12 August 2012

இன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...



ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவுட்டு வந்து விடுவான் ... அவுட்டு வருவதால் என் வாழ்க்கை மாறப்போவதில்லை , ஆனால் அவன்  கொண்டு வரும் மூணு கோடி ரூபாய் என் வாழ்க்கையை மாற்றப் போகிறது ... அவன் வருவதற்குள் நீங்கள் என்னை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ... 

வாழ்க்கைக்கு எது முக்கியம் ?  மன நிம்மதி , சந்தோசம் , சந்ததி , பதவி , புகழ் என்று எவ்வளவையோ அடுக்கிக்கொண்டே போகலாம் , ஆனால் இவையெல்லாம் பணத்திற்கு முன்னாள் பம்மாத்து என்பது என்னைப் போல வாழ்க்கையில் அடிபட்ட எவனுக்கும் நன்றாகவே தெரியும் ... ஆமாம் பணம் மட்டும் தான் எனது கடவுள் , கர்த்தா , குரு எல்லாமே ... பணம் இல்லாததால் தான் பெற்றோர்களால் என்னை நினைத்தது போல வளர்க்க முடியவில்லை ... அவர்களிடம் பணம் இல்லாததை பற்றி நான் குற்றம் சொல்லவில்லை , ஆனால் அதை அடைவதற்காக அவர்கள் எந்த முயற்சியையும் செய்யாமல் விலங்குகள் போல வாழ்ந்துகொண்டிருந்ததை தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை ... 

அதனால் தான் எனக்கு விவரம் தெரிந்த வயதுக்கு மேல் அவர்களோடு இருக்க முடியாமல் சென்னைக்கு ஓடி வந்துவிட்டேன் ... கெட்டும் பட்டணம் போ என்பார்கள் , நான் பெரியவர்கள் சொன்னதில் செய்தது  இதை மட்டும் தான் ... முதலில் ஏதேதோ வேலை செய்து வயிற்றை கழுவிக் கொண்டிருந்த  என் வாழ்க்கை  பால் சேட்டின் நட்பு கிடைத்த பிறகு தான் மாறத்தொடங்கியது ... என் போன்ற படிக்காதவர்கள் கூடிய விரைவில் பணம் பார்ப்பதென்பது நடக்காத காரியம் , எனவே என்னைப் பொறுத்தவரை எப்படி பணம் சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமில்லை , எப்படியோ சம்பாதிக்க வேண்டும் ... சேட் மூலமாக இரண்டு மூன்று பொருட்களை கை மாற்றி விட்ட போது நல்ல பணம் கிடைத்தது , கிடைத்த  பணத்தை நண்பர்களுடன் உடனே குடித்தழித்தேன்.

இங்கே நண்பர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது , கடத்தல் தொழிலில் எவனும் எப்பொழுது வேண்டுமானாலும் எதிரியாக மாறலாம் , இருந்தாலும் ஒன்றாக அமர்ந்து குடிக்கும் போது எல்லோரும் சந்தோசமாகவே இருப்போம் ... குடிக்கு எவ்வளவோ சைடிஷ் இருந்தாலும் எங்களுக்கு அவுட்டு தான் ஊறுகாய் ... அவனுக்கு அவுட்டு என்பது இயற்பெயரா அல்லது யாராவது வைத்த பெயரா என்றெல்லாம் தெரியாது , ஆனால் நாங்கள் அப்படித்தான் கூப்புடுவோம் ... ஆறடிக்கு வளர்ந்திருந்தாலும் அவுட்டு அறிவா கிலோ என்ன விலை என்று கேட்பான் , அதனால் தான் சில ரிஸ்கான வேலைகளை அவனிடம் தள்ளி விடுவோம் , எங்களைப் பொறுத்தவரை அவுட்டு ஒரு பலிகடா ... இங்கே பாவ , புண்ணியமெல்லாம் பார்த்தால் பிழைப்பு நடத்த முடியாது ... 

அவுட்டு தான் இப்படி ஆனால் அவன் மனைவி அழகி , பேரழகி ... ஒரு முறை நல்ல போதையில் பெண்களை பற்றிய பேச்சு வந்தது , நானும் சேட்டும் போதையில் இருக்கும் போது மட்டும் தான் பெண்களை பற்றி பேசுவோம் , அது என்னவோ அந்த வஸ்து உள்ளே போய் விட்டாலே காம வெறி தலைக்கு ஏறி விடுகிறது...சேட் வழக்கமாக கூட்டிச் செல்லும் பெண்ணிடம் போக வேண்டாமென்று நான் ஏற்கனவே முடிவு செய்திருந்தேன் , என்னமோ சலித்து விட்டது , ஆனால் சேட்டுக்கு மட்டும் அவள் நடிகை என்பதாலோ என்னமோ அலுக்கவே இல்லை ... இந்த முறை நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன் , வேறு எங்காவது போகலாம் என்று முடிவு செய்த பின் சேட் என்னை ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்றான் ... நான் அவளை பார்த்தவுடன் அசந்துவிட்டேன் , அவள் அவ்வளவு அழகு ... ஆனால் அவள் அவுட்டுவின் மனைவி என்று தெரியவந்ததும்  கொஞ்சம் அதிர்ச்சி , சேட் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாத போதே அவன் அடிக்கடி இங்கே வருகிறான் என்று தெரிந்து கொண்டேன் ...

