதைய மாத்தி நிச்சயம் நான் டைரக்ட் பண்ணுவேன் "

 " அது அவ்வளவு சுலபமில்ல ,சினிமாவுல வாய்ப்பு கிடைக்கறது எவ்வளவு  கஷ்டம்னு உங்களுக்கு நல்லாவே தெரியும் , இந்த வாய்ப்புக்காக எவ்வளவு நடையா நடந்தீங்கன்னு மறந்துட்டீங்களா ? "

" நான் எதையுமே மறக்கல சார் , ரொம்ப நன்றி , வரேன் "

சொல்லி விட்டு எழுந்தவனை தயாரிப்பாளர் வேற்றுகிரகவாசியைப் பார்ப்பது போல பாத்தாலும் , அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் திரும்பி நடந்தான் வெங்கட் ... 

18 comments:

அபி said...

சூப்பர் அனந்து ! பாசிடிவா சொன்னது மிக மிக அருமை !வெற்றி பெற வாழ்த்துக்கள் !

Anonymous said...

நல்லாயிருந்தது...இதிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Anonymous said...

positive ending very nice...

S.R.Seshan...

ananthu said...

அபி said...
சூப்பர் அனந்து ! பாசிடிவா சொன்னது மிக மிக அருமை !வெற்றி பெற வாழ்த்துக்கள் !

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!

ananthu said...

ரெவெரி said...
நல்லாயிருந்தது...இதிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!

ananthu said...

Anonymous said...
positive ending very nice...
S.R.Seshan...

Thanks S.R.Seshan ...

ஹேமா said...

கொஞ்சம் வித்தியாசமான கற்பனை.வெற்றிக்கு வாழ்த்துகள் அனந்த் !

திண்டுக்கல் தனபாலன் said...

தன்னம்பிக்கையுடன்... வெற்றி பெற வாழ்த்துக்கள் சார் !

ananthu said...

ஹேமா said...
கொஞ்சம் வித்தியாசமான கற்பனை.வெற்றிக்கு வாழ்த்துகள் அனந்த் !

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா ...!

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
தன்னம்பிக்கையுடன்... வெற்றி பெற வாழ்த்துக்கள் சார் !

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி !

srinivasan Madurai said...

positive approach leads the life in the Society and Humanity. All the best.

ananthu said...

srinivasan Madurai said...
positive approach leads the life in the Society and Humanity. All the best.

Thanks for your comment...

JZ said...

நேரத்தை ஓட்டுறதுக்கு சும்மா நெட்டுல தேடிகிட்டிருந்தேன். இடையில இந்த பதிவு கண்ணில்பட்டது.. நல்ல கதை. அதுவும் இறுதியில நல்ல மெசேஜ்!
யாரு எழுதியது என்று சொல்ல முடியுமா?

ananthu said...

JZ said...
நேரத்தை ஓட்டுறதுக்கு சும்மா நெட்டுல தேடிகிட்டிருந்தேன். இடையில இந்த பதிவு கண்ணில்பட்டது.. நல்ல கதை. அதுவும் இறுதியில நல்ல மெசேஜ்!யாரு எழுதியது என்று சொல்ல முடியுமா?

இந்த கதை யுடான்ஸ் + நேசம் இணைந்து நடத்தும் கேன்சர் விழிப்புணர்வு கதை போட்டிக்காக என்னால் எழுதப்பட்டது ... உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

JZ said...

சாரி.. நான் உங்களுடையது என அறிந்திருக்கவில்லை.. (போட்டிக்காக எழுதப்பட்டது என்பதை அவதானிக்கத் தவறிவிட்டேன்)
அழகாக எழுதியிருக்கிறீர்கள்.. கண்டிப்பாக பரிசும் வெல்வீர்கள்! வாழ்த்துக்கள்!

ananthu said...

அதனால் ஒன்றுமில்லை ... உங்களின் தொடர் கருத்துக்கு நன்றி !

Yaathoramani.blogspot.com said...

தயாரிப்பாளர் வேண்டுமானால் மாறலாம்
வெங்கட் நிச்சயம் ஜெயிப்பான
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
அருமையான படைப்பு
தொடரவும் வெல்லவும் வாழ்த்துக்கள்

ananthu said...

Ramani said...
தயாரிப்பாளர் வேண்டுமானால் மாறலாம்
வெங்கட் நிச்சயம் ஜெயிப்பான
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
அருமையான படைப்பு
தொடரவும் வெல்லவும் வாழ்த்துக்கள்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி !

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...