" ஒன்னும் யோசிக்காத  இதெல்லாம் அவுட்டுக்கு தெரியாது , சேட்டுக்கு அப்புறம் நீ தான்" அவள் எத்தனை பேரிடம் இப்படி சொல்லியிருப்பாள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு எனக்கு அப்போது நேரமில்லாததால் நான் வந்த வேலையில் இறங்கினேன் ... எல்லாம் முடிந்த பிறகு சேட்டுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவுட்டு வந்தான் .. " எப்போ வந்தீங்க சார் , சொல்லியிருந்தா நானே உங்கள கூட்டியாந்திருப்பேனே"  அவன் சொன்ன போது என் கண்கள் அவனை நேரடியாக பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டது ... அங்கிருந்து இருவரும் திரும்பி வரும் வழியில் தான் சேட் என்னிடம் அந்த விஷயத்தை சொன்னான் ... 

இது வரை சின்ன சின்ன சரக்குகளை கை மாற்றி விட்டு சில லட்சங்களை பார்த்த எங்களுக்கு இது போட்டியில் கலந்து கொள்ளாமலேயே கைகளில் கிடைக்கப் போகும் மூணு கோடி ... இந்த முறை கடத்தப் போவது விலையுயர்ந்த போதை வஸ்து , மாட்டினால் தொலைந்தோம் , அவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடியாது ... ஆனாலும் இந்த வாய்ப்பை விட எங்களுக்கு மனதில்லை என்பதால் ரிஸ்க் எடுக்க முடிவெடுத்தோம் ... வழக்கம் போல அவுட்டுவை வைத்து பொருளை கை மாற்றிவிடலாம் , அவன் மாட்டினாலும்  எங்களுக்கு பிரச்சனையில்லை , அவன் உயிரே போனாலும் எங்களை காட்டிக் கொடுக்க மாட்டான் ... இருவரும் முடிவு செய்த பின் அவுட்டு வீட்டிற்கு திரும்பி சென்றோம் ... 

வழக்கம் போல சில ஆயிரங்களை கொடுத்து விஷயத்தை சாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்த எங்களுக்கு அவுட்டுவின் மனைவி பெரிய ஷாக் கொடுத்தாள்.. "உயிரை பணயம் வச்சு உங்களுக்காக வேல செய்யுராறு , அதான் இந்த தடவ வரதுல சரி  பங்கு கொடுத்தீங்கன்னா , சொந்த ஊருக்கே போயி செட்டிலாயிடலாம்னு இருக்கோம் " அவள் தீர்க்கமாய் சொன்னதிலிருந்தே அவுட்டு மாதிரியில்லை என்று தெளிவாக தெரிந்தது ... " நீ நினைக்கிற மாதிரியெல்லாம் பெருசா ஒண்ணுமில்ல, வேணுமின்னா எப்பவும் தரத விட ஜாஸ்தியா தரோம் "  சேட் சொன்னவுடன்  , அவள் கோணலாய் சிரித்தபடி" என்ன மூணு கோடியா " என்று கேட்ட போதே அவள் நிறைய விஷயம் தெரிந்தவள் என்பது எங்களுக்கு தெளிவாக புரிந்தது ... நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம் ... எங்கள் இருவருக்குள்ளும் ஒரே எண்ணம ஓடவே நாங்கள் அவள் சொன்னபடி பங்கை இரண்டுக்கு பதில் மூன்றாய் போட முடிவெடுத்தோம் ... இதில் எதிலுமே சம்பந்தம் இல்லாதது போல் அவுட்டு எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ... அவனுக்கு இந்த பணம் ரொம்ப அதிகம் தான் என்றாலும் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை ... 

" மூணு கோடி கைக்கு வந்ததும் முதல்ல அவுட்டையும் , அவளையும் போட்டுரனும் " நான் மனதில் நினைத்ததையே சேட்டும் சொன்னான் ... நான் ஆமாம் என்பது போல தலையாட்டினேன் , அந்த நொடி சேட்டையும் போட்டுவிட்டால் மூணு கோடியும் எனக்கே என்று என் மனம் நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது ... இதோ நினைத்தது படியே அவுட்டு வேலையை முடித்துக்கொண்டு பணத்தோடு வந்து கொண்டிருக்கிறான் என்று சேட் செல்போனில் சொன்ன போதே என் திட்டத்தை மனதிற்குள் நான் பட்டை தீட்டிக் கொண்டிருந்தேன் ... சந்தோசமோ , துக்கமோ சேட் சரக்கடிக்காமல் இருக்க மாட்டான் , நான் ஏற்கனவே திட்டமிட்டபடி சரக்குடன் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டால் சேட் மூர்ச்சையாகி விடுவான் , அவுட்டு சரக்கடிக்க மாட்டான் , எனவே அவன் வந்தவுடன் பணத்தை எடுத்துக் கொண்டு கைத்துப்பாக்கியை  வைத்தே அவன் கதையை  முடித்து விடலாம் ... 

எங்கள் திட்டப்படி சேட் அவள் மனைவியை இந்நேரம் முடித்திருப்பான் , நினைக்கும் போதே என் செல்போன் சினுங்கியது ...  " சொல்லு சேட் " அவன் விஷயத்தை சொன்னவுடன் என் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது ... " சரி நான் அவ பாடிய வர வழில டிஷ்போஸ் பண்ணிடுறேன் , நீ நம்ம அயிட்டத்த வாங்கி வை " அவன் அயிட்டமும் அவனுக்காக நான் வாங்கிய அயிட்டமும் தயாராகவே இருந்தன ... 
" வா சேட் எல்லாம் ரெடியா இருக்கு " போனை வைத்துவிட்டு ஒரு முழு சிகரெட்டை முழுவதுமாய் புகைத்தேன் ... சேட் வந்தவுடன் கத்தியின்றி ரத்தமின்றி அவன் கதை முடிந்தது , வாயெல்லாம் நுரையுடன் ஒரு பக்கம்  கோணிக் கொண்டே அறைக்குள் செத்துக் கிடந்தவனை வெறித்துப் பார்த்தபடியே இரண்டு சிப் அடித்தேன் ... 

எனக்கு புது வாழ்க்கையை காட்டியவனின் வாழ்க்கையை முடித்துவிட்டேன் , லேசாக ஏதோ ஒரு உணர்வு என்னைத் தாக்க அதை தவிர்ப்பதற்காக டி.வி யை ஆன் செய்தேன் ... வெஸ்டர்ன் ஆல்பத்திலிருந்து சுட்ட பாடலுக்கு தமிழ் பட ஹீரோயின் இடுப்பை ஆட்டிக் கொண்டிருந்தாள் ... டி.வி சத்தத்தை மீறி கதவை தட்டும் சத்தம்  கேட்கும் போதே வந்தது அவுட்டு தான் என்று எனக்கு விளங்கியது ... " இருடா வரேன் " சேட் செத்துக் கிடந்த அறையை சாத்தி விட்டு கதவை நோக்கி நான் போவதற்கு முன் டேபிளின் மேல்    துப்பாக்கி  இருப்பதை ஒரு முறை உறுதி செய்து கொண்டேன் ... " வாடா ஏதாவது சாபுட்றையா " வேகமாக மண்டையை ஆட்டினான் .. அவனிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு சேட்டுக்காக வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலத்தை அவனிடம் கொடுத்தேன் ... 

சேட் தான் சாப்பிடமாலேயே போய் சேர்ந்து விட்டான் , இவனாவது சாபிடட்டுமே என்ற எண்ணத்தை விட அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள் பணத்தை எண்ணி முடித்து விடலாம் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கியிருந்தது ... பணத்தை பல தடவை மோர்ந்து பார்த்துக் கொண்டேன் , அதை அழகாக பைக்குள் அடுக்கி வைத்து விட்டு கைகளில் உறைகளை மாட்டிக் கொண்டேன் , அவன் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ... வாசல் கதவு தாழ்ப்பாள் சரியாக  போட்டிருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பார்த்து விட்டு திரும்பிய போது தான் கூர்மையான ஏதோ ஒன்று என் வயிற்றுக்குள் வேகமாக இறங்கியது ... 

கைகளில் கத்தியுடன் அவுட்டு நின்று கொண்டிருந்தான் , அவன் கழுத்தை நெறிக்க நான் நினைப்பதற்குள் மறு முறை முன்பை விட வேகமாக கத்தி என் வயிற்றுக்குள் இறங்கியது ... மயக்கத்தில் கண்கள்  சொருக அவன் மேல் விழுந்த என்னை தள்ளி  விட்டு விட்டு  அவுட்டு பணம் இருந்த அறையை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருந்தான் ... கண்கள் சொருகி செத்துக் கிடந்த சேட் ஒரு முறை என் நி...னை..வு...க்..கு  வ..ந்....தா ... 

16 comments:

Angel said...

மூச்சு விடாம படிச்சு முடித்தேன் அனந்து ......த்ரில்லர் மூவி பார்த்த மாதிரி இருக்கு ..

arunkumar said...

Serious soldran!! Excellent script!! Awesome!!

திண்டுக்கல் தனபாலன் said...

விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது சிறுகதை...

முடிவில்... அவுட்டு அவுட்டாகவில்லை...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…


அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

ராஜ் said...

கதை செம விறுவிறுப்பு. கடைசி வரைக்கும் சோர்வு அடையாமல் போச்சு. நல்ல த்ரில்ளர்..
முடிவு ரொம்பவே நல்லா இருக்கு பாஸ்.
ஒரு டவுட், அவுட் நல்லவன் (!!!) என்பதாலே அவனை மட்டும் கொல்லாம விட்டீங்களா ?? உண்மையிலே அவுட் நல்லவனா, ஏன்னா ஒரு பாராவுல "சொல்லியிருந்தா நானே உங்கள கூட்டியாந்திருப்பேனே" என்று அவுட் சொல்லுவது போல எழுதி இருக்கேங்க. அவனுக்கு தெரியாம தான் அவனோட பொண்டாட்டி வழி தவறி போறாங்கள ? இல்ல தெரிஞ்சே தப்பு பண்ணுராங்களா.?

ananthu said...

angelin said...
மூச்சு விடாம படிச்சு முடித்தேன் அனந்து ......த்ரில்லர் மூவி பார்த்த மாதிரி இருக்கு ..

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

arunkumar said...
Serious soldran!! Excellent script!! Awesome!!

Thanks ...

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது சிறுகதை...முடிவில்... அவுட்டு அவுட்டாகவில்லை...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

ராஜ் said...
கதை செம விறுவிறுப்பு. கடைசி வரைக்கும் சோர்வு அடையாமல் போச்சு. நல்ல த்ரில்ளர்..
முடிவு ரொம்பவே நல்லா இருக்கு பாஸ்.
ஒரு டவுட், அவுட் நல்லவன் (!!!) என்பதாலே அவனை மட்டும் கொல்லாம விட்டீங்களா ?? உண்மையிலே அவுட் நல்லவனா, ஏன்னா ஒரு பாராவுல "சொல்லியிருந்தா நானே உங்கள கூட்டியாந்திருப்பேனே" என்று அவுட் சொல்லுவது போல எழுதி இருக்கேங்க. அவனுக்கு தெரியாம தான் அவனோட பொண்டாட்டி வழி தவறி போறாங்கள ? இல்ல தெரிஞ்சே தப்பு பண்ணுராங்களா.?

கதையை உன்னிப்பாக கவனித்து படித்தமைக்கு நன்றி ராஜ் ... இந்த கதையில் நல்லவன் , கெட்டவன் என்றெல்லாம் யாருமில்லை , எல்லோருக்கும் பணமே குறிக்கோள் ... அவுட்டுவை அனைவரும் அப்பாவி என்று நினைக்க அவன் அடப்பாவியாய் மாறுவதே கதையின் ட்விஸ்ட் ... கதை சொல்லியிடம் அவன் வீட்டுக்கு " நானே கூட்ட்டியாந்திருப்பேனே " என்று சாதாரனமாய் தான் சொல்கிறான் , கதை சொல்லிக்கு தான் வந்ததன் நோக்கம் தெரிவதால் தான் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறான் ...

ராஜ் said...

நன்றி பாஸ்..இப்ப எனக்கு தெளிவு ஆகிருச்சு..

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல கதை
வாழ்த்துக்கள்



நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

கவி அழகன் said...

Aramnya kandam movi parthathupola irukku

ananthu said...

ராஜ் said...
நன்றி பாஸ்..இப்ப எனக்கு தெளிவு ஆகிருச்சு..

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Easy (EZ) Editorial Calendar said...
நல்ல கதை
வாழ்த்துக்கள்
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

கவி அழகன் said...
Aramnya kandam movi parthathupola irukku

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

எல் கே said...

நல்ல கதை.. பகதையை இங்கே எழுதும் பொழுது உரையாடல்களை தனி தனி வரியில் எழுதினால் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள் பாஸ்

webstar said...

.த்ரில்லர் மூவி பார்த்த மாதிரி இருக்கு

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